Thursday 9 April 2015

இப்படி ஒரு பெண்ணை வர்ணிக்க முடியுமா..?


பெண்ணைப் பார்த்துக் கவிஞரான ஆண்கள் பலபேர். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொருவருமே தங்களின் அறிவிற்கும் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்பப் பெண்களை வர்ணித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மட்டும் பெண்கள் ஆண்களோடு போட்டி போட முடியாது என்று நினைக்கிறேன். ஒருவேளை அதற்கான அனுமதி ஆணாதிக்கச் சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கலாம்.

வாசிப்பவரின் அறிவிற்கும் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற தளங்களில் அக்கவிதைகள் ரசிக்கப்படுகின்றன. நிலைபேறடைகின்றன அல்லது காணாமல் போய்விடுகின்றன.
பெண்களைப் பற்றிய சில கற்பனைகள் அவர்களைப் போன்றே அழகானவை.

அவ்வழகிற்கும் இலக்கிய அழகிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,  இலக்கிய அழகு, நரை திரை வராமல் எக்காலத்திற்கும் இளமையாய் இருக்கும் அழகு. தமிழ் அழகு.

ஒரு ஓவியத்திற்கு அதன் பின்புலம் முக்கியம். வரைகின்ற ஓவியத்திற்கேற்ப அது நிறவேற்றுமையுடன் இருக்க வேண்டும். உதாரணமாக  வெள்ளைப் பின் புலம் என்றால் கருப்பு.

இரவு வானத்தில் நிலவு போல.

பகலில் நிலவு இருந்தாலும் நாம் அதைக் காண முடிவதில்லை.

எனவே அலையலையாய்ப் படிகின்ற இருளைப் பின்புலமாகக் கொண்டு எழுகிறது  இப்பிறை .

ஆனாலும் இப்பிறை அவளின் அழகிய நெற்றிக்கு ஈடாகாது.

மான்விழியின் மருட்சி அவ்விழிகளில் இருந்தாலும், மான் விழி அவள் விழிமுன் நிற்க முடியாது.

இது மனித உரு அல்ல.

மனித உருவில் நிச்சயமாய்ச் சில குறைகள் இருந்தே தீரும்.

சிற்பி ஒரு சிலையை வடிக்கிறான் என்றால் எந்தக் குறையும் இல்லாதபடி, செய்கின்ற அந்த வடிவத்தில், சிறுத்த இடையை, மூங்கில் போன்ற தோள்களை, பார்ப்போரின் மனம் கொள்ளும் புன்னகையை நிலையாக வடித்துப் போகமுடியும். 

இங்கோ எந்தக் குறையும் இல்லாத சிற்பம்  போன்று என் முன் நிற்கும் உயிருள்ள இப்பெண்ணின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும்…! இவளைப் படைத்தவன் பிரம்மனாய் இருந்தால், நிச்சயம் இவளை உருவாக்குவதற்குமுன் ஒரு மாதிரிக்காகத திருமகளை உருவாக்கிய பின்தான் அவளிடம் இருக்கும் குறைகளைச் சரிசெய்துவிட்டு எவ்வித மாசும் இன்றி இவளை உருவாக்கி இருப்பான்.”

கம்பனின் மகன் அம்பிகாபதி பாடியதாக வருகிறது இப்பாடல்,

மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
        நிகர்‘ஒவ்வா மதியே! மானே!!
செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்
        திருநகையைத் தெய்வ மாக
இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ
        நானறியேன்! உண்மை யாகக்
கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்
        படைத்தனன் நல்கமலத் தோனே! ”

இன்னொரு புலவன் பார்க்கிறான்.

அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடுகிறது.

நாம் நினைப்பதுபோல் அது சாதாரண கொடியன்று. பொற்கொடி.

என்றும் வாடாத அக்கொடியின் தலையில் பெரும் சுமை.

அது சுமந்திருப்பது மழைமேகத்தை.

அக்கொடி அணிந்திருப்பது பிறை.

அக்கொடியின் முகம் ஒரு தாமரை.

அப்பிறையின் கீழே போரிடும் வில்லும் துள்ளும் மீன்களும்.

அவள் கேட்டால்  அவளுக்காக எதையும் தரத் தயாராய் இருக்கும் கற்பகத் தருவின் பக்கத்தில் அக்கொடி நிற்கிறதாம்.

இதைத் தஞ்சைவாணன் கோவையின் பாடல் இப்படிச் சொல்கிறது.

“புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்துஒரு கற்பகத்தின்
அயலே பசும்பொற் கொடிநின்றதால் வெள்ளைஅன்னம் செந்நெல்
வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே”

( புயல் – மழைமேகம். கூந்தலைக் குறித்தது. 
பிறை – நிலவு. நெற்றியைக் குறித்தது. 
பொருவில். – போரிடும் வில். புருவத்தைக் குறித்தது. 
கயல் – மீன். கண்ணைக் குறித்தது. 
கமலம் – தாமரை. முகத்தைக் குறித்தது. 
பசும்பொற்கொடி – தூய பொன்னாலான கொடி. தூய மாறா அழகுடைய அவளைக் குறித்தது. 
ற்பகம் – கேட்பார்க்குக் கேட்பதை அளிக்கும் மரம். அவளுக்காகத் தன்னால் ஆவன எதனையும் செய்யத் தயாராயிருக்கும் அவனைக் குறித்தது. )

எழுதியவன் இல்லாவிட்டால் என்ன..? இளமைமாறாமல் இருக்கின்ற அந்தப் பொற்கொடியை காலகாலமாய் மீட்டெடுத்து எத்தனை எத்தனை கண்கள் கண்டு ரசிக்கின்றன. அவளுக்கு இறவாப் பெருவரம் அளித்துப் போய்விட்டான் அந்தப் புலவன்.

சரி நம் காலத்திற்கு வருவோம்.

குறிஞ்சி மலரில் ந.பார்த்தசாரதி ஒவ்வொரு இயலின் தொடக்கத்திலும் பாடலொன்றை எடுத்துக் காட்டி எழுதிப்போவார். அவற்றுள் அவரது சொந்தப் பாடல்களும் அடக்கம்.

ஆறாவது இயலின் தொடக்கத்தில் அவர் எழுதியிருக்கும் பாடல்.

“நிலவைப் பிடித்துச்
சிறுகறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம் ,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி .”

அவள் முகம் நிலவு என்கிறார்கள் காலகாலமாய்….! ஆனால் அதில் சிறுசிறு கறைகள் இருக்கின்றனவே!

எனவே அவள் முகம் நிலவு முகம் அன்று.

அம்முகம் நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து சிறிய புன்னகையை அதில் பதித்த முகம்.

அவள் நினைவுகளை என்னில் பதித்து, என் மனதில் அவள் அலைகளை நிறைத்து, அதில் மேலும் அதிர்வுகளை உண்டாக்கும் வலிமை பெற்ற நளினத்தைத் தெளிக்கின்ற விழிகள் அவளிடம் உள்ளவை.

குறிஞ்சிமலரின் இவ்வளவுதான் காட்டுகிறார் நா.பா. ஆனால் இதன் கண்ணிகள் இன்னும் இருக்கின்றன.


“நிலவைப் பிடித்துச்
சிறுகறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம் ,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி .
தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவழம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெளியைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்”

முத்துகளைக் கோத்து ( தரளம் மிடைந்து) அவற்றின் ஒளி தெரியாதவாறு குடைந்து உள்வைத்து வெளியே சிவந்த இரண்டு பவழத்தைப் பதித்த இதழ்கள்.

மேகத்தைப் பிடித்து அதைக் கடைந்து காதுகளின் இரு மருங்கிலும் அது உலவுமாறு விடப்பட்ட கூந்தல்.

மொத்தத்தில் பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதினையே மீண்டும் கடைந்து வந்தத் தெளிவுடன், இன்னும் இன்சுவையைக் கலந்து, மன்மதன் நுகரப் படைத்த அழகு.

கவியின் தரிசனத்தில் கண்ணடைத்து உள் கடக்கக் கடக்க,  அந்த அமுதைக் கடைந்து அதன் சுவையோடு இன்னும் சுவையைக் கலந்து நுகரப் படைத்த அழகின் நதி மனதையும் அடித்துக் கொண்டு போகிறது.
உங்களுக்கு…..?

இந்நேரம் திருக்குறளும் திரையிசைப் பாடல்களும் நினைவு வந்திருக்க வேண்டுமே..!

நினைவிற்கு வந்தால் அதனையும் உங்கள் கருத்துகளையும் அறியத் தாருங்கள்.

இன்னும் தொடரலாம்.

பட உதவி - நன்றி http://3.imimg.com/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

38 comments:

  1. தமிழ் மணம் இரண்டு மீண்டு(ம்) வருவேன் கவிஞரே...

    ReplyDelete
  2. ஒரு பெண்ணைப் பார்த்து
    நிலவைப் பார்த்தேன்
    நிலவில் ஒளி இல்லை
    ------------------------------
    நிலவு ஒரு பெண்ணாகி
    உலவுகின்ற அழகோ
    ----------------------------
    இந்த வகையான பாடல்தான் எனது நினைவுக்கு வருகிறது கவிஞரே....

    ReplyDelete
    Replies
    1. விரைவான வருகைக்கம் நினைவுகூரலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete

  3. வணக்கம்!

    தமிழ்மணம் 3

    பெண்ணழகைப் பேணிப் பெருமையுறும் பூந்தமிழின்
    பண்ணழகைக் பாடிப் பறக்கின்றேன்! - மண்ணழகு
    மங்கை பிறந்ததனால்! மாண்புடன் தந்தவுரை
    நுங்கை நிகர்க்கும் நுவல்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நுங்கை நிகர்த்த சுவைநுவலும் நும்பாவோ
      கங்கை! அதைக்காக்கை எம்செய்கை! - உங்கையோ
      விற்கை! கவியம்பால் வீழ்த்துங்கை! எம்போன்றோர்
      கற்கை அதைவாழ்த்துங் கை!

      வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  4. அன்புள்ள அய்யா,

    இப்படி ஒரு பெண்ணை வர்ணிக்க முடியுமா..? பெண்களைப் பற்றிய சில கற்பனைகள் அவர்களைப் போன்றே அழகானவை. உண்மைதான்!

    அம்பிகாபதி அமரவாதியின் மீது கொண்ட அமரகவி ...தஞ்சைவாணன் கோவையின் பாடல்... ந.பார்த்தசாரதியின்
    “நிலவைப் பிடித்துச்
    சிறுகறைகள் துடைத்துக் - குறு
    முறுவல் பதித்த முகம்...
    -இப்படியும் வர்ணிக்க முடியுமா ? என்று வியக்க வைக்கின்ற பாடல்கள். இந்த விஷயத்தில் மட்டும் பெண்கள் ஆண்களோடு போட்டி போட முடியாதுதான்.

    ‘கட்டோடு குழலாட ஆட-ஆட கண்ணென்ற மீனாட ஆட-ஆட கொத்தோடு நகையாட ஆட-ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு!

    தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப் புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு! கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு! வள்ளி மனம் நீராடத் தில்லை மனம் போராட ரெண்டு பக்கம் நானாட சொந்தமே நீ ஆடு!

    "மானல்லவோ கண்கள் தந்தது
    மயில் அல்லவோ சாயல் தந்தது
    தேனல்லவோ இதழைத் தந்தது
    சிலையல்லவோ அழகைத் தந்தது"


    "தேக்குமரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது
    பூக்களெல்லாம் நிறத்தைத் தந்தது
    பொன்னல்லவோ சிரிப்பைத் தந்தது"

    "மார்கழிப் பனி போல் உடையணிந்து -
    செம்மாதுளங்கனி போல இதழ் கனிந்து
    கார்குழலாலே இடையளந்து - நீ
    காத்திருந்தாயோ எனை நினைந்து"

    "பஞ்சணைக் களத்தில் பூவிரித்து -
    அதில் பவள நிலாவை அலங்கரித்து
    கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா -
    சுகம்கோடிக் கோடியாய்க் குவிப்போமா!


    முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

    படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?
    பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?’

    -கவியரசர் கண்ணதாசன் மட்டும் போதாதா?

    அய்யன் வள்ளுவனும் வேண்டுமோ?

    மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்,
    காதலை-வாழி, மதி!. (குறள் 1118)

    முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.


    கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

    பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (குறள் 1272)

    கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

    அருமையான வர்ணனைகள்.

    -நன்றி.
    த.ம. 3.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      வரும்போதெல்லாம் பதிவளவிற்குப் பின்னூட்டம் இட்டு மலைக்க வைத்துவிடுகிறீர்கள்.
      எவ்வளவு செய்திகள்...!
      எவ்வளவு தகவல்கள்...!
      பின்னூட்டத்தின் வாயிலாகப் பல செய்திகளைக் கற்கிறேன் என்பதென்னவோ உண்மை.

      தங்கள் வருகைக்கும் கருத்துகளைப் பகிர்ந்தமைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  5. வணக்கம்
    ஐயா

    பெண்னை போற்றும் பாரில்
    பேதையவளின் குணத்தை போதையில்
    சொல்லும் கவிஞர்கள் எத்தனை
    உருகி வடித்த வரிகளை சொல்லி
    பொருள் உருகி பாடி கருத்து இயம்பிய விதம் நன்று ஐயா... பகிர்வுக்கு நன்றி த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி திரு.ரூபன்.

      Delete
  6. பொதுவாக பெண்கள் இளகிய மனம் உள்ளவர்கள்
    அவர்கள் குறைகளை விடுத்து நிறைகளை மிகைப்படுத்திப் பேசும் ஆண்களை
    அவர்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

    இந்தக் கவிஞரையும்தான். :))

    அதே சமயத்தில் பெண்கள் என்றால் "இப்படித்தான்" என்று சொல்லும் என்னைப்போல் ஆண்களைப் பார்த்தால் எரிச்சலாக வரும். மனநாக்கில் திட்டி ஆறுதல் அடைந்து கொள்வார்கள். :)
    -----------------

    "Darling, You look beautiful today"

    "I like the smile you have, it makes me cheerful"

    "I love you with all my heart! What will I do without you?"

    "You look sexier especially when you are mad at me!"

    ALL work too!

    There are not many poets in the world, you see. So, people try something like these too!

    ----------------

    BTW, இதையெல்லாம் விட தஙகளுடைய காதல் கவிதைகள் சில சிறப்பாக இருந்தன. வெகுநாட்களுக்கு முன் மைதிலி என் பார்வைக்கு கொண்டுவந்து சேர்த்தார்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்.

      //பொதுவாக பெண்கள் இளகிய மனம் உள்ளவர்கள்
      அவர்கள் குறைகளை விடுத்து நிறைகளை மிகைப்படுத்திப் பேசும் ஆண்களை
      அவர்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். //

      பொதுவாக இயல்பை அப்படியே சொல்வது நல்ல கவிதையாய் இருக்காதோ :)
      இது பெண்களின் பலவீனம் என்றால் அந்தக் காலத்தில் இருந்தே ஆண்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
      ஆனாலும் இதற்கு மயங்காத பெண்களும் உண்டு. இறுகிய மனம்...!

      “மன நாக்கு“ இதுவரை நான் கேட்டிராத சொற்பிரயோகம்.

      ஆண்கள் எல்லா இடங்களிலும் இப்படித்தான் போலிருக்கிறது :)

      //தஙகளுடைய காதல் கவிதைகள் சில சிறப்பாக இருந்தன. வெகுநாட்களுக்கு முன் மைதிலி என் பார்வைக்கு கொண்டுவந்து சேர்த்தார் //

      தங்களது பாராட்டிற்கு நன்றி. எழுதியதில் பெரும்பாலும் குப்பைகள்தான்.

      சிலவற்றை இனங்கண்டு சொன்ன சகோ. மைதிலிக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் நேரமொதுக்கிக் கருத்திட்டதற்கும் வாக்கிற்கும் மீண்டும் நன்றி சார்.

      Delete
  7. அன்றிலிருந்து இன்று வரை பெண்ணையும் நிலவையும் பாடாத கவிஞர்கள் இல்லை. அவர்களின் கற்பனைக்கு ஊற்றுக்கண்ணாகத் திகழ்பவை பெண்ணின் முகமும், பால் நிலாவும் தாம்.
    கீட்ஸ் சொல்வதைப் போல அழகு என்றுமே ஆனந்தம் தான்.
    நிலவைப் பிடித்துச்
    சிறுகறைகள் துடைத்துக் – குறு
    முறுவல் பதித்த முகம்
    என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். இதனை வாசிக்கும் போது நிலவைப் பெண்ணாக வர்ணித்த புரட்சிக்கவியின் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:-
    “நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
    நிலவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
    கோலமுழுதும் காட்டிவிட்டால்
    காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?”
    பெண்ணைப் பற்றிய அழகான கவிதைகளை அறிமுகம் செய்ததற்கு நன்றி. தொடருங்கள்.



    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ!
      தாங்கள் சொல்வது உண்மைதான்.
      கீட்ஸ் மட்டுமல்ல பெரும்பாலான கவிஞர்களின் கவிமணம் கனிந்ததும் அழகில்தான்.

      நீங்கள் காட்டிய புரட்சிக்கவியின் ஒரு திருப்புமுனைப் பாடல் அல்லவா அது....!

      நிலவு ஒளிமுகம் காட்டும் போது பொதுவாக வானம் நீலமாய் இருப்பதில்லை:))

      மாலையும் இருளும் கைகோர்க்கும் நேரம்.

      பொதுவாக பெண்களின் நெற்றிக்குப் பிறையை உவமை சொல்லியிருக்கிறார்கள் அன்று.
      எனக்குப் பிடித்தமான பாடல்களில் ஒன்று நீங்கள் காட்டியது.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. அய்யா,
    வணக்கம்.
    சதிராடும் காற்சலங்கை தாதை தையென
    எதிராடும் இன்னுயிர்த் தாயார் குதியாட
    பாற்கடல் பள்ளி உறைவினன் உள்ளமும்
    தோற்றோடும் யாவும் துறந்து.
    (வருணனை சாயலில்::) நன்றி

    ReplyDelete
    Replies
    1. இன்னுமோர் வெண்பா இனியெனக்குத் தாவென்று
      சின்னக் குழவி மனஞ்சிணுங்கும் - புன்னகையைச்
      சேர்க்கும்வெண் பாக்கள் செதுக்கும்கை வாழ்கவென
      ஆர்க்குமிங் கென்நெஞ் சறை!

      “ தாதை தையென“ எனும் தங்கள் வெண்பாவில் தாதைதை என்பது அருமையான ஒலிப்புப் பிரயோகம். தளையைச் சற்று கவனித்திருக்கலாம்.

      “தாதைதை யென்றே“ எனுஞ் சிறு மாற்றத்தில் சரியாவதுதான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  9. “நிலவைப் பிடித்துச்
    சிறுகறைகள் துடைத்துக் - குறு
    முறுவல் பதித்த முகம் ,
    நினைவைப் பதித்து - மன
    அலைகள் நிறைத்துச் - சிறு
    நளினம் தெளித்த விழி .
    தரளம் மிடைந்து - ஒளி
    தவழக் குடைந்து - இரு
    பவழம் பதித்த இதழ்
    முகிலைப் பிடித்துச் சிறு
    நெளியைக் கடைந்து - இரு
    செவியில் திரிந்த குழல்
    அமுதம் கடைந்து - சுவை
    அளவிற் கலந்து - மதன்
    நுகரப் படைத்த எழில்” ஆஹா அருமை அருமை ! என்னே கற்பனை பெண்களே மயங்கும் அளவுக்கு. ம்..ம்..ம் பெண்களே எப்படி பெண்களை ப் புகழ்வது என்று தான் பாடாமல் விட்டிருப்பார்களோ. இருக்கும் இருக்கும்.
    பெண்களின் அழகை ஆராதிக்கிறோம் என்பவரும் இன்னொருபக்கம்.என்ன இருந்தாலும் பெண் தானே என்று அலட்சியம் ஏளனம் செய்வதும் வருந்த தக்க செயலே வம்ச விருத்திக்கும் வளமான வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருக்கும் பெண்களை பெண்களே கொடுமை செய்வதும் கள்ளிப் பால் கொடுத்து பிறந்தவுடனேயே கொல்வதும் தான் வேதனையான செயல். புதிய சொற்கள் அறிந்தேன் புனைந்த விதமும் அறிந்தேன். பதிவுக்கு மிக்கநன்றி !தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா!
      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  10. ஐயா வணக்கம். நிலவைப் பிடித்துச்
    சிறு கறைகள் துடைத்துக்
    குறு முறுவல் பதித்த முகம்---சற்றே கற்பனை செய்து பாருங்கள் அது எப்படி இருக்கும் இப்போதெல்லாம் கணினியிலும் அலை பேசியிலும் உபயோகப் படுத்தும் smiley போல இருக்கும்....!நானும் காதல்கவிதைகள் எழுதி இருக்கிறேன் அதில் ஒன்று
    நிலவைப் பழிக்கும் முகம்
    நினைவைப் பதிக்கும் கண்கள்
    நிலமடந்தை நாணும் எழில்-முத்துச்
    சரம் விரித்த முல்லைச் சிரிப்பு-சிந்தக்
    கமலமலர் செவ்விதழ் விரிப்பு-கொண்டு
    படர்கொடிவெல்லும் துடியிடை- என்
    இடர் சேர்க்க இடையிடையாட –மென்னடை
    நடந்தென் முன் நின்றாள்-இன்பக்
    கனவினை நனவாக்க எண்ணி-வந்த
    கற்பனைக் கண் கண்ட கன்னி.
    இன்னும் ஒன்று
    வெண்ணிற மேனியாள் எனக்கு
    மிளிரும் நீலவானம் சரிதுகில்
    பன்நிறம் தெரியப பதித்த மணிகள்
    மின்னும் தாரகை நல்லணிகலன்
    எனக்கு நிகர் யாரே இப்புவிமீதே எனவே
    உன்னாது இயம்பும் மதியும் --கிளியே
    கறை துடைத்த மதி வதனம் அவள் மேனிக்கணியும்
    பட்டோ மற்றோ பொலிவுறும் பேருண்மை ---ஆங்கு
    இதழிலோடும் புன்னகையும் நன்னகையாம்
    வண்டென விரைந்தாடும் மலர் விழிகளும்
    கண்டதும் கவி பாடத்தூண்டும் ---என்
    காதல் ஜோதி ! கன்னல் மொழியினள்---அவள்
    காண்பார் கண் கூசும் பேரெழில் ---கண்டும்
    செருக்கொழிந்தாளிலை -- ஏன் ?
    சிந்தை கவர்ந்த என் பூங்கொடியாள் தன
    நடை குரல் அதரம் கண்டும் -ஈண்டு
    தோகை மயிலின் களிநடம் குறைந்திலை
    கானக்குயிலின் இன்னிசை குறைந்திலை
    கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைந்திலை --ஏன் ?
    கட்டழகன் எந்தன் கொட்டமடக்க
    வட்டமிடும் கழுகன்ன சுற்றி வரும்
    நான்முகன் திட்டமெல்லாம் தரை மட்டம்
    இயற்கையின் படைப்பினில் எனதவள் சிறந்தவள்
    கண்கூடு தேவையில்லை அத்தாட்சி இதற்கு !
    யாரும் செருக்கொழியர்க -- யானும் ஒழிகிலேனே
    யார் படித்து ரசிக்கவும் எழுதியவை அல்ல இவை. உள்ளம் உணர்ந்தது எழுத்தில் . .


    ReplyDelete
    Replies
    1. தங்கள் உள்ளம் உணர்ந்ததிலும்,

      “““““கறை துடைத்த மதி வதனம்““““““

      என்று இருக்கிறதே சார்.

      பொதுவாக உவமை என்று சொல்லும் போது அதை அப்படியே பொருத்திப்பார்ப்பதில்லை நாம்.

      அதன் ஏதாவது ஒரு பண்பை மட்டுமே பொருத்திப் பார்க்கவேண்டும் அல்லவா.

      பெண் சிவப்பு என்றால் , நம் ஊரில் உள்ள தபால்பெட்டியின் நிறத்தில் அல்லவா பெண் இருக்க வேண்டும்..:))

      அப்படி இருந்தால் என்னத்தான் ஆவது....???

      இதாவது பரவாயில்லை....

      கண்ணுக்கு உவமை வேண்டுமா.......இதை எல்லாம் எடுத்துப்போடு.

      மூக்கா இவை இவை.....

      என்று எல்லாம் கவிஞர்களுக்குக் கையேடாக வந்த “உவமான சங்கிரகம்“ போன்ற நூல்களும் தமிழில் எழுந்தன.
      தொடை அகராதி என்றொரு அகராதி இருப்பதைப் போல...!!!

      அவை கற்பனையை முடக்கிவிடும் என்பதையும், நெறியென்ற பெயரிலும், மரபென்ற பெயரிலும் முன்னோர் மொழிபொருளையே பின்னும் மொழிவிக்கும் என்பதையும் இதனாசிரியர்கள் உணரவில்லை.

      உங்கள் உள்ளத்திலும் உணர்ந்திருக்கிறீர்கள் என்றும் போது...

      என்னோடு சேர ஓராள் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு :))

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  11. சட்டென்று ஞாபகம் வந்த பாடல் :

    நிலவின் ஒளியை பிடித்து பிடித்து...
    பாலில் நனைத்து பாலில் நனைத்து...
    கன்னங்கள் செய்து விட்டாய்...!
    உலக மலர்கள் பறித்து பறித்து...
    இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து...
    பெண்ணை சமைத்து விட்டார்...!
    அழகு என்பது ஆண்பாலா...? பெண்பாலா...?
    என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது...
    அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா...!
    ஏஹே… கவிதை என்பது மொழியின் வடிவம்...
    என்றொரு கருத்தும் இன்று உடைந்தது...
    கவிதை என்பது கன்னி வடிவமடா...!

    மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து...
    மேகத்தில் குழைத்து பெண்ணென்று படைத்து...
    வீதியில் விட்டு விட்டார்...!
    இப்படி இங்கொரு பெண்மையை படைக்க...
    தன்னிடம் கற்பனை தீர்ந்தது எண்ணித்தான்...
    பிரம்மனும் மூர்ச்சையுற்றான்...!

    மின் மினி பிடித்து மின் மினி பிடித்து...
    கண்களில் பறித்து கண்களில் பறித்து...
    கண்மணி கண் பறித்தாள்...
    தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து...
    மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து...
    ஜீவனை ஏன் எடுத்தாள்...?
    காவித்துறவிக்கும் ஆசை வளர்த்தவள்...
    ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்...
    பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே...!
    ஒஹோ….. தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட...
    மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட...
    ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி சார்.

      உங்களிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்த்தேன்.
      இதுபோன்ற ஒப்பீடுகள் நிச்சயம் தமிழ்க் கவிதைகளை அணுக்கமாக்கி வாசகரை கவரும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  12. கில்லர்ஜிக்காவது ரெண்டு பாடலும் பொன்தனபாலன் அவரகளுக்கு ஒரு முழு பாடலும் நிணைவுக்கு வருகிறது. எனக்கு அதுவும் வரமாட்டேன்கிறது நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. எழுதுபவர்களுக்கு நினைவு வராவிட்டால் என்ன வலிப்போக்கரே :))

      Delete
  13. கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே, கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் என்ற பாடல்தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் வருகைக்கும் பாடலை நினைவு கூர்ந்தமைக்கும் நன்றிகள்.

      Delete
  14. மிக அருமையான வர்ணனைகள் கொண்ட கவிதைகள்! விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி! பழங்கால இலக்கியங்களில் இவ்வகை வர்ணனைகள் சிறப்பாக இருக்கும் ரசித்தும் இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தளிர். சுரேஷ் அவர்களே!

      Delete
  15. கறை துடைத்த மதிவதனம் என்னும்போதுபளிச்சென்று இருப்பதாகக் கொள்ள வேண்டும் அதில் குறு முறுவல் பதிக்கும் போதுதான் இடறுகிறது அதைத்தான் smiley போல் என்றேன் மற்றபடி நானும் நாபாவின் ரசிகனே. பெயர் பெற்றவர்கள் எது எழுதினாலும் புகழத்தான் வேண்டுமென்பதில்லையேஉங்கள்பதிவில் பெண்ணை வருணிக்கும் கவதைகள் கேட்டது போல் இருந்தது. அதனால்தான் நான் எழுதி இருந்ததைக்குறிப்பிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்.
      நானும் அதையேதான் சொன்னேன்.
      மதி என்றதை நிலவு என்று புரிந்து கொண்டேன்.

      எனக்கு நா.பா. வின் கதைகளைவிட இந்தக் கவிதை நன்றாக இருப்பதாகப் பட்டது.

      நிச்சயமாய், பெயர் பெற்றவர்கள் எது எழுதினாலும் புகழ வேண்டும் என்பதிலோ, பெயர் பெறாதவர்கள் எழுதுவதை அலட்சியப் படுத்த வேண்டும் என்பதிலோ எனக்கும் உடன்பாடில்லைதான்.
      நா. பா. வின் இந்த வர்ணனையில் அழகு பொருந்திய கறையற்ற புன்னகை சிந்தும் முகம்தான் எனக்குத் தோன்றியது.
      உங்களது கவிதையும் அழகுதான்.
      நன்றி.

      Delete
  16. படிக்கிற அத்தனை பேருக்குள்ளும் மறைந்திருக்கும் கவிஞர்களை தட்டி எழுப்பி விட்டீர்கள் விஜு

    ReplyDelete
  17. ஆகா
    ஆகா
    முரளிதரன் ஐயா அவர்கள் சொல்வதுபோல்
    எத்தனை எத்தனை கவிஞர்களை எழுப்பி விட்டுள்ளீர்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
  18. அது சரி! எல்லா கவிஞர்களுக்கும் பெண் என்றால் நிலவுதான் போலும்!!

    வெண்ணிலவே வெண்ணிலவே
    விண்ணைத் தாண்டி வருவாயா
    விளையாட சோடி தேவை....

    இதுதான் நினைவுக்கு வந்தது ஆசானே!

    ம்ம்ம் அருமையான வர்ணனைகள்...அதைத் தாங்கள் விளக்கும் விதம் கேட்கவும் வேண்டுமோ சுவை சொட்ட....திகட்டாத சுவை..

    ReplyDelete
    Replies
    1. ஆசானே ....!

      நீங்கள் சொல்வது சரிதான்.

      அந்தக் காலத்தில் இருந்தே நிலவு கவிஞர்களின் கைகளில் சிக்கிப் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறது.

      தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி.

      Delete
  19. ஒருவேளை அதற்கான அனுமதி ஆணாதிக்கச் சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கலாம்.
    அன்றில் இருந்து இன்றுவரை உண்மைதான் இது. நான் காதலிக்கும் ஆண் மகனைப் பற்றி இப்படியெல்லாம் வர்ணித்து எழுதினால் உலகம் என்ன சொல்லும், அதைவிடுங்கள் கேட்க்கும் ஆண் தான் என்ன சொல்வான்?
    ஆஹா இவள் சரியில்லை உஷார் என்று சொல்ல மாட்டானா?
    இந்த உண்மையை பதிவராகிய உம்மால் வெளிப்படையாக சொல்ல முடியாமல் தானே,,,,,,,,,,,,,,,
    ஒருவேளை அதற்கான அனுமதி ஆணாதிக்கச் சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கலாம்.என்று கூறியுள்ளீர்.

    ReplyDelete
  20. உன்னை வர்ணித்து வர்ணித்து வயதான என் எழுதுகோலும் தன் வாழ்நாளை முடித்துக்கொண்டது...!
    தன் பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்று...!Srinath

    ReplyDelete