Friday, 3 April 2015

பெருமாள் முருகனின் அர்த்தநாரி – ஒரு பாமரனின் பார்வையில்.



மாதொருபாகனைத் தொடர்ந்தும் மாதொருபாகனின் சர்ச்சை பெரிதாக வலுப்பெறும் முன்பும் 2014 இன் இறுதியில் பெருமாள் முருகன் அவர்களால் அதன் தொடர்ச்சியாக இருநாவல்கள் எழுதப்பட்டன. மாதொருபாகனின் முடிவில் இருந்து கிளைத்துச் செல்லும் இரு முரணான பாதைகளைத் தேர்ந்தவை அவை.

மாதொருபாகனின் முடிவு, காளி தற்கொலை செய்து கொள்ளப் போகிறான் என்னும் குறிப்போடு முடிந்திருக்கத் தற்கொலை செய்து கொண்டான் ; உயிர்வாழ்கிறான் என்னும் இரண்டு சாத்தியங்களுக்கான வாசகனின் ஊகத்தினூடாக ஆலவாயனும் அர்த்தநாரியும் பயணிக்கின்றன. பொதுவாகவே நாவலின் இறுதி எவ்வாறு முடியலாம் என்னும் வாசகனின் சுதந்திரத்தை, எதிர்பார்ப்பை ஆசிரியரே முடித்துவைக்கும் அதிலும் இருவகை சாத்தியப்பாடுகளையுமே நிகழ்த்திக் காட்டும் மாதொருபாகனின் நீட்சியாக இவ்விரு நாவல்களையும் கொண்டு செல்கிறார். திரு.பெருமாள்முருகன். 


 மாதொருபாகனுக்குப் பிறகு ஆலவாயனைப் படித்துவிட்டு  அர்த்தநாரியைப் படிக்க வேண்டுமா அல்லது அர்த்தநாரியைப் படித்துவிட்டு ஆலவாயனைப் படிக்க வேண்டுமா என்கிற வாசகனின் சந்தேகத்திற்கு அப்படிப்பட்ட வரிசைமுறையில் இவ்விரு நூல்களையும் படைக்கவில்லை. இவை ஒவ்வொன்றுமே தன்னளவில் முழுமை பெற்ற இரண்டு நாவல்கள் என்று முன்னுரையிலேயே விளக்கிவிடுகிறார் ஆசிரியர்.

ஆனால் மாதொருபாகனுக்குப் பிறகு, ஆலவாயனும் அதன் பிறகு அர்த்தநாரியும் எனும் முறையிலேயே பெருமாள் முருகன் இவற்றைப் படைத்ததாகக் குறிப்பிடுகிறார்.

மாதொருபாகனின் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்நாவலில் ஊரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாதொருபாகனைப் படிக்காதவர்களுக்கு விளங்கும் வண்ணம் காளியின் தற்கொலை மனோபாவத்திற்கான காரணம் நாவலின் இடையில் சொல்லப்படுகிறது.
பொன்னாவைக் காணாமல் தொண்டுப்பட்டிக்குத் திரும்பிய காளியின் மனநிலையில் இருந்து அர்த்தநாரி தொடங்குகிறது. தொண்டுப்பட்டிக்கு மீளும் அவனது தற்கொலை எண்ணம் வலுப்பெறுகிறது.

அன்றைக்கு இருந்த நிலையில் அவன் கண்ணுக்கு அந்த வாது வாகாகப் பட்டது. அது என்னவோ வாவென்று தன்னை மிகவும் விருப்பத்தோடு கூப்பிடுவது மாதிரி இருந்தது. அந்தக் கணத்தைச் சாவால்  தவிர வேறு எதனாலும் கடக்க இயலாது என்னும் நிலைக்கு வந்திருந்தான். சாதாரணமா அது? ஒரு ஆளை ஏமாற்ற எத்தனை பேர் சேர்ந்து திட்டம் போட்டிருக்கிறார்கள். அம்மா, மாமியார், மாமனார், மச்சினன், பொன்னா. எல்லாரும் ஒத்துக் கொண்டிருக்கலாம். பொன்னா எப்படி இதற்கு ஒப்புக் கொள்ளமுடியும்? இன்னொருத்தனோடு படுத்துக் கொள்ள அவள் மனதில் ஆசை இல்லாமல் இதற்கு எப்படிச் சம்மதித்திருப்பாள்? அரிவாளை எடுத்துக்கொண்டு போய் ஒரே வீச்சில் தலை வேறு முண்டம் வேறாக அவளை வெட்டிப்போடலாம் என்றுதான் முதலில் வெறியாக இருந்தது. ஆனால் அது கொஞ்ச நேரத் துடிப்போடு அடங்கிப்போகும். பொண்டாட்டிய வெட்டிக் கொன்னவன் என்னும் பேரோடு வாழ்நாள் முழுக்கவும் நினைத்து நினைத்து அழ வேண்டும்.. அப்பேற்பட்ட தண்டனை தன் சாவுதான் என்று தோன்றியது.“
என்பதாய் அவனது தற்கொலை முயல்விற்கான மனநிலை பதிவுசெய்யப்படுகிறது.

காளி இல்லாததால் வளவு வீட்டில் இருந்து தொண்டுப்பட்டிக்கு வரும் தாய் மாராயியின் கண்ணில் தூக்கிட்டுக் கொள்ள முயலும் காளி படுகிறான். காப்பாற்றப்படுகிறான். காளி அதுபோன்றதொரு முடிவுக்கு மீண்டும் போகாமல் இருக்கச் சத்தியம் வாங்குகிறாள் மாராயி. தற்கொலைக்கான கயிறினைத் தாங்கிய பூவரசின் வாது வெட்டப்படுகிறது.

முத்துவிற்குக் காளியை அன்றிரவு கவனிக்காமல் போய்விட்டோமே என்ற உறுத்தல் இருக்கிறது. பொன்னாவைத்தேடி வீட்டிற்கு வந்து அவள் இல்லை என்பதையும் பதினான்காம் நாள் திருவிழாவிற்குச் சென்றாள் என்பதையும் அவன் அறிந்திருப்பானோ என்று பயம் வருகிறது.
மாராயி அனுப்பிய ஆள் மூலம் காளி தொண்டுப்பட்டிக்குத் திரும்பியதை அறிகிறான் முத்து. ‘மாமா எங்கே’ எனக்கேட்கும் பொன்னாவைச் சமாளிக்கிறான். காளியைக் காணச் செல்கிறான். அவன் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டதை அறிந்து மனம் பதைக்கிறான். காளி முத்துவைத் திட்டி உதைத்து அனுப்புகிறான். உடலெங்கும் காயங்ளோடு திரும்பும் அவனிடம் ‘என்ன ஆச்சு அண்ணா?’ என்று கேட்கும் பொன்னாவிடம் காளிக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பதையும் அவன் தற்கொலை செய்து கொள்ளப் போனதையும் முத்து கூறுகிறான்.
பொன்னா அதிர்ச்சி அடைகிறாள். காளிக்குத் தெரியாமல்தான் பதினான்காம் நாள் திருவிழாவிற்குத் தான் அனுப்பப்பட்டோமோ? தான் ஏமாற்றப்பட்டோமா என்றெண்ணிச் சீற்றம் கொள்கிறாள்.

தன் குடும்பத்தின் மேல் உள்ள அவளது கோபம் இப்படி வெளிப்படுகிறது,

திடுமென சாமி மருள் வந்தவள் போலப் பொன்னா ‘ என்னய நம்ப வைச்சு இப்பிடி ஏமாத்துன நீங்க நாளைக்கு எஞ்சொத்து வேணுமின்னு சோத்துல வெசம் வெச்சுக்கூடக் கொன்னுருவீங்க. இன்னமே எனக்கு அப்பன்  அம்மா இல்ல, பெத்துப் பொறப்பு இல்ல, பொறந்த ஊடுன்னு ஒன்னு இல்ல. இந்தூட்டுல இனி ஒரு சொட்டுத் தண்ணிகூடக் குடிக்க மாட்டன். நாஞ் செத்தாலும் ஆரும் வரக்கூடாது. இங்க எந்த எழவு உழுந்தாலும் எனக்கு ஆள் உடக்கூடாது. அந்தக் காளி ஆயாளக் கும்பிட்டுச் சொல்றன். எம் மூஞ்சியப் பாக்கொணும்னு கூட என்னூட்டுப்பக்கம் ஒரு காக்கா குஞ்சு வந்தரக் கூடாது. எச்சலாட்டம் துப்பீட்டன். இன்னமே வாயில எடுத்து வெச்சுக்க மாட்டன்“ என்று சொன்னாள். வாயில் மொத்தையாய் எச்சிலைக் குவித்துத் தூவெனத் துப்பினாள். ‘ அடி பொன்னா என்ன பண்ற?’ என்று நல்லாயி கத்தக் கத்தப் பூவரசடியில் கிடந்த மண்ணை எடுத்து இருகைகளாலும் அள்ளி வீட்டைப் பார்த்துத் தூற்றினாள்.“

காளியைத் தேடி ஓடி வரும் பொன்னா தொண்டுப் பட்டியில் அவனைக் காண்கிறாள்.

 “ தொண்டுப்பட்டியின் வடமூலையில் பல்லுக்குச்சியை மென்றபடி எங்கோ கத்தும் காக்கையைப் பார்த்தபடி அவன் தெரிந்தான். ‘மாமா மாமா’ என்னும் கதறலுக்கு அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.. போன வேகத்தில் அவன் கால்களைப் பிடித்துக் கொண்டாள். ‘மாமா எனக்கு ஒன்னுந் தெரியாது மாமா. நீ செரின்னு சொல்லீட்டயின்னு என்னயப் போவச் சொன்னாங்க. உங்கிட்டப்போயி இத எப்படிக் கேக்கறது, பொய்யா சொலலீரப் போறாங்கன்னு நெனச்சன். பொய் சொல்லீட்டாங்களே, எங்குடியக் கெடுத்திட்டாங்களே. நான் செஞ்சது தப்புத்தான். அந்தத் தப்புக்கு என்னயக் கொன்னிரு. என்னய என்ன வேண்ணாலும் செய்யி. நீ எதுக்குச் சாவோணும். நீ என்ன மாமா செஞ்ச’ என்று அழுதாள்.
காக்கை ஒன்று இடைவிடாமல் கத்தியது. அதன் ஒலியினூடே ‘ஒன்னுந் தெரியாத ஓலுகள்ளி’ என்று காளி சொன்ன மாதிரி காதில் விழுந்தது…..‘மாமா, இப்பிடி இருக்காத எதுக்கு இந்த மாதிரி செஞச? இன்னமேலு  இப்பிடி நெனைக்கறத உட்டுரு. தேசமெல்லாம திரிஞ்ச ஆளு, தொண்டுப்பட்டியே கதின்னு கெடக்கறயேன்னுதான் நான் ஒத்துக்கிட்டன். அதும் உனக்குச் சம்மதம் இல்லைன்னு தெரிஞ்சிருந்தா ஒத்திருப்பனா? உன்னய ஏமாத்திட்டாங்க, என்னயும் ஏமாத்திட்டாங்க’ என்றாள். கொப்பளித்துத் திரும்பிய அவன் வாய் என்னவோ சொன்ன மாதிரி உணர்ந்தாள்.
திரும்பவும் வாயசைவை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லை ஊகித்தாள். ‘அவுசாரி’ அவளை அவுசாரி என்று சொல்லியிருக்கிறான்.”

பொன்னாவால் அதைத் தாங்க முடியவில்லை.

புத்திப் பேதலித்தது போலான பொன்னாவையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மாராயிக்கு வருகிறது.

இந்நிகழ்விற்குக் காரணமான ஒவ்வொருவரும் இப்படி இந்தப் பிரச்சினை இந்த அளவிற்குப் பூதாகரமாகும் என்று எதிர்பார்க்க வில்லையே என்று தம்மளவில் மனம் வருந்துகின்றனர்.

காளி அதன் பின் யாரோடும் பேசுவதில்லை. பொன்னாவும் அப்படித்தான்.
பொன்னா குற்ற உணர்விலேயே வாழ்கிறாள். இடையிடையே அவளுக்குக் காளியுடன் வாழந்த காலத்தில் அவன் செய்த சீண்டல்கள் நினைவு வருகின்றன.

தொண்டுப்பட்டியில் தூங்குவதாகச் சொல்லிப் போய் மீண்டும் நள்ளிரவில் அவளுடன் இருக்க வேண்டி வரும் அவன் வருகை. ஒவ்வொருநாளும் அவன் அதுபோல் வரமாட்டானா என்று எதிர்பார்த்துக் கிடக்கிறது அவள் மனம்.

அவனது காலடி ஓசை தெரியும் அவளுக்கு. அப்போதெல்லாம் சில நாட்கள் ஓசை கேட்கும். கதவிற்கு அருகே வரை வரும். பின் திரும்பி விடும். மறுநாள் பொன்னா, காளியிடம் நேற்று இரவு வந்தியா எனக் கேட்டால் காளி இல்லையே என மறுத்துவிடுவான்.

இந்நினைவில் பொன்னா ஒவ்வொரு இரவும் காளி வருவான் எனக் காத்திருந்தாள்.  அவன் எப்படி வருவான்? அவுசாரி வீட்டில் காலெடுத்து வைப்பானா என்றும் அவள் மனம் கேட்கிறது.

இக்காத்திருப்பில், ஒருநாள் அவன் வருகையை இப்படி உணர்கிறாள் அவள்.

அன்றைக்குச் சாமத்திற்கு மேல் வந்தான். தன்னையறியாமல் தூங்கிப் போயிருந்த அவள் காதுகளில் அந்தக் காலடியோசை கேட்கிறது. பதறி விழிக்கிறாள். உற்றுக் கேட்கிறாள். அவன் காலோசைதான் அது. இருகால்களும் மண்ணில் ஒன்றே போலப் பதிகின்றன. சீராக எட்டி வைத்து வருகிறான். ஓசை வரவரப் பெரிதாகிறது. வாசலுக்கு வந்து படியேறுகிறான். பட்டாசாலையில் நிற்கிறான். இப்போது சத்தமில்லை. கதவுக்கு முன்னால் நிற்கிறான். கதவை விரல்மடித்துத் தட்டும் ஒலி அவளுக்குத் தெளிவாகக் கேட்கிறது. கட்டிலில் இருந்து தாவி எழுகிறாள். இரவில் படுக்கும்போது விளக்கை அணைத்துவிடுவாள். வடபுற சுவரில் இருந்து சின்ன ஜன்னலை வெயில் காலத்தில் மட்டும் திறந்து வைப்பாள். விளக்குக் கட்டை மேல் இருந்த விளக்கின் அடியிலேயே நெருப்பெட்டியை வைத்திருப்பாள். சட்டென நெருப்பெட்டியை எடுத்து விளக்கை ஏற்றுகிறாள். இடைவெளிவிட்டு இன்னொரு முறை அதே போலக் கதவைத் தட்டும் ஒலி. அவன்தான். அது ஒற்றைப் பெருங்கதவு. மரத்தாழ்ப்பாள். கதவை அழுத்திக் கொண்டு மெதுவாகத் தாழை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சத்தம் பெரிதாகி எல்லாரையும் எழுப்பிவிடும். அவள் திறக்க வாகாக அவன் வெளிப்புறம் கதவை இழுத்துப் பிடித்திருக்கிறான். தாழை நீக்ககுகிறாள்.

இருளில் இருந்து விளக்கொளிக்குள் அவன் வருகிறான். அவள் தலையைக் குனிந்து நிற்கிறாள். அவனைப் பார்க்க விருப்பமில்லை என்பதை உணர்த்துகிறாள். கதவைச் சத்தமில்லாமல் தாழிடுகிறான். பின் உடனே அவள் அருகே வந்து தாவி அணைக்கிறான். அவள் திமிறுகிறாள். அவனுக்குள் அடங்க அவள் மறுக்கிறாள். ‘இதா இங்கப் பாரு’ என்று சொல்லியபடி வற்புறுத்தி அவளை இறுக அணைக்கிறான். அவன் இரும்புப் பிடிக்குள் அடங்குகிறாள். அவள் தலையை உயர்த்துகிறான். கண்களில் வழியும் கண்ணீர் விளக்கொளியில் பளபளக்கிறது. ‘ கோபமா’ என்கிறான். என்னமோ தெரியாத அன்னைக்கு அந்த வார்த்த எம் வாயில வந்திருச்சி. அத நீ கண்டுபுடிச்சிட்ட. இன்னமே எப்பவும் அப்பிடிச் சொல்ல மாட்டன்’ என்கிறான். ‘சொன்னதுக்கு?’ என்கிறாள் அவள் அழுகையினூடே.

‘சொன்னதுக்கு உங்கையால என்னய அடிச்சிரு ’என்று சொல்லி அவள் கையை எடுத்துத் தன் கன்னங்களில் மாறிமாறி அடித்துக் கொள்கிறான். அவளுக்கே பாவமாக இருக்கிறது. கையை இழுக்கிறாள். ‘ உன்னோட ஆத்தரம் தீர்ற வரைக்கும் அடிச்சுக்கோ. தப்பு வார்த்த சொன்ன இந்த வாய அடி’ என்று அவள் கைகளால் வாயின் மீது அடிக்கிறான். உதடுகள் ரத்தம் வருவது போலச் சிவக்கின்றன. அவள் பயந்து போய் அவனிடமிருந்து கைகளை மீட்டுக் கொள்கிறாள். அந்தச் சிவந்த உதடுகளில் தன் உதடுகளை வைத்து ஒத்தடம் கொடுக்கிறாள். இத்தனை நாட்களாகப் பிரிந்திருந்த ஏக்கம் அந்தத் தொடுதலில் முழுமையாக வெளிப்படுகிறது. அவளை அப்படியே கட்டிலுக்கு நகர்த்துகிறான்……………………. அவனுடைய உடலுக்கு அடியிலேயே அவள் சிக்கிக் கொள்கிறாள். முகத்தை முகத்தோடு இழைக்கிறான். அவள் இப்போது அவனை முழுதாக உள்வாங்குகிறாள். அவனுக்கு அவசரமே இல்லை. அவளுடைய ஒவ்வொரு அணுவுக்குள்ளும் படிப்படியாகப் புகுகிறான். அவன் தனக்குள் புகுவதைத் தெளிவாக உணர்கிறாள்

இது பொன்னாவினுடைய பிரம்மைதான். அவள் கருக்கொண்டிருக்கிறாள் என்னும் அடையாளம் தெரியும்முன் இதுபோன்றதொரு நிகழ்வு ஆலவாயனிலும் நிகழ்கிறது. அப்பொழுது காளியின் ஆவி பூவரசிலிருந்து இறங்கி அவளை அணுகுவதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

அவனுக்கே இந்தக் குழந்தையை கருவுற்றேன் எனத் தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்ள விரும்பும் பொன்னாவின் மனநிலையே இது.

மறுநாள் காலை பொன்னாவின் ஓங்கரிப்பு அவள் கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

மாராயி இந்தத் தகவலை எப்படிக் காளியிடம் சொல்வது எனத் தயங்குகிறாள். பின் மெதுவாக அவனிடம் இதனைத் தெரிவிக்கிறாள். காளியின் தலைகுனிந்திருக்கிறது. அவன் கண்கள் கண்ணீரால் நிறைகின்றன. பொன்னா கர்ப்பகாலத்திற்குரிய அவஸ்தைகளை அனுபவிக்கத் தொடங்குகிறாள். காளியின் மனப்போராட்டமும் தொடர்கிறது.

நாடோடி வாழ்க்கை வாழும் நல்லுப்பிள்ளை சித்தப்பா வழக்கம் போலவே கதைகளுடன் வருகிறார். இப்பொழுது பன்றிகளை மேய்க்கும் ஒரு குடும்பத்தில் அவரும் ஒருவராகி ஊர் ஊராகப் பன்றிகளை மேய்த்த கதை. அந்தக் குழுவின் ஆண்  தன் மனைவி ஆசைப்படுகிறாள் என்பதற்காக நல்லுப்பிள்ளையை அழைத்து வருகிறான். ஆறுமாத காலம் அக்கூட்டத்தோடு இருந்த கதையைச் சுவாரசியமாய் விவரிக்கிறார் அவர்.

நல்லுப்பிள்ளை சித்தப்பா சொல்லும் கதைகளில் பாதிக்குமேல் பொய் என்ற எண்ணமுடையவன் காளி. நம்ப மறுக்கும் காளிக்குத் தனது அடுத்த கதையைக் கூறுகிறார் சித்தப்பா.

அது பெருந்தனக்காரரான செம்மங்கலம் மிட்டாதாரர் பற்றிய கதை. அவரும் சித்தப்பாவைப் போலவே  சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இருக்கின்றவர்தான். சத்திரம் ஒன்றில் இருவரும் சந்திக்கின்றனர். நல்லுப்பிள்ளையைப் போலவே மிட்டாதாரரும் ஒரு ‘புரட்சியாளர்தான்’. ஊரெல்லாம் சுற்றும் அவருக்குக் குழந்தையின்மைதான் குறை. இரண்டு திருமணங்களைச் செய்தபோதும் அவருக்குக் குழந்தைப் பேறு இல்லை. நல்லுப் பிள்ளையோடு பழகியதில் அவரது ‘நல்லகுணம்’ கண்டு வியந்து நான்கைந்து நாட்கள் தன் வீட்டில் தங்கிச் செல்லுமாறு அவரை வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார் மிட்டாதாரர்.

தனக்குக் குழந்தைப்பேறு நல்லுப்பிள்ளை போன்ற ஒருவரால் கிடைப்பதைத் தான் விரும்புவதாகக் கூறுகிறார். நல்லுப்பிள்ளை மறுத்தும்  கேளாமல் ஒரு மாதகாலம்  அங்கு அவரைத் தங்க வைக்கிறார் மிட்டாதாரர். அவரது ஆசை நிறைவேறுகிறது. அவரது இருமனைவிகளும் கர்ப்பம் தரிக்கிறார்கள்.

இந்தக் கதை தன்னைநோக்கிச் சொல்லப்பட்டதோ என்று நினைக்கிறான் காளி. மலையூருக்குக் காவடி எடுத்துச் செல்வதாகக் கூறும் சித்தப்பாவுடன் தானும் வருவதாகக் கூறிப் புறப்படுகிறான். வழியில் ‘சாமி- பிள்ளை’ ஒன்றைத் தன்பிள்ளையாக எண்ணிப் பெருமை கொள்ளும் ஒருவனோடு உரையாடுகிறான்.

நிலம் கவனிப்பாரற்றுக் காய்ந்து கிடக்கிறது. காட்டினைச் சீர்படுத்தத் தன் அண்ணன் முத்துவை அழைத்துவரச் சொல்கிறாள் பொன்னா.

தைப்பூச யாத்திரைக்குச் செல்லும் காளியின் அனுபவம் விரிவடைகிறது.
யாத்திரை முடிந்து திரும்பும் காளிக்கு எல்லாம் புதிதாகத் தோன்றுகின்றன. அவனுடைய காடு சீர் படுத்தப்பட்டிருக்கிறது.

பொன்னாவிற்குப் பையன் பிறக்கிறான். பேறு வேதனையின் போதே காளி அங்கிருந்து சென்றுவிடுகிறான்.

எவ்வளவோ சொல்லியும் அவனால் அக்குழந்தையைத் தன் குழந்தையாக ஏற்க முடியவில்லை.

பொன்னா மருகுகிறாள். இது உனக்குப் பிறந்ததுதான் என்று எண்ணிக் குமைகிறாள். ஒரு கட்டத்தில் தன்னை ஏற்காத காளியை உதறி திருவிழாவில் பார்த்தவனுடன் சென்றுவிடலாமோ என்றும் எண்ணுகிறது அவள் மனம்.

ஒரு மாதம் கழித்தே குழந்தையை அவளால் நன்கு பார்க்க முடிகிறது.

வாயை விரித்துக் குழந்தை சிரித்தது. அது சிரிக்கச் சிரிக்கப் பொன்னாவுக்கு ஆசையாக இருந்தது. அந்தப் பூவாய்க்குக் கைகளைக் கொண்டுபோகையில் சட்டென ‘எம்பேரு என்ன’ என்னும் குரல் வந்தது. குழந்தையா பேசியது? குழந்தையின் முகத்தை நோக்கிய பொன்னாவிற்கு இப்போது அந்த வாயும் குரலில் நினைவில் வந்து சேர்ந்தன. பதினாலாம் நாள் திருவிழாவில சந்தித்த அந்த முகம். ‘ என் பேரு என்ன ’ என்று கேட்ட முகம். “
மாதொருபாகனின் இறுதி ஆலவாயனைப் போலவே அர்த்தநாரியிலும் தொடர்கிறது. அவளை அழைத்துக் கொண்டு போகும் அவனோடு பொன்னா இருக்கும் காட்சிகள் விரிகின்றன.

குழந்தைபிறந்தால் தன் பெயரை வைக்க வேண்டும். அதை எடுத்துக் கொண்டு அடுத்த வருடம் வரவேண்டும் என்று கோரிய அவனைப் பற்றி நாவலின் ஒரு அத்தியாயம் சித்தரிக்கிறது.

குழந்தையைப் பார்க்கக் காளி வரவில்லை. முன்னிலும் அதிகமாய்க் குடித்துக் கிடக்கிறான்.

பொன்னாவின் மனநிலையும் பிறழ்கிறது. குடித்து மயங்கிக்கிடக்கும் காளியை இருவர் எடுத்துவந்து வீட்டில் இடுகின்றனர். பொன்னா தன் தரப்பு நியாயங்கள் அனைத்தையும் மயங்கிக் கிடக்கும் அவனோடு பேசுகிறாள்.

பின், ஏதோ முடிவுக்கு வந்தவளாகப் பதினான்காம்நாள் திருவிழாவிற்குத்  தான் கட்டியிருந்த அந்நீலநிறச் சேலையைக் கொட்டாயின் நடுச்சட்டத்தில் போட்டு, குழந்தையிடம் ‘அர்த்தநாரி நீ நல்லா இரு’ என்று முத்தம் கொடுத்து விடை பெறுகிறாள்.

பெருமூச்சுடன் குழந்தையைப் பார்த்தபடியே தொங்கும் புடவையை நோக்கிப் போனாள். அப்போது அவள் கையைத் தொட்டுப் பற்றி இழுத்த கையை உணர்ந்தாள். காளி.“

என்று முடிகிறது அர்த்தநாரி.

“ பெண்மீது ஆண்  கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது ‘ அர்த்தநாரி’ நிலமும் வாழ்வும் பிணைந்திருக்கும் சூழலும் அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும்  விதத்தை நாவல் பற்றிச்செல்கிறது. சமூகம் ஏற்றுக் கொண்ட நடவடிக்கைதான் எனினும் அதன் பின்னியங்கும் ஏளனங்கள், புறக்கணிப்புகள், ஒவ்வாமைகள், கீழ்மைகள் ஆகியன ஏற்படுத்தும் சஞ்சலங்கள் ஆணுக்கு வேறாகவும் பெண்ணுக்கு வேறாகவும் இருக்கின்றன. அவற்றை அவர்கள் தத்தமது வழிகளில் எதிர்கொள்கிறார்கள். மனிதத் தேவை அடிப்படை நிறைவேற்றத்தோடு முடிந்துவிடுவதல்ல. அதனைக் கடந்து  எங்கெல்லாமோ செல்லும் மன அமைப்பு செயல்படுகிறது. இதனை வட்டார மொழியில்  அடர்த்தியான நடை கொண்டு இந்நாவல் விவரிக்கிறது என்று நாவலைப் பற்றி அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.

காளி மற்றும் பொன்னாவின் அவரவர் தரப்பு நியாயங்களை இக்கதைச் சொல்லிப் போகிறது. சமுதாயமரபுகள், அது தந்திருக்கும் சுதந்திரம், தனியொருவனுக்கு, ஒருத்திக்கு அதனால் நேரும் பாதிப்பு இவற்றை விளக்கிச் செல்கிறது அர்த்தநாரி.

மாதொருபாகனின் நீட்சியாய் அமைந்த அர்த்தநாரியில் மாதொருபாகனைப் படித்த அளவிற்குச் சுவாரசியம் இல்லை.

சில அத்தியாயங்களில் குறிப்பு என்ற பெயரில் வரும் 
1.   பொன்னாவுக்குக் காளி சொன்ன கதை.
2.   குழந்தைக்கு அவர் சொன்ன கதை
அதற்குமேல் நல்லுப்பையன் சித்தப்பா சொன்ன கதை
3.   பனிக்காலத்தில் பொன்னாவிற்குக் காளி சொன்ன கதை
ஆகிய கதைகள் முற்றிலும் வயது வந்தவர்க்கானவை.
நாட்டார் மரபில் பேச்சுவழக்கில் இவை வெகு இயல்பாக வழங்கப்படுகின்றன எனினும் எழுத்துப் புனிதமானதென்றும் அதில் இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி இருக்கக் கூடாது என்று எண்ணுகின்றவர்களுக்கு இக்கதைகள் பலத்த  அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

மொத்தத்தில் சாகாமல் இருக்கும் காளியைப் பார்க்க விரும்புகின்றவர்கள் அவலப்பட்டுக் கிடக்கும் அவனை அர்த்தநாரியில் காணலாம்.



Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

44 comments:

  1. கதை எழுதிய ஆசிரியரே அல்லல்பட்டு கிடக்கிறார். பெருந்தன்யைில்லாமல் சாகாமல் இருக்கும் காளியை எதற்க்கு பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்திற்கு நன்றி வலிப்போக்கரே!

      Delete
  2. நான் இந்தப்பதிவை முழுதும் படிக்கவில்லை. படித்துக் கருத்து எழுதினாலும் அதுஏதோ காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டு வேறு ஒரு கருத்துக் கூறுமாறு வேண்டப் படலாம் சரிதானே.

    ReplyDelete
    Replies
    1. இதற்குமுன் அப்படித் தங்களின் கருத்தை ஏதேனும் காரணத்திற்காக நிராகரித்து வேறு கருத்தினை வேண்டியிருக்கிறேனா ஜி.எம்.பி. சார்.

      Delete
  3. வணக்கம்
    ஐயா
    கடந்த வாரம் போல் இன்றும் இந்த நாவல் பற்றி மேலும் விரிவான விளக்கத்தை நல்கியமைக்கு நன்றி ஐயா. த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  4. நாவல் நன்றாக இருக்கிறதோ இல்லையோ நீங்கள் எழுதிய விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி அய்யா..
      இது எனது பார்வையும் கருத்துமே!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!

      Delete
  5. அன்புள்ள அய்யா,

    ‘பெருமாள் முருகனின் அர்த்தநாரி’
    – ஒரு பாமரனின் பார்வையில்... இதில் பாமரன் என்று காளியைச் சொல்கிறீர்களா? இல்லை... இல்லை ‘என்னை’த்தான் என்றால் ‘தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்’ என்பதாலா? நல்லது!

    மாதொருபாகனைத் தொடர்ந்தும் மாதொருபாகனின் சர்ச்சையைத் தொடர்ந்தும் தாங்கள் ‘ஆலவாயன்’ மற்றும் ‘அர்த்தநாரி’ நாவல்களுக்கு விமர்சனம் வெகு அழகாகச் செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

    காளியின் தற்கொலை முயல்விற்கான மனநிலை வெகு நேர்த்தியாக பதிவுசெய்யப்படுகிறது.

    இதைப் படிக்கின்ற பொழுது எனக்கு சிவக்குமார் நடித்த ‘ரோஜாப்பூ ரவிக்கைக்காரி’ திரைப்படம் நினைவுக்கு வந்தது. ‘அர்த்தநாரி’ யில் போல கதைக்களம் இல்லையென்றாலும்கூட... மனைவி அடுத்தவனோடு கூடி இருப்பதைப் பார்த்துவிடுகிறான் கணவன்.... பிறகு குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வான்.

    இதைச் சொல்லுகின்ற பொழுது எனக்கு இன்னொரு படமும் சிவாஜிகணேசன் நடித்த ‘கவரிமான்’ படம் நினைவிற்கு வருகிறது. இதே சூழலில் தன் மனைவியைக் கொலை செய்து விடுகிறான் கணவன்.

    ஆனால் ‘அர்த்தநாரி’ நாவலின் கதைப் பின்புலம் வேறு. குழந்தையில்லாமல் பொன்னா படும் வேதனை... சமுதாயப் பார்வை... மலடி என்ற பட்டம்... பொன்னா அதிர்ச்சி அடைகிறாள். காளிக்குத் தெரியாமல்தான் பதினான்காம் நாள் திருவிழாவிற்குத் தான் அனுப்பப்பட்டோமோ? தான் ஏமாற்றப்பட்டோமா என்றெண்ணிச் சீற்றம் கொள்கிறாள். தன் குடும்பத்தின் மேல் உள்ள அவளது கோபம்,

    “............எம் மூஞ்சியப் பாக்கொணும்னு கூட என்னூட்டுப்பக்கம் ஒரு காக்கா குஞ்சு வந்தரக் கூடாது. எச்சலாட்டம் துப்பீட்டன். இன்னமே வாயில எடுத்து வெச்சுக்க மாட்டன்“ -என்று கோபப்பட்டு வெளியேறுவது அருமையாக நாவலில் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

    காளியைத் தேடி ஓடி வரும் பொன்னா தொண்டுப் பட்டியில் அவனைக் காண்கிறாள்....“வாயசைவை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லை ஊகித்தாள். ‘அவுசாரி’ அவளை அவுசாரி என்று சொல்லியிருக்கிறான்.

    நிலம் கவனிப்பாரற்றுக் காய்ந்து கிடக்கிறது. பெருமாள் முருகன் வெகு அழகாக நிகழ்வுகளைச் சொல்லிச் செல்கிறார். காளி... பொன்னா... இவர்களின் மனப்போராட்டம் அருமையாகச் சித்தரித்து இருப்பது பாராட்டுக்குரியது.

    பொன்னாவிற்குப் பையன் பிறக்கிறான். எவ்வளவோ சொல்லியும் அவனால் அக்குழந்தையைத் தன் குழந்தையாக ஏற்க முடியவில்லை. உளவியல் சார்ந்த உண்மைதானே...!

    திருவிழாவிற்குத் தான் கட்டியிருந்த அந்த நீலநிறச் சேலையைக் கொட்டாயின் நடுச்சட்டத்தில் போட்டு... தன் கதையை முடிக்க நினைக்கையில் காளியின் கை தடுக்கிறது.

    அய்யா பொருமாள் முருகனின் நாவலைப் படிக்காமலே... தங்களின் விமர்சனம், நாவலைப் படித்தது போலவே இருந்தது என்னமோ உண்மை.

    தங்களின் அருமையான விமர்சனத்தால் அவரின் நாவலைப் படிக்கத் தூண்டுகிறது. அவசியம் படிப்பேன்.

    நன்றி.
    த.ம. 6.



    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் நாவலைப் படிக்கத் தோன்றிய நான் பார்த்திராத திரைப்படச் செய்திகளையும் விரிவாகத் தந்ததற்கு மிக்க நன்றி அய்யா!

      Delete
  6. *** பொன்னாவிற்குப் பையன் பிறக்கிறான். பேறு வேதனையின் போதே காளி அங்கிருந்து சென்றுவிடுகிறான்.

    எவ்வளவோ சொல்லியும் அவனால் அக்குழந்தையைத் தன் குழந்தையாக ஏற்க முடியவில்லை.

    பொன்னா மருகுகிறாள். இது உனக்குப் பிறந்ததுதான் என்று எண்ணிக் குமைகிறாள். ஒரு கட்டத்தில் தன்னை ஏற்காத காளியை உதறி திருவிழாவில் பார்த்தவனுடன் சென்றுவிடலாமோ என்றும் எண்ணுகிறது அவள் மனம்.

    ஒரு மாதம் கழித்தே குழந்தையை அவளால் நன்கு பார்க்க முடிகிறது.***

    ரொம்பத்தான் குழம்பிப் போயி இருக்காரு நம்ம படைப்பாளி. எல்லோரையும் குழப்பிவிட்டு தானும் குழம்பி நிக்கிறாரு பாவம்..

    இதுக்கே இப்படிக் குழம்பினால், நாளைக்கு காளி தன் பொன்னாவின் பையனை "அவுசாரி மகனே"னு ஏசும்போது அவனை எப்படி காப்பாத்துறது? இதுபோல் அப்பா அம்மாவுக்கு பிறந்த பரிதாப மகனின் மனநிலை எப்படியெல்லாம் நாளை பாதிக்கப் படும்னு முருகப்பெருமாள் யோசிக்கவில்லையா?

    தரங்கெட்டதனாம, ஒரு வெறியுடன் தன்னை ஏசும் தந்தை,காளி, அப்படி ஏசும் தந்தையிடம் இருந்து காக்க முடியாத தாய், பொன்னா, இதுபோல் சூழல்களால் மனநிலை பாதிக்கப்பட்டு நாளைக்கு அந்த அப்பாவி மகன் எப்படியொரு "தவறான இளைஞனாக" தலை எடுக்கிறான் என்றெல்லாம் இன்னும் 4 கதை எழுதலாமே?

    அதுகுள்ளே நம்ம "முருகரு" இப்படி குழம்பினால் எப்படிங்க, விஜு அய்யா? :)



    ReplyDelete
    Replies
    1. // தரங்கெட்டதனாம, ஒரு வெறியுடன் தன்னை ஏசும் தந்தை,காளி, அப்படி ஏசும் தந்தையிடம் இருந்து காக்க முடியாத தாய், பொன்னா, இதுபோல் சூழல்களால் மனநிலை பாதிக்கப்பட்டு நாளைக்கு அந்த அப்பாவி மகன் எப்படியொரு "தவறான இளைஞனாக" தலை எடுக்கிறான் என்றெல்லாம் இன்னும் 4 கதை எழுதலாமே? //

      ஓஹோ அப்ப இன்னம் இருக்கா ? :))

      நன்றி சார்.

      Delete
  7. தங்களின் விமர்சனம் நாவலைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது கவிஞரே.. அருமை.
    கண்டிப்பாக படிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  8. வணக்கத்திற்குரிய ஜோசப் விஜூ அய்யாவின் கவனத்திற்கு!
    எனது "அறிவோமே ஆனந்த ரங்கப் பிள்ளையை!" இந்த பதிவை நோக்கி தங்களது மேலான பார்வையை செலுத்தியமைக்கு முதலில் எனது நன்றி!
    ஆனந்த ரங்கப் பிள்ளை பற்றிய தெரிதலுக்கு ஆணீ வேர் புதுவை மண்ணின் மைந்தர் பிர்பஞ்சன் அவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் நான் சொல்லிய நூல்கள் யாவும் ரங்கரின் கீர்த்தியை மட்டுமே சொல்லிய நுல்கள்.
    நான் மதித்து போற்றும் எழுத்தாளார்
    பிரபஞ்சன் அவர்களிடம் எனக்கு நேரடி பரிச்சயம்
    இருந்ததுண்டு என்பதை இந்த வேளையில் தங்களூக்கு அறிய தருகிறேன்
    1992/1993 ஆம் அண்டு என எண்ணுகிறேன்.
    அப்பொழுது,
    புதுவை அருங்காட்சியகத்தினுள் அமையப் பெற்ற (THE HISTORICAL SOCIETY OF PONDICHEERY) வரலாற்றுச் சங்கத்தில் பல ஆவணங்கள் நூலகத்தில் இருக்கும். அதில் பிரசித்திப் பெற்ற ஆனந்த ரங்கப் பிள்ளை டைரிகளும் அதில் அடக்கம். அங்கு அப்போது வரலாற்றுச் சங்கத்தில் நான் (புதுவை வேலு) பணி செய்தபோது பிரபஞ்சன் அவர்கள் ஆய்வுக்காக அப்போது அங்கு வந்து « ஆனந்த ரங்கப் பிள்ளை பற்றிய இந்த டைரியை கேட்டபோது அதை அவரிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு கொடுத்தவன் அடியேன் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.
    அவரிடம் எனக்கு பரிச்சயம் உண்டு ! அவரை எப்படி நான் மறவேன். ?
    அவரது வானம் வசப்படும் நூல் இதன் பிறகே வந்து இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
    இதே போல் பல ஆராய்ச்சியாளர்களுக்கும் சுழற்சி முறையில் ஆனந்த ரங்கப் பிள்ளை டைரியை வழங்கி உள்ளேன். நண்பர் சத்தியா அவர்கள் கூறிய ஆராய்ச்சியாளர்
    ஜே.ஸ்டீபன் ஸ்டீபன் (IFP - EFEO)
    போன்றவர்களூம் இந்த நூலை வாங்கி சென்றது இன்றும் எனது நினைவில் நிற்கின்றது.
    புதுவை மொழியில் பண்பாட்டுத்துறை இந்த
    பதிவுகளை முறைமை படுத்தியது இதன் பிறகு பல ஆண்டுகள் சென்ற பிறகுதான்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      இவ்விவரங்கள் நான் அறியாதன.
      தங்களைப் பற்றியும் தங்களின் பணிகளைப் பற்றியும் நான் அறியேன்.
      அறியத் தந்தமைக்கு நன்றி.
      ஆனந்தரங்கம்பிள்ளை பற்றிய இடுகையொன்றில், அவரை வெகுஜன வாசிப்பின் மூலம் அறிமுகப்படுத்திய பிரபஞ்சன் பற்றிய செய்தி இருத்தல் நன்றாக இருக்கும் எனக் கருதியே அங்கு அப்படிப் பின்னூட்டம் இட்டேன்.
      அவர் நூல்வழியாகவே நான் ஆனந்தரங்கம் பிள்ளை என்பாரை அறிந்தேன் என்பதனால்தான் இதைக் குறிப்பிட்டேன்.

      இந்நூலை அவர் எழுதவே தாங்கள் உதவி இருக்கிறீர்கள் என்றால்.....

      உங்கள் பணி சிறந்ததுதான்.

      இவ்விவரங்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  9. ஆசானே! தங்களின் விமர்சனம் மிக அருமையாக இருக்கின்றது. சொல்லப் போனால் கதையை விட நீங்கள் சொல்லி இருப்பது அழகாக இருக்கின்றது. இனி அதை வாசிக்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. நீங்கள் அதை நறுக்குத் தெரித்தார் போல சாராம்சத்தைச் சொல்லிவிட்டீர்கள்!

    மிக்க நன்றி! ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பிற்கும் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஆசானே!

      Delete
  10. சுவாரஸ்யம் இல்லாமல் போனாலும் சரி...! பிரச்சனை இல்லாமல் இருந்தால் சரி...! பலத்த அதிர்ச்சியை ஒரு முறை சந்திக்க வேண்டும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அந்த அதிர்ச்சியைச் சந்திக்க முடியாமல்தான் அக்கதைகள் ஒன்றினையும் இங்கு பகிரவில்லை டிடி சார்.

      தங்களின் அன்பு வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  11. எப்படி இவ்வளவு ஆழமாக வாசிப்பது என்று வகுப்பெடுத்துவிட்டு பாமரனின் பார்வை என்று டைட்டில் வேறு...
    The Trendsetters Whatsapp குழுவில் பகிர்ந்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பினுக்கு மிக்க நன்றி தோழர்.

      Delete
  12. மிக நன்றாக விமர்சனம் படைத்திருக்கிறீர்கள் ஐயா!

    இது விதயத்தில் என் நிலைப்பாடு என்ன என்பது தாங்கள் அறிந்ததே. அது மிகவும் எளிமையானது; உண்மையிலேயே இப்படி ஒரு வழக்கம் அக்காலத்தில் இருந்திருந்தால் அதை எழுத்தாளர் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது; இல்லை எனில், உண்மையில் இருக்கிற ஓர் ஊரின் பெயரைக் குறிப்பிட்டு இதை அவர் எழுதியிருப்பது தவறே! இந்நூலில் ஊரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், உண்மையில் இப்படி ஒரு வழக்கம் இல்லாதபொழுது, இவ்வளவு பெரிய எழுத்தாளருக்கு இப்படி ஒரு மோசமான கற்பனை எதற்காக எனும் கேள்வியும் எழுகிறது. ஆக மொத்தம், இதுதான் இது பற்றிய என் நிலைப்பாடு.

    எதற்காக இதை மீண்டும் சொல்கிறேன் என்றால், இப்படிப்பட்ட நிலைப்பாடு கொண்டவனும், உங்கள் விமர்சனத்தைப் படிக்கும்பொழுது இஃது உண்மையிலேயே நடந்த கதை என்கிற நம்பிக்கை ஏற்படும் விதமாக இஃது அமைந்திருக்கிறது; அந்தளவுக்குச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் என்பதைக் கூறத்தான். கதையின் தன்மை அதற்கு முதற்பெரும் காரணியாக உள்ளது!

    நம் சமூகத்தில் பெண் மீது ஆணுக்கு உடைமை உணர்வு இருப்பது உண்மைதான். ஆனால், அது நம் சமூகத்துக்கு உரியது இல்லை; அப்படி இருக்கவும் முடியாது! காரணம், தமிழ்ச் சமூகம் தாய் வழி மரபு கொண்டது. எனவே, ஆரிய வருகைக்குப் பின், அவர்களைப் பார்த்துத் தங்கள் வாழ்க்கை, சமூகம், பழக்கவழக்கம் என எல்லாவற்றையும் அடியோடு தமிழர்கள் மாற்றிக் கொண்டதன் விளைவே ஆண் - குடும்பம் - சமூகம் ஆகியவை பெண் மீது கொண்டிருக்கும் இந்த உடைமை உணர்வுக்குக் காரணம் என்பது சிறியேனின் புரிதல்.

    ஆனால், அப்படிப் பார்த்தாலும், இந்த விதயத்தைப் பொறுத்த வரை, இதை உடைமை உணர்வு எனக் கூற முடியாது என்பதே என் பணிவன்பான கருத்து. கற்பு என்பதைப் பொதுவில் வைக்கும் பழக்கம் இன்னும் நம் சமூகத்தில் வேரூன்றாவிட்டாலும், பண்டைக்காலத்தில் இருந்தே ஒழுக்கம் என்பது இரு பாலினருக்குமானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆண் ஒருவன் நடத்தை மாறிப் போனால் "என்ன இருந்தாலும் அவன் ஆம்பள" எனச் சொல்லி ஏற்கும் இந்தச் சமூகம், அதுவே பெண்ணாக இருந்தால் கொன்று கொளுத்தி விடும் என்பது நாமறிந்ததுதான் என்றாலும், அப்படி வழி தவறிப் போகும் ஆணுக்கு ஒழுக்கமுடைய ஆண் ஒருவனுக்குக் கிடைக்கும் அளவுக்கு மதிப்பு இந்தச் சமூகத்தில் கிடைக்காது என்பதே உண்மை. ஆகவே, பெண்ணொருத்தி வழி தவறுவதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி விளக்குவது என்பது பெண் மீதான ஆணின் உடைமை உணர்வு அடிப்படையிலானது என்பதாக இருக்க முடியாது. நடத்தை தவறுதல் என்கிற, இரு பாலாருக்கும் பொதுவான கருத்தியலின் அடிப்படையிலானதே அது என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  13. அன்பின் விஜுவுக்கு, பதிவைப் படித்தவுடன் தோன்றுவதைப் பின்னூட்டமாக எழுதுகிறேன் இதே பெருமாள் முருகனின் நூலை விமரிசித்துசில நாட்களுக்கு முன் நீங்கள் பதிவிட்டிருந்தீர்கள். அதில்பெருமாள் முருகனே எழுதி உள்ள ஒரு பகுதியை வெளியிட்டு இருந்தீர்கள். இதுவும் சர்ச்சைக்கு முன் எழுதியது என்று கூறி இருந்தீர்கள் ஆனால் அதில் கண்ண்டிருந்த வாசகங்கள் சர்ச்சைக்கு முன் எழுதியது போல் தோன்றவில்லை. அதையே நான் குறிப்பிட்டு பெருமாள் முருகனால் எழுதாமல் இருக்க முடியாது பேனா பிடித்தவன் கையும் சொறி பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்றும் கருத்திட்டிருந்தேன் ஏனோ அதை நீங்கள் பிரசுரிக்க விரும்பாமல் என்னிடம் வேறு ஒரு பின்னூட்டம் தரக் கேட்டிருந்தீர்கள். நமக்குள் நடந்த அஞ்சல் பரிவர்த்தனையையே பின்னூட்டமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி இருந்தேன். என் அறியாமையும் உங்கள் கவனமும் வெளிப்பட்டு இருக்கும் ஆனால் ஏனோ அதுவும் வெளியாகவில்லை. இத்தனை நடந்தும் எப்போதாவது ஏதாவது காரணத்துக்காக பின்னூட்டம் பிரசுரமாகவில்லையா என்று கேட்பது உங்கள் நினைவு சக்தியைச் சுட்டிக்காட்டுவதாக அமையுமே என்றுதான் பின்னூட்டமேதும் எழுத வில்லை. .

    ReplyDelete
    Replies
    1. சார் வணக்கம்.
      எனக்கு நினைவிருக்கிறது.
      பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளன் இறந்துவிட்டான் எனவும், இனி புனைகதைகள் எதுவும் எழுதப்போவதில்லை எனவும் சொன்னதற்குப் பிறகு எழுதப்பட்டதில்லை இந்நாவல்கள்.
      தாங்கள் அது குறித்து , “பேனா பிடித்தவன் கையும் சொறி பிடித்தவன் கையும் சும்மா இருக்காது“ என்று சொல்லியதாகக் கருதித்தான், அப்படி இல்லை என்பதால் அன்று தங்கள் பின்னூட்டத்தை வெளியிடத் தயங்கினேன்.
      இதில் உங்கள அறியாமையோ என் கவனமோ வெளிப்படுத்தப்பட வேண்டும் என நான் விரும்பவும் இல்லை. இதை அறியாமை என நான் கொள்ளவும் இல்லை.
      நான் மதிக்கும் ஆளுமைகளின் பின்னூட்டத்தில் சில தகவல் பிழைகள் என நான் கருதிக் கொண்டிருக்கும் சில விடயங்கள் இருக்கின்ற போது அவர்களிடம் நான் அதைச் சுட்டுவதுண்டு. நான் நினைத்தது தவறாக இருக்கலாம். அவர்கள் அதனைத் திருத்தலாம். அல்லது கவனக்குறைவாக அவர்களுக்கு அப்பிழை நேர்ந்திருக்கலாம். அதைப் பின்னூட்டத்தில் வெளியிட்டு எனது அறிவை அல்லது அறியாமையைக் காட்டிக் கொள்ள நான் விரும்பியதில்லை.
      நிச்சயமாக எவரின் பின்னூட்டங்களையும் நான் இதுவரை எந்தக் காரணத்துக்காகவும் நிராகரித்தில்லை.
      அதைப் பரிசீலிக்ககக் கேட்டிருக்கிறேன். அப்பொழுதும் நீங்கள் விரும்பினால் அதை வெளியிடுகிறேன் என்ற ஒப்புதலுடன்தான்.
      நீங்கள் அனுப்பிய தனியஞ்சலை வெளியிடுவதானால் நான் இடுவதுபோலத்தான் இடமுடியும் என்பதால்தான் இடவில்லை.

      அதற்காக வருந்துகிறேன்.

      நீங்கள் தொடர்ந்துவருவதும் கருத்துகளைப் பதிவதும் எனக்குப் பேரூக்கமாக இருக்கிறது.

      தொடர்ந்து வந்து கருத்துகளைத் தருமாறு வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  14. ஒவ்வொருவருடைய விமர்சனத்தைப் படிக்கும்போது அர்த்தநாரியைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் அவர்களே!

      Delete
  15. “சமூகம் ஏற்றுக் கொண்ட நடவடிக்கைதான் எனினும் அதன் பின்னியங்கும் ஏளனங்கள், புறக்கணிப்புகள், ஒவ்வாமைகள், கீழ்மைகள் ஆகியன ஏற்படுத்தும் சஞ்சலங்கள் ஆணுக்கு வேறாகவும் பெண்ணுக்கு வேறாகவும் இருக்கின்றன. அவற்றை அவர்கள் தத்தமது வழிகளில் எதிர்கொள்கிறார்கள்.”
    என்று கூறி பெருமாள் முருகனின் அர்த்தநாரி நாவலைச் சிறந்த முறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். வாய்ப்புக்கிடைக்கும் போது அவசியம் வாசிப்பேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோ நீங்கள் மேற்கோள் குறிக்கும் கொடுத்திருக்கும் கருத்து நாவலாசிரியருடையது.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete

  16. வணக்கம்!

    நடுநிலை யோடு நவின்றுள்ளீர்! பார்வை
    தொடும்..கலைத் தேனைச் சுரந்து!

    ReplyDelete
    Replies
    1. நடுகல்லாய் ஆனான் ’நடுகல்லை’ என்றார்
      விடுதலை என்றெண்ணி வாழ - விடு..தலையை
      என்பாரிப் பாரிருப்பார் உம்பார்வை நேர்செய்யப்
      பண்பார்ப்பார் பார்ப்பாரோ பார்.



      நன்றி அய்யா!!

      Delete
  17. இந்தப் பதிவை வாசித்து விட்டு நாவலை வாசித்தால் சுவாரசியம் குறைவாகத் தான் இருக்கும்.நன் அறிந்தவரை இந்த அளவுக்கு நாவலின் கருத்துக்களை விமர்சனத்தை யாரும் பதிவு செய்யவில்லை.அவை மேலோட்டமான விமர்சனமாகவே இருந்ததாகப் படுகிறது.
    கஸ்தூரி ரங்கனின் கருத்தை ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  18. இவர் அர்த்தநாரியா ,நான் முன்பு வந்த ஆலவாயன் என்றே நினைத்து உங்க பக்கம் வராமல் இருந்தேன் ....
    உங்கள் பதிவு ஃ பில்டர் காப்பியைக் குடித்த தெம்பைத் தருகிறது ..இவ்வளவு பெரிய நாவலை ஃபில்டர் பண்ணி தருவதென்றால் சும்மாவா :)

    ReplyDelete
    Replies
    1. என்ன இருந்தாலும் இது ப்ரூ இன்ஸ்டென்ட் தானே பகவான்ஜி..!
      நல்லவேளை ஆறிப் போவதற்கு முன் வந்தீர்களே.))

      Delete
  19. பொன்னாவாகட்டும் காளியாகட்டும் அவரவர் தரப்பு நியாயங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கின்றனர். அது தவறில்லை. சராசரி மனிதமனத்தின் வெளிப்பாடுதான் அது. குழந்தையின்மை காரணமாக சமூகத்தால் ஏளனத்துக்கு ஆளாகும் ஒருவன் தன் அன்பு மனைவியாலும் ஏமாற்றப்பட நேரும் சூழலில் எடுக்கும் முடிவுகள் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவை. உணர்வுபூர்வமானவை. இதை மிக அழகாக இருவேறுபட்ட முடிவுகள் மூலம் கதையை வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப கொண்டுசென்றிருப்பது கதாசிரியரின் புனைவுத்திறனுக்கு சான்று. அக்கதைகளின் சாரத்தை மிக அழகாக இங்கு வாசகர்க்கு அறிமுகப்படுத்திய தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் என்னோடொத்த கருத்தினைக் கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  20. தாமதமாக வருகிறேன் ஜோசப்....

    காரணம் ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு இது... இன்றுதான் நேரம் கிட்டியது !

    மாதொருபாகனை சில நாட்களுக்கு முன்னர்தான் படித்து முடித்தேன். அந்த நாவல் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டவர்களில் ஒரு விழுக்காடினராவது அதனை முழுமையாக உள்வாங்கி படித்திருப்பார்களா என தெரியவில்லை ! அப்படி வாசித்திருந்தால் " எப்படி சொல்லலாம் ? " என்ற கேள்வி " எதனால் அந்த சூழ்நிலை ?! "என்பதாய் மாறியிருக்கும் !

    தம்மளவில் குழந்தை இல்லை என்ற குறை மறந்து வாழும் காளி, பொன்னாள் தம்பதியினரின் மனக்குழப்பம் மற்றும் துக்கத்துக்குக்கான காரணம் மொத்தமுமே அவர்களை சுற்றிய சமூகம்தான் ! சமூகத்தில் "மலடி " பெண்ணுக்கு கிடைக்கும் "மரியாதையே" அந்த சூழலுக்கு காரணம் எனும் போது குற்றவாளி யார் ?!

    எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்த நாவல் மாதொருபாகன் !

    நிச்சயம் இந்த இரண்டு பாகங்களையும் படிக்க வேண்டும். மூன்றையும் படித்துமுடித்துவிட்டு எதிர்ப்பை தெரிவித்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என தோன்றுகிறது !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  21. ****தம்மளவில் குழந்தை இல்லை என்ற குறை மறந்து வாழும் காளி, பொன்னாள் தம்பதியினரின் மனக்குழப்பம் மற்றும் துக்கத்துக்குக்கான காரணம் மொத்தமுமே அவர்களை சுற்றிய சமூகம்தான் ! சமூகத்தில் "மலடி " பெண்ணுக்கு கிடைக்கும் "மரியாதையே" அந்த சூழலுக்கு காரணம் எனும் போது குற்றவாளி யார் ?!***

    சாம்: சமூகத்தைக் கையைக் காட்டியே நாம் நம் பிரச்சினைகளுக்கு "குறுக்கு வழி" கண்டுபிடிப்பது சரியல்ல.

    சரி, பொன்னாள் குறையில்லாதவள். அதனால், "குழந்தை பெறத்தகுதியில்லாதவள்" (கவனிங்க, நீங்க சொல்லும் அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூட பிடிக்கவில்லை! நாங்கல்லாம் காட்டுமிராண்டிகள் இல்லை! பெருமாள் முருகன் மற்றும் அவருடைய ஜவாத்ராரிகளை விட பெண்மனம் புரிந்தவர்கள்தாம். பெண்களை நாசமாகப் போகவைத்து பெண் சுதந்திரம் கிடைத்துவிட்டது என மார்தட்டும் பதர்கள் இல்லை நாங்கள்!) என்கிற தவறான அடையாளத்தை அகறுகிறாள். சரி, சப்போஸ், பொன்னாள் போலில்லாமல் உண்மையிலேயே குறையுள்ள பெண்ணாக இருந்தால் சமுதாயம் கொடுக்கும் அம்முத்திரை சரியா? இல்லையே? இயற்கையால் வரும் குறைபாடுகளுக்கு நாம் பொறுப்பில்லை. அதைச் சொல்லி நம்மைத் துன்பப்படுத்தும் சமுதாயத்தையும், அவர்களிடம் நாம் பெற விரும்பும் நற்சான்றிதழும் தேவையற்றது. கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருந்தால் ஊர் சமூகம் எல்லாம் ஒண்ணுமே இல்லை சாம். இதுகூடப் புரியாமல் குறுக்குவழியில் நான் என் சமுதாயத்திடம் இருந்து தப்பிக்கிறேன் என்று பொன்னாள் போல் கிளம்புவது சரியல்ல! சமுதாயத்தைக் கையைக்காட்டி பொன்னாளை தவறான வழியில் அனுப்பும், பெருமாள் முருகன், இங்கே பொன்னாளை கூட்டிக்கொடுக்கும் மாமா பட்டம் பெறத் தகுதி வாய்ந்தவன்.

    நீங்கள் குற்றமற்றவர் என்றால் சமுதாயத்தை புறக்கணிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சமுதாயத்தை சரிக்கட்ட குறுக்கு வழியில் போய்விட்டு எதற்கெடுத்தாலும் சமுதாயத்தையே கையைக்காட்டுவது, terrorist தன் நிலைப்பாடை சரி என்பதுபோலாகும்.

    ReplyDelete