Saturday, 1 August 2015

சொற்கள் சொல்லாத பொருளை அறிதல்;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (14)


‘சொல்லாத சொல்லுக்குப் பொருளில்லை’ என்பார்கள். ஆனால் சொல்லுகிற சொல்லுக்கும் சொல்லின் பொருளன்றி  வேறு பொருள் இருக்கிறது என்றால் நாம் என்ன செய்வது? இன்றைய பதிவு இதைப் பற்றியதுதான்.

அவன் தன் காதலியைத் திருமணம் செய்ய அவளைப் பிரிந்தாக வேண்டிய சூழல். அவள் பெரிய இடத்துப்பெண். கொஞ்சம் பொருள் சேர்த்துத் தன் தகுதியை உயர்த்திக்கொண்ட பிறகுதான் அவள் வீட்டில் சென்று பெண்  கேட்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான் அவன். தன் பிரிவை நிச்சயம் அவள் தாங்க மாட்டாள். தன்னால் நேரடியாகப் ‘பொருள் தேடப் பிரிந்து செல்கிறேன்’  என்பதை அவளிடம் சொல்லவும் முடியாது.

அவன் அவளது தோழியிடம் சொல்கிறான். “ எப்படியாவது என் நிலையை அவளிடம் எடுத்துச் சொல். அவளுக்காகத்தான் இப்பொழுது நான் சம்பாதிக்கக் கிளம்புகிறேன். அவளைப் பிரிய எனக்கும் மனதில்லை. ஆனால் அவள் வீட்டில் வந்து பெண்கேட்க எனக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான் பொருள்தேடச் செல்கிறேன். தயவுசெய்து இதனை அவளிடம் சொல்லிப் புரியவை. “

இதனை அவளால் தாங்க முடியாது என்பது தோழிக்கும் தெரியும். ஆனாலும் அவன் சொல்வது சரிதானே? அவர்களது நலனிற்காகத்தானே அவன் பொருள்தேடச் செல்வது ? அங்கேயே அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவளிடம் இத்தகவலைச் சொல்லச் செல்கிறாள் தோழி.

 ‘என்னவாகப் போகிறதோ…?’ என்று பயந்தபடி அவன்  தோழியின் வருகைக்காகக் காத்திருக்கிறான்.

சற்று நேரத்தில் பீதியுடன் தோழி வருகிறாள்.

அவனால் தாங்க முடியவில்லை.

“என்ன ஆயிற்று… என்ன ஆயிற்று?“ என்று கேட்கிறான் பதட்டத்துடன்.

“ஒன்றுமில்லை.“ என்கிறாள் தோழி.

“ஒன்றுமில்லையா நான் சொன்னதை அவளிடம் சொன்னாயா?“

“சொன்னேன்.“

“என்ன பதில் சொன்னாள்?“

“ஒன்றும் சொல்லவில்லை!“

“ஒன்றுமே சொல்லவில்லையா?“

“இல்லை. ஒன்றுமே சொல்லவில்லை.“

அவனுக்குப் பதட்டம் மேலும் அதிகரிக்கிறது.

அடுத்து என்ன கேட்பது எனத் தெரியவில்லை.

“சரி நீ இதனைச் சொன்னபோது அவள் எப்படி இருந்தாள்? இந்தச் செய்தியை எப்படி எதிர்கொண்டாள்?“ என்கிறான் அவன்.

“நான் இந்தச் செய்தியைச்  சொன்னதும், அவள் கண் தன் வளையலைப் பார்த்தது.

பின் தன் தோளைப் பார்த்தது.

பின் தன் காலைப் பார்த்தது அவ்வளவுதான்“ என்கிறாள் தோழி.

அவள் சொன்னது இதுதான்.

“தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்(டு) அவள்செய் தது” ( குறள் 1279 )

தன் காதலி என்ன நினைக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவள் எடுத்த முடிவை நினைத்து அவன் உள்ளம் நடுங்குகிறது.

அவள் வளையையும் தோளையும் காலையும் பார்க்கக் காரணம் இதுதான்.

அவன் பிரிகிறான் என்ற உடனேயே,

‘அவரை விட்டுப் பிரிந்து நீ  வேண்டுமானால் இரு. ஆனால் நான் இருக்க மாட்டேன்’ என்று தன் கைகளை விட்டுக் கழலத் தயாராகும் வளையலைப் பார்க்கிறாள்.

‘அவரைப் பிரிந்தால் வளை கழன்று விழும்படி நான் மெலிந்து போவேன்’ என்று சொல்லும் தோளைப் பார்க்கிறாள்.

‘வளை கழலாமலும் தோள் மெலியாமலும் காக்கும் பொருட்டு, நீ தான் அவர் செல்வது எவ்வளவு கடினமான வழியென்றாலும் என்னைச் சுமந்து சென்று அவருடனே நான் நீங்காமல் இருக்கும் படி நடந்து காத்து அருள் புரிய வேண்டும்“ என்று மன்றாடியபடியே தன் கால்களைப் பார்க்கிறாள்.

எதற்காகவும் தன்னைவிட்டு அவனைத் தனியே விடுவதாய் இல்லை. பிரிவதாயின் அவளும் அவனுடன் வரத் தயாராகி விட்டாள் என்பதைத்தான் அவளது பார்வையின் குறிப்புகள் காட்டுகின்றன.

இந்தப் பாடல் திருக்குறளின் குறிப்பறிவுறுத்தல் என்கிற அதிகாரத்தில் வருகிறது.

திரைப்படங்களில் கதாநாயகி கதாநாயகனுக்குச் சில செய்திகளைச் சொல்ல இதுபோன்ற குறிப்புகளைப் பயன்படுத்துவாள்.

சரி தமிழுக்கு வருவோம்.

சொற்கள் தரும் நேரடிப் பொருளன்றிச் சில நேரங்களில் சொல்லுபவனுடைய மனக்கருத்தினையும் உணர்ந்து கொண்டுதான் சொல்லுக்குப் பொருள்காண வேண்டும் என்கிறது நம் இலக்கணம்.

முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே
  இன்ன வென்னும் சொன்முறை யான “ ( தொல். எச்.62 )

எனத் தொல்காப்பியம் கூறும் முன்னம் என்பதற்கு விளக்கமாக இந்தத் திருக்குறளை மேற்கோள் காட்டி இதனைச் சொல்கிறார் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய தெய்வச்சிலையார்.

 முன்னம் என்பது சொற்கள் நேரடியாகச் சொல்லாததைச் சொல்பவனின் மனக்குறிப்பில் இருந்து, சொற்களைக் கடந்து விளங்கிக் கொள்வதற்கான வழிமுறை.

வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்துகொள்வோம்.

பட உதவி- நன்றி.https://encrypted-tbn2.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

46 comments:

  1. வணக்கம் என் ஆசானே,
    புரிந்தது, தேடுதலை ஒரே கடிவாளம் கொண்ட குதிரையாய் அன்றி,,,,,,
    தங்கள் விளக்கம் அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி பேராசிரியரே!

      Delete
  2. தமிழின் இனிமையை எண்னி ரசிப்பதா காதலினின் இனிமையை எண்ணி ரசிப்பதா அல்லது இவை ஒவ்வொன்றையையும் தேடித் தேடி ரசித்ததோடு நில்லாமல் எமக்கும் அந்த இனிமை எல்லாம் அருந்தும் படி, புரிந்து கொள்ளும் படி எடுத்து தோதும் அழகினை மெச்சுவதா அசந்து போய் இருக்கிறேன் நான். நன்றி அப்பனே நன்றி !
    மேலும் உம் ஆற்றல் பல்கிப் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. மொத்தத்தில் தமிழ் ரசனைக்குரியது அம்மா!

      வகுப்பறைகளில் அதை வெறுக்கடித்துவிடுகிறோம்.

      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. தங்கள் விளக்கம் அருமை... தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
  4. இரு அடிகளில் எத்துனை அழகு மிளிர மனங்களின் ஏக்கத்தை அய்யன் சொல்லியிருக்கிறார்.

    குறளைப் படிக்கினும் தங்களைப்போன்றோர் சொல்லக் கேட்பது மிக இனிமை.

    God Bless YOU

    ReplyDelete


  5. //அவரைப் பிரிந்தால் வளை கழன்று விழும்படி நான் மெலிந்து போவேன்’ என்று சொல்லும் தோளைப் பார்க்கிறாள்.///

    இப்படி எல்லாமா அந்தகால பெண்கள் இருந்தார்கள்...ஹும் இந்த காலத்துல பாருங்க ............................... இப்படிதானே இருக்கிறாங்க (புள்ளியிட்ட இடத்தை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மதுரைக்காரரே,
      இந்த கால பெண்களும் அப்படித்தான், அந்த கால தலைவனின் தவிப்பில்,,,,,,,,,,
      நன்றி.

      Delete
    2. பேராசிரியரே.....

      மதுரைச் சகோ கோடிட்ட இடத்தில் என்னைப் பதிலளிக்க விடமாட்டீர்கள் போல...!:)

      Delete
  6. படிப்பதற்கு இனிமையான மற்றொரு பதிவு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. அப்பா......
      ஒவ்வொரு பதிவிற்கும் இதுபோல உங்களின் பாராட்டைப் பெறலாமென்றால் அது எங்கே முடிகிறது....!!! :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  7. அருமை!.. அருமை!

    மனக் குறிப்பிலிருந்து சொல்ல வரும் விடயத்தைச்
    சொற்களே இன்றி அடுத்தவர் புரிந்து கொள்வது!..
    இதற்குக் கேட்க வந்தவர் சொற்களின்றிச் சொன்னவர் மனத்தை
    அத்தனை தூரம் புரிந்தவராக இருத்தல் அவசியம்.
    காதலரால், கணவன் மனைவியால், சில நட்புகளாலும்
    இது சாத்தியமே!.
    இதன் கருத்தொத்த இன்னொரு குறள்தானே
    “கண்ணோடு கண்இணை நோக்கொக்கின்..” என்பதுவும்?..

    அழகிய சிறப்பான பகிர்வு ஐயா!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இங்கு சொற்கள் இருக்கின்றன.

      இது சொல் கடந்த பொருள்.

      இதற்குச் சேனாவரையர் வேறு உதாரணம் காட்டுவார்.


      சொல்லை யார் சொல்லுகிறார்கள் எந்தத் தொணியில் சொல்கிறார்கள் என்பதன் அடிப்படையில் பொருளைப் புரிந்து கொள்ளுதல்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. குறள் விளக்கத்தை மறுபடியும் ரசித்தேன் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. உளவியல் சார்ந்த பதிவு... அருமையான பகிர்வு... நன்றி

    ReplyDelete
    Replies
    1. தொடர்கின்றமைக்கு நன்றி திரு பாமரன்.

      Delete
  10. குறளினிமையை தங்கள் பாணியில் விளக்கியது சிறப்பு.
    வரிகளுக்கிடையில் இடைவெளி அதிகமாக இருப்பதாகப் படுகிறது. சற்று குறைத்தால் நலம் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை உளங்கொள்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  11. குறளின் இனிமை
    தங்களின் வரிகளில்
    அருமை நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. குறள் விளக்கம் அருமை. முன்னம் என்பதை அறிந்துகொண்டேன். நன்றி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. சகோ.

      சங்க இலக்கியத்தின் பல பாடல்களின் உள்கடக்க இந்தக் குறிப்பு உதவும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  13. தொடர்ந்து தங்களது பதிவுகளைப் படித்துவருகின்றேன். ஒவ்வொரு பதிவின் மூலமாக ஒவ்வொரு செய்தியை தெரிந்துகொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  14. என்ன அழகான குறள் விளக்கம். அந்த காட்சியை கண் முன் கொண்டு வந்தது ஆசிரியரே .
    "சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...." என்ற பாடலே சட்டென நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு ரொம்ப நன்றிங்க !

      Delete
  15. இதிலிருந்து எனக்கு தெரிந்தது. எவ்வளவுதான் உண்மைக்காதலாக இருந்தாலும் அந்தக் காதல் நிறைவேற பொருள் தேவை என்பது புரிகிறது..

    ReplyDelete
  16. இதிலிருந்து எனக்கு தெரிந்தது. எவ்வளவுதான் உண்மைக்காதலாக இருந்தாலும் அந்தக் காதல் நிறைவேற பொருள் தேவை என்பது புரிகிறது..

    ReplyDelete
    Replies
    1. பொருளில்லார்க்கு இவ்வுலகமே இல்லை என்று வள்ளுவர் சொல்லி வைத்தபிறகு காதல் நிறைவேற அது அவசியமில்லையா வலிப்போக்கரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி .

      Delete
  17. அன்புள்ள அய்யா,

    கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
    காத்திருந்தால் பெண் கனிவதில்லை
    ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
    கண்ணாடி இதயம் இல்லை
    கடல் கை மூடி மறைவதில்லை
    கண்ணாடி இதயம் இல்லை
    கடல் கை மூடி மறைவதில்லை....

    சொல்லாதே யாரும் கேட்டால்
    எல்லோரும் தாங்க மாட்டார்…

    செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்(த)து….

    நன்றி.
    த.ம.12

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  18. சொன்னாலும் புரியாதவர்கள் பலர் உண்டு. வாய் திறந்து எதுவும் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தினாலும் சொல்லவந்ததை மிகச்சரியாகப் புரிந்துகொள்வோர் மிகச்சிலரே. அந்த மிகச்சிலருள் ஒருவனைக் காதலனாய்ப் பெற்ற காதலி கொடுத்துவைத்தவளே... தோழியும் அறியாக் குறிப்பை மிக அழகாகப் புரிந்துகொண்டானே... தெள்ளிய குறள்விளக்கம் நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  19. சொல்லாத சொற்களின் பொருளைக் குறிப்பால் உணர்த்தும் குறளும் அதன் விளக்கமும் அருமை! முன்னம் என்பதன் பொருளையும் அறிந்தேன். தொடருங்கள் சகோ!

    ReplyDelete
  20. இரண்டடி குறளுக்கு இனிமையான விளக்கம்! அழகான எளிமையான பதிவு! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  21. சிறுகோட்டுப் பெரும்பழம் தூக்கியாங்கு!! குறுந்தொகை என நினைக்கிறேன்:) அந்த பாடல் நினைவு வருகிறது அண்ணா:)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நினைவு சரிதான்.

      நன்றி சகோ.

      Delete
  22. அட! ஐயனும் எப்படி எல்லாம் எழுதி இருக்கின்றார் பாருங்கள்! சகோதரரே! தங்கள் அழகான விளக்கத்துடன் குறளின் அர்த்தத்தையும் புரிந்து கொண்டோம்! முன்னம் என்பதன் விளக்கம் உட்பட.

    இப்படிச் சுவைபடச் சொன்னால் தமிழைக் கற்க கசக்குமா என்ன?!!!!!

    அருமை!

    கீதா பயணத்தில் இருப்பதால் கொஞ்சம் தாமதமாகின்றது....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      தாமதமானால் என்ன ...........

      தாங்கள் வருவதே மகிழ்ச்சிதானே.!

      நன்றி.

      Delete
  23. வணக்கம் பாவலரே !

    குறளினிமையை விட தங்கள் பதிவு இனிக்கிறது அருமை தொடர்கிறேன்
    நான் தவறவிட்ட பதிவுகளை முதலில் பார்க்கிறேன் !
    நன்றி வாழ்க வளமுடன்

    ReplyDelete