பதிவர் பின்னூட்டம், பிளாகர், என்கிற சொற்களை எல்லாம் சென்ற ஆண்டில் இதே நாள் நான் அறிந்திருக்கவில்லை. வாசகன் என்ற நிலையில் சில கடிதங்களை நூலாசிரியர்களுக்கு எழுதி இருக்கிறேனே தவிர, கட்டுரை என்றும், கருத்துகள் என்றும் பெரிதாய் எதுவும் எழுதியவனில்லை. மொழியின் மாயச்சுழலுக்குள் விழுந்து போய், காலங்களை வாசிப்பினால் மிதித்துக் கடந்த தருணங்கள்தான் சென்ற ஆண்டிற்கு முன்புவரை. அவ்வாசிப்பு ஒரு போதையைப்போல முற்றிலும் எனக்கானது என்பதைத் தவிர எந்தப் பயன்பாட்டுடைமை நோக்கத்தையும் கொண்டதன்று.
அதனால் இன்னதென்றில்லாமல் வாசிக்கக் கிடைக்கும் எதையும் வாசிக்கும் பழக்கம் தொடர்ந்திருந்தது. பின் அது சற்றுத் தமிழின்பால் குவியத் தொடங்கியது. நாம் பேசும் மொழி என்று சொல்லப்படும் ஒன்றின், நான் நன்கு அறிந்ததாய்க் கருதிய ஒன்றின் உள்ளே செல்லச்செல்ல அங்கிருந்த இருண்மைகள் எனக்கு மலைப்பூட்டின. என் தேடல் அங்கிருந்துதான் தொடங்கியது. சிலவற்றிற்கான பொருள் ஓரளவிற்குத் துலங்கியது.
புலப்படும் பலவற்றைக் குறித்துவைப்பதுண்டு.
இதைத் தமிழ் வாசிக்கும் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்ற எண்ணம் அப்போழுது வந்ததுண்டு. படித்ததை, அறிந்ததைப் பகிரக் கிடைக்கும் சுகம் அலாதியானது. அந்த வாய்ப்பு வலை உலகிற்கு வரும் முன் மிக அரிதானதாய் இருந்தது.
வலைப்பூ முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறது. இன்னும் எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்கிற எண்ணத்தையும், நாம் மண்டையை உடைத்துக் கொண்டு அறிந்தவற்றை, முன்பே அறிந்து சர்வசாதாரணமாகச் சொன்ன துறைபோகிய ஆளுமைகளின் பரிச்சயத்தையும் எனக்கு ஏற்படுத்தித் தந்தது.
இவர்கள் மத்தியில் நான் எந்தப் புதிய செய்தியையும் கூறிவிடவில்லை. நான் கூறிய செய்திகள் பெரும்பாலும் இணையத்தில் மற்றுபலரால் முன்பே சொல்லப்பட்டவைதான். ஆனால் ஒரு போதும் அவற்றை நான் மறுபகிர்வு செய்ததில்லை. நான் செய்தது பெரும்பாலும் என் வாசிப்பில் கிடைத்த அனுபவங்களை எழுத்தாக்கியதே! அவற்றுள் பெரும்பான்மையும் படித்த காலத்தில் என்னால் குறிப்பெடுக்கப்பட்டு இறப்பின் கனவுகளாய் எஞ்சி இருந்தவையே..!
தமிழைப் பற்றி மட்டும் பேசும் தளத்திற்கு ஒரு நூறுபதிவிற்கு வந்திருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமா குறைவா என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை.
நாம் எழுதுவதையும் படிக்கிறார்கள் கருத்துகளைப் பகிர்கிறார்கள் என்கிற மட்டில் என் மனதில் மகிழ்ச்சியே இருக்கிறது. நம் எழுத்துகளைப் படிக்க வருவார்களா என்று நான் கொண்ட அவநம்பிக்கை சற்றுக் கலைந்திருக்கிறது.
இது என்னைச் செதுக்கியவர்களுக்கும் இதுவரை கொண்டுவந்தவர்களுக்கும் நன்றி சொல்லும் தருணம்.
என்பதிவுகளில் நீங்கள் ஏதேனும் நிறைகளைக் கண்டால் அதற்கு இவர்களே பொறுப்பாவார்கள்.
தவறுகளும், குறைகளும் என் அறியாமையாலும் வாசிப்பின் போதாமையாலும் நேர்ந்தவையாகவே இருக்கும். இங்கு இப்படிச் சொல்வது வெறும் சம்பிரதாயத்திற்காய் அன்று.
முதலில் நான் மிக மதிக்கும் தமிழாளுமை பேராசிரியர். முனைவர். பா. மதிவாணன். பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர். எனக்கு ஐயம் ஏற்படும் போதெல்லாம் அறிவு பெற்றுக் கொள்வது அவரிடம்தான். பல நூல்களைப் புரட்டிப் பெற வேண்டிய அறிவின் சாரத்தைச் சிறுதகவலாய்ச் சொல்லிவிடும் தன்மை அவரது பலம். நான் இந்த வலைத்தளத்திற்கு வரநேர்ந்ததன் தொடக்கப்புள்ளி அவர்தான்.
அடுத்து முனைவர். அருள்முருகன், மற்றும் கவிஞர். முத்துநிலவன். வலைத்தளப் பயிற்சி மற்றும் வலைத்தளத்தில் இயங்குதல் குறித்த நெறிகளைப் பயிற்சி வகுப்பின் மூலம் கற்றுக் கொடுத்ததோடல்லாமல் இன்றளவும் வழிநடத்தி வருபவர்கள்.
தோழர் மது கஸ்தூரி ரங்கன், அவர்தான் என் பதிவின் முதல் பின்னூட்டக்காரர்.
அவரை நான் செய்த தொல்லைகளும் அவர் எனக்கு வலைத்தள நுட்பம் சார்ந்து செய்த உதவிகளும் பெரிது.
நண்பர் பாண்டியன், என் தளத்தில் முதல் உறுப்பினர்.
கவிஞர்.பாரதிதாசன், என்னை யாரென்று போலும் அறியாத நிலையில், தன் தளத்தில் என்னைக் குறித்துத் தனித்த பதிவொன்றை இட்டார். அவருக்குப் பெரிதும் கடப்பாடுடையேன்.
சகோ. மைதிலி கஸ்தூரிரங்கன், பலமுறை தன் தளத்தில் என்னைக் குறித்துக் குறிப்பிட்டள்ளார்.
வலைச்சரத்தில் என்னைப் பலமுறைகள் அறிமுகப்படுத்திய பதிவர்கள். இவர்களுள் ஒருவரைக் கூட நான் அறிந்திருக்கவில்லை என்றபோதும் தொடர்ந்து என்னை அறிமுகப் படுத்தி வந்தனர்.
சகோதரி, தேன்மதுரத்தமிழ் கிரேஸ், சங்க இலக்கியங்களை எளிமைப்படுத்தியும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வருபவர். இந்த வலைத்தள வடிவமைப்பிற்கு அவரே காரணம்.
திரு. இ.பு. ஞானப்பிரகாசன் ஐயா அவர்கள், இந்தத் தளத்தினைத் திரட்டிகளில் இணைக்க உதவிபுரிந்தார். தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்படும் போதெல்லாம் தீர்த்து வைத்தார்.
இவர்களுள் ஓரிருவர் தவிர ஏனையோரை நான் பார்த்தில்லை. ஆனாலும் அவர்கள் எல்லாம் என் மேல் கொண்ட அன்பு பெரிது. இந்த வலைத்தளம் மூலம் நான் அடைந்திருக்கும் நன்மைகளுள் தலையானது இது.
தொடர்ந்து என் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள், கருத்துகளைப் பகிர்ந்து கொள்பவர்கள், நான் செய்யும் தவறுகளைத் திருத்துபவர்கள், புதிய தகவல்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் என நான் இத்தொலைவேனும் வர என்னைக் கைபிடித்து அழைத்துவந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சின் ஆழத்தில் இருந்து என் நன்றிகள்.
என் முதல்பதிவை மீண்டும் இங்கே பகிர்வது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.
இவரடி என் முடிமேலன...!
கிணற்றுத் தவளையைக் கடல்திமிங் கலமென
இணையப் பெருவெளிக் குள்ளே யமிழ்த்த
ஆழம் அறியா ஆழியுள் காக்குந்
தோழமை யற்றுத் துடித்தன கைகள்!
மாந்தப் பெருவெளி சிறுதுளி யாக
நீந்தக் கற்ற நெடுமூச் சினொடு
கணினி கற்றிலார் கண்ணிலார் என்றிகழ்
பிணியிவர் பயிற்சி பெற்றிடத் தீர்ந்தது!
வலைப்பூ வானில் எனக்கும் சிறகுகள்
மலைப்பு மாற்றிப் பொருத்திய பட்டறை!
ஆங்கு,
இருள்கெட முத்து நிலவொளி நல்க,
அருள்முரு கனென்னும் ஆய்வுச் சாரதி
சுந்தர பாண்டியர் ரங்கனார் திருப்பதி
பன்னீர் செல்வ சரவணக் குமரனார்,
அம்மைமார் சுவாதி கீத லட்சுமி,
இம்மைப் பயனெனக் கிணையத் தருளினர்!
புதிய வேள்விகள் படைக்க இருள்கொலும்
உதய விதைகளோ டிவர்க ளெழுந்தனர்!
அறிவியல் வளர்ச்சி யறியாத் தமிழா
சிரிய ரெனும்வசை யிவரால் தீர்ந்தது!
கந்தல் அறிவையுஞ் செந்தமி ழென்னும்
மந்திரத் தாலிவர் மாற்றிடக் கண்டு,
உயிர்கிளர் உணர்வைத் தமிழை இனத்தை,
வயிறு வளர்க்கவே விற்பவர் நடுங்கினர்!
போனதே பேசிப் பொழுதைக் கழிக்கும்
தானைத் தலைவர் தலைக ளுருண்டன!
வேலிக் கிடையில் காலற் றவரெனக்
கேலி செய்தவர் வீறிட் டலறினர்!
ஊமையாய்க் குருடாய் முடமாய்த் தமிழை
ஒதுக்க நினைத்தவர் திடுக்குற் றெழுந்தார்!
அமைதியாய் அவலம் அறியா துறங்குவோர்
இமைகளைப் பிய்க்க எழுதினர் இலக்கணம்!
“என்ன தமிழில்? எல்லாம் பழங்கதை!“
என்ற வர்மனம் புண்ணா யிற்று!
இருட்டறை யிட்டெமை ஏய்த்தவர் சாய்க்கப்
புறப்பட் டதுகாண் புலிகளின் கூட்டம்!
தரித்தி ரர்எனத் தம்மை நினைப்பவர்
சரித்திரம் என்ன சற்றே உணர்த்துவர்!
கூடுகள் உடைத்துக் கோடுகள் அழித்து
நாடுகள் கடந்து நானிவர் பாதையில்
இணையத் திணையப் புகுந்தேன்!
கணைகள் ஏற்கக் காத்திரு நெஞ்சே!
இறுதியாய், யாப்பருங்கலக்காரிகையின் அவையடக்கத்தில் இருந்து எனக்குப் பிடித்த என் தளத்தின் முகப்புவாசகத்தை நினைவுகூர்கிறேன்.
,
“யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
ஆனா வறிவின வர்கட்கென் னாங்கொலெ னாதரவே!”
இதைச் செயலை செய்பவன் நானா என நினைக்கும் போது எனக்கே சிரிப்பு வருகிறதே….
அறிவுடையோர்க்கு எனதிந்தச் செயல் எவ்வளவு நகைப்பூட்டுவதாக அமையும்….?
மீண்டும் இத்தளத்தைத் தொடரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நூறாவது பதிவின் வாயிலாக என் நெஞ்சார்ந்த நன்றி.
படஉதவி. - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/
Tweet |
100 வது1000 த்தை தொட வாழ்த்துகளோடு தமிழ் மணம் 1
ReplyDeleteவணக்கம் நண்பரே!
Deleteதங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.
வாழ்த்துகள் ஊமைக்கனவுகள்...
ReplyDeleteநன்றி ஐயா!
Delete100 பதிவுக்கு வாழ்த்துக்கள். தமிழின் பயன்கள் பல உங்களின் தளம் மூலம் அறிந்து கொண்டேன். மேலும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி ஐயா!
Deleteமேலும்மேலும் தொடரட்டும் தங்கள் பணி...தம +1
ReplyDeleteநன்றி சகோ!
Deleteமேலும் பல பதிவுகள் கண்டு தமிழின் பெருமையை உணரவைக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteத ம 5
தங்களின் கருத்திற்கு நன்றி ஐயா!
Delete
ReplyDeleteஉங்களின் எண்ணத்தை போலவே இந்த தளமும் மேலும் வளர வாழ்த்துக்கள். இந்த தளம் அமைக்க உங்களுக்கு பலரும் பல வகைளில் உதவினார்கள் மேலும் உதவு கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியும் போது ஆச்சிரியமாக இருக்கிறது காரணம் நான் ஆரம்பித்த போது இப்படி யாரும் எனக்கு உதவவில்லை நானேதான் பலதை அறிந்து ஆரம்பித்து தொடர்ந்து கிறுக்கி இப்போது பலரும் அறியும் படி இருக்கிறேன். இப்போது உதவும் பலர் இங்கு இருக்கிறார்கள் என்பது சந்தோஷம் தருகிறது
ஆம் திரு, அவர்கள் உண்மைகள்,
Deleteஅது என்னுடைய நற்பேறுதான்.
முகமறியாது செய்த உதவி மிகப் பெரியது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நூறுக்கு வாழ்த்துகள் . சரியாக ஓராண்டில் 100 தொட்டது சாதனையே. தொடரட்டும். இணையத் தமிழ்ப் பணி
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா!
Deleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் பல நூறு காண ....!
ReplyDeleteநன்றி அம்மா!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பல ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள் ஐயா த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்!
Deleteதங்களது நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். எழுதுவதில் சலிப்படையாது வலையுலகில் உங்கள் பயணத்தை தொடரவும்.
ReplyDeleteத.ம.8
தங்களின் வாழ்த்திற்கும் அறிவுரைக்கும் நன்றி ஐயா!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘நூறாவது பதிவும் கலைந்த கனவுகளும்’- கண்டு மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. ஓர் ஆண்டுக்குள் நூறாவது பதிவும் தமிழைப் பற்றி மட்டும் பேசும் தளத்திற்கு
அறுபத்திரண்டாயிரம் பார்வையாளர் பார்த்து மகிழ்ந்த வலைத்தளத்திற்குச் சொந்தக்காரர். இன்னும் சொல்லப்போனால் தமிழ்மணத் தரவரிசைப்பட்டியலில் பத்துக்குள்ளே இடம் பிடித்துச் சாதனை செய்த சாதனையாளர்.
தங்களின் தன்னடக்கம் கண்டு நான் வியந்து போனது உண்டு. ‘இந்த மனிதர் இவ்வளவு திறமைகளை உள்ளடக்கி வைத்துக் கொண்டு அடக்கத்துடன் பேசுவதும், நடப்பதும் ஏன் என்று விளங்கவில்லை. அனைவரிடமும் அன்பு காட்டுவதும், நல்லவை கண்டு பாராட்டுவதும், தீயவை கண்டால் யாராக இருந்தாலும் தனி ஒருவனாய் நின்று(ம்) எதிர்ப்பதும்.... இவரை அடையாளம் காட்டும் தனித்தன்மை ’என்றால் அது மிகையில்லை.
எதைச் செய்தாலும் தவறின்றிச் செய்ய வேண்டும் என்ற எண்ணம். அவற்றின்மீது காட்டும் ஈடுபாடு... நேரம்காலம் பார்க்காமல் அதற்காக உழைக்கும் உழைப்பு... அதெல்லாம் வீண்போகமல் இருக்கிறது என்பதே வலைப்பூ தங்களுக்குச் சூட்டும் பூமாலை.
ஆயிரமாயிரம் பதிவுகளையிட்டு.... இலட்சியத்துடன் கூடிய இலட்சம் பார்வையாளர்களைத் தாண்டி விரைவில் செல்ல வாழ்த்துகிறேன்.
நன்றி.
த.ம. 7.
ஐயா வணக்கம்.
Deleteநீங்களே இப்படிச் சொன்னால் எப்படி?
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அறிவார்ந்தவர்களாக இருக்கும் போது, நாம் அடங்கித்தானே ஐயா கிடக்க வேண்டும்.
அது தன்னடக்கம் எப்படி ஆகும்?
நான் அன்புகாட்டுவதை விட உங்களைப் போன்றோர் என்மீது காட்டும் அன்பு பெரிதல்லவா?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்!
முதலில், சிறியேனின் மகிழ்ச்சியும் பெருமையும் கலந்த உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteதொடங்கிய ஓராண்டிற்குள் நூறு பதிவுகள் என்பது எளிய செயல் இல்லை. அதே நேரம், அந்த நூறு என்பது வெறும் எண்ணிக்கையாய் இல்லாமல் ஒவ்வொரு பதிவும் ஒரு கருவூலமாய், ஒவ்வோர் இடுகையும் ஏதோ ஒரு விதத்தில் தமிழின் பெருமையைப் பறைசாற்றுவதாய் விளங்கச் செய்வது அரிதினும் அரிது! பெரிதினும் பெரிது ஐயா!
அதுவும் இந்தத் தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பண்டைத் தமிழின் சொத்தான மரபுக் கவிதையை இலக்கணத்தோடு எழுத மிக எளிமையான ஒரு தொடரைத் தாங்கள் யாத்தது, தமிழின் அடிப்படை முதற்கொண்டு எல்லாப் பெருமைகளையும் ஆவணப்படுத்தும் வகையில் 'உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்' எனும் புதிய தொடர் ஒன்றைத் தொடங்கியிருப்பது போன்றவையெல்லாம் அரும்பெரும் முயற்சிகள்! தவிர, இதுவரை யாருமே சொல்லாத, மரபுக் கவிதைதான் தமிழின் இயல்பான கவிதை வடிவம் என்கிற பலகாலக் கற்பிதத்தை உடைத்து, இப்படித்தான் கவிதை எழுத வேண்டுமென எந்த இலக்கணத்தையும் தமிழ் கூறவில்லை; எனவே, புதுக்கவிதை தமிழுக்குப் புதிதில்லை என்று தாங்கள் படைத்த கட்டுரை போன்றவை தனிச்சிறப்பு மிக்க வரலாற்றுப் புதையல்கள்! புதிய தலைமுறையின் விழி திறக்கும் விடியல்கள்!
தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளையான தங்களுடைய இந்த அரிய சேவைக்கு ஏதோ அணிற்பிள்ளையாக என்னாலும் உதவ முடிந்ததில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்! நான் உங்கள் தளத்தை வடிவமைத்துத் தருவதாக ஒப்புக் கொண்டபொழுது நான் செய்து தருவதாகச் சொன்ன விதமே வேறு. ஆனால், நான் அதில் சில இறுதிக்கட்ட ஒப்பனைகளைச் செய்யவே இல்லை. அதற்குள் சில தொழில்நுட்பக் காரணங்களால் நான் தங்கள் வலைப்பூவுக்குள் வர வசதியில்லாமல் போய் விட்டது. ஆனால், அடிப்படையாக என் தளத்தில் நான் என்னவெல்லாம் தேடுபொறி உகப்பாக்க (seo) வேலைகளைச் செய்திருக்கிறேனோ அவை அனைத்தையும் நான் தங்களுக்கும் செய்தளித்து விட்டேன் என்கிற வகையில் மனநிறைவு பெறுகிறேன். (ஆனால், இப்பொழுதும் தாங்கள் விரும்பினால் அந்தக் குறை வேலைகளையும் முடித்துக் கொடுக்க நான் ஆயத்தமாகவே இருக்கிறேன்). எதற்காக இவற்றையெல்லாம் இங்கே அம்பலத்தில் கூறுகிறேன் என்றால், இந்த அரைகுறை வேலைக்கே தாங்கள் தங்களுடைய இந்தச் சிறப்புப் பதிவில் என்னையும் குறிப்பிட்டிருக்கிறீர்களே என்கிற வியப்பினால்தான். அதற்கு நன்றி ஐயா!
தங்கள் வலைப்பூவைப் பின்பற்றுவதே ஒரு பெருமை! தங்களுடன் பேசியில் தொடர்பு கொள்ளுமளவு நெருக்கத்தில் இருக்கிறேன் என்பதில் எனக்கு ஆணவம்! நன்றி ஐயா! வணக்கம்!
ஐயா,
Deleteவணக்கம். நீங்கள் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரிது.
தங்கள் என் மேல் கொண்ட மதிப்பினைப் பார்க்க எனக்கு அதுவே தோன்றுகிறது.
அன்றி நான் செய்தது, உங்களைப் போன்ற பல பதிவர்கள் செய்த பணியின் முன் ஒன்றுமில்லை.
அதை நான் நன்கு அறிந்தே இருக்கிறேன்.
உங்களின் ஊக்கத்தைக் காணும் போது, அவை உண்மையாக எவ்வளவு உழைப்பு வேண்டும் என்று தெரிகிறது.
நீங்கள் எனக்குச் செய்த உதவி பெரிதுதான் ஐயா!
அதை எத்தருணத்திலும் குறிப்பிடுவதில் எனக்குத் தயக்கம் இல்லை.
நிச்சயமாய் உதவி வேண்டி உங்களிடம் வருவேன்.
என்னுடன் பேசுவதில் என்ன இருக்கிறது ஐயா..?
மீண்டும் தங்களின் அன்பினுக்கும் தொடர்பினுக்கும் என்றும் என் நன்றிகள்!
//அன்றி நான் செய்தது, உங்களைப் போன்ற பல பதிவர்கள் செய்த பணியின் முன் ஒன்றுமில்லை// - இது தன்னடக்கம்.
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவிரைவில் நூறு ஆயிரமாகட்டும்,
வருகை தருவோர் எண்ணிக்கைக் குறித்து
கவலை கொள்ள வேண்டாம் நண்பரே
தங்களின் எழுத்துலகப் பயணத்தைத் தொடருங்கள்
தம +1
வருகை தருவோரின் எண்ணிக்கை குறித்துக் கவலை கொள்ள வேண்டாம்
Deleteஎன்ற உங்களின் அறிவுரைக்கு நன்றி கரந்தையாரே!
எனக்கெல்லாம் இதுவே மிக மிகப் பெரிதுதான்.
தங்களின் வாழ்த்தினுக்கும் வாக்கினுக்கும் நன்றி
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
ReplyDeleteபுன்கணீர் பூசல் தரும்.
என்ற குறளை தங்களுக்காக வேண்டுமானால் அறிவிற்கும் உண்டோ என்று மாற்றிப்பாடலாம்.
நூறாவது பகிர்விற்கு வாழ்த்துக்கள்.
உதவிய அனைவரையும் நினைவில் வைத்து நன்றி கூறியது நெகிழ வைத்தது.
என் கணீர் பூசல் தருகிறதோ :))
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி கவிஞரே!
தமிழ் பேண
ReplyDeleteதமிழ் புகட்டும் பதிவாக
நூறைக் கடந்த செய்திக்கு
என் வாழ்த்துகள் - நம்ம
தமிழ் மேலும் மேம்பட
தங்களாலான
தமிழ் புகட்டும் பதிவுகளை
தருவீர்களென நம்புகின்றேன்!
தங்களின் நம்பிக்கைக்கு உரியவனாக முயற்சிக்கிறேன் திரு. யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே!
Deleteஅய்யா,
ReplyDeleteஉங்கள் தளத்தில் நூறு பதிவினைத் தாங்கள் பகிர்ந்தமை குறித்து அறியப்பெற்றேன். மகிழ்ச்சி. எண்ணிக்கையைக் காட்டிலும் அதில் சொல்ல வந்த கருத்துக்கள் பயனுள்ளதாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. மேலும், பல பதிவுகள் வெளியிட்டு வளம் பெற வாழ்த்துகள். நன்றி.
தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ.
Delete#" யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால் "#
ReplyDeleteஇதன் அர்த்தம் அறிந்து சிரித்தேன் ,இது எனக்கும் பொருந்தும் என்பதால் :)
உங்களுக்காக வேண்டுமானால் இப்படி மாற்றிக் கொள்ளலாம் பகவானே,
Delete“ யானே நடாத்துகின்றேன் என்று(ம்) உமக்கே நகைதரவே!“
சரிதானே :)
!மென்மேலும் பதிவிட வாழ்த்துக்கள்.!!
ReplyDeleteநன்றி வலிப்போக்கரே!
Deleteஇனிய நண்பர் விஜூவுக்கு இதய வாழ்த்துகள். பதிவுலகில், ஓராண்டுக்குள் சுமார் அறுபத்திரண்டாயிரப் பக்கப் பார்வையும், எழுபத்தாறு தொடர்வோர் குழுவுமாய்த் தொடர்வது சாதாரண செய்தியல்ல.. அதுவும் நண்பர்கள் சொல்வதுபோல ஒவ்வொரு பதிவும் செதுக்கிவைத்த சிற்பம்போலும் சிறப்பான செய்திகளுடன் வெற்றிநடை போடுகிறீர்கள் விஜூ! உங்களைத் தொடர்வோர் நிச்சயமாகத் தமிழறிவுத் தாகம் மிகுந்தவராகவே வருவர் என்பது என் நம்பிக்கை. தமிழ்வலையுலகில் நம்பிக்கை தரக்கூடிய இளைஞர், இன்னும் பல்லாயிரம் பதிவுகளுடன் அடுத்த தலைமுறைப் பதிவரும் தமிழார்வம் மிக்கவராய்த் திகழ உங்கள் தமிழ்ப்பணி வரலாற்றில் நிலைக்க வாழ்த்துகள்.
ReplyDeleteஐயா வணக்கம்.
Deleteஇது உங்களால் கூடிற்று.
தாங்கள் என் மேல் கொண்ட நம்பிக்கை கைகூட இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.
தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மனம் நெகிழ்கிறது.
நன்றி.
ஆமாம் விஜூ... நம் பயணத்தில் அவ்வப்போது வருவோரும் பிரிவோருமாய் எத்தனை நண்பர்கள்..?!! அதில் ஒருசிலரே தொடர்வதும் அழகான வெண்பாக்களால் நம்மை வியக்கவைத்த நண்பர் சிவக்குமார் இப்போது எங்கே காணவில்லை? உங்கள் தொடர்பிலாவது இருக்கிறாரா? அவரைத் தொடரச் செய்யுங்கள்..
Deleteதொடர்ந்து எழுதுங்கள் சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள், ஆனால் இப்போது நற்றமிழும் கைப்பழக்கம் என்றாகிவிட்டது, எழுத எழுத எழுத்துச் சிறக்கும். எத்தனை எத்தனை எழுதுகின்றோம் என்பதை விட அத்தனையில் எத்தனை ரத்தினமாக மின்னுகின்றது என்பதே முக்கியம். அளவு குறைந்தாலும் தரத்தை உயர்த்தி எழுதப் பாருங்கள். ஏனெனில் இங்கு எழுதப்படுவது காலங்கள் கடந்து நிற்கலாம், அதில் சில புத்தகங்களாக கூட உருமாறலாம். ஆக ! எக்காலத்துக்கும் பயன் தருபவைகளை எழுதுங்கள் எமது அன்பும் ஆதாரவும் என்றும் உண்டு.
ReplyDeleteஅன்புடன் நீலன்.
ஐயா வணக்கம்.
Deleteஉங்கள் அறிவுரைகளை நிச்சயம் மனம் கொள்கிறேன்.
இது போல் எல்லாம் வலைத்தளத்திற்கு வரும் முன் எழுதியதில்லை.
ஆரம்பத்தில் எப்படி எழுதுவது, நாம் நினைப்பதை எப்படி எழுத்தில் வெளிப்படுத்துவது என்றெல்லாம் எனக்குத் தடைகள் இருந்தன. இப்பொழுதும் இருக்கின்றன.
உங்களைப் போன்றவர்களின் வருகை அவற்றை நீக்கவும், என்னை நான் சரிசெய்யவும், இன்னும் அதிகமாய்க் கற்கவும் துணை செய்யும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தங்களின் அன்பினுக்கு நன்றிகள்.
வணக்கம் !
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரா மென் மேலும் தங்களின் ஆக்கங்கள் பல ஆயிரங்களைத் தாண்டி புகழின் உச்சிக்குச் செல்ல வேண்டும்.
மிக்க நன்றி சகோ!
Deleteவணக்கம் ஐயா !
ReplyDeleteநூறாம் பதிவுவரை நூற்பாவைக் கற்றறிந்தோம்
பேறாம் எமக்குப் பெருந்தகையே ! - ஆறாம்
அறிவொளிர்ந்(து) ஆளுமைகள் ஆற்றலுறத் தந்தீர்
நெறிமுறை எல்லாம் நெகிழ்ந்து !
மல்லுக்கு வந்திட்ட மரபுக் கவியின்
மயக்கங்கள் இலதாக்கிப் பாக்கள் புனையச்
சொல்லரிய சூட்சுமங்கள் எல்லாம் எளிதாய்
சுவையோடு கற்பித்த ஆற்றல் கண்டோம்
முல்லைக்குத் தேரீந்து பாரி வள்ளல்
முகமலர்ந்த நின்றதுபோல் உங்கள் உள்ளம்
எல்லையிலா மகிழ்கடலில் என்றும் திளைக்க
என்னிதயத் தீந்தமிழால் வாழ்த்து கின்றேன் !
நூறென்ன பல்லாயிரம் பதிவுகள் தந்து எங்களைப்போல் உள்ளோர்க்கு
அறிவூட்ட வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
தம +1
கவிஞரே உங்களுக்கே இது சற்று அதிகமாகத் தெரியவில்லையா..?
Deleteதங்களின் வாழ்த்து பெரிது.
நன்றி.
100/100
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...
என் விடைத்தாளைத் திருத்திவிட்டீர்களா டிடி சார்....:))
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! தாங்கள் இன்னும் பல உச்சத்தை தொட விழைகின்றேன்.
ReplyDeleteதங்களின் கருத்திற்கும் விழைவிற்கும் என்றும் நன்றி ஐயா!
Deleteஅன்னையவள் அகமகிழ ஆதரிக்கும் தனயன்
ReplyDeleteஆற்றலுடன் ஆய்வுசெய்து அளிக்கின்ற தகவல்
எண்ணங்கள் இனிதாக எடுத்தியம்பும் எழிலும்
ஏற்றங்கள் இன்பங்கள் தருமென்றும் வாழ்வில்
எண்ணற்ற பதிவுகளை எந்நாளும் தருவீர்
எண்ணாமல் கற்றேநாம் எழுத்தாற்றல் பெறவும் !
பண்ணோடு பலபாடல் பழுதின்றி தரவும்
பார்த்தவர்கள் வியந்திடவும் இடவேண்டும் பதிவு !
நான் தங்கள் ஆற்றலைக் கண்டு பல முறை பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். பாரிய வளர்ச்சி நிச்சயம் இருக்கும் என்றும் நம்பினேன். அதற்கிணங்க குறுகிய காலத்தில் ஈட்டிய பெரு வெற்றியைக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சி யடைகிறேன் மேலும் தங்கள் பதிவுகள் பல்கிப் பெருகவும்.உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக் கணக்கான வலையுறவுகளையும் பெற்று மேலும் வளர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் ...!
தங்களின் நம்பிக்கைக்கு நன்றி அம்மா!
Deleteஇன்னும் வளர வேண்டும் என்னும் தங்களின் வாழ்த்தினுக்கும் நன்றி.
ஓராண்டு காலத்தில் நூறு பதிவுகள் பிரமாதமாய்ப் படவில்லை. ஆனால் எழுதுபொருள் தமிழ் குறித்து மட்டுமே என்பது வியப்புக்குரியது. கிணற்றுத்தவளை திமிங்கிலமாக மாறுவதைக் கண்கொண்டு பார்த்து வருகிறேன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஐயா,
Deleteவணக்கம். மனதில் தோன்றியதை அப்படியே சொல்ல சற்று துணிவு வேண்டும்.
உங்கள் பின்னூட்டங்களில் வெகு சில சமங்களில் மனம் துணுக்குற்றாலும், நான் வியப்பது உங்களின் அந்தப் பண்பைத்தான்.
இங்கு நான் திமிங்கலம் எல்லாம் இல்லை என்பது எனக்குத் தெரிகிறது ஐயா!
அப்படி ஆக வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு இல்லை.
இங்கு என் மனதில் தோன்றியதையே குறிப்பிடுகிறேன்.
வேறுபல விடயங்களை எழுதத் தோன்றியிருக்கிறது பலமுறை.
ஆனாலும்,
இந்தத் தளத்தைத் தமிழ்பற்றி மட்டும் எழுத வேண்டும் என்று தொடங்கியதால் வேறொன்றையும் பகிர இயலவில்லை.
உங்களைப் போல பல்துறை ஆளுமைகளைக் காணும் போது சற்றுப் பொறாமையாகத்தான் இருக்கிறது :)
வருகைக்கும் வாழத்திற்கும் நன்றி ஐயா!
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தமிழ் அறிவை ஊட்டிக் கொண்டிருக்கும் தாங்கள் இணைய உலகில் வலம் வர உதவிய உள்ளங்களுக்கு எனது நன்றிகளும். இல்லாவிடில் இத்தகைய அறிவார்ந்த பதிவர் ஒருவரின் பதிவுகளை வாசிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டாமல் போயிருக்கும் அல்லவா? தொடர்ந்து உங்கள் சேவை தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் நம்பிக்கைக்கு உரியவனாக என்றும் முயல்வேன் திரு. தளிர். சுரேஷ்.
Deleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
வாழ்க வாழ்கவே
ReplyDeleteவளர்க வளர்கவே
தொய்வின்றி தொடருங்கள்
தொடர்வோம் உம்பதிவை...
மிக்க நன்றி அன்பே சிவம்.
Deleteஓராண்டு நிறைவு பெறுவதற்கும், குறுகிய காலத்தில் தமிழ் பற்றி மட்டுமே எழுதி இவ்வளவு பார்வையாளர்களைப் பெற்றிருப்பதற்கும் வாழ்த்துக்கள்! இன்னும் பல்லாயிரப் பதிவுகள் எழுதி வலைத்தள வரலாற்றில் சாதனை படைத்திட வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ.
Deleteநாளும் ,மேலும் தொடர வாழ்த்துகள்!
ReplyDelete100வது பதிவிற்கு வாழ்த்துக்கள். அனைவரையும் தாங்கள் நினைவுகூர்ந்து பாராட்டிய விதம் நன்று. உங்களது பல பதிவுகள் மூலமாக தமிழின்மீதான என் ஈர்ப்பு அதிகமானது என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
ReplyDeleteஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் ஐயா!
Deleteஇதோ வருகிறேன்.
முதலில் என் மனம் நிறை வாழ்த்துக்கள்,
ReplyDelete100 பதிவுகள் என்பது என்னைப் பொறுத்தவரை தலைசுற்றுகிறது,
காரணம் தமிழ் சார்ந்த பல விடயங்களைத் தங்கள் பதிவில் நான் கண்டது. ஒரு சில பதிவுகளை மட்டும் படித்து தங்களுடன் தமிழ் சன்டைக்கு நான் தயார் ஆனேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு வாக்குவாதம் பன்ன பிடிக்கும். பிடிக்கும் என்று இல்லை, அது தானா வந்து விடும்.
இலக்கண இலக்கியங்கள் தங்கள் பார்வையில் எப்படி தோன்றுகின்றது, அதனை எல்லோரும் ஏற்க முடியுமா?
பார்போம் இனி வரும் பதிவுகளில்.
மீண்டும் நன்றியும், வாழ்த்துக்களும்.
வாருங்கள் கவிஞரே!!!
Deleteபார்த்து ரொம்ப நாளாயிற்றே :)
“““““100 பதிவுகள் என்பது என்னைப் பொறுத்தவரை தலைசுற்றுகிறது““““““““““““
ஐயோ ஆயிரக்கணக்கான பதிவுகளைச் சர்வசாதாரணமாகக் கடந்து எழுதும் பதிவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள் சகோ.
ஒரு பழமொழி சொல்வார்கள்,
யானைக்கு மரம் பாரம். எறும்புக்கு அரிசி பாரம் என்று. அது போல்தான் இது அரிசி பாரம்.
“““““““““““சில பதிவுகளை மட்டும் படித்து தங்களுடன் தமிழ் சன்டைக்கு நான் தயார் ஆனேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு வாக்குவாதம் பன்ன பிடிக்கும். பிடிக்கும் என்று இல்லை, அது தானா வந்து விடும்.“““““““““““
தமிழ் படித்துப் பயிற்றுவிக்கும் நீங்கள் இது போலச் செய்யாவிட்டால்தான் குற்றம்.
““““இலக்கண இலக்கியங்கள் தங்கள் பார்வையில் எப்படி தோன்றுகின்றது, அதனை எல்லோரும் ஏற்க முடியுமா?“““““
பெரும்பாலும் பழைய உரையாசிரியர்களின் கருத்தோடு ஒட்டியும், அதனை எளிமைப் படுத்தியும்தான் சொல்கிறேன் எனினும், நான் வேறுபடும் இடங்கள், என் பார்வைகளை அதைக் குறிப்பிட்டே சொல்லிச் சென்றதாக நினைக்கிறேன்.
எப்படி இருந்தாலும் , நிச்சயமாய், அதை எல்லாரும் ஏற்க வேண்டும் எனச் சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது..?
கண்டிப்பாக எல்லாரும் ஏற்க வேண்டியதில்லை.
என்ன, ஏற்க மறுக்கும் காரணத்தை என்னிடமும் சொன்னால், அதில் நியாயம் உண்டென்றால் நான் கொண்ட தவறான கருத்தை மாற்றிக் கொள்ள அது ஒரு வாய்ப்பாக இருக்கும் அல்லவா..?
ஆகவே நீங்கள் வேறுபடும் இடங்களை அறியத்தந்தால் என்றும் நன்றியுடையவனாய் இருப்பேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ஆஹா!!!! நூறு !!! தாமதத்திற்கு மன்னியுங்கள் அண்ணா! ஒண்ணுன்னும் நூறு பொற்காசுகள் பெறு(ரு)ம் பதிவுகள் ஆச்சே!!!உங்கள் இந்த பயணம் மேலும்மேலும் தொடரவேண்டும் என்பது பொதுநலத்தில் என் சுயநலமும் தான் இல்லையா அண்ணா:)) நிறைய எழுதுங்க !! நானும் நிறைய கத்துகிறேன்...வாழ்த்துகள் அண்ணா!
ReplyDeleteஇது உங்களின் ஆதரவுடன் தான் சகோ.!
Deleteதாமதமாயிற்றென்றாலும் வருகைக்கும் கருத்திற்கும் மகிழச்சிதான்.
தமிழறிவு சோஷலிச தோழருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநேற்றே வீட்டில் சொன்னார்கள் இருப்பினும் இன்றுதான் பார்த்தேன்.
மிக்க மகிழ்வு தோழர் தொடரட்டும் உங்கள் தமிழ்ச் சேவை
நன்றி
தா ம +
உங்களின் உதவியுடன்.
Deleteநன்றி தோழர்.
உணமையைச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் என்னை ஒருபோதும் தொல்லை செய்ததே இல்லை...
ReplyDeleteதொடர்வோம் தோழர்
நீங்கள் அப்படி நினைக்காவிட்டாலும் அது எனக்குத் தெரியுமே :)
Deleteநன்றி தோழர்.
ReplyDeleteவணக்கம்!
பலநுாறு காணப் படைக்கின்றேன் வாழ்த்து!
வளமோடு வாழ்க வளர்ந்து!
வணக்கம் மீண்டும்
ReplyDeleteஎனக்கு தெரிந்த பேராசிரியர் ஒருவர் உண்டு..
அவ்வளோ விசயம் தெரியும் அவருக்கு...
ஆனால் வெளியில் வந்து பேசமாட்டார்..
அவரை அவர் பக்கத்து வீட்டுக்காருக்கு கூட சரியாக தெரியாது..
ஆனால் அவரது செழுமை வீணாகப் போகிறதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது..
அவரை பேசுங்கள், எழுதுங்கள் என்று சொன்னால் எல்லாப் பயலும் பிராடு இவன்களிடம் என்னத்த பேசுவது என்று பதில்வரும் ..
இப்படி தனக்கு தானே அரண் எழுப்பிக் கொண்டு காணமல் போய்க்கொண்டு இருக்கிறார். அந்த வருத்தம் எனக்கு இருக்கு ..
ரொம்ப படிக்கிறவங்க அதை பகிர்ந்துகொள்வதும் விவாதத்தை துவக்குவதும் அவசியம் என்பதே எனது நிலை..
தொடருங்கள் தோழர்..
ReplyDeleteவணக்கம்!
நுாறாம் பதிவளித்தீர்! பேறாம் புகழ்பெற்றீர்!
சாறாம் இனிமையைத் தந்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
அண்ணா, உங்களின் நூறாவது பதிவைப் படிக்காமல் தவறவிட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து மிகவும் வருந்துகிறேன். உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் எனக்கு உண்டு. அதற்கு இன்று நேரம் அமையவும், தற்செயலாக வேண்டுதல்கள் என்ற கருப்பொருள் பார்த்து என்ன இருக்கிறது என்று வந்தேன். பார்த்தால் உங்கள் நூறாவது பதிவு!! மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா, ஆயிரமாயிரம் பதிவுகள் நீங்கள் தர வேண்டும்.. அவற்றையெல்லாம் தவற விடாமல் நான் படிக்க வேண்டும். :)
ReplyDeleteசிறப்புப் பதிவில் என் பெயர் வேறு, நான் செய்த (முழுமையாக, உங்களுக்குப் பிடித்த மாதிரி செய்தேனா என்று நான் சந்தேகப்பட்டு கொண்டிருந்தேன்) சொல்லிக்கொள்ள முடியாத அளவு சிறு விசயத்திற்கு!! இருப்பினும், ஆசிரியர் நம் பெயரைக் குறிப்பிட்டுவிட்டால் மகிழ்வோமே, அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு. மேலே மணவை அண்ணா சொல்லியிருப்பது போல் உங்களுக்குத் தன்னடக்கம் அதிகம். உங்கள் ஆழ்ந்த வாசிப்பும், உழைப்பும் ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது அண்ணா. தமிழ் பற்றிய அருமையான பதிவுகளுக்கு மனமார்ந்த நன்றி அண்ணா.
மிகவும் தாமதமான வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மன்னிக்கவும் அண்ணா