Thursday, 13 October 2016

இல்லாளிடம் இல்லாதது எது?:உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-18


நாடாளும் மன்னராய் இருந்தாலும் இல்லத்தின் ஆட்சி என்னவோ மனைவியிடம்தான். அவளிடம் இல்லாதது இருக்கிறதா? இருக்கிறது.

தலைவி என்பதற்கு ஆண்பால் தலைவன்.

சிறுமிக்கு ஆண்பால் சிறுவன்.

மாணவிக்கு மாணவன்.

இல்லாள் என்பதற்கு ஆண்பால்……?

இல்லான் என்று சொல்லிவிடாதீர்கள்!

இல்லான் என்பதற்கு ஒன்றும் இல்லாதவன் என்பது பொருளே தவிர அச்சொல் இல்லாள் என்பதற்கு உரிய ஆண்பாற்சொல் ஆகாது.

இல்லான் என்பதற்கு உரிய ஆண்பாற்சொல் தமிழில் கிடையாது.

இதைப்போன்றே,

தலைவன் - தலைவர்

மாணவன் – மாணவர்

சிறுவன் – சிறுவர்

என்னும் ஒருமை பன்மை வடிவம் போல,

இல்லாள் – இல்லார்

என்றும் சொல்ல முடியாது.

இதுவும் இல்லாதவர் என்ற பொருளையே குறிக்கும்.

ஏனெனில் இல்லாள் என்னும் சொல்லுக்குப் பன்மை வடிவமும் கிடையாது.

இச்சொல்லிற்குப் பன்மை வடிவமும் தமிழில் கிடையாது.

தமிழ் தன்னிடம் இப்படிப்பட்ட சில சொற்களை வைத்திருக்கிறது.
அச்சொல்லிற்கு மாற்றுப்பால் கிடையாது.

புலவன் என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெண்பால் என்ன?

புலவி ?

புலவி என்பது காதலனுக்கும் காதலிக்கும் இடையே நடைபெறும் ஊடலே தவிர அது புலவன் என்பதற்கான பெண்பால் ஆகாது.

அமைச்சன் என்பதற்கும் தமிழில் பெண்பால் இல்லை.

அமைச்சனின் பெண்பாலை நாம் அமைச்சி என்பதில்லை.

மொழியில் சொல்லுருவாக்கம் என்பது அம்மொழியின் தேவையால் உருவாகிப் பயன்படுவது.

இச்சொற்களைப் பிடித்துக் கொண்டு பின்னோக்கிச் சொல்வோமானால்,   பண்டைய தமிழகத்தில் ஆண் பெண் சமூக நிலை குறித்த சிறு குறிப்பினையேனும் நம்மால் பெறமுடியும்.

 சொற்களின் வரலாற்றில் சமூகத்தின் கட்டமைப்பு வரலாறும் புதைந்திருக்கிறது என்பதற்குச் சான்று இது.

உங்கள் நினைவில் தோன்றும் இதுபோன்ற சொற்களைப் பின்னூட்டத்தில் அறியத் தாருங்களேன்.

வாருங்கள்...! நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.


தொடர்வோம்.

பட உதவி-https://encrypted-tbn2.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

50 comments:

  1. வணக்கம் சகோ.
    எனக்கு உடனே தோன்றும் சொற்கள்:-
    மன்னன்
    கவிஞன்
    உழவன்
    கஞ்சன். வேறு ஏதாவது நினைவுக்கு வந்தால் மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அருமை!

      இதில் உழவன் என்பதற்குப் பயில வழங்குவதில்லை எனினும் உழத்தி என்கிற பெண்பால் உண்டு.

      கவி என்னும் சொல்லே இருபாலையும் குறிக்க வழங்கலுண்டு.

      தங்கள் உடனடி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

      Delete
  2. வணக்கம் கவிஞரே நல்ல விடயங்கள் தந்தீர்கள் நன்றி
    விதவை என்ற சொல்லுக்கு ஆண்பால் விதவன் என்று சொல்லாமா ?
    அதேபோல் விபச்சாரி என்ற சொல்லுக்கு ஆண்பால் விபச்சாரன் என்று சொல்லாமா ?
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      சொல்லலாமா என்றால் சொல்லலாம். என்ன தடை?
      சொல்லுவதுண்டா என்றால் சொல்லுவதில்லை.

      இப்பதிவு தொட்டுச் செல்லும் சொற்களில் அறியலாகும் பழந்தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பு அதற்குக் காரணமாகும்.

      பின்னூட்டங்களில் காரணங்களை அவதானித்து இடப்பட்டிருக்கும் கருத்துக்களைக் கவனிக்க வேண்டுகிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  3. ஆஹா! அண்ணா, உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது..காணோமே என்று தேடிக் கொண்டிருந்தேன்...நீங்கள் வந்த நேரம் நான் காணாமல் போயிருக்கிறேன் போல :)) எப்படியோ.. உங்கள் பதிவு கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள்.

      உங்களையும் நினைவு கூர்ந்தேன்.

      தங்களின் வருகை உவகை.

      நன்றி.

      Delete
  4. ஒற்றன், தச்சன், வணிகன், மெய்க்காப்பாளன்

    ReplyDelete
    Replies
    1. அருமை.

      இதற்குப் பெண்பால் இல்லை.

      அல்லது இத்தொழில்களைப் பெண்கள் செய்யவில்லை என்ற முடிவிற்கு வரலாமா?

      தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
    2. பெண்கள் செய்யவில்லை என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன். ஒரு கால கட்டத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம்..ஒரு கால கட்டத்தில் இருந்திருக்கலாம். ஒற்றும் வணிகமும் மட்டுமாவது செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்? சொற்களில் அறியப்பெறும் வரலாறு அருமை அண்ணா..நன்றி

      Delete
  5. வீரன், கொல்லன், அறிஞன், வறிஞன், சான்றோன், மறவன், மூடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      வறிஞன் என்பதற்கு வறியவள் என்பதைப் பெண்பாலாகக் கொள்ளலாமா?

      மறவன் என்பதற்கு மறத்தி என்ற பெண்பால் வடிவம் உண்டு.

      சான்றோன் என்பதற்கு சான்றோள் என்ற சொல்லைத் தற்கால எழுத்தாளர்கள் பயன்படுத்தக் கண்டிருக்கிறேன்.

      மற்ற கொல்லன் வீரன் மூடன் என்னும் சொற்களைப் பெண்பால் ஆக்கினால்.......

      :)

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
    2. //மறவன் என்பதற்கு மறத்தி// - ஆகா! இதை மறந்துவிட்டுக் கீழுள்ள கருத்துரையில் அப்படிக் குறிப்பிட்டு விட்டேனே!

      Delete
  6. ஐயாவின் தமிழ்ப்பாடம் அருமை. புலவி என்ற சொல்லை எங்கோ படித்ததாக ஞாபகம் ஆனால் மறந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      இதன் பொருளைப் பதிவில் சுட்டி இருக்கிறேனே!

      திருக்குறளில் புலவிநுணுக்கம் என்று ஓர் அதிகாரமே இருக்கிறது.

      அதிற்படித்தீர்களோ?


      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  7. அருமை, அருமை, அற்புதமான பதிவு. உங்கள் மூலம் எங்கள் தமிழை அறிந்துகொள்கிறோம் நண்பரே!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  8. கவிஞன் என்பதற்கு பெண்பால் கவிதாயினி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்களே. சரியா, நம் இலக்கியங்களில் ஆதாரங்கள் உள்ளனவா?

    ReplyDelete
    Replies
    1. நம் இலக்கியங்கள் என்றால் எக்காலத்து இலக்கியங்களைக் கேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை அண்ணா.

      இது பிற்கால ஆட்சியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


      Delete
  9. தொண்டன், சீடன், தளபதி,ஆசான்,உழவன்


    ReplyDelete
    Replies
    1. உழவனுக்கு உழத்தி என்ற பெண்பால் வழக்குண்டு.

      நேரமெடுத்துப் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete

  10. தமிழ் இன்னுமின்னும் தன்னகத்தே எத்தனை அற்புதங்களைக் கொண்டிருக்கிறது... அறிய அறிய வியப்பும் ஆவலும் உண்டாகின்றன. தாங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பது போல் அந்நாளில் ஆண் பெண் சமூகநிலை குறித்த சிறுகுறிப்பினை அறிந்துகொள்ள இவ்வார்த்தைகள் மிகவும் உபயோகமாயுள்ளன.

    ஆண் மட்டுமே செய்யக்கூடிய கடினவகைத் தொழில்களுக்குரிய தட்டான், கொல்லன், கருமான், கொத்தன், தச்சன் போன்ற ஆண்பாற்சொற்களுக்கு நிகரான பெண்பாற்சொற்கள் இல்லை என்றே நினைக்கிறேன். அதே சமயம் ஆண் பெண் இருவரும் பணிபுரியும் சூழலில் வண்ணான்- வண்ணாத்தி, குயவன் - குயத்தி, ஆயன்-ஆய்ச்சி என்று இருபாலாருக்குமான சொற்கள் உள்ளன.

    மேலே பலரும் குறிப்பிட்டுள்ள பல்வேறு சொற்களையும் பார்க்கும்போது தமிழில் இன்னும் ஆழமாக நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை அநேகம் என்று தோன்றுகிறது. தமிழ் குறித்து மேலும் அறிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      இப்பதிவின் மையம் உங்களின் இந்தப் பின்னூட்டத்தில் இருக்கிறது.

      நீங்கள் நினைப்பது உண்மைதான்.

      இப்பதிவு இந்த கருதுகோளை வெளிப்படுத்த எழுதப்பட்டதுதான்.

      உண்மையில் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

      தங்களின் வருகைக்கும் பங்கேற்பிற்கும் பதிவின் நோக்கத்தை வெளிப்படுத்திய பின்னூட்டத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  11. சிறப்பான தொடர். விடுபட்ட பகுதிகளையும் படிக்க வேண்டும். தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. “இச்சொற்களைப் பிடித்துக் கொண்டு பின்னோக்கிச் சொல்வோமானால், பண்டைய தமிழகத்தில் ஆண் பெண் சமூக நிலை குறித்த சிறு குறிப்பினையேனும் நம்மால் பெறமுடியும்.

    சொற்களின் வரலாற்றில் சமூகத்தின் கட்டமைப்பு வரலாறும் புதைந்திருக்கிறது என்பதற்குச் சான்று இது.”


    வணக்கம் சகோ. பின்னூட்டத்தில் பலரும் கொடுத்திருக்கும் காட்டுகளின் மூலமும், நானே சொற்களைத் தேடியது மூலமும், நீங்கள் சொல்வது மிகச் சரி என்று தெரிந்து கொண்டேன்.

    1. வெளியில் சென்று பொருள் தேடுவது ஆணின் வேலையாகக் கருதப்பட்டதால் தொழிலில் ஈடுபடும் பெயர்கள் எல்லாம் ஆண்பாற் சொற்களே. (தச்சன், கொல்லன், உழவன், பாகன், வணிகன்.)
    2. கீதமஞ்சரி சொன்னது போல குடும்பத் தொழிலாகச் செய்யும் போது பெண்பால் சொற்கள் உள்ளன. (குயவன் –குயத்தி, வண்ணான் –வண்ணாத்தி, குறி சொல்லும் குறவன் – குறத்தி)
    3. இல்லத்தை நிர்வகிப்பது முழுக்க முழுக்கப் பெண்ணின் கடமையாக இருந்ததால், ஆண்பாற் சொல் இல்லை. (இல்லாள் மட்டுமே)
    4. கற்பு என்பதை இருபாலார்க்கும் உரியதாகக் கொள்ளாததால் விபச்சாரி, வேசி என்பவை பெண்ணை மட்டுமே சாடப் பயன்பட்டன.
    5. பெண்ணுக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமையில்லை; எனவே விதவை, சக்களத்தி, இவற்றிற்கீடான ஆண் சொற்கள் இல்லை.
    6. குடும்பச்சொத்தில் ஆணுக்கு மட்டுமே பங்குண்டு. எனவே பங்காளி என்பது ஆணுக்கு மட்டுமே உரியது.

    பண்டைய தமிழ்ச்சமூகத்தில் பெண்களின் நிலை, அவ்வளவு சிறப்பாக, உயர்வாக இல்லை என்பதை இச்சொல்லாராய்ச்சி உறுதிப்படுத்துகின்றது.

    எனக்கு ஒரு சந்தேகம். சங்கக் காலத்திலேயே பெண்கள் கல்வி கற்றுக் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள்; அரசனுக்கே புத்திமதி கூறி, ஆலோசனை சொல்லுமளவுக்குப் புலமை வாய்ந்தவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

    ஆனாலும் கவிஞன், புலவன், எழுத்தாளன் என்பதற்குப் பெண் பாற் சொற்கள் ஏன் உருவாகவில்லை? இன்றளவும் பெண் எழுத்தாளர், பெண்பாற் புலவர் என்று தானே சொல்கிறோம்? இதற்கு என்ன காரணம்? கவிதைத் திறனும், புலமையும் இருபாலார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டதா?

    அதுபோல் அரசன் என்பதற்கு அரசி இருக்கிறது; மன்னன் என்பதற்கு ஏனில்லை? விடையறியக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      நீங்களும் சகோ.கீதமஞ்சரி அவர்களும் பின்னோக்கிப் போயிருக்கிறீர்கள்.

      காலயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் அனுபவம் ஆனந்தமாய் இருந்ததா? :)

      அதில் நாம் காணும் காட்சிகள் நாம் இதுவரை கட்டிவைத்திருக்கும் கற்பனைக் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கக் கூடும்.

      நமக்குக் கிடைக்கின்ற இலக்கியங்களைக் கொண்டு, ஆதி இலக்கியமாகச் சங்க இலக்கியங்களை எடுத்துக் கொண்டால், நாம் அதில் காணும் சங்ககாலம், ஆரியக்கலப்பு மெல்லத் தமிழல் வேர்பிடித்து வந்தகாலம்.

      அச்செல்வாக்கு இலக்கியங்களிலும் மொழியிலும் கல்வி அமைப்பிலும் கலக்கத் தொடங்கிய காலம்.



      மொழியில் ஒரு சொல்லின் உருவாக்கம் , அதன் நிலைபேறு இவ்விரண்டுமே அச்சொல்லின் தேவை, பயன்பாட்டின் பரவலாக்கம் இவற்றை ஒட்டியது.

      அக்காலச்சூழலில் பழந்தமிழ் மக்கள் பேசிய மொழி எப்படி இருந்தது என்பது நமக்குத் தெரியாது.

      பாடப்பட்ட சூழலுக்குப் பலநூற்றாண்டுகளுக்குப் பின் குறிப்பிட்ட வடிவத்தில் பாடுபொருள் மாறாமல் தொகுக்கப்பட்ட நூல்களே சங்க இலக்கியங்கள் என்னும் கருத்துக்கள் ஆய்வுலகில் உண்டு.

      ஆக, நம் பழந்தமிழ் ஆராய்ச்சி எல்லாம் எட்டுத்தொகையையும் பத்துப்பாட்டையும் அடியொற்றியதே!

      அதிற்காணும் தமிழ்ச்சொற்கள் மட்டுமே நமக்கு அடிப்படை ஆதாரமாவன.

      அதுவும் கற்றோர் வழக்கே.

      நம் மொழியின் சொற்களஞ்சியப் பெருக்கம் நோக்க இத்தொகைநூலில் உள்ள சொற்கள் குறைந்த விழுக்காட்டு அளவின.

      அதிலும் மக்களின் பேச்சு வழக்கினை ஒட்டிய சொற்களின் ஆட்சி மிகமிகக் குறைவான அளவிலேயே இருக்கும்.

      பெண்பாற் சொற்கள் இருக்கின்ற இல்லாமைக்கான சமூகப்பின்புலத்தை நீங்கள் சொன்னவாறுதான் நானும் நினைந்தேன்.

      சில சொற்களுக்குப் பெண்பால் இல்லாதது போலவே, சில சொற்களுக்குப் பெண்பால் சொற்கள் அவசியமற்றதாய் இருந்திருக்கலாம். அல்லது
      காலவோட்டத்தில் மறைந்தும் இருக்கலாம்.

      புலவர், சான்றோர் என்பது போல மரியாதைப்பன்மையில் பெண்பாலை அடக்கும் மரபும் தமிழில் இருந்ததை இலக்கணங்கள் சுட்டுகின்றன.

      மற்றபடி,

      நாம் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்போம். :)

      பதிவினைப் படித்து, அது குறித்துச் சிந்தித்து முடிபுகளை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
    2. அருமையான ஆராய்ச்சி கலையரசி அவர்களே! நான் என் கருத்தை இட்ட பின்புதான் உங்களுடைய இந்தக் கருத்தைப் படித்தேன். பெரும்பாலும் நம் கருத்துக்கள் ஒத்திருப்பதைக் காண மகிழ்ச்சி!

      மற்றபடி, ‘மன்னன்’ என்பது தமிழ்ச்சொல் இல்லை. எனவேதான், அதற்குப் பெண்பால் சொல் இல்லை.

      Delete
  13. நம் தமிழைத் தெரிந்துகொள்ள உதவும் தங்களுக்கு நன்றி! இதோ. எனக்கு நினைவில் வரும் சொற்கள். 1.எழுத்தாளன், 2.ஓவியன்,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்கள் நினைவில் வரும் சொற்களுக்கும் பெண்பால் சொல் வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை

      தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நினைவு கூர்ந்ததை அறியத் தந்தமைக்கும் நன்றிகள்.

      Delete
    2. கொஞ்ச காலம் ‘எழுத்தாளினி’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் விட்டு விட்டார்கள். இப்பொழுதெல்லாம் ’பெண் எழுத்தாளர்’தான்.

      Delete
  14. பதிவர் என்பதுகூட ஆண்பாலை மட்டுமே குறிப்பதுபோல் இருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா இருக்கிறது?

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. பதிவு செய்பவர் - பதிவர். இருபாலாருக்கும் பொருந்துகிறது என்று எண்ணுகிறேன்.:)

      Delete
  15. நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.
    அருமையான பதிவு

    ReplyDelete
  16. சுவாரஸ்யமான தகவல்கள். இல்லாள் என்பதற்கு இல்வலன் என்று சொல்லலாமா? அதுசரி, எனக்கு இன்னொரு சந்தேகம். பழங்காலத்தில் பெண் அமைச்சர்கள் இருந்தார்களோ?

    ReplyDelete
    Replies
    1. இல் வலன் என்பதன் பொருள் தெரியவில்லை.

      அவசியம் இருந்தால் இதற்கு ஒத்த ஆண்பால் சொல்லை உருவாக்குவதும் தவறில்லை.

      பழங்காலத்தில் பெண் அமைச்சர் இருந்தால் அவர் அமைச்சர் என்றே அறியப்பட்டிருப்பார்.

      எனக்குத் தெரிந்து பெண் அமைச்சர் இல்லை.

      தங்களின் வருகைக்கும கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

      Delete
    2. //அவசியம் இருந்தால் இதற்கு ஒத்த ஆண்பால் சொல்லை உருவாக்குவதும் தவறில்லை// - ஏற்கெனவே இருக்கிறது. கீழே பார்க்க வேண்டுகிறேன்!

      Delete
    3. ஸ்ரீராம் அவர்களே! ‘இல்லத்து வல்லவன்’ எனும் பொருள்பட இப்படிச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால், ‘இல்லத்தையே வலம் வந்து கொண்டிருப்பவன்’ என்கிற பொருளில் யாராவது புரிந்து கொண்டால்...? :-D

      Delete
  17. இல்லத்தை ஆள்பவள் இல்லாள் இல்லத்தில் ஏதுமில்லான் இல்லாண் எனலாமா?(சும்மா தோன்றியது) அந்தக்காலத்தில் இருந்த பெண்களின் இழிநிலையைக் காண்கிறோம் இந்நாளில் ஆணுக்குப் பெண் நிகராக எல்லாப் பணிகளிலும் இருக்கிறாள் பெண்பாலைக் குறிக்கும் பல சொற்களை நாம் உருவாக்க வேண்டும் பழமையில் மூழ்கி இரூப்பது சரியல்ல.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜி.எம்.பி. சார்.

      உங்களது பின்னூட்டம் வேறொரு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.

      இரண்டு கருத்துக்கள்.

      ஒன்று உங்கள் பின்னூட்டம் காணத் தோன்றியது.

      மற்றுமொன்று, நான் இப்பதிவில் யரேனும் கேட்டால் சொல்லக் கருதி வைத்திருந்தது.

      இந்த, இல்லாள் என்பதைப் பொருத்தவரை, இல்லத்தை ஆள், அல்லது இல்லத்தில் உள்ள ஆள் என்று கொள்வோமானால், சொல்ல நகைச்சுவையாய்த் தோன்றினும்,ஆணானாலும் பெண்ணானாலும் “ இல்லாள் ” எனலாம்.

      இது உங்கள் பதிவு காணத்தோன்றியது.

      அடுத்து, நான் சொல்ல நினைத்தது,

      “இந்நாளில் ஆணுக்குப் பெண் நிகராக எல்லாப் பணிகளிலும் இருக்கிறாள் பெண்பாலைக் குறிக்கும் பல சொற்களை நாம் உருவாக்க வேண்டும் பழமையில் மூழ்கி இரூப்பது சரியல்ல.”

      என்பது .

      இக்கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

      ஆனால், தேவைக்கேற்ற இப்படிச் சொற்களைத் தமிழ் உருவாக்கவும் பரவலாக்கவும் செய்திருக்கிறது.

      எ.கா.

      ஆசிரியன் - ஆசிரியை.

      ஆசிரியன் பழைய தமிழ்ச் சொல்.

      அக்காலத் தமிழில் இதற்குப் பெண்பால் இல்லை.

      இன்று பெண்களும் கற்பிக்கிறார்கள்.

      ஆசிரியை தோன்றிவிட்டது.

      ஆனால்,

      இன்னும் இதுபோன்ற சொற்கள் உருவாக வேண்டும் என்பதில் ஐயமில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  18. ஆண்பால் பெயர்கள் பலவற்றுக்கு இணையான பெண்பால் சொற்கள் இல்லையே என்று பலமுறை எண்ணியதுண்டு. ஆனால், இப்படி ஆண்பால் சொல் இல்லாத பெண்பால் சொல் ஒன்று இருப்பதை இப்பொழுதுதான் அறிகிறேன் ஐயா! ‘இல்லாள்’ எனும் சொல் நன்கு அறிமுகமானதுதான் என்றாலும் இதற்கு ஆண்பால் சொல் இல்லை என்று சிந்தித்ததில்லை.

    பதிவின் இறுதியில் நீங்கள் கூறியிருப்பது போலவே, இது பற்றிச் சிந்திக்கும்பொழுது பண்டைய தமிழ் சமூகத்தில் ஆண்-பெண் நிலை குறித்துப் பல புரிதல்கள் ஏற்படுகின்றன.

    உழவன் - உழத்தி, குயவன் - குயத்தி, வேடுவன் - வேட்டுவச்சி, ஆயன் - ஆய்ச்சி (இன்று ‘ஆச்சி’!), மருத்துவன் - மருத்துவச்சி, அரசன் - அரசி எனக் கடைக்குடியையும் உயர்குடியையும் சார்ந்த தொழில்நிலை காட்டும் ஆண்பால் சொற்களுக்குப் பெண்பால் சொற்கள் உள்ளன. ஆனால் வண்டியோட்டி, வீரன், கலைஞன், சிற்பி, நெசவாளி போன்ற நடுத்தரக் குடும்பத்தினர் செய்யும் தொழில்களைக் குறிக்கும் ஆண்பால் சொற்களுக்குப் பெரும்பாலும் பெண்பால் சொற்கள் காணப்படவில்லை. இதிலிருந்து, இந்தக் காலத்தைப் போலவே அன்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெண்களை அடக்கி வைப்பதையே நாகரிகமாகக் கருதியுள்ளனர் எனத் தோன்றுகிறது.

    ஆனால், பெண்பால் புலவர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள்தாமே? அப்புறம் ஏன், அவர்களைக் குறிக்கக் கூடப் பெண்பால் சொல் இல்லை? வியப்பாக இருக்கிறதே ஐயா?

    இக்காலத்தில் ஆண்பால் பெயர்களின் பின்னொட்டாக எப்படியாவது ‘இனி’ என்கிற விகுதியை வரவழைத்து விட்டால் பெண்பால் சொல்லாக்கி விடலாம் எனப் பலரும் கருதுவதாகத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, தொகுப்பாளினி, கவிதாயினி ஆகியவை. ஆனால், இது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. ’கவிதாயினி’ என்பதற்குப் பதில் ‘கவிஞை’ என்பது சரியாக இருக்கும், இல்லையா ஐயா?

    இப்படிப் பெண்பால் சொல் இல்லாத சொற்களைப் பட்டியலிடும்படி சொல்லியிருந்தீர்கள். நிறைய இருக்கின்றன ஐயா! ஆனால், அவையெல்லாம் ஒருபுறம் இருக்க, ‘மனிதன்’ எனும் சொல்லுக்கே தமிழில் பெண்பால் சொல் இல்லையே ஐயா! ‘மாந்தன்’ எனும் சொல்லுக்கும் இல்லை. ’மாந்தி’ என்றால் கூட ’அருந்தி’ என்றுதானே பொருளாகிறது! நம் மொழிக்கே இழுக்கு இல்லையா இது!

    அதனால்தான் அண்மையில் வெளியான ‘இறைவி’ திரைப்படத்தில் எழுதிய பாடல் ஒன்றில் மதன் கார்க்கி அருமையாக எழுதினார்,

    "மனிதன் என்ற சொல்லுக்குள்ளே
    அடங்காதே பெண்ணே!
    உயரம் உனதேதான்
    அமர்ந்தால் உயரம் தெரியாது
    நீ நிமிர்ந்தே வா பெண்ணே!
    ’மனிதி’ வெளியே வா!" என்று.

    இப்படி நிறையப் பெண்பால் சொற்களை உருவாக்க வேண்டியிருக்கிறது ஐயா!

    நிறையச் சிந்தனைகளைக் கிளறிவிட்ட பதிவு! மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      இச்சொல் திருக்குறளில் இருக்கிறது. இச்சொல் பற்றிய சிந்தனைகளும் உரையாசிரியர் மத்தியில் உண்டு.

      இத்தளத்தைத் தொடர்வோரின் பின்னூட்டங்களில் இருந்து கற்கவும் சிந்திக்கவும் அதிகம் இருக்கிறது என்பதற்கு உங்களைப் போன்றோரின் சிந்தனைகளும் கருத்துக்களும் சான்று.

      புதிய சொற்களை உருவாக்க வேண்டும் என்ற தங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

      மாந்தன் என்ற சொல்லுக்குப் பெண்பாலை நீங்கள் சொல்லும் முன் வரை சிந்திக்கவில்லை.

      மாந்தி :)

      மனிதன் என்ற சொல்லைப் பொருத்தவரை அது தமிழில்லை எனக் கருதுகிறேன்.



      மனுஷன் என்ற சொல்லின் தற்சம வடிவம் இது எனவே எனக்குப் படுகிறது.

      மனுசன் என வெகுசன வழக்கில் சொல்லப்படும் இச்சொல்லுக்கு மனுசி என்னும் பெண்பால் உண்டு.

      மனிதி என்ற சொல்லாக்கம் நான் இதுவரை அறியாதது.

      குறித்துக் கொண்டேன்.

      தங்களின் வருகைக்கும் செறிந்த பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete
    2. //மனுஷன் என்ற சொல்லின் தற்சம வடிவம் இது எனவே எனக்குப் படுகிறது// - நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் ஐயா! ஆனால், ’மனம்’ என்பது தமிழ்ச்சொல் என நம் திருவள்ளுவர் இலக்குவனார் ஐயா கூறுகிறார். ’மனம் உள்ளவன் - மனிதன்’ எனச் சிலர் கூறுகிறார்கள். தவிர, ’மானம்’ எனும் தமிழ்ச் சொல்லிலிருந்து பிறந்ததே ‘மனிதன்’ எனக் கூறுபவர்களும் உண்டு.

      (திருவள்ளுவர் இலக்குவனார் - ‘அகரமுதல’ எனும் தனித்தமிழ் இதழை இணையத்தில் நடத்தி வருபவர். முன்பு தமிழ் வளர்ச்சித்துறையில் பணியாற்றியவர். இவரது தந்தையார் சி.இலக்குவனார் என்பவர் ’மொழிப்போராளி’ எனக் குறிக்கப் பெறுகிற அளவுக்கு அற்றை நாளில் புகழ் பெற்ற தமிழறிஞராக இருந்திருக்கிறார்).

      Delete
  19. ’இல்லாள்’ என்பதற்கு வேண்டுமானால் ஆண்பால் சொல் உருவாக்க இயலாமல் இருக்கலாம். ஆனால் அதே பொருளில், ’இல்லத்தரசி’ என்பதன் ஆண்பாலாக ’இல்லத்தரசன்’ எனச் சொல்லலாம். ஒரு படத்தில் கவுண்டமணி கூட நகைச்சுவையாய்ச் சொல்லுவார், ‘நான்தான் அவளுக்கு இல்லத்து அரசன்’ என.

    ReplyDelete
    Replies
    1. இல்லத்தில் அரசன் :)

      இல்லாள் என்பதற்கான ஆண்பாற் சொற்களை உருவாக்குதல் என்பதைவிட, இச்சொற்கள் காட்டும் சமூகக்கட்டமைப்பைக் குறித்துச் சிந்திப்பதையே இப்பதிவின் முதன்மை நோக்கமாகக் கொண்டேன் ஐயா. தங்களின் தொடர்வருகை மகிழ்வூட்டுகிறது.

      நன்றி.

      Delete
    2. கண்டிப்பாக ஐயா! புரிகிறது. இருந்தாலும் சும்மா சொல்லி வைத்தேன். :-)

      Delete
  20. சுவாரஸ்யமான மொழி அறிவுப் பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  21. ஆம்! தமிழ் தன்னகத்தே பல விந்தைஅகளைக் கொண்டுள்லதுதான்.

    கீதா: போட்டியில் பங்கெடுக்க முடியாமல் போனது. தாமதமாகிவிட்டதால். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் ஆண் பெண் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்த வார்த்தைகள் உதவும் இலையா. வார்த்தைப் பயன்பாட்டிலிருந்தே ஒரு சமூகத்தப் பற்றி அறிய முடிகிறது என்றால் எப்பேர்ப்பட்ட தமிழைக் கற்றுக் கொள்கிறோம். இனியேனும் நாங்கள் வகுப்பிற்கு ஒழுங்காக வர வேண்டும். கற்பதற்கு நிறைய உள்ளது..தொடர்கிறோம் சகோ!

    ReplyDelete
  22. அண்ணா- அண்ணி
    அண்ணா- அக்கா

    இதில் அண்ணி என்று எடுத்துக்கொண்டால் என்ன தவறு?. மாமா-மாமி என்றுதானே வருகின்றது.
    சற்று விளக்கம் தேவை. நன்றி

    ReplyDelete