எனது இரண்டாம் வகுப்பில் சம்மனசு டீச்சரிடம்
படித்தேன்.குட்டையானவர். கொஞ்சம் குண்டுதான். மாந்தளிரின் நிறம். பெரிய சோழியின் தட்டைப் பகுதி போலக் கண்ணாடி
, அதன் நடுவே உள்ள கீறல் போன்ற சிறு கண்கள். அருகில் வரும் போதெல்லாம் வீசும் குட்டிக்குரா பவுடரின் வாசனை. அதற்குப் பின்
எங்கே அந்த வாசனை வந்தாலும் மனம் ஒரு முறை சம்மனசு டீச்சரைத் தேடிப்பார்க்கும் .
கழுத்தில் அவர் அணிந்திருக்கும் சங்கிலியின் இரு முனையும்
மயில் ஒன்றில் கோர்க்கப்பட்டிருக்கும். அது முழுவதும் சின்னச்சின்னக் கற்கள் பதிந்து ஏதேனும்
ஒரு கோணத்தில் கண்களில் ஒளிச்சாட்டை வீசும் . கை நகங்கள் மிகச் சுத்தமாக ரோஸ் நிறத்தில் துளியும் பிசிறில்லாதபடி பிறைவடிவில்
அழகாக வெட்டப்பட்டிருக்கும்.
இடுப்பில் கைக்குட்டை. கைப்பை, குடையெனத்
திரைப்படங்களில் பதிந்து போன ஆசிரியைகளின் பிம்பத்திற்கு அவரிடம் படித்துப் படம் எடுத்த
எந்த மாணவனோ இயக்குநனானதுதான் காரணமோ என்று பின்பு நான் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
. எங்களுக்கெல்லாம் அப்போது சம்மனசு டீச்சரிடம் படிப்பதாகச் சொல்லிக்கொள்வதே பெரிய
விஷயம் தான். அப்படி அருமையாகப் பாடம் நடத்துவார் இல்லாவிட்டால் இரண்டாம் வகுப்பில்
அவர் நடத்தியதை மனதில் வைத்து இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்ல முடியுமா…..?
அவர் நடத்திய அவ்வையின் தமிழ்ப்பாடல் இன்னும்
எனக்கு நினைவிருக்கிறது.
முதலில் என் மனம்பதிந்த அந்தப் பாடலுக்கு
டீச்சர் சொன்ன பொருளைச் சொல்லிவிடுகிறேன். கதை அதற்கப்புறம்தான்.
“ உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்ற உங்கள்
தாய் உங்களை ஏதாவது சின்னச் சின்ன வேலைக்காகக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. (வருந்தி அழைத்தல்)அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டுக்
கூப்பிட்டாலும் நீங்கதான் வரேன் வரேன் என்று சொல்லுவீங்களே ஒழிய வர மாட்டீங்க( வாராத வாரா) உங்களுக்கு விளையாட்டுதான் முக்கியம். சரி..நீங்க
செய்ற மாதிரி உங்களுக்குப் பொருத்தமான வேலையைச் செய்யச் சொன்னாலும் ( வேறென்ன படிக்கிறதுதான்
)செய்ய மாட்டீங்க..! ஒவ்வொரு நாளும் தூங்கப் போறதுக்கு முன்னாடி உங்களப் பத்தி நெனைச்சு
நினைச்சே நெஞ்சு புண்ணாய்ப்போய் உங்ககிட்ட மாரடிக்கிறதுதான் எல்லா அம்மாக்களோட வேலை
“
சரி
… இவ்வளவு அருமையான பொருளுடைய அந்தப்
பாடல் என்ன என்று கேட்கிறீர்களா..?
மறக்குமா அது?
“ வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் “
எத்தனை முறை சொல்லச்சொன்னார் என்று நினைவில்லை.
ஆனால் டீச்சர் சொல்லச் சொல்ல நாங்கள் பின்பாட்டுப் பாடிக்கொண்டே மனப்பாடம் செய்த பல
பாடல்களில் இதுவும் ஒன்று.
பள்ளிப்பருவம் முடித்து ஆசிரியப் பயிற்சியில்
என் நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்த போது தன் அம்மாவின் வருத்தம் பற்றிச் சொல்லிக்
கொண்டிருந்தான். நான்தான் தமிழை மெத்தப் படித்த மேதாவி என்ற நினைப்பில் உடனே என் கைச்சரக்கை
எடுத்து விட்டேன்.
ஆமாண்டா, “ நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்... “
நண்பன்தான் கேட்டான், சரிடா, மாந்தர் ன்னா
அம்மான்னு அர்த்தமா?
கேட்ட அந்தக் கணத்தில் நான் சம்மனசு டீச்சரின்
வகுப்பறையில் இருந்தேன். கரும்பலகையின் செவ்வகச் சுற்றில் அவர் ரசித்து வரையும் பூக்கோலத்தின்
வலது மூலையில் மொட்டுகளை மொத்த மாணவர்க்கும் மலர்களை வந்த
மாணவர்க்கும் வரைந்து வைத்திருந்த மலரோடு நானும் ஒரு மலராகி…
நீலமும் வெள்ளையும் உடுத்திய எஞ்சோடுப் பூக்களுடன்……
மெய்யெழுத்துகளுக்குப் புள்ளிகளை அழகான வட்டமாக
வரைந்திருக்கும் டீச்சரின் குண்டு குண்டான கையெழுத்தைக் கரும்பலகையில் கண்டபடி
“ வருந்தி அழைத்தாலும் …“
பக்கத்தில் கோவிந்தராஜன் .. இந்தப்பக்கம்
சக்திவேல்…
டீச்சர் நெருங்கி வரப்பெருகும் …குட்டிக்குரா வாசனை…..
“ உங்ககிட்ட மாரடிக்கிறதுதான் உங்க அம்மாக்களோட
வேலை ”
சம்மனசு டீச்சரின் கீச்சிடும் குரல்....
மாந்தர் அம்மா இல்லையே மக்கள்ன்னு தானே வரும்? அதுவரை எழாத கேள்வி உள்ளத்தெழக் கேள்வியைத் தலையாட்டி மறுப்பது போல் அங்கு
டீச்சர் உச்ச ஸ்தானியில் மீண்டும் மீண்டும்
சொல்லிக் கொண்டிருந்தார்,
“நெஞ்சம் புண்ணாக… நெஞ்சம் புண்ணாக…“
“எல்லாரும் நான் சொல்லச் சொல்லச் சொல்லனும்..சரியா “
“எங்க சொல்லுங்க.“
“நெஞ்சம் புண்ணாக..“ “நெஞ்சம் புண்ணாக..“
நாங்கள் 45 பேரும் புன்னகைத்தபடி ஓர்குரலில் கத்தினோம்.
நெஞ்சம் புண்ணாக ..
நெஞ்சம் புண்ணாக…!
பிரமையிலிருந்து மீண்டெழுந்து எங்கள் டீச்சருடைய
குரலை ஓரங்கட்டி விட்டு அத்தனைநாள் கழுத்தை நெறித்துக் கட்டிவைத்திருந்த கயிறுகளைத்
தளர்த்திவிட்ட போதுதான் ஆறாத புண்ணாய் அவ்வளவுகாலம் இருந்த அந்தப் பாடலின் உயிரை மீட்டெடுக்க
முடிந்தது.
“எவ்வளவுதான் வருந்தி வருந்தி நாம் ஏங்கிக்
காத்திருந்தாலும் நமக்கு இல்லை என்று விதிக்கப்பட்ட ஒன்றை நாம் அடைய முடியாது . ( வருந்தி
அழைத்தாலும் வாராத வாரா )
நமக்கு என்று வந்து சேர்வது போ என்று துரத்தி
விரட்டினாலும் நம்மைவிட்டுப் போகாது ( பொருந்துவன போமினென்றால் போகா )
இதை அறியாமல் இல்லாததற்காக ஏங்கியும்,
நாம் விரும்பாது நம்மிடம் இருக்கின்ற கஷ்டங்கள் போகாதா எனக் கவலைப்பட்டும் கடைசியில்
மனம் வருந்த உள்ளதைக்கொண்டு மகிழாமல் இறப்பதுதான் மக்களின் தொழில் ( நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம்
தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில் ). இத்தனைக்கும்அந்த ஆசிரியப்பயிற்சி காலத்தில் சைவசித்தாந்த இருபா இருபஃதில் அருணந்தி சிவாச்சாரியார் கூறும் உள்ளது போகாது, இல்லது வாராது “என்ற ( இந்நான்கடியின்
ஒருவரிச் சிந்தனையை அதுவரை ஆயிரம் முறையாவது சொல்லித்திரிந்திருப்பேன். ( ரஜினி அழகாச்
சொல்லிட்டாரேப்பா..கிடைக்காதது கிடைக்காது. கிடைக்கிறது கிடைக்காம போகாதுன்னு..! என்கிறீர்களா..?!) இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடிருக்கிறதா இல்லையா என்பதல்ல இங்குப் பிரச்னை.
ஓரளவிற்கு நூல்களைக் குறிப்பாகத் தமிழ்நூல்களை
வாசித்திருந்த போதும் இரண்டாம் வகுப்பில் கட்டிய டீச்சரின் கண்கட்டை அவிழ்த்துப் பார்க்கத் தோன்றவில்லை .
இந்தப்பொருளை உணர்ந்து கொண்ட அந்தக் கணமே பாடல் பற்றி இவ்வளவு காலம் என்னை
யோசிக்க விடாமல் அடக்கி வைத்திருந்த சம்மனசு டீச்சரின் குரல் பரிதாபமாகத் தலைகவிழ்த்துக்
கேவியழுதபடி என்னை விட்டு அகன்று போனது. பல விஷயங்களில் எப்பொருள் யார்யார் வாய்க்
கேட்பினும் உண்மையா என்று பார்க்கவேண்டும்
என்ற அறிவினைக் கற்றுத் தந்த பாடல் என்பதாலோ என்னவோ என்னால் இந்தப்பாடலை மறக்கவே
முடியவில்லை.
பின்பு எங்கேனும் அவரைப் பார்த்தால் இதைச்
சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அன்று நாங்கள் படித்த சமயத்தில் இரண்டாம்
வகுப்பிற்குக் கோனார் நோட்ஸ் எல்லாம் இருந்ததா இல்லையா..
அருஞ்சொற்பொருட்கள் பாடலின் இறுதியில் போட்டிருந்தார்களா
இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.
ஒரு வேளை இவனுங்களுக்கு நடத்த இதை எல்லாம்
பார்க்க வேண்டுமா…. இரண்டாம் வகுப்பில் இருக்கிற பாட்டுக்குக் கூட எனக்குப் பொருள்
சொல்லத் தெரியாதா..? என்று கூட டீச்சர் நினைத்திருக்கலாம்.
.இவ்வளவு கனமான பாடலை எங்கள் ரெண்டாப்புக்கு
வைத்த மகான் யார் என்றும் தெரியவில்லை.
ஆனால் டீச்சரைப் பார்க்கும் போது இதைப்பற்றி
நிச்சயம் கேட்க வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டிற்கருகே
உள்ள இனிப்பகம் ஒன்றின் வாசலில் இருந்த பூக்கடை அருகே டீச்சரை அதே சோழிக் கண்ணாடியுடன்
பார்க்க நேர்ந்தது. வண்டியைச் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, வேகமாகப் பாய்ந்தேன். அழுக்கடைந்து
கலைந்த ஆடைகளுடன், மடித்த குடையுடன் சுருங்கிய முகத்தோடும் நரைத்த தலையோடும் இருந்தது எங்கள் அன்றைய தேவதை.
நான் பார்த்துப் பொறாமைப்பட்ட நகங்கள் அழுக்கடைந்து
வெட்டப்படாமல் வளைந்து வளர்ந்திருந்தன.
என்ன ஆச்சு இவங்களுக்கு….?
டீச்சர்… என்ன நெனைப்பிருக்கா…. ? நான்
1984 ல இரண்டாவது உங்ககிட்ட … எம்பேர்…..
கண்கள் சற்று சுருங்கி விரிந்தன…
“ படுபாவி…படுபாவி… நீ நல்லா இருப்பியா…
நாசமாப் போயிடுவடா..“நாசமாப் போயிடுவடா…..“ என்று சொல்லிக்கொண்டே
குடையை உயர்த்திச் சரமாரியாக என்னை அடிக்க
ஆரம்பித்து விட்டார் சம்மனசு டீச்சர்.
என்ன நடக்கிறது என்று நான் புரிந்து கொள்ளும்
முன்பே காந்தம் இரும்புத்துகள்களை இழுப்பது போல் சட்டென்று கூடிவிட்டது கூட்டம். “
டீச்சர் டீச்சர்“ என்றவாறே அவரது அடிகளை எனது கை அனிச்சையாய்த் தடுத்துக்கொண்டிருந்தது.
கடையுள் இருந்து இளம் பெண் ஒருத்தி ஓடிவந்தாள்.
“விடு சித்தி..விடு சித்தி….“ என்று கூறிக்கொண்டே
டீச்சரின் கையில் இருந்த குடையைப் பறித்துக் கொண்டாள்.
ஆசுவாசப்படுத்த முடியாத அளவு டீச்சரின் ரௌத்திரம்
இருந்தது. அவர் வாயிலிருந்து வந்த வசவுகள் இங்கு வார்த்தைப்படுத்த முடியாதவை.
கலைந்த சட்டையைச் சரிசெய்தபடி தெரிந்தவர்கள்
யாராவது இதைப்பார்த்து விட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துபடி என்ன செய்வது
என்று தெரியாத நடுக்கத்தோடு நின்று கொண்டிருந்தேன். என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும்
அறிவு சுத்தமாய் மழுங்கிவிட்டிருந்தது.
டீச்சரை உட்காரவைத்து அந்தப்பெண் கைப்பையிலிருந்து
மாத்திரைப் பட்டையைக் கிழித்து மாத்திரையும் தண்ணீரும் கொடுத்துக் கொண்டே கேட்டாள்.
“ யாருங்க… நீங்க ? சித்திய என்ன செஞ்சிங்க…?
ஒண்ணும் செய்யலங்க..இவங்ககிட்டதான் நான்
இரண்டாம் வகுப்பு படிச்சேன்“
“ஓஹோ..ஸ்டூடண்டாக்கும்“
“ஆமாங்க“
“ இதைத்தான் சொன்னிங்களா …அதான் சித்தி அப்படி
நடந்துகிச்சி“
சுவாரஸ்யத்தின் ஈர்ப்புக் குறைய கூட்டம்
விலகத் தொடங்கியிருந்தது.
“ டீச்சரோட பிள்ளங்க எங்கங்க? …என்னங்க ஆச்சு
டீச்சருக்கு? ஏன் இப்படி இருக்காங்க…. உடம்புக்கு முடியலையா…? “ அடுக்கடுக்கான என்
கேள்விகள் யாரைப்பற்றியோ என்பது போல் டீச்சர் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருந்தார்.
“கல்யாணம் பண்ணாதானே பிள்ளைங்க..போன வருஷத்தில
இருந்துதான் இப்படி... பண்டிகைக்குப் பர்சேஸ் பண்ணக் கடைவீதிக்குப் போன சித்திகிட்ட உங்கள மாதிரிதான் ஒருத்தன் (???) “டீச்சர்
நான் உங்க ஸ்டூடண்ட்.. இப்ப போலீஸா இருக்கேன்னு…“ பேச்சுக் கொடுத்திருக்கான். என்ன டீச்சர்
இவ்வளவு நகையோட போறீங்க… கழற்றி இந்தப் பையில வைச்சுக்கங்க…சுத்தியும் ஒரே திருட்டுப் பசங்களாத் திரியிறாங்க..ன்னிருக்கான்.
இதுவும் விவரம் புரியாம நகையைக் கழற்றிக் குடுத்திருக்கு..பையில
போட்டுப் பத்தரமா வைச்சுக்கங்கன்னு அவன் கொடுக்க இதும் பேக்ல போட்டு வைச்சு வீட்டுக்கு வந்து பாத்தா
பையில கல்லுதான் இருக்கு..!நகையைக்காணாம்.
நான் டீச்சரைப்பார்த்தேன். ஆமாம் அந்த மயில்
முழுதும் கல் வைத்த டாலர் செயின் அவர்கள் கழுத்தில் இல்லை. அட இவ்வளவு நேரம் எப்படி நான் இதைக் கவனிக்காமல் விட்டேன்?
“நகையில இருந்த கல்தான் பையில கொட்டிருக்குமோ….? “ நிஜமாய் விளங்காமல்தான் கேட்டேன்.
“ஆமாமா நகையில கூழாங்கல்தான் வைக்கிறாங்க..அவ்வளவும் சின்னச் சின்ன கூழாங்கல்..சரியா
நகையோட எடைவர்ற மாதிரி.. எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க …“
“போலீசில போய்க் கம்ளெய்ன்ட் குடுத்தா… எல்லாம்
உங்கிட்ட படிச்சவனாத்தான் இருப்பான் அந்த லட்சணத்திலதான் நீ பாடம்சொல்லிக் குடுத்திருக்க…
உங்கிட்ட படிச்ச மத்தவனெல்லாம் எங்கெங்க எப்படி
எப்படி கிரிமினலா இருக்காங்களோ….நல்லாப் பாடம் நடத்திருக்க..சரிசரி .எழுதிக் குடு…
கிடைச்சாச் சொல்றோம்..ன்னு சொல்லிட்டாங்க. அதக் கேட்டதில இருந்துதான் சித்தி இந்த மாதிரி ஆயிறிச்சு..“
“நீங்களாவது பரவாயில்லை.. நாலு மாசத்துக்கு
முன்னாடி கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க “நான் உங்க ஸ்டூடண்ட் டீச்சர்ன்“னு சொல்லி ஒருத்தன்
வந்தான்.
அவன் கைய கடிச்சு “செயின குடுடா.......... செயின குடுடான்“னு
இது கத்துன கத்துல அவன் கழுத்துல கிடந்த அவனோட செயினக் கழற்றிக் குடுத்துட்டுப் போயிட்டான்.
அப்பறம் நான்தான் அங்கக் கிடந்த பத்திரிக்கையை
வைச்சு அட்ரஸ் கண்டுபிடிச்சு கைல கட்டோட இருந்த அந்தத் தம்பி வீட்ல கொண்டு போய்ச் செயினைக்
கொடுத்துட்டு விவரத்தச் சொல்லிட்டு வந்தேன்“
நான் மெல்ல என் கையை இறுக்கிக் கட்டிக்கொண்டேன்.
“ கவலைப்படாதீங்கம்மா… கண்டிப்பா டீச்சரோட
நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும். செயின் கிடைக்கும்.. “ என்றேன்.
டீச்சரின் நிலைகுத்திய கண்களில் கண்ணீர்
வழிந்து கொண்டிருந்தது.
“நெஞ்சம் புண்ணாக நெஞ்சம் புண்ணாக
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா…“
என்ற டீச்சரின் அந்த கீச்சுக்குரல் வீடுவந்தபிறகும்
என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. கூடவே அந்தப் பவுடரின் வாசனையும்..!
…………………………………………………………………………………………………………………………………………………………………………………….............
இனி சற்றும் சுவாரசியம் இல்லாத பகுதிதான்.
கதைவிரும்பிகள் இத்துடன் வாசிப்பை நிறுத்திக்கொள்ளலாம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ஆசிரியர் பரப்பும் தவறான கருத்து அவரிடம் படிக்கும் எத்தனை தலைமுறைகளை
முட்டாளாக்கி விடும், அவன் எவ்வளவு பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்றெல்லாம் பயிற்சியில் நான் கற்காத பாடங்களைக் கற்றுத்தந்தது என்
நண்பன் கேட்ட அந்தக் கேள்விதான்..!
பாடப்புத்தகங்கள் மாணவருக்கான துணைக்கருவியே!
அது ஆசிரியருக்கு உரியதன்று. நிச்சயம் ஒரு நல்ல ஆசிரியன் அதைக் கடந்துதான் போக வேண்டும்.அப்பொழுதுதான் மாணவனுக்கு உரிய தகுதியைத்தாண்டி
ஓர் ஆசிரியன் நிற்க முடியும்.
குறிப்பாக மொழிப்பாடங்களில் லயிப்பை மாணவர்
மனதில் ஏற்படுத்த விரும்பும் ஆசிரியர் வெறும் நோட்ஸை நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
அப்படிப்பட்ட ஆசிரியரிடம் பாடம் கேட்கும் மாணவனும் ஆசிரியரை நம்புவதைவிட நோட்ஸை நம்புவதுதான்
உத்தமம் என்று நினைப்பதில் ஆச்சரியம் என்ன..?
இன்று ஆசிரியர் எதிர்கொள்ளும் இன்னொரு
பிரச்சனை ஒரு வகுப்பில் இருக்கும் மாணவன் அவ்வகுப்பிற்கான நுழைவு நடத்தை ( Entry Behavior ) அற்றவனாய்
இருப்பதுதான். பத்தாம் வகுப்பில் அரிச்சுவடி கற்கும் நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு
எப்படி சார் அகநானூறு நடத்த..? அவன் பாஸானாப் போதாதா ? என்றொலிக்கும் ஆதங்கத்தினையும்
இங்குப் பதிவு செய்தாகத்தான் வேண்டும். மீண்டும் இலக்கணம் தான் நினைவுக்கு வருகிறது ஒரு ஆசிரியன்
மாணவனுக்கு எப்படிப் பாடம் நடத்தவேண்டுமாம்...?தமிழ் சொல்கிறது.....
“ கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளம் கொள
“
இதில் ஒரு வார்த்தையை ஏன் ஒரு எழுத்தைக்
கூட என்னால் நீக்கிப்பார்க்க முடியவில்லை.
கொள்வோனாய் இருக்கின்ற மாணவனுடைய
கொள்வகை அறிந்து..
எப்படி......?
அரிச்சுவடி தெரியாதவனுக்கு அதைச்சொல்லிக்
கொடு அகநானூறு கொள்வோனுக்கு அதைச் சொல்லிக்கொடு . இரண்டையும் மாற்றிப் போட்டுப்பாருங்கள்.
இருவருக்குமே அதனால் பயன் இருக்காது. அப்ப ரிசல்ட்… நிச்சயம் மாணவன் அறியாததை அறிந்து
கொண்டிருப்பான்தானே!
அடுத்துள்ளதுதான் மிக முக்கியம். ஆசிரியப்
பயிற்சியில் நான் கழித்த இரண்டாண்டுகளும் இந்த இரு சொற்களுக்காகத்தான்,
மாணவனின் உள்ளம் கொள்ளை கொள்ளும் படியாக…
ஆசிரியனை அவன் விரும்ப வேண்டும். ஆசிரியரை
விரும்பினால் பாடத்தையும் விரும்புவான் என்கிறது உளவியல்.
மாணவனின் கற்றல் “தான் கற்கிறோம்“ என்று அறியாத
ஒரு தருணத்தில் நிகழ்வதாக இருக்கவேண்டும். ஒன்றைக் கற்றுக் கொண்டு விட்டோம், புதிதாக ஒன்றை அறிந்து திறன் பெற்றுவிட்டோம் என்ற அந்த மகிழ்ச்சி அவனுள் இருந்து வர வேண்டும்.
மிதி-வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுப்பவன் இருக்கையைப் பிடித்தவாறே கூடவர, ஓட்டக் கற்றுக் கொடுப்பவன் ஒரு தருணத்தில் தன் கையை எடுத்தபின் “துணையின்றி
ஓட்டுகிறோம்“ என்றறியாமல் சிறிது தூரம் ஓட்டிச் சென்று... யாருடைய துணையின்றியும் மிதிவண்டி ஓட்டக்கற்றுவிட்டோம் என்று அறியுந்தருணத்தில்
தோன்றும் மகிழ்ச்சி.. அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியைத்தான் ஒவ்வொரு கற்றலின் போதும் மாணவன் பெறவேண்டும்.
கையைவிட்டு ஓட்டும் சாகஸமெல்லாம் அதற்கப்புறம் அவனே கற்றுக்கொள்வான்.
அதைக் கற்றுக் கொடுக்கவும் முடியாது. அப்படிப்பட்ட கற்றலின் இன்பத்தைக் கொடுப்பதாய்க்
கல்வி இருக்க வேண்டும்.
கணித வகுப்புகளில் இதற்கான சாத்தியக்கூறுகள்
அதிகம்.
விடையை முதலில் கண்டுபிடிக்கும் மாணவனின்
குதூகலம்……
அந்தக் கற்றல்தான் கற்கிறோம் என்பதை அறியாத கற்றல்.
அந்தக் கற்றல்தான் கற்கிறோம் என்பதை அறியாத கற்றல்.
கல்லூரியில் படிக்கும் போது ஒரு பேராசிரியர்
இருந்தார். அவர் வகுப்பே நோட்ஸ் தான். எதையும் நடத்துவதில்லை. ஒரு புராதனப் புத்தகத்தைக்
கொண்டுவருவார். அதன் தலைப்பு என்ன என்று தெரிந்து யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று கெட்டி அட்டை போட்டு வைத்திருப்பார். அதைப்பார்த்துச் சொல்லிக் கொண்டே இருப்பார். அந்த
ஒரு மணிநேரமும் கை ஒடிய நாங்கள் அவர் சொல்லுவதை எழுதிக் கொண்டே இருக்கவேண்டும்.
ஒரு வாரம் தான் அதற்குப் பிறகு நான் எதுவும்
எழுதுவதில்லை. உடனேயே கண்டுபிடிக்கப்பட்டேன்.
“ஏன் எழுதல?“
“ஏன் எழுதல?“
“நான் புத்தகத்திலேயே படிச்சிக்கிறேன் சார்.
நோட்ஸ் தேவையில்லை“.
“அப்ப என் கிளாஸ்ல உனக்கென்ன வேலை வெளிய போ!“
நோட்ஸ் எடுப்பது மட்டுமே வகுப்பென்றால் வெளியே
இருப்பதுதான் உத்தமம் என்று அதற்குப்பின் அவர் பிரிவேளை என்றால் நூலகத்திற்கு வந்துவிடுவேன்.
மாணவனைப் பிரமிக்கச் செய்த, பேரதிசயமாகப்
பார்க்கச்செய்த ,“இந்தத் துறையில் இவருக்குத் தெரியாதது எதுவுமே
இருக்க முடியாது“ என்ற பிரமாண்டத்தைக் கட்டமைத்துக் காட்டிய ஆசிரியர்களையும் நான் கடந்துதான்
வந்திருக்கிறேன். தாங்கள் சோதிக்கப்படுகின்றோம் என்பதை அறிந்தும் தாங்கள் அறிந்ததை
அகமகிழ்வோடு பெற்றுக்கொள் என்று மலர்ச்சி நிறைந்த
முகத்தோடு அளித்தவர்கள்...... , தங்களின் கோபுரங்களை இடிக்கிறானே என்ற கவலையற்றுத் தெரியாது
எனக் கூறி “இதை அறிந்து கொள்ள வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை வாசிக்கவேண்டும். நீ
மட்டுமல்ல…. நானும்“ என்று சொல்லி இன்னும் வானளவு உயர்ந்தவர்கள்....இவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டுதான்
வந்திருக்கிறேன்.
அவையெல்லாம் அதிகம் என்பதால் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள முடியவில்லை. அதனால் என் நினைவில் இருக்கக் கூடிய
இது போன்ற எனது இன்னும் சில தவறான கற்றல் அனுபவங்களைச்
சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.
அதில் அடுத்து வருவது,
““ ‘ங‘ வை வளைத்த கதை“
.
( படம் - மாதிரியே. நன்றி - கூகுள்)
Tweet |
அண்ணா!
ReplyDeleteமுதல் முறையாக ஒரு அனுபவப்பதிவு! அதுவும் இத்தனை அட்டகாசமாய்!! அதற்காக இதோ அண்ணனுக்கு ஒரு பூங்கொத்து:)))
----------------
அந்த நண்பரிடம் பேசும்வரை எத்தனையோ பேரிடம் நீங்கள் பல பாடல் குறித்து விவாதித்திருபீர்கள். ஆனாலும் இந்த பாடலை அத்தனை காலம் வரை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டது தான் ஒரு ஆசிரியரின் சொல் வலிமை!! ஆனால் பாவம் அவர் தன்னிடம் படிப்பது ஒரு ஞானக்கொளுந்து என்பதையும் அன்று அவர் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறார்!
_______
ஆசிரியர் பயிற்சியின் போது எனது பேராசிரியர் ஒருவர் "என்டோக்ரின் க்லாண்ட்ஸ் உடம்புக்கு நல்லதா எசோக்ரின் க்லாண்ட்ஸ் உடம்புக்கு நல்லதா?" என்று ஒரு கேள்வி கேட்டு என்னை திகைக்கவைத்தார். உள்ளூரில் நண்பரின் மகளாக எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும், விவாதித்தாலும் முகம் கோணாத ஆசிரியர்களையே அதுவரை பார்த்து பழக்கப்பட்ட நான்' மேம்! இரண்டுமே அவசியம் தான். இதில் நல்லது, கேட்டது என்பதே தவறே?" என துடுக்காக கேட்டுவிட்டு அதன் பின் ஒரு வாரம் ஸ்டாஃப் ரூம், ஹாஸ்டல் என பட்ட பாடு கொஞ்சம் அல்ல:(( வகுப்பை விட்டு வெளியேறி நூலகம் செல்வதெல்லாம் அங்கே நடக்காத காரியம். என் பயிற்சி காலங்களில் நான் இயக்கிய பல நாடகங்கள், மற்றும் எழுதிய பல பாடல்கள் அந்த பாட வேளையில் தான் என் மனபட்டறையில் தயாராகின. வேறென்ன சொல்ல:(( அது போன்ற ஒரு ஆசிரியராய் ஒரு நாளும் இருந்துவிடக்கூடாது என்பது தான் எனக்கு நானே எடுத்திருக்கும் சத்தியபிரமாணம்:))
-------------------------
அந்த பாடலை அப்படி கொலை செய்ததற்கு அவ்வை இட்ட சாபம் என யாரும் சொல்லிடப்போறாங்க :)) (அப்புறம் ஒரு சின்ன டௌட்டு. அடுத்த பதிவு நகைச்சுவையா எழுதப்போறேன்னு யாரோ கஸ்தூரிகிட்ட சொல்லிக்கிட்டு இருந்ததை நான் ஒட்டு கேட்டேன். அது நீங்களா???):))))
நன்றி இரண்டாவது பூங்கொத்தைப் பெற்றிருக்கிறேன். உண்மையில் மகிழ்ச்சி நிறைந்தே இருக்கிறது இதைத் தட்டச்சுச் செய்யும் போது கூட..! வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்ட அனுபவம் எனக்குப் பலமுறை நேரிட்டதுண்டு.
Deleteசில சூழல்கள் நான் அறியாமல் அமைந்ததும் … சிலவற்றை வேண்டுமென்றே நான் அமைத்துக்கொண்டதுமாய்….! நாடக இயக்குநராகவும், பாடலாசிரியராகவுமா……..இன்னும் எத்தனை உருவங்களை வைத்திருக்கிறீர்கள் உங்களுக்குள்…???!!!
ம்ம்….ஒவ்வொன்றாய் வெளிவரக்கடவது!
முற்றிலுமாய் டீச்சரைக் குறைசொல்வதற்கில்லை..துளசிதரன் அய்யாவின் பின்னூட்டத்தைக் காண வேண்டுகிறேன்.
நகைச்சுவைப்பதிவு…
எங்கள் பிளானை யாரோ ஒட்டுக்கேட்டு விட்டார்கள் என்று அறிந்த உடனே பிளானை மாற்றிவிட்டோம்.
கணினியில் பிரச்சனைகள்.. கடந்த மூன்று நாட்களாக இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது… எனது ஆசிரியரின் வீட்டிலிருந்துதான் பதிவேற்றவும் பதிலிடவும் முடிகிறது. அதனால்தான் நண்பர்களின் தளத்திற்கு வரவோ பி்ன்னூட்டமிடவோ முடியவில்லை.
நன்றி
எங்கள் பிளானை யாரோ ஒட்டுக்கேட்டு விட்டார்கள் என்று அறிந்த உடனே பிளானை மாற்றிவிட்டோம்.***
DeleteROFL:)))))))))))
நான் சம்மனசு டீச்சர் பற்றி குறை பட்டுகொள்ளவில்லை, என் சைக்காலஜி டீச்சர் பற்றி தான் கவலை. அவர் கேட்ட கேள்வியை ஞாயபடுத்த முடியாதே அண்ணா?
Deleteஇரண்டாம் வகுப்பிலேயே இவ்வளவு கடினமான பாடலா? நல்ல வேளை நாங்கள் அப்போது படிக்க வில்லை. அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன் பாடலையும் விளக்கியிருக்கும் விதமும் அருமை சார்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletectober 2014 18:02
ReplyDeleteஅன்புள்ள நண்பருக்கு,
‘சம்மனசு டீச்சரும் மயில் டாலர் செயினும்’
- அய்யா மிக அருமையான கதை எழுதி அசத்திவிட்டீர்கள்!
நண்பன்தான் கேட்டான், “சரிடா, மாந்தர் ன்னா அம்மான்னு அர்த்தமா?“ -என்று பக்கத்தில் இருந்த நண்பன்தான் தங்களைத் தூண்டி... துலங்க வைத்திருக்க வேண்டும்...
இரண்டாம் வகுப்பு டீச்சர் .சம்மனசு அவருக்கு தெரிந்ததை அழகாக அன்றைக்கு பதியவைத்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் இன்றைக்கு அருமையாக பதிந்திருக்கிறீர்கள்.
கதையில் எதிர்பாராத திருப்பம்,
‘டீச்சர்… என்ன நெனைப்பிருக்கா…. ? நான் 1984 ல இரண்டாவது உங்ககிட்ட … எம்பேர்…..
கண்கள் சற்று சுருங்கி விரிந்தன…
“ படுபாவி…படுபாவி… நீ நல்லா இருப்பியா… நாசமாப் போயிடுவடா..“நாசமாப் போயிடுவடா…..“ என்று சொல்லிக்கொண்டே
குடையை உயர்த்திச் சரமாரியாக என்னை அடிக்க ஆரம்பித்து விட்டார் சம்மனசு டீச்சர்.
’மயில் டாலர் செயினைப் பறிகொடுத்த கொடுமை... அதன் பாதிப்பு...இது போல ஏமாற்றுவோர் இருப்பதும்...அதனால் டீச்சர் புத்தி பேதலிச்சுப் போனதும் நெகிழ்வை உண்டு பண்ணியது...
எனக்கு ஞாபகத்திற்கு வந்தது மஞ்சப்பையில் தாத்தாவாக நடித்த ராஜ்கிரன் கிளைமாக்கில் புத்தி பேதலிச்சு போக பேரன் விமல் அவரைப் பார்த்து அழுது புலம்புவது நினைவுக்கு வந்தது...தாத்தாவாக டீச்சரும்...பேரானாக நீங்களும்...
எனக்கு இரண்டாம் வகுப்பு டீச்சர் இருந்தார்கள். எதற்காகவோ என் கன்னத்தில் அறைந்து விட்டார்கள். (கணக்கு சரியாக போடவில்லை என்பதற்காக இருக்கலாம்)...எனக்கு அந்த டீச்சரை அப்பொழுது பார்த்தாலே கோபமாக வரும்...பின்னால் அந்தக் கோபமெல்லாம் மறைந்து விட்டது.
அவர்கள் போன மாதம்தான் மறைந்து விட்டார்கள். கண்ணீருடன் மலர் மாலைவைத்து இறுதி மரியாதை செலுத்தினேன்.
அந்த‘ இரண்டாம் வகுப்பு டீச்சர்’( நாங்கள் அப்படித்தான் அழைப்போம்)...அன்றைக்குதான் வால் போஸ்டரில் ‘அடைக்கலம்’ டீச்சர் மறைந்த செய்தியைத் தாங்கி வந்திருந்தது...சொன்னால் நம்ம மாட்டீர்கள்...எனக்கு அன்றைய தினம் தான் அவர்களின் பெயர் தெரியும்.
வெளுத்து வாங்கி விட்டீர்கள் அய்யா,
எதைத் தொட்டாலும் தனித்துவம் தான்....
வாழ்த்துகள்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
சம்மனசு டீச்சர் ஏன் இப்படி மன நோயாளி ஆனாங்கன்னும் ,நம்ம மணவை ஜேம்ஸ் என்ன கருத்து போட்டார்ன்னும் தெரியலே )
ReplyDeleteத ம 1
பகவானுக்கே தெரியாதது மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு எம்போன்ற பாமரர்க்கோ எப்படித் தெரியும் ஜி.
Deleteஅப்புறம் டீச்சர் மனநோயாளி ஆனதற்கும் கல்யாணம் பண்ணிக்கொள்ளமல் இருந்ததற்கும் காரணம் அந்த டாலரில் இருக்கலாமோ...?
அதுகிடைத்தால் எல்லா முடிச்சுகளும் ஒருவேளை அவிழலாம்.
நன்றி ஜி. தம 1 இற்கும் சேர்த்து!
சொல்லாத விசயம் இது ...
Deleteஅவர்களுக்கான ஒரு பிரார்த்தனை ...
ஆஹா! எங்கள் ஆசானிடமிருந்து அவரது ஆசானுடனான அனுபவப் பதிவு! மிகவும் ரசித்துப் படித்தோம்.
ReplyDeleteஅந்த சம்மநசு டீச்சர் இந்த 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தச் செய்யுளை உள்ளது உள்ளபடி விளக்கினால் எப்படிப் புரியும்? சிறு குழந்தைகளாயிற்றே! எனவே இவர்களுக்குப் புரியும்படி சொல்லுவோம்...அப்படியே அம்மாவைத் துன்புறுத்தாமல் படிக்க வேண்டும் என்பதையும் புகட்டுவோம் என்று நினைத்து அந்த அறிவுரையைப் பாடல் மூலம் சொல்லியிருப்பாரோ?!! ஆனால் தங்கள் விளக்கம் அவரை அடையும் முன் அவரது நிலைமை இப்படியாகி மனதைக் கனக்க வைத்துவிட்டது. பாவம் டீச்சர்!
அந்த ஔவையாரின் பாடலுக்குத் தங்கள் விளக்கம் அருமை ஆசானே!
ஒரு ஆசிரியன் மாணவனுக்கு எப்படிப் பாடம் நடத்தவேண்டுமாம்...?தமிழ் சொல்கிறது.....
“ கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளம் கொள “//
இது மிகமிகச் சரியே! ஒவ்வொருவருடைய அறிவுத் திறனும், உள்வாங்கும் திறனும், கற்றல் திறனும் வேறு படுவதால்....ஆனால் ஒரு வகுப்பில் அது சாத்தியமல்லதான். எல்லோருக்கும் பொதுவாகத்தானே கற்பிக்க முடியும்!
ஆசிரியனை அவன் விரும்ப வேண்டும். ஆசிரியரை விரும்பினால் பாடத்தையும் விரும்புவான் என்கிறது உளவியல்.
மாணவனின் கற்றல் “தான் கற்கிறோம்“ என்று அறியாத ஒரு தருணத்தில் நிகழ்வதாக இருக்கவேண்டும். ஒன்றைக் கற்றுக் கொண்டு விட்டோம், புதிதாக ஒன்றை அறிந்து திறன் பெற்றுவிட்டோம் என்ற அந்த மகிழ்ச்சி அவனுள் இருந்து வர வேண்டும்.//
100 க்கு 100 சரியே!.
நோட்ஸ் என்பது அறிவுத்திறனை மங்கச் செய்வது! ஒரு குற்ப்பிட்டச் சட்டத்திற்குள் வைப்பது. மதிப்பெண் ஒன்றையே குறியாக வைத்திருப்பது. சுயமாக எழுதும் திறனை மழுங்கச் செய்வது. ஆனால் அதுதான் நமது கல்வி முறையின் பெரும்பான்மியயான ஆசிரியர்களின் அடிப்படையாக இருக்கின்றது!
நாங்கள் படிக்கும் காலத்தில் நோட்ஸ் இருந்தாலும், அதை எழுதும் பழக்கம் இல்லை. தாங்கள் சொல்லியிருப்பது போல புத்த்கத்திலிருந்து வாசித்து, படித்து அறிந்துகொள்வதுதான் சாலத் சிறந்தது என்று நினைத்து நோட்ஸ் எடுத்ததில்லை. ஆசிரியர்கள் வற்புறுத்தினால்! என்ன செய்ய?!
மாணவனைப் பிரமிக்கச் செய்த, பேரதிசயமாகப் பார்க்கச்செய்த ,“இந்தத் துறையில் இவருக்குத் தெரியாதது எதுவுமே இருக்க முடியாது“ என்ற பிரமாண்டத்தைக் கட்டமைத்துக் காட்டிய ஆசிரியர்களையும் நான் கடந்துதான் வந்திருக்கிறேன்.//
நாங்களும் கடந்து வந்திருக்கின்றோம்! இதோ நீங்களும்! அதில் ஒருவராக இருக்கின்றீர்கள்! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் இப்போதுள்ள தங்கள் மாணவர்களில் இருக்க மாட்டோமா என்று தோன்றுகின்றது. ம்ம்ம் வ்யதானால் என்ன அறிவிற்கு வயதேத்து. எனவே நாங்களும் மாணவர்கள்தான். உங்கல் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்! இப்படிப்பட்ட அருமையான ஆசிரியர் கிடைத்ததற்கு....வகுப்பே "spell bound" ஆக இருக்குமோ?!!!!
எத்தனை அழகான ஒரு பதிவு! அனுபவத்தைக் கூட இப்படி அழகான பாடலுடன் பகிர தங்களால் மட்டுமே முடியும்! நீங்கள் எதைத் தொட்டாலும் துலங்கி ஒளிவிடுமோ! ஆம்! எந்தத்தலைப்பைத் தொட்டாலும் மொழி ஆளுமை துலங்கி ஒளிரும்.
நாங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் இந்த வலையின் மூலம் ஆசிரியரைப் பெற்றதற்கு!
வணக்கங்களுடன்
ஆசானுக்கு வணக்கங்கள்,
Deleteமுதலில் நன்றிகள். இது போன்ற அனுபவங்களைப் பதிவிடுவதை நீங்கள், தோழர் மது, சகோதரர் சாமானியன் உங்கள் மூவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறேன். இதற்கு முன் இப்படி எழுதச் சிந்தித்தது போலும் இல்லை. பதிவு எப்படி வந்திருக்கிறது என்றும் தெரியவில்லை. உங்கள் மூவரின் நடையும் ஒவ்வொரு வகையில் அற்புதமானது. என் முதல் முயற்சியில் நிறைகள் ஏதும் இருப்பின் அது உங்கள் மூவரையே சாரும். குறைகள் என் பயிற்சிக் குறைவால் நேர்ந்ததே!!! சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். நான் செம்மையுற நிச்சயம் அது உதவியாய் இருக்கும்.
அடுத்து உங்களின் பின்னூட்டம்..
“உள்ளதை உள்ளபடி விளக்கினால் எங்களுக்குப் புரியாது என நினைத்து வாழ்க்கைப் பயனுடைமை நோக்கம் கருதி டீச்சர் பொருள் விளக்கி இருக்கலாம்“ என்று நீங்கள் சொல்வது…..
உண்மையில் இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை. டீச்சரைப் பொருத்தவரை மிகத் திறமையானவர் சந்தேகமே இல்லை. ஒரு பாடத்தையோ பாடலையோ, கணக்கையோ முடிக்கும் போது அது எங்களின் மனம் பதிந்திருக்கும். தேர்வுக்கென மீள்பார்வை செய்வதற்குக்கூட அவசியமிருக்காது. உண்மைதான் எங்களுக்குப் புரியும் மொழியில் அவர் விளக்கமுயன்றிருக்கலாம்தான். Methodology இல் நாம் படித்தது போல தூலக் கருத்தமைந்த இந்தப்பாடலுக்கு நடைமுறையிலிருக்கும் பொருள் காட்டக் கருதி Concrete to Abstract என்ற உத்தியைக் கூட அவர் பின்பற்றியிருக்கலாம்.
இன்னொரு சாத்தியக்கூறையும் ஆசிரியராய் இருந்து யோசிக்கிறேன். நாம் ஒன்றன் பொருளை விளக்க எடுத்துக்காட்டும் உதாரணங்களை மாணவர்கள் பலநேரங்களில் பிடித்துக்கொள்வர். பொருளை விட்டுவிடுவர். தேர்வில் கூட அதை எழுதிவைத்து விடுவார்கள். ( கிட்டப்பார்வைக்கு குழிலென்ஸ் என்றும் தூரப்பார்வைக்குக் குவிலென்ஸ் என்றும் நினைவு கூர “ கிட்டக்குழி தோண்டித் தூரக்குவி “ என்பதை அடியேனே விடையாக எழுதி அடிபட்டிருக்கிறேன்) அப்படி டீச்சர் அந்த நேரம் இதனுடைய பொருளைக் கூடப் பிறகு சொல்லி இருக்கலாம். நான் அதை விட்டுவிட்டு வெறும் உதாரணத்தை அவ்வளவு நாளாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாடலுக்கு இந்தப்பொருள்தான் சம்மனசு டீச்சர் சொன்னதாகவே இன்னும் என் நினைவில் பதிந்திருக்கிறது.
நீங்கள் சொன்னதோடு இந்தச் சாத்தியங்களும் உள்ளதை ஏற்கத்தான் வேண்டும்.
இன்றில்லா விட்டாலும் கொள்வோன் கொள்வகை அறிந்து கொடுத்தலே நமது பழைய கல்வி மரபு.அதுவே இயற்கையானதும் கூட..! நவீனக் கல்வி மரபு என்று நம்தலைமேல் கட்டப்படுவது புத்திசாலியை மேலும் புத்திசாலியாக்குகிறதோ இல்லையோ முட்டாளை இன்னும் முட்டாளாக்குகிறது. 40 மாணவர்களுக்கு ஒரே கற்பித்தல்தான் என்று சொல்லும் நாம் நம் கல்வி ஆசிரியர் மையக் கல்வி அல்ல குழந்தைகள் மையக்கல்வி என்று சொல்லித்திரிவதன் காரணம் என்ன? நீங்கள் சொன்னதை ஏற்கிறேன் மாணவனுடைய அறிதிறனைக் கணக்கில் கொள்ளாத, ஆண்டொன்று போனால் வகுப்பொன்று மாறும் என்னும் நிலையில் இருக்கிற நம் கல்வியில் ஒரு வகுப்பில் படிக்கும் எல்லாரும் ஓர் நிறை தான்.
நோட்ஸ்… இதை இங்கு சொல்வதால் ஏதும் சிக்கல் வரலாம். வரட்டும். இவ்வாண்டு எம் பள்ளியில் நாமக்கல்லில் பணியாற்றி உன்னதமான மாணவர்களைத் தயாரித்த ஒரு ஆசிரியர் மேல்நிலை ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். என்னைப் பொருத்தவரை, பாடத்திலிருந்து கேட்கப்படும் Paragraph, வினாவிடைகள் போன்றவற்றை ஒரு சில வார்த்தைகளைக் கொடுத்தும், சில கடினமான வார்த்தைகளை எளிமைப்படுத்தியும் வாக்கியப்பிழைகளைத் திருத்தியும் மாணவராகவே எழுதப் பயிற்றுகிறேன். கூடுதல் நேரமும், திருத்தப் பொறுமையும் வேண்டியிருந்தாலும் அவன் எதிர்காலத்தில் நல்ல மொழியாளுமை பெறுவான் என்பதற்காக நான் அமைத்துக்கொண்டிருந்த முறையது.
இந்தப்பருவத் தேர்வு முடிவில் என்னுடைய மாணவர்கள் விடைத்தாள் அந்தப் புதிய ஆசிரியரால் திருத்தப்பட, பலருடைய விடைத்தாள்களிலும் paragraph வினாவிடை போன்றவை முற்றிலும் அடிக்கப்பட்டிருந்தது. கண்ணீருடன் மாணவர்கள் அவரிடம் கேட்டதற்கு நோட்ஸில் இருப்பதில் ஒரு எழுத்துப்பிசகினாலும் மதிப்பெண் குறைப்பேன் நீங்கள் நீங்களாகவே எழுதினால் எப்படி மதிப்பெண் வழங்கமுடியும் என்றிருக்கிறார். அதனுடன் விட்டிருந்தால் பரவாயில்லை... எங்க சார் நோட்ஸே பாக்கக் கூடாது , நாலு வரின்னாலும் நீங்களா எழுதுங்கன்னு சொல்லிருக்கார் சார் என்றவர்களிடம், நீங்களாகவே எழுத இதென்ன தமிழா என்றும் கேட்டிருக்கிறார். நிச்சயமாய் ஒரு பக்கத்ததிற்குத் தவறில்லாம் தமிழில் எழுதச்சொல்லி அவரிடம் கேட்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுதிவிடமாட்டார் என்றே நம்புகிறேன். அதைவிடக் கொடுமை, PWD என்பதன் expansion கேட்கப்பட Public Works Department என்று சரியான விடை எழுதிய மாணவர்களின் விடையை அடித்திருந்தார். இது சரிதானே என்று கேட்ட மாணவர்களிடம் Public Welfare Department என்றிருக்கிறார். இவரிடமும் கற்றுக் கடந்தாக வேண்டும் இன்னும் பல தலைமுறைகள்……!
.................நீங்கள் தான் என் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்கிறீர்கள்.அவர்கள் இன்னமும் மதிப்பெண்களை நோக்கி ஓடி ஜெயிக்கக் கொடுத்துவைக்காதவர்களாகவே இருக்கிறார்கள். நானும் பந்தயக் குதிரைகளை உருவாக்கத் தெரியாதவனாகவே இருக்கிறேன். அதுவே என் தகுதியும் தகுதியின்மையுமாய் இருக்கிறது.
Deleteதங்களிடமிருந்து இப்படிப்பட்ட பின்னூட்டங்களை, விவாதத்திற்குள்ளாகும் பின்னூட்டங்களையே எதிர்பார்க்கிறேன் ஆசானே!
தலைச்சோறுக்கு கொஞ்சம் குழம்பு(ம்) வேண்டிஇருக்கிறதே…?
சரிதானே???!!!
தாங்கள் என்மேல் கொண்ட மதிப்பு அன்பால் நேர்ந்ததே!
நன்றி.
ஆசானே நீங்கள் ஒரு மிகச் சிறந்த ஆசான் என்பதை உங்கள் பதில் விளக்குகின்றது! என்ன ஒரு அருமையான முறை தாங்கள் கற்பிக்கும் முறை! அதைத்தான் விரும்புகின்றோம். ஆனால், நீங்கள் சொல்லி இருப்பது போல் மாணவர்கள் மதிப்பெண்கள் நோக்கி பந்தயத்தில் இருப்பதால்...ம்ம்ம் என்ன செய்ய..அதுவும் பொதுத் தேர்வில் அவர்கள் நினைக்கும் விடைதான் வேண்டும் என்றும், அதான் இந்த கோனார் நோட்ஸ் போன்றவை....ஆங்கிலத்திற்கும் இருக்கின்றதே....எல்லாவற்றிற்கும் இருக்கின்றாதே....!! அப்படி இல்லையென்றால் மதிப்பெண் குறையும், மேல்படிப்பு அவர்கள் விரும்பும், படிப்பு அதுதான் இப்போது பொறியாளர் படிப்புதானே முதன்மை....பெற்றோரும் அப்படித்தான் இருக்கின்றார்கள்.....மாணவர்கள்/குழந்தைகள் எல்லோரும் வருங்கால பணம் ஈட்டும், பெருக்கும் இயந்திரங்களாக உருவாகுவதைத்தான் இந்த சமுதாயமும், அதன் ஒரு பங்காகிய பெற்றோரும், பள்ளிகளும் விரும்புகின்றன. பள்ளி முதல்வர் அவரது பள்ளி ரிசல்ட் குறித்துக் கவலை...ஆசிரியர்கள் அவர்களது பாடத்தின் ரிசல்ட் குறித்துக் கவலை, பெற்றோர் மதிப்பெண் குறித்துக் கவலை...இப்படித்தான் ...எல்லோரும் ரோபோக்களாகி வருகின்றார்கள்...
Deleteதாங்கள் சொல்லியிருக்கும் அனுபவங்கள் மிகவும் வருத்தத்தை வரவழைக்கின்றது! இதுதான் இன்றைய நிலைமையோ?!!
மிக்க நன்றி தங்களின் விரிவான பதிலுக்கு....
அன்புச் சகோதரா நல்ல தோர் பதிவு. அவருடைய கற்பித்தல் திறமை உள்ளவர் தான் ஏன்று தெரிகிறது ஏனெனில் சரியோ தப்போ இன்று வரைமனதில் பதியும்படி பாடம் எடுத்திருகிக்கிறாரே இல்லையா. எத்தனை பிள்ளைகளுக்கு பிழையாக பாடம் எடுத்திருப்பார் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
ReplyDeleteசில சமயங்களில் சிலர் கேட்கும் கேள்விகளில் நம்மை ஹ்டட்டி எழுப்புவது போல் நான் உணர்ந்திருக்கிறேன். பல சமயங்களில்.
தங்கள் அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வதால் தான் இத்தனை அத்தனை என்று அப்பப்பா .....
ஆமா அம்மு சொல்வது போல் இந்த ஞானக் கொழுந்தை எப்படி கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
தங்களுக்கே இதுவரை தங்கள் ஆற்றல் புரியவில்லையே ஏன் அப்படி உண்மையில் இவற்றை ஆசிரியர்களால் தான் கணிப்பிட முடியும்.அவற்றை கண்டு வளர்ப்பது அவர்கள் கடமை தானே இல்லையா நானும் இதை எண்ணி இப்போது கவலைப் படுகிறேன்.
எனக்கு ஏற்பட்ட இந்த கவிதை நாட்டம் அப்போதே தெரிந்திருந்தால் இன்னும் வளர்திருப்பேனே என்று வருந்துகிறேன். சரி அதை விடுங்கள்.
இன்னும் நோட்ஸ் கொடுக்கும் பழக்கம் அங்கு இருக்கிறதா. இங்கு எல்லாம் ப்ராஜெக்ட் என்ற பேரில் எல்லாம் அவர்களே groupபாக படித்துவிட்டு அந்த வொர்க்கை சமர்ப்பிக்க வேண்டும். இப்போதெல்லாம் அங்கும் அப்படி இருக்கும் என்று தான் நினைக்கிறன். உங்களுக்கும் தெரிந்திருக்கும். நம் காலத்திற்கும் இப்போவும் நிறைய மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்று நினைக்கிறன் சகோ. அதிகம் எழுதிவிட்டேன். நல்ல பதிவு தொடருங்கள். தங்கள் நல்ல அனுபவங்களை பகிருங்கள் நாம் அறிவுக்கண்களை அவை திறக்கட்டும் ஹா ஹா அறிவுக் கண்ணா உனக்கிருக்கா என்று கேக்கப்படாது ok வா ஹா ஹா ....
ஆமா நீங்க என் கடல் I பார்க்கலையே II தனே முடிந்தால் பார்த்து கருத்து இட்டால் மகிழ்வேன். நன்றி சகோ வாழ்த்துக்கள் ...!
கடலைப் பார்த்தால் எப்போதுமே எனக்குப் பிரமிப்புத்தான் சகோ..
Deleteகருத்திட்டுவிட்டுத்தான் வருகிறேன். பின் துளசிதரன் அய்யாவின் பின்னூட்டத்தையும் காணவேண்டுகிறேன். அவர் பார்வையும் ஏற்கத்தான் வேண்டியுள்ளது. பல ஆசிரியர்களுக்கு நான் படிக்கும் மாணவன் ஆனால் நல்ல மாணவனா என்றால் இல்லை..வேப்பங்கொழுந்துதான்!
பயிற்சியில் கல்லூரியில் கூடக் கருத்து முரண்களைத் தனிப்பட்ட விரோதமாகப் பார்த்த ஆசிரியர்கள் தான் மிகப்பலரும்!
நோட்ஸ் கொடுக்கும் பழக்கம் இன்னும் இங்கு இருக்கிறது.
எங்கடா இன்னும் கலாய்க்க வில்லையே என்று பார்த்தால் அறிவுக் கண்ணைத் திறக்கச்சொல்லுகிறீர்கள்!
அதற்கான தாழ்ப்பாள் நீங்கள் கட்டி வைத்திருக்கும் கடலில் அல்லவா இருக்கிறது...!!!
நன்றி கவிஞரே!
தங்களின் அனுபவப் பகிர்பு மனதினைக் கனக்கச் செய்துவிட்டது நண்பரே.
ReplyDelete///கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளம் கொள///
எனவே இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படிச் சொன்னால் , எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டும் கூறினால் போதுமானது என்று தங்களின் ஆசிரியை நினைத்திருக்கலாம்“
நன்றி அய்யா.
Deleteதுளசிதரன் அய்யா சொல்லியதைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!
தங்கள் கருத்தை உடன்படுகிறேன்.
மனிதுக் கொள்ளுங்கள் எழுத்துப் பிழை எழுதிக் கொண்டு இருக்கயில் அழைப்பு வந்தமையால் சரியாக பார்க்காமல் அவசரமாக கருத்து இட்டேன் அதனால் தான் பிழை.
ReplyDeleteகடல் II தானே பார்த்தீர்கள். கடல் I பார்க்கவில்லையே என்பது தான் அது சகோ .
கடல்கள் பார்த்தேன் கருத்திட்டேன்.
Deleteமனிதியையும் சேர்த்தே மன்னித்தால் போகிறது
ஹ ஹ ஹா
வணக்கம் ஐயா!
ReplyDeleteசம்மனசு டீச்சர் மனசில் சமணம் போட்டு உட்காந்துவிட்டார் ஐயா!
நெஞ்சில் வலிதந்தது அவரின் பிற்கால நிலை.
எத்தனை இனிய நினைவு. அதைப் பதிவாக்கிய விதம் சிறப்பு!
ஆசிரியர் என்பவர் எப்படி மாணவர் மனதில் பாடத்தைப் பதிவிடுதல் வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணப் பாடல் விளக்கம் அருமை!
கற்பித்தலின் நுணுக்கங்களை உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமை உளம் நிறைத்தது ஐயா!
“ கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளம் கொள “
மனதில் செம்மையாக இப்போது இருந்து கொண்டது!
//கண்கள் சற்று சுருங்கி விரிந்தன……// எனது கண்களும்!..:)
மிக அருமை! வாழ்த்துக்கள் ஐயா!
கவிஞரின் இளகிய மனம் நாங்கள் அறிந்ததே!
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் எப்பொழுதும் நன்றியுண்டு.
கற்பித்தலின் நுணுக்கங்கள் பற்றி நான் இன்னும் ஒன்றும் சொல்ல வில்லையே...?
நன்றி
சம்மனசு டீச்சர்..மனதில் படிமமாய்..என்ன குறையிருந்தாலும் உங்கள் மனதில் அன்பால் இடம் பிடித்த ஆசிரியர்...அவர்..உங்களின் உயர்விற்கு அவரின் அன்பும் ஒரு காரணமாயிருக்கலாம்..இப்போதைய அவர்களின் நிலை மனதில் வலியாய்...நல்ல பதிவு வாழ்த்துகள்.
ReplyDeleteஆம் நீங்கள் கூறியது உண்மைதான் சகோதரி.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தூபக்கால் புகைச்சுருள்களாய் மனதில் பல்வேறு உணர்ச்சிகளை எழும்பச் செய்த பதிவு ! பல முறை படித்தேன் ! மிக அழகான எழுத்து நடை !
ReplyDeleteமுதலில் ஒரு ஆச்சரியம்...
இன்று காலை எனது புதிய பதிவு ஒன்றுக்காக மிதி-வண்டி உதாரணத்தை யோசித்திருந்தேன்... மாலை உங்கள் பதிவில் ! ஒத்த கருத்து இப்படியெல்லாம் வேலை செய்யுமா ?!
சம்மனசு டீச்சரை படிக்க ஆரம்பித்ததுமே எனது மூன்றாம் வகுப்பு ஸ்டெல்லா மிஸ் ஞாபகம் ! அத்துடன் ரெஜினா டீச்சர்... ரீட்டா மிஸ்... உங்கள் சம்மனசு டீச்சரைப்போல நம் ஒவ்வொருவரின் நினைவுப்பெட்டகங்களிலும் தான் எத்தனை எத்தனை தேவதைகள் ?! இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தேவதைகளை எப்படிப்பட்ட நிலையில் பார்த்தாலும் மனம் மட்டும் அன்றைய அவர்களின் பிம்பங்களிலிருந்து அவர்களை கழற்ற மறுப்பது ஏன் ?!
நீங்கள் கேட்கும் வாய்ப்பு அமையாமல் போனதும் நல்லதுதான் எனப்படுகிறது ஜோசப் !
" நீ பாடம் நடத்திய லட்சணம் " என போலீஸ்க்காரர் கூறியதால் புத்தி பேதலித்த டீச்சர் ஒரு வேலை அப்படி நடக்காமல் நல்ல நிலையில் உங்களை கண்டிருந்தால்... ஒரு வேலை சம்மனசு டீச்சருக்கு உண்மை பொருள் தெரியாமலேயே இருந்திருந்தால்... தான் தன் வாழ்நாள் முழுவதும் போதித்தது தவறென அறிந்தால்...
அதனால்தான் காலம் அந்த திருட்டு மாணவனை உங்களுக்கு முன்னால் சம்மனசு டீச்சரை சந்திக்கச் செய்து விட்டதா ?!
சில நேரங்களில் வாழ்வின் சில பொய்களும், சில தவறான விளக்கங்களும் திருத்தப்படாமலேயே இருப்பது கூட சரியெனப் படுகிறது.... நம் ஞாபகப்பெட்டகத்தில் புதைந்துகிடக்கும் நம் தேவதைகளின் பிம்பங்களைப்போலவே !
" நாங்களும் கடந்து வந்திருக்கின்றோம்! இதோ நீங்களும்! அதில் ஒருவராக இருக்கின்றீர்கள்! "
துளசிதரன் அவர்கள் மிகச்சரியாக சொல்லிவிட்டார் !
ஆம், நாம் அனைவருமே கடந்து வந்திருக்கிறோம்...
ஒன்பதாம் வகுப்பில் ஒரு கணக்கு வாத்தியார்...
வகுப்புக்குள் நுழைந்ததுமே சரசரவென புதிய கணக்கை போர்டில் எழுதி இயந்திரம் போல விளக்கிவிட்டுதான் அடுத்த கேள்வி கேட்பார். ஆரம்பிப்பதற்கு முன், தான் முடிக்கும்வரை யாரும் ஒரு கேள்வி கேட்ககூடாது என கடுமையாக எச்சரித்துவிடுவார் ! மீறி பேசுபவனுக்கு காட்டு அடி ! பாடமும் அவ்வளவுதான் !
" டேய் மாப்ள... வாத்தி ஏன் இப்படி பாயறாருன்னு கண்டுப்புடிச்சிட்டேன்டா... சாரு நாளைக்கு நடத்த வேண்டிய பாடத்தோட நோட்ஸை மொத நாளு வீட்ல செம கடம் போடறாருடா ! ( கடம் - மனப்பாடம் )
அவரிடம் டியூசன் சேர்ந்த கணபதி கூறியதை நாங்கள் நம்பவில்லை !
" எவ்வளவு பந்தயம் ?! "
அடுத்த நாள் அவர் வகுப்பில் " சார்... ஒரு டவுட்டு சார்... "
தலையை சொறிந்தபடி எழுந்தான் கணபதி !
" டேய் ... உக்காருடா... அப்புறமா சொல்ரேன்.... "
" இல்ல சார்.... அந்த மொத லைன்ல நீங்க போட்ட நம்பர்... இங்க மூனாவது லைன்ல எப்படி சார்.... ! "
அவரது அதட்டலையும் பதற்றத்தையும் சட்டை செய்யாமல் அவன் தொடர, மனிதர் கணபதி மீது பாய்ந்து வாங்கு வாங்கு என வாங்கி சட்டையை கிழித்துவிட்டார் !
" உங்களுக்கெல்லாம் பாடம் ஒரு கேடு ! நாளைக்கு பார்த்துக்கலாம் ! "
வகுப்பு முடிந்த பிறகு வீங்கிய கன்னத்தை தடவியபடியே பந்தய பணத்தை வசூல் செய்துகொண்டான் கணபதி ! பத்தாம் வகுப்பில் இரண்டு முறை பெயிலான கணபதி இன்று வெற்றிகரமான கிரிமினல் லாயர் !! ( விளையும் பயிர்... ?! )
தாங்கள் நடத்தும் பாடம் முழுவதும் புரியாத ஆசிரியர்கள்கூட பரவாயில்லை ! நடத்தையில் மோசமான ஆசிரியர் ஒருவர்....வேண்டாம் அந்த மனிதரை பற்றி முழு பதிவு வேண்டும் ! அதையும் என்னால் உடனடியாக எழுத முடியாது ! காரணம் அந்த சம்பவத்தை நாசுக்காக விளக்க எனது எழுத்துதிறன் இன்னும் பக்குவப்படவேண்டும் !!!
இன்று வலைப்பூக்கள் நடத்தும் பலர் ஆசிரியர்கள் என அறியும்போது, பணியையும் தாண்டிய அவர்களின் அறிவுத்தேடலை அறியும்போது உங்களிடம் கற்கவாவது மீன்டும் மாணவனாக வேண்டும் என்ற ஆசை எழுகிறது.
உலகின் மிக புனிதமான பணி ஆசிரியப்பணிதான் ! நீங்கள் கற்பிப்பது ஒரு மாணவனுக்கல்ல... அவன் மூலம் பல தலைமுறைகளுக்கு !
நன்றி
சாமானியன்
தனிப்பதிவாகும் அளவிற்குப் பின்னூட்டம்..!!!
Deleteபலருடைய பள்ளி அனுபவங்களும் பல கதைகளுக்கான கருக்களைக் கொண்டே இருக்கிறது.
சில சந்தோஷமான தருணங்களும்,
சில விரும்பத்தகாத தவிர்த்திருக்க வேண்டிய நிகழ்வுகளுமாய்த்தான் எல்லாருடைய பள்ளிக் காலமும் கழிந்திருக்கும்.
இந்தப் பதிவு எழுதக் காரணமான் மூவருள் நீங்களும் ஒருவர் உங்கள் பாராட்டில் நெஞ்சு நிறைகிறது.
நன்றி
அனுபவப் பகிர்வு வெறும் அனுபவப் பகிர்வாக இல்லாமல், அதற்குள்ளும் ஒரு பாட்டையும், பொருளையும் சொல்லி அப்பப்பா, இப்படி கூட ஒரு அனுபவப் பகிர்வை சொல்லமுடியுமா என்று என்ன வைத்து விட்டீர்கள்.
ReplyDelete"//குறிப்பாக மொழிப்பாடங்களில் லயிப்பை மாணவர் மனதில் ஏற்படுத்த விரும்பும் ஆசிரியர் வெறும் நோட்ஸை நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை//"
- இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்கிறேன் நண்பரே. நான் எடுக்கும் வகுப்புகளில், புத்தகத்தை படித்து பொருள் சொல்வதை விட, மாணவர்கள் அதை வாழ்க்கையோடு ஒப்பிட்டு படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.
வாருங்கள்,
Deleteநீங்களும் எங்கள் சங்கத்தில் அங்கத்தினர் ஆகி விட்டீர்களா....!!!
உங்களது கற்பித்தல் அனுபவங்களையும் பகிருங்கள் ஆசிரியரே!
படிக்கக் காத்திருக்கிறோம்.
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துகளுக்கும் நன்றி.
தம மூன்று ..
ReplyDeleteநன்றி தோழர்.
Deleteமதிப்பிற்குரிய நண்பரே,
ReplyDeleteநிறைவான பதிவு.
ஒரு முறை எங்கள் அறிவியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு வட்ட வடிவ சாப்பாட்டு பாத்திரத்தை காட்டி சைக்ளோட்ரான் இப்படிதான் இருக்கும். என்று சொன்னார்.
அற்புதமான ஆசிரியர் அவர்.
பல நாட்கள் கழித்து (வருடங்கள்) எக்ஸ்.பைல்ஸ் என்கிற எனது விருப்பத்திற்குரிய தொலைகாட்சி தொடரைப் பார்க்கிற பொழுது சைக்கிளோட்ட்ரன் என்றால் எவ்வளவு பிரமாண்டமானது என்று பார்த்து அதிர்ந்தேன்.
ஒரு டிபன் பாக்ஸ் அளவே இருக்கும் என்று இருந்த எனது புரிதல் குறித்து வெட்கினேன். (அந்த ஆசிரியர் இன்னும் என் மரியாதைக்குரியவராகவே தொடர்கிறார்)
நீங்கள் ஆசிரியர் குறித்து வெகு நுட்பமாக விவரிக்கும் பொழுதே சுதாரித்திருக்க வேண்டும்... கடைசியில் குடை அடி வாங்கியபொழுது முழுமையாக புரிந்தது.
நீங்க ஏன் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து இழந்த நகைகளை அவர்களுக்கு அந்த புறம்போக்கு போலீஸ்காரர் முன்னிலையில் வழங்கக் கூடாது?
பல கேள்விகளையும் மட்டுமல்ல விடைகளையும் புதிய தேடல்களையும் தருகிறது இந்தப் பதிவு...
தோழர்,
Delete// நிறைவான பதிவு // அப்படியா...!!!
இது உங்களிடமிருந்து காப்பியடித்த முதல் கொசுவத்தி.
நன்றாய்த் தான் சுழன்றிருக்கிறது போலும்..!
டிபன் பாக்ஸில் இருந்து எனக்கு இன்னொரு கொசுவத்தியைத் தந்திருக்கிறீர்கள்.
அது “கொக்கின் வாய் பனம்பழம் ஆன கதை“
நகையைத் திரும்பக் கொடுக்க பழைய மாணவர்களை ஒன்றிணைக்க வேண்டியதில்லை. நான் உட்பட என்னை அறிந்த ஒருசிலரால் அது கூடுவதே!
ஆறாது நாவினால் சுட்ட வடு என்பது இதுதான் போலும்.
சம்மனசு டீச்சர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் எடுத்து வளர்த்த அவருடைய உறவினரின் மகனுக்கு டீச்சருடைய பணம்தான் குறி!
கொடுமை என்னவென்றால் இளவயதில் தாய்தந்தையரை இழந்த அவனுக்காகத்தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார்.
நான் பார்த்து எட்டு ஆண்டுகள் ஆயிருக்கும்.
இன்னும் இருக்கிறார். எங்கு என்று தெரியாவிட்டாலும் . எட்டாத் தொலைவில்லை.
தேடினால் கண்டு பிடிக்கிற தூரம்தான்.
அவர்களுக்கு வேண்டியதை நிச்சயம் செய்வேன் தோழர்.
நன்றி!
எப்பேர்ப்பட்ட பாடல்கள், பழமொழிகள் போன்றவற்றுக்கெல்லாம் புத்தம் புதிய கோணங்களில் சிந்தித்து உண்மைப் பொருளை வெளிக்கொணரும் தாங்கள் இவ்வளவு எளியதொரு பாடலை - அதுவும் 'மாந்தர்' எனும் பழகியதொரு சொல்லை - இத்தனை ஆண்டுகளாகத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் என்றால், அதற்குக் காரணம் குழந்தை நிலையிலேயே அது தங்களுக்குத் தவறாக நெட்டுருச் செய்விக்கப்பட்டதுதான். நெட்டுருக் கல்விமுறை எப்பேர்ப்பட்ட அறிஞரையும் எவ்வளவு எளிதாக ஏமாற்றி விடும் என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டு! ஆனால், முடிவு எதிர்பாராதது! இதை நீங்கள் ஒரு கதையாக, நிகழ்வுகளுடன் விவரித்து எழுதி, இறுதியில் 'இஃது உண்மை நிகழ்வு' எனக் குறிப்பிட்டிருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும். பதிவை நான் முழுமையாகவே படித்தேன். ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தங்கள் பாணியில், பழந்தமிழிலிருந்தே ஓர் எடுத்துக்காட்டையும் வழங்கியிருக்கிறீர்கள். நன்றாக இருந்தது! நன்றி!
ReplyDeleteபரவாயில்லை.தப்பித்தீர்கள்..நீங்கள்தான்..நகையை திருடியவர் என்று சொல்லி இழுத்துவிடவில்லை...
ReplyDeleteஅட இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லையே!
Deleteநன்றி அய்யா!
ReplyDeleteவணக்கம்!
பள்ளிப் பருவத்தைப் பாடும் பதிவிதனைத்
துள்ளிப் படித்தேன்! சுவையுண்டேன்! - அள்ளி
அளித்த கருத்துக்கள் ஆழ்மனத்துள் நிற்கும்!
களித்த பொழுதைக் கணித்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
“எவ்வளவுதான் வருந்தி வருந்தி நாம் ஏங்கிக் காத்திருந்தாலும் நமக்கு இல்லை என்று விதிக்கப்பட்ட ஒன்றை நாம் அடைய முடியாது .
ReplyDeleteஎத்துனைப் பெரிய உண்மை. சரி இரண்டாம் வகுப்பு சம்வங்களா?
தெரியலையே,,,,,,,,,,,,,
ஏனோ தாங்கள் ஆசிரியரிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்பதைவிடவும் அவரின் நிலை வேதனை,,,,,,,,,,,,
மாணவன் என்ற நிலையில்,
சரி அடி ரொம்ப அதிகமோ,,,
நல்லா இருக்கு.