Monday 5 October 2015

பழமைக்குத் திரும்புகிறேன்!வலைப்பதிவர் படைப்பூக்கப் போட்டிகள் முடிந்தன. இனி மதிப்பீடுகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நெடுநாள் கழித்துக் கவிதை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட வரையறைகளில் எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்தது. போட்டி என்பதைக் காட்டிலும் பங்கேற்றல் என்பதே அதன் நோக்கம். போட்டியில்தான் எத்துணை எழுத்தாளுமைகள், தொழில்நுட்பப் பதிவர்கள்,  சமூகச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள், நிச்சயம்  இன்னும் மெருகேறி தமிழ் வாழும் என்கிற நம்பிக்கை என்னுள் வலுவாக வேரூன்றி உள்ளது. போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பதிவர்களின் பதிவுகளையும் படித்தவன் என்கிற முறையில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும்  வணக்கங்களும்..!

பழமைக்குத் திரும்புகிறேன் என்கிற தலைப்பின் பொருத்தத்திற்காய் வழக்கம்போல என் கைச்சரக்காய்ச் சில வெண்பாக்கள். புரியாமைத் தலைசுற்றல்கள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஒரு முறை வாசித்துக் கடக்கலாம். இதன் ஏதேனும் ஒரு ஓரத்தில் தமிழ் மரபின் இனிமையை இனங்கண்டால் அதுவே இதன் இலக்கும் என் மகிழ்வும்.

கொத்தி எனைக்கொண்டு கோபுரத்தின் மேலேற்றி
நித்தம் அலகொன்றால் நீ‘உடைக்க - சத்தமிலா
வாடுநெஞ்சி லேயெழும்பிப் பாடமிஞ்சி யேகிடந்து
தேடயெஞ்சும் கூடிருந்த தோ?

உள்ளக் கதிரணைய உன்றன் கடலெழும்பத்
தள்ளியென் வானம்! தனியேநான்! - புள்நடுங்கக்
காரிருளின் வேரகழ்ந்து பாரதிர ஓரிடியில்
நீரிலுயிர்த் தீயெரிந்த தால்!

அறிந்த சிலகணங்கள்! ஆயிரம் மௌனம்!
முறிந்த முனைமுள்ளென் மூச்சில் - வெறிநாயாய்ச்
சாகவொரு பாகமுயிர் தாகமொரு பாகமென
வேகவிதி நீதணிக்க வா!

பார்க்க முகந்திருப்பிப் பாலம் இடித்தெறிந்தாய்!
தீர்க்க விடையோடு தேடுகிறேன்! - யாரறியத்
தீவைச் சுருக்குகடல் நோவை மிகுத்துமனப்
பாவை இருத்திவரு பா!

கசியும் கலம்நிறைத்த கண்ணீர்ப் பெருக்கில்
நிசியின் நதிநீந்தி நோக  - வசிக்கும்நின்
ஓடுகய லாடுவிழி பாடுகுயி லோடுமொழி
மூடுமன தோடடங்கு மோ?


பட உதவி - நன்றி .https://encrypted-tbn1.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

46 comments:

 1. வாசித்து சொல்லின் இனிமையை கண்டு ரசித்து கடந்து செல்லுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகையோடு தங்களின் ரசனையையும் பதிவு செய்து போனதற்கு மிக்க நன்றி திரு. மதுரைத்தமிழன்.

   Delete
 2. ஆஹா பழமைக்குத் திரும்பியதில் மிக்க மகிழ்ச்சியே. அப்பாடா வலையே வெறிச் சோடி யல்லவா கிடந்தது. இனி உங்கள் காட்டில் ஒரே மழையாக இருந்தால் சரி தான். அமுத சுரபி வற்றினால் நாம் எல்லாம் என்னாவது. ம்..ம் காணமல் ஏங்க வைத்துவிட்டீர்களே. எல்லோரையும் என்னாச்சோ என்றும். ம்..ம் எப்ப என்னவோ இப்பதான் நிமதியாக உள்ளது. மீண்டும் பழைய படி பார்ப்பதில். நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!

  நெஞ்சம் நடுங்கும் நினைப்பினில் வெந்தீரோ
  மிஞ்சுகின்ற எண்ணம் மிக !

  தஞ்சமெனத் துஞ்சாது சண்டிசெய மண்டியதோ
  கெஞ்சும் மனமும் கிடந்து !

  ReplyDelete
  Replies
  1. முதலில் உங்கள் அருமையான வெண்பாக்களுக்குப் பாராட்டுகள் அம்மா.

   அப்படியெல்லாம் உங்களைவிட்டு ஓடிப்போக முடியுமா?

   ஹ ஹ ஹா

   தங்களின் அன்பினுக்கு நன்றிகள்.

   Delete
 3. "எந்தனது சிந்தையதில் எண்ணமதில் வந்துதமிழ்ச்
  சொந்தமெனப் பந்தமெனச் சுற்றமெனப் பைந்தமிழில்
  முந்துநிற்கும் பாவலனே ! முத்தான நாவலனே!
  சந்தப்பா தந்தேன் வணங்கி !

  ReplyDelete
  Replies
  1. அன்பு விஜூ நெடுநாள் கழித்து உங்கள் குரல் கேட்கக் காது மடல் சிலிர்த்தது!
   தங்கள் படைப்புகளை இப்போது படிக்கவில்லை. (நிச்சயமாய் விழா முடிந்து அனைத்துப் படைப்புகளையும் படித்துக் கருத்திடுவேன். படிக்காத காரணம் நேரமின்மை மட்டுமல்ல, ஒரு முன்னெச்சரிக்கைதான் காரணம் நீங்கள் அறிந்தது தான்) மீண்டும் தங்கை இனியா சொன்னது போல வலைவானம் இப்போதுதான் பொழிகிறது. (மகா சுந்தருக்கு இன்னும் ஈற்றடி பிடிபடவில்லை போல. கொஞ்சம் காதைப் பிடித்துத் திருகுங்கள்) உங்களின் வெண்பாவில் சந்தம்(?) மயங்க வைக்கிறது. தொடர்க வாழ்த்துகள்.

   Delete
  2. தமிழ்மிகு மகாசுந்தர்,

   எப்படி இப்படி!!!!!!

   மரபைக் கற்க இதைவிட வேறு வழியில்லை.

   தங்களின் பின்னூட்டத்தில் ஈற்றடியின் ஈற்றுச் சொல் ஈரசையாயின் குற்றியலுகரத்தில் முடிவது மரபு என்பதையே மதிப்பிற்குரிய முத்துநிலவன் ஐயா சுட்டிக்காட்டியுள்ளார் .
   தவறுகளை அடையாளம் காணப் பழகுதல் திருத்தமுறுதலின் முதற்படிதானே!
   அதை காட்டுபவர்களை வணங்குவோம்.

   உங்கள் முயற்சி தொடர்ந்தால் சிறந்த மரபுக் கவிஞருள் ஒருவ ரை புதுகை பெறுமென வாழ்த்துகிறேன்.

   நன்றி.

   Delete
  3. மதிப்பிற்குரிய முத்துநிலவன் ஐயா,

   உங்களைப் பற்றி முதன்முதலில் என் பேராசிரியர் மதிவாணன் ஐயா கூறியது எனக்கு நினைவிருக்கிறது.

   “படிக்கும் நாட்களிலேயே அவரிடம் சரியான திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் இருக்கும். அவரிடம் உள்ள இத்தன்மைபோல் வேறெவரிடமும் நான் கண்டதில்லை “ என.

   தாங்கள் ஒருங்கிணைக்கும் வலைப்பதிவர் விழா அதனை எண்பிக்கிறது.

   தங்களை நான் அறிவேன் ஐயா.

   தங்களின் சேவை என்போல் இன்னும் ஏராளமானவரை வலைத்தளம் இழுத்துவரப் பயன்படும் என்கிற நம்பிக்கை என்னுள் எப்போதும் இருக்கிறது.

   இப்பணியிடையேயும் என் தளம் வந்ததும் கருத்திட்டதும் கண்டு வணக்கங்களும் நன்றிகளும்.

   Delete
  4. "எந்தனது சிந்தையதில் எண்ணமதில் வந்துதமிழ்ச்
   சொந்தமெனப் பந்தமெனச் சுற்றமெனப் பைந்தமிழில்
   முந்துநிற்கும் பாவலனே ! முத்தான நாவலனே!
   உந்தனது பாவெல்லும் முனைந்து !
   ...இப்பொழுது சரிதானே ஐயா..! தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு இருவருக்கும் நன்றி..!

   Delete
  5. வருக வருக!!

   தங்களின் ஆர்வம் வியப்பளிக்கிறது.

   “பாவெல்லும் முனைந்து“ என்பதில் தளைப்பிறழ்ச்சி உள்ளதல்லவா?

   உந்தன்பா வெல்லும் முனைந்து “ என்றோ

   உந்தன்பா வெல்லும் எனை“ என்றோ

   மாற்றலாமா?

   நன்றி

   Delete
 4. மகிழ்ச்சி அய்யா,
  தங்கள் தளத்தில் பழமையை மீண்டும் கண்டதில்,,,
  விழிபாடு குயிலோடும்,,,,, ம்ம்,,
  தங்கள் பா வரிகள் அருமை,,,
  கடந்து செல்லனும் ,,,,,
  வாழ்த்துக்கள்,,,,நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ரசனைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றி பேராசிரியரே.

   Delete
  2. முன்பொரு நாள் பழமைக்கு திரும்பியது போல்
   இப்போ பதிவுக்கும் திரும்புங்களேன்.
   நன்றி ஐயா

   Delete
 5. மகிழ்ச்சி நண்பரே!

  ReplyDelete
 6. அன்புள்ள அய்யா,

  ‘சாகவொரு பாகமுயிர் தாகமொரு பாகமென
  வேகவிதி நீதணிக்க வா!......’

  ‘தீவைச் சுருக்குகடல் நோவை மிகுத்துமனப்
  பாவை இருத்திவரு பா!......’

  ‘ஓடுகய லோடுவிழி பாடுகுயி லோடுமொழி
  மூடுமன தோடடங்கு மோ?........’


  மரம்கொத்திப் புள்ளாய் மனம்கொத்திச் செல்லும்

  திறம்படைத்த பாடலைத் தந்தாயே! - உரமுடன்

  காதல் மொழிபேசிக் கண்ணீர் உகுத்திட்ட

  மோதல் மறைந்திடா தோ?

  வெண்பாவில் அழகிய முடுகுடன் பாடலைப் பாடியது மிக அருமையாக இருக்கிறது.


  த.ம.4.

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்.

   தங்களின் வருகைக்கும் வெண்பாப்பின்னூட்டத்திற்கும் ரசனைக்கும் நன்றிகள.

   Delete
 7. உள்ளம் நிறைந்தது உங்கள் வெண்பாக்கள்!
  மடை வெளமெனப் பெருக்கெடுக்கும் உணர்வோடு!..

  கவிப்பொழிவால் பதிவு துலங்குகிறது ஐயா!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இவற்றைவிட சிறப்பான பல வெண்பாக்களை நீங்கள் எழுத முடியும் சகோ.

   காத்திருக்கிறேன்.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 8. புள்நடுங்கக்
  காரிருளின் வேரகழ்ந்து பாரதிர ஓரிடியில்
  நீரிலுயிர்த் தீயெரிந்த தால்! - ஓடுகய லாடுவிழி பாடுகுயி லோடுமொழி
  மூடுமன தோடடங்கு மோ? விளையாட்டாய்க் கவி புனையும் திறம் கண்டு வியந்து நிற்கிறேன். பாராட்டுக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் ஊக்கமூட்டுதலும் என்றும் வேண்டும் சகோ.

   நன்றி.

   Delete
 9. வணக்கம் பாவலரே !

  சந்தமிகக் கொண்டகவி தந்துவிடும் பாவலனின்
  விந்தைமிகு வெண்பா வியப்பூட்டும் - எந்தையவன்
  கந்தபு ராணமதைக் கண்டுணர்ந்தார் காமுறவே
  சிந்தைபுகுந் தூட்டும் சிறப்பு !

  அருமை அழகு தொடர வாழ்த்துக்கள் பாவலரே வாழ்க வளமுடன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. நொந்த புராணந்தான் நூற்பதெலாம் அன்றியொரு
   கந்த புராணம்நான் காணேனே! - சிந்தைநிறை
   பாட்டிலொளி கூட்டுமும்பின் னூட்டமது காட்டுகின்ற
   நாட்டவழி பாட்டினிலே நான்!

   நன்றி பாவலரே!

   Delete
 10. //சாகவொரு பாகமுயிர் தாகமொரு பாகமென வேகவிதி நீதணிக்க வா! //

  இந்த வரிகளின் சந்தத்தை ரசித்தேன்.

  ReplyDelete
 11. ஆடி விளையாடி ஓடிவரும் அருந்தமிழின் ஆற்றல் கண்டு வியந்து நின்றுவிட்டேன். தொடர்ந்து எங்களை வியப்பில் ஆழ்த்துக்கள் திடீரென காணாமல் சென்று விட்டால் எங்கென ஓடித்தேடுவது நாங்கள் தங்களைப்போன்ற இலக்கிய பகிர்வுகள் தரும் வள்ளலை. வணங்கித்தொடர்கிறேன். நன்றிங்க ஆசிரியரே.

  ReplyDelete
  Replies
  1. வியப்பில் ஆழந்துங்கள் என்று படிக்க வேண்டுகிறேன்.

   Delete
  2. வியந்து நிற்காமல் எழுதத் தொடங்குங்கள் பாவலரே!

   இதை எல்லாம் உங்களின் பயிற்சிக்கென எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

   இதைவிடச் சிறப்பாக உங்களால் எழுத முடியும்.

   எதிர்பார்த்திருப்பேன்.

   நன்றி

   Delete
 12. சாகவொரு பாகமுயிர் தாகமொரு பாகமென
  வேகவிதி நீதணிக்க வா!// ஆஹா ஆஹா ஆஹா...அருமை! உங்கள் பாக்களில் மூழ்கி மிக மிக ரசித்தோம்...தயவாய் மீண்டும் எழுதுங்கள்...எங்களுக்கு எழுத வரவில்லை என்றாலும் ரசிப்பதற்குக் காத்திருக்கின்றோம்.

  ஒரு முறை வாசித்துக் கடந்து செல்ல இயலவில்லை சகோதரரே! பல முறை வாசித்து தமிழின் இனிமையை ரசித்து, முதல் 4 வரிகளின் அர்த்தம் அறிய முடிந்து அதன் பின் கொஞ்சம் வெறித்துப் பார்த்துவிட்டு மீண்டும் இடையில் அர்த்தங்கள் புரிய....சுவைத்து மகிழ்கின்றோம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.

   உங்களின் வருகையும் கருத்தும் எப்போதும் எனக்கு உவப்பூட்டும்.

   இப்போதும் ..

   இன்னும் இன்னும் எழுதத் தோன்றுகிறது.

   நன்றி. நன்றி.

   Delete
 13. // அறிந்த சிலகணங்கள்! ஆயிரம் மௌனம்!//

  இந்த வரிகள் சொல்லாமல் சொல்லும் உணர்ச்சி குழம்பை உணர்ந்து இரசித்தேன்! தங்கள் கவிதைக்கு கவிதையாலே பின்னூட்டம் இட ஆசைதான் .ஆனாலும் நான் இன்னும் ஆரம்பப்பள்ளி மாணவன் தானே!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்றால் நான் அட்டைக்கிளாஸில் அல்லவா இருக்க வேண்டும்:)

   எழுதுங்கள் ஐயா.

   உங்களிடம் உள்ள முயற்சியும் ஆர்வமும் வாசிப்பும் எல்லாம் எளிதாக்கும்.

   நன்றி

   Delete
 14. அப்பப்பா! ஒவ்வொரு பாவிலும் அந்தக் கடைசி இரு வரிகளின் வேகம் இருக்கிறதே! அசத்தல்! ஓரிரு இடங்கள் புரியாவிட்டாலும் பெரும்பாலும் புரிந்தன! அருமை!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா.

   புரியாமை உங்களுக்கும் இருக்கிறதா :(

   இனிக் கவனமாய் இருக்கிறேன்.

   ஆம்.

   அந்தக் கடைசி இருவரிகள்தான் இவ்வெண்பாவை எழும்பச் செய்வன.

   தங்களின் பாராட்டிற்கு நன்றி.

   Delete
  2. //இனிக் கவனமாய் இருக்கிறேன்// - என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் புரிய வேண்டும் என்பதற்காக நீங்கள் வினைகெடத் தொடங்கினால் உங்கள் படைப்பின் தரம் குறையத் தொடங்கி விடும் ஐயா! எனவே, அது வேண்டா!

   Delete
 15. வாழ்த்துக்கள் அனைத்து பாக்களும் சிறப்பு! எனக்கு தலைப்பு கொடுத்து எழுதச் சொல்லும் போது எழுத முடிவது இல்லை! என் சோம்பேறித்தனமோ என்று கூட எண்ணுகின்றேன்! அதனால்தான் புதுகை பதிவர்கள் அறிவித்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை! பார்ப்போம்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா தலைப்பெங்கே தந்தோம்? பொருள்(Subject)தானே தந்தோம்? இப்படிச் சொல்லித் தப்பித்துக்கொள்ளாமல் அவ்வப்போது எழுதுங்கள் அய்யா.

   Delete
  2. வணக்கம் நண்பரே

   நானும் ஆசுகவி இல்லை.

   வரையறைகளுக்கு உட்பட்டு எழுதப் படுவதல்ல கவிதை.

   ஆனால் போட்டியை நடத்தும்போது அவர்கள் சில வரையறைகளுக்கு உட்பட்டு இயங்கியாக வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

   நான் முயற்சித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete

 16. வணக்கம்!

  போட்டிக் கெழுதிய பொற்றமிழ், என்னிதயக்
  கூட்டுக்குள் கூட்டும் குளிர்!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
 17. குளிரும் இதயங்கள் கொஞ்சுந்தீக் கங்காய்
  மிளிரும் உங்கள் மொழி

  தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. இது போட்டிக்கெழுதியதி்ல்லை ஐயா!
   நன்றி

   Delete