பிரபல
வலைப்பதிவரும் நண்பருமான இதழியலாளர், திரு. எஸ். பி . செந்தில்குமார் அவர்கள் எனது
பதிவின் பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்த கேள்வியும் அதற்கான பதிலும்தான் இந்தப் பதிவின் சாரம். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் என் மனம் விரும்பாத பதிவு எது என்றால் அந்தப் பதிவினைத்தான் சொல்வேன்.
பொதுவாகவே
விவாதம் செய்வதில் நம்பிக்கை அற்றவனாய் இருக்கிறேன். பலநேரங்களில், விவாதத்தில் எழுகின்ற
இயல்பிற்கு மாறான தன்முனைப்பு, அடுத்தவர் வைக்கும் காரணங்களின் நியாயத்தையும் அலட்சியப்படுத்தும் மூர்க்கம் கொண்டுவிடுவதுதான்
அதற்குக் காரணம். தெரிந்திருந்தும் தவிர்க்க இயலாச் சில தருணங்களில் அதிற்பங்கேற்கும்படி
நேர்ந்துவிடுவதுண்டு. அப்படித்தான் இன்றும்
நேர்ந்தது. அது பற்றி இந்தப் பதிவின் கடைசியில். அதற்குமுன், நண்பர் செந்தில்குமார் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட பதிவின் பின்னூட்டத்தில் கேட்ட கேள்வியையும் அதற்கு
நானளித்த பதிலையும் இங்கே தந்துவிடுகிறேன்.
கேள்வி
:
அய்யா..!
தங்கள் பதிவை மிகத் தாமதமாக படித்தேன்.
மிக நல்ல பதிவு. அருமையான அறிவுரைகள்.
அதில் இன்றைய பத்திரிகைகளைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள், நானும் தமிழின் மிகப் பிரபலமான நாளிதழில் 15 வருடங்களாக பணியாற்றினேன் என்பதால் இதை எழுதுகிறேன்.
தமிழைக் கொலை செய்வதில் நாளிதழ்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. நான் முதன்முதலில் கட்டுரை எழுதி கொடுத்த போதே அதில் இருக்கும் சந்திகளை நீக்கிவிட்டார்கள். 'க்', 'ச்' போன்ற எழுத்துக்களை எழுதாதீர்கள். ஒருவர் 'க்' வரும் என்பார், மற்றொருவர் வராது என்பார். நமக்கு இந்த தமிழறிஞர்களோடு விவாதம் செய்ய முடியாது என்றார்கள். அன்றிலிருந்து சந்தியை மறந்து போனேன்.
அதேபோல் தமிழில் 'இ' என்ற எழுத்து சில இடங்களில் சலனமாக வரும். உதரணமாக இராமேஸ்வரம்; இதை ராமேஸ்வரம் என்றுதான் எழுதவேண்டும். 'இ' சேர்க்க கூடாது. ஆங்கிலத்தில் ஏகப்பட்ட எழுத்துக்கள் இப்படி சைலண்டாக வரும் அதையெல்லாம் பெருமையாக சொல்லும் நம்மவர்கள்: தமிழில் ஒன்றிரண்டு வருவதை கூட பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.
எப்படியோ நாளிதழ்கள் தமிழை வளர்ப்பதற்கு பதிலாக மோசமான தமிழை புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்திருக்கிறது. வார இதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் பேச்சு நடையை அப்படியே உரைநடையாக மாற்றிவிட்டார்கள். இணையங்களில் இந்த நடையை கோலோச்சுகின்றன. இது வளர்ச்சியா..? வீழ்ச்சியா..? என்பதை உங்களை போன்ற தமிழறிஞர்கள்தான் சொல்லவேண்டும். எனது எழுத்துக்களில் பிழை இருந்தாலும் பொறுத்தருளுங்கள்!
அன்புடன்,
எஸ்.பி.செந்தில் குமார்.
பதில்.
அய்யா,
வணக்கம்.
தங்கள் பின்னூட்டத்திற்கு நானும் தாமதமாக மறுமொழி அளிப்பதற்கு முதலில் என்னை மன்னியுங்கள்.
ஏனெனில் மறுமொழி நீண்டு போகும் என்பதால் அதற்குகந்த அமர்வு இப்பொழுதுதான் அமைந்தது.
இதழியலாளரான தங்களைப் போன்றவர்கள் என் தளம் வருவதும் பதிவுகளைப் படிப்பதும் உண்மையில் மகிழ்ச்சியே!
நீங்கள் பணியாற்றிய பத்திரிக்கையின் ஆசிரியர் சந்திகளை நீக்கி எழுதச் சொன்னார் என்பதையும் அதற்கு அவர் கூறிய காரணங்களையும் அன்றைய சூழலில் முற்றிலும் புறந்தள்ளி விட முடியாது.
ஒருவர் சந்தியில் வல்லினம் வர வேண்டும் என்று சொல்லட்டும்.
இன்னொருவர் அது அங்கு வரக்கூடாது என்று சொல்லட்டும்.
அதற்கான வாதங்களை அவர்கள் முன்வைக்கட்டும்.
அது மொழியியல் அறிஞர்களுக்கான வேலைதானே? மற்றவர்களைப் பார்க்கிலும் அவர்கள்தானே அதைச் சிறப்பாகச் செய்யவும் முடியும்? நிச்சயம் அது சொல்லப்படத்தான் வேண்டும்.
அவ்விவாதத்தில் பிழையின்றி எழுத விரும்புகின்றவர்கள் மௌனசாட்சியாய்க் கடைசியில் என்னதான் சொல்கிறார்கள் என்ற அம்முடிவின் மீதான தங்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளட்டுமே.
எனக்குத் தோன்றுவது இன்றைய சூழலில் பத்திரிக்கைகள் வல்லினம் இட்டு எழுதினால் என்ன இடாமல் எழுதினால் என்ன...
யாராவது அதைச் சுட்டிக்காட்டி ஒரு விவாதத்தை முன்னெடுப்பார்களா என்ன...? அன்றைய தமிழறிஞர்களின் அந்த அக்கறையை நாம் கிண்டல் என்றும், பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் புறந்தள்ளி விட்டோம். இதுதானே இன்றைய இந்நிலைக்குக் காரணம்?
அதே நேரம் ‘தி இந்து‘ போன்ற ஆங்கில இதழ்கள் பல துறைவல்லுநர்களின் கட்டுரைகளை வெளியிடும் போது அவ்வல்லுநர்கள் ஆங்கிலத்தில் செய்கின்ற பிழைகளுக்கான பிழையற்ற வடிவத்தை அடைப்புக்குறிக்குள் கொடுக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க முடியும்.
கட்டுரையாசிரியன் அந்நாளிதழின் நோக்கத்திற்கே மாறுபட்ட கருத்தொன்றை முன்வைக்கின்றபோதும் கூட அதை அச்சுமாற்றாமல் பிரசுரம் செய்ய அனுமதிக்கின்ற இதுபோன்ற பத்திரிக்கைகள் அவர்கள் செய்யும் மொழிப்பிழையைச் சுட்டிக் காட்டுகின்றன. இதுதான் அவற்றிற்கு இருக்கின்ற மொழிபற்றிய அக்கறை என்கிறேன்.
ஒரு காலத்தில் ஏதோ தேவையோடிருந்து அந்தத் தேவை தன்முக்கியத்துவத்தை இழந்த நிலையில் ஏனென்று அறியப்படாமல் இன்றளவும் தொடர்கின்ற இது போன்ற மரபுகள் தமிழில் மட்டுமல்ல..பிற மொழிகளிலும் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவை தேவையில்லை என்று புறந்தள்ளும் முன் என்ன தேவை கருதி மொழி அவற்றைத் தன் சட்டகத்தில் ஒரு பகுதியாக ஒட்டிக் கொண்டிருக்க அனுமதித்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் இன்னமும்கூட அதை மரபென்று கொண்டுதான் புதியனவற்றையும் ஏற்று மொழி பயணிக்கிறது.
இங்கு
வல்லின எழுத்து மிகுதல் மிகாதல் என்பது பற்றிய விவாதிப்பவரை இருவகையுள் அடக்கிவிடலாம்.
முதல்வகையினர், இது எங்கு வரும் வராது என்று தேடி அறிந்து எழுதச் சிரமப்படுவோர். இதைத் தவிர்த்து எழுதுவதால் கருத்தா மாறிவிடப் போகிறது என்று சொல்பவர்கள். அதனால் அதைப் பொருட்படுத்தாதவர்கள்.
“அவன் அடித்தான் என்னை. “
என்று சொல்வதில் எந்தக் கருத்தும் மாறிவிடப் போவதில்லை.
வெகுஅரிதாகப் பேச்சில் சில சமயங்களிலும் , செய்யுள் கவிதைகளிலும் இப்பயன்பாட்டைக் கண்டிருக்கலாம்.
மொழிபெயர்ப்புத் தொலைக்காட்சித் தொடர்கள் தமிழுக்கு அறிமுகமான புதிதில் இதுபோன்ற தமிழ்தான் பயன்படுத்தப்பட்டது. அப்பேச்சைக் கேட்டோர்க்குப் பொருள் புரியாமல் இல்லை.
ஆனாலும் அத்தமிழ் அத்தொலைக்காட்சித் தொடரின் பெயராலேயே “------------ தமிழ் “ எனப்பெயரிடப்பட்டுக் கேலி செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் அதை ஒட்டி ( ஓட்டி ) பிரபல இதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகள் வந்த வண்ணம் இருந்தன.
அந்தக் கேலி கிண்டலைத்தான் என்றும் நான் தேவை என்கிறேன். மொழியினைப் பிழைபடக் கையாள்வோர் இது சரி இல்லையோ என்று எண்ணவும், எது சரி, ஏன் என்று ஆராயவும் சரியான அம்மொழியின் மரபைப் பயன்படுத்தவும் துணைசெய்வதாகும் அது.
அந்தக் கேலிக்கும் கிண்டலுக்கும் பின்னால்தான் இப்போது மொழிபெயர்க்கப்படுகின்ற பெரும்பாலான நாடகங்கள் தமிழ் இயல்பிற்கேற்ப உரையாடலை அமைத்துக் கொள்கின்றன . மாறுபட்ட வாக்கிய அமைப்பைத் திருத்தி சரியான அமைப்பினைக் கற்பித்தது அக்கேலியும் கிண்டலும்தான்.
கேலியிலும் உண்டோர் நன்மை என்று இதனைச் சொல்லலாம்.
நாகரிக, அதிகம் படித்தவர்களின் தமிழென்று ஒரு தமிழ் மிகப் பிழையான உச்சரிப்புடன் இன்றைய தொலைகாட்சிகளில் பயில வழங்கப்படுகிறது. அது இத்தகு கேலிக்கும் கிண்டலுக்கும் அதிகம் உட்படுத்தப்படவில்லை. இயல்பாக அதன் விளைவுகளை அறியாமல் நாம் அதனைக் கேட்டுக் கடந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாகத் தமிழ்பேசும் சூழலற்று இவ்வூடகங்கள் வாயிலாகத் தமிழ்ச்சூழலைப் பெறும் குழந்தையின் தமிழை, உச்சரிப்பை இவர்கள் தங்களை அறியாமலேயே கெடுக்கிறார்கள்.
இதுபற்றியெல்லாம கவலைப்படுவதற்கு நமக்கெங்கே நேரம் இருக்கிறது?
இதைப்போல்தான் நாம் மொழியில் செய்யும் இது போன்ற எழுத்துப் பிழைகளை வெகுவியல்பாக ஏற்கவும் பயன்படுத்தவும் கற்றுக் கொண்டுவிட்டோம். அப்படிச் செய்தற்கு நம் வகுப்பறைகளும் அச்சு ஊடகங்களும் ஆற்றிய பங்கை மறுத்துவிட இயலாது.
“ காரிகை கற்றுக் கவிபாடுவதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பது நல்லது “ எனத் தமிழில் வழங்கும் பழமொழியைப் போலத்தான், “ஒற்று மிகும் இடங்கள்“ பற்றிய பட்டியலை இலக்கண விதிகளை வைத்துக் கொண்டு வரிவரியாய்ப் பிழைநீக்கி எழுதுவது என்பது.
அதற்குப் பதில் பேசாமல் இருக்கலாம்.
ஆனால் ஒருமொழியைத் தாய்மொழியாய்க் கொள்ளும் குழந்தை இலக்கணம் படித்து மொழியைக் கற்பதில்லை என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம்.
வாக்கிய அமைப்பு, உச்சரிப்பு, சொல்லாட்சி இவற்றை அக்குழந்தை தான் வாழும் சூழல்களில் இருந்தே பெறுகிறது. அச்சூழலில் அம்மொழி எப்படி இருக்கிறதோ அதையே குழந்தை உள்வாங்குகிறது. அதுவே அக்குழந்தையிடமும் பிரதிபலிக்கிறது.
எழுத்தாட்சியும் அதைப்போன்றதுதான். படிக்கக் கற்கும் குழந்தை தன்னை அறியாமலேயே வாக்கியங்களைச் சந்திகளை ஒருமை பன்மையை மயங்கொலியை இவற்றின் மாற்றத்தால் நிகழும் வேறுபாட்டை அவதானிக்கிறது.
.
தானறியாமல் கற்கும் இதுபோன்ற சூழலில் பெற்ற அறிவு தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது.
அக் குழந்தையின் சூழலில் மரம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தாமல் அதைக் குறிக்கக் ..“கல்“ என்ற சொல் பயன்பட்டிருக்குமானால் அக்குழந்தை மரத்தைக் கல் என்றே சொல்லும்.
எனவேதான் இந்தச் சூழல்கள் பிழையற்ற மொழிமாதிரிகளைக் காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுகின்றன என்றேன்.
அப்படி உள்வாங்குவதன் மூலம்,
“வீட்டுக்குப் போகனும்“ என எழுதும் குழந்தைக்கு ஏன் இருசொற்களுக்கு நடுவில் ‘ப்‘ வர வேண்டும் என்கிற இலக்கண விதிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிற்காலத்தில் தேவை இருந்தால் அது இதனைத் தெரிந்து கொள்ளட்டும்.
இந்தப் பயன்பாட்டின்போது, அக்குழந்தைக்கு ஒருபோதும் நிலைமொழி இறுதியில் இவையிவை வந்து வருமொழி முதலில் வல்லினம் வந்தால் வல்லினம் மிகும் அல்லது மிகாது என்கிற விதி தெரிவதில்லை.
இப்படித்தான் வரவேண்டும். இப்படி வரக்கூடாது என்று தன்வாசிப்பு அனுபவத்தில் இருந்து அது கற்றுக் கொள்கிறது. அதுவே நிலையானது மற்றும் இலக்கண விதிகளில் இருந்து வழித்தெடுக்கும் அறிவினைக்காட்டிலும் வலிமையானது.
இதைச் செய்வதில்தான் பத்திரிக்கைகளின் துணை அவசியமானதென்றேன்.
இன்னொரு மொழியைப் பார்த்துப்பார்த்துக் கவனமாய் எழுதும்நாம் அதில் தவறுசெய்தால் உடனே திருத்தும், பின் எப்போதும் அப்பிழைகள் நேராமல் தவிர்க்க முயலும் நாம், ஏன் நம்மொழியில் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்றால் அது பற்றிய அலட்சியத்தை நம்முடைய தற்போதைய சூழல்களே பெரிதும் கற்பித்திருக்கின்றன என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.
எனவே பெரிதும் தாங்கள் காண்கின்ற ஊடக எழுத்து மொழியின் இவ்வியல்புதான், பிழையாக இருந்தால் என்ன தமிழ்தானே…. என்ற இந்த அக்கறையின்மையாய், அதில் பழகி எழுதும் எழுத்தாளர்களைப் பிழை என்பதை அறியவிடாமல் மொழியைப் பயன்படுத்தக் காரணமாய் அமைகிறது. இருமொழித்திட்பம் பெற்ற தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் தவறற்று எழுதும் சூழலையும், அம்மொழியின் நல்ல மாதிரிகளும், அம்மொழியில் பிழை என்பது சமுதாயத்தால் எவ்வாறு நோக்கப்படும் என்கிற மன உணர்வுமே உருவாக்குகின்றன. அவர்களே தமிழில் பிழைகளைப் பொருட்படுத்தாமைக்கும் இவையே காரணம்.
இரண்டாம் வகையினர்,
இயல்பிலேயோ, இலக்கணம் அறிந்தோ பெரிதும் தவறின்றி எழுதக் கூடியவர்கள். இவர்களது கருத்து “கருத்துக்குச் சேதமில்லாமல் இருக்கும் இடத்தில் வல்லினம் வருதல் - வராமை குறித்த கறார்த்தனம் வேண்டியதில்லை என்பது.“
இக்கருத்தியலின் பின்புலம், தமிழில் எழுதுகின்றவர்களுக்குப் பெரிதும் நேரும் இடர்ப்பாட்டின் வெம்மையைத் தணிப்பதாய் அமைகிறது.
ஏனெனில் பெரும்பாலோனார் தவறின்றி எழுதுமிடத்து இக்கருத்துத் தன்னளவில் மதிப்பிழக்கிறது.
இந்தச்
சந்திகள்
என்பதில்,அதாவது
வல்லினம்
மிகுதல்
மிகாதல்
என்பதில்,
“ காலை தூக்க மாத்திரை சாப்பிட்டான் “ ( காலையில் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டான் )
“ காலைத்தூக்க மாத்திரை சாப்பிட்டான் “( தூக்க முடியாத காலை தூக்க )
என்று பொருளளவிலான வேறுபாடு வருமிடத்து அதனைப் பயன்படுத்தலாம் என்பது இவர்களின் பொதுவான பரிந்துரையாய் இருக்கிறது.
ஆனால், இச்சொற்றொடர் சொல்லப்படும் இடம் சார்ந்து வல்லினம் வந்தாலும் வராவிட்டாலும் பொருள் புரிந்து கொள்ளப்பட்டுவிடும். இன்று நாம் பயன்படுத்தக்கூடிய நிறுத்தற்குறிகள் இவ்வேலையை எளிதாகச் செய்துவிடும்.
காலை, தூக்க மாத்திரை சாப்பிட்டான்.
என்பதில் வரும் அரைப்புள்ளியை
காலைதூக்க, மாத்திரை சாப்பிட்டான் என்றிட்டால் போதுமானது.
அதனால்
பொருள் வேறுபடும் இடத்து மட்டும் வல்லின வருகைத் தவிர்ப்பை வரவேற்கலாம் என்பதிலும் சொல்லும் படியான நியாயங்கள் இல்லை.
நாம் கவனத்தில் கொள்ள வேண்டி விடயம் மொழியின் மரபும் அதனைச் சார்ந்து அமைகின்ற அதன் இயல்புகளையுமே!
இந்தச் சந்திகள் வல்லினம் வரும் இடங்களில் மிகுகின்றன மிகாமல் இருக்கின்றன என்பதற்கு இப்பொருள் வேறுபாட்டைத் தவிரவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
முதலாவது,
தமிழில் சொற்கள் தொடரும்போது, இயல்பாக ஏற்படக் கூடிய நிறுத்தம். ஒரு விநாடிக்கும் குறைவான இடைவெளியின் அளவாக இருக்கிறது. இலக்கணங்கள் இதனை விட்டிசை என்கின்றன.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
என்று சொல்லும் போது அந்த விட்டிசை,
பாலை / பாடிய / பெருங்கடுங்கோ ( பாலை திணையில் பாடிய )
என்று ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும் விநாடிக்கும் குறைவான நேரத்தில் மூன்றிடங்களில் நிகழ்கிறது என்பதை நாம் சொல்லிப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இதே தொடரை, வல்லினம் மிகுத்து,
.
பாலைப் பாடிய பெருங்கடுங்கோ
என்று சொல்லும் போது அதே விட்டிசை,
பாலைப்பாடிய / பெருங்கடுங்கோ ( குடிக்கும் பால்பற்றிப் பாடிய ) என்று
பாலைப்பாடிய என்கிற இருசொற்கள் சேர்ந்து ஒருசொல்நீர்மைத்தாகவும், பெருங்கடுங்கோ என்பதை ஒரு சொல்லாகவும் கொள்ளுமாறு அமைகிறது.
இரண்டிற்கும் உள்ள பொருள் வேறுபாடு எழுதும் போது இந்த வலிமிகுதல்/மிகாமையிலும் , பேசும் போது இந்த விட்டிசையிலும் நிகழ்கிறது.
எனவே சில இடங்களில் வெறும் பொருள் மாற்றம் மட்டும்தான் இவ்வல்லினம் மிகுதல் மற்றும் மிகாமைகள் என்பதற்குள் அடங்கும் என்ற அதன் மொழிப்பயன்பாட்டுப் பரப்பைக் குறுக்கிவிட முடியாது என்பது ஒன்று.
இன்னுமொன்று, தமிழோடு நெருங்கிய தொடர்புடைய வர்க எழுத்துகளை உடைய பிற மொழிகளில் உள்ள சொற்கள் தமிழுக்கு வரும்போது அவற்றின் வர்க எழுத்துகளுக்கும் தமிழின் வல்லெழுத்துகளுக்கும் நேர்கின்ற உறழ்ச்சி.
சான்றாக வடமொழியில்,
pa , pha , ba , bha என “ப“ என நாம் கொள்ளும் வல்லினத்திற்கு நான்கு ஒலியன்கள் உள்ளன. தமிழில் இது மொழி முதலாக வரும் போது, pa என்றே போதுவாக உச்சரிக்கப்படுகிறது.
“ காலை தூக்க மாத்திரை சாப்பிட்டான் “ ( காலையில் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டான் )
“ காலைத்தூக்க மாத்திரை சாப்பிட்டான் “( தூக்க முடியாத காலை தூக்க )
என்று பொருளளவிலான வேறுபாடு வருமிடத்து அதனைப் பயன்படுத்தலாம் என்பது இவர்களின் பொதுவான பரிந்துரையாய் இருக்கிறது.
ஆனால், இச்சொற்றொடர் சொல்லப்படும் இடம் சார்ந்து வல்லினம் வந்தாலும் வராவிட்டாலும் பொருள் புரிந்து கொள்ளப்பட்டுவிடும். இன்று நாம் பயன்படுத்தக்கூடிய நிறுத்தற்குறிகள் இவ்வேலையை எளிதாகச் செய்துவிடும்.
காலை, தூக்க மாத்திரை சாப்பிட்டான்.
என்பதில் வரும் அரைப்புள்ளியை
காலைதூக்க, மாத்திரை சாப்பிட்டான் என்றிட்டால் போதுமானது.
அதனால்
பொருள் வேறுபடும் இடத்து மட்டும் வல்லின வருகைத் தவிர்ப்பை வரவேற்கலாம் என்பதிலும் சொல்லும் படியான நியாயங்கள் இல்லை.
நாம் கவனத்தில் கொள்ள வேண்டி விடயம் மொழியின் மரபும் அதனைச் சார்ந்து அமைகின்ற அதன் இயல்புகளையுமே!
இந்தச் சந்திகள் வல்லினம் வரும் இடங்களில் மிகுகின்றன மிகாமல் இருக்கின்றன என்பதற்கு இப்பொருள் வேறுபாட்டைத் தவிரவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
முதலாவது,
தமிழில் சொற்கள் தொடரும்போது, இயல்பாக ஏற்படக் கூடிய நிறுத்தம். ஒரு விநாடிக்கும் குறைவான இடைவெளியின் அளவாக இருக்கிறது. இலக்கணங்கள் இதனை விட்டிசை என்கின்றன.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
என்று சொல்லும் போது அந்த விட்டிசை,
பாலை / பாடிய / பெருங்கடுங்கோ ( பாலை திணையில் பாடிய )
என்று ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும் விநாடிக்கும் குறைவான நேரத்தில் மூன்றிடங்களில் நிகழ்கிறது என்பதை நாம் சொல்லிப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இதே தொடரை, வல்லினம் மிகுத்து,
.
பாலைப் பாடிய பெருங்கடுங்கோ
என்று சொல்லும் போது அதே விட்டிசை,
பாலைப்பாடிய / பெருங்கடுங்கோ ( குடிக்கும் பால்பற்றிப் பாடிய ) என்று
பாலைப்பாடிய என்கிற இருசொற்கள் சேர்ந்து ஒருசொல்நீர்மைத்தாகவும், பெருங்கடுங்கோ என்பதை ஒரு சொல்லாகவும் கொள்ளுமாறு அமைகிறது.
இரண்டிற்கும் உள்ள பொருள் வேறுபாடு எழுதும் போது இந்த வலிமிகுதல்/மிகாமையிலும் , பேசும் போது இந்த விட்டிசையிலும் நிகழ்கிறது.
எனவே சில இடங்களில் வெறும் பொருள் மாற்றம் மட்டும்தான் இவ்வல்லினம் மிகுதல் மற்றும் மிகாமைகள் என்பதற்குள் அடங்கும் என்ற அதன் மொழிப்பயன்பாட்டுப் பரப்பைக் குறுக்கிவிட முடியாது என்பது ஒன்று.
இன்னுமொன்று, தமிழோடு நெருங்கிய தொடர்புடைய வர்க எழுத்துகளை உடைய பிற மொழிகளில் உள்ள சொற்கள் தமிழுக்கு வரும்போது அவற்றின் வர்க எழுத்துகளுக்கும் தமிழின் வல்லெழுத்துகளுக்கும் நேர்கின்ற உறழ்ச்சி.
சான்றாக வடமொழியில்,
pa , pha , ba , bha என “ப“ என நாம் கொள்ளும் வல்லினத்திற்கு நான்கு ஒலியன்கள் உள்ளன. தமிழில் இது மொழி முதலாக வரும் போது, pa என்றே போதுவாக உச்சரிக்கப்படுகிறது.
அங்குள்ள சொற்களை நாம் தமிழில் அப்படியே பெயர்க்கும்போது ( தற்பவம்), ப என்கிற ஓர் எழுத்தையே பயன்படுத்துகிறோம்.
பக்தி ( Bakthi ) என்னும் சொல் வடமொழியிலிருந்து அப்படியே தமிழில் தற்பவமாய்ப் பரவலாய் வழங்கப்பட்டுவருவது.
இந்தச் சொல்லைத் தமிழிற் கையாளும் போது,
அவனுக்கு பக்தி முத்திப் போச்சு என்கிறோம்.
அவனுக்கு Baக்தி முத்திப் போச்சு என்னும் போது நாம் “ அவனுக்கு பக்தி “ என்பதற்கிடையில் வல்லினத்தைப் பயன்படுத்துவதில்லை.
ஏனெனில் அவனுக்குப் Baக்தி என உச்சரிப்பது நம்மொழியின் இயற்கைக்கு மாறானதாகவும் மிகச் செயற்கையானதாகவும் அமைந்துவிடுகிறது.
அல்லது ,
அவனுக்குப் பக்தி முத்திப்போச்சு
அவனுக்குப்
paக்தி
முத்திப்
போச்சு
என்று
சொல்வோமானால்
வல்லின
வரவிற்கேற்ப
வடமொழி
எழுத்தின்
ஒலி
தமிழொலிப்பு
முறை
பெற்று
ஒலிக்கப்படல்
இயற்கையாய்
அமைகிறது.
எம்மொழியானாலும் வேற்றுமொழிச் சொற்களைத் தன்வயப்படுத்தித் தழுவும்போது தன் மரபின்படிதான் அது உயிர்ப்பூட்டிச் சேர்க்கிறது.
காடு என்பது காட்டுக்கு என்று ஆவதைப் போல்
நாடு என்பது நாட்டுக்கு என்று ஆவதைப் போல்
ரோடு என்பது ரோட்டுக்கு என்று ஆகும்.
Road என்னும் ஆங்கிலச்சொல் வேற்றுமை உருபுகளை முன்னொட்டாய்த் தழுவுதலே வேண்டும். ஆனால் இங்குத் தமிழ், ரோட்டைத் தன்வயமாக்கிவிட்டது.
இதைப் போன்றதுதான் ஒரு மொழி வேற்றுமொழிகளை வெகுஇயல்பாக உட்செரித்தல் அதனதன் மரபிற்கேற்ப நிகழும்.
ஆங்கிலத்தில் கூட,
எந்தப் பிளாட்பாரத்தில வண்டி நிக்கும் என ஒற்று மிகுத்துக் கேட்பவன், எந்த பஸ் (Bus) திருச்சிக்குப் போகும் என்னும் இடத்தில் ஒற்று மிகுத்து உச்சரிப்பதை இயல்பாகவே தவிர்த்துவிடுகிறான்.
பஸ் என்பதை ஒருவேளை அவன் Paஸ் என உச்சரித்தால் அங்கு ஒற்று மிகுதல் சாத்தியமாகலாம்.
எனவே மொழிக்கு உச்சரிப்பே உயிர்மூலம் என்று கொள்வேமேயானால் அவ்வுயிரை நிலைநிறுத்தும் காரணிகளில் ஒன்றாக இந்த வல்லின மிகுதல் மிகாமைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
மொழியை எப்படியும் உச்சரிக்கலாம் எப்படியும் எழுதலாம் என்பதை ஏற்காதவர்கள் இதன் பயன்பாட்டை அவசியமன்றென்று எளிதில் புறந்தள்ளிவிடலாகாது.
எனவே வல்லினம் மிகுதல் மிகாதல் என்பது நம் தமிழின் “மொழிபுணர் இயல்பு.“ அதைக் கடினமாய் இருக்கிறது என்றோ குழப்பமாய் இருக்கிறது என்றோ கடந்து போகின்றவர்கள் குறித்த கவலையைவிடவும் அதைச் சுட்டிக் காட்டி இது தவறு , இது சரி என்று சொல்லும் தமிழாசிரியர்கள் குறைந்துவிட்டனரே என்பதுதான் எனது வலி மிகுந்த ஆதங்கமாய் இருக்கிறது.
தமிழ் பேசும் எனக்குத் தமிழ் பற்றிய பதிவுகளை மட்டும் எழுதும் எனக்கு இங்கு “வலி மிகுதல்” நியாயம் என்றே படுகிறது.
வல்லினம் மிகுந்தால் என்ன மிகாவிட்டால் என்ன என்று ஒரு நிலைப்பாட்டைக் கொள்ளும் முன்பு ஏன் இது போன்ற மரபுகள் நம் மொழியில் இருக்கின்றன என்பதற்கான அடிப்படைகளை ஆராய வேண்டும். எவ்வளவோ சொற்களைத் தமிழ் இழந்திருக்கிறது. பழைய சொற்களின் பொருளை மாற்றி வைத்திருக்கிறது. புதிய சொற்களைத் தன்னுள் புக அனுமதித்திருக்கிறது.
வாழும் மொழியின் இயல்பு அது.
ஆனால் மொழியின் அடிப்படைகள், உச்சரிப்பு, சொற்றொடர் அமைப்பு இவைகளில் மாற்றங்களை அனுமதிக்கும்முன் அதன் சாதக பாதகங்கள் நன்காராயப்பட வேண்டும்.
பல நேரங்களில் மொழியின் சில கூறுகளைப் பயன்படுத்துவது கடினமாகலாம். ழ என்கிற எழுத்து உச்சரிப்பைப் போல. அதற்காக அதை விட்டுவிடலாகாது.
அதைப் பரவலாகக் கையாள்வதில் உள்ள தடைகளைச் சிரமங்களை விலக்கும் வழிமுறைகளை மொழியாசிரியர்கள் இனம் காண வேண்டும்.
எளிமைப்படுத்தியும் இனிமைப்படுத்தியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். நாப்பழக்கம் பேச்சென்றால் எழுத்தின் தவறின்மை இலக்கணத்தைக் கற்பது என்பதைவிட ஒவ்வொருவரின் மனப்பழக்கத்திலிருந்தே வர வேண்டும்.
நல்ல தமிழாசரியர்கள் அதற்குத் துணைநிற்க வேண்டும்.
பத்திரிக்கை போன்ற மொழியினால் பிழைக்கும் ஊடகங்கள் அதைப் பிழையில்லாமல் பயன்படுத்துவது தங்களின் பொறுப்பு என்பதை உணர வேண்டும்.
பொதுவாக எழுதுபவர்கள் எல்லாருக்குமே தவறில்லாமல் எழுத வேண்டும் என்கிற உணர்வு உள்ளோடிக்கொண்டுதான் இருக்கும். அதற்கான உதவிகள் செய்பவர்களை அவர்கள் வரவேற்க என்றும் தயாராகவே இருப்பர்.
எனவே நம் பக்கம் எத்தனை பேர் என்பதைவிடவும் நம் பக்கம் நியாயம் இருக்கிறதா என்பதையே மனதிற் கொள்ளவேண்டும். அதற்காகக் குரலுயர்த்த வேண்டும்.
இறுதியாய்ப் பேச்சு நடையைத் தமிழில் பயன்படுத்துதல் குறித்த உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
தமிழில் பேச்சு மரபும் எழுத்து மரபும் தம்மில் வேறுபட்டவை.
ஒருவரின் பேச்சினை எடுத்துக் காட்டும் இடத்தில் பேச்சை அப்படியே எடுத்துக் காட்டுவதில் தவறில்லை என்பதே எனது நிலைப்பாடாக இருக்கிறது மற்ற இடங்களில் எழுதுவதற்கென்று இருக்கக் கூடிய பொதுத்தமிழ் அனைவர்க்குமான புரிதலை எளிதாய்த் தரும் என்பதால் அதனைப் பயன்படுத்தலே நன்றென நினைக்கிறேன்.
நிறைவாய்த் தமிழறிஞன் என்றெல்லாம் என்னை மேலேற்றிவிட வேண்டாம்.
தமிழைப் பயன்படுத்துகின்ற எல்லார்க்கும் அது பற்றிக் கருத்துக் கூற உரிமை இருக்கிறது.
சரி என்றும் தவறென்றும். வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் கொள்வதற்கு இவை எனக்கு நான் கற்பித்துக்கொள்கின்ற நியாயங்கள் அவ்வளவே!
அது வேறுபடுவது இயற்கைதானே!
மீண்டும் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
----------------------------------------------------------------------------------------------------------------------
இக்கேள்வியையும்
பதிலையும் பகிரக் காரணம், இன்று தமிழாசிரியர் குழாத்தில், ‘வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் என்றெல்லாம் தமிழில் பழைய பஞ்சாங்கங்களைப் பாடிக்கொண்டிருப்பதை விடுத்து எளிய முறையில் இனிமேலாவது புதிய தமிழிலக்கணம் எழுதப்பட வேண்டும்!’
என்றெழுந்த விவாதம்தான்.
தமிழிலக்கணம் எளிய முறையில் எழுதப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தமிழில் வல்லினம் மிகுதல் குறித்தும் மிகாமை குறித்துமான புரிதல் அற்றுக் கருத்துச் சுதந்திரத்தை மட்டுமே வலியுறுத்திய அம்மொழியாசிரியரின் தரப்பு வாதங்கள் வலுவடைந்து கொண்டிருந்ததைப் பொறுக்க மாட்டாத பரபரப்பு உந்தித்
தள்ள, அதில் பங்கேற்று, வழக்கம் போலவே, உமி குத்திக் கை சலித்ததன்
முடிவில், “தமிழ் என்பதே பழையதுதான் ஐயா! மாணவர்கள் அதையும் கற்கச் சிரமப்படுகிறார்கள்.
எனவே அதையும்தான் தூக்கி எறிந்துவிடலாம்” என்றுவிட்டேன் நான்.
மிகுந்த கோபத்துடன், விவாதத்திற்குச் சற்றும் தொடர்பற்ற நேரடித் தாக்குதலாய் அமைந்த சொல்லாடலைத் தொடர்ந்து. “உன்
துறைக்கு நாங்கள் வருகிறோமா? ‘உனக்குத் தமிழ்’ பற்றி என்ன தெரியும்? போ...போய் உன் வேலையைப் பார்
” என்றார் விவாதத்தைத் தொடங்கிய அந்த மூத்த தமிழ் (?) ஆசிரியர்.
“மன்னியுங்கள்.! எனக்கு அதிகம்
தெரியாவிட்டாலும், ‘உனக்கும் தமிழுக்கும்’ இடையில் வலி மிகும் எனும் அளவிற்குத் தெரியும்
ஐயா!” என்று சொல்லி அங்கிருந்து எழுந்து வந்துவிட்டேன்.
உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனதினிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Tweet |
தமிழை நேசிக்கும் தமிழறிவு மிகுந்த தாங்கள் தமிழாசிரியர் ஆகாமல் போனது விநோதம்தான்! அந்த ஆசிரியருக்கு சரியான மூக்குடைப்பு? வலிமிகும் மிகா இடங்களைப் பற்றி சிறப்பான விளக்கம்! நன்றி!
ReplyDeleteவணக்கம்.
Deleteதங்களின் உடனடி வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.
செய்தித் தாள்கள், வாரப் பத்திரிகைகளில் வரும் தவறுகள் பற்றி பேராசிரியர் நன்னன் 'மக்கள் தொலைகாட்சி'யில் ஒரு நிகழ்ச்சி வழங்கிக் கொண்டிருந்தார். வார்த்தைகளை முன் பின்னாய்ப் போடுவதில் அர்த்தமே மாறும் வாக்கியங்கள் முதல், ஒற்றுப் பிழை, சந்திப் பிழை பற்றி எல்லாம் சுவாரஸ்யமாய்ச் சொல்லிக் கொண்டிருந்த அந்த நிகழ்ச்சி இப்போது அந்தத் தொலைக்காட்சியில் வருவதுபோலத் தெரியவில்லை!
ReplyDeleteவணக்கம்.
Deleteபொதுவாக இவற்றைக் கற்பிப்பதைவிட இயல்பாகக் கேட்பதில் இருந்தும் கற்பதில் இருந்தும் நாம் அறியவேண்டும்.
அதற்கான சூழல் தமிழில் இல்லாததே கொடுமை.
நன்றி ஸ்ரீ.
தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
ReplyDeleteமகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்
தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் என் வாழ்த்துதல்கள் உரித்தாகட்டும் ஐயா.
Deleteமிக்க நன்றி.
தமிழ்ப் பத்திரிகைகளைப் படிக்கும்போது இப்படி சந்திப்பிழையோடு எழுதுகிறார்களே என்று எண்ணுவேன். ஏதோ அச்சுப்பிழை என்றே நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் அவர்கள் அப்படித்தான் எழுதவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள் என்பதனை, பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.செந்தில்குமார் கேள்வியின் வழியே தெரிந்து கொண்டேன். சிரமம் பாராது அவருக்கு நீங்கள் அளித்த விளக்கம் எல்லோராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று. பதிவாகத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதமிழ் பற்றி பேசுவதற்கு தமிழ்த்துறை நண்பர்களுக்கு மட்டுமே உரிமை அல்லது அவர்கள்தான் AUTHORITY என்று நினைத்துக் கொள்வது சரியான கருத்து கிடையாது.
எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் ஐயா.
Deleteஅச்சுப்பிழை என்பது இதனின் வேறானது. இதனைப் பொருட்படுத்தாமைதான் காரணம்.
எனக்குள்ள ஆதங்கம் இருமொழி வழங்கும் நம் நாட்டில் இன்னொரு மொழியின்மேல் காட்டப்படுகின்ற அக்கறை, நம்மொழியின் மேல் காட்டப்படுவதில்லையே என்பதே!
இதனால் நம் மொழி பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மையை நமக்கு நாமே உருவாக்கிவிடுகிறோமோ என எண்ணத் தோன்றுகிறது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
தங்களின் உணர்வுகளை மிகவும் மதிக்கிறேன் ஐயா...
ReplyDeleteதமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வலைச்சித்தரே!
Deleteதங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனது வாழ்த்துகள்.
//அந்தப் பதிவினைத்தான் // என்பதில் உள்ள இணைப்பில் கடைசி எழுத்து "l" மட்டும் விடுபட்டு உள்ளது... அதை சரி செய்தால் வாசிக்காதவர்கள் வாசிக்க எளிதாக இருக்கும்... நன்றி...
ReplyDeleteபிழையைச் சுட்டியமைக்கு மிக்க நன்றி.
Deleteஅப்பொழுதே திருத்திவிட்டேன்.
இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோ
ReplyDeleteதம +1
தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய நல்வாழ்த்துகள் சகோ.
Deleteநன்றி.
வணக்கம்
ReplyDeleteஐயா
தாங்கள் சொல்லிய விளக்கம் மிகச் சிறப்பு.. நல்ல எடுத்துக்காட்டுக்கள் மூலம் விளக்கியுள்ளீர்கள்... நான் முழுமையாக படித்து மகிழ்ந்தேன்.. வாழ்த்துக்கள் ஐயா த.ம 5
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள்.
இலக்கணத் தமிழில் இதழ்களோ, கட்டுரைகளோ, பொதுஜனப் பத்திரிகைகளில் வரவேண்டிய அவசியமில்லை. இது வாசகனை அந்நியப்படுத்திவிடும். அதுக்காக, சந்திப்பிழைகளோடோ அல்லது வல்லின மெல்லினத் தவறுகளோடு எழுதுவது, மொழிக்குச் செய்யும் இழுக்கு. தமிழில் படித்த எனக்கே எழுதும்போது சில சமயம் இதற்கு சந்தி உண்டா கிடையாதா, இங்கு வல்லின றகரமா அல்லது மெல்லின ரகரமா என்று சந்தேகம் வருகிறது. இதழ்களைப் படிக்கும் இந்தக்காலத்தவர்க்கு சந்திப்பிழையோடு இருந்தால் தவறல்லவா?
ReplyDeleteவணக்கம் திரு நெல்லைத் தமிழன்.
Deleteஇலக்கணத் தமிழ் என்று தனியாக இல்லை. நாம் பேசுவதிலும் எழுதுவதிலும் உள்ள ஒழுங்குதான் இலக்கணம். ஒழுங்குகள் மீறப்பட்டு, அது வழக்காகிவிடுகிறபோது அதை விதிவிலக்கு என்றும் புறனடை என்றும் மொழி உட்செரிக்கிறது.
ஒருவேளை அந்தத் தமிழாசிரியர் சொல்லியதைப் போலவே நாளைய தமிழ் இலக்கணம் வல்லினம் மிகுதலின்றி வடிவமைக்கப்படலாம். ஏற்கனவே பரவலாக்கப்பட்ட ஒரு வழக்கை ஏற்க வேண்டிவரலாம். ஆனால் ஈராயிரம் ஆண்டு கால இலக்கியப் பழமையுள்ள ஒரு மொழியின் மீள்வாசிப்பிற்குத் தேவைப்படும் இதன் நுட்பங்களை மாணவர்க்குக் கற்பிக்க வேண்டிய ஒரு மொழியாசிரியர் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னால் தாள முடியவில்லை.
““““தமிழில் படித்த எனக்கே எழுதும்போது சில சமயம் இதற்கு சந்தி உண்டா கிடையாதா, இங்கு வல்லின றகரமா அல்லது மெல்லின ரகரமா என்று சந்தேகம் வருகிறது.““““““
இதற்கு நானும் விதிவிலக்கல்ல.
இதையே மொழிபற்றிய உங்களின் அக்கறை என்பேன்.
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வார்த்தைகள் பலவென்றால் தவறுகளும் பல ஏற்பட வாய்ப்புண்டு. ‘நிகழ்ந்த செயலினை நினைத்தாங்கு பேசாதே; பிளந்தோடிய நீரினை மீளப்பெற நேராதே’ என்று கூறினாலும், அச்செயலினைச் செம்மையுடன் செய்வதே ஏற்புடையதென்ற தங்கள் கருத்தை நானும் தொடர விரும்புகிறேன் ஐயா. சுட்டிக் காட்டும் தவறுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அது நம்மைச் செம்மையுறச் செய்யும் என்பதில் ஐயமில்லை. விரிவான பதிலில் வீரியம் உள்ளது. வலியில்லை.
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய, வளமான, நலமான, மகிழ்வான தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
ஐயா நலம்தானே!
Deleteதங்களின் வருகைக்கும் ஆதரவான கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனதினிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘இது ஒரு வலி மிகுந்த பதிவு’தான். ‘உனக்குத் தமிழ்’ பற்றி என்ன தெரியும்? என்று கேட்டவருக்குத் தங்களின் தமிழ்ப்பற்று... தெரியவில்லை...!
‘ஒருமொழியைத் தாய்மொழியாய்க் கொள்ளும் குழந்தை இலக்கணம் படித்து மொழியைக் கற்பதில்லை என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம்.
வாக்கிய அமைப்பு, உச்சரிப்பு, சொல்லாட்சி இவற்றை அக்குழந்தை தான் வாழும் சூழல்களில் இருந்தே பெறுகிறது. அச்சூழலில் அம்மொழி எப்படி இருக்கிறதோ அதையே குழந்தை உள்வாங்குகிறது. அதுவே அக்குழந்தையிடமும் பிரதிபலிக்கிறது.’
அதனால் நாம் எழுதுகின்ற பொழுது வலி மிகும் இடங்களையும் வலி மிகா இடங்களையும் பிழையின்றி எழுத வேண்டும். அப்பொழுதுதான், வரும் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியைச் செம்மையாய் எடுத்துச் செல்கிறோம் என்ற கடப்பாடு நமக்கு உண்டு என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். யாருக்கும் இதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
நன்றி.
த.ம.6
ஐயா,
Deleteவணக்கம். விவாதக் களத்தில் நீங்கள் இருந்திருந்தால் நிச்சயம் விவாதம் சூடுபிடித்திருக்கும். இடுக்கண் களையப்பட்டிருக்கும்.
தமிழ்ப்பற்று உள்ளதால் நாம் சந்திக்கும் பிரச்சினை இன்று நேற்று தொடங்கியதா ஐயா?
ஒருவகையில், அறியாமல் எதையும் சொல்லக் கூடாது என அறிய முயல்வதுதானே இத்தகு வாசிப்பிற்கும் காரணம்.
“வரும் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியைச் செம்மையாய் எடுத்துச் செல்கிறோம் என்ற கடப்பாடு நமக்கு உண்டு ”
இதைத்தானே நாம் அவர்களிடம் எதிர்பார்க்கிறோம்?
தங்களின் வருகைக்கும் உடன்பாடான கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
தமிழர் தந்தை என்றழைக்கப் படுபவரால் தொடங்கப் பட்ட தினசரியிலா இந்த தமிழ் விரோத போக்கு ?
ReplyDeleteஅவர் முன்பு “ பணியாற்றினேன் ” என்று இறந்தகாலத்தில் சொல்லி இருக்கிறார் பகவானே!
Deleteஅவர் தற்போது பணியாற்றுவதுதான் நீங்கள் குறிப்பிடும் இதழ் என்றாலும் எவ்விதழும் இது குறித்துப் பெரிதாய்க் கவலை கொள்வதில்லை என்பதே உண்மை!
This comment has been removed by the author.
ReplyDeleteபேசும் போது வலி (தேவை)இல்லை என்றாலும்
ReplyDeleteஎழுதும் போது வலி வந்து தான் ஆக வேண்டும்.
மிக நல்ல பதிவு. நன்றி அய்யா.
வணக்கம் கவிஞரே!
Deleteநீண்ட நாள் கழித்து இத்தளத்திற்கு வரும் தங்களின் வருகையும் கருத்தும் பாராட்டும் காண மகிழ்வு !
தங்களின் இரட்டுறமொழிவினை ரசித்தேன்.
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
வணக்கம். நடைமுறை வாழ்விற்கேற்ப தமிழில் மாற்றம் வேண்டும் என்பது குறித்து எனது அகழ்வு வலைப்பூவில் கால வகையினானே-2 எனும் தலைப்பில் பதிவிட்டதை, நேரம் இருப்பின் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeletehttp://akazhvu.blogspot.in
அன்புடன்
மதிவாணன்.கோ.
ஐயா வணக்கம்.
Deleteமுதன்முதலாக இத்தளம் வந்து கருத்திட்டிருக்கும் உங்களை வரவேற்கிறேன்.
தாங்கள் சுட்டியுள்ள தங்களின் பதிவினைப் படித்தேன்.
நம்மொழியின் சொற்களை எழுத மரபில் உள்ள எழுத்துகளே போதுமானவை என்பதே என் கருத்து. எனவே புதிய வரிவடிவங்களைச் சில குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் தமிழில் இணைக்கலாம் என்ற தங்களின் பதிவின் சாரத்தைப் பொருத்தவரை, என்னால் அதனோடு உடன்பட முடியவில்லை.
இது எனது பிற்போக்குத்தனமென்றால் அவ்வாறே இருந்துவிட்டுப் போகட்டும்.
மன்னிக்க!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பதிவுதான் முதன்முதலாக என்னை தங்கள் தளம் பக்கம் இழுத்து வந்த பதிவு. தங்களின் பின்னூட்டத்திற்கு விரிவான ஒரு கருத்துரை தர நினைத்திருந்தேன். அப்போது தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் முடியாமல் போய்விட்டது. முதலில் தங்களின் விரிவான அற்புதமான அந்த விளக்கத்திற்கு நன்றி!
ReplyDeleteமுன்பைவிட இப்போது பல மாற்றங்கள் பத்திரிகைகளில் ஏற்பட்டுள்ளன. சந்திகள் வரலாம் என்ற நிலையும் வந்துவிட்டது. ஆனால், பல ஆண்டுகளாகவே சந்தியை சட்டை செய்யாமல் எழுதி பழகிவிட்டதால் சந்தி சிக்கல் முடிந்த பாடில்லை. இனி வரும் தலைமுறையில் தீரும் என்று நம்புவோம். ஏனென்றால் முந்தைய தலைமுறையைவிட இந்த தலைமுறை இளைஞர்கள் பலர் தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பிற மொழிச் சொற்கள் கலப்பில்லாமல் தூயத் தமிழில் பேசுவது இப்போது அறிவார்ந்த நடைமுறையாக மாறியிருக்கிறது. இதுவொரு நல்லத் தொடக்கம்.
அருமையான பதிவுக்கு நன்றி. இது வலி மிகுந்த பதிவல்ல. வழிக்காட்டும் பதிவு.
த ம 9
உங்களின் கணிப்புச் சரிதான் நண்பரே!
Deleteநல்ல மாற்றங்கள் ஊடகங்களில் ஏற்படுகிறதென்றால் அது வரவேற்கப்பட வேண்டியதே!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
தமிழில் பிழைப் பொறுக்கமாட்டார்கள் தமிழை ருசித்தவர்கள். நல்ல விடயம்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு.செந்தில்குமார்.
Deleteவணக்கம் பாவலரே !
ReplyDeleteநீண்டதொரு பதிவில் நிறைந்துள்ள அறிவின் மணிகளை நானும் சேமித்து விட்டேன் மொழி பற்றிய தங்கள் அறிவுக்கு முன்னால் நானும் சாதாரனமானவன்தான் ! ஊடகங்கள் ஊதுகுழலாய் இருந்து பலரின் செவிகளை இனிக்கவும் செய்கிறது கிழிக்கவும் செய்கிறது '' மொழிப்பற்று இல்லாதவர் முன்னுரிமை கொள்ளும் இடத்தில் தமிழுக்கு தலை குனிவு உண்மைதான் !
///மன்னியுங்கள்.! எனக்கு அதிகம் தெரியாவிட்டாலும், ‘உனக்கும் தமிழுக்கும்’ இடையில் வலி மிகும் எனும் அளவிற்குத் தெரியும் ஐயா!” என்று சொல்லி அங்கிருந்து எழுந்து வந்துவிட்டேன்..///// இந்த வரிகள் போதும் அந்த தமிழ் ஆசிரியர் உங்களைவிட எவ்வளவுக்கு பின்தங்கி உள்ளார் என்பதை
முன்பும் தங்கள் பதிவு ஒன்றிலோ அல்லது வேறொருவர் பதிவிலோ படித்த நினைவு குற்றியலுகரம்-முற்றியலுகரம்: வேறுபாடு என்ன என்று கேட்ட ஆசிரிய மாணவன் சொன்ன பதில் '' எனக்குத் தெரியாது '' என்று விடை சொன்ன பதிவு போலே இங்கேயும் ஒரு உதாரணம்(‘உனக்கும் தமிழுக்கும்’ இடையில் வலி மிகும்) கற்றேன் மிக்க நன்றி பாவலரே !
தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தம +1
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
----------------------------------------
தித்திக்கும் தைப்பொங்கல் திருநாள் தன்னில்
...........தீந்தமிழர் வாழ்வெல்லாம் சிறக்க வையம்
எத்திக்கும் ஒளிகொண்டே ஏழ்மை என்னும்
..........இல்லாமை போக்கிடவே சமமாய் மாந்தர்
சத்தியத்தில் வளர்ந்தொளிர வேண்டும் நல்ல
.........சாதிசனம் ஒற்றுமையைச் சேர்க்க வேண்டும்
பத்தியுடன் செய்கருமம் பலித்துத் தொன்மைப்
........பழந்தமிழாய் வாழ்வினிக்க வாழ்த்து கின்றேன் !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் பாவலரே வாழ்க வளமுடன் !
வணக்கம் பாவலரே!
Deleteதங்களின் வருகையும் பின்னூட்டக் கவிதையும் காண மகிழ்வு.
தன் மொழிபற்றிய அறிவு இன்னொரு மொழியைக் கற்பிக்கின்றவனுக்கு அதிகம் வேண்டப்பெறுவது. அதனால் அது எங்கள் பணி சார்ந்து அமைந்தது. ஆனால் உங்களைப் போன்ற பாவலர்கள் தன்னியல்பாக எடுத்தாளும் சொற்கட்டுகள்தாம் எங்களைப் போன்றோரை வியப்பில் ஆழ்த்தக் கூடியது. மயக்கக் கூடியது.
தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி.
2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள் ஐயா.
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
Both the blog and the comments are excellant.
ReplyDeleteஎன்ன பொருத்தமான தலைப்பு!
ReplyDeleteமுறையாகப் பயின்ற பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களைவிட தாங்கள் தமிழில் புலமை பெற்றவர் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. வல்லின மிகும் இடங்களை உச்சரித்துப்பார்த்து இயல்பான உச்சரிப்பு எப்படி வருகிறதோ அப்படித்தான் எழுதுகிறேன்.சில நேரங்களில் அவை விதிகளுக்கு மாறாக அமைவதையும் உணர்கிறேன்.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா!
Deleteஇன்றைய கல்விச்சூழலில் தமிழும் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டாலும் இவ்விரண்டு மொழிகளிலுமே தொடக்கப்பள்ளியின் கற்றல் திறனும் அற்ற மாணவர்களை உயர்நிலைப்பள்ளி அளவில் கையாள்கிறோம்.
அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்பிக்க வேண்டிய சூழலில் தாய்மொழிி அல்லாத இரண்டாம் மொழியைக் கற்பிக்க வேண்டிய ஆசிரியரின் பாடு மிகக் கொடுமையானது.
ஏனெனில் தாய்மொழியின் அடிப்படை அறிவுபோலும் அற்ற ஒருவனுக்கு எப்படி இரண்டாவதாக ஒரு மொழியைக் கற்பிக்க இயலும்.
எனவே முதலில் அவனுக்குத் தாய்மொழியின் அடிப்படைகளைக் கற்பிக்க வேண்டியிருப்பதென்பது ஒரு கூடுதல் சுமை.
அவ்வண்ணம் கற்பிக்கும்போது, அதற்குரிமை பூண்டோர் சிலரிடமிருந்து வரும் எதிர்வினைகளையும் புன்னகைத்துக் கடந்தாகவேண்டும்.
குதிரை முடமானாலும் குறித்த நேரத்திற்குள் இலக்கைக் கடந்து பந்தயத்தில் வெற்றிபெற்றாக வேண்டும் என்று விரட்டும் அதிகாரங்களின் முன்னர், கற்பித்தல் பயனற்று, தந்திரங்களைப் பயன்படுத்தி அதிற்பயிற்சியளித்து மாணவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டி இருக்கிறது.
கற்பித்தல் சாபமாகிப்போகின்ற தருணங்கள் அவை.
““““வல்லின மிகும் இடங்களை உச்சரித்துப்பார்த்து இயல்பான உச்சரிப்பு எப்படி வருகிறதோ அப்படித்தான் எழுதுகிறேன்.சில நேரங்களில் அவை விதிகளுக்கு மாறாக அமைவதையும் உணர்கிறேன்.”“““
மொழி ஆள்கை குறித்த இந்த உணர்வினைத்தான் இந்நாளில் பெரிதும் தேவையானது என்கிறேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி.
வணக்கம் ஐயனே!
ReplyDeleteமன்னியுங்கள்.! எனக்கு அதிகம் தெரியாவிட்டாலும், ‘உனக்கும் தமிழுக்கும்’ இடையில் வலி மிகும் எனும் அளவிற்குத் தெரியும் ஐயா!” என்று சொல்லி அங்கிருந்து எழுந்து வந்துவிட்டேன். ம்..ம் வேறு என்ன தான் செய்வது.
தமிழைப் பிழையறக் கற்க கற்பிக்க இப்படி சுட்டிக் காட்டினால் தான் உண்டு.
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம் ...... என்பது போல எல்லாம் சூழலும் பழக்கமும் என்பது சரியே.
எல்லோரும் பிழையறக் கற்போம் மேலும்.
தமிழ் ஆசிரியராக இருக்க வேண்டிய பிள்ளை.ம்..ம்
மாணவர்களுக்குக் கொடுப்பினை இல்லை என்பதா தமிழுக்கு கொடுப்பினை இல்லை என்பதா....
மிக மிகத் தேவையான பதிவு அருமை!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...!
வணக்கம் அம்மா!
Deleteஇழப்பில்தான் உள்ளதன் அருமை தெரியும் என்பார்கள்.
நாம் அதற்குமுன் அதற்காகவே அடித்துக் கொண்டிருக்கிறோம்.
இதில் காயம்பட்டாலும் அது விழுப்புண்தானே?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனதினிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி.
வல்லினம், மெல்லினம், வில்லினம் என்பதெல்லாம் எனக்கு தெரியாது நண்பரே... எமக்கு தெரிந்ததை நானும் எழுதுகிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! நண்பரே....
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வெளிப்படையான கருத்திற்கும் நன்றி வலிப்போக்கரே!
Deleteதங்கட்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனதினிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteதங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் தங்கள் நண்பர்களுக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும் நண்பரே!
Delete“வல்லினம் மிகுதல் மிகாதல் என்பது நம் தமிழின் “மொழிபுணர் இயல்பு.“அதைக் கடினமாய் இருக்கிறது என்றோ குழப்பமாய் இருக்கிறது என்றோ கடந்துபோகின்றவர்கள் குறித்த கவலையைவிடவும் அதைச் சுட்டிக் காட்டி இது தவறு , இதுசரி என்று சொல்லும் தமிழாசிரியர்கள் குறைந்துவிட்டனரே என்பதுதான் எனது வலிமிகுந்த ஆதங்கமாய் இருக்கிறது.”
ReplyDeleteஉண்மையில் வலி மிகுந்த பதிவு தான் இது. தவறைச் சரிசெய்யக்கூடிய தமிழாசிரியர் குறைந்துவிட்டது மட்டுமின்றி சிரமமாயிருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி இலக்கணத்தையே இவர்கள் நினைத்தபடி எளிமையாக்க நினைப்பது வேதனையான செய்தி தான்.
இலக்கணத்தை எளிமையாகவும் சுவையாகவும் மாணவர்களுக்குப் புரியும் படி போதிப்பது எப்படி என்பதை இவர்கள் கற்றுக்கொள்ளட்டும். அதைவிட்டு விட்டு அஸ்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்தால் எப்படி?
எத்தனையோ முறை வலி மிகும், மிகா இடங்கள் பற்றிய விதிமுறைகளை நான் படித்தாலும், இன்றுவரை தவறில்லாமல் என்னால் எழுத முடியவில்லையே என்ற குறை நீண்ட நாளாய் எனக்குண்டு. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஒற்றுப்பிழை இல்லாமல் என்னால் எழுத முடியும் என்று இன்றுவரை என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. உங்கள் பதிவைப் படித்தவுடன் என் குறை இன்னும் அதிகமாகத் தெரிகின்றது.
தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவற்றின் பொறுப்புணர்ந்து தரமான, தவறில்லாத தமிழை, மக்களுக்கு அளித்துத் தமிழை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து!
வணக்கம் சகோ!
Deleteதங்களுக்கு இட்ட எனது பள்ளி அனுபவங்களுடனான நீண்ட பின்னூட்டம், இணையச் சிக்கலால் காணாமற் போனது. நேரடியாகத் தட்டச்சுவதால் அதனைச் சேமிக்கவும் இல்லை. மீண்டும் வருகிறேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி.
யாரய்யா சொன்னது? எங்கள் விஜூ ஐயாவிற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பென்று..?
ReplyDeleteபாவம்.. அவர்களை மன்னிப்போம்!அவர்களுக்கும் கணினித் தமிழுக்கும் துளியும் தொடர்பில்லை..!என்னில் இருந்த கவிதையின் ரசிப்புத்திறனைத் தூண்டிவிட்டது விஜூ என்கிற ஆங்கில ஆசிரியர் என்று,தமிழாசிரியர்களுக்கான கருத்தாளராகச் செல்லும் இடங்களிலெல்லாம் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்!..இன்னும் சொலிக்கொண்டேயிருப்பேன்..!
மருதூர் அரங்கராசன் அவர்களின் 'தவறின்றித் தமிழ் எழுத'நூலிலிருந்து,சரியான எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியுள்ளீர்!.தொடரட்டும் தங்களின் தமிழ்ப்பணி!
ஐயா வணக்கம்.
ReplyDeleteவாழும் மொழியுடனான தொடர்பை ஒருவன் அற்றிருப்பது எங்ஙனம்?
எனவே தொடர்பின்மை குறித்து அவர் கேட்டது, பணியியல் சார்ந்தது.
எனினும் தங்கள் அன்பினுக்கு நன்றி.
“என்னில் இருந்த கவிதையின் ரசிப்தங்கபுத்திறனைத் தூண்டிவிட்டது விஜூ என்கிற ஆங்கில ஆசிரியர்”
ஏன் கவிஞரே உங்களுக்கு என் மீது இவ்வளவு கோபம்?:)
உங்களின் வாசிப்பும் நுண்ணுணர்வும்தான் உங்கள் எழுத்தாளுமைக்குக் காரணமேயன்றி நிச்சயம் நானில்லை.
பணியிடத்தில் ஒருவர் அன்றி வேறெவர்க்கும் இணையத்தில் நான் இயங்கிக் கொண்டிருப்பது தெரியாது. பாடப்புத்தகங்களுக்கு அப்பால் அவர்களின் வாசிப்பும் பெரிதில்லை.
மருதூர் அரங்கராசன் அவர்கள் நூலில் இருந்து,
“ பாலை (ப்) பாடிய பெருங்கடுங்கோ ”
“ காலை (த்) தூக்க மாத்திரை சாப்பிட்டான் ” ஆகிய இரு எடுத்துக்காட்டுகளின் ஆட்சியைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அவை ஒற்றெழுத்தின் இருப்பும் இன்மையும் பொருள்மாற்றம் நிகழ்த்தும் என்ற அவர் கருத்தினையும், அவைபோலும் இடங்களில் வேண்டுமானால் இவ்வாட்சியைப் பயன்படுத்தலாம் என்ற ஒருசார் தமிழறிஞர் கருத்தினையும் மறுத்து, அவை மட்டுமே வலி மிகல் மிகாமைக்குக் காரணங்களில்லை என்பதைக் காட்டவே எடுத்துக்காட்டப்பட்டன. ஆகவேதான் அதில் தனிப்பட்ட ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் ஒருசாரர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
மறுமொழியிலுள்ள மேற்கோளில், “ரசிப்தங்கபுத்திறனைத் ” என்பதை ‘ரசிப்புத்திறனை’ எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன். மற்றோரிடத்துத் தட்டச்சியது இங்கு சேர்ந்து போயிற்று.
Deleteபிழை பொறுக்க.
நன்றி.
அருமையான பதிவு சகோ! தாமதத்திற்கு மன்னிக்கவும் சகோ. அவர்கள் கிடக்கிறார்கள் சகோ! புறம்தள்ளுங்கள். ஆனால், மனம் வேதனை அடைகிறது மறுபுறம். எதற்கு? மாணவர்களை நினைத்து. பாவம் மாணவர்கள். நீங்கள் தமிழாசிரியராகியிருக்கலாம் என்று பல முறைகள் எங்களுக்குத் தோன்றியதுண்டு. இங்கு பதிவுலகிலேயே தாங்கள் இவ்வளவு ஆர்வத்துடன் தமிழை எங்களுக்குக் கற்றுத் தரும் போது மாணவர்களுக்கு எனும் போது? அவர்கள் கொடுத்துவைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்ட நேரங்கள் உண்டு. சரி, நமக்காவது கிடைத்துள்ளதே என்ற ஒரு சுயநல மகிழ்வும் உண்டு என்பதை இங்கு மறுக்கவில்லை.
ReplyDeleteபள்ளி, கல்லூரி நாட்களில் தமிழைத் தவறின்றி எழுதியதும் அதன் பின்னர் சூழ்நிலை காரணங்களால் ஊடகத் தமிழ் மட்டுமே கிடைக்கப் பெற இந்த ஒற்று எல்லாம் மனதிலிருந்து ஒற்றி வைக்கப்பட்டதாகியது.
//எனவே மொழிக்கு உச்சரிப்பே உயிர்மூலம் என்று கொள்வேமேயானால் அவ்வுயிரை நிலைநிறுத்தும் காரணிகளில் ஒன்றாக இந்த வல்லின மிகுதல் மிகாமைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.//
எனது தமிழாசிரியர் நினைவுக்கு வந்தார். உச்சரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியவர். அதனாலாயே, அப்போது நாகர்கோவிலில் வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட அன்று முதல் நாள் முதல் ஒலிபரப்பிற்கு நான் தேர்வாகி எனது குரல் காற்றில் பலரைச் சென்றடைந்தது. அதன் பின்னர் என்னையே தமிழில் எழுத்தாக்கம் செய்து மூன்று நிகழ்சிகளை வழங்கச் செய்தனர். அதன் பின் காலச்சக்கரம் சுழற்றியடித்து இப்போது பதிவுலகில் நுழைந்து எழுத வந்த வேளையில்தான் எனது சிறிய மொழி அறிவும் தொலைந்து போயிருப்பதுப் புரிந்தது. மனம் மிகவும் வருந்திய வேளைகள் அவை. உங்கள் பதிவுகள் மெதுவாக என்னை மீண்டும் தமிழைக் கற்க உதவுகிறது என்றால் அது மிகையல்ல. தயவாய் எனது பணிவான வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் சகோ.
தங்கள் பதிவுகளை வாசிக்கும் போது, எனது மூளையின் திறன் நன்றாகவே குறைந்துள்ளது என்பதையும் புரிந்து கொள்கின்றேன். அதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பதுண்டு.
இப்போது யாரேனும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் என்னிடம் பேச நேர்ந்தால் நான் முதலில் பரிந்துரைப்பது உங்கள் வலைத்தளத்தைத்தான்.
உங்கள் எடுத்துக்காட்டுகள் அருமை. புரிந்து கொள்ள முடிந்தது.
எங்களுக்குக் கிடைத்த நல்ல ஒரு தமிழாசிசியராக உங்களை நாங்கள் கருதுகிறோம்.
தொடருங்கள் சகோ. நாங்களும் தொடர்கின்றோம்.
கீதா
பகிர்வு அருமை.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஒரு வாரமாச்சே,இன்னுமா வலி குறையலே:)
ReplyDeleteவணக்கம் அண்ணா .
ReplyDeleteவலி மிகுந்த பதிவுதான். அன்றே வந்தாலும் பாதி வாசித்துச் சென்றிருந்தேன். இன்று மீண்டும் வந்து முழுவதையும் வாசித்தேன்.
உங்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டவரை.... இது வலிக்கிறது அண்ணா. அவர் முகவரி இருந்தால் கொடுங்கள், வலைத்தள நண்பர்கள் அனைவரும் கடிதம் எழுதிவிடுவோம். யாரைப் பார்த்து என்ன கேள்வி!?! தமிழனைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வியே அல்ல, அதிலும் உங்களைப் பார்த்து....!!! :-( தமிழுக்கும் உங்களுக்கும் இல்லாதத் தொடர்பு வேறு எவருக்கு வந்துவிட முடியும்?
வலி மிகுதலும் மிகாதலும் கண்டிப்பாகத் தேவையானது, இன்றியமையாதது! இதில் தவறுகிறேன் என்பது எனக்கு வலி தந்தாலும் இது தேவையில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பழந்தமிழின் இனிமை காக்கப்பட வேண்டும், அதற்கான முயற்சிகளை நாம் எடுத்துத்தான் ஆகவேண்டும்.
சந்தி அகற்றி மாற்றம் வர வேண்டவே வேண்டாம்.
நீங்கள் சொல்வது போல் சரியாகக் கற்றுக்கொடுக்கும் தமிழாசிரியர்கள் இல்லை என்பது பெரிய ஆதங்கம்.
உங்கள் கட்சிதான் நான்.
ReplyDeleteவணக்கம்!
வலிமிகுந்து வந்த வரிகளைக் கண்டேன்!
கலிமிகுந்து காணுதுயர் கொண்டேன்! - நலமிகுந்து
நம்மொழி ஓங்க நவின்றுள்ள இப்பதிவு
செம்மொழி காக்கும் செயல்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
மிகவும் சிறப்பான விரிவான பதில் பாராட்டுகள்
ReplyDeleteவணக்கம் ஐயா, தாமத வருகைக்கு மன்னியுங்கள்,
ReplyDeleteவலிமிகுந்த பதிவு,,,,
இன்று தமிழாசிரியர் பெரும்பாலோர் தாங்கள் கண்ட அவர்கள் போலத்தான். சொல்வததை நியாயப் படுத்த முயலும் சிலரும் உண்டு. சந்திப்பிழைகள் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றும்,,,, வலிமிகும் மிகா இடங்கள் பற்றி தாம் விளக்குவதும் இல்லை. சொல்லிக்கொடுப்பதிலே தான் தவறு, கற்றுக்கொள்ளபவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இனி மாற்றம் வரும். பொருள் புரிந்தால் போதும் என்ற நிலை.
தொடர்கிறேன் ஐயா
மிகப் பயனுள்ள பதிவு. குறிப்பாக எனக்கு.
ReplyDelete//இப்படித்தான் வரவேண்டும். இப்படி வரக்கூடாது என்று தன்வாசிப்பு அனுபவத்தில் இருந்து அது கற்றுக் கொள்கிறது. அதுவே நிலையானது மற்றும் இலக்கண விதிகளில் இருந்து வழித்தெடுக்கும் அறிவினைக்காட்டிலும் வலிமையானது.///
நான் கவிதைகளையே வாசிப்பு அனுபவத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் விஜூ.
தங்களைப் போன்ற அறிஞர்கள் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும் செய்கிறேன்.
நன்றி/
தலைப்பு உண்மையில் கவர்ந்திழுத்தது.
ReplyDeleteஐயா, என்னாயிற்று,, நலம் தானே,,,
ReplyDeleteதொடருங்களேன்.
நன்றி.
உடல் நலம் தானே? ஏன் நீ...ண்...ட இடைவெளி?
ReplyDeleteகாத்திருக்கிறோம்
ReplyDeleteஎன்ன ஆச்சு விஜூ? உடல்நலத்திற்கு ஒன்றுமில்லையே? வேலைகளைச் சுமையாக அன்றிச் சுவையாகச் செய்பவர் நீங்கள். அதனாலேயே நம் நாட்டுப் பழமொழி உருவானது “வேலை தெரிஞ்சவனுக்கு வேலையைக் கொடு, வேலை தெரியாதவனுக்குக் கூலியக் கொடு” அப்படியான உலகத்திலிருந்து தப்பித்து வந்து அவ்வப்போது எழுதவேண்டுகிறேன் விஜூ. வலையுலகமே காத்திருக்கிறது அய்யா
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteநலம் தானே, வேலைகள் அதிகம் தங்களுக்கு இருப்பினும் எழுதுங்களேன்.தங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள காத்திருக்கிறோம்.
வாருங்கள், தாருங்கள் பதிவுகளை,,,
நன்றி ஐயா.
அய்யா வணக்கம்,
Deleteநலமுடன் இருப்பீர்கள் எனும் ,,,
மாணவர்களின் தேர்வு காலம் என்பது சரி தான்,, ஆனாலும் இங்கும் வரலாமே,,
தொடருங்கள் ஐயா காத்திருக்கிறோம்.
நன்றி.
ஐயா! இந்தப் பதிவை இப்பொழுதுதான் பார்க்கிறேன். எப்படித் தவற விட்டேன் எனத் தெரியவில்லை.
ReplyDelete'வலி மிகுந்த பதிவு' எனும் வார்த்தையைப் பார்த்து, என்னவோ ஏதோ என்று துரிதமாய்ப் படிக்க வந்தேன். பதிவு ஒரு மாதம் பழையதாக இருக்கக் கண்டு ஒருவேளை ஏற்கெனவே படித்துக் கருத்துரைத்து விட்டு மறந்து விட்டோமோ என்று நினைத்துக் கருத்துரைப் பகுதிக்கு வருவதற்காக மேலிருந்து கீழாய் வேகமாக உருட்டினேன். அப்பொழுது ஆங்காங்கே 'வல்லினம் மிகும், மிகா இடங்கள்' எனும் சொற்கள் கண்டு 'வலி மிகுந்த பதிவு' என்பதைத் தாங்கள் அந்தப் பொருளில்தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைத்துப் புன்சிரிப்புடன், மீண்டும் ஒருமுறை தங்கள் எழுத்தாளுமையை வியந்தவாறு படிக்கத் தொடங்கிய எனக்கு இறுதி வரிகள் மிகவும் திகைப்பையும் வேதனையையும் அளித்தன.
எவன் அவன்? தங்களுக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்டவன்? தங்களை விட அவனுக்குத் தமிழ் தெரியுமாமா? தாங்கள் என்னதான் தமிழறிஞர் இல்லை எனத் தங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டாலும் இன்றைய தமிழாசிரியர்களோடு ஒப்பிட்டால் தாங்கள் இமயமலை என்பதை நாங்கள் அறிவோம். எத்தனையோ பழந்தமிழ் நூல்களைப் படித்த தங்களுக்குக் 'கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை' என்கிற எளிய பழமொழி நான் கூறித் தெரிய வேண்டியதில்லை. தங்களுக்காக நாங்கள் மட்டுமில்லை தமிழ்த்தாயும் காத்திருக்கிறாள்! வாருங்கள் ஐயா மறுபடியும் அருள் கூர்ந்து!
ஐயா, நலம் தானே? நீண்ட மவுனம் தங்களால் எப்படி?!!
ReplyDeleteஅன்புடையீர் வணக்கம்! என்னுடைய வலைத்தளத்தில் ‘தொடரும் தொடர் பதிவர்கள்’ என்ற வலைப்பதிவினில் உங்களது வலைத்தளம் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஇரண்டு மாதங்களாக எந்தப் பதிவும் பதிவேற்றவில்லை.
என்ன ஆனது. தங்களை எண்ணி நினைவுகள் சுழல்கின்றன.
இன்று மாலை தொலைபேசியில் பேசுகிறேன்
அருமையான விளக்கம்..தமிழ்ப்பாடம் படித்தது போலிருந்தது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
இவ்வலைப்பூவிலுள்ள பதிவுகளை வாசிக்க ஆர்வமாக உள்ளது, வாசித்து கருத்து தெரிவிக்கிறேன்.
வணக்கம் ஐயா
ReplyDeleteநலம் தானே,
நிச்சயம் காரணம் இதுவல்ல,,,
ReplyDeleteதேர்ந்த ஆய்வு . சிறப்பான விளக்கம். வல்லினம் மிகும் இடங்கள்,மிகா இடங்கள் பற்றிய விழிப்புணர்வு தமிழ் பேராசிரியர்களிடமும் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி.தொடருங்கள். தொடர்கிறேன். நன்றி.
ReplyDeleteமொழியின் மரபும், மரபுசார் இயல்பும் காக்கப்படவேண்டியது முகாமையானது என்ற தங்களின் கருத்துக்குத் தராதலங்களுடன் முறை செய்திருக்கிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்!
ReplyDelete