Monday 29 December 2014

‘ங்‘ சொல்வது என்ன?


ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது ஆசிரியப் பயிற்சி மாணவிகள் எங்கள் வகுப்பிற்குப் பாடம் நடத்த வந்திருந்தார்கள். மூன்று விஷயங்களால் அவர்கள் வருகை எங்களுக்குச் சுவாரசியமாய் இருக்கும். 

ஒன்று பார்த்துச் சலித்த முகத்திற்குப் பதில் ஒரு புதுமுகம்.

இரண்டாவது நாங்கள் என்ன கேட்டாலும் என்ன செய்தாலும் அவர்கள் எங்களை அடிக்கவோ திட்டவோ மாட்டார்கள்.

முக்கியமானது, பாடம் நடத்தும்போது இடையிடையே, நிறையப் படங்கள், மாதிரிகள் எனக் காட்டுவார்கள். பாடத்தைவிட அதைப்பார்ப்பது மிகச் சுவாரசியமாய் இருக்கும்.
சுருட்டப்பட்ட சார்ட்டுகளில் என்ன இருக்கிறது என்பதும், மூடிவைக்கப்பட்ட பைகளில் இருந்து என்ன எடுத்துக் காட்டப்போகிறார்கள் என்பதும்தான் பாடத்தை விட எங்களுக்கு பேரார்வமாய் இருப்பவை.

Thursday 25 December 2014

திருக்குறள் கற்பிதங்கள் – புனைவு எண். 1


திருவள்ளுர் தினத்தைத் தேசியவிழாவாக வடமாநிலங்களிலும் கொண்டாட வேண்டும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளதுதிருக்குறளையும் வட மாநிலப் பள்ளிகளில் பாடமாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது  என்ற தேன் வந்து பாயும் செய்திகள் நம் காதுகளில் வந்து விழுகின்ற அதே நேரம் திருக்குறளின் பெருமையென பல்வேறு அறிஞர்கள் சொல்லும்,
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் என்கிற தகவல் பற்றிய மாற்றுப் பார்வை ஒன்றை முன்வைக்கத்தான் இந்தப் பதிவு.

Thursday 18 December 2014

உயிர் அகல்


வெள்ளம் பெருகிவர வீழ்மரமாய் உன்கரையில்

உள்ளம் நடுங்க உடல்தரித்தேன்! – கொள்ளும்

மனமுண்டேல் கொள்வாய்! தினமுண்டு போகும்

அனல்கொண்டு சாகும் அகம்!

Sunday 14 December 2014

நான்தான் இல்லை!




காரிருள் நெஞ்சில் வந்த

    பேரொளிப் பெண்ணே! அன்பு

சேரிடம் உன்னில் தானோ?

     யாரிதைச் சொல்வார், நானோ

பாரினைக் கிழிக்கும் அந்த

      ஏரினைப் போலே நெஞ்சம்

Thursday 11 December 2014

யாப்புச் சூக்குமம்-III [ விருத்தத்தின் எலும்புக்கூடு ]



  விருத்தத்தின் எலும்புக்கூடு என்னும் இந்தப்பதிவை படிக்கும்முன் நீங்கள் யாப்புச்சூக்குமம் பற்றிய முதலிரு பதிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
மரபுக்கவிதைகளைக் கட்டமைத்தல் குறித்த எனது புரிதல் பற்றியது என்பதால் பொதுவாசகர்களுக்கும் மரபின் நுணுக்கங்களை மரபின் வழியில் படித்தோருக்கும் இந்தப் பதிவு ஒரு சிறிதும் பயன்படாது என்பதால் இதைக் கடந்துவிடலாம்.

Sunday 7 December 2014

கவிதைகள் விற்பனைக்கு!


என்னில் நிறைந்த‘உன் எண்ணம் எழுதுவது
‘தன்னில் தனையுணரும்‘ தன்மையின் – மின்னல்
கிழிப்பதுபோல் என்நெஞ்சைக் கீறி அதனுள்ளில்
விழிப்பதுநீ செய்யும் வினை!

Saturday 29 November 2014

தி இந்து நாளிதழின் கட்டுரையும் எழுத்துத் திருட்டும்.

நேற்றைய தமிழ் இந்து நாளிதழின் ( 28-11-2014) கருத்துப் பேழை பகுதியில்எழுத்து ஒரு சொத்தா?“ என்னும்  தலைப்பில் மு. இராமனாதன் என்பவரின் கட்டுரை இடம் பெற்றிருந்தது. இன்றைய காலத்தில் படைப்பாளர்களிடையே சற்றே புத்திசாலித்தனமாகக் கையாளப்படும் எழுத்துத் திருட்டைப்பற்றி அவர் அதில் விவாதித்திருக்கிறார். கட்டுரையில் அவர் சொல்லும் மையக்கருத்து இதுதான். “ எழுத்தாளர்களை மதிக்காத சமூகத்தில்தான் காப்புரிமை அதிகமாக மீறப்படுகிறது.“

அவரது கட்டுரையில் இருந்து சில பத்திகளை அப்படியே தருகிறேன்.

“………….இப்போது நான் கணினியில் உள்ளிடுகிற இந்த எழுத்துக்கள் என்னுடைய சொத்தா? இப்படியொரு கேள்வி எழக் காரணம், சமீபத்தில் படித்த கட்டுரை. கடந்த ஜூலை மாதம் மொரிஷியஸில் வெளிநாட்டுத் தமிழர்களுக்காக ஒரு மாநாடு நடத்தி, அந்தச் சமயத்தில் ஒரு மலரையும் வெளியிட்டிருக்கிறார்கள். அது எனக்கு வாசிக்கக் கிடைத்தது. அயலில் வசிக்கும் தமிழர்கள் எழுதியிருக்கிறார்கள். ஓர் அமெரிக்க அன்பர் அமெரிக்கத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழ்கிற தமிழர்களை உள்ளடக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஹாங்காங் குறித்த பகுதி எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது. அது ஹாங்காங்கைப் பற்றியது என்பதனால் அல்ல, அதில் இரண்டு பத்திகள் நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இணையப் பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன. அன்பர் ஒன்றிரண்டு மாற்றங்களைச் செய்திருந்தார். 'ஹாங்காங்' என்பதை 'ஆங்காங்' என்றும், '70 இலட்சம் மக்கள்தொகை' என்று நான் எழுதியிருந்ததை '72,35,043 மக்கள்தொகை' என்றும் மாற்றியிருந்தார். மற்றபடி, நான் எழுதியிருந்த இரண்டு பத்திகள் கிட்டத்தட்ட அப்படியே இடம்பெறுகின்றன.

இப்படியான சம்பவத்தை இதற்கு முன்னரும் எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது நான் செய்யக்கூடியது ஒன்றுதானிருந்தது. எழுதுவதை ஏறக்கட்டிவிட்டுப் பாடங்களைப் படிப்பது….“

Monday 24 November 2014

பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு…!

பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுகிறோம், அதற்குத் தமிழில் இலக்கணம் இருக்கிறதா என்று மணவையார் சென்ற பதிவில் கேட்டிருந்தார். ஒரு பேச்சிற்காய் இருக்கிறது என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்தால் மீண்டும் எப்பொழுது சொல்வீர்கள் என்று கேட்டு விட்டார். தினமும் பார்க்க வேண்டியவர். இனித் தப்பிக்க முடியாது என்று நினைத்து முதலில், பல பிரபலப் பதிவர்களின் தளங்களுக்கு உள்ளே போய்ப் பின்னூட்டங்களை மட்டும் படித்துத் தேவையானதை நகலெடுத்து அப்படியே கணினியில் சேமித்துக் கொண்டிருந்தேன். அடுத்த “காப்பி“ வருவதற்குள் இதை முடித்துவிடவேண்டும்.

பதிவர்களின் பெயர்களையோ பதிவுகளையோ, பின்னூட்டங்களையோ இங்குக் குறிப்பிடாமல், நான் கண்ட அந்தப் பின்னூட்டங்களின் இயல்புகள் இப்படி இருந்தன என்று பார்த்து அவற்றை ஏதேனும் பொது வகைமையின் கீழ்க்கொண்டு வரமுடியுமா? ஏதேனும் இலக்கணக் கொள்கைகளை இதற்குப் பொருத்திக் காண முடியுமா என்று பார்ப்பதற்கு ஒரு நாளாயிற்று.  நான் பார்த்த பின்னூட்டங்களின் அடிப்டையிலும், எனக்குத் தெரிந்த இலக்கணக்கொள்கையின் அடிப்படையிலுமே இவற்றை ஒழுங்கு படுத்துகிறேன். இந்த வரம்பு தாண்டி எவையேனும் இருக்குமானால் கூடுதல் செய்திகளைக் கூற நமது நண்பர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்களே என்ற நினைப்பில் பொதுமையைப் பகிர்கிறேன்.

Friday 21 November 2014

அந்தக் காலத்தில் காப்பி இருந்தது.


         சமீபத்தில் இணையத்தில் அடுத்தவரின் பதிவை அப்படியே எடுத்து ஒரு நன்றி கூடச் சொல்லாமல் ஒரு வலைப்பூவையே நடத்திக் கொண்டிருந்தவர் குறித்து மாறி மாறிச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பலரும் தங்களுடைய படைப்புகள் திருடப்பட்டுள்ளனவா என்று வேகமாய்ப்போய்ப் பார்த்ததுபோல் நானும் பார்த்தேன். அடுத்தடுத்துப் பல பதிவுகளையும் அவர் தளம் போய்ப்பார்த்துவிட்டு வெளியே வந்து சிலமணி நேரத்தில் மீண்டும் சென்றபோது அவருடைய தளப்பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது! அட.. பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இப்படியும் ஒரு வழியிருக்கிறதா என்று நான் சற்று வியந்தது உண்மை.

Sunday 16 November 2014

யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!

அடுத்த பதிவுஅந்தக் காலத்தில் காப்பி இருக்கிறதுஎன்று சொல்லி  விட்டேன். உண்மைதான்.என்ன கொஞ்சம் சூடாக இருக்கிறது. அது ஆறும் வரை சும்மா இருக்காமல் நூலொன்றிற்கு உரைபார்க்க உட்கார்ந்தேன். மிகுந்த மலைப்புத்தான். என்ன செய்வது. புரிவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே..!

வெண்பா வகுப்போ முடிந்தது. என் பாவைப் பாடலாம் என்று எழுதினால் அதுவும் வெண்பா யாப்பில் மட்டும்தான் வருகிறது இப்போதெல்லாம்இது என் குருவிற்கு எழுதியதாக வைத்துக் கொள்ளலாம்.

Thursday 13 November 2014

வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்.



வெண்பாப்புலி மேக்குடி நரசிம்மன் அய்யாவின் பாடலில் பிழையிருக்கிறது என்று கூற யாராயிருந்தாலும் நேர் நிரை பற்றிய அறிவு மட்டும்  போதுமானதாய் இருக்கும்.
ஆனால் வெண்பா எழுதுவதற்கு வார்த்தைகளைத் தேடி நொந்த கதை எல்லாருக்கும் பொதுவானதுதான்.
சென்ற இரு பதிவுகளின் பின்னும் வெண்பா எழுதிப் பார்த்தவர்களும் பின்னூட்டத்தில் வந்தவர்களும் சிலரேனும் இருப்பார்கள். வெண்பா அறிந்த பலரும் ஒன்று இரண்டு என்று இவன் சொல்லுவது சரியா என்று சரி பார்த்திருப்பார்கள்!
எழுத முயன்று சொற்களைத் தேடித் தேடிச் சோர்ந்து போய்,
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்என்று விட்டவர்களும் சிலர் இருப்பர். தேவையில்லை எனிலும் தெரிந்து வைத்துக் கொள்வோம் என்று சிலர் இருக்கலாம்.
உங்களில் மிகப்பலர்க்கும் ஏற்பட்டு இருக்கிற வெறுப்பு எனக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
வெண்பாவைப் பிழையாக இப்பொழுதும் நான் எழுதுகிறேன்.

Sunday 9 November 2014

யாப்புச்சூக்குமம் II – துலங்கும் உருவம்.

இதைத் தொடரும்முன் என் மதிப்பிற்குரிய முத்துநிலவன் அய்யாவிற்கு நன்றி சொல்லிவிடுகிறேன். ஆசிரியர் என்பதற்கான  இலக்கணம் படித்திருக்கிறேன். உண்மையில் தம் மாணவரின் வளர்ச்சிக்கு உதவுவதும், தவறு காணும் போது திருத்திடச் சொல்வதும், அதே நேரம் மாணவர்கள் சோர்ந்து பின்தங்கும் போது கைதூக்கி விடுவதும், உயரச்சென்று அவன் மறந்து போகும் போதுகூட “இவன் என் மாணவன்“ எனக்கூறி பெருமைபட்டுக் கொள்வதும் எல்லா ஆசிரியர்களுக்கும் இயல்பானதுதான்.
நான் அவர் பெருமைப்பட்டுக்  கொள்ளும் அளவிற்கு உயரே சென்று விடவில்லை. நான் நன்றி சொல்லக் காரணம் நான் இந்த வலையுலகிற்கு வர அவர் காரணம் என்பது மட்டுமல்ல. என்னை அறிமுகப்படுத்தி விட்டோம். நம் வேலை முடிந்தது என்று அவர் இருந்துவிடவில்லை. என் ஒவ்வொரு பதிவிற்கும் சரியென்றும் தவறென்றும்  நியாயமான விமர்சனங்களை முன் வைத்தே இருக்கிறார். முந்தைய யாப்புச்சூக்குமம் என்னும் பதிவை அதிகப்பதிவர்களால்  பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்ற அவர் தளத்தில் அறிமுகப்படுத்தியதோடல்லாமல் என்தளத்தில் வந்து காணுமாறு சொல்லிவைத்தார். என் இலக்கணப் பதிவுகளுக்கு இத்தனை வாசகரை நான் கண்டதில்லை. இதற்கு வரும் பின்னூட்டங்களைக் கண்டபின்னர் 

Wednesday 5 November 2014

யாப்புச் சூக்குமம்.



ஆசிரியப் பயிற்சியின் போது திருச்சியிலிருந்து மாயனூருக்குத் தினமும் செல்லும் புகைவண்டிப் பயணங்கள் இப்பொழுது எண்ணினாலும் இனிமையானவை. புகைவண்டி திருச்சியிலிருந்து புறப்படுவதால் பெட்டி காலியாகவே இருக்கும். எனக்குப்பிடித்தச் சன்னலோர இருக்கைக்குப் போட்டி இருக்காது. காவிரியும் பச்சைபசேல் வயல்களும் ஓவியம் போல் இருமருங்கிலும் கிடக்கப் புகைப் பெருமூச்சு விட்டபடி ஓடும் இரும்புக் குதிரையின்  சவாரியில் முன்பின்னாய் மேல்கீழாய்ச் சுழலும் தியானானுபவத்தை நினைக்கும் போதெல்லாம்  சட்டென விழுந்துவிடும் மனம்.
பலபல மனிதர்கள்..பலவித அனுபவங்களுடனான இருவருட இரயில் அனுபவத்தில், மேக்குடி நரசிம்மன் அவர்களால்  எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான் இது. அந்த வண்டியில் அந்தக்காலத்தில் என்னோடு பயணம் செய்த பலருக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். நம் மக்கள் தொகையில் மிகுதியாக உள்ளவர்களைப் போல அவர் ஒரு கவிஞர். அல்லது அப்படி அழைக்கப்பட வேண்டுமென ஆசைப்படுபவர். குறிப்பாய், அந்தப் பெரும்பான்மையுள் சிறுபான்மையாய் இருக்கின்ற மரபுக் கவிஞர். அதிலும் ஆகக் கடினமென்னும் வெண்பாப்புலி.

Friday 31 October 2014

தீ உறங்கும் காடு


எங்கேனும் ஓருள்ளம் என்‘எண்ணம் உணராதோ
           என்றென்றன் நெஞ்சம் ஏங்கும்!
       எடையிட்டுப் பார்த்துப்பின் உடைபட்டுப் போகின்ற
           ஏக்கத்தில் அஞ்சித் தேங்கும்!

Sunday 26 October 2014

சிதைக்கப்பட்ட சித்திரங்கள்



எட்டாம் வகுப்பில் எங்கள் தமிழாசிரியர் கண்அறுவை சிகிச்சைக்காய் ஒருமாத காலம் மருத்துவ  விடுப்பில் இருந்தார். அவருக்குப் பதிலி ஆசிரியராக ஒருவர் வந்திருந்தார்.  தனது சுயவிவரங்களை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டதாக நினைவில்லை. அதனால் அவர் பெயர் தெரியவில்லை. முப்பது வயது இருக்கலாம். தலையை அடிக்கடிக் கோதிக்கொள்ளும் அளவிற்கு நிறைய முடியும் , பேன்ட், இன் செய்த சர்ட், ஷூ, கேட்டவரை வசீகரிக்கும் குரல் எனப் பார்த்த உடனே என்னைக் கவர்ந்துவிட்டார். உண்மையில் அதுவரை தமிழாசிரியரை மட்டுமல்ல எந்த ஆசிரியரையும் அவ்வளவு நேர்த்தியாக உடையுடுத்தி நான் பார்த்ததில்லை. புறத்தோற்றத்தில் யார் பார்த்தாலும் உடனே மதிப்பு வந்துவிடும் அவர்மேல்.

Monday 20 October 2014

கிழவிப்பாட்டு



என் பள்ளிப்பருவத்தில் என் அத்தையின் வீட்டிற்குப் போகும் போதெல்லாம் வீட்டின் எதிரே சாலையின் மறுபுறத்தில் நெடுநாட்களாய் அடைத்துக் கிடந்த அந்தத் தையலகத்தின் வாசலில் உரிமை கோருவார் யாருமற்றுக் கிடக்கின்ற இரண்டு மூட்டைகளைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் நான் அங்குச் செல்லும் நேரம் மாலை மயங்கிய இரவு நேரம் என்பதால் அதைப் பெரிதாகக் கவனித்ததில்லை. அன்று  புறப்படும் போதே மழை பெய்யத் தொடங்கியிருந்து. சைக்கிளில் தொப்பலாய் நனைந்தபடி அத்தையின் வீடடைந்து முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தேன். அழைப்பு மணியை அடித்துக் காத்திருந்த கணத்தில் அந்தத் தையற்கடையின் வாசலில் இருந்த இரு மூட்டையுள் ஒரு மூட்டை சற்று அசைவதுபோலத்தோன்றியது. வானம் பொதிந்த இருளைக் கிழித்தெரிந்த மின்னல் ஒன்றின் ஊடாகப் பார்த்த போதுதான் அது ஒரு மனித உருவம் என்பது  புலனாயிற்று. கண்கள் இருட்டைப் பழகிக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய போது அந்த உருவத்தின் அசைவிற்கேற்றவாறு அங்குமிங்குமாய் ஒரே போல் நகர்கின்ற கொசுப் பந்தொன்று அவ்வுருவத்தைச் சுற்றிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. விரட்ட வழியற்று உடல் மறைக்க ஒற்றைச் சேலையைச் சுற்றியடி மழையிலும் கொசுக்கடியிலும் யாராலும் வேண்டப்பெறாத மனித உயிரொன்று கிழிந்த சாக்கில் உடல்கிடத்தி இயற்கையின் ஆவேசத்தில் நடுங்கி நடத்தியஉயிர்ப்போராட்டமாய் அக்காட்சி என் கண்முன் விரிந்தது.

Tuesday 14 October 2014

இரட்டைவால் குரங்கும் இருபதுகால் ஆடும்.



மொழியில்  உள்ள ஒரு சில புதிர்களை, விந்தையான விஷயங்களைக் காணும் போது முதலில் வியப்பு தோன்றும். என்ன சொல்லியிருக்கிறார்கள் அல்லது என்னதான் சொல்ல வருகிறார்கள் நம்மைக் குழப்ப வேண்டுமென்றே கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டிருப்பார்களோ இந்தப் புலவர்கள் என்றெல்லாம் நினைத்தாலும் அந்தப் புதிரை அவிழ்க்கும் சூக்குமம் பிடிபட்டுவிட்டால் தோன்றும்

Saturday 11 October 2014

சம்மனசு டீச்சரும் மயில் டாலர் செயினும்.



எனது இரண்டாம் வகுப்பில் சம்மனசு டீச்சரிடம் படித்தேன்.குட்டையானவர். கொஞ்சம் குண்டுதான். மாந்தளிரின் நிறம். பெரிய சோழியின் தட்டைப் பகுதி போலக் கண்ணாடி , அதன் நடுவே உள்ள கீறல் போன்ற சிறு கண்கள். அருகில் வரும் போதெல்லாம்  வீசும் குட்டிக்குரா பவுடரின் வாசனை. அதற்குப் பின் எங்கே அந்த வாசனை வந்தாலும் மனம் ஒரு முறை சம்மனசு டீச்சரைத் தேடிப்பார்க்கும் .

Monday 6 October 2014

ஏங்கும் ஒரு கூடு



நினைவாலே நீ‘என்னில் நானாகி எனில்வாழும்
           நனைவுகள் காய வில்லை!
     நெருக்கத்தில் உனைக்கண்டும் நீடிக்கும் மௌனத்தில்
           நிற்கின்ற வலிமை இல்லை!

Tuesday 30 September 2014

தமிழ்க் கைம்மா நல்லா இருக்குமா?


பண் இசைத்துப் பாடுபவன் பாணன். அவன் மனைவி பாணி. பாட்டுப்பாடி கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதுதான் அவர்கள் தொழில்.
அவர்களை வாழவைத்த தர்மப்பிரபுக்களும் அன்று இருந்திருக்கிறார்கள்.
தன் வறுமையைப் போக்க ராமன் என்கிற வள்ளலைப் பார்த்துப் பரிசில் பெற்று  வீட்டுக்குள் வருகிறான் அந்தப் பாணன்.
பாணி தன் கணவன் என்ன வாங்கி வந்திருப்பான் என்ற ஆவலில் அவனிடம் கேட்கிறாள்.

Friday 26 September 2014

காலக்கணிதம்.



கணிதம் பற்றிய பதிவுகளைச் சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் தளத்திலும் நண்பர் அ பாண்டியன் அவர்கள் தளத்திலும் காண நேர்ந்த போது கணக்கதிகாரம் என்றொரு நூலும், தமிழில் காளமேகத்தின் பின்னம் பற்றிய பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்தன. தமிழில் உள்ள நான்கு கவிகளில் ஆசுகவி என்போர் ஏதேனும் எழுத்தையோ சொல்லையோ பொருளையோ கொடுத்தால் உடனடியாகப் பாடும் வல்லமை பெற்றவர்கள். அதற்கான சோதனையும் அவைக்களங்களில் நடப்பதுண்டு.
அப்படிக் காளமேகத்திடம்,முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்னும் எட்டு அளவைச் சொற்களும் அமையுமாறு கச்சியில் உறையும் ஏகாம்பரநாதர் மேல் ஒரு வெண்பா பாடுமாறு கேட்கப்பட்டதாகக் கூறுவர். காளமேகம் பாடிய பாடலைக்

Tuesday 23 September 2014

சொல் விளையாட்டு



புலவர்களும் வறுமையும் உடன்பிறந்தவைதான். அந்தக்காலப் புலவர்களுக்கு எழுதுவதுதான் தொழில். அவர்களது தேவைகளை அரசு கவனித்துக் கொள்ளும். அல்லது அவர்களின் தரமறிந்து கொடுக்கும் மனம் கொண்டு ஆதரிப்போர் கவனித்துக் கொள்வர். புலவர்களும் புலமைச் செருக்கோடுதான் வலம் வந்துள்ளனர்.
ஔவை பாடியதில் எனக்குப் பிடித்த வரிகள் இவை.
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
       விரைந்தழைப்பார் யாவருமிங் கில்லை

Monday 22 September 2014

துன்பக் கேணி.


 இராமச்சந்திர கவிராயர் என்றொரு கவிஞர் மிகச்சுவையான பாடல்களை எழுதியிருக்கிறார். நகைச்சுவையும் அவலமும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல்களாய் அவை இருக்கின்றன.   ஒருவனுக்குத் துன்பம் எப்படி அடுக்கடுக்காய் வரமுடியும் என்பதற்கு இவர் எழுதிய

Monday 15 September 2014

கவிஞர்.கி.பாரதிதாசன் கண்ணன்விடு தூது


                        






                                    


                               


      
 















                                  காப்பு 

பண்ணில் தமிழ்பாடும் பாரதி தாசர்மேல்

கண்ணன் விடுதூது கட்டுரைத்துக் - கொண்டுசெல

மாலைவரு மாலைதிரு மாலைபெற மாலடியார்

காலைதொழுங் காலையவர் காப்பு.


( ஈற்றிரண்டடிகள் மடக்கு. . இதன் பொருள் : மாலைவரு மாலை -மாலை வேளை வரும் திருமாலை, திருமாலை பெற - மேன்மைபொருந்திய மாலையைப் பெற்றுவரத் தூதாய் அனுப்ப, மாலடியார்  - மாலடியார்களாகிய ஆழ்வார்களின், காலை தொழுங்காலை -  திருவடிகளைப் பணியுங்காலை, அவர்காப்பு -  அவர்களே இந்நூலினைக் காத்தமைவர்)

Tuesday 9 September 2014

பூக்கள் நோகும்.


தெளிவிற்கும் மனதில்‘உன் தெளியாத நினைவிற்கும்
     தேக்கங்கள் என்றும் இல்லை! – என்றன்
ஒளிவிற்கும் நான்செய்த ஓராயிரம் கவிக்கும்
     ஒளிசேர்க்க நீயும் இல்லை!

Wednesday 3 September 2014

மலைத்தேன்.

 
வண்டோடு மலர்பேச வானோடு மரம்பேச
       வளர்ந்தோங்கு கொல்லி மலைமேல்
     வருகின்ற இருள்கொல்லும் வாள்தன்னைக் கரமேந்தி
        விடியலினை உலகு நல்கக்
கொண்டாடும் ஒளியோடு கொல்லிமலை கீழ்திசையில்
        கதிரோனும் உதய மானான்!
      குயில்கூவ மயிலாடக் கண்திறந் திவ்வுலகத்
        துயில்நீங்கத் தேரில் வந்தான்!

Sunday 31 August 2014

கண்ணோடு நின்ற கனவு.




............................ கலிவெண்பா
...............................

நெஞ்சள்ளும் பேரழகால் நித்தம் எனைவென்று
அஞ்சி நடந்தென்னை ஆள்கின்றாய்! கொஞ்சிடச்செய்
கிள்ளை மொழியாய்க் குயிலொலியாய் ஏழிசையாய்ப்
பிள்ளை மழலையெனப் பேசுகிறாய்! நெஞ்சம்
நினைந்துரும் வண்ணம் நிழல்போல வந்தாய் !

Thursday 28 August 2014

வாராயோ கண்மணியே!












முத்தை விளைத்தெடுத்த மோகப்பூஞ் சித்திரமே!
தத்தை குரல்கற்கும் தங்க ரதவடிவே!
குளத்தில் தாமரையும் கூம்பி‘இதழ் விரிப்பதுபோல்
உளத்தில் மலர்ந்தென்னுள் உயிரான மெய்ப்பொருளே!

Monday 25 August 2014

வீழும்வரை போதும்!















கிள்ளையிலும் இல்மொழியை மெல்ல‘அவள் சொல்லமனம்
       அள்ளுமிவள் உள்ளழகில் ஆழும்! – என்னைக்
கொள்ளைகொண்டு போகுமிவள் கள்ளவிழி வீச்சழகில்
       உள்ளம்பனி வெள்ளமென வீழும்!

Thursday 21 August 2014

சொல்லாக் கவி சொல்வாய்!



 


வெட்டும்விழி கொட்டும்கணை ஒட்டும்‘எனை நாடும்!
விட்டும்பிடித் திட்டும்‘எனைத் தொட்டும் சுகம்தேடும்!
பட்டும்‘உள மொட்டும்மதி கட்டும்‘உணர் வாடும்!
கிட்டும்‘எனச் சுட்டும்நிலை கெட்டும்‘உனைப் பாடும்!

Monday 18 August 2014

எனக்குத் தெரியாது!




 






சென்னைக் கிறித்தவக்கல்லூரியில் விரிவுரையாளருக்கான நேர்காணலுக்கு வந்திருந்த மறைமலை அடிகளிடம் பரிதிமாற் கலைஞர் கேட்டதாகச் சொல்லப்படும் கேள்வி
“குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்திற்கும் எடுத்துக்காட்டுத் தருக“
மறைமலையடிகள் சொன்ன பதில்
“ எனக்குத் தெரியாது “

Saturday 16 August 2014

நீ என்னை ஆள்க!


ஓங்கும் மலையாகி
     உன்னை நான்மறக்கத்
தூங்கும் வானாய்நீ
     தோன்றமனம் தோற்குதடி!

Monday 11 August 2014

சொல் வேட்டை!



பழைய இலக்கியங்களைப் பனையோலையில் இருந்து பிரதி எடுக்கும் போது சில சொற்கள் அழிந்திருக்கும். சில எழுத்துக்கள் தெளிவில்லாமல் இருக்கும்.
சில நேரங்களில் இடையே இருக்க வேண்டிய ஓலைச்சுவடிகள் சில இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட இலக்கியங்களுக்கு வேறு பிரதி இருந்தால் ஒப்பு நோக்கித் திருத்தம் செய்யலாம். அந்தப் பாடல்கள் எங்காவது யாராவது மேற்கோளாக எடுத்துக் காட்டி இருந்தால் அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவ்வளவுதான்!

Friday 8 August 2014

எரியும் நினைவுகள்!




உள்ளம் உனையெண்ணி
     உருகித் துடிக்கையிலே
கள்ள  மனம்காதல்
     கவிதை எழுதுமடி!

Wednesday 6 August 2014

படைப்பின் உயிர். (2 )- முறைவைப்பு.









மெய்ப்பாட்டுச் சுவைகளின் வரிசை முறைக்குக் காரணம் உள்ளது என்பது பற்றிச் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை முதலில் பார்த்து விடுவோம்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் ( எட்டே) மெய்ப்பாடென்ப“  ( தொல்-மெய்.3.)
எனத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் இந்த  வரிசை முறையில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

Monday 4 August 2014

கேள்விக்கு என்ன பதில்?




 இலக்கணப் பெரும் பரப்பில் நான் பெரிதும் மதிக்கும் அறிஞர். புலவர். கோபிநாத் அவர்கள் “ இமைக்கும் நொடி“ மற்றும் “ படைப்பின் உயிர்“ ஆகிய பதிவுகளின் இறுதியில் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார். பின்னூட்டத்திற்கான பதிலிடும் வரம்பைத் தாண்டி நீண்ட அதன் கருத்துக்களின் நீட்சியால்  தனிப்பதிவாக்கிடக் கருதினேன். அப்பதிவுகளின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம் என்பதும் இதற்குக் காரணம்.

Sunday 3 August 2014

இமைக்கும் நொடி.




மரபிலக்கணங்களின் உரைகளை வாசிக்கும் போது அவை வாய்மொழியாக ஆசிரியரால் கற்பிக்கப்பட்டதன் எழுத்துப் பதிவுகள் என்பதை மனதில் கொள்ளவேண்டும். உரை என்றாலே உரைக்கப்படுவதுதானே! ஏனென்றால் ஒரு நூலைப் படிக்கும் போது நம்மனதில் தோன்றும் அல்லது நமக்கே தோன்றாத பல ஐயங்களை உரையாசிரியர்கள் எழுப்பி அவற்றிற்கான விடைகளை அளித்துச் சென்றிருப்பார்கள். அவை ஏதோ புத்திசாலி மாணவனால் அன்றைய வகுப்பறைச் சூழலில் எழுப்பப்பட்ட நல்ல கேள்விகளாக இருந்திருக்கும். அல்லது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அவருக்கே தோன்றிய சந்தேகத்திற்கான பதிலாக இருந்திருக்கும்.

Friday 1 August 2014

படைப்பின் உயிர்.





படைப்பாளியான நீங்கள் உங்கள் படைப்பின் வழியே படிப்பவருக்குள் நுழைந்து அவர்கள் மனத்தை உருக்க வேண்டுமா? மகிழ்வூட்ட வேண்டுமா? சிரிக்கச் செய்ய வேண்டுமா? கண்ணீர் விடச் செய்ய வேண்டுமா? உங்களின் நோக்கம்  எதுவாக இருந்தாலும் அப்படிப் படைப்பொன்றினை ஆக்கத்  தமிழ் இலக்கணம்  வழிசொல்லித் தருகிறது. படைப்பாளி எப்படித் தன் படைப்பை வாசகனுடைய மனதை இடமாகக் கொண்டு இதை நிகழ்த்த இயலும்? தன் அனுபவத்தைப் படைப்பின் வாயிலாகப் படிப்போனின் மனத்தில் இறக்கி வைப்பது எப்படி? திரைப்படங்களில், நாடகங்களில் இது சாத்தியப்படும். சில உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்புகள் பாதிக்கப்பட்டவரால் பகிரப்படும் போது நம் மனதில் கலக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால் எழுத்து வழியாக இதை எப்படிக் கொண்டு செல்வது? தானுணர்ந்த அனுபவத்தை எப்படித் தன் எழுத்தில் இறக்கி வைப்பது? படிப்பவரின் மனம் படிந்து அவர்களின் உணர்வுகளை எப்படித் தொட்டெழுப்புவது? அதற்கென்றே வடிவமைக்கப் பட்டதுதான் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல்.

Saturday 19 July 2014

உலகில் நீ மாத்திரம்!



அறிவை முடமாக்கி அன்புப் பெருந்தீயால்
     அணைத்த என்தேவியே! – உயிர்
முறிதல் காணாயோ? மூர்க்கம் தீராயோ?
     முடங்கு தென்னாவியே!

Wednesday 16 July 2014

நீயல்லால் வேறொரு காட்சியில்லை!




 








பாதம் அழுந்திய நின்தடங்கள் – எங்கும்
     பசுமையாய் என்றும் நினைவிருக்க
ஏதும் அறியாமல் நீயிருப்பாய்! – உனை
     என்றும் அறிந்திட நானிருப்பேன்!