Monday, 25 August 2014

வீழும்வரை போதும்!















கிள்ளையிலும் இல்மொழியை மெல்ல‘அவள் சொல்லமனம்
       அள்ளுமிவள் உள்ளழகில் ஆழும்! – என்னைக்
கொள்ளைகொண்டு போகுமிவள் கள்ளவிழி வீச்சழகில்
       உள்ளம்பனி வெள்ளமென வீழும்!

புன்னகையில் கண்ணிமைத்(து) அன்னமெனும் வண்ணமயில்
       பொன்பழித்து வந்தாளோ அன்று? – என்
மென்மனது கண்திறந்த அன்றிவளைக் கொண்டதனால்
       இன்கவிதை ஈந்ததுவோ இன்று?

காற்றழைக்கும் காகிதம்போல் மாற்றமொடு என்மனமோ
       வேற்றிசையில் போகுமொரு நேரம்! – உன்றன்
ஆற்றலினால் என்னிலொரு மாற்றம்வர அங்குவந்து
       தோற்றதடி என்மனதின் வீரம்!

முத்தும்வாய் இன்னமுதும் மீன்களதும் வாழுமுகம்
       சத்தமிலா வித்தைசெயும் கடலோ? – அன்றிச்
சித்தமெலாம் ஆண்டுவென்றன் சிந்தையெலாம் கொண்டதினால்
       சந்தமுள செந்தமிழின் உடலோ?

நீரலைகள் மாறியதோ போர்முகத்துச் சேர்நுதலில்
       சீரளைந்து நிற்பதுகார் குழலோ? – அல்ல
பேரறியாக் காதலெனும் ஓரறிவில் நானுழல
       யாரறியா தாளும்‘இருள் அழலோ?

காட்டுமுன்றன் கண்ணசைவில் பாட்டிசைக்கும் பாவலரின்
       ஆட்டமெலாம் ஈட்டமின்றி வீழும்! – என்னைத்
தீட்டுமுன்றன் பார்வையிலே தேன்கவிதை ஊற்றெழுந்து
       வாட்டமெலாம் போக்கி‘உயிர் வாழும்!

மொட்டானாய் என்னையுனின் வட்டவிழி காட்டி‘அதில்
        பட்டமனம் உட்கலந்து ஆண்டாய்! – என்னைக்
கட்டிவிடும் கண்களென்ன தொட்டினிக்கும் தீக்கனலோ?
       சுட்டதனால் சோர்வகற்றி மீண்டாய்!

கண்ணில்லான் யானையினைக் கண்டதுபோல் நின்னழகின்
       தன்மையைநான் கூறியிங்கு போனேன்! – வானின்
எண்ணில்லா மீன்களைப்போய் எண்ணிமனம் வாடுகின்ற
       வன்மையுநின் வனப்புரைத்(து) ஆனேன்!

நெஞ்சமது நின்நினைவு கெஞ்ச‘உடன் அஞ்சலினால்
      தஞ்சமென மௌனமொழி ஓதும்! – நின்றன்
கொஞ்சுமொழி கேட்பதனால் மிஞ்சுமென்றன் வாழ்வினிலே
       விஞ்சுமின்பம்  வீழும்வரை போதும்!
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

23 comments:

  1. அற்புதமான வரிகள் நண்பரே,,,, இந்த வார்த்தைகளெல்லாம் எங்கிருந்துதான் வருகின்றதோ.....
    நல்ல கவித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  2. வணக்கம்
    ஐயா.

    சீராக அடியெடுத்து என் சிந்தைதனை குளிரவைத்தீர் ஐயனே
    நீ ஓதிய பாவினை நான் என்வென்று சொல்வேன்.
    செப்புவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை ஐயனே.

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தற்பொழுதுதான் தங்களின் தளம் கண்டு வந்தேன்.
      இங்குத் தங்களின் பின்னூட்டம் கண்டுவந்தேன்.
      நன்றி ரூபன்.

      Delete
  3. கள்ளவிழி வீச்சழகில் மயங்கி நீங்கள் சொன்ன மொழி அனைத்தும் அருமை !
    தமிழ்மண வாக்கு பெட்டி உங்கள் தளத்தில் இருந்தால் வாக்குகளை அள்ளுமே ,ஏன் வைக்கவில்லை ?சீக்கிரம் ஆவனச் செய்யலாமே ?

    ReplyDelete
    Replies
    1. பெட்டி வைக்கச் செய்த முயற்சிக்கு இந்நேரம் பெட்டிக்கடை வைத்திருந்தால் நோட்டுக்களை அள்ளியிருக்கலாம் போல.....!
      தெரிந்தவர்களைக் கேட்க வேண்டும்.
      கருத்தற்கு நன்றி பகவான்ஜி!

      Delete
  4. வணக்கம் ஐயா!

    காணா அழகினைக் கற்பனையிற் கண்டீரோ?
    தேனாய்ப் பகரவழி தேர்ந்தீரே! - நாணாளோ?
    நம்தமிழாள்! நாவினிக்க நற்சீர்க் கவிதர
    உம்மோ டுறைவாள் உகந்து!

    அற்புதமான பாவிசைத்தீர்கள் ஐயா!
    புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை
    போற்றிட வார்த்தைகளைத் தேடுகிறேன்!..

    மிக மிக அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. கண்ட அழகினைநான் காணாமல் போயிருந்தால்
      வண்டு மலர்வெறுத்து விட்டிருந்தால் - கொண்ட
      கவிமனதின் கல்லுடைத்தென் கண்வாழும் சிற்பம்
      புவிபடர நிற்றல்‘எப் போது?

      நாணுவாள் நந்தமிழாள் நான்கலந்து பாடியும்
      வாணுதல் பாவை விழிதிறவாள்! - பேணுகின்ற
      பீடு குறையுமென்பாள்! பொங்காதே! அங்கு‘உனை
      நாடி வருகின்றேன் நான்!

      சகோதரி உங்களின் வெண்பாவிற்குப் பின்னூட்டம் இட இரண்டு வெண்பாக்கள் வேண்டி இருக்கிறது.
      அவ்வளவு செறிவோடு எழுதுகிறீர்கள்!
      தங்கள் கருத்தினுக்குத் தகுதி பெற முயல்கிறேன்!
      நன்றி!


      Delete
  5. புதுக்கவிதைகள் பெருகிவிட்ட இக்காலத்தில் மரபுக்கவிதை எழுதும் உங்கள் திறமை மிகவும் பெரிது ஐயா ! இனி தொடருவேன் உங்கள் தளத்தை....

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் முதற்கருத்திற்கும் நன்றி ஜெயசீலன்.

      Delete
  6. வணக்கம் ஊமைக்கனவுகள் !

    கண்ணழகி கட்டுடலால் கரைந்திடவே நெஞ்சமது
    வண்ணமொழி பேசுகிறாய் வார்த்து - உன்
    திண்ணமென்ன தீந்தமிழோ திகைக்கின்ற என்னோடு
    வெண்ணிலவும் நாணுதிங்கே பார்த்து !

    வார்த்தைகளின் வானவில்லா வண்டமிழின் நாச்சுவையா
    கோர்த்துவிட்ட கொள்ளையின்பம் கோடி - உன்றன்
    நேர்த்தியான நினைவுகளில் நீந்துகின்ற என்னுள்ளம்
    வேர்த்துவிட வைத்துவிட்டாய் பாடி

    ஐயோ ஐயோ என்னால் முடியல்ல கவிஞரே உங்களோடு போட்டிபோட ! இருந்தும் முயற்சித்தேன் முயல்கிறேன்

    அருமையான சந்தம் ஆன்மாவை தொட்டுச் செல்கிறது
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம 2

    ReplyDelete
    Replies
    1. கண்ணழகி கட்டுடைத்த விண்ணழகு என்னில்விழ
      பெண்ணழகு பேரழகு ஆகும்! - புயல்
      மண்ணிலொரு கன்னியென முன்னில்வர தன்னந்தனி
      தென்னைமர மாகமனம் நோகும்!


      வார்த்தையுரு வாகுமவள் பார்த்தகணம் தீர்த்தநதி
      சேர்த்தடித்துப் போகுமன ஓடம்! - புகழ்
      கீர்த்தனைகள் தோற்குமொரு சீர்த்தியெழப் போர்ப்பரணி
      ஆர்த்தழவே வேர்த்துமனம் ஆடும்!


      சீராளன் அய்யா!
      உங்கள் கிண்டல் போதும்!

      பதிவிட்டது எப்போதோ எழுதியது.
      உங்கள் பின்னூட்டம் கண்டெழுதியன இவை!
      பாடல் படைக்கச் செய்கின்ற உங்களின் பின்னூட்டம்
      அதுவும் என்மனம் தொட்டுச் செல்கிறது.
      வருகைக்கும் சந்தப்பாடல்களுக்கும் மிகுந்த நன்றி
      “ என்னுயிரின்“ சொந்தக்காரரே!

      Delete
    2. கிறுக்குப் பயலிவன் கிண்டல் அடித்தால்
      நறுக்கி விடுங்களிவன் நாவை - முறுக்கித்
      திரியும் முகத்தடி தைரியம் சேர்ந்தால்
      அரிக்கும் அறிவை அது !

      சும்மா
      அறிவோடு உரசி அறிவை பெருக்குதலே என் வழி
      ஆதலால் அப்படி சொன்னேன் பொறுத்தருள்க பாவலரே !

      Delete
    3. கிறுக்குப் பயல்நான்! தமிழ்க்கிறுக்கு! அடித்து
      நொறுக்கும் கவியுமது நெஞ்சால் - பொறுக்கும்
      பொறுக்கிநான் என்க பெருமிதமே! இப்பா
      நிறுக்குந் துலாக்கோலே நீர்!

      உங்கள் வாழ்த்து நிஜமாகவே இனிக்கிறது அய்யா!
      பாவலரோ, கவிஞரோ அந்த அடை எல்லாம் நான் விரும்பவில்லை. உண்மையாகவே...!
      மரபறிந்த உங்களைப் போன்றோரின் வாயிலிருந்து வரும் நன்று எனும் ஒரு சொல்,
      குழந்தை ஆசிரியரிடத்திலிருந்து பெற்ற முதல் குறிப்பைப் போல் பார்க்கும் பொழுதில் பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது.
      மீ்ண்டும் உள்ளம் கனிந்த நன்றி!
      Delete

      Delete

    4. வணக்கம்!

      கிறுக்கும் எழுத்தெல்லாம் கீர்த்தியுடன் மின்னி
      நறுக்கும் பகைவர்களை நாளும்! - முறுக்கியெழும்
      மீசையுடன் நிற்கின்றேன்! வீரப்..பண் கற்கின்றேன்!
      ஆசையுடன் யாப்பை அணைத்து!

      Delete
  7. புன்னகையில் கண்ணிமைத்(து) அன்னமெனும் வண்ணமயில்
    பொன்பழித்து வந்தாளோ அன்று? – என்
    மென்மனது கண்திறந்த அன்றிவளைக் கொண்டதனால்
    இன்கவிதை ஈந்ததுவோ இன்று?

    காற்றழைக்கும் காகிதம்போல் மாற்றமொடு என்மனமோ
    வேற்றிசையில் போகுமொரு நேரம்! – உன்றன்
    ஆற்றலினால் என்னிலொரு மாற்றம்வர அங்குவந்து
    தோற்றதடி என்மனதின் வீரம்! ஆஹாஆஹா... அருமை அருமை சகோ! திரும்ப திரும்ப படித்து மகிழ்ந்தேன்.

    கோதையவள் பார்வை பட
    கொஞ்சுதமிழ் மிஞ்சி கெஞ்சிடுதோ
    நீங்காத நினைவுகளில் வார்த்தைகள்
    கட்டுக்கடங்காமல் பட்டுத் தெறிக்கிறதோ! ஹா ஹா சும்மா தான் ok வா ..கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி ....தெரியுமில்ல அதான் ஹா ஹா ...என்ன சிரிப்பு .....ம்..ம்... தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. கானமயிலைக் கண்ட நினைவில்லை.
      நான் கண்ட மயில் வேறு...!
      ஆனால்
      “ முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் “
      நன்றாக நினைவிருக்கிறது சகோதரி!
      இது மயிலுக்கான போர்வை !
      அப்படித் தானே?
      நிஜமாய் உங்கள் பின்னூட்டம் பார்க்கும் பொழுது சிரிப்பு மெல்லிதாய் வந்து விடுகிறது...?
      என்ன இரகசியம்....?
      எனக்கும் சொல்லுங்களேன்!

      Delete
    2. ஐயையோ சகோ தவறாகப் புரிந்து கொண்டீர்களா? நான் எழுதிய கவிதையை அல்லவா சொன்னேன். நீங்கள் எழுதுகிறீர்கள் என்று நானும் எழுதுகிறேனே அதை தான் சொன்னேன். முல்லைக்கு தேர் தெரியும். மயிலுக்கு போர்வை தெரியாதே. ஏதும் தவறாகப் புரிந்து கொண்டீர்களோ என்பதனால் இதனை தெரிவிக்கிறேன் சகோ.
      சிரிப்பின் ரகசியம் தானே.....அது நல்ல தரமான கவிதைகளை கட்டுரைகளை வாசிக்கும் போது மகிழ்ச்சி என்னையும் அறியாமல் ஓட்டிக்கொள்கிறது. அதுவே வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது. வேறொன்றும் இல்லை சகோ. நன்றி வாழ்த்துக்கள் ...!

      Delete
    3. தவறான புரிதல் எப்போதும் இல்லை!
      ஏன் இந்த வான்கோழி மயில் ஒப்பீடு.
      அதற்காகத்தான் சொன்னேன்.
      மயிலுக்குப் போர்வை,
      அது இரக்க குணம் எல்லை கடக்க மயிலுக்குப் பேகன் அளித்தது,
      “ முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
      எல்லை யளித்தாரைக் கேட்டறிதும் “
      என்னும் பழமொழி!
      சிரிப்பின் ரகசியம் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி!

      Delete

  8. வணக்கம்!

    சீர்மணக்கப் பேர்மணக்கத் தார்மணக்கக் கார்மணக்க
    நேர்மணக்க யார்கவிதை நெய்வார்? - தமிழின்
    கூர்மணக்க நீர்மணக்க வேர்மணக்கத் தேர்மணக்கப்
    பார்மணக்கச் சார்சோசப் செய்வார்!

    வஞ்சியவள் நெஞ்சிதரும் கொஞ்சிமொழி மஞ்சமிடும்!
    கெஞ்சிமனம் தஞ்சமுறும் பாடல்! - இளம்
    பஞ்சியவள் பிஞ்சிமனம் தஞ்சையெழில் மிஞ்சிவிடும்
    விஞ்சையொளிர் மஞ்சுதமிழ்க் கூடல்!

    ReplyDelete
  9. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/09/RAJA-DAY-9.html?showComment=1409625104465#c5929268728443619592

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

    வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete