Wednesday 7 October 2015

கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.




சித்ரா அக்கா எங்கள் தெருவின் தேர்ந்த கதைசொல்லி. நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே அவருக்கு வயது முப்பதற்கு மேல் இருந்திருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செய்து கொள்ளவில்லை என்பதை விட அவரையாரும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மையென இப்போது தோன்றுகிறது. ஒடிசலான உடல்வாகு. கருப்பென்றாலும் களைமிகுந்த கண்கள்.

முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருக்கும். இரவானால் நிலவொளியில் அவரைச் சுற்றிச் சிறுபிள்ளைகள் கூட்டம் கூடிவிடும். அவர் வயதினை ஒத்தவர் விரும்பும்படியான அழகில்லை. எங்களுக்கோ சித்ரா அக்காவைவிட இந்த உலகில் அழகானவர்கள் யாருமே இருக்க முடியாது என்கிற எண்ணம்தான். 

கதைகளும் விளையாட்டும் என மாறிமாறி எங்களின் இரவுகளை, பேசும் கிளிகளோடும், மாய இளவரசர்களோடும், மந்திரவாதிகளோடும் கழியச்செய்தவர் அவர்.

அவர் விழிகளை உருட்டிக் கைகளை அபிநயம் பிடித்துக் கதை சொல்கையில் காற்றில் காடுகள் திரளும். குதிரைகளின் குளம்பொலி கண்முன்கேட்கும். மலைகளின் மேலே மாயக்கம்பளம் விரித்துப் பறக்கும்போது எறும்புகள்போல மனிதர்கள் கீழே புள்ளிகளாய் உலவுவது தெரியும்.

கதை கதை என்று அவர் பின்னாலேயே பித்துப் பிடித்தலைந்த குழந்தை ரசிகப் பட்டாளம் ஒன்று இருந்தது.

ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் எங்களுக்குச் சித்ரா அக்கா தேவைப்பட்டார். பெரியவர்கள் என நாங்கள் எங்களை உணரும்போதோ, அவர் உணரும்போதோ, கூட்டைவிட்டுப் பறந்து போகும் இளம்பறவை போன்று நாங்களோ அல்லது கூட்டைவிட்டு வெளியே துரத்தும் தாய்ப்பறவையைப் போன்று அவரோ மாறியிருப்போம்.

எங்களுக்கு அடுத்த தலைமுறை அவரைச் சுற்றிப் பிணைந்திருக்கும். ஒரு காந்தம் இரும்புத்துண்டைக் கவர்ந்திழுப்பதுபோன்ற கவர்ச்சி அவரிடத்தில் இருந்தது.

எத்தனை கதைகள் இவருக்குத் தெரிந்திருக்கும்.. ஆயிரம் பத்தாயிரம்..
அவரது கற்பனையா இல்லை யாரிடத்திலிருந்தாவது கேட்டதா
நிச்சயம் வாசித்து அறிந்தது இல்லை என்பது தெரிந்தது. அக்காவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

எங்கள் தெருவில் அவர் குழுவில் இருந்து பிரிவது பெரிய மனிதன் ஆவதன் அடையாளம்.

துரத்தப்பட்ட பின்பும் கதைகேட்க விருப்புற்று, ‘இன்னமும் சின்னப்பிள்ளையாட்டம் அதுகிட்ட கதை கேட்கப்போயி.....’ என்று எள்ளப்படும் அபாயத்திற்காய் பெருமூச்சுவிட்டுப் பெரிய மனிதத் தோரணையில் கடந்து போயிருக்கிறேன்.

கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் என்கிற விளையாட்டை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். எங்கள் தெருவில் வீடுகள் கட்டக் கொட்டப்படும் மணற்குவியலில் அமர்ந்து ஆடும் விளையாட்டுகளில் அதுவும் ஒன்று.

குறைந்த பட்சம் இருவர் இவ்விளையாட்டை விளையாடத் தேவைப்படுவர். ஒருவர் மணலை தன் இரு கைகளாளும் சிறு கரைபோல நெடுகச் சேர்த்து அப்படிச் சேர்க்கும் போதே,

கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்!  கீயாக் கீயாத் தாம்பாளம்!
மச்சு மச்சுத் தாம்பாளம்! மாயா மாயாத் தாம்பாளம்“

என்று பாடியவாறே பார்ப்பவருக்குத்  தெரியாமல் அதனுள் சிறு குச்சியையோ கல்லையோ மறைத்து வைத்து விட வேண்டியது.

பாடி முடித்ததும், எதிரே உட்கார்ந்து இதைப் பார்ப்பவர், தம் இருகைகளையும் இணைத்துக் குச்சி மறைத்து வைத்திருப்பதாகக் கருதும் இடத்தை மூடிவிடவேண்டும். மூடப்பட்ட பகுதி தவிர மற்ற பகுதியில் உள்ள மண்ணைக் கலைத்துப் பார்க்கும்போது அங்குக் குச்சி கிடைத்தால் மறைத்து வைத்தவர் வென்றவர் ஆவார். கையை வைத்து மூடியுள்ள இடத்தில் குச்சி இருந்தால் மறைத்து வைத்தவர் தோற்றவர் ஆவார்.

ஓரிடத்தில் அமர்ந்து ஆடும் எளிய விளையாட்டுத்தான். ஆனால் இவ்விளையாட்டின் பின்புலமாய் ஈராயிரம் ஆண்டு பழமையின் தொடர்ச்சி இருக்கிறது என்று அறிந்த கணம், அளைந்த ஆயிரம் ஆயிரம் மணற்கரங்களும் வென்றும் தோற்றும் குதூகலித்த சிறுபிராயத்தின் மறைந்த நதிப்பெருக்கும் ஒரு கணம் என் கண்முன் விரிந்தது.

அப்பொழுது அவள் சிறுமியாய் இருந்தாள். கடற்கரையை ஒட்டி இருந்தது அவள் வீடு. வெண்மணல் நிரம்பிய வீட்டு முற்றம்தான் அவளது விளையாட்டுக்கூடம். மாலையில் அம்மணற்பரப்பில் அவள் தன் தோழிகளோடு விளையாடுவது வழக்கம்.

அன்றும் அவ்வாறு மணலைத் தன் சிறு  கைகளால் நெடுக அளைந்தவாறே தோழியின் கண்களை ஏமாற்றி மணலில் இடையே புன்னை விதை ஒன்றை மறைத்து வைக்கிறாள் அவள்.

தோழி அவ்விதை இருப்பதாய்த் தான் கணித்த இடத்தில் விரல் சேர்த்து இரு கைகளையும் இணைத்து மூடுகிறாள்.

அவள், மற்ற இடங்களில் உள்ள மணலைக் களைந்து தேடுகிறாள். புன்னை விதை அங்கு இல்லை.

தோழி வெற்றிச் சிரிப்போடு தன் இரு கைகளையும் விலக்கி மூடியிருந்த அந்த இடத்தில் தேடுகிறாள். அங்கும் விதையைக் காணோம்.

இப்பொழுது அந்தப் புன்னை விதை அவர்கள் இருவரையும் வைத்து விளையாடத் தொடங்கி இருந்தது.

‘எங்கே எங்கே’ என்று இருவரும் தேடிக்கொண்டிருக்கும் போதே வானம் தன் கண்ணிகள் இணைத்து நீர்ச்சங்கிலியொன்றால் பூமியைப் பிணைக்க அனுப்பியது போன்ற பெருமழை.

ஆட்டம் நிறுத்தி இருவரும் வீடு நோக்கிப் பறக்கிறார்கள்.

புன்னை விதையால் மழைத் துளியை ஏமாற்ற முடியவில்லை.

மறுநாள் மாலை அவள் தன்  விளையாட்டிடத்திற்கு வந்த போது, விதையின் கதைமுடித்து எழுந்த புன்னைச் சிறுதளிரின் வெற்றிச் சிரிப்பு.

அதுவரை இல்லா மகிழ்வோடு அவள் தன் வீட்டிற்கு ஓடுகிறாள்.

அது சிறு பிள்ளையொன்று தன்னைப் பெரியதாய்க் கருதி தன்னின் சிறு மகவை ஆரத்தழுவி இன்புறத் துடிக்கும் மனோபாவம்.

“ இதைச் சாப்பிடு இதைச் சாப்பிட்டால் தான் நன்றாக வளர முடியும் “ என்று அவள் அம்மா சொன்னது அவள் நினைவிற்கு வர, வீட்டில் இருந்து நெய்யும்,  பாலும் எடுத்து வந்து அந்தப் புன்னைச் செடிக்கு ஊற்றுகிறாள்.

‘எதற்காக இதையெல்லாம் எடுத்துப் போகிறாய்?’ என்று கேட்கும் தாயிடம், ‘என் அந்தத் தங்கை வளர இது’ என்று அந்தப் புன்னைச் செடியைக் கைகாட்டுகிறாள்.

தன் சொல்பேச்சுக் கேட்காதபோதும், அவள் செய்யும் சிறு சிறு குறும்புகளின் போதும், அவள் தாய், “உன்னை விட உன் தங்கைதான் சிறந்தவள் “ என்று அந்தப் புன்னைச் செடியைக் காட்டி அதன்பின் சொல்ல ஆரம்பிக்கிறாள்.

அவளுடனே செடியும் எழுகிறது. வளர்கிறது.

நாட்கள் செல்கின்றன.

காதல் காழ்கொள்ளும் பருவத்தில் அவன் வருகிறான்.

இப்போது அவளும் அவனும் சந்திக்கும் இடமாக அந்தப் புன்னை மர நிழல் ஆகியிருந்தது.

தன் தாய் தந்தை அறியாமல் தொடரும் களவு, திருமணத்தில் முடிந்தாக வேண்டும். ஆனால் அவனோ அவளுடன் இருப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வந்து போய்க்கொண்டிருக்கிறான்.

அவளுக்கு அவள் அம்மாவின் குரல் நெடுநாட்களுக்குப் பின்  கேட்பது போன்ற பிரமை.

உன்னை விட உன் தங்கையே சிறந்தவள்

அதுவரை அவள் பொருட்படுத்தியிராத அந்தச் சொல்லின் பொருள் அவள் மனதில் அறைகிறது.

அன்றும் அவன் வழக்கம் போலவே அந்தப் புன்னை மரத்தின் அடியில் வந்து அவளுக்காகக் காத்திருக்கிறான்.

அவள் தன் தோழியிடம் சொல்லி அனுப்புகிறாள்,

நம் புன்னையின் கதையை அவனிடத்தில் சொல்லிவா!
அதன் நிழலில் இனிமேல் நான் இருக்க விரும்பவில்லை.
அவன் மனது வைத்தால் அதன் நிழலைவிடச் சிறந்த நிழலை அவனால் கொடுக்க முடியும். அதை அவன் கொடுக்கத் தயாராய் இருந்தால் நான் வருகிறேன் என்று சொல்.“

தோழி இச்செய்தியை அவனுக்குச் சொல்கிறாள்.

இச்செய்தியைப் பின்வரும் பாடல் பதிவு செய்கிறது.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவுமா ருளவே.
172, நற்றிணை
திணை - நெய்தல்

(ஒருமுறை) நாங்கள் விளையாடும் இடத்தில் வெண்மணலில் அழுத்திய விதையை மறந்துபோனோம். பின் அது முளைவிட்டதுகண்டு நெய்யும் பாலும் அளித்து ( தங்கையாய்க் கருதி ) அதனை வளர்த்தோம். பின்பு, “உங்களைவிட உங்கள் தங்கையாகிய இந்தப் புன்னைமரமே சிறந்தது“ என எங்கள் தாய் கூறத்தொடங்கினாள். அம்மரத்தின் அடியில் உன்னுடன் சேர்ந்து சிரித்து மகிழ்தல் நினைந்து அவள் வெட்கம் கொண்டு வர மறுக்கிறாள்.

புதிதாய் ஊருக்கு வந்த பாணர்களின் இசைபோல வலம்புரிச்சங்குகள் ஒலிக்கின்றன. அப்படிப்பட்ட கடல்நாட்டிற்குத் தலைவன் நீ!

நீ மனது வைத்தால் அவள் மனம் நிறையுமாறு அளிக்கும் நிழல் வேறுள்ளது!

( அவள் எதிர்பார்ப்பது அதனையே ! )

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட விதையில் இருந்து எழுந்த மரத்தின் நிழலில் அவர்கள் இருவரின் குரலையும் வலம்புரிச் சங்கொலியின் பின்னணியோடு நமக்குக் கடத்தித் தருகிறது இந்தப் பாடல்.

நேற்று நான் ஆடிய விளையாட்டைப் பல நூறாண்டுகளாய்க் காலத்தின் கைகள் என்னிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன.

ஆனால், இன்று அலைபேசியிலும் கணினியிலும் முடங்கிவிட்ட ஆடுகளங்களில் எம் குழந்தைகளின் விரல்கள் அளைந்து கொண்டிருப்பதைப் பெருமூச்சோடு கடந்து போகும்போது, அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள் என்பதை இனி ஒருபோதும் அவர்கள் உணரப்போவதில்லை என்றே தோன்றுகிறது.

சித்ரா அக்காவை இரு வாரங்களுக்கு முன் பார்த்தேன். அவரிடம் கதைகேட்க இப்போதெல்லாம் யாரும் வருவதில்லையாம்.



பட உதவி - நன்றி.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/54/Game,_hide_a_nut_2.jpg/144px-Game,_hide_a_nut_2.jpg
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

49 comments:

  1. சிறுவயதில் ஆடிய விளையாட்டும் இப்பொழுது ரசித்துப் படித்தப் பாடலும் உங்களால் இணைக்கப்பெற்று மகிழ்வு தருகிறது அண்ணா

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணம் இணைத்து வாக்கும் குத்தியாச்சு :)

      Delete
    2. வாருங்கள் ..!

      தங்களது வருகையும் முதல் பின்னூட்டமும் காண மகிழ்வு.

      வாக்கிற்கும் நன்றி.

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    பாடலும் கருத்தும் மிகச் சிறப்பாக உள்ளது.சிறுவயது நினைவு வந்தது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கிச்சுக்கிச்சுத் தாம்பாளத்தில் தொடங்கி அதை அப்படியே இலக்கியத்துக்கு எடுத்துச் சென்று இனிமை சொட்ட விளக்கியதற்கு நன்றி

    ReplyDelete
  4. சிறு வயது நினைவுகளுடன் இணைந்து
    பதிவினைப் படிக்க கூடுதல் சுவாரஸ்யம்
    அற்புதமான பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கிச்சுக்கிச்சு தாம்பாளம் தந்த தொடர் இலக்கியத் திரட்டு
    அற்புதம் ஐயா! அத்தனையும் உங்கள் எழுத்துக்களால்
    காட்சியாக விரிந்தது மனக்கண்ணில்!..

    இலக்கியப்பாடல் இனிமை என்னை இன்னும் ஆக்கிரமிக்கின்றது!
    மிக மிக அருமை ஐயா!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அண்ணா! ஒரு உண்மையை சொல்லட்டா? ஏதோ ரெண்டு பேர் சேர்ந்து எழுதியது போல இருக்கு பதிவு. சித்ரா அக்கா ஒரு நடை,,புன்னையின் அக்காவுக்கு ஒரு நடை. ஆனால் இரண்டும் வேறுபடாமல் பாலில் தேன் கலந்தது போல அவ்ளோ தித்திப்பு:) உங்கள் நடையில் இறுக்கம் தளர்ந்து, நட்பின் மணம் கமழத் தொடங்கியிருக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஏதும் திட்டமிட்டு எழுதியதில்லை.

      உங்கள் கருத்திற்கு நன்றி சகோ.

      Delete
  7. ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஒரு 'சித்ரா 'அக்கா இருக்கத்தான் செய்கிறார்கள் !
    குளுகுளு புன்னை மாற நிழலில் இளைப்பாறினேன் :)

    ReplyDelete
  8. அன்புள்ள அய்யா,

    சின்னக்குயில் சித்ரா பாடல் அருமையாகப் பாடுவார்... இந்த சித்ரா அக்கா நன்றாக் கதை சொல்லி இருக்கிறார்.... கதை கேட்டு...கதை கேட்டு வளர்ந்த நாடல்லவா...?
    ‘கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்! கீயாக் கீயாத் தாம்பாளம்!’ இன்றைக்கு இதையெல்லாம் பிள்ளைகள் மறந்து விட்டார்கள் என்பதே உண்மை.
    நற்றிணைப் பாடல் மூலம் ‘விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி’ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் விளையாடிய விளையாட்டை விளையாட்டாய் சொல்லிவிட்டுப் போனாலும்...
    ‘நீ மனது வைத்தால் அவள் மனம் நிறையுமாறு அளிக்கும் நிழல் வேறுள்ளது!’
    -களவு வாழ்க்கையிலிருந்து கற்பு வாழ்க்கையை வேண்டி நிற்கிறாள் தோழியின் துணையோடு தலைவனை.

    ‘நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
    அன்னை கூறினள் புன்னையது சிறப்பே’

    உன் கொள்ளை வனப்புள்ள குவிந்த நல்இறகுகளில் ஞாலம் வலம் வரும்... நாளும் வலம் வரும்...!
    தொடருங்கள்... தொடர்கிறோம்...!

    நன்றி.
    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் நீண்ட பின்னூட்டங்களுக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  9. வணக்கம் பாவலரே !

    எத்தனையோ விளையாட்டுக்கள் நம் சமூகத்தில் இருந்தன ..இப்போதும் ஒருசில கிராமங்களில் இருக்கின்றன அவை அத்தனைக்கும் இவ்வளவு பின்னணிக் காலம் இருக்குமென்று இன்றுதான் அறிந்து கொண்டேன் ! மிக்க நன்றி பாவலரே இலக்கியத் தேன் இதுதான் பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம கூடுதல் ஒரு வாக்கு

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் குறிப்பிடுவது சரிதான் சீராளரே!

      இவையாவும் நம் மொழியின் , பண்பாட்டின் பின்புலத்தில் கலந்திருந்தவை.

      நாம் அவற்றின் வாழும் சாட்சிகள்.

      எதிர்காலத் தலைமுறை பல்லாங்குழியையும் கிட்டிப்புள்ளையும் அருங்காட்சியகத்திலோ அல்லது கணினித் தொகுப்பிலோ பார்த்தறியும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். நற்றிணைப் பாடல் சில வரிகளில் அடங்கி விட்ட பெரு நாவல். உங்கள் நினைவின் நிகழ்வுகளோடு அதைப் பொருத்தி இருப்பதும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

      Delete
  11. அருமை நண்பரே அருமை, சிறியவர்களுக்கு எப்போதும் சித்ரா அக்காவைப் போன்றவர்களையே பிடிக்கும். அவர்கள் உலகம் புறத்தோற்றத்தை பார்ப்பதில்லை. அன்பை மட்டுமே பார்க்கிறது. அழகான வர்ணிப்பு, அற்புதமான நடை மீண்டும் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்ற அழகான பதிவு.
    அற்புதம்!
    த ம 12

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே!

      குழந்தைமையில் அழகு கண்களில் அறியப்படாமல் மனதினால் அறியப்பட்டது அதன் காரணமாக இருக்கலாம்.

      தங்களின் வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  12. சிறிய வயது ஞாபகங்களை மீட்டு வந்தன இப் பதிவு. வழமை போல சுவாரஸ்யமாக இருந்தது பதிவு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா.

      உங்களின் வரவிற்கும் கருத்திற்கும் தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

      Delete
  13. இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். இப்படி ரசனையான பகிர்வுகளை உங்களைத்தவிர யாரால் தரமுடியும். ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் குழந்தைத்தனத்தை திரும்பிப் பார்க்கவைத்த பகிர்வுக்கு நன்றிங்க ஆசிரியரே. நானும் இந்த மாதிரி விளையாட்டுகளை வைத்து ஒரு கவிதை எழுதினேன் அதை உங்களுக்காகவே மீளபதிவா பதிவிடுகிறேன். நேரமிருப்பின் வாங்க.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பாவலரே!

      கிராமிய மணம் கமழும் தங்களின் எழுத்துகளின் முன் இவை எல்லாம் ஒன்றுமில்லையே.

      தங்கள் பதிவுகளைத் தொடர்வதாலும், உங்களின் மீள்பதிவைப் பார்த்ததாலும் சொல்கிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றியுண்டு.

      Delete
  14. ஒரு இலக்கிய பாடலுக்கு நேரடியாக பதவுரை பொழிப்புரை சொல்லாமல், நமக்குத் தெரிந்த அல்லது மறந்துபோன ஒன்றை எடுத்துக்காட்டாக சொல்லி நற்றிணைப் பாடலை அறிமுகம் செய்யும் உங்களின் பாணியை இரசித்தேன். இரசித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் ஊக்கப்படுத்தும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. வணக்கம் ஐயா,
    முதலில் தங்களுக்கு நன்றிச் சொல்ல ஆசை,,,,,, காரணம் நாம் இழந்தது எதை எதையோ என்று நினைத்துக்கொண்டு உண்மையான இழப்பை மறந்து போகிறோம்.
    அடுத்து எனக்கு நீளமான பின்னூட்டம் அளிப்பது கொஞ்சம் கஷ்டம். காரணம் வேறு ஒன்றும் இல்லை. சோம்பேறித் தனம் தான். ஆனாலும் இங்கு சில விடயங்களைச் சொல்லிச் செல்ல நினைக்கிறேன்.
    சில நாட்களுக்கு முன் என் மகள் படிக்கும் பள்ளியில் இருந்து எமக்கு (மற்ற பெற்றோர்களுக்கும்) அழைப்புக் கடிதம்,,,,,,
    அதன் பின் பகுதியில் நிகழ்ச்சி நிரல்,
    அதைப் படித்து என்னால் நம்பவே முடியல,
    செய்தி இது தான்,
    நம்மின் பாரம்பரிய விளையாட்டு நம் குழந்தைகள் விளையாடும் இடமாக,,,,,
    அதில்,
    (இலக்கியத்தில் சுட்டப்பட்ட கழங்காடுதல்) கல்லாங்காய், கிச்சுகிச்சு தாம்பாளம், பள்ளாங்குழி,கிட்டிப்புல், உறியடி,கோலி, தாயம், மண்பானை செய்தல் என இன்னும்,,,,,
    என்னால் நம்பவே முடியல,,

    என் மகளிடம் இந்த விளையாட்டுக்கள் உனக்கு தெரியுமா என்று முட்டாள் தனமாக கேள்விக் கேட்டேன் (தாங்கள் சிரிப்பது தெரிகிறது) நாம் சொல்லிக் கொடுத்தாள் தானே,,,,,ம்ம்,
    தெருவில் ஐந்து சிறு கற்களைப் பொருக்கி இது கல்லாங்காய் என்று ஆடிக்காட்டினேன். அவளுக்கு ரொம்ப விருப்பமாய்,,,,

    எனக்கு ஏனோ மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி,,, அவளுக்கு ஏதோ மிகப்பெரிய அன்பளிப்பு அளித்ததைப் போல்,, அல்லது என் பலநாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியா?????? தெரியல,
    பிறகு என் திருமணத்தில் சீர் வந்த மூட்டையைப் பிரித்து பள்ளாங்குழி, தாயக்கட்டை ( பயன் இல்லை ஆனாலும் சீரில் இவைகள் இன்றும்,,) எடுத்து விளையாடச் சொல்லிக்கொடுத்தேன். பள்ளியின் அந்த நாளும் வந்தது.
    அம்மா எங்க மேம் பட்டுபாவாடைப் போட்டு வரச் சொன்னார்கள் என்றாள், மகன் வேட்டி சட்டையாம்,,
    பள்ளிக்குச் சென்றால், வரவேற்பு முதற்கொண்டு, நம் பழய கலாச்சாரம் வெற்றிலைபாக்கு,,,,,
    மாட்டுவண்டி,,,, மாட்டுகொட்டகை, அதோடு என் மகள் அங்கு இவ்விளையாட்டை விளையாடிய போது அவள் தோழிகள் அதிசயமாய் அவளைப்பார்த்ததும், அவள் தனக்கு எல்லாம் தெரிந்தது போல் நடந்ததும் வேறு கதை,,,,
    சொந்த கதைச் சொல்ல வேண்டிய நிலை,,,,
    இது தான் நம் குழந்தைகளின் விரல் தின்மைக்கும், மன ஒருநிலைப்படுத்தலுக்கும், விரல் குவிப்பிற்கும் இன்னும் ,,,,
    பயன் பட்ட விளையாட்டுக்கள்,,,,, இன்று ஏதோ ஒரு நாள் காட்சிப் பொருளாய்,,,,,,
    அந்த ஒரு நாளாவது கிடைத்ததே என்று மகிழ்ந்து,,,,

    //அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள் என்பதை இனி ஒருபோதும் அவர்கள் உணரப்போவதில்லை என்றே தோன்றுகிறது.//

    ஆம் உண்மைதான்,,,,,

    இதை மையப்படுத்தித் தான் போட்டிக்கான என் புதுகவிதையை எழுதினேன்,,,,,
    நான் மிக விரும்பும் ஒரு பாடல் இது இலக்கியத்தில்,,
    அழகான விளக்கம்,,, காதலைப் போலவே,,,,,,
    வாழ்த்துக்கள், தொடருங்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா தாங்கள் புதுக்கோட்டைக்கு செல்கிறீர்கள் தானே,
      நன்றி ஐயா.

      Delete
    2. வணக்கம் பேராசிரியரே!

      முதலில் தங்களின் நீளமான பின்னூட்டத்திற்கு நன்றி.

      இயல்பாக நாம் கடந்துவந்த இந்த விளையாட்டுகளைத் தங்கள் மகள் படிக்கும பள்ளி தன் தனித்த செயல்பாடுகள் வழியாக இன்றைய தலைமுறைக்கு நினைவு படுத்த வேண்டி இருக்கிறது என்பதே சிறார்கள் அவற்றை இழந்து போனார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. ஆனாலும் இது போன்ற முயற்சிகளாவது பள்ளிகளில் நடைபெறுகிறது என்பதைக் குறித்து நாம் மகிழ்ச்சி கொள்ளலாம்.

      இவற்றின் தேவை, இவ்விளையாட்டில் உள்ள குறைபாடுகள், பிள்ளைகளுக்கு இவற்றின் மேலுள்ள ஆர்வம், பெற்றோர்களின் அனுமதி எனப் பல விடயங்கள் இவற்றின் பின்னணியில் இருந்தாலும் நம் அனுபவத்தைப் பொருத்திப் பார்க்கும் போது, இன்றைய குழந்தைகள் நாம் பெற்ற மகிழ்ச்சியின் சில தருணங்களை இழந்து விட்டதாகவே தோன்றியது.

      இந்தப்பாடல் என்னையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் புன்னை விதைகொண்டு ஆடிய அந்தப் பெண்ணையும் ஓர் அனுபவத்தால் பிணைத்தது.

      நிச்சயம் அப்படிப் பட்ட அனுபவத்தை வருந்தலைமுறை பெறுவது ஐயம் என்பதால் இழப்புக் குறித்துச் சொல்லிப்போனேன்.

      தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      புதுகைப் பயணம்?

      நன்றி.

      Delete
    3. வணக்கம் ஐயா,
      பதிலுக்கு நன்றி,
      புதுகைப் போவதற்கும்,மரபுக் கவிதையில் உம்மையன்றி வேறு யார் வருவார்?,,,,,,,,
      தாங்கள் முதல் இடம் பெற்றமைக்கு மனம் நிறை வாழ்த்துக்கள்,
      நன்றி.

      Delete
    4. ஐயா,

      தங்கள் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்தால் நாங்கள் பயன்கொள்வோம்,,
      நன்றி ஐயா

      Delete
  16. என்ன ஒரு அருமையான பதிவு! அதுவும் கடந்த கால விளையாட்டு ஒன்று நம் இலக்கியத்தோடு தொடர்புடையது என்று அந்தச் சான்றுடன் அழகுற சொல்லிச் சென்றவிதம் சகோ....புல்லரிக்கின்றது என்று சொன்னால் மிகையல்ல. உங்கள் அக்காவின் கதை சொல்லித் திறன் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது என்றால், கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் அப்படியே அவ்விளையாட்டை விளையாடுவது போல கனவை நினைவாக்கியது போல ஆழ்ந்து போகச் செய்தது. கிராமத்துத் திருவாழா பந்தலில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலில், தோழிகள், தோழர்களோடு, வளையல் துண்டுகள், குச்சிகள்ம், பிய்ந்து போன மிகச் சிறிய அழிப்பான்கள்ம், மஞ்சாடி முத்து, குன்னிமுத்து, சோழி, புளியங்கொட்டை என்று பலவும் மணலில் ஒளித்து வைத்துத் தேடி எடுத்து வெற்றிக் களிப்பில் மூழ்கிய தருணங்கள், தோல்விகள் தழுவிய தருணங்கள், படிப்பினைகள் என்று கள்ளம் கபடமற்ற, மகிழ்வொன்றே தெரிந்த அந்த குழந்தை மனதுடன் வாழ்ந்த காலத்தின் இனிய சுவடுகள் மேலெழுந்து, கண்ணை மூடியதும், மனத் திரையில் அந் நிகழ்வுகள் எல்லாம் காட்சிகளாய் விரிய, எஸ் ரா, ஆர் கே நாராயணன் எழுத்துகளை வாசித்தது போன்ற ஒரு இனிய தருணத்தில் மூழ்கிவிட்டேன் இப்போது தங்களது எழுத்தை வாசித்ததும்....வேறு வார்த்தைகள் இல்லை சகோ..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!

      இவ்விளையாட்டின் காட்சியை இன்னும் துல்லியப்படுத்துகிறது உங்களின் பின்னூட்டம் . அதற்காய் உங்களுக்கு நன்றி.

      பெரும் எழுத்தாளுமைகளுடன் என்னை நீங்கள் ஒப்பிடுவது, நீங்கள் என்மேல் கொண்ட அன்பன்றி வேறில்லை.

      நீங்கள் எல்லாம் தொடர்ந்து அளிக்கின்ற இதுபோன்ற ஊக்கம் என்னை இன்னும் செம்மைப்படுத்தட்டும்.

      நன்றி.

      Delete
  17. வழக்கம் போலவே மிக அருமையான பதிவு ஐயா!

    நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைத் தமிழ் வரலாற்றோடு பிணைத்து நம் தொன்மையை உணர்த்தும் தங்கள் பாணி மெருகேறிக் கொண்டே வருகிறது. நீங்கள் இதுவரை எத்தனையோ சங்கப் பாடல்களுக்கு விளக்கம் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் முதன்முறையாக, எனக்குத் தெரிந்த சங்கப் பாடல் ஒன்றைப் பற்றித் தங்கள் பாணியிலான பதிவைப் படிக்கும் சுவையை இந்தப் பதிவில்தான் உணர முடிந்தது. ஆனால், அந்தக் களிப்பை இங்கே பகிர்ந்து கொள்ளும் மனநிலை இப்பொழுது இல்லை. காரணம், பதிவின் கடைசி வரிகள்!

    "இன்று அலைபேசியிலும் கணினியிலும் முடங்கிவிட்ட ஆடுகளங்களில் எம் குழந்தைகளின் விரல்கள் அளைந்து கொண்டிருப்பதைப் பெருமூச்சோடு கடந்து போகும்போது, அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள் என்பதை இனி ஒருபோதும் அவர்கள் உணரப்போவதில்லை என்றே தோன்றுகிறது" எனும் வரிகள் நெஞ்சில் பாரமாய் அழுத்துகின்றன.

    அந்த அளவுக்கு வருந்த வேண்டியதென்ன இருக்கிறது? நாமே நம் அக்கம் பக்கத்து, சொந்தக்காரக் குழந்தைகளையெல்லாம் கூட்டி இந்த விளையாட்டை அவர்களோடு ஆடி இந்தத் தலைமுறைக்கு இதை அறிமுகப்படுத்தலாமே எனத் தோன்றினாலும், கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுத்துக் கட்டிப் போடும் இன்றைய நாகரிக விளையாட்டுக்களை ஆடிப் பழகிய இன்றைய பிள்ளைகள் இது போன்ற விளையாட்டை விரும்புவார்களா எனும் தயக்கமும் எழுகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்க் காலம் எனும் பெருவெள்ளத்தைக் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்த தமிழர் அடையாளங்கள் நம்முடனே அழியப் போகின்றனவா என நினைக்கும்பொழுது நெஞ்சம் நடுங்கிறது!

    //சித்ரா அக்காவை இரு வாரங்களுக்கு முன் பார்த்தேன். அவரிடம் கதைகேட்க இப்போதெல்லாம் யாரும் வருவதில்லையாம்// - இந்த வரிகளில் நீங்கள் சித்ரா அக்காவைத் தமிழ்த்தாயோடு ஒப்புக் காட்டுகிறீர்களோ எனத் தோன்றுகிறது!

    இப்படியொரு பதிவுக்காய் மிக்க நன்றி ஐயா! கனத்த மனத்தோடு விடைபெறுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      கேள்வியையும் கேட்டு பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
      நம் விளையாட்டுகள் பெரிதும் சூழல் சார்ந்தவை. இந்த விளையாட்டிற்கு மணற்பகுதி வேண்டும். ( நெய்தலில் இருந்து இந்த விளையாட்டுப் பிற நிலங்களுக்குச் சென்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ) மண்தொட்டு விளையாடப் பெற்றோரின் அனுமதி வேண்டும். நீங்கள் சொன்னது போல, குழந்தைகளுக்கு அது உவப்பானதாய் இருக்க வேண்டும். முக்கியமாய் அது தன்னோடொத்த வயதினரிடம் பயில வழங்குவதாய், தன்னார்வங்காரணமாய்ப் பங்கேற்க விழைவதாய், அவர்களிடமிருந்து கற்பதாய் இருக்க வேண்டும்.

      சொல் ஒன்றினைப்போலத்தான் விளையாட்டுகளின் அறிமுகமும், வளர்வும் பயில்வும் நிலைபேறும் அழிவும்.

      அதனோடு அவை சார்ந்த அனுபவங்களும் அழிந்துவிடும். வெறும் ஊகங்களால் அவை தந்த களிப்பை மீட்டுருவாக்க இயலாது.

      இந்தப்பாடலை இந்த விளையாட்டை அறியாத ஒருவர் படிக்கும் போது அந்த சூழலுக்குள் சென்று இதனை உள்வாங்க முடியாது என்பது என் தோன்றல்.

      இன்னும் பல உளவியல் சார்ந்த நுட்பங்கள் இப்பாடலில் இருக்கின்றன.

      வலம்புரி போல் ஒலித்துப் புதுப்பாணரின் இசைக்கூட்டும் நீர்த்துறைகளில் அப்பெண்ணின் உணர்வுகள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.நான் அதனுள் எல்லாம் கடக்கவில்லை.

      “““““““சித்ரா அக்காவைத் தமிழ்த்தாயோடு ஒப்புக் காட்டுகிறீர்களோ எனத் தோன்றுகிறது!“““““:)

      தங்களின் வருகைக்கும் கருத்தார்ந்த பின்னூட்டங்களுக்கும் நன்றி.

      Delete
    2. //இன்னும் பல உளவியல் சார்ந்த நுட்பங்கள் இப்பாடலில் இருக்கின்றன// - ஓ! அவற்றையெல்லாம் புரிந்து கொள்ள நான் இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ!!!

      Delete
  18. நற்றிணையில் இந்த பாடல் என்னையும் மிகவும் கவர்ந்த ஒன்று! அதற்கு தங்களின் சிறப்பான விளக்கம் நன்று! வாழ்த்துக்கள் நண்பரே! கீச்சு கீச்சு தாம்பாளம் விளையாடிய பழைய நினைவுகளையும் கிளறிவிட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!

      தங்களின் வருகையும் கருத்தும் காண மகிழ்ச்சி.

      நன்றி.

      Delete
  19. உங்கள் பதிவின் மூலம் பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தேன். இந்த விளையாட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் வருகின்றது என்பதை அறிந்து வியந்தேன். அருமையான நற்றிணை பாடலையும் அதற்கான உங்கள் விளக்கத்தையும் மிகவும் ரசித்தேன். நம் சந்ததிகள் இழந்தவை ஏராளம் தான். அருமையான பாடலை எங்களுக்கு அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  20. மீண்டும் சின்ன வயதில் விளையாண்ட கிச்சுகிச்சு தாம்பழத்தையும் அதையொட்டி மற்ற விளையாட்டுக்களையும் மனதில் கொண்டு வந்து சந்தோஷிக்க வைத்தது...

    ReplyDelete

  21. வணக்கம்!

    கதைசொல்லி அக்காவைக் காட்டும் வரியை
    எதைச்சொல்லிப் போற்றுவேன் இங்கு!

    ReplyDelete
    Replies
    1. இங்கு பதியுமும் இன்குறள் பின்னூட்டப்
      பொங்குதமிழ் மூழ்கும் புலன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் குறளுக்கும் நன்றி ஐயா.

      Delete