Monday, 16 March 2015

பெருமாள் முருகனின் ஆலவாயன்.



“ போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக்கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுந்தியது. மேலே பார்த்தான். பூவரசங்கிளைகள் வானில் விரிந்து பரவியிருந்தன “ என்ற வரிகளுடன் முடிந்திருக்கும் பெருமாள் முருகனின் மாதொருபாகன், காளியின்  தற்கொலை மனவோட்டத்தைக் காட்டுவதாய் முடிந்திருந்தது.

காளி தற்கொலை செய்து கொண்டானா ? இல்லையா ? பொன்னாவின் நிலை என்ன?  என்ற கேள்விகளைப் படிப்போரின் யூகத்திற்கு விட்டபடி நாவலை முடித்திருப்பார் பெருமாள் முருகன். சிறு வயதில் கதைகளைப் படிக்கும்போதும் பின்பு சிறுபிள்ளைத்தனமான கதைகளை எழுதியபோதும் கதை உணர்த்தும் நீதி என்ன என்பதைச் சொல்ல  வேண்டியிருந்தது. வாசிப்பின் பரப்பு விரிவடைந்த போது  நீதி போதனை, பிரச்சாரம் இவற்றைச் செய்வற்காக ஆக்கப்பட்டவை புனைவுகள் இல்லை என்பது புரிந்தது.


எழுத்தாளன் உருவாக்கும் ஒரு அனுபவத்தை  எழுத்தின் வாயிலாக வாசகனுக்குக் கடத்துகிறான். அது வாசகனின் அனுபவத்தைத் தொட்டுவிடும் போது படைப்பு  பேசப்படுகிறது.

மாதொருபாகனின் முடிவு காளி தற்கொலை செய்து கொண்டானா இல்லையா என இருவேறு கேள்விகளை முன்வைக்கத் திரு. பெருமாள்முருகன் அதன் இரு வேறு பாதைகளிலும் வாசகனைத் திருப்பி ஆலவாயனையும், அர்த்தநாரியையும் படைத்திருக்கிறார்.

மாதொருபாகனால் உருவான சர்ச்சைகளை எதிர்கொண்ட பெருமாள் முருகன் அவர்கள் ஆலவாயன், அர்த்தநாரி என்னும் இரு நாவல்களின் முன்னுரையிலேயே கொடுத்திருக்கும்

“அய்யா சாமிகளே, தங்கள் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம். இந்த நாவல் என்றல்ல; என்படைப்புகள், எழுத்துகள் எல்லாவற்றின் களமும் தமிழகத்தில் உள்ள ஊர்கள் கிடையாது. ஏன, இந்த உலகத்தைப் பற்றியே நான் எழுதவில்லை.  நான் எழுதுவது எல்லாம் அசுரலோகத்தைப் பற்றித்தான். என் எழுத்தில் வரும் மாந்தர்கள் எல்லோரும் அசுரர்கள். அவர்கள் எல்லாரும் அசுர சாதிப் பிரிவினர். அவர்கள் பேசுவது அசுரமொழி. இந்த லோகத்தில் வசிக்கும் யாரையாவது  குறிப்பதாகவோ எந்தச் சாதியையாவது எந்த இடத்தையாவது சுட்டுவதாகவோ தோன்றினால் அது மாயை. ஆகவே தயவு செய்து அந்த மாயையில் இருந்து மீண்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.“

என்ற தன்னிலை விளக்கம் வேதனையின் பகடி என்பதை விளக்கத் தேவையில்லை. மாதொருபாகனுக்கு வந்த எதிர்ப்புக்குரலின் சாரம் எம் மண்ணை எம் சாதியை இழிவுபடுத்தி விட்டார்.  இல்லா ஊரையோ இனத்தையோ அவர் இப்படிச் சொல்லியிருந்தால் நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம் என்று முன் வைத்த வாதத்திற்கு ஆசிரியரின் மறுமொழிதான் இது.

இலக்கணத்திற்கு வருவதற்கும் ‘எதற்கெடுத்தாலும் தொல்காப்பியம் சங்ககாலம் என்று  பழமைவாதம் பேசுகிறானே‘ என்னும் நினைப்பினை ஏற்படுத்துவதற்கும் வருந்துகிறேன்.

படைப்பாக்கம் குறித்துப்பேசும் நம் இலக்கணங்கள் நான்கு வழி முறைகளைச் சொல்கின்றன.

உள்ளதை வைத்து உள்ளதைச் சொல்வது, ( நடந்த சம்பவம் )

உள்ளதை வைத்து இல்லாததைச் சொல்வது, ( நடந்த கதை )

இல்லாததை வைத்து உள்ளதைச் சொல்வது, ( புராண வரலாறு ? )

இல்லாததை வைத்து இல்லாததைச் சொல்வது. ( கட்டுக்கதை )
                                                ( தொல்.பொருள். 53. நச்.)

இங்குப் பெருமாள் முருகனின்  மாதொரு பாகன் என்னும் நாவல் இரண்டாம் வகையில் எப்படி அமையலாம் என்று எழுந்த எதிர்ப்புக் குரலால்  ஆலவாயன் அர்த்தநாரி ஆகிய இரு நாவல்களையும் நான்காம் வகைக்கு மாற்றி விட்டதாகப் பிரகடனம் செய்வதாக எனக்குத் தோன்றியது. அந்த உரிமைகூட நூலை எழுதிய ஆசிரியருக்கு இல்லையா என்ன?

சரி கதைக்கு வருவோம்.


“ஆலவாயன்“ எனும் நாவல் காளி அந்தப் பூவரச மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் என்ற முடிவைத் தேர்ந்து அதன் வழியில் பயணிக்கிறது.

தான் மிக விரும்பிய மனைவி தன்னை ஏமாற்றியதைத் தாள இயலாமல் அவளுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியே காளி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான்.

அவனது தற்கொலைக்கு முன்பான மனநிலையை  நாவல் இப்படிப் பதிவு செய்கிறது.

“பொன்னா அந்த இரவில் இன்னொருவனோடு இருக்கப் போனாள் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்தவள். அவள் உடலில் தன்வாசம் தவிர இன்னொரு வாசம் ஏறுவதை அவன் ஒப்பவேயில்லை. அவனோடு கலந்த உடம்பு. அவன் வாசத்தைப் பன்னிரண்டு ஆண்டுகளாகச் சேர்த்துக் கொண்டிருக்கும் உடம்பு. அதன் ஒவ்வொருதுளியும் தனக்கே சொந்தம் என்று நினைத்தான். தன் உடலைவிடப் பொன்னாவின் உடலையே அவன் நன்கு அறிவான். வாயில் பன்னீர் வாசம் என்பான். கிச்சத்தில் சோற்றுக் கற்றாழை நாற்றம். மாரில் ஆட்டுப்பால் மொச்சை. உயிர்நிலையில்ஆவாரம் பூ மணம். அவள் உடலை வாசனைகளின் கூட்டு என்று அறிந்து வைத்திருந்தான். ‘சரி பேச்சு?‘ என்பாள். ‘ரத்த வீச்சம்‘ என்பான். உடனே அவளுக்குக்குக்  கோபம் வரும். ‘எல்லாரும் சொல்றாப்பல நீயும்சொல்ற அப்படியா கத்திக்  கொதர்றாப்பலயா பேசறன் நான்?‘ என்று அழுவாள். ‘ஆட்டு ரத்தத்தைப் பொரிச்சுப் பாரு. அப்பபடி வாசம் இருக்கும். அதச் சொன்னேன்‘ என்று சமாதானத்திற்கு வருவான். அவள் உடலின் ஒவ்வொரு மணத்திலும் தன் மணத்தையே கலந்து இரண்டு உடல்களையும் ஒரே வாசனையின் பிரதிகளாய் மாற்றிவிட முயன்று கொண்டிருந்தவன் அவன். இன்னொரு வாசம் அதிலேறினால் களங்கம். எதனாலும் போக்கிவிட முடியாத களங்கம். களங்கத்தின் மேல் தன் கை பாடாது என்று மனதில் உறுதியாகச் சொல்லிக் கொண்டான்.
…….
அவளுக்குக் காலமெல்லாம் நினைத்திருக்கும்படி தண்டனை தரவேண்டும்.  தன் சாவு அவளுக்கு நிரந்தரத் தண்டனையாக இருக்கும் என நினைத்தான். ஒவ்வொரு நாளும் தன்னை நினைத்து அவள் அழ வேண்டும். இப்படிச் செய்தது தப்பு என்று உணர்ந்தபடியே இருக்க வேண்டும்.“


காலையில் தொண்டுப்பட்டிக்கு வரும் மாராயிதான் பூவரசில் தொங்கும் காளியின் உடலைக் காண்கிறாள். அவளது அலறலுக்கு அருகில் உள்ள சிலர் சேர்கின்றனர். காளியின் பிணம் இறக்கப்படுவதை இப்படிக் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

“ கண்ணான் மரத்தில் ஏறினான். கயிறை வாதோடு சேர்த்து வெட்டினான்.  அவனுக்குத் தெரிந்து விட்டது. ஆள் உயிரோடு இல்லை. அவிழ்ந்த குடுமி புறங்கழுத்தில் விரிந்து கயிற்றுச் சுருக்கை மறைத்திருந்தது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்தாலும் அவசரமாக வெட்டினான். வடக்கயிறு. பெரிய பெரிய பிணிகள் சேர்ந்து இரண்டு கைக்கும் அடங்காத மொத்தம். அரிவாள் கூரில்லை. சோளத்தட்டு வெட்டி மழுங்கிப் போயிருந்தது. வாதின் இருபக்கமும் கால்களைப் போட்டு உட்கார்ந்தது கொண்டு அரிவாளைப் பலமாக ஓங்கிக் கயிற்றில் போட்டான். அவனுககும் பதற்றமாக இருந்தது. கயிறு இளக இளகக் காளி கீழே இறங்கினான். கீழே நின்றிருந்த ராசானும் செல்லனும் காலைப்பிடித்து மெல்லக் கீழே விட்டார்கள். பெரும் பாரத்தைத் தாங்கி இறக்குவது போலிருந்தது. இறங்க இறங்க ஒரே நாற்றம். அப்போது அதைக் கவனிக்கவில்லை. இறக்கிப் போட்டு அழுந்திக் கிடந்த கழுத்துக் கயிற்றை இழுத்துத் தளர்த்தி மூக்கில் கை வைத்துப் பார்த்தார்கள். ஒன்றும் இல்லை. நெஞ்சுக் கூட்டில் கொஞ்சம் வெதுவெதுப்பு இருந்தது.      “ இப்பத்தான் ஆளு முடிஞ்சிருக்கறான்“ என்றான் செல்லன்.

“ …….செல்லன் மேலும் ராசான் மேலும் பீ நாற்றம். உயிர் போகத் துடித்த துடிப்பில் பீ வெளித்தள்ளியிருந்தது. மாணி பெருத்து வேட்டிக்கு மேல் முட்டிக் கொண்டு நின்றது. இருவரும் ஓடித் தாழியில் கிடந்த தண்ணீரில் கழுவிக் கொண்டார்கள். குடத்தில் இருந்த தண்ணீரைக் கொண்டுவந்து காளியின் மேல் ஊற்றிக் கழுவித் தூக்கில் கிடந்த வெறொரு வேட்டியை எடுத்துச் சுற்றினார்கள். என்றாலும் விறைத்திருந்த மாணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன் மேல் துணிகளைப் போட்டுத்தான் மூட முடிந்தது. கிட்டித்த பற்களை விடுவித்து நாக்கை உள்ளே தள்ளவும் விழிகளை மூடவும் இயலவில்லை. ‘நாணுகிட்டவன் பொணத்தப் பாக்கற  கொடும மாதிரி ஒலகத்துல எதும் கெடையாதுடா சாமீ. ஆருக்கும் மூஞ்சியக் காட்ட வேண்டாம் முழுசா மூடிருங்கடா‘ என்று பெரியசாமி சொன்ன பிறகுதான் அதைச் செய்தார்கள்.“

பொன்னா வருவதற்குள் காளியின் பிணத்தை இறக்கிவிட்டார்கள். அவள் நேசித்தவனின் அதுவரை கண்டறியாத கோர முகம் காணச் சகியாமல் மயக்கம் அடைகிறாள் பொன்னா.

தன்னை ஏமாற்றிய தன் உறவுகள் மேல் கோபம் கொள்கிறாள்.

தனது மடமையை எண்ணித் தன்னைத் தானே நோகிறாள்.
.
காளியின் மரணத்திற்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பாத  பொன்னாவையும் இழந்துவிடக் கூடாது என்பதற்காக பொன்னாவின் தாய் நல்லாயியும், காளியின் தாய் மாராயியும் அவளை மாற்றி மாற்றிக் காவல் காக்கின்றனர்.

காளியின் மரணம் பற்றிக் கேட்பவரிடத்துச் சொல்ல மாராயி ஒரு கதையை உருவாக்குகிறாள்.

மாமியார் வீட்டுகுக் சென்ற காளி பழைய சேக்காளிகளைச் சந்தித்த போது ஒருவன் “ பிள்ள பெக்க சமுத்தில்லாதவன் எல்லாம் வாயத்தொறந்து பேசக்கூடாது“ என்று சொன்னதாகவும் அதற்கு ரோஷப்பட்டுத் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகிறாள்.

பொன்னாவுக்கு வேறு நபருடன்  தொடர்பு என்பதை அறிந்துதான் காளி தற்கொலை செய்து கொண்டான் என ஊர் பேசுகிறது.

காளியின் தற்கொலையை அடுத்து வெட்டப்பட இருந்த அந்தப் பூவரசமரத்தை வெட்டக் கூடாது என்று தடுக்கிறாள் பொன்னா. அதன் ஒரு வாது மட்டும் வெட்டப்படுகிறது. அது பொன்னாவால் தொண்டுப்பட்டியிலேயே நடப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

பூவரச மரம் இம்மூன்று நாவல்களிலும் முக்கிய இடம் பெறுகிறது.

பொன்னாவிற்குக் காளியின் நினைவுகளே காணுமிடம் எங்கும் தென்படுகின்றன.  தன் கண்பார்க்கும் ஒவ்வொன்றிலும் அவனது ஆதிக்கம் தெரிகிறது. தன் மேலும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மேலும் வன்மம் கொள்கிறாள் அவள்.

அவன் கைபட்டுப் பொலிந்த காடு காய்ந்து கிடப்பதைக் காணச் சகியாது ஒரு கட்டத்தில்  காட்டில் இறங்கி மிகக் கடுமையாக வேலை செய்ய ஆரம்பிக்கிறாள்.

பூவரச மரம் காளியின் ஆவி உறையும் இடமாகவும் இரவு அதிலிருந்து அவன் ஒவ்வொரு மரமாக அலைவதாகவும் ஊராரால் நம்பப்படுகிறது. ஒரு நாள் இரவு பூவரச மரத்திலிருந்து காளி இறங்கிப் பொன்னாவிடம் வருகிறான்.

பொன்னாவைப் பார்க்கிறான். பொன்னா அவனோடு பேசுகிறாள். தன்னுடைய செயலுக்காக அவன் வருந்துகிறான். இனி அவளைவிட்டுப் போகப் போவதில்லை  என்று உறுதி கூறுகிறான்.

‘ அவன் முகம் புதைத்துக் கொண்டான். இப்போது அவனுக்குக் கட்டிலில் தனியிடம் வேண்டியிருக்கவில்லை. வெகுநேரம் அவன் இருந்தான்…….
காளி எவ்வளவு நேரம் இருந்தான் , எப்போது போனான் என்று எதுவும் தெரியவில்லை பொன்னாவுக்கு.‘

அன்று வெகுநேரம் கழித்து எழும் பொன்னாவிற்கு வரும் ஓங்கரிப்பு அவள் கருவுற்றிருப்பதைக் காட்டுகிறது.

இரவில் தன் கனவில் வந்த காளி தந்த குழந்தை எனவே நம்புகிறாள் பொன்னா. ஊர் அவள் கர்ப்பம் குறித்தும்  பலவாறு பேசுகிறது.       கணவன் இறந்த சில மாதங்களில் ஒரு பெண் கருவுற்றால் பலரறிய ஊர் கூடி அக்குழந்தை தன் கணவனுக்குத் தரித்ததுதான் என்று அறிவித்து அதை அனைவரும் ஏற்றால் தான் அது முறையான வழியில் பிறந்த குழந்தை என ஏற்று அங்கீகரிக்கப்படும் எனும் ( அசுர ? ) வழக்கு அங்கிருக்கிறது. அதன் படி ஊர் கூடிப்  பொன்னா காளிக்கே கருத்தரித்திருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

பொன்னாவிற்குக் குழந்தை பிறக்கிறது.

காளியின் சாயலில் அக்குழந்தை இருக்கிறது என்று பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்.

அவள் தன் குழந்தையைப் பார்க்கிறாள்.

வாய்திறந்து குழந்தை சிரிக்கிறது. அப்போது “ எனக்கு ஆல  வாயா ? “ என்ற குரல் அவளுக்குக் கேட்கிறது.

அது பதினான்காம் நாள் திருவிழாவில் அவளைக் கூட்டிச் சென்ற அவனது குரல்.

மாதொருபாகனில் சொல்லப்படாத அந்தக் காட்சிகள் விரிகின்றன.

அவன் அவளை மலைப்பகுதி போன்ற ஒரு இடத்திற்குக் கூட்டிச் செல்கிறான்.

“கொழந்தை வேணுமின்னு வந்தயா?
அவள் ஒன்றும் சொல்லாமல் அவன்மார்பில் முகத்தை வைத்துக் கொண்டாள். ‘கெடச்சிரும்‘ என்றான். அவள் இதழ்களைத் தடவினான். ‘பேச மாட்டயா? ‘ அவள் கைகளே பேசின.

‘கொழந்தைக்கு எம்பேரு வைப்பியா?‘ அவள் மெல்ல அவன் காதில் ‘ம்‘ என்றாள். பையன் பொறந்தாலும் பிள்ள பொறந்தாலும் வெக்கோணும் ‘ம்‘ என்று அவள் ஆமோதிப்பை எதிர்பார்த்துக் கேட்டான். அவள் தலையசைத்தது அவன் மார்புக்குத் தெரிந்தது. ‘எம்பேரு மணி‘ என்றான். ‘எங்க எம்பேரச் சொல்லு‘ என்றான். அவள் முன்போலவே காதோரமாய் மணி என்று கிசுகிசுத்தாள். ‘ அந்த நெலா காதுக்குள்ள பாயறாப்பல இருக்குது‘ என்றான்.

அவள் முகத்தைத் தன் முகத்ததுக்கு நேராகத் தூக்கி நிமிர்த்தி ‘எனக்கு இன்னொரு பேரும் இருக்குது என்று சிரி்ததான். பாரு சிரிக்கறப்ப எம் வாயி பெரிசாத் தெரீதா ? நான் ஆலவாயனா பார்த்துச் சொல்லு “ வாயைத் திறந்து அகட்டிக் காட்டினான் பெரிய வாய்தான். எப்படிச் சொல்வது,? அவள் லேசாகச் சிரித்ததை அவன் அறிந்தான்.

‘பெரிய வாய்தான? அதனாலதான் எனக்கு ஊர்ல பட்டப் பேரு ஆலவாயன். எனக்கு ஆல வாயா? எங்க நீ சொல்லு. நான்ஆலவாயனா?.
பையனாப் பொறந்தா ஆலவாயன்னு வெய்யி, பொண்ணாப் பொறந்தா ஆலவாய்ச்சி. என்ன சரியா?‘

‘……. அடுத்த வருசமும் வரோனும். குழந்தய எழுத்துகிட்டு வரோனும் . உன்னய எதிர்பாத்துக்கிட்டு நிப்பன். செரியா. வருவ நீ. எனக்குத் தெரியும். என்னய மறக்க மாட்ட‘

என்று அன்று சொன்னது அவள் நினைவுக்கு வருகிறது.

மாராயி குழந்தைக்கு அர்த்தநாரி என்று பெயரிட விரும்புகிறாள்.

ஆலவாயன் இப்படி முடிகிறது.

“அர்த்தநாரி ……….அர்த்தநாரி……. அர்த்தநாரியா உம்பேரு? செரி, உன்னய மணின்னு கூப்பிடுவனாம். மணிக்குட்டி, மணிச்செல்லம் . ….‘ குழந்தை வாயை அகட்டி நீளமாகச் சிரித்தது.
‘ இங்க பாரு … உனக்கு இன்னொரு பேரு வைக்கிறன். ஆருகிட்டயும் சொல்லக் கூடாது. என்ன.. ஆலவாயா….. டேய் ஆலவாயா..‘ என்று ரகசியக் குரலில் கூப்பிட்டுக் குழந்தையை ஒட்டிப்படுத்து நெஞ்சொடு அணைத்துக் கொண்டாள்.
அந்த அணைப்பு பெரும் இன்பமாக இருந்தது பொன்னாவுக்கு.

(மைனர்)நல்லுப்பையன் மாமாவும் நாவலின் சுவாரசியத்திற்கு அவ்வப்போது வந்து போகிறார். நல்லுப்பையனின் தம்பி, தன் மனைவியைச் சொத்திற்காக நல்லுப்பையனுடன் அனுப்புவதும் அவளோ அவருடனேயே இருக்க விரும்பித் தன் கணவனை மறப்பதும், சொத்தே வேண்டாம் தன் மனைவி தன்னுடன் வந்தால் போதும் எனத் தம்பியின் குடும்பம் அங்கலாய்ப்பதும், அவளது மகன்கள் நல்லுப்பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவதும் அவர் ஓடி ஒளிவதும், இன்னும் அவர் கூறும் சேஷ்டைக் கதைகளும் கதைக்குத் தொடர்பில்லாமல் சுவாரஸ்யத்திற்காய் ஆசிரியர் சேர்த்தவை எனவே எனக்குத்  தோன்றுகின்றது. நாவல் என்பதற்காக இது போன்ற கிளைகளை அனுமதிக்கவும் வேண்டியிருக்கிறது


ஜெயகாந்தன் அக்கினிப்பிரவேசம் என்னும் சிறுகதைக்கு வந்த எதிர்வினைகளை ஒட்டி அக்கதையின் முடிவினை மாற்றிச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்‘ என்றொரு கதையை எழுதி இருக்கிறார்.

இங்குப் பெருமாள் முருகன்  மாதொருபாகனின் படைப்பாளி என்கிற உரிமையில் காளிக்கு என்ன ஆனதோ என்கிற வாசகனின் யூகத்திற்கான இருவிடைகளுள் காளியை இறப்பித்து ஆலவாயனை உருவாக்கி இருக்கிறார்.

மாதொருபாகனின்  தொடர்ச்சி என்பதை விட இம்மூன்று நாவல்களையும் தனித்தனியே வாசிக்க வைக்க வேண்டும் என்னும் ஆசிரியரின் முயற்சியால், மூன்றையும் படிப்பவர்க்குக் கூறியது கூறலாக ஒரு நாவலில் சொல்லப்படும்  அதே நிகழ்ச்சியை மீண்டும் இன்னொரு இடத்தில் படிக்கும்போது அது ஏற்படுத்தும் அலுப்பைத் தவிர்க்க முடியவில்லை.

நாட்டார் வழக்காற்றியல், கணவனை இழந்த பெண் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், காட்சிப்படுத்தலின் துல்லியம்  இவற்றிற்காய் இந்நாவலை வாசிக்கலாம்.

இப்படிச் சொல்லி இருக்கலாம் இப்படிச் சொல்லியே இருக்கக் கூடாது என்ற விமர்சகர்களுக்குத் தமிழ்ப்படைப்பாளியின் மற்றுமொரு விருந்து    “ ஆலவாயன் “



Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

46 comments:

  1. வணக்கம்
    ஐயா
    இந்த நாவல் பற்றிய சர்சையை BBC தமிழோசை வாயில் நான் அறிந்தேன் சர்சைக்குரிய நாவலை படிக்க எனக்கு கிடைக்க வில்லை என்ன பிரச்சினை என்று தெளிவாக அறிய தங்களின் பதிவு வழிதான் இந்த நாவல் பற்றிய சாரம்சத்தை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி. ஐயா த.ம 2


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன்.
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. எந்தளவு நொந்து போய் உள்ளார் என்பது முன்னுரையில் புரிகிறது...

    நிறையையும் குறையையும் சொன்ன விமர்சனம் அருமை ஐயா...

    ReplyDelete
  3. அன்புள்ள அய்யா,

    ‘பெருமாள் முருகனின் ஆலவாயன்’- எனும் நாவல் பற்றிய தங்களின் விமர்சனப் பார்வை ... அருமையாக இருக்கிறது. அந்த நாவலைப் படிக்கத் தூண்டுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

    காளி பொன்னாவின் மணத்திலும் தன் மணத்தையே கலந்து இரண்டு உடல்களையும் ஒரே வாசனையின் பிரதிகளாய் எண்ணிச் சொல்வது இரசிக்கும்படியாய் உள்ள நேர்த்தியான நடை.

    காளியின் சாவு பொன்னாவுக்கு நிரந்தரத் தண்டனையாக இருக்கும் என நினைத்தே தூக்குப் போட்டுக் கொள்கிறான்.
    ‘செல்லன் மேலும் ராசான் மேலும் பீ நாற்றம். உயிர் போகத் துடித்த துடிப்பில் பீ வெளித்தள்ளியிருந்தது. மாணி பெருத்து வேட்டிக்கு மேல் முட்டிக் கொண்டு நின்றது... ’என்று தூக்கிட்டு இறந்தவர்களின் நிலை எப்படியிருக்குமோ அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

    பொன்னாவிற்குக் குழந்தை பிறக்கிறது. வாய்திறந்து குழந்தை சிரிக்கிறது. அப்போது “ எனக்கு ஆல வாயா ? “ என்ற குரல் அவளுக்குக் கேட்கிறது.

    ‘கொழந்தைக்கு எம்பேரு வைப்பியா?‘ அவள் மெல்ல அவன் காதில் ‘ம்‘ என்றாள்.

    குழந்தையில்லாமல் தவிக்கும் ஓர் பெண் - சமூகம் அவளைப் பார்க்கும் விதம் - மலடி என்ற பட்டத்தை மறைக்க...குழந்தைக்காகக் கணவனை இழப்பது...ஆலவாயன் மக்கள் மனங்களை ஆளவந்தவன்.

    நன்றி.
    த.ம. 4.

    ReplyDelete
    Replies
    1. விரிவான தங்களின் கருத்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  4. குழந்தை இன்மையால் தம்பதிகள் என்னென்ன இழிச்சொற்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதை காளி மூலமும் பொன்னா மூலமும் நன்றாக உணர்த்தியிருப்பார் பெருமாள் முருகன்.
    சில இடங்களில் ஆபாசம் தூக்கலாக இருப்பதை தவிர்த்திருக்கலாம். ஆனாலும் அருமையான நாவல்.

    ஆலவாயன் குறித்த தங்கள் விமர்சனமும் நாவலை படிக்கும் ஆவலை தூண்டி விட்டிருக்கிறது!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்!
      ஆபாசம் என்னும் வரையறை வட்டார வழக்குகள் எழுத்துப் பொதுமொழியில் தமிழ் எழுதப்பட்ட போதே இயல்பாயிற்று.
      அவர்கள் இயல்பாகப் பேசும் கெட்டவார்த்தைகள் அவர் வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளில் தான்கலந்தன.
      இன்னும் ஆபாசம் என்னும் வரையறையில் நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகளை நாட்டார் வழக்காற்றியல் சர்வ சாதாரணமாகக் கையாள்கிறது. கடந்து போகிறது.
      கி. ராஜநாராயணனின் எழுத்துகளில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம்.
      கதைக்கு அதன் அவசியம், அளவு இவற்றை ஒட்டி அதன் தேவையைப் படைப்பாளி நிர்ணயிக்கிறான்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  5. திரு ரூபன் அவர்களுக்கு தங்களுக்காக 'மாதொருபாகன்' நாவலின் பிடிஎப் லிங்கை கீழே கொடுத்துள்ளேன். டவுன்லோடு செய்து படித்துப் பாருங்கள்..

    https://dl.dropboxusercontent.com/u/602…/Mathoru%20Pagan.pdf

    ReplyDelete
  6. வணக்கம் ஊமைக்கனவுகள் !

    ஆலவாயன் காதையை அப்படியே படித்தார்ப்போல் உங்கள் எழுத்து நடை அமைந்து இருக்கிறது வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன் !

    தம + 1

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரி கவிஞர் என்னும் போதுதான் எங்கேயோ இடிக்குது
      இன்னும் தமிழின் எல் கே ஜி மாணவனாய் இருப்பதால் ...! இருந்தம் தங்களின் ஊக்கப்படுத்தலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் புலமையே !

      Delete
  7. கதையை நன்கு எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
      கதையை எழுதியவர் பெருமாள் முருகன் அல்லவா..?

      Delete
  8. ///பொன்னாவிற்குக் குழந்தை பிறக்கிறது. வாய்திறந்து குழந்தை சிரிக்கிறது. அப்போது “ எனக்கு ஆல வாயா ? “ என்ற குரல் அவளுக்குக் கேட்கிறது.

    ‘கொழந்தைக்கு எம்பேரு வைப்பியா?‘ அவள் மெல்ல அவன் காதில் ‘ம்‘ என்றாள்.//
    சற்று முரணாகத் தோன்றுகிறது நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கரந்தையாரே!

      காளியின் குழந்தைதான் அது என நம்பும் பொன்னாவிற்குக் குழந்தையைப் பார்த்ததன் பின் அது ஆலவாயனாகத் தோன்றுவது ஏன்......?
      ஊர் ஒருவேளை நம்பட்டும். பொன்னாவிற்கல்லவா தெரியும் அது யாருடைய குழந்தை என...? அவள் குரலில் கசிந்த ரகசியத்தைக் கவனிக்கவில்லையா ?

      இது சரியில்லை என்று சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.


      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  9. கதையின் விமர்ச்சனம் முழுக் கதையையும் நானே படித்தது போன்று , தோன்ற
    அமைந்துள்ளது! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  10. ம்ம்ம் மற்ற இரு பாகங்களையும் வாசிக்க வில்லை ஆசானே! கிடைக்கவில்லை அப்போது. நிறுத்திவைத்ததாகச் சொன்னார்கள்.

    அழகான, உங்கள் பார்வையில், நிறைகளும், குறைகளும் என்று விமர்சனம் அருமை ஆசானே! மற்ற இரு பாகங்களின் சாராம்சமும் அறிந்து கொண்டோம்.

    மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முன்பே வாசித்தது ஆசானே..!
      மாதொருபாகனின் சர்ச்சை பெரிய அளவில் ஆவதற்கு முன்பே பெருமாள்முருகனால் எழுதப்பட்டவை அதன் இரு பகுதிகளான இவ்விரண்டு நாவல்களும்.

      கிடைக்கிறது என்றே நினைக்கிறேன் ஆசானே!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  11. கதை படிக்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம். படிப்பவர் மனதில் கதை என்று எண்ணத் தோன்றாது கதையோடு பயணிக்கும் சகவாசியைப்போல நிகழ்வுகளோடு ஊன்றிப் பார்க்கும் காட்சியமைப்புகளை அவர் எழுத்து நடையில் பார்க்க முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. பெருமாள்முருகன் அவர்களின் காட்சிப்படுத்தல் துல்லியமானது.
      வட்டாரவழக்கில் புழங்கிக் கொண்டு அவர் சேமித்துள்ள அனுபவங்கள் நாவல் முழுதுமே இறைக்கப்பட்டிருக்கின்றன.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  12. ஆலவாயனை பதிவிறக்க இயலுமா?

    ReplyDelete
  13. ஆலவாயனை பதிவிறக்க இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் கிடைக்கிறது.
      பதிவிறக்க முடியுமா என்பது தெரியவில்லை அய்யா!

      Delete
  14. 'மாதொருபாகன்' பற்றியே எல்லோரும் பேசித் தீர்த்தபொழுது, இதன் அடுத்த பாகத்தில் அவர் என்னதான் கூறியிருக்கிறார், கதைக்கு எப்படித்தான் முடிவு கொடுத்திருக்கிறார் என்பதை அறிய வேண்டியதன் முதன்மைத்தனம் பற்றித் 'துளசிதரன் தில்லையகத்து' ஐயாவும், அம்மணியும் வலியுறுத்தியிருந்தனர். அதைச் செவ்வனே தாங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஆனால், கதை அவர் மீதான் மக்களின் சீற்றத்தைப் போக்கும் வகையில் இல்லை. (அது சரி, அதற்காக அவர் இதை எழுதவும் இல்லை; அதற்கு முன்பே எழுதிவிட்டார்!).

    ஆனால், கதையின் சுருக்கத்தைச் சுவைபடத் தந்திருக்கும் தாங்கள் இதைப் பற்றிய தங்கள் சீற்றத்தைப் பதிவு செய்யவில்லையே! அதை நான் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!
      ஆலவாயன் காளியைஇறப்பித்து எழுந்தது என்றால் அர்த்தநாரி காளிக்கு உயிர் கொடுத்துத் தொடரும்.

      மக்களின் சீற்றம்.......???!!!

      இதில் எனக்கு விளைந்த மகிழ்ச்சி என்னவென்றால் ஒரு எழுத்தாளனால் ஒரு இனத்தைக் களங்கப்படுத்திவிட முடியும் அல்லது புனிதப்படுத்திவிட முடியும் என்ற அளவிற்கு அவனது கைகளுக்கு உரிய மரியாதையைத் தமிழினம் அளிக்கிறது என்பதும் இத்தனை ஆயிரம் பேர் ஒரு தமிழ் எழுத்தாளனின் கதையைப் படித்துப் பொங்கிப் புரட்சி செய்யும் அளவிற்குப் போகிறார்கள் என்பதும் தான். :))

      எழுத்தாளன்மேல் இவ்வளவு மதிப்பை பயத்தை கோபத்தை வைத்திருக்கும் ஒரு வாசிக்கின்ற சமூகத்தின் சீற்றம் என்பதற்காய் நான் பெருமிதமே கொள்கிறேன்.

      நல்லவனை அறவாணன் என்றும் கெட்டவனை நஞ்சப்பன் என்றும் பெயர் வைத்துச் செவ்வியான் ஆக்கமும் அவ்வியான் கேடும் கொண்டமைந்த தமிழ் நாவல்கள் அறுபதுகளில் பெரும்வரவேற்பைப் பெற்றன. மக்கள் கடைகளில் அவற்றின் வருகைக்காய்க் காத்திருந்து வாங்கிப்படித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

      காலம் மாறிற்று.

      தமிழில் வாசிப்போர் குறைந்தனர்.



      அதுபோன்ற நாவல்களைக் கட்டமைத்தால் எந்த எழுத்தாளனும் கல்லால் அடிபடப்போவதில்லை.

      புதுமைப்பித்தனின் பொன்னகரம் சிறுகதையை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா பொன்னகரம்!'

      எனுமாறு அது முடியும்.

      கதைகளைக் கதைகளாகப் பார்க்க வேண்டும். கருத்துகளைக் கருத்துகளால் விவாதிக்க வேண்டுமே அல்லாமல் துண்டுப் பிரசுரங்களைக் காட்டி செய்யப்படும் பேரெழுச்சி, வன்முறை இவற்றிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை அய்யா!

      வரலாற்றிற்கும் செய்திக்கும் புனைவுக்கும் வேறுபாடு உண்டு என்பதைப் புரிந்துகொண்டால் போதும் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுத்து மொழி இன்னும் வலுவுறும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    2. என் நான்கு வரிக் கருத்துக்கு இவ்வளவு விளக்கமாகத் தாங்கள் கருத்தளித்தமைக்கு நன்றி ஐயா!

      எழுத்தாளர்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்படும் விதயமாக எல்லோரும் இதைப் பார்க்கையில் தாங்கள் இதை முற்றிலும் வேறு கோணத்தில் பார்த்திருப்பது அருமை ஐயா! ஆனால், இது நம்மை நாமே ஆற்றிக் கொள்வதற்காகவோ, அந்தக் கருத்து சுதந்திர எதிரிகளைக் கருத்தியல்ரீதியாகச் சாய்க்கவோ வேண்டுமானால் பயன்படலாமே தவிர, மற்றபடி இது முழுக்கவும் உண்மை இல்லை ஐயா! எழுத்தாளர்கள்தாம் என்றில்லை, தெருவில் போகிற எவனாவது நம் இனத்தையோ, மொழியையோ, நாட்டையோ, நாம் மதிக்கும் வேறு ஏதாவதையோ தவறாகப் பேசினாலும் உடனே அவனுக்கு எதிராகப் பொங்கி எழும் சமூகம்தான் நாம். எனவே, பெருமாள் முருகன் அவர்களுக்கு எழுந்த எதிர்ப்பை வைத்து அந்த அளவுக்கு நம் மக்கள் எழுத்தாளர்களை மதிக்கிறார்கள் எனக் கூற முடியாதென்பதே என் பணிவன்பான கருத்து.

      //ஆலவாயன் காளியைஇறப்பித்து எழுந்தது என்றால் அர்த்தநாரி காளிக்கு உயிர் கொடுத்துத் தொடரும்// - ஓ! அப்படியா!!!

      புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' சிறுதையைப் படித்திருக்கிறேன். புராணத்தில் 'பொன்னகரம்' என்று அழைக்கப்பட்ட இலங்கை, இன்று புதுமைப்பித்தனின் 'பொன்னகர'மாக மாறியிருப்பதையும் கேள்விப்பட்டுத்தான் இருக்கிறே(றோம்)ன்! ஆனால், வேறு வழியின்றிப் பாலியல் தொழிலுக்குச் செல்லும் அப்படிப்பட்ட பெண்களை நான் ஈடிணையற்ற ஈகிகளாகவே பார்க்கிறேன். ஆனால், குழந்தைக்காக வேறு வழியின்றி வேறு ஆடவனை நாடிச் செல்லும் இடத்தில், அவனோடு கொஞ்சிக் குலாவும் பொன்னாளை என்னால் அப்படிக் கருத முடியவில்லை.

      வரலாறு, செய்தி, புனைவு மூன்றுக்கும் உள்ள வேறுபாடும், படைப்பாக்கம் பற்றித் தாங்கள் காட்டிய நான்கு வித வேறுபாடுகளும் புரியத்தான் செய்கின்றன. ஆனால், இதைப் புனைவு என எடுத்துக் கொண்டால் இப்படி ஒரு புனைவை எழுத வேண்டிய தேவை என்ன எனவும், வரலாறு என எடுத்துக் கொள்வதாயிருப்பின் இதற்கு என்ன சான்று எனவும், செய்தி என எடுத்துக் கொளின், 'கடவுள் இல்லை' எனும் செய்தியைச் சொல்ல இப்படியொரு கற்பனை தேவைதானா எனவும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

      Delete
  15. ஜெனெடிக்ஸ் ஆராய்ச்சி வளர்ந்துவிட்ட இந்தக்காலத்தில் யார் குழந்தைனு சந்தேகம் வந்தால் டி என் எ டெஸ்ட் பண்ணினால் இது காளியின் குழந்தையா இல்லை இன்னொருவர் குழந்தையா? என்று சொல்லிவிடும். காளி பொணத்தைப் புதைத்துவிட்டாலும், காளியின் ஒரு முடி கூடப் போதும்! அறிவியலின் வளர்ச்சி பல உண்மைகளை புட்டுப் புட்டு வைத்துவிடுகிறது இன்று..
    ---------------------------
    எனக்குப்புரியவில்லை! ஒரு கதைக்கு எதற்கு இரண்டு முடிவு? படைப்பாளியின் "வியாபார நோக்கு" அல்லது "மனக்குழப்பம்" அல்லது "தரக்குறைவு" தான் இதன் மூலம் தெரிகிறது. உடனே இலக்கியமேதையை நாலெழுத்துத் தமிழ்லப் பிழையில்லாமல் எழுதத் தெரியாத நீ எப்படி இப்படி விமர்சிக்கலாம்னு பொங்காதீங்கப்பா! :)

    மேலே திரு ஜெயக்குமார் சொல்வதுபோல் கொஞ்ச நஞ்சமல்ல ஏகப்பட்ட முரண் இருக்கிறது இக்கதையில். ஒரு ஆம்பளை தன் தாகத்தை எல்லாம் தீர்த்துக்க இஷ்டத்துக்கு இதுபோல் பொன்னாக்களை உருவாக்கினால் இப்படி ஒரு "கூறுகெட்ட பொன்னா"தான் வந்து நிற்பாள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!

      நிச்சயம் நீங்கள் வருவீர்கள் என்பது தெரியும்!



      காளிக்கு உயிரூட்டி அவனுக்குப் பிரேதப் பரிசோதனை வரை கொண்டுபோய் விட்டீர்களே..:))

      எனக்கென்னமோ அந்த இடத்தில்தான் படைப்பாளி வெற்றி பெற்றுவிட்டான் என்று தோன்றுகிறது.

      அவனுடைய மொழி கற்பனைகளுக்கு உயிரூட்டி இருக்கிறது.

      அந்த எழுத்துகளில் இருந்து இரத்தமும் சதையுமான மனிதனை நம் கண்முன் படைத்து உலவ வைத்துவிட்டது.

      காளிக்காக நாம் பரிதாபப்படுகிறோம்.

      பொன்னாவின் முகத்தில் காறி உமிழத் துடிக்கிறோம்.

      எங்கே அவர்கள்........???!!!!

      பொன்னா அந்தப் பதினாலாம்நாள் திருவிழாவிற்கு வண்டிகட்டிப் போகும் போது மனம் பதைக்கத்தான் செய்தது.

      நானே ஒருகணம் காளியாகிவிட்டேனோ என்று தோன்றியது.

      அதுதான் ஒரு படைப்பாளியாய்ப் பெருமாள் முருகன் என்னைத் தன்வயப்படுத்திய கணம்

      ஏன் பொன்னா இப்படி ஒரு முடிவை எடுக்கிறாள் ?

      காளி ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ?

      என்ற கேள்விகள் நிச்சயம் படைப்பாளிமுன் வைக்கப்பட வேண்டும்.

      அவை வைக்கப்பட்டன என்பதைப் பெருமாள் முருகனே ஒத்துக் கொள்கிறார்.
      அப்படிக் கேட்கப்படும் கேள்விகள்தான் அந்தப் பாத்திரங்களை வாசகனின் உட்கலந்து ஒன்றின என்பதற்கு அடையாளம்.

      அதனால்தான் இரண்டு வழிகளில் மாதொருபாகனின் முடிவைக் கொண்டு செல்கிறார்.

      நீங்களே சொல்வது போல

      // ஒரு ஆம்பளை தன் தாகத்தை எல்லாம் தீர்த்துக்க இஷ்டத்துக்கு இதுபோல் பொன்னாக்களை உருவாக்கினால் இப்படி ஒரு "கூறுகெட்ட பொன்னா"தான் வந்து நிற்பாள் //

      என்ற கருத்தை மையமாக வைத்துக்கூட பெருமாள் முருகன் தன் கதையை எழுதி இருக்கலாம். யார் கண்டது?

      உங்கள் கருத்திற்கு மதிப்பளிக்கிறேன்.


      இலக்கிய மேதையாய் இருந்தால் என்ன சாதாரணனாய் இருந்தால் என்ன ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைக்கும்போது உங்களைப் போன்ற ஒரு சிலராவது விமர்சிக்காவிட்டால் அப்பறம் யார்தான் பூனைக்கு மணி கட்டுவது..:))

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    2. ஒரு திருத்தம் ஐயா! பொன்னா மேல் காறி உமிழ்வதுபோல் எனக்கு ஒரு போதும் கோபம் இல்லை ஐயா. நான் எந்த ஒரு படைப்பையும் விமர்சிக்கும்போது படைப்பாளியின் மனநிலையைத் தான் பார்ப்பதுண்டு. படைப்புகள் என்ன செய்யும் பாவம்? பொன்னா ஒரு பொம்மை! ஒரு பாவமும் அறியாதவள்! ஆடுனா ஆடுவாள், பாடுனா பாடுவாள்! அவளை இயக்குவது நம் படைப்பாளிதானே?

      மேலும்..நமக்கு கோபம் வரும்படி ஒரு படைப்பாளி ஒரு கதைமூலம் கருத்தைச் சொல்லிவிட்டாலோ, அல்லது நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத பாத்திரங்களை உருவாக்கிவிட்டாலோ, அதை வைத்து அவன் வெற்றியடைந்ததாக கணிப்பது முற்றிலும் தவறு என்று முழுமையாக நம்புகிறேன். இதை நான் அனுபவப்பூர்வமாக பல தருணங்களில் (இலக்கிய படைப்பில் மட்டுமல்ல!) உணர்ந்துள்ளேன். நன்றி. :)

      Delete
    3. அருமையான கருத்து வருண் அவர்களே

      Delete
  16. வணக்கம் சகோ!
    ‘அய்யா சாமிகளே நான் எழுதுவது அசுரர்களைப் பற்றித் தான், தமிழ் நாட்டின் எந்த ஊரும் இல்லை, அசுர லோகம் மட்டுமே’ என்று பெருமாள் முருகன் அறிவித்திருப்பதைப் படிக்கும் போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் ஒருபக்கம் வேதனையாகவும் இருக்கிறது.
    போகிற போக்கைப் பார்த்தால் புதினம் எழுதத்துவங்கும் எழுத்தாளர்கள் அனைவரும் தம் முன்னுரையில் இப்படிக் கூறிவிட்டுத்தான் எழுத வேண்டும் போலிருக்கிறது.
    மாதொரு பாகனை இதுவரை நான் வாசிக்கவில்லை; இணைப்பை வாங்கி வைத்திருக்கிறேன். அதன் தொடர்ச்சி இந்த நாவல் என்றறிந்தேன்.
    நீங்கள் சொல்லியிருப்பது போல் அக்கினிப்பிரவேசத்திற்குக் கிடைத்த எதிர்வினை காரணமாக ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் எழுதினார். முதல் கதை எழுதிய போது செய்றதை எல்லாஞ் செய்ஞ்சுட்டுத் தலையில தண்ணி கொட்டிண்டாப் போறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்படிச் செய்யாவிட்டால் பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்படும் என்பதை இரண்டாம் நாவலில் அருமையாகப் பதிவு செய்திருப்பார்.
    அக்கினிப்பிரவேசத்தில் வரும் தாய் கமுக்கமாக அந்தச் சம்பவத்தை ஊர் உலகத்துக்குத் தெரியாமல் மறைத்தது போல, மறைக்காமல் ஊரைக்கூட்டி உலகறியப்பண்ணி விட்டோமே; பெண்ணின் கதி இப்படியாகிவிட்டதே என இரண்டாவது நாவலில் தாய் மனம் நொந்து வருத்தப்படுவதாய்க் காட்டியிருப்பார் ஜெயகாந்தன்.
    அது போல இந்த நாவலிலும் காளியின் இறப்புக்குப் பின் பொன்னா ஒரு விதவையாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார் என்று உங்கள் விமர்சனம் மூலம் அறிந்தேன்.
    நல்லதொரு நாவலை அறிமுகப்படுத்தி வாசிக்கத் தூண்டும் ஆவலை ஏற்படுத்தியமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி.

      நிச்சயம் மாதொருபாகனைப் படியுங்கள். அதிகம் விமர்சிக்கப் பட்ட நாவல்.
      ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து அதன் படைப்பாளி தன் பாத்திரங்களுக்கு நியாம் செய்திருக்கிறானா இல்லையா என்பதை உங்களைப் போன்றோர் கூறுவது உகந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

      ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசத்தில் வாசகரின் கொந்தளிப்புகளுக்காகத்தான் ஜெகே சில நேரங்களில் சில மனிதர்களை எழுதினார். அதன் தொடர்ச்சியாக கங்கை எங்கே போகிறாள் வெளியானது.
      உங்களின் பின்னூட்டம் உங்களின் பரந்த வாசிப்பைக் காட்டுகிறது.
      வலைத்தளத்தில் எழுதுகின்ற பலரின் எழுத்துகளிலும் இந்த வாசிப்பை நான் தரிசிக்கிறேன்.

      நாளிதழ் போலும் படித்தல் இல்லாப் பெரும்பான்மை சூழ்ந்த ஒரு குழுமத்திலிருந்து இணையத்து விரியும் உங்களைப் போன்ற எண்ணற்றோரின் சிந்தனை, படைப்புகள், தேடல், வாசிப்பு. இவற்றைப் பார்க்கப் பார்க்க மலைத்து நிற்கத்தான்தோன்றுகிறது.

      தங்களின் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  17. பெரிய நாவலைப் படிக்க நேரமில்லாத என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் விமர்சனம் வரப் பிரசாதம் !

    ReplyDelete
    Replies
    1. அது சிறிய நாவல்தான் பகவான்ஜி!
      200 பக்கங்களுக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  18. படைப்பாக்கம் குறித்துப்பேசும் நம் இலக்கணங்கள் நான்கு வழி முறைகளை அறிந்தேன். தங்களது பதிவின் மூலமாக ஆலவாயனைப் படிக்கும் ஆசை எழுந்துள்ளது. தாங்கள் உரிய இடங்களை மேற்கோளிட்டுக் காட்டியுள்ள விதம் மிகவும் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பகுதி கவரலாம் அய்யா!
      அது அவரவர் அனுபவங்களை படைப்புத் தொடும் இடம் சார்ந்தது.
      தூக்கிட்ட ஒருவரின் பிரேதம் இறக்கப்பட்ட போது அருகே நான் இருந்திருக்கிறேன்.

      அந்த அறையில் நிறைந்த ஒரு அழுகல் வாசனை எனக்கு நினைவிருக்கிறது.

      காளி தூக்கிலிருந்து இறக்கப்பட்டதாய் பெருமாள் முருகன் சித்திரிக்கும் இந்த இடத்தில் அதே வாசனை மீள உணர்ந்தேன்.

      காட்சிகளின் விவரிப்பு அவ்வளவு கச்சிதமாக இருந்தது.
      அதனால்தான் அதைக் குறிப்பிட்டுப் போனேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  19. அன்புள்ள அய்யா,

    ‘பெருமாள் முருகனின் ஆலவாயன்’- எனும் நாவல் பற்றிய தங்களின் விமர்சனப் பார்வை ... அருமையாக இருக்கிறது. அந்த நாவலைப் படிக்கத் தூண்டுகிறது.தங்களின் பகுப்பு அருமை. இப்போது தான் தெரிந்துக்கொண்டேன்.எனக்கு நாவல் வேண்டும் எங்கு கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!
      ஆலவாயனும் அர்த்தநாரியும் காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கும்.
      நீங்கள் ஆன் லைனில் விண்ப்பித்துப் பெற முடியும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  20. தங்கள் விமர்சனத்தில் நாவல் படிக்க தூண்டுகிறது. விமர்சனம் அருமை. நாவல் எங்கு கிடைக்கும்.

    ReplyDelete
  21. உண்மை நானும் படித்தேன் ஆலவாயன் அர்த்தநாரீ...சரியான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ உங்களின் விமர்சனமும் பார்த்தேன்.

      இதை முன்பே இட எண்ணித் தட்டச்சி வைத்தேன்.

      மாதொரு பாகனின் பரபரப்பு அப்போது....!

      சற்றுப் பொறுப்பேமே என்று இப்பொழுது வெளியிட்டது இது.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  22. இந்தக் கதைக்கான பெண்ணிய எழுத்தாளர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவல். அவர்களின் பார்வையில் இந்தப் படைப்பு எப்படிப் பார்க்கப் படுகிறது என்று தெரியவில்லை. ஆண்கள் கருத்து சொல்வதை விட பெண்களின் கருத்தே முக்கியமானது.மனதுக்குள் பொன்னாவின் செயலை சரி என்று சொன்னாலும் வெளியில் சொல்வார்களா என்பது சந்தேகமே

    ReplyDelete
    Replies
    1. பெண்ணிய எழுத்தாளர்களோ வாசகர்களோ என்ன கருதுகிறார் என்பது மிக முக்கியம்தான் அய்யா.
      நீங்கள் சொல்வது போல் இதற்கு ஆதரவாக அவர்கள் எடுக்கும் நிலைப்பாடு அவர்களது நடத்தையைப் பற்றிய கேள்விகளை எழுப்புமோ என்கிற அச்சத்தை அவர்களுக்கு எழுப்பக் கூடும்.
      ஆனால் எதுவானாலும் தங்கள் கருத்தைத் துணிச்சலாகக் கூறக் கூடிய வாசகரும் படைப்பாளிகளும் தமிழ்ச்சூழலில் இருந்தே வருகிறார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!

      Delete

  23. வணக்கம்!

    ஆலவாயன் நுாலினை நன்காய்ந்[து] அளித்துள்ளீர்
    கோலமிகு சொற்கள் குவித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete