Monday 12 October 2015

யானை எழுதிய சாசனம்.

யானையின் பிடியில் உடல் முறிந்து.

யானைகள் எப்போதும் பிரமிப்புத் தருபவை. சாந்தமும் மூர்க்கமும் ஒருங்கே கொண்ட இயற்கையின் படைப்பு அவை. பண்டைய போர்க்களங்களில் அதன் ஆவேசம், மனிதனுக்காக மனிதனால் உருவேற்றப்படும் அதன் போர்வெறி, போர்க்களத்தில் வீறுகொண்டெழும் அதன் பேராற்றல், அதனை எதிர்த்துக் களமாடும் மனிதத் தறுகண், இவையெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை கற்பனை செய்திருக்கிறேன்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் ( பெரிய கோயில் )  வலதுபுற வாயிலின் படிக்கட்டின் மருங்கில், போர்க்களத்தில் யானை ஒன்று ஒருவனைத் தனது துதிக்கையால் பிடிக்க, அவனது முதுகெலும்பு முறிந்து இரண்டாய் ஒடிந்து தொங்கும் சிற்பம் நினைவிருக்கிறது.

ஓரிரு வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் செய்திக்கிடையே, பாகனைக் கொன்று, உடலை ஒடித்துத் துதிக்கையில் தூக்கியோடும் யானை ஒன்றைக் கண்ட போது, அந்தச் சிற்பம் உயிர் பெற்றது போலத் தோன்றியது. அதுபோன்ற காட்சியை நேரில் பார்க்காமல் ஒரு சிற்பி அத்தனைத் தத்ரூபமாக அந்தச் சிற்பத்தை வடிவமைத்திருக்க முடியாது.

தமிழர் வகுத்த போருக்குரிய திணைகளில் தும்பைத் திணை என்று ஒரு திணை இருக்கிறது. அது வேறொன்றுமில்லை; நேருக்கு நேர் நின்று இருபடைகளும்  போர் செய்வது.

அதில் நான்குவகைப் படைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தத் தும்பைத் திணைக்குரிய உட்பிரிவுகளுள் ( துறை ) யானை மறம் என்பதும் ஒன்று. தங்கள் படையில் உள்ள யானைகளின் வீரத்தைக் குறிப்பிடுவது அந்தப்பிரிவு.

இத்துறையில், பாண்டியனின்  யானைப் படையின் வீரன் ஒருவன், தன் பகைவர்களிடம் தங்கள் யானைகளின் வீரத்தைக் கூறுவதாக அமைந்த முத்தொள்ளாயிரப்பாடல் ஒன்றில் பகைப்புலத்தை அழித்து யானை எழுதும் சாசனம் ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாக – ‘திருத்தக்க
வையகம் எல்லாம் எமது’ என்(று)’ எழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு

( மருப்பு – தந்தம், ஊசி – எழுதுகோல், மறங்கனல்வேல் – வீரம் கழலும் வேல், உருத் தகு மார்பு – அச்சமூட்டக்கூடிய மார்பு )

“ வலிமைமிக்க எங்கள் பாண்டினின் யானைகள் தம் தந்தங்களை எழுதுகோலாகவும், வீரத்துடன் போர்புரியும் பகை அரசர்களின் மார்பை ஓலையாகவும் கொண்டு, ‘ மேன்மை மிக்க இந்த உலகனைத்தும் எங்களுடையதே ’ என்று எழுதும் “

தந்தங்கள் எழுதுகோலாகவும், மார்பு எழுத்தோலையாகவும், எழுதுதல் கொன்றழித்தலாகவும்  உருவகிக்கப்படும்போது இந்த வெண்பா கவிதையின் தரத்தை அடைந்துவிடுகிறது.

தன் கட்டுக்குள் யானையை வைத்திருக்கும் பாகனைப்போல வெண்பாவினுள் கவித்துவத்தைக் கட்டி வீர நடையிடும் இந்தக் கவிதையைப் படித்த நாட்களில் உள்ளுக்குள் ஆராதிக்கத் தோன்றியது.

ஏனெனில் எனக்குத் தெரிந்து மிகப்பல வெண்பாக்களிலும், மரபுப் பாடல்களிலும் யானையால் இடைமுறிக்கப்பட்டுக் கவிதை கதறிக்கொண்டிருக்கும்.


பட உதவி - நன்றி. https://encrypted-tbn1.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

43 comments:

  1. அன்புள்ள அய்யா,

    ‘யானை எழுதிய சாசனம்’ - யானையின் மறத்தை வீரமுடன் பாடிய வெண்பா... தீரமுடன் பாண்டிய மன்னன் போர்க்களத்தில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போரிடுவதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    யானை என்றவுடனே எனக்கு நினைவுக்கு வந்தது... பாரதி என்ற தமிழ்ச்சாசனத்தைத் தன் கால்களுக்குகிடையில் போட்டு மிதித்துவிட்டதே!
    ஒரு வேளை யானை ’தன் மருப்பூசியை வெள்ளையனுக்கு எதிராக இவன் எப்படிப் எழுதுகோலால் மறுப்புக்குப் பயன்படுத்தலாம் என்று எண்ணியிருக்குமோ?!’

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. அவலச்சுவையையும் இந்த அளவுக்கு ரசிக்கும்படியாய் அதுவும் ஒரு கருத்துரையாகப் போகிற போக்கில் எழுதி விட்டீர்களே ஐயா! அருமை!!

      Delete
    2. அன்புள்ள அய்யா,

      மிக்க நன்றி.

      Delete
    3. வாருங்கள் ஐயா.

      மக்களால் புறக்கணிக்கப்பட்ட வலியைவிட யானையால் இடருற்ற வலி பாரதிக்கு அதிகமாய் இருக்காது என நினைக்கிறேன்.

      தன்னுடைய கொள்கையையெலாம் ஒதுக்கிவிட்டு எட்டைய புரத்து சமஸ்தானத்தின் குடிப்பெருமையைக் குறைந்தவிலைக்குப் பாடித்தர வேண்டுகோள் விடுக்கும் அளவிற்குப் பாரதியை மாற்றிவிட்டது அவன் கவித்துவம் அறிந்து போற்றிக் கொண்டாடிய தமிழகம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. கிராமத்தில் சில கோபக்காரர்கள் ” வந்தேன் … தூக்கி போட்டு மிதித்து விடுவேன்” என்று சொல்லக் கேட்டு இருக்கிறேன். அந்த கோபம் யானைக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதனை அருமையாக ஒரு பாடலின் மேற்கோளோடும், தஞ்சை பெரிய கோயில் சிற்பத்தோடும் அருமையாகச் சொன்னீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.

      Delete
  3. வணக்கம்
    ஐயா.
    யானையின் கோபம் பற்றி பாடலுடன் சொல்லிய விளக்கம் நனறு.. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திரு. ரூபன்.

      Delete
  4. யானை பிரமிப்பான விஷயம்தான். நிறைய பயங்கர வீடியோக்கள் நானும் பார்த்திருக்கிறேன் என்றாலும் யானை மீது இருக்கும் பிரமிப்பு, வியப்பு, பாசம் குறையாது. அவை என்ன செய்யும்? மனிதனின் பேராசை! ஆனாலும் தந்தத்தை எழுதுகோலாக்கி எதிரியின் மார்பில் எழுதுவது பயங்கரக் கற்பனைதான்!
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் ஸ்ரீ.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  5. \\\தன் கட்டுக்குள் யானையை வைத்திருக்கும் பாகனைப்போல வெண்பாவினுள் கவித்துவத்தைக் கட்டி வீர நடையிடும் இந்தக் கவிதையைப் படித்த நாட்களில் உள்ளுக்குள் ஆராதிக்கத் தோன்றியது.////
    அப்பப்பா ! ஒவ்வொரு விடயங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து ரசித்து. அதை நாமும் ரசிக்கும் படியாக எடுத்து வந்து இலகுவாக புகட்ட எண்ணி குழந்தைகட்டு நிலாக் காட்டி சோறு ஊட்டுவது போல எழுதுவது என்பது எல்லோர்க்கும் கைவந்த கலையல்ல. ம்..ம் எப்படிப் பாராட்டுவேன். .....

    சாந்தமும் மூர்க்கமும் கொண்ட யானையை, யானையின் பேராற்றலை போர்க்களத்தில் மனிதர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தும் முறையும். தந்தத்தை எழுதுகோலாக்கி மார்பை ஓலையாகக் கொண்டு எழுதும் கவிஞரின் கற்பனையும் அபாரம். மிகவும் ரசித்தேன். முத்தொள்ளாயிரம் பாடல்கள் பற்றி மேலும் அறிய ஆவல் பெருகுகிறது.

    தஞ்சை பெரிய கோவில் சித்திரம் தொலைக் காட்சியில் பார்த்த போது உயிர் பெற்றது. ம்..ம்..ம் மெய் சிலிர்க்கிறது ஐயனே தங்கள் ஆற்றல் கண்டு. . மேலும் மிளிர என்றும் அந்த ஆண்டவன் அருள் கிட்டட்டும்.
    பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் ரசனையும் என்றும் உவப்பு அம்மா.

      வாழ்திற்கு நன்றி.

      Delete
  6. யானை அடுத்தவருக்கு எழுதிய மரண சாசனம் ,கண் முன்னே தெரிகிறது :)

    ReplyDelete
    Replies
    1. ஆம்,

      நமக்கு எழுதி இருந்தால் யார்கண்ணுக்காவதுதானே தெரிந்திருக்கும் ? :)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பகவானே!

      Delete
  7. இந்த பாடலை படித்து இருக்கிறேன்! தங்களின் பாணியில் விளக்கம் படிக்கையில் பாடல் இன்னும் சிறக்கிறது! வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  8. எப்பேர்ப்பட்ட பாடல்!! என்னைப் போல் பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவைக்காதவர்களுக்கும் சேநெய்த் தொட்டு வைக்கும்படியாய் இத்தகைய அருந்தமிழ்ப் பாடல்களை வழங்கி வரும் தங்களுக்கு எவ்வளவு நன்றி நவின்றாலும் போதாது ஐயா!

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற ஊக்கப்படுத்தும் உள்ளங்கள் இருக்க எழுவது என்றும் இனிதானதுதானே ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  9. என்ன கற்பனை!விளக்கமும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  10. மிக அருமை. பொருத்தமான சிற்பத்தைத்தேர்ந்தெடுத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  11. புதுகைப் பதிவர் விழாவுக்கு கவிதைக்கு ஓவியம் பகுதிக்கு நான் அனுப்பி இருந்த கவிதை கீழே விழாவில் இக்கவிதைக்கு ஓவிய வரையப் படவில்லை.
    ---------------------------------------
    வீறுசால் மன்னர் விருதாம் வெண்குடையை
    பாற் எறிந்த பரிச்சயத்தால் -தேறாது
    செங்கண்மாக கோதை சின வெங்களி யானை
    திங்கள் மேல் நீட்டுந்தன் கை.

    என் கவிதை -1
    ----------------------
    சேர மன்னன் வீர மறியாது,
    வெற்றி கொள்ளும் ஆவலில்,
    செருக்கோடு செருக்களம் புகுந்த
    வீரர்தம் தேர்க் குடைகளை
    சென்றங்கு செருமுனையில் இழுத்து,
    மிதித்துப் பழகிய வெங்கரியின் ஏறோன்று
    நீல வானில் ஒளி வீசும்
    முழு வெண்ணிலவை மாற்றானின் தேர்க்
    குடை என்றெண்ணித தன துதிக்கை
    கொண்டிழுக்க முயன்றது ( தாம். )
    என் கவிதை -2
    ----------------------
    சேர ராசாவ சண்டைல சுளுவா
    கெலிக்க லாம்னு தேரோட வர
    சிப்பாய்ங்க தேர்மேல கீற கொடைங்கள
    சும்மா இசுத்து மெதிச்சு காலி பண்ணிப் பளகின
    சேரனோட யானே ,வட்ட நெலாவப் பாத்து,
    தேர்க் கொடேன்னு நெனச்சு இசுக்க
    அதோட தும்பிக்கைய நீட்டிச்சாம்.
    ( ஹையா இரண்டுமே பத்து வரிகளுக்குள்) இது உங்கள் தகவலுக்காக
    ,

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் சொல்லலாமா ஐயா?

      எதிர்க்க யாரும் எஞ்சாத் தினவில்,
      பகைவர் வெண்குடை பறித்தெறிந்த
      தம் பரிச்சயம் நினைவு வந்ததோர் தருணம்,
      இருட்படை ஒளிவெண்நிலா
      பிழுதெறிய வான் துழவுகின்றன,
      சேரனின் களிறுகள்
      துடித்தடங்கும் விண்மீன்களைச் சாட்சி வைத்து!

      இப்படிச் சொல்லாமா ஐயா ! :)

      வருகைக்கும் கவிதைக்கும் மகிழ்ச்சி.

      தங்களின் இரண்டாவது கவிதை உண்மையில் கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது என் சிற்றறிவிற்கு :(\


      நன்றி.

      Delete
  12. தந்தங்கள் எழுதுகோலாகவும், மார்பு எழுத்தோலையாகவும், எழுதுதல் கொன்றழித்தலாகவும் உருவகிக்கப்படும்போது இந்த வெண்பா கவிதையின் தரத்தை அடைந்துவிடுகிறது. மிகவும் சரியாகச் சொன்னீர்கள். படமும் வெகு பொருத்தம்!அருமையான கவிதையை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வெண்பா வேறு கவிதை வேறு என்பதைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  13. அருமையான விளக்கம் யானையின் சிறப்புப்பாடல்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனிமரம் அவர்களே!

      Delete
  14. யானை - எப்போதும் பார்க்கப் பிடிக்கும் - எவருக்கும்....

    பாடலும் பொருளும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. யானை! என்றதுமே போர்! வீரம்! கம்பீரம்! நடை! அழகு! எட்ட நின்று சற்று ஆச்சரியத்துடனும், மரியாதையுடனும், பயத்துடனும், அதே சமயம் ஆர்வத்துடனும், ஆசையுடனும் ரசனையுடனும் எந்த வயதாகிலும் பார்க்கத் தோன்றும் ஒரு உருவம் மனதில் நிழலாடும். அப்படிப்பட்ட யானையைப் பற்றிய பாடல் அதன் பொருள் நீங்கள் சொல்லி இருப்பது போல அந்த வெண்பாவின் தரத்தை உயர்த்திச் சுவைக்க வைக்கின்றது. அருமை!
    இப்படி உங்களிடமிருந்து தமிழ் இலக்கியம் கற்றால்தான் உண்டு!! சுவைத்து ரசனையுடன் தொடர்கின்றோம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி! நண்பரே/சகோதரரே.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      யானை எப்போதுமே பிரமிப்புத்தான்.

      தங்களின் வருகைக்கும் எப்பொழுதுமே உற்சாகமூட்டிச் செல்லும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  16. வணக்கம் ஐயா!

    மிக அருமையான இலக்கியக் கதையும் அதன் விளக்கமும்!
    தந்தம் - எழுதுகோல், மார்பு - எழுத்தோலை, எழுதுதல் - கொன்றொழித்தல்..
    மெய்சிலிர்த்துப் போனேன்.!

    ஆயினும் கூடவே..
    //எனக்குத் தெரிந்து மிகப்பல வெண்பாக்களிலும், மரபுப் பாடல்களிலும் யானையால் இடைமுறிக்கப்பட்டுக் கவிதை கதறிக்கொண்டிருக்கும்// எனுமிடத்தில்
    மரபென்று மாட்டிக்கொண்ட கவிக்கருவைப்பற்றிய உங்கள் ஆதங்கத்தினை
    மிக அழகாக நாசூக்காக வெளிப்படுத்தியமையும் கண்டேன்!. சிறப்பு!

    கற்கின்றவகையில் என் கவிதை முயற்சிகளும் பாகன் கை யானைதான்!..:)
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா!

      ஆம் பாடலைவிட அந்தக் கருத்தே எனக்குப் பிரதானமாய்ப் பட்டது.

      இனங்காட்டியதற்கு நன்றி.

      Delete
    2. சொல்ல மறந்துவிட்டேன்.

      நீங்கள் சொல்வது சரிதான்.

      உங்கள் கவிதை முயற்சிகள் “ பாகன் கை யானை“

      நினைத்தபடி செலுத்த முடியும் அப்பேருன்னதத்தை.

      நான் சொல்ல வந்தது,

      யானை கை பாகனைப் பற்றியல்லோ? :)

      நன்றி.

      Delete
  17. வணக்கம் ஐயா,

    தாமதத்திற்கு மன்னிக்க,

    முத்தான தொள்ளா யிரத்தின் அவலமும்
    இத்தஞ்சை யின்கல் சிறப்பமும் உம்கை
    எழுத்தால் உயிர்பெற்று இங்கு உலவுவது
    எம்மை இழுக்கிற து

    //ஏனெனில் எனக்குத் தெரிந்து மிகப்பல வெண்பாக்களிலும், மரபுப் பாடல்களிலும் யானையால் இடைமுறிக்கப்பட்டுக் கவிதை கதறிக்கொண்டிருக்கும்.//

    கதறல் கேட்கிறதா?

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பேராசிரியரே!

      உயிர்பெற்(று) இங்(கு) உலவினால் கேட்பது,

      உயிர்பெற்(று) எழுந்திங்(கு) உலவினால் கேட்காது.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல;)



      Delete
  18. காதலுக்கும் வீரத்திற்கும் உவமையாக இவர்களுக்கு யானை தான்கிடைத்தது போலும். பாருங்களேன். சோழநாட்டுப்பெண்ணின் கோபம் வெண்பாவாக.

    நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும்,
    நாணீர்மை இன்றி நடத்தியால் நீள்நிலம்
    கண்தன்மை கொண்டுஅலரும் காவிரி நீர்நாட்டுப்
    பெண்தன்மை அல்ல பிடி.
    ஆனாலும் தங்களைப்போல வர்ணிக்க இயலாது. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன். நன்றிங்க ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. அதுதானே இப்படியெல்லாம் அருமையான பாட்டோடு வரும் நீங்கள் இவை பற்றியும் தங்கள் பதிவில் எழுதலாமே..!

      கவிதைக்கு மட்டுமே தளம் என ஒதுக்கிவிட வில்லையே?!

      எழுதுங்கள்.

      நன்றி.

      Delete

  19. வணக்கம்!

    ஒண்முத்தொள் ளாயிரம் ஓதி உயர்வூட்டும்
    வெண்முத்துப் பாட்டை விரித்துரைத்தீர்! - திண்ணமுடன்
    எங்குமே உள்ள இனப்பகைமுன் என்பாக்கள்
    பொங்குமே போர்க்களிறாய்ப் போந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வீர முழக்கம் எழுப்புதலால் தம்பகையும்
      தீர முடித்துத் திரும்புதலால் - கூரியகை
      தீட்டுதிறத் தாலுலகம் வேட்டுமறத் தாலுரைப்பேன்
      பாட்டரசைக் காட்டரசின் பேர்!

      வருகைக்கும் இனிய வெண்பாவிற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete