Tuesday, 19 May 2015

ஈறு கெடுவது எப்படி ?: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்- (6)


மொழியைக் கற்பிக்கும்போது குறிப்பாக இலக்கண வகுப்புகளில் பல சுருக்கு வழிகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. புரிந்துகொள்வதில் மாணவருக்குச் சிரமம் இருக்கும் போதோ ( புரியும்படி ஆசிரியருக்குச் சொல்லித்தர முடியவில்லை என்பதுதான் இதில் உண்மை ), அரிதான தருணங்களில் ஆசிரியருக்கே அவ்விடயம் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கும் போதோ இந்தச் சுருக்குவழிகள் கை கொடுக்கும்.
அப்படி ஒரு சுருக்கு வழிதான்,

Friday, 15 May 2015

கிழட்டுப்பசுவும் இளம்புல்லும்: காமத்தின் வரைவிலக்கணம் (2)



மாடு நமது மொழியில் நல்ல மாணவர்களுக்கு உதாரணமாகக் காட்டப்படுவது. முதல் மாணவன் என்பதற்கு இலக்கணம் சொல்லும் போது இந்த மாட்டினையும் ஒன்றாகச் சொல்வார்கள்.

மாடு புல்லை நன்றாக மேய்ந்து பின் ஓரிடத்தில் இருந்து அசையிடுவதைப் போல  ஆசிரியர் சொல்வதை நன்றாக உள்வாங்கிப் பின் அதனை அசையிட்டுப் பார்ப்பவன் நன்மாணாக்கன் என இலக்கண நூல்கள் சொல்லும்.

Wednesday, 13 May 2015

உலகாயதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்.


கடவுள் இருக்கிறான் என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அதே அளவிற்குக் கடவுள் இல்லை என்ற கொள்கையுடன் அதை எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல், மிகுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் முழங்கிய கூட்டமும் பழங்காலத்தில் நம் மத்தியில் இருந்தது.

Sunday, 10 May 2015

காத்திருப்பின் நீட்சி...!




நாடகங்கள் தொடர்வதுவும் யாருமறி யாமல்
    நாம்நடித்துக் கொள்வதுவும் மேடைகளும் இன்றி
வீடகத்தும் வெளிப்புறத்தும் வீதிநெடு கெங்கும்
     விரட்டுகின்ற ஞாபகத்தின் வேதனைக ளோடு

Friday, 8 May 2015

காமத்தின் வரைவிலக்கணம்.


காமம் என்னும் உணர்வு எப்படிப்பட்டது என்று கேட்டால் அதனை எப்படிச் சொல்ல முடியும்? மொழியினால் கட்புலனாகாத உணர்ந்தறியக் கூடிய ஒன்றை எந்த அளவிற்குக் காட்சிப்படுத்த முடியும்…? நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் நம் சங்க அக இலக்கியங்கள் அதனைக் காட்டப் பெரிதும் முயன்றிருக்கின்றன. இந்தப் பதிவு காமத்தைச் சங்கப் புலவர்கள் சொற்களால் எவ்வாறு வரையறுக்க முயன்றிருக்கிறார்கள் என்பதை ஒட்டிய சங்க இலக்கியப் பதிவுகளின் தொடர்ச்சியாய் அமைகிறது.

Monday, 4 May 2015

பிசாசு வகைகள்; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.- (5)


புது வீடு

இந்த இரண்டு சொற்களையும் பாருங்கள்.
இரண்டு சொற்களும் உ என்பதில் முடிகின்றன.
உ ஊ ஒ ஓ ஆகிய நான்கு எழுத்துகளையும் உச்சரிக்கும் போது இதழ் குவிய வேண்டும் என்று சொல்கின்றன நம் இலக்கணங்கள்.

இந்த எழுத்துகளைச் சொல்லும் போது இதழ்கள் குவிகின்றன தானே?
ஆம். எழுத்துகளின் பிறப்பிலக்கணப்படி இங்கு இதழ்கள் குவியத்தான் வேண்டும்.

Saturday, 2 May 2015

நூறாவது பதிவும் கலைந்த கனவுகளும்.


பதிவர் பின்னூட்டம், பிளாகர், என்கிற சொற்களை எல்லாம் சென்ற ஆண்டில் இதே நாள் நான் அறிந்திருக்கவில்லை. வாசகன் என்ற நிலையில் சில கடிதங்களை நூலாசிரியர்களுக்கு எழுதி இருக்கிறேனே தவிர, கட்டுரை என்றும், கருத்துகள் என்றும் பெரிதாய் எதுவும் எழுதியவனில்லை. மொழியின் மாயச்சுழலுக்குள் விழுந்து போய், காலங்களை வாசிப்பினால் மிதித்துக் கடந்த தருணங்கள்தான் சென்ற ஆண்டிற்கு முன்புவரை. அவ்வாசிப்பு ஒரு போதையைப்போல முற்றிலும் எனக்கானது என்பதைத் தவிர எந்தப் பயன்பாட்டுடைமை நோக்கத்தையும் கொண்டதன்று.

Friday, 1 May 2015

தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசியல் ; உங்களுக்குத் தெரியுமா?




அருள்திரு இராபர்ட் கால்டுவெல்

தமிழ் என்னும் மொழி சமஸ்கிருதம் என்னும் மொழியில் இருந்து தனித்து இயங்க இயலாது. அது சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு உட்பட்ட மொழியே என்ற சிந்தனை தமிழ்ப்பண்டிதர்களிடையே  இலக்கணவாதிகளிடையே வலிமை பெற்றிருந்த பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம்.

ஆட்சிப்பணிக்காகவும், மதம்பரப்புவதற்காகவும் வந்த ஐரோப்பியர்களுக்குத் தங்கள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைக் கொண்டாடவும் அதில் ஆய்வுகள் மேற்கொள்ளவுமான காரணங்கள் அதிகம் இருந்தன. சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்த மொழிகளே பிற இந்திய மொழிகள் என்கிற  பார்வை, சமஸ்கிருதப் பண்டிதர்கள் வழியாகவும் இந்திய மொழிகளை ஆராய்ந்த அயல்நாட்டினர் வழியாகவும் ஐரோப்பாவெங்கும் பரவி இருந்தது.

Wednesday, 29 April 2015

எழுத்துகளுக்குக் கொம்பிருந்த காலம்;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் -(4)


உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்னும் இந்தத் தொடரால், எனக்கு உள்ள நன்மை பின்னூட்டங்களின் வழியாகப் பலவற்றைக் கற்றுக் கொள்வதும், அதிலிருந்து அடுத்த பதிவிற்கான செய்திகள் கிடைத்துவிடுவதும் தான் .

எனவே உங்கள் ஒவ்வொருவரின் வருகையைப் போன்றே பின்னூட்டத்தையும் கேள்விகளையும் விரும்புகிறேன்.

இப்பொழுது நம்மிடையே இருக்கின்ற எழுத்தின் வடிவங்கள் காலந்தோறும் சிறு சிறு மாற்றங்களைப் பெற்று இன்று நாம் பயன்படுத்தும் இந்த நிலைமையை அடைந்திருக்கின்றன.

Monday, 27 April 2015

“‘ஐயா’ இது சரியா அய்யா ?”உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – ( 3 )


ஒரு மொழியின் ஓர் எழுத்தின் ஒலியை அதே மொழியின் இன்னொரு எழுத்தை அல்லது எழுத்துகளைச் சேர்த்து எழுத முடியுமா?
அப்படி எழுத முடிந்தால் பின் அந்த இரண்டு எழுத்துகள் எதற்கு ?
எதையாவது ஒன்றை வைத்துவிட்டு இன்னொன்றை எடுத்து விட வேண்டியதுதானே?

Saturday, 25 April 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?



“ கண்ணைத் திறந்து கொண்டே யாராவது குழியில் விழுவார்களா?” தன் மனக்குமுறலைக் கொட்டிய அவனிடம் நண்பன் கேட்ட கேள்வி இது.

”கண் என்று ஒன்று இருந்ததால்தான் எனக்கு இப்படி ஆனது! அது இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்” எனப் பதிலளிக்கிறான் அவன்.

“யாரோ ஒருத்தியைப் பார்த்தேன். பார்த்த உடனே அவள்மேல் காதல் வயப்பட்டேன் என்கிறாயே..! உன்னுடைய அறிவு எங்கே போயிற்று?
கண்போகிற இடத்தில் எல்லாம் போக விடாமல் அதைத் தடுத்து, நன்மை எதுவோ அந்த வழியில் போகச் செய்யத்தானே அறிவு?

Friday, 24 April 2015

கோபிநாத்தின் நீயா நானாவும் தினமணியும் - இரு அபத்தக் கருத்துகள்.


தமிழைக் காக்க மல்லுக்கட்டுவதாய்ச் சொல்லும்  பலரும் மிகச் சாதாரணமாகத் தமிழ் குறித்த தவறான தகவல்களைப் போகிற போக்கில் பகிர்ந்து போவதைக் கண்டிருக்கிறேன். பதிவெழுதுவதற்கு முன்பெல்லாம் மெல்லச் சிரித்துப் போய்விடுதலே அதைக் காணும்போதும் கேட்கும்  போதும் என் பதிலாக இருக்கும். எண்ணங்களிலும் எழுத்துகளிலும் உள்ள உண்மையைப் பார்க்காமல் எழுதுகின்றவர்கள் யார் சொல்கிறவர் யார் எனப் பார்க்கும் நிலைமை மாறுகின்ற வரை சிறிதளவு பிரபலமான ஒருவரால் கூடப் படிக்கும் அல்லது கேட்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை முட்டாளாக்கிவிட முடிகிறது.

Wednesday, 22 April 2015

உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – ( 2 )


அது திண்ணைப் பள்ளிக் கூடங்களில் இருந்து தமிழ் மெல்ல மெல்ல நவீனக் கல்வி மரபிற்குள் நுழைந்த காலம். பதினெட்டாம் நூற்றாண்டு. சுவடிகளில் இருந்து தமிழ்க்கல்வி, பாடப்புத்தகங்களுக்கு நகர்ந்த காலகட்டம். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் அப்பொழுது என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ அதன் தாக்கத்தினைப் பாடப்புத்தகம் என்று ஒன்று முதன் முதலில் தமிழுக்கு உருவானபோது காண முடிந்தது என்பதற்கு உதாரணம் தமிழ் எழுத்துகள் 247 என்ற வழக்குதான்.

Monday, 20 April 2015

உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள் - (1)


இத்தலைப்பில் அமையும் பதிவுகள்  நீண்ட பதிவுகள் அல்ல.
ஐந்து நிமிடங்களுக்குள் நீங்கள் படித்துக் கடந்து போகக்கூடியவை.

ஆங்கிலத்தைப் பொருத்தவரை இது போன்ற பல முயற்சிகள் அம்மொழி வளரச் செய்யப்படுகின்றன. மொழிப் பயன்பாட்டையும் மொழி பற்றிய புரிதலையும் மொழிச் செம்மையையும் மேம்படுத்துபவை இவை. 

தமிழ் பற்றி இங்கு நான் கூறப்போகும் செய்திகள் பலருக்கும் தெரிந்ததாக இருக்கலாம்.

Saturday, 18 April 2015

குழியில் விழுந்த கொம்பன்.



தன் கூட்டத்தை விட்டுத் தனியே பிரிந்து, மீண்டும் தன் இனத்தைத் தேடிச் செல்கிறது கொம்பன்.
தனிமையின் பதற்றத்தை உறவின் அண்மையால் அதற்கு  ஆற்ற வேண்டி இருக்கிறது.

Thursday, 16 April 2015

நான் தோற்ற க(வி)தை


நமக்கும் நாலு எழுத்துத் தமிழில் பிழையின்றி எழுதத்தெரியும் என்றும் நாம் எழுதுவது எல்லாம் கவிதை என்றும், காதலைப் பற்றியும் தமிழைப்பற்றியும் எழுதுவதே தமிழ்க்கவிதை மரபென்றும் துள்ளித் திரிந்த காலத்தில் எழுதப்பட்டு, கவிதைப் போட்டியில் போராடித் தோற்றுப் போன கவிதையின் ஒரு பகுதி இது. உண்மையில், இதை எழுதும் போது நிறைய உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன்  என்பது தெரிகிறது. இதை இன்று தட்டச்சுச் செய்யும் போதும் கூட இறந்த காலத்தில் நான் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட தமிழ்க்களங்கள் நினைவுக்கு வருகின்றன.

இக்கவிதை நிராகரிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன.

நான் எழுதியது அல்ல என்பது ஒன்று. ( பிறகு இது மிகுந்த பரிசீலனைக்கும் சோதனைக்கும்  பிறகு ஒருவாறாக ஏற்கப்பட்டது. )

இன்னொன்று இதில் இருக்கின்ற நாகரிகமற்ற, கவிதையின் புனிதத்தை அசுத்தப்படுத்தியதாகக் கருதப்பட்ட ஒரு சொல்லாட்சி.

அன்றும் எனக்குப் பரிசு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இல்லை. இன்னொருவருடையதைத் திருடி எழுதினேன் என்ற  குற்றச்சாட்டில் இருந்து மீண்டேனே என்ற மகிழ்ச்சிதான் இருந்தது.

Sunday, 12 April 2015

புற்றைவிட வேகமாகப் பரவுவதா இந்நோய்?



அறிவைப் பெருக்கும் வழிகள் என்னும் பதிவில் என்னடா திடீரென்று தத்துவக் காற்று அடித்தது என்று அதைப்படித்தவர்கள்  ஐயுற்றிருக்கலாம். காரணம் இல்லாமல் இல்லை. மனதில் தோன்றும் உணர்வுகள் இப்படி என்றும் இன்ன தன்மையை உடையது என்றும் காட்டமுடியாதை அகம் என்று கூறுகிறார்கள். அப்புறம் எப்படி அதைக் காட்டமுடியும்? சவாலான விஷயம்தானே அது?

Thursday, 9 April 2015

இப்படி ஒரு பெண்ணை வர்ணிக்க முடியுமா..?


பெண்ணைப் பார்த்துக் கவிஞரான ஆண்கள் பலபேர். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொருவருமே தங்களின் அறிவிற்கும் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்பப் பெண்களை வர்ணித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மட்டும் பெண்கள் ஆண்களோடு போட்டி போட முடியாது என்று நினைக்கிறேன். ஒருவேளை அதற்கான அனுமதி ஆணாதிக்கச் சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கலாம்.

Monday, 6 April 2015

அறிவைப் பெருக்கும் வழிகள் ஆறு.

பண்டைய நூல்களை வாசிக்கும்போது சில சொற்களுக்குப் பொருள் காண்பதோ கண்டவர் வாய்க் கேட்டறிவதோ மிகக் கடினமாக உள்ளது. உரை எழுதியவன் போகிற போக்கில் அருத்தாபத்தி என்பான்... அனுமானப் பிரமாணம் என்பான். அன்றைய காலத்தில் அது புரிந்திருக்கும். ஆனால் இன்று.........?!

என் புரிதலுக்காக இவற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தபோது இவை மனிதனின் அறிவைப் பெருக்கும் வாயில்கள் எனப்பட்டதும் இவற்றின் மூலமாகத்தான் அவன் அறிவைப் பெறுகிறான் என்பதும் தெரியவந்தது. தமிழில் அவை அளவைகள் எனப்படுகின்றன. அளவைகள் என்றால்........... அறிவை அளக்கும் அளவைகள். அறிவை அளந்து நாம் பெற்றுக் கொள்ள உதவும் அளவைகள்.

Friday, 3 April 2015

பெருமாள் முருகனின் அர்த்தநாரி – ஒரு பாமரனின் பார்வையில்.



மாதொருபாகனைத் தொடர்ந்தும் மாதொருபாகனின் சர்ச்சை பெரிதாக வலுப்பெறும் முன்பும் 2014 இன் இறுதியில் பெருமாள் முருகன் அவர்களால் அதன் தொடர்ச்சியாக இருநாவல்கள் எழுதப்பட்டன. மாதொருபாகனின் முடிவில் இருந்து கிளைத்துச் செல்லும் இரு முரணான பாதைகளைத் தேர்ந்தவை அவை.

மாதொருபாகனின் முடிவு, காளி தற்கொலை செய்து கொள்ளப் போகிறான் என்னும் குறிப்போடு முடிந்திருக்கத் தற்கொலை செய்து கொண்டான் ; உயிர்வாழ்கிறான் என்னும் இரண்டு சாத்தியங்களுக்கான வாசகனின் ஊகத்தினூடாக ஆலவாயனும் அர்த்தநாரியும் பயணிக்கின்றன. பொதுவாகவே நாவலின் இறுதி எவ்வாறு முடியலாம் என்னும் வாசகனின் சுதந்திரத்தை, எதிர்பார்ப்பை ஆசிரியரே முடித்துவைக்கும் அதிலும் இருவகை சாத்தியப்பாடுகளையுமே நிகழ்த்திக் காட்டும் மாதொருபாகனின் நீட்சியாக இவ்விரு நாவல்களையும் கொண்டு செல்கிறார். திரு.பெருமாள்முருகன். 

Tuesday, 31 March 2015

அவன் ‘ கொம்பன் ‘ ஆன கதை!


அவளைப் பார்த்த அவன் நிலையைக் காமத்தின் பத்துப் படிநிலைகளில் கண்டாயிற்று. அவன் மீண்டும் மீண்டும் அவள் இருக்கும் இடத்திற்கு வருகிறான். இருவரும் பார்க்கின்றனர். அவ்வளவுதான். கண்ணோடு கண்ணொக்க, வாய்ச்சொற்கள் எந்தப் பயனும் இல்லாத நோக்கு. எப்படிச் சொல்வது என்று அவனும், அவன் எண்ணம் அறிந்தவளாய் அவளும்  இருக்கக் காலத்தை சாட்சி வைத்து  நீளும் மௌன நாடகம்.

Saturday, 28 March 2015

காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்கள் – இது சங்க காலம்.



கண்டதும் காதல் வரும்போது அது இருவருக்கு இடையே பொருத்தம் பார்த்தா வரும்..? நிச்சயிக்கப்படும் திருமணம் என்றாலாவது ஆள் பொருத்தமோ ஜாதகப்பொருத்தமோ பார்க்க முடியும். காதலில் மனதிற்குப் பிடித்திருந்தால் போதாதா பொருத்தம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது.

Monday, 23 March 2015

மறைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து…. (2)



 எனும்முந்தைய பதிவின் தொடர்ச்சி.

இருவில்லும் இல்லை கொடுவாளும் இல்லை
     இதயத்தின் உள்ளே இறங்க
ஒருபார்வை போதும் தடுமாறுந் தாளம்
     உடல்மேளம் கொட்டி முழங்கும்!

Saturday, 21 March 2015

காமத்தின் பத்துப் படிநிலைகள் - இது சங்க காலம்.



அவனுக்கு ‘முருகன்‘ என்பது பெயர் என்னும் பதிவின் தொடர்ச்சி

 மலை நிறையும் குளிர்.

கணப்பாய் மாறிய உடல்.

கவலைகள் அற்று அதுவரை உறங்கிய அவளது உறக்கம் முதல் முறையாகத் தொலைவது அப்பொழுதுதான்.

இன்னொருபுறம்,

அவளது முகத்தை நினைவிற்குக் கொண்டுவர முயல்கிறான் அவன்.
மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறான்.

அவனுக்கு முதலில் தோன்றுவது அவளது அந்தப் பார்வைதான்.

முதற்பார்வையில் அந்தக் கண்கள் அவனோடு புரிந்த போர்.

Thursday, 19 March 2015

மறைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து……!

( ஒரேயடியா சீரியஸா போய்க்கொண்டிருந்தா எப்படி…… என்பதால் இறந்தகாலத்தில் இருந்தெழும் இந்த  இடைநிரப்பிப் பதிவுகள்…!  )





களிகொண்டு துள்ளும் கயல்வண் டிரண்டும்

         கணையொன்றில் என்றன் நிழலை

வெளிகொண்டு வந்து வெறிகொண்ட அன்பு

         வினையாலே என்னை இறுக்கி

Monday, 16 March 2015

பெருமாள் முருகனின் ஆலவாயன்.



“ போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக்கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுந்தியது. மேலே பார்த்தான். பூவரசங்கிளைகள் வானில் விரிந்து பரவியிருந்தன “ என்ற வரிகளுடன் முடிந்திருக்கும் பெருமாள் முருகனின் மாதொருபாகன், காளியின்  தற்கொலை மனவோட்டத்தைக் காட்டுவதாய் முடிந்திருந்தது.

காளி தற்கொலை செய்து கொண்டானா ? இல்லையா ? பொன்னாவின் நிலை என்ன?  என்ற கேள்விகளைப் படிப்போரின் யூகத்திற்கு விட்டபடி நாவலை முடித்திருப்பார் பெருமாள் முருகன். சிறு வயதில் கதைகளைப் படிக்கும்போதும் பின்பு சிறுபிள்ளைத்தனமான கதைகளை எழுதியபோதும் கதை உணர்த்தும் நீதி என்ன என்பதைச் சொல்ல  வேண்டியிருந்தது. வாசிப்பின் பரப்பு விரிவடைந்த போது  நீதி போதனை, பிரச்சாரம் இவற்றைச் செய்வற்காக ஆக்கப்பட்டவை புனைவுகள் இல்லை என்பது புரிந்தது.

Thursday, 12 March 2015

அவனுக்கு ‘முருகன் ‘ என்பது பெயர்.


அந்தக் காலத்து அகமரபில் தலைவனது பெயரையோ தலைவியது பெயரையோ சுட்டிச் சொல்லும் வழக்கம் இல்லை. அகப்பாடல்கள் எங்கும் அவர்கள் பெயரற்றே உலவுகிறார்கள்.

செவிலி, நற்றாய், பாங்கன் (தோழன்), பாங்கி ( தோழி ) இப்படிப் பொதுப்பெயர்களால் மட்டுமே அவர்கள் சுட்டப்படுகிறார்கள்.

Tuesday, 10 March 2015

திருமணத்திற்கு முன் ஒரு தேனிலவு – இது சங்க காலம்.




அவர் என்னுடன் பணியாற்றுபவர். தன் மகளுக்குப் பெரும் பொருட்செலவில் திருமணம் முடித்து வைத்திருந்தார். விடுப்பு முடிந்து பணியில் சேர வந்தததன் பின் பேச்செல்லாம் மருமகனைப் பற்றியும் திருமணம் பற்றியுமாய்த்தான் இருந்தது.

அடுத்து மணமக்களுக்கு ஹனிமூன் ஏற்பாடு செய்ய  வேண்டும் ஊட்டி கொடைக்கானல் என்று போனால் நல்லாயிருக்காது என்றார். வேறெங்கு அனுப்பலாம் என்று கேட்டார்.

ஒருவர் மூனாறு என்றார். இன்னொருவர் டாப்சிலிப் நன்றாக இருக்கும். ரிசாட் எல்லாம் இருக்கிறது என்றார்.

மணவை ஜேம்ஸ் அய்யா, தடாலடியாக “ அப்பப் பேசாம சுவிட்சர்லாந்த் அனுப்பி வைச்சுருங்களேன் சார் “ என்று போட்டார் ஒரு போடு.

Friday, 6 March 2015

அவன் - அவள் - ‘ அது ‘ -- இது சங்க காலம்.


அவள் பின்னே பலமுறை அலைந்தவன் அவன்.
அவள் அன்பைப் பெறுவதற்காகப் பலநாள் காத்திருந்தவன்.
நாளடைவில் அவள் மனம் கனிகிறது.
அவளும் அவன்மேல் அன்பு கொள்கிறாள்.
சாட்சிகள் எவரும் இன்றி யாருமற்ற தனிமையில் அவளை அவன் திருமணம் செய்து கொள்கிறான்.
“இதேபோல் ஒருநாள் உன்னைப் பெண்கேட்டு வந்து உன் உற்றாரும்  பெற்றோரும் சூழத் திருமணம்செய்து கொள்வேன்“ என்று உறுதி கூறுகிறான் .

Friday, 27 February 2015

“ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ்ப்புகைப்படங்கள்“

இரு வாரத்திற்குமுன் நூலகத்திற்குச் சென்றிருந்தபோது எதேச்சையாய் ஒரு  கட்டியான அட்டையுடன், கருப்பு நிறத்தில் புத்தகம் போன்ற, அதைவிடக் கனமான தொகுப்பு ஒன்றைக் காண நேர்ந்தது. எடுத்துப் பார்த்தபோது அது ஒரு பழைய புகைப்பட ஆல்பம். குறைந்தபட்சம் எழுபது ஆண்டுகாலப் பழமையாவது இருக்க வேண்டும் அதற்கு..! ஏனென்றால்  அதன் எல்லாப்படங்களிலும் நீக்கமற நிறைந்திருந்த ஒருவரை  எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்றுத்தான் சட்டென நினைவுக்கு வந்தது. அதிலிருந்தவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஃபாதர். இருதயசாமி. அந்தப் புகைப்படங்களில் பெரும்பான்மை அவருக்கு இருபது இருபத்தைந்து வயதாக இருக்கும் போது எடுக்கப்பட்டிருக்க வேண்டும். முதல் படத்தில் இருந்ததும் அவராகத்தான் இருந்திருக்க வேண்டும். தரையில் குப்புறக் கிடந்து தலையைச் சற்று உயர்த்தி, வாயிலிருந்து எச்சில் கோடாய் வழிய கேமராவைப்பார்த்துச் சிரிக்கும் படம் அவருடையதுதான் என்பதை இறுதிவரை மாறாமல் இருந்த அவரது  கூரிய மூக்குச் சொல்லிற்று.

Sunday, 22 February 2015

“முனைவர் ‘பசி‘பரமசிவம் அய்யாவின் கவனத்திற்குப் பணிவுடன்“


மதிப்பிற்குரிய அய்யா,
வணக்கம். முதலில் நீங்கள் தமிழில் முனைவர்(ப்) பட்டம் பெற்றிருப்பவர் என்பதால் மிகுந்த கவனத்துடனும், பணிவுடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
         நான் பதிவுலகிற்கு வந்ததன் நோக்கம் இதுவன்று என்றபோதும் உங்களின் தளத்தில் பின்னூட்டப்பெட்டி முடங்கி இருப்பதாலும்  தங்களைத் தனியே தொடர்பு கொள்ள மின்னஞ்சல் போன்ற வசதிகள் இல்லாமையாலும் என்னைக் குறித்து, என் பெயர் குறிப்பிடாமல் சில செய்திகள் மட்டும் கொண்டு மீண்டும் ஒரு பதிவு தங்கள் தளத்தில் வந்திருப்பதாலும் அவற்றின் கருத்துகளோடு நான் மாறுபடுவதாலும் என் தரப்பை விளக்க வேண்டிய அவசியம் கருதியே என் தளத்தில் நான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

Saturday, 14 February 2015

நலம் பெற வேண்டும்.



 (நோயுற்றிருக்கும் நான் மிகமதிக்கும் வலைப்பதிவர் சகோதரி இளமதியாரின் நலனுக்காக )


வலைபுதிது கண்மீன் வசப்பட்டுத் துள்ளும்
நிலைபுதிது காணாத நட்பில் – மலைத்தேனோ?
உள்ளம் கனக்க உயிர்பட் டிதழ்விரிக்கும்
முள்ளின் இடைப்பட்ட மொட்டு!

Monday, 9 February 2015

சுட்டது தமிழ்.




தமிழில் யார் வேண்டுமானாலும் எந்தத் தவறை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைத்துத் தமிழைப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் ஒரு புறம் , முன்னோர் இட்டுவைத்த சட்டதிட்டங்களின் படியே பேசவும் எழுதவும் வேண்டும் என்று சொல்லித் திரியும் சிறுபான்மையினரான மொழிக்காப்பாளர்கள் மறுபுறம் என்று தன் கடன் “பணி“ செய்து கிடப்பதே என்று இருக்கும் இருதரப்பினரையும் கொண்டு நம் மொழி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

Thursday, 5 February 2015

கானக நாடன் சுனை.


அது ஒரு வித்தியாசமான சுனை. மிதக்கும் பொருள்களை மூழ்க வைக்கவும், மூழ்கும் பொருள்களை மிதக்க வைக்கவும் கூடிய தன்மை அதற்குண்டு. அதுதான் கானக நாடன் சுனை.

சுரையாழ அம்மி மிதப்ப ........“

எனத் தொடங்கும் இந்தப் பாடல் பற்றிச் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சிதான் இது.

இப்பாடல்  தமிழ்ப்பாட நூல்களில், மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு எடுத்துக்காட்டாக வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது ஒரு பாடலில் பொருளைக் காணும்போது ஓரடிக்குள்ளாகவே சொற்களை இடம் மாற்றிப் பொருள் காண்பதற்கு எடுத்துக்காட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.

Monday, 2 February 2015

கவிதையின் கழுத்தை இப்படியும் அறுக்கலாம்.



 நீங்கள் தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர் என்றால் நிச்சயமாய் இந்தப் பாட்டைக் கடக்காமல்  உங்களால் போயிருக்க முடியாது. எதிர்பாராத விதத்தில் நீங்கள் ஆசிரியராய், அதிலும் குறிப்பாய்த் தமிழாசிரியராய் இருந்துவிட்டால் இந்தப் பாடல் இன்றும் மாணவர்களுக்குப் பாடமாய் இருக்கிறது. அதை  நீங்கள் கற்பித்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்களைப் பொறுமையிழக்கச் செய்ய விரும்பவில்லை.
பாடல் இதுதான்,

Wednesday, 28 January 2015

எதுகை மோனை தேவையில்லாத் தமிழ் மரபுக்கவிதைகள்.

நன்றி-www.heavyquestions.com

மரபுக்கவிதைகள் என்றாலே எதுகைக்கும் மோனைக்கும் அலைதல் ஒரு புறம் என்றால், பெரும்பாலான கவிதைகளில் கவிதாசிரியர் அப்படித்  தேடிப்பிடித்து இடுகின்ற எதுகை மோனைகள் அடைக்க முடியாத பெட்டியில் துருத்தித் தெரியும் அழுக்குத் துணி போலக் காட்சியளிப்பதைச் சாதாரண வாசகரால் கூட உணர முடியும்.

Tuesday, 20 January 2015

நூறாண்டுக்கு முற்பட்ட கடிதமும் ஒரு பூட்டின் சாவியும்.

திருக்குறளில் 135 அதிகாரங்களோடு ஒரு சுவடி பிரான்சில் இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக கவிஞர். பாரதிதாசன் அய்யா அவர்கள் திருக்குறள் கற்பிதங்கள் பதிவின் பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சுவடி அது எந்த நூலகத்தில் இருக்கிறது என்றெல்லாம் அந்த ஆய்வாளர் குறிப்பிடவில்லை போலும். திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது என்பது ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகளாய் நிலைபெற்ற கருத்தே எனினும் பிரான்சில் அப்படி ஒரு சுவடி 1350 குறட்பாக்களோடு இருந்தால் நிச்சயம் அதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட பின்தான் அவை மிகைப்பாடல்களா என்பது தெளிவுபடுத்தப் படவேண்டும்.

Friday, 9 January 2015

மதிப்புரை என்னும் மண்ணாங்கட்டி.



 இது நாவலல்ல; பள்ளிக்கூட மாணவன் காம்போஸிஷன்.“ ஒரு நாவலின் விமர்சனம் இந்த ஒரு வரியில் முடிவடைகிறது. இது ஸ்வாமி சுத்தானந்த பாரதியாரால் எழுதப்பட்ட ’புதுமையும் பழைமையும்’ எனும் நூலைப்பற்றிய மதிப்புரை. (வெளியீடு-அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா பக்கம் 112, விலை. 8 அணா )
இதுமட்டுமல்ல ….இன்னும் இருக்கிறது.

ஸ்ரீ டி.பி. கிருஷ்ணசாமி என்னும் ஆங்கில ஆசிரியர் ‘நீதிநூற்பத்து‘ என்ற தலைப்பில் பத்து பண்டை தமிழ் நீதி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு பக்கம் தமிழ் மூலமும் மறுபக்கம் ஆங்கில மொழி பெயர்ப்புமாக வெளியிட்டிருந்தார். அதற்கான மதிப்புரையின் சிறுபகுதிகள் தான் கீழ்க்காண்பவை,

Saturday, 3 January 2015

யாப்புச் சூக்குமம் IV [ விருத்தத் தூண்டில். ]


வலைத்தளம் கொலைக்களமாக மாறும் முன் இந்தத் தொடர்பதிவை முடித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. கம்பன் சொல்லுவானே,

''ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன்'' 

என. அப்படி நானும் ஆசை பற்றி அறையலுற்ற இந்த யாப்புச்சூக்குமத்தின் சாவியை உங்கள் கையில் கொடுத்துவிட்டு, முற்றும் போட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.

( என்ன மணவை ஜேம்ஸ் அய்யா………………….சந்தம் வண்ணம் எல்லாம் வேணுமா? )

மரபுக் கவிதைகளுக்கும் புதுக்கவிதைகளுக்கும் உள்ள வித்தியாசம் இந்த ஓசைதான். தமிழின் இந்த ஓசை லயம் மரபுக் கவிதைகளை மனப்பாடம் செய்வித்தது. அரங்குகளின் கடகட எனப் படிக்கப்படும் போது கைதட்டல் பெற்றுத் தரக் காரணமானது.

இதுவரை இந்த யாப்புச்சூக்குமத்தில் திறந்த கதவுகளைக் கண்டிருந்த நீங்கள் இனி கண்படும் எந்தக் கதவையும் திறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

Monday, 29 December 2014

‘ங்‘ சொல்வது என்ன?


ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது ஆசிரியப் பயிற்சி மாணவிகள் எங்கள் வகுப்பிற்குப் பாடம் நடத்த வந்திருந்தார்கள். மூன்று விஷயங்களால் அவர்கள் வருகை எங்களுக்குச் சுவாரசியமாய் இருக்கும். 

ஒன்று பார்த்துச் சலித்த முகத்திற்குப் பதில் ஒரு புதுமுகம்.

இரண்டாவது நாங்கள் என்ன கேட்டாலும் என்ன செய்தாலும் அவர்கள் எங்களை அடிக்கவோ திட்டவோ மாட்டார்கள்.

முக்கியமானது, பாடம் நடத்தும்போது இடையிடையே, நிறையப் படங்கள், மாதிரிகள் எனக் காட்டுவார்கள். பாடத்தைவிட அதைப்பார்ப்பது மிகச் சுவாரசியமாய் இருக்கும்.
சுருட்டப்பட்ட சார்ட்டுகளில் என்ன இருக்கிறது என்பதும், மூடிவைக்கப்பட்ட பைகளில் இருந்து என்ன எடுத்துக் காட்டப்போகிறார்கள் என்பதும்தான் பாடத்தை விட எங்களுக்கு பேரார்வமாய் இருப்பவை.

Thursday, 25 December 2014

திருக்குறள் கற்பிதங்கள் – புனைவு எண். 1


திருவள்ளுர் தினத்தைத் தேசியவிழாவாக வடமாநிலங்களிலும் கொண்டாட வேண்டும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளதுதிருக்குறளையும் வட மாநிலப் பள்ளிகளில் பாடமாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது  என்ற தேன் வந்து பாயும் செய்திகள் நம் காதுகளில் வந்து விழுகின்ற அதே நேரம் திருக்குறளின் பெருமையென பல்வேறு அறிஞர்கள் சொல்லும்,
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் என்கிற தகவல் பற்றிய மாற்றுப் பார்வை ஒன்றை முன்வைக்கத்தான் இந்தப் பதிவு.

Thursday, 18 December 2014

உயிர் அகல்


வெள்ளம் பெருகிவர வீழ்மரமாய் உன்கரையில்

உள்ளம் நடுங்க உடல்தரித்தேன்! – கொள்ளும்

மனமுண்டேல் கொள்வாய்! தினமுண்டு போகும்

அனல்கொண்டு சாகும் அகம்!

Sunday, 14 December 2014

நான்தான் இல்லை!




காரிருள் நெஞ்சில் வந்த

    பேரொளிப் பெண்ணே! அன்பு

சேரிடம் உன்னில் தானோ?

     யாரிதைச் சொல்வார், நானோ

பாரினைக் கிழிக்கும் அந்த

      ஏரினைப் போலே நெஞ்சம்

Thursday, 11 December 2014

யாப்புச் சூக்குமம்-III [ விருத்தத்தின் எலும்புக்கூடு ]



  விருத்தத்தின் எலும்புக்கூடு என்னும் இந்தப்பதிவை படிக்கும்முன் நீங்கள் யாப்புச்சூக்குமம் பற்றிய முதலிரு பதிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
மரபுக்கவிதைகளைக் கட்டமைத்தல் குறித்த எனது புரிதல் பற்றியது என்பதால் பொதுவாசகர்களுக்கும் மரபின் நுணுக்கங்களை மரபின் வழியில் படித்தோருக்கும் இந்தப் பதிவு ஒரு சிறிதும் பயன்படாது என்பதால் இதைக் கடந்துவிடலாம்.

Sunday, 7 December 2014

கவிதைகள் விற்பனைக்கு!


என்னில் நிறைந்த‘உன் எண்ணம் எழுதுவது
‘தன்னில் தனையுணரும்‘ தன்மையின் – மின்னல்
கிழிப்பதுபோல் என்நெஞ்சைக் கீறி அதனுள்ளில்
விழிப்பதுநீ செய்யும் வினை!