நாம்
அன்றாடம் பேசிட எழுதிட எத்தனையோ சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
நாம்
பயன்படுத்தும் சொல்லுக்கு நாம் குறிக்க விரும்பும் பொருளன்றி வேறு பொருளும் இருக்கலாம். அல்லது நாம்
குறிப்பிட்ட சொல்லுக்கு உரிய பொருளை அறியாமல் அதனைப் பயன்படுத்தவும் செய்யலாம்.
சில சொற்கள் நாளடைவில் தம் நுண்ணிய பொருள்
வேறுபாடு மறைந்து ஒரே பொருளாய்ப் போய்விடலாம்.
பயன்பாட்டில்
உள்ள மொழியின் தன்மை இது.
பேசுதல்
என்கிற பொருளைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உண்டு.
அறைதல்,
இயம்புதல், இசைத்தல், உரைத்தல், கூறுதல், சாற்றுதல், நவிலுதல், நுதலுதல், பகர்தல்,
பறைதல், பன்னுதல், புகலுதல், புலம்புதல், மாறுதல், மொழிதல், என்பன அவற்றுள் சில.
ஆனால்
பேசுதலுக்கும் அதற்கு இணையாக வழங்கப்படுகின்ற இச்சொற்களுக்கும் நுண்ணிய வேறுபாடுண்டு
எனக் காட்டுகிறார் தேவநேயப்பாவாணார்.
இதோ
அவர்தரும் பொருள்:
பேசுதல்
– ஒருமொழியிற் சொல்லுதல்.
அறைதல்
– ஓங்கிப் பேசுதல், வன்மையாகச் சொல்லுதல்
இயம்புதல்
– இனிமையாகச் சொல்லுதல், இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்
இசைத்தல்
– கோவையாகச் சொல்லுதல்
உரைத்தல்
– நூலுக்கு உரைகூறுதல், விளக்கிச்சொல்லுதல்
கூறுதல்
– பாகுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல்
– பலரறிய நல்லுரை கூறுதல்
நவிலுதல்
– நாவினால் ஒலித்துப் பயிலுதல்
நுதலுதல்
– சொல்லித் தொடங்குதல்
நுவலுதல்
– நூலுரைத்தல், நுண்பொருள் கூறுதல்.
பகர்தல்
– பண்டங்களின் விலை கூறுதல்.
பறைதல்
– உரத்துச் சொல்லுதல்.
பன்னுதல்
– பணிக்காய் ( விவரமாய் )ச் சொல்லுதல்.
புகலுதல்
– விரும்பிச் சொல்லுதல்
புலம்புதல்
– தனிமையிற் சொல்லுதல்.
மாறுதல்
– திருப்பிச் சொல்லுதல்., மறுமொழி கூறுதல்.
மொழிதல்
– சொற்களை நன்றாய்ப் பலுக்கிச் சொல்லுதல்.
(
பக்.33., சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு )
வாருங்கள்
நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.
( பேரறிஞர்களின் பேருழைப்பால் தொகுக்கப்பட்ட தமிழ்லெக்சிகனில்
உள்ள குறைகளைச் சான்றாதாரங்களுடன் பட்டியலிட்ட பாவாணரின் தமிழறிவும், அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்த அந்நாள் தமிழறிஞர்களும் பற்றிய
அவலச்சுவை மிகுந்த முன்னுரை ஒன்று இந்நூலில் உண்டு. குறைந்தபட்சம் தமிழார்வம்
மிக்கவர்களேனும் பார்க்க வேண்டும் என்பது என் பரிந்துரை )
படஉதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
Tweet |
ஒரு சொல்லை ,இவ்வளவு பன்னுதலாய் சொல்ல உங்களால் தான் முடியும் :)
ReplyDeleteவாருங்கள் பகவானே!
Deleteஇதையும் இப்படிச் சொல்ல உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
வியந்தேன் நண்பரே
ReplyDeleteநன்றி
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி கரந்தையாரே!
Deleteஅழகிய விளக்கம் அறிந்தேன் கவிஞரே
ReplyDeleteத.ம.3
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!
Deleteஅருமை. நன்றி விஜூ.
ReplyDeleteசொல்லுதல், விளம்புதல், ... இப்படி இன்னும் சில சொற்கள் இருக்கின்றனவே . இந்தப் பட்டியலில் சேராதா ?
வணக்கம் அண்ணா.
Deleteஇன்னும் சில சொற்கள் இருக்கின்றன.
மதிப்பிற்குரிய.இ.பு.ஞானப்பிரகாசன் ஐயா, பேசுதல் என்பதற்கு ஒத்த பொருளினதாய் நாற்பதிற்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளதாய்க் கூறுகிறார்.
நான் குறித்த பட்டியல் பாவாணர் அவர்கள் விளக்கம் கூறிய சொற்களை அடிப்படையாகக் கொண்டதே.
பதிவில் பேசுதல் என்பதைக் குறிக்க இச்சொற்கள் மட்டும்தாம் உள்ளன எனும்தொனி பதிவில் இருந்தது.
மாற்றிவிட்டேன்.
விளம்புதல் என்பதற்கு நானறிந்தவரை, எடுத்துச் சொல்லுதல் என்பது பொருளெனத் தோன்றுகிறது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ஒரே பதத்திற்கு இத்தனை வார்த்தைகளா?
ReplyDeleteநம்ப முடியவில்லை. அபூர்வம்.
நம் தமிழ் உலகின் தலை சிறந்த மொழிதான். சந்தேகமில்லை .
பகிர்வுக்கு நன்றி.
வணக்கம்.
Deleteதங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
தொடர வேண்டுகிறேன்.
நன்றி.
சரியான பொருள் தெரிந்தால் இந்த வார்த்தைகளை நாம் இடத்துக்குத் தகுந்தாற்போல் உபயோகிக்கலாம். நல்ல பகிர்வு.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஸ்ரீ
Deleteநம் தமிழில் மட்டும் தான் (தற்பெருமை என்றாலும் சரி.) ஒரு சொல்லுக்கு பல பொருளும், ஒரு பொருளுக்கு பல சொற்களும் உள்ளன என நினைக்கிறேன். எனது கருத்து சரியா என்பதை தாங்கள் தான் சொல்லவேண்டும். தங்களின் பதிவு மூலம் அறியாதனவற்றை அறிகின்றேன். அதற்கு நன்றி!
ReplyDeleteவணக்கம் ஐயா.
Deleteநாம் பெருமை கொள்ளல் தகும்.
அதேநேரம் எல்லாம் தமிழில் உண்டு என்னும் வீண் பெருமையும் நமக்கு ஆகாது என்பது என் கருத்து.
முதலில் முக்கியமாய் நம்மிடம் இருப்பதன் அருமையை உணர வேண்டும்.
//ஒரு சொல்லுக்கு பல பொருளும், ஒரு பொருளுக்கு பல சொற்களும் உள்ளன என நினைக்கிறேன். //
நீங்கள் நினைப்பது சரியே!
நீங்கள் சொல்வதைத் திரிசொல் என்கின்றன இலக்கணங்கள்.
“ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும்
பலசொல் குறித்த ஒருசொல் லாகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் லாகும் ”
என்னும் நன்னூல்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் என்றும் நன்றி.
திகைக்க வைக்கிறது உங்கள் தமிழ்..!
ReplyDeleteத ம 8
வணக்கம் நண்பரே!
Deleteஉங்களின் தேடலும் நடையும் கூடத்தான்.
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ஐயா! நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ! "தமிழில் ‘பேசுதல்’ எனும் ஒன்றுக்கு மட்டும் நாற்பது சொற்களுக்கு மேல் இருக்கிறதாமே, அவை ஒவ்வொன்றுக்கும் இடையே பொருள் வேறுபாடும் உண்டு என்கிறார்கள். அவை அனைத்தையும் பட்டியலிட்டு அந்த வேறுபாடுகளையும் வரிசைப்படுத்தி நீங்கள் ஒரு பதிவு வெளியிட வேண்டும்’ என உங்களைக் கேட்க வேண்டும் என்று வெகு நாட்களாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நேற்றுக் கூட நினைத்தேன். பார்த்தால் இன்று நீங்களே வெளியிட்டிருக்கிறீர்கள்! மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteஆனால் சொல்லுதல், கழறுதல் என இன்னும் பல சொற்கள் உண்டே. அவற்றை ஏன் பாவாணர் சேர்க்கவில்லை ஐயா? ஒருவேளை அவையெல்லாம் ஒருபொருட்பன்மொழியா? அவற்றுக்கிடையே பொருள் வேறுபாடு கிடையாதா?
பேரறிஞர்களின் பேருழைப்பை அசட்டை செய்த தமிழறிஞர்கள்! தமிழறிஞர்களே இப்படிச் செய்தால் அப்புறம் யாரை நோவது! அந்த நூலை இணையத்தில் தேடிப் படிக்க முயல்கிறேன் ஐயா!
இன்னும் ஓர் ஐயம்! ‘சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு’ எனக் குறிப்பிட்டிருக்கிறீர்களே, பாவாணரின் அந்த நூலின் பெயரா அது அல்லது அந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் பெயரா?
வணக்கம்.
Delete//நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ! "தமிழில் ‘பேசுதல்’ எனும் ஒன்றுக்கு மட்டும் நாற்பது சொற்களுக்கு மேல் இருக்கிறதாமே, அவை ஒவ்வொன்றுக்கும் இடையே பொருள் வேறுபாடும் உண்டு என்கிறார்கள். அவை அனைத்தையும் பட்டியலிட்டு அந்த வேறுபாடுகளையும் வரிசைப்படுத்தி நீங்கள் ஒரு பதிவு வெளியிட வேண்டும்’ என உங்களைக் கேட்க வேண்டும் என்று வெகு நாட்களாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நேற்றுக் கூட நினைத்தேன். பார்த்தால் இன்று நீங்களே வெளியிட்டிருக்கிறீர்கள் ///
நம்புகிறேன்.
நற்றமிழில் மறைமலை அடிகள் எழுதிய “ தொலைவிலுணர்தல் ” என்னும் நூலொன்றுண்டு.
படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அன்றேல் வாய்ப்பிருப்பின் படிக்க வேண்டுகிறேன்.
நான் நம்புவதன் காரணம் புரியும். :)
//சொல்லுதல், கழறுதல் என இன்னும் பல சொற்கள் உண்டே. அவற்றை ஏன் பாவாணர் சேர்க்கவில்லை ஐயா? ஒருவேளை அவையெல்லாம் ஒருபொருட்பன்மொழியா? அவற்றுக்கிடையே பொருள் வேறுபாடு கிடையாதா//
பாவாணர் தரும் பொருள் வேறுபாடு வைத்துத்தான் இந்தப் பதிவை எழுதினேன். உண்மையில் பேசுதல் என்பதற்கு நாற்பதற்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கும் என்பது நீங்கள் சொல்லும் வரை தெரியாது.
கவிஞர். சிவகுமாரன் அண்ணன் சொல்லும் போதுதான் விடுபட்ட சொற்களும் இருக்கின்றனவே என்ற எண்ணமே வந்தது.
ஒரு பொருள் குறிக்கும் பல சொற்களுக்கு இடையே நுண்ணிய வேறுபாடுகள் முதலில்இருந்திருக்கும். காலப்போக்கில் அவை மறைந்திருக்கும். மொழியிலாளர் இதனைப் பொருட்பேறு என்பர்.
இவற்றினுடைய நுண்பொருளை இன்று இருவழிகளில் ஆராயலாம்.
1. வேர்ச்சொல் வழி ஆராய்தல்.
2. இலக்கிய ஆட்சி வழி ஆராய்தல்.
இதில் இலக்கிய ஆட்சியில் சிக்கல் என்னவென்றால், எதுகை மோனை, தளை கருதிப் புலவர் ஒன்றனோடு ஒத்த சொற்களை எடுத்தாண்டுவிடுவர்.
எனவே வேர்ச்சொல் ஆய்வு பயன்தரும்.
இது போன்ற பொருளொத்த சொற்களை ஒன்றாகச் சேர்த்து முதலில் நமக்குத் தந்தவை நிகண்டுகள்.
அடுத்து, வீரமாமுனிவரின் சதுரகராதிகளுள் ஒன்றான பொருளகராதி இது போன்ற ஒத்த பொருளுள்ள சொற்களைத் திரட்டித் தந்தது.
பொருளொத்த சொற்களை ஓரிடத்து நாம் பெறமுடிந்தது நன்மை என்றாலும், அவற்றிற்கிடையே இருந்த நுண்பொருள் வேறுபாடு மறைந்து போய் அவை ஒரே பொருளில் பயன்படுத்தப்படும் சூழலும் இதனால் நேர்ந்தது.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு’ என்பது பாவாணரின் தனி நூல் . சிறு நூல்தான்.
தமிழ்மண் பதிப்பக வெளியீடாகக் கிடைக்கிறது.
அவசியம் நீங்கள் படிக்க வேண்டும் என்பேன்.
வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.
வணக்கம் இ.பு.ஞா. ஐயா!
Deleteவேறொன்றினைப் பார்க்கப்போய்க் கழறல் என்பதற்கான பொருள் அறியக் கிடைத்தது.
கழறல் - உறுதிச்சொல்லை உறுத்திச் சொல்லுதல்.
“கல்லென்று தந்தை கழற ” என்னும் நாலடியார் பாடலில் கழறல் என்பதற்கான பொருளை இவ்வாறு வரையறை செய்கிறார் அதன் உரையாசிரியர்.
பொருத்தமானதுதான்.
நன்றி.
தேவநேயப்பாவாணர் தெரிவித்தால்
ReplyDeleteதேன்தமிழில் தவறிருக்காதே! - தங்கள்
பதிவை வரவேற்கிறேன்.
வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு. யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே!
பல புதிய சொற்களை அறிந்தேன். நன்றி விஜூ
ReplyDelete"உளறுதல்" பேசுதலில் சேர்க்கலாமா?
பல புதிய சொற்களை அறிந்தேன். நன்றி விஜூ
ReplyDelete"உளறுதல்" பேசுதலில் சேர்க்கலாமா?
வணக்கம் முரளிதரன் ஐயா.
Deleteஉளறுதல் என்பதைக் கலங்கி மொழிதல் அதாவது தடுமாற்றம் தோன்றச் சொல்லுதல் எனலாம்.
இதனோடு ஒத்த அரற்றுதல் என்பதற்கு “ ஒரு பொருளைப் பலகால் கூறுதல்” என்பா் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர்.
தங்கள் வருகைக்கும் தொடர்கின்றமைக்கும் நன்றி.
எண்ணற்ற சொற்களை எண்ண வியப்பாய் உள்ளது ஐயா. வைதல், திட்டுதல், துதி, முழங்கு, கூச்சலிடு, அறிவி, வாயாடு, உச்சரி போன்றனவையும் கொள்ளளாமா ஐயா?
ReplyDeleteஇவற்றிலும் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன அல்லவா?
Deleteவணக்கம்.
Deleteசில சொற்களுக்குத் தெளிவான வேறுபாடுகள் தெரிகின்றன. சற்றுத் தேடுகிறேன் ஐயா.
விளக்கம் கிடைத்ததும் வருகிறேன்.
கருத்திற்கும் தொடர்கின்றமைக்கும் நன்றி.
வணக்கம் சகோ. தாமதமான வருகைக்கு மன்னிக்க. பேசுதல் என்ற பொருளைக் குறிக்கப் பயன்படும் சொற்களை அறிந்து கொண்டேன். அப்புத்தகம் கிடைத்தால் அவசியம் வாசிப்பேன். நன்றி.
ReplyDeleteவணக்கம்.
Deleteதாமதமானால் என்ன..?
வருகிறீர்களே...... அதற்கென்றும் மகிழ்ச்சியே.
தங்களுக்கு மறுப்பின்றேல் இங்குள்ள தொடர்புகொள்ளும் படிவத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரி தர வேண்டுகிறேன்.
நன்றி.
ஆஹா! இத்தனைச் சொற்களா... பேசுவதற்கு!! பகிர்விற்கு நன்றி அண்ணா.
ReplyDeleteபுத்தகம் படிக்க முயற்சிக்கிறேன்.
அண்ணா, உங்களுக்கு முடியுமானால் ஆட்சேபனை இல்லையென்றால் புத்தகப் பட்டியல் ஒன்று இடுங்களேன்...உபயோகமாய் இருக்கும். தொந்திரவு என்றால் மன்னிக்கவும். நன்றி
வணக்கம் .
Deleteநெடுநாள் கழித்தான உங்கள் வருகை உவப்பளிக்கிறது.
புத்தகப்பட்டியல் ...................!!!!!
ஹ ஹ ஹா
அது அவரவர் விருப்பத்திற்கும் ரசனைக்கும் ஏற்றதல்லவா?
எதைக்குறித்து நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் என்றால் அது குறித்து நானேதும் படித்திருந்தால் நிச்சயம் அறியத் தருகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பயனுள்ள பதிவு ஐயா.நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteதொடர வேண்டுகிறேன்.
இங்குள்ள ஒவ்வொரு பதிவும் எனக்குத் தமிழ்ப்பாடம் படிப்பது போன்று உள்ளது. அதே போல் இங்கு வரும் பின்னூட்டங்களுக்குத் தாங்கள் அளித்திருக்கும் விரிவான பதிலும் சிறப்பு.
ReplyDeleteதொடர்ந்து தமிழ்க் கற்கும் ஆவலில்..
இதில் பல சொற்களின் பயன்பாட்டை அறிந்திருந்தாலும் எந்த இடத்தில் அவை வந்திருக்கின்றன என்பதை இனி கூர்ந்து நோக்கிப் படித்தால் அறியலாம் என்று நினைக்கின்றோம் - நவிலுதல், உரைத்தல், இயம்புதல், பேசுதல், கூறுதல், பறைதல் (மலையாளத்திலும்..) மொழிதல்.
ReplyDeleteபயன்பாட்டில் இருந்தாலும் சரியான பொருளில் இடத்தில் இவை வழக்கில் வருகின்றதா என்பதை நாங்களும் இனி கவனிக்க வேண்டும் என்றும் அறிந்து கொண்டோம். தமிழறிஞர்களே புறக்கணித்துள்ளனரே!
தங்கள் பதிவுகள் அனைத்தும், இவற்றில் புலம்புதல் தவிர மற்ற சொற்களின் பொருளில்தான் அமைந்துள்ளன!!! முக்கியமாகப் பன்னுதல், புகலுதல்!!