Thursday 13 August 2015

இதென்னடா குரங்கிற்கு வந்த சோதனை?


குரங்கு செய்யும் சேட்டைகளைப் பார்ப்பது என்பது சுவாரசியமானது. ஒரு குரங்கின் ஒட்டுமொத்த சேட்டைகளையும் ஒருசேரக் காணும் தருணம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வாய்ப்பதில்லை. நடக்கக் கூடியதோ இல்லையோ, குரங்கு செய்யும் பல சேட்டைகளைப்  புலவன் கற்பனை செய்து அழகாக்கிக் தரும்போது நம்  ரசனைக்குரியதாக அந்தச் சேட்டைகள் மாறிவிடுகின்றன.

நாமறிந்த கவிஞருள் ஒருவரான பாரதிதாசனின் அழகின் சிரிப்பில் இடம்பெறும்,

கிளையினிற் பாம்பு தொங்க, விழுதென்று, குரங்கு தொட்டு
'விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல் '
கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.

என்ற குரங்குச் சேட்டை பற்றிய பாடல் கொஞ்சம் பிரபலமானது.

பட்டினத்தார், இவ்வுலக இன்பங்களில் சிக்கித் தீவினைகளைத் தனக்குத்தானே தேடிக்கொள்ளும் மனிதனை ‘ஆப்பசைத்த குரங்கு’ எனக் குறிப்பிடுவார்.

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
     நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
     பொலபொலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்! கைவிடவும் மாட்டீர்!
     கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
     அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட் டீரே!

என்பது அவர் பாடல். இப்பாடலும் சற்றுப் பிரபலமான பாடல்தான். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தினர்  வெளியிட்ட தமிழ்ப்பாடப் புத்தகத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது.

நாம் பார்க்கப்போகும் பாடல் இவற்றிற்கு முற்பட்டது. இவற்றைவிடச் சுவையானது.

குரங்கின் சேட்டையைக் காணும்முன் அதன் சேட்டைக்கான பின்புலத்தைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

வேடர்கள் காட்டில் தங்கள் வேட்டையை முடித்துக் கொண்டு, சிற்றோடை பாயும் இடமாகப் பார்த்து அங்குள்ள மரத்தடியில் தாங்கள் வேட்டையாடிய விலங்குகளைத் தீ மூட்டிச்  சுட்டுத் தாம் கொண்டுவந்த கள்ளை உண்டு களிக்கிறார்கள். 

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் குரங்கு ஒன்று, அவர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்றதும் அந்த இடத்தை ஆராய்ச்சி செய்ய முற்படுகிறது.

முதலில் அவர்கள் சமைத்த இடத்திற்கு மேலுள்ள மரத்திற்குத் தாவி அங்கிருந்து கீழே குதிக்கிறது.

விழுந்த இடமோ வேடர்கள் அடுப்பு மூட்டிய இடம். சாம்பல் பூத்த அடுப்பின் தீக்கங்குகள்மேல் விழுந்ததும் சூடு தாங்க முடியாத குரங்கு திக்குத் திசை தெரியாமல் கதறி ஓடுகிறது.

அது ஓடும் வழியிலா தேள் கிடக்க வேண்டும்? தேளினை மிதிக்கவும் தேள் ‘இந்தா வாங்கிக் கொள்’ என்று குரங்கின் காலில் தன் கொடுக்கால் கொட்டியது ஒரு கொட்டு.

இப்போது சூட்டுப் புண்ணுடன் தேள் கடித்த கடுப்பும் சேர்ந்து கொண்டது.

தரையில் நடந்தால்தானே சிக்கல்? நமக்குரிய மரத்தில் ஏறுவோம் என விழுதினைப் பிடித்தால் அது மலைப்பாம்பு. ( பாரதிதாசனுக்கு முன்னரே மரத்தினில் தொங்கிய பாம்பு இது! )

பாம்பு தானே வலிய வந்து சிக்கிய இரையை சும்மாவிடுமா என்ன..? அது தன் பங்கிற்கு குரங்கின் கையைச் சுற்றி இறுக்கப் பார்க்கிறது.

 வளைந்து நெளிந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ எனக் கைகால்களை நீட்டி ஆசுவாசப்படுத்தியபடி கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம் என்று ஓடைக்குப் போனது குரங்கு.  தண்ணீர் அள்ள ஓடையில் கைகளை விட்டால், தண்ணீருடன் சேர்ந்து வந்த நண்டு ஒன்று குரங்கின் விரலைப் பிடித்துக் கொண்டது.

தண்ணீரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எனக் கையை உதறியபடி, மீண்டும் கரைக்கு வந்தால் ஓடை அருகே மரத்தில் வசிக்கும் பேய் ஒன்று குரங்கின் மேல் ஏறி விட்டது. 

இவ்வாறு சாதாரணமாக இருந்த குரங்கு இப்போது பேய்க்குரங்காகிவிட்டது.

தன்னிலை இழந்த குரங்கு வேடர்கள் உண்டு போன கலயத்தில் மிச்சம் இருக்கும் கள்ளை வேகவேகமாகக் குடித்தபடி போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கலயத்தின் அருகே இருந்த பச்சை மிளகாயை எடுத்து ஒரு கடி கடிக்கிறது..

இதோ இவ்வளவு குரங்குச்சேட்டைகளையும் நாலுவரியில் சொல்லிப்போன, காளமேகம் பாடியதாகச் சொல்லப்படும் அந்தப் பாடல்.

குரங்கனலில் வீழ்ந்துவெறி கொண்டுதேள் கொட்டக்
கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வ – விரைந்துபேய்
பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்
எத்தனைபார் சேட்டைக் கிடம்.

அடுத்தடுத்து இவ்வளவு சோதனைகளைச் சந்தித்த அந்தக் குரங்கின் முகம் எப்படி இருந்திருக்கும் என இந்தப் பாடலைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது.

“ இஞ்சி தின்ற குரங்கைப் போலவா..?“ என்று நீங்கள் கேட்கலாம்.

இல்லை. அதற்கு வேறுபாடல் இருக்கிறது.

இஞ்சி தின்ற குரங்கை மட்டுமல்ல, ‘குரங்கின் கையில் கொள்ளிக் கட்டை கிடைத்தது போல’ என்கிற பழமொழியையும் இப்பாடல் சொல்கிறது. 

“இஞ்சி தின்ற குரங்கு’ என்பது பொதுவாகத் தவறேதும் செய்தோ பொய் சொல்லியோ மாட்டிக்கொண்டவன் முகத்திற்குக் காட்டப்படும் உதாரணம்.

காளமேகம் கண்ட குரங்கு பட்ட சோதனை போதாதென்று இன்னும் கொஞ்சம் தன்பங்கிற்குச் சேர்த்து குரங்கின் செயல்களை விவரிக்கிறார் தத்துவப் பிரகாசர் என்ற புலவர்.

பாடல் இதோ,

குரங்குமாய் நண்டுகட்டித் தேளும் கொட்டிக்

    குடியாத மதுக்குடித்துப் பேயு மேறி

இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி

    இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத்

தருங்கருணை இல்லாத புல்லர் வாழ்வில்

    தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக்

கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்

    காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்.

மனிதரிடம் இருக்க வேண்டிய கருணை,  சிறிதும் இல்லாத கீழ்மக்கள், பல்லக்கில் ஏறி ( தண்டிகையின் மீதேறி ), செல்வம் அவர்களிடம் நிறைந்து கொண்டே இருக்கவும் அதைக் கொடுக்க மனதில்லாக்  (கருங்கையராய் ) கொள்கையுடையவராய் (மதமேறி), தங்களின் நிலைபற்றித் தமக்குத்தாமே மகிழ்ந்தவர்களாய்த் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று அலைபவர்கள்,
நண்டு கவ்வித் தேள் கொட்டி,  அதுவரை குடித்தறியாத மதுவினால் போதை ஏறிப் பேய்பிடித்து, காஞ்சொறி எனப்படுகின்ற பட்டாலே உடலெல்லாம் அரிக்கக் கூடிய பொடியைத் தன்மேல் தூவிக்கொண்டு, இஞ்சியைப் பறித்துத் தின்று, கொள்ளிக் கட்டையைக் கையிலே எடுத்துக் கொண்டு புறப்படுகின்ற குரங்கினைப் போன்றவர்கள் என்பது இந்தப் பாடலின் பொருள்.

குரங்கின் கையில் உள்ள கொள்ளிக்கட்டையால் குரங்கிற்கு மட்டுமன்று
சுற்றி இருக்கும் எல்லாவற்றிற்கும் கேடுதானே?

இவர்களைப் போன்றவர்களாலும் தான்!

தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn0.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

45 comments:

 1. வணக்கம்
  ஐயா

  பாடலும் விளக்கமும் சொல்லிய கருத்தும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி திரு, ரூபன்.

   Delete
 2. நல்ல இலக்கியச் சுவை. மீண்டும் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. படித்து உங்கள் கருத்துகளை அறியத் தாருங்கள் ஐயா.

   வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

   Delete
 3. அன்புள்ள அய்யா,

  ‘இதென்னடா குரங்கிற்கு வந்த சோதனை?’

  -பாரதிதாசனின் அழகின் சிரிப்பில் குரங்குச் சேட்டை எல்லோரும் இரசிக்கக்கூடியது.

  ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
  அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட் டீரே! “
  -பட்டினத்தார் பாடலிலும் நக்கல் குறையவில்லை!

  குரங்குச்சேட்டைகளையும் நாலுவரியில் காளமேகம் நச்செனச் சொல்லிப் போகின்ற அழகே அழகு! தத்துவப் பிரகாசர் புலவரும் காளமேகம் போல பொழிகிறார்.

  நல்ல நகைச்சுவையான பாடல்களையெல்லாம் தேடிப்பிடித்துக் கொடுத்தது கண்டு மகிழ்ச்சி.
  குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே...! குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதக் குரங்கானவன் என்பதை விளக்கியிருக்கிறீர்கள்!
  சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
  வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி...
  சமீபத்தில் பொன்னனியாறு அணைக்கட்டு சென்று... குரங்கிடம் மாட்டிக்கொண்டு நாங்கள் பட்ட பாட்டை சொன்னால் இந்தக்கால காளமேகமாகிய நீங்கள்தான் பாட்டெழுத வேண்டும்.
  ‘இதென்னடா மனிதனுக்கு வந்த சோதனையா...?’ -என்று எண்ணத் தோன்றியது.

  அது புடுங்கிக் கொண்டு சென்ற பொருள்கள் போக... துண்டக் காணோம்...துணியக் காணோம் என்று ஆளைவிட்டால் போதும் என்று அங்கிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேல் ‘பொலிரோ’ வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல... அங்கும் ஓடி வந்துவிட்டன.

  ஜெய் ஆஞ்னேயா...!

  நன்றி.
  த.ம. 3.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.

   எனக்கும் குரங்குப் பிடியில் மாட்டிக்கொண்ட அனுபவம், சித்தன்ன வாசலில் நேர்ந்திருக்கிறது.

   பொதுவாக நம் பயம் அதன் பலம்.

   ஜெய் ஹனுமான்!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

   Delete
 4. குரங்கு சேட்டைகள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.

   Delete
 5. நாம் எல்லோருமே ரசிக்கும் நம்மவர்களைப் பற்றிய அழகான வரிகள்! பாரதிதாசனின் பாடலும், காளமேகப்புலவர்ன் பாடலையும் படித்திருக்கிறோம் பாடப்புத்தகத்தில். அதை மீண்டும் இங்கு சுவைத்தோம்...அருமை..நீங்களும் சுவைபட எழுதுகின்றீர்கள்....

  கீதா: தத்துவப்பிரகாசர் பாடலைச் சமீபத்தில் வாசித்தேன். அதைக் குறித்தும் வைத்துக் கொண்டேன் பொருள் வேண்டி. வேறு என்ன சமீபத்தில் ஒரு குரங்கின் சேட்டைகளைக் காண நேர்ந்தது. அதைப் பற்றி எழுதத்தான்.... இப்போது நீங்கள் பாடலின் பொருளும் எழுதிவிட்டீர்கள். கற்றுக் கொண்டு விட்டேன்.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.

   நான் கொஞ்சம் முந்திக் கொண்டேனோ? ;)

   தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி.

   Delete
 6. அருமையான பகிர்வு ஐயா...

  ReplyDelete
 7. Fantastic sir... First time visiting your Blog. Great explanation!

  ReplyDelete
 8. இஞ்சி தின்ற குரங்கு’ என்பது பொதுவாகத் தவறேதும் செய்தோ பொய் சொல்லியோ மாட்டிக்கொண்டவன் முகத்திற்குக் காட்டப்படும் உதாரணம்.

  ஓஹோ இதற்குத் தான் சொல்வார்களா?

  நண்டு கவ்வித் தேள் கொட்டி, அதுவரை குடித்தறியாத மதுவினால் போதை ஏறிப் பேய்பிடித்து, காஞ்சொறி எனப்படுகின்ற பட்டாலே உடலெல்லாம் அரிக்கக் கூடிய பொடியைத் தன்மேல் தூவிக்கொண்டு, இஞ்சியைப் பறித்துத் தின்று, கொள்ளிக் கட்டையைக் கையிலே எடுத்துக் கொண்டு புறப்படுகின்ற குரங்கினைப் போன்றவர்கள் என்பது இந்தப் பாடலின் பொருள்.
  இப்படி எல்லாம் நமக்கும் சிலசமயங்களில் வருவதுண்டு தானே தொடர் துன்பங்கள் இல்லையா ? ஐயோ அது பொல்லாத விதி...........நினைத்தாலே பயமாக இருக்கிறது.

  குரங்கின் கையில் உள்ள கொள்ளிக்கட்டையால் குரங்கிற்கு மட்டுமன்று
  சுற்றி இருக்கும் எல்லாவற்றிற்கும் கேடுதானே.\\\\\ அது தானே அம்மாடி ////

  யாருக்கும் இப்படி வரக்கூடதுப்பா பாவம் இந்தக் குரங்கு விழுந்தவனை மாடேறி உழக்குவது போல படும் பாடுதான் எத்தனை ம்..ம்.ம் ரொம்பவே ரசித்தேன் குரங்கின் சேட்டையையும் அருமையான அக் கவிதைகளையும்.

  இத் தருணம் காளமேகப் புலவரரை அவமானப் படுத்த எண்ணிய கவிராயர்கள் போக்கை உணர்ந்து அவர்களை அவமானப் படுத்தும் நோக்கத்துடன், காளமேகப் புலவர் பாடிய இந்தப் பாடலும் நினைவுக்கு வந்தது.

  வாலெங்கே? நீண்ட வயிறெங்கே? முன்னிரண்டு
  காலெங்கே ? உட்குழிந்த கண்ணெங்கே ? - சாலப்
  புவிராயர் போற்றும் புலவீர்காள் ! நீவிர்
  'கவி ' ராயர் என்றிருந்தக் கால் !

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா!

   குரங்குச் சேட்டைகள் ரசிக்கக் கூடியவைதான். “இஞ்சி தின்ற குரங்கு“ என்ற பிரயோகம் வேறேதும் பயன்பாட்டில் வருகிறதா?
   தெரியமாற் கேட்கிறேன்.

   ஆம்..! இந்த வெண்பாவும் சுவையானதுதான்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 9. விளக்கம் அருமை! குரங்கின் சேட்டை! பல்சுவைப் பாடல்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 10. வணக்கம் ஐயா. அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி!
  நக்கீர தேவநாயனாரால் பாடப்பட்ட 'திருஈங்கோய் மலை எழுபது' என்ற பாடல்கள் தொகுப்பில் உள்ள ஒரு பாட்டு கூட

  கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
  எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி – வல்லே
  இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே, மேனிப்
  பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.

  என்று குரங்குகள் போடுகிற ஆட்டத்தைப்பற்றி சொல்கிறது. . இதுபோல் பழந்தமிழ் இலக்கியங்களில் இன்னும் குரங்குகள் பற்றியும் ,மற்ற விலங்குகள் பற்றியும் உள்ள பாடல்களை விளக்கத்தோடு தந்தால் மகிழ்ச்சியடைவேன்.

  குரங்குக்கு வந்த சோதனையைப்பற்றி படித்ததும் ஒரு உழவனுக்கு வந்த சோதனை பற்றிய பாடல் ஒன்றை பற்றி நான் எழுதியதுன்பம் எப்போதும் தொடர் கதைதான் என்ற பதிவு நினைவுக்கு வருகிறது. நேரம் இருப்பின் படிக்க வேண்டுகிறேன். .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.

   உங்களின் தொடர்வருகை காண உவப்பு.

   இலக்கியங்களில் குரங்கு பற்றிய பல செய்திகள் இருக்கின்றன.

   ஐங்குறுநூற்றில் கூட குரங்குப் பத்து என்கிற தலைப்பில் பத்துப் பாடல்கள் குரங்கை மையம் கொண்டு அமைவன.

   சம்பந்தர் தேவாரத்திலும்,

   “வலம் வந்த மடவார்கள் நடமாட
   முழவதிர மழையென் றஞ்சிச்
   சிலமந்தி அலமந்து மரமேறி
   முகில்பார்க்கும் திருவையாறே. “

   என்றாற் போன்ற நயமிக்க இடங்கள் உண்டு.

   இங்குக் காளமேகப் புலவரின் பாடலை பதிவின் மையமாகக் கொண்டு அதற்கு உடன்கூட்டாய் மற்ற பாடல்களை அளித்துப் போனேன்.

   தங்களின் பிற பறவைகள் விலங்குகள் பற்றிய பாடல்களுள் சுவையானவற்றைப் பகிர்ந்திட எண்ணுகிறேன். காலம் கைகூடினால் நிச்சயம் உங்களின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்.

   உங்கள் சுட்டியைக் கண்டபோதே , ஆவீன மழைமொழிய என்னும் பாடலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

   ஏமாற வில்லை.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 11. சினிமா படம் பார்க்கும் போதே தூக்கம் வந்து விடுகிறது ,குரங்கு சேஷ்டை களை நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் (நம் தின்பண்டங்களை பத்திரப் படுத்திக்கணும்:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஆமாம்.

   நம் திண்பண்டத்தைப் பிடுங்கிச் சேட்டை செய்தால் நாம் அதை ரசிக்கவா முடியும்? ;)

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பகவானே!

   Delete
 12. வணக்கம் ஐயா!

  குரங்கிற்கு வந்த சோதனையா?..
  குரங்காலே வந்த சோதனையா?..
  நல்ல பதிவு இங்கு!..:)

  கொடுத்த எடுத்துக் காட்டுக்கள் அற்புதம் ஐயா!
  நானும் காளமேகப் புலவரின் கவிதைகள்
  அவரின் சிலேடைக்காகவே தேடிப் படிப்பதுண்டு!

  குரங்கின் கைப் பூமாலை போல்
  குரங்கின் கைக் கொள்ளியும் மோசமானதே!

  தொடருங்கள்!.. வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. குரங்கின் கை பூமாலையை இனித் தேட வேண்டுமோ? :)

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 13. இந்த ஒப்புமையை நமக்கும் நாம் ஒப்புநோக்கிப் பார்க்கலாம். பல நிகழ்வுகளில் நாமும் இவ்வாறான நிலையை எதிர்கொண்டு அனுபவித்துள்ளோம். நல்ல படிப்பினை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் முனைவர் ஐயா.

   தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   Delete
 14. வணக்கம்,
  அய்யா நல்ல தேடல்,,,
  அதற்கான அருமையான விளக்கம்,
  பாரதிதாசன் இப்பாடல் நான் மிகவும் விரும்பி அடிக்கடிப் பயன்படுத்துவது,,,,,,
  பட்டினத்தார் பாடல், அதைத்தொடர்ந்து
  காளமேகப் புலவர் பாடல் தேடல் அருமை,
  ஏன் தாங்கள் நம்பவில்லையா காளமேகம் பாடல் என்று,,,,,,,,
  சொல்லப்டுவதாக என்கிறீர்கள்,,,,,,
  ///காஞ்சொறி எனப்படுகின்ற பட்டாலே உடலெல்லாம் அரிக்கக் கூடிய பொடியைத் தன்மேல் தூவிக்கொண்டு,///
  பொடியா? செடியா?
  அருமையான விளக்கம் கண்டேன்,
  நன்றி.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பேராசிரியரே!

   தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

   காளமேகத்தின் பெயரில் பலரும் தம் கைச்சரக்கையும் சேர்த்திருக்கிறார்கள் பேராசிரியரே!

   தாங்கள் இறந்துபோனாலும் தங்கள் படைப்பாவது பேசப்படட்டும் என்று எண்ணிய தியாகச் செம்மல்கள் அவர்கள் !

   கம்பராமாயணத்தில் கம்பன் பாடல்களின் ஊடே தம் கைச்சரக்கையும், சீவக சிந்தாமணியின் இடையிடையே தம் சரக்கையும் கலந்துவிட்டவர்களைப் போலத்தான் இவர்களும்.

   அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

   அடுத்து உங்களின் கேள்வி,

   ““““““““““““““///காஞ்சொறி எனப்படுகின்ற பட்டாலே உடலெல்லாம் அரிக்கக் கூடிய பொடியைத் தன்மேல் தூவிக்கொண்டு,///
   பொடியா? செடியா?““““““““““““““““““““““

   இதற்கான பதில்,


   காஞ்சொறி என்கிற செடியின் பொடி.

   தங்களின் வருகைக்குக் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.


   Delete
  2. அய்யா மன்னிக்கனும்,
   பொடி எனின் குரங்கிற்கு எப்படி?
   செடி என்றால் அது இருக்கும் இடத்தில் இருப்பது,,,,,,,
   அய்யா என் கேள்வி தங்களுக்கு நகைப்பை உண்டாக்குவது எனக்கு புரிகிறது,,,
   இப்போவெல்லாம் இப்படி தான் எனக்கு கோக்கு மாக்கா தோன்றுகிறது.
   மன்னிக்க,,,

   Delete
  3. வணக்கம் பேராசிரியரே!

   பொடி என்கிற சொல்லிற்குச் (செடியின்)மகரந்தம் என்றும் பொருள் கொள்ளலாம்.

   தங்களின் தோன்றலில் பிழையில்லை.

   நன்றி.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. குரங்கானேனோ,, தன்னையும் அழித்து,, சுற்றியிருப்போரையும் அழித்து,, வேதனைத் தந்தேனோ,,
   வருந்துகிறேன். வாருங்கள் எழுதுங்கள்.

   Delete
 15. குரங்கின் பல சேட்டைகளைப் பாடல் வரிகளில் ரசித்தேன் இப்பதிவு பலரையும் குரங்கு பாடல் தேட வைத்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

   Delete
 16. குரங்கின் பலவித சேட்டைகளை பழங்கால பாடல்கள் மூலம் சுவாரஸ்யமாக விளக்கியமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

   Delete
 17. மனிதர்களிடம் இருக்க வேண்டிய கருணை சிறிதுமில்லாதவர்களுக்கு உதாரணமாக குரங்கை வைத்துப் பாடியது குரங்கிற்கு வந்த சோதனை தான் போலும்.
  எது எப்படியோ எத்தனை புலவர்கள் எப்படிப் பாடியிருந்தாலும் எங்களுக்கு இப்போதெல்லாம் உங்கள் உரை இருந்தால் போதும் என்றாகிவிட்டோம்.
  உங்கள் வர்ணனையில் அழகாக குரங்குச்சேட்டைகள் கண் முன் காட்சியாகின.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மைதான் கவிஞரே!

   என் வர்ணனை குரங்குச் சேட்டை போல இல்லையே..! :)

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

   Delete
 18. பாரதிதாசன் பாடலை ஏற்கெனவே படித்திருக்கிறேன். அதற்கு முன்பே காளமேகம் பாட்டில் பாம்பு வந்துள்ளது இன்று அறிந்து கொண்டேன். காளமேகம் பாடல், பட்டினத்தார் பாடல் இரண்டும் அறியாதவை. குரங்கின் சேட்டைகள் பற்றிய பாடல்களை ரசித்தேன். நான் பள்ளியில் படிக்குங்காலத்தில் காஞ்சூறு என்ற ஒரு செடியைச் சொல்வார்கள். பள்ளிக்குப் போகும் வழியில் அந்தச் செடி இருந்தது. அதன் இலையைப் பறித்து நம் மேல் தேய்த்து விட்டால் அரிப்பு பிடுங்கித்தின்றுவிடும். சமயத்தில் மாணவிகள் ஒருவருக்கொருவர் சேட்டைக்காக இவ்விதம் செய்வதுண்டு. நானும் ஒரு முறை மாட்டியிருக்கிறேன். அதிலிருந்து அதன் இலையைப் பார்த்தாலே எனக்கு அலர்ஜி. இப்போதும் கூட அதன் இலையை வைத்துச் செடியை நான் அடையாளங் கண்டுகொள்ள முடியும். காஞ்சொறியும் காஞ்சூறும் ஒன்று தானா எனத் தெரியவில்லை. நன்றி. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.

   நீங்கள் சொல்லும் செடியும் இப்பாடலில் வரும் செடியும் ஒன்றுதான்.

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

   Delete
 19. உண்மையில் குரங்குச் சேட்டைக்கு சற்றும் குறைவில்லாதது தான் குறும்புக்கார சிறுவர்களின் சேட்டையும். இல்லையா அண்ணா! தவிர்க்கவே முடியாமல் குரங்கின் ஒவ்வொரு அசைவுக்கும் சில நண்பர்கள், உறவினர்கள், அட சில மாணவர்கள் அசைவுகள் கூட நினைவுக்கு வந்தன:))) எனக்குத் தெரிந்த, என்னை தெரிந்த எத்தனை பேருக்கு என் நினைவு வந்தததோ:)))
  பாவம் அந்த குரங்கு :(( (என்ன இருந்தாலும் நம்ம மூதாதை இல்லையா? அந்த பாசம்:)

  ReplyDelete
  Replies
  1. குரங்கு பாவம்தான்...!

   குரங்குகளிடம் மாட்டிக் கொள்ளும் சமயங்களில் நாமும்...!


   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

   Delete
 20. ரசித்தேன் ஐயா...

  தாமதத்திற்கு மன்னிக்கவும்...

  ReplyDelete
 21. சுவையான பதிவு ஐயா!

  கடைசிப் பாடலிலாவது கொடுமதி கொண்ட ஆட்சியாளர்களை வருணிக்கத்தான் அப்படியொரு கற்பனை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், காளமேகம் அவர்களின் பாடலில் உண்மையாகவே மாட்டிக் கொண்டு அவதிப்படும் அந்தக் குரங்கு மிகவும் இரங்கலுக்குரியது!

  பாடல்களோடு சேர்த்து 'இஞ்சி தின்ற குரங்கு' எனும் சொலவடையையும் நினைவூட்டினீர்கள். ஆனால், இன்னொரு சொலவடையும் உண்டு. 'கள்ளுக் குடித்த குரங்குக்குத் தேளும் கொட்டினாப் போல' என்று. ஏதோ பழைய திரைப்படம் ஒன்றில் கூட இதைக் கேட்டதாக நினைவு.

  ReplyDelete

 22. வணக்கம்!

  சேட்டைக் குரங்குகளின் பாட்டைப் படித்தேன்!என்
  கூட்டை மறந்தேன் குதித்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete