Friday, 26 September 2014

காலக்கணிதம்.



கணிதம் பற்றிய பதிவுகளைச் சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் தளத்திலும் நண்பர் அ பாண்டியன் அவர்கள் தளத்திலும் காண நேர்ந்த போது கணக்கதிகாரம் என்றொரு நூலும், தமிழில் காளமேகத்தின் பின்னம் பற்றிய பாடல் ஒன்றும் நினைவுக்கு வந்தன. தமிழில் உள்ள நான்கு கவிகளில் ஆசுகவி என்போர் ஏதேனும் எழுத்தையோ சொல்லையோ பொருளையோ கொடுத்தால் உடனடியாகப் பாடும் வல்லமை பெற்றவர்கள். அதற்கான சோதனையும் அவைக்களங்களில் நடப்பதுண்டு.
அப்படிக் காளமேகத்திடம்,முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்னும் எட்டு அளவைச் சொற்களும் அமையுமாறு கச்சியில் உறையும் ஏகாம்பரநாதர் மேல் ஒரு வெண்பா பாடுமாறு கேட்கப்பட்டதாகக் கூறுவர். காளமேகம் பாடிய பாடலைக்
காணும் முன் பழந்தமிழகத்தில் இருந்த இவ்வளவைகள் இன்று எவ்வாறு

கணக்கிடப்படுகின்றன என்று பார்த்து விடுவோம்.

முக்கால்       =  3/4
அரை          =  1/2
கால்                        =    ¼
இவை மூன்றும் இன்று வழக்கில் உள்ளவைதான். 

அரைக்கால்    = 1/8
இருமா                  = 1/10
மாகாணி      = 1/16 
ஒரு மா                =1/20   
கீழரை                  =1/256
என இன்றைய பின்ன அளவீட்டில் இதைக் குறிக்கலாம்.
கவி காளமேகம் பாடிய பாடல் ,

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கால ரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன்  மாகாணிக் கேகாமுன்  கச்சி
ஒரு மாவின் கீழரையின் றோது.

இதைப் பொருள்விளங்க இப்படிப்பிரித்துக் கொள்ளலாம்.

முக்காலுக்கு ஏகாமுன் முன்‘அரையில் வீழாமுன்
அக்கால் அரைக்கால் கண்டு அஞ்சாமுன் – விக்கி
இருமா முன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்று ஓது“

பாடலில் இவ்வளவைகள் வந்தாலும் இப்பாடலின் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் காளமேகம் கொண்ட பொருள் வேறு.

வயதாகி நடைதடுமாறி ஊன்றுகோல் ஒன்றின் துணையோடு மூன்று கால் ஆகி வருந்தும் முதுமைக்கு முன்பே (முக்காலுக்கு ஏகாமுன்), முதுமைப் பருவத்தில் நுழைகிறோம் என்பதை அறிவிக்கும் அந்த நரை தலையில் தோன்றும் முன்பே, (  முன் நரையில் வீழாமுன்),
நம்மை நெருங்கி வரும் எமனை வரும் பொழுது கண்டு அஞ்சும் முன்பே ( அக் காலரைக் கால் கண்டு அஞ்சா முன் ), விக்கலெடுத்து மூச்சு விடச் செருமி இருமல் வரும் முன்பே,( விக்கி இருமா முன் ), அனைவரையும் கொள்ளும் அளவிற்கு எக்காலத்தும்  கொள்ளவு உள்ள இடமான சுடுகாட்டிற்குச் செல்லும் முன்பே ( மாகாணிக்கு ஏகா முன் ), ஒரு மாமரத்தில் கீழ் அமர்ந்திருக்கின்றவரை –கச்சி ஏகாம்பரரான சிவபெருமானின் திருப்பெயரை- இப்போதே சொல்வாயாக ( ஒரு மாவின் கீழரை இன்று ஓது )

இப்போ கொஞ்சூண்டு இலக்கணம்.

ஒரே சொல்லுக்கு இரு பொருள் அமையுமாறு பாடுவதை நம் இலக்கணம் இரட்டுற மொழிதல்  அல்லது சிலேடை என்னும்.
இதில் இரு வகை உண்டு.

ஒரு சொல் அப்படியே நின்று இரு பொருள் தருமாறு அமைந்தால் ( இருமா என்பது இருமாமல் என்றும் இருமா என்ற அளவையைக் குறித்தும் வருவது மாதிரி ) அதனைச் செம்மொழிச் சிலேடை என்று இலக்கணங்கள் சொல்கின்றன.

தனித்து வரும் போது ஒரு பொருளும் ,  அதே சொல்லைப் பிரித்தோ சேர்த்தோ பார்க்கும் போது வேறு  பொருளும் வருமாறு இருப்பதை ( அக்கால் அரைக்கால் கண்டு அஞ்சாமல் எனவருவதை, அக்கால் அரைக்கால் என அளவைப் பெயராகப் பிரிப்பதும் , அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமல் எனச் சேர்ப்பதும், ஒரு திரைப்படப் பாடலில் வரும் “அந்தமானைப் பாருங்கள் அழகு“ என்பதை ‘அந்தமான்‘ என ஊர்ப்பெயராகவும் ‘அந்த மான்‘ என மானைச் சுட்டி அமையுமாறு பிரிப்பதும் ) இலக்கணங்கள் பிரிமொழிச்சிலேடை என்கின்றன.

இந்தப்பாடல் திருக்குற்றால ஆலயச் சுவரில் எழுதப்பட்ட பட்டினத்தார் பாடலொன்றையும் நினைவுபடுத்தி விட்டது.

“காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுன் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானை நினை“

தொடர்வோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

41 comments:

  1. சிறுவயதில் ஒரு பெரியவர் இந்த பாடலின் அர்த்தத்தை விளக்க, கேட்டதாக ஞாபகம். இப்போது மிக அழகான விளக்கத்துடன், கசக்காத வகையில் இலக்கணமும் சேர்த்து சொல்லியதற்கு நன்றி.

    பழந்தமிழகத்தின் அளவைகள் பற்றி படித்தபோது " இம்மி " பற்றிய ஞாபகம் வந்தது. இன்றைய மில்லிமீட்டரை பத்தாக பிரித்தால் வருவதில் ஒரு பகுதிதான் இம்மி என படித்ததாக ஞாபகம் ( இது உண்மையா என விளங்குங்களேன் )

    இம்மி உண்மை எனும் பட்சத்தில் ஒன்று தோன்றுகிறது.... அவ்வளவு சிறிய அளவுகோலுக்கு தேவை இருந்திருக்கும் பட்சத்தில்தான் அந்த பெயர் வழக்கில் இருதிருக்கும்... அப்படியென்றால் இந்த நவீன காலத்தில்கூட பெரும்பாலும் Nanometric துறையில்மட்டுமே பயன்பாட்டில் உள்ள அந்த கணித அளவை பயன்படுத்திய பண்டைய தமிழர்கள் கணிதத்தைதாண்டி விஞ்ஞானத்தையும் கரைத்துகுடித்தவர்களாய் வாழ்ந்திருக்க வேண்டும் இல்லையா ?

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகையும் முதல் பின்னூட்டமும் மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அண்ணா! “இணையத்தில் பல் துறை அறிஞர்களால் பாராட்டப்படும் உங்களின் கருத்தெ“ன்னும் போது இம்மகிழ்ச்சி இரட்டிப்பாவதில் வியப்பில்லை.
      இம்மி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய அதன் தற்கால அளவு ஒப்பீடு எனக்குத் தெரியவில்லை.
      உங்கள் நினைவு சரியென்றால் புதிய கற்றலோடு இன்றைய பொழுது எனக்கு விடிந்திருக்கிறது. நன்றி.
      அடுத்து நீங்கள் கூறும் அளவு கோல் பற்றி ஏதோ சொல்ல முடியும்.
      இயற்கையில் காணும் பொருட்களைக் கொண்டுதான் பழந்தமிழகத்தில் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டன. இம்மி என்பது நீட்டல் அளவையாக இருக்கும் பட்சத்தில் அது பற்றிக் கணக்கதிகாரம் என்ற நூலில் கண்டதை கீழே தருகிறேன்.

      8 அணு = 1 கதிரெழு துகள்
      8 கதிரெழு துகள் = 1 பஞ்சுத் துகள்
      8 பஞ்சுத் துகள் = 1 மயிர் முனை
      8 மயிர் முனை = 1 நுண்மணல்
      8 நுண்மணல் = 1 சிறுகடுகு°
      8 சிறுகடுகு = 1 எள்ளு
      8 எள்ளு = 1 நெல்
      8 நெல் = 1 விரற்கிடை
      12 விரற்கிடை = 1 சாண்
      2 சாண் = 1 முழம்
      12 முழம் = 1 சிறுகோல்
      500 சிறுகோல் = 1 கூப்பிடு தூரம்
      4 கூப்பிடு தூரம் = 1 காதம்
      4 காதம் = 1 யோசனை.

      கதிரின் துகளை யெல்லாம் நுண்ணளவிற்குத் தமிழர்கள் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியம் தான்.
      மாறும் மனித அளவைகளை விட இயற்கையான நெல் போன்றவற்றைக் கொண்டு மாறாத அளவைகளைக் கொண்ட அளவு கோலை ஒவ்வொரு காலத்திலும அரசர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.
      தன் பேரரசின் ஆட்சிப் பரப்பை அளக்க விரும்பிய இராஜராஜன் பயன்படுத்திய அளவுகோல் எவ்வளவு என இரு குறியீடுகளைக் குறித்து அதற்கிடைப்பட்ட அளவே “உலகளந்த கோலின் “ அளவு எனத் தஞ்சைப் பெரிய கோயிலின் இராசராச வாயிலின் உட்புற அதிட்டானக் கல்வெட்டொன்றில் குறிக்கப்பட்டுள்ளது.
      அந்த உலகளந்த கோலும் இத்தனை நெல்மணிகள் சேர்ந்தது என எங்கோ படித்திருக்கிறேன். எங்கு என நினைவில்லை.
      ஆனாலும் அரசர்கள் ஒரு பொதுவான அளவுகோலை அலகாகக் கொண்டுத் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியை அளந்தனர் என்பதை இந்தக் கல்வெட்டுதான் முதன் முதலில் நமக்குக் காட்டுகிறது.
      நம்மைப் பற்றிய இப்பழம் பெருமைகளைக் கூறிக்கொள்ளும் அதேநேரம் இதற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கேனும் முன்னதாகவே இந்தக் கணிதத் துறையில் நம்மைக்காட்டிலும் பலமடங்கு எகிப்தியர்கள் முன்னேறி இருந்தனர் என்பதை வரலாற்றடிப்படையில் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம்.
      கண்டு பிடிப்புகள் தேவையின் அடிப்படையில்தானே நிகழ்கின்றன?
      இருப்பினும் நம்மிடம் என்ன இருக்கிறது என்ற அறிவு சற்றுமற்று ,ஒன்றுமில்லை என்று நம்பி வந்தவைகளை எல்லாம் கண்மூடி வரவேற்கக் கற்றுவிட்டோம் எனுமிடத்தில்தாம் நாம் தோற்க ஆரம்பித்தோம். வென்றவர்கள் நம்மை விட்டுச் சென்ற பின்னும் அடிமைகள் என்பதில் ஆனந்தம்தான் நமக்கு!
      புதியவைகளை அறிவுக்குகந்தவற்றை ஏற்கும் அதே நேரம், நம்மிடம் என்ன இருக்கின்றன ... இருப்பவை நல்லனவா அல்லனவா என்று ஆராயவும் வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்கிறேனே ஒழிய வெற்றுப் பழம்பெருமை மட்டும் பேசிட அல்ல.
      நன்றி அண்ணா!

      Delete
    2. பின்னூட்டத்திலும் ஒரு பதிவு ...வாழ்த்துக்கள்

      Delete
    3. அன்பு சகோதரருக்கு,

      மிக விளக்கமான, அறிய தகவல்கள் அடங்கிய பின்னூட்டத்துக்கு நன்றி.

      உங்களின் பதில் பின்னூட்டம் கண்டபிறகு நானும் இம்மி பற்றிய தகவல்களை தேடினேன் ! இம்மியை விடாததற்கு காரணம்...

      " இம்மியளவுகூட கொடுக்க மாட்டேன்னுட்டான் ! "

      போன்ற வார்த்தை பிரயோகங்கள் எங்கள் ஊரில் ( பிரான்ஸ் அல்ல, காரைக்கால் !!! ) இன்றளவிலும் புழக்கத்தில் உள்ளது.

      க்ரியா அகராதியில் இம்மி பற்றி...

      மிகச் சிறிய துகள், ஒரு தனிமத்தின் மிகச்சிறிய இம்மி அணு எனப்படும், என குறிப்பிடபட்டுள்ளது.

      8 அணு = 1 கதிரெழு துகள்
      8 கதிரெழு துகள் = 1 பஞ்சுத் துகள்
      8 பஞ்சுத் துகள் = 1 மயிர் முனை
      8 மயிர் முனை = 1 நுண்மணல்
      8 நுண்மணல் = 1 சிறுகடுகு°
      8 சிறுகடுகு = 1 எள்ளு
      8 எள்ளு = 1 நெல்
      8 நெல் = 1 விரற்கிடை
      12 விரற்கிடை = 1 சாண்
      2 சாண் = 1 முழம்
      12 முழம் = 1 சிறுகோல்
      500 சிறுகோல் = 1 கூப்பிடு தூரம்
      4 கூப்பிடு தூரம் = 1 காதம்
      4 காதம் = 1 யோசனை.

      கதிரின் துகளை யெல்லாம் நுண்ணளவிற்குத் தமிழர்கள் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியம் தான்...

      உங்களின் தகவல்கலுடன் இம்மி பற்றிய க்ரியாவின் பொருளை சேர்த்து பார்த்தால் ஒரு அணுவின் மறுபெயரே, ஒரு அணுவின் அளவே இம்மி என்றிருக்கலாம் என தோன்றுகிறது.

      உங்கள் பதிலின் கடைசி வரிகள் தமிழர்களை பற்றிய மிக உண்மையான விமர்சனம் ! இதையே மிக விரிவான பதிவாக கொடுக்கலாம் !

      எனது கேள்விக்காக இவ்வளவு சிரத்தையுடன் பின்னூட்ட பதிவே எழுதியதற்கு நன்றி.

      சாமானியன்

      Delete
    4. அண்ணா
      வணக்கம். எனக்கான தங்களின் தேடலுக்கும் மீள் வருகைக்கும் நன்றி! இம்மி என்பது என்பது “இம்மியன நுண்பொருள்கள் ஈட்டி (சீவகசிந்தாமணி.495)“ என இலக்கியத்தில் வருவதாகத் தமிழ்லெக்ஸிகன் சொல்கிறது.
      மத்தங்காய்ப்புல்லரிசி என்னும் ஒருவகை சிறிய அரிசியையும் குறைந்த எண்ணையும் இச்சொல் குறித்து வரும் என்கிறார் நச்சினார்க்கினியார்.
      “ஏமநீர் உலகமோர் இம்மிப் பாலென“ ( சீவகசிந்தாமணி-3027)
      எனுமிடத்து இதே இம்மி என்பதை, “ உலகையும் தவத்தையும் எடையிட்டுப் பார்க்கும் போது உலகம் ஓர் இம்மி அளவு சிறியதாக இருப்பதாக“ நச்சினார்க்கினியர் எடையளவாகவும் காட்டுகிறார்.
      பொய் என்றும் புலனென்றும் இதற்குப் பொருள் கூறப்படுகிறது.
      எப்படியோ அடுத்த பதிவில் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லி விட்டீர்கள் .
      நன்றி அண்ணா

      Delete

    5. வணக்கம்!

      காலமேகத்தின் கணிதப் பாடல் கன்னலாய் இனித்தது! இதுபோன்று விந்தையான வெண்பாக்களை எழுதலாமே என்று ஆசை வருகிறது.

      நம்முன்னோர்கள் மிக மிக மிக நுண்ணிய அளவுகளைக் குறிக்கும் பெயா்களையும், மிக மிக மிகப் பெரிய அளவுகளைக் குறிக்கும் பெயா்களையும் கொண்டிருந்தனா்! நிறுத்தல் அளவு, பெய்தல் அளவு, தெறிப்பளவு, நீட்டல் அளவு, முகத்தல் அளவு, சார்த்தல் அளவு, எண்ணல் அளவு என பல அளவுகளை கண்டறிந்து பயன்படுத்தினா் இம்மி என்ற சொல் கீழ்நோக்கிச் செல்லும் எண்ணளவைக் குறிக்கும்.

      ஒன்று = 1
      முக்கால் = 1/3
      அரை = 1/2
      கால் = 1/4
      நாலுமா = 1/5
      மூன்று வீசம் = 3/16
      மூன்றுமா = 3/20
      அரைக்கால் = 1/8
      இருமா“ = 1/10
      மாகாணி [வீசம்] = 1/16
      ஒருமா = 1/20
      முக்கால் வீசம் = 3/64
      முக்காணி = 3/80
      அரை வீசம் = 1/32
      அரைமா = 1/40
      கால்வீசம் = 1/64
      காணி = 1/80
      அரைக்காணி முந்திரி = 3/320
      அரைக்காணி = 1/160
      முந்திரி = 1/320

      கீழ்முந்திரி = 1/102400
      இம்மி = 1/2150400
      மும்மி = 1/2.3654400
      அணு = 1/16.5580800
      குணம் = 1/149.0227200
      பந்தம் = 1/745.1136000
      பாகம் = 1/4470.6816000
      விந்தம் = 1/31294.7712000
      நாகவிந்தம் = 1/532011.1104000
      சிந்தை = 1/7448155.5456000
      கதிர்முனை = 1/14.8963110.9120000
      குரல்வளைப்பிடி = 1/595.8524436.4800000
      வெள்ளம் = 1/35751.1466188.8000000
      துண்மணல் = 1/3575114.66188800000000
      தோ்த்துகள் = 1/2.3238245.3022720.0000000
      ---------------------------------------------------------------------------------

      கோடிக்கு மேற்பட்ட எண்பெயா்கள்

      10 கோடி = 1 அற்புதம்
      10 அற்புதம் = 1 நிகற்புதம்
      10 நிகற்புதம் = 1 கும்பம்
      10 கும்பம் = 1 கணம்
      10 கணம் = 1 கற்பம்
      10 கற்பம் = 1 நிகற்பம்
      10 நிகற்பம் = 1 பதுமம்
      10 பதுமம் = 1 சங்கம்
      10 சங்கம் = 1 வெள்ளம்
      10 வெள்ளம் = 1 அந்நியம்
      10 அந்நியம் = 1 மத்தியம்
      10 மத்தியம் = 1 பரார்த்தம்
      10 பரார்த்தம் = 1 பூரியம்

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    6. அய்யா,
      ஆழமான அதே நேரம் அறிவார்ந்த தங்களின் பின்னூட்டத்தில் நானும் கற்கிறேன்.
      தாங்கள் கோடிக்கும் மேற்பட்டதாகக் காட்டிய எண்ணுப் பெயர்களுள் ஒன்று கூடத் தமிழ்ப்பெயர்களாக இல்லை கவனித்தீர்களா...?
      தமிழில் இவ்வெண்ணுப்பெயர்கள் இல்லாமல் இல்லை.
      இன்று உலகளாவிய அளவாக மெட்ரிக் அளவைகளைக் கொள்வதைப் போலவே அன்று சமஸ்கிருத மயமாக்கத்தின் விளைவாக இதே போன்ற பொதுவான அளவுப்பெயர்கள் எல்லாம் மாற்றம் பெற்றதன் அடையாளம் இது.
      மக்கள் அதிகம் புழங்கும் அளவைகளின் பெயர்கள் தமிழில் இருப்பதும், அறிவு சார் நுண்ணிய அளவைகள் வடமொழிப்பெயராக இருப்பதும் கொண்டு இதை அவதானிக்கலாம்.
      எந்த ஒரு மொழியும் மக்களின் வழக்கில் இருக்கும் போது அதை அழிப்பதோ மாற்றுவதோ கடினம் என்பதற்கும் நீங்கள் காட்டிய விளக்கம் சான்றுபகர்கிறது.
      மிகத் தாமதமான பதிலுக்குப் பொறுத்தாற்ற வேண்டுகிறேன்.
      நன்றி அய்யா!

      Delete

  2. சின்ன வயசில் இதே பாடலை எங்கள் தமிழய்யா நடத்திய நியாபகம், அரைக்கால் உள்ளிட்ட அறியாத அளவுகளையும் அறிந்து கொண்டேன், நன்றி....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  3. பயனுள்ள பதிவு குறித்துக்கொண்டேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. பதிவு பயன்பட்டால் மகிழ்ச்சிதானே!
      நன்றி நண்பரே!

      Delete
  4. வணக்கம் ஐயா!..

    சிலேடைப்பா தந்த சிறந்த கவிஞர்!
    பலேபலே என்னும் பதிவு! - கிலேசமிகக்
    கொள்ளுதே என்மனம்! கூறுங் கணக்கினால்!
    தள்ளுதே என்னைத் தவிர்த்து!

    மிக அருமையான பதிவு ஐயா!
    கணக்கியல் என்றவுடன் திரும்பிப் பார்க்காமல்
    ஓட முற்பட்ட என்னைச் சிலேடைக்கவி
    தடுத்து நிறுத்தியது!..:)
    (கணக்குப் பாடம் என்றால் அப்படி..:( எனக்கு)

    இன்னும் தாருங்கள் அறிவுக்கு விருந்தாக!..
    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. பலேபலே என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கும் சற்று கிலேசமாகத்தான் இருக்கிறது.
      இந்த வார்த்தைகளை எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீர்கள் கவிஞரே!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

      Delete
  5. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் நிறைய தாருங்கள் ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அண்ணா,
    நான் விளையாட்டை இட்ட பதிவை தொடர்ந்து நீங்களும், பாண்டியன் சகோவும் இட்டிருக்கும் பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது!!!! நீங்கள் காலக்கணிதம் என தலைப்பிட்டவுடன் நான் கவியரசரின் எனக்கு மிக மிக பிடித்த அந்த கவிதையை பற்றிய பதிவோ என ஒரு கணம் நினைத்துவிட்டேன்:)) ஆன இந்த பதிவு என்னை ஏமாற்றவில்லை. இதை நோட்ஸ் எடுத்துக்கொள்ள போகிறேன்:) நன்றி அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. இதுவும் வார்த்தை விளையாட்டுதானே சகோதரி!
      ஆம் கவிஞன் நானோர் காலக்கணிதம் , பன்னிரண்டாம் வகுப்பில் இருந்தது.
      நானும் அதில் பித்துப்பிடித்து அலைந்து,
      ““ எனக்குள் நானோர் எந்திரப் பாவை!
      எனை‘நான்‘ இயக்கிட இயங்குதல் என்கடன்!
      கற்பனை எனில்சேர் அற்புதக் கனவு!
      காண்பதில் மெய்மை காணுதல் என்பணி!
      உண்டலும் உறங்கலும் அல்லதென் உலகு!
      உலகம் நான்பயில் உயர்நிலைப் பள்ளி!
      இல்லென ஏங்கேன் இருப்பதில் மகிழ்வேன்!.............
      என்றெல்லாம் நூறுவரிகள் எழுதி...
      நகல் வேறு எடுத்து வைத்திருந்தேன்.
      எங்கோ போயிற்று.
      “காலக்கணிதம்“ இந்தச் சொற்சேர்க்கை ஒன்றிற்கே கண்ணதாசனைக் கவியரசு என்றுவிடலாம் என்பேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!

      Delete
  7. ஏங்க இப்படி தீவிரமா இலக்கணம் எழுதி கலக்கும் பதிவர் நீங்களாகத் தான் இருக்கும்
    என் குருவி மண்டையில் மூன்று முறை படித்தால்தான் ஏறும் என்று நினைக்கேன்..
    நல்ல பதிவு தொடர்க

    ReplyDelete
    Replies
    1. மது! நாங்களும் உங்கள் பின்னால்!

      Delete
    2. அய்யோ தோழர்,
      இது இலக்கணம் இல்லையே....
      இலக்கியம் தான் முதலில்!
      நீங்களே மூன்றுமுறை படித்தால் தான் புரிகிறது என்றால் நான் என் நடையை மாற்ற வேண்டும்.
      துளசி அய்யா,
      நீங்களுமா,
      தங்களிடம் இருந்துதான் நடை போன்ற விஷயங்களைக் கற்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
      இப்படி யெல்லாம் எழுதியோ பேசியோ பழக்கமில்லை அய்யா!
      அதுதான்!
      கூடுமானவரை புரியுமாறு எழுத முயல்கிறேன்.
      திருத்தத்தையும் புரிவதற்கு இடர்ப்பாடுள்ள பகுதிகளையும்
      அருள் கூர்ந்து சுட்டிக்காட்டுங்கள், என்னால் முடிந்தவரை எளிமைப்படுத்தவோ, திருத்தவோ முயற்சிக்கிறேன்.
      தயவுசெய்து தவறுகளைச் சுட்டிக்காட்டவும், பதிவின் நடைகுறித்த விமர்சனங்களைக் கூறவும் வேண்டுகிறேன்.
      வழிநடத்துங்கள்.

      Delete
  8. சிறந்த வெண்பா விளக்கம்
    நாம் படிக்க இலக்கணத் தெளிவு
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யாழ்பாவாணன் அவர்களே!
      தங்கள் நூலினை நிச்சயம் படிக்கிறேன்.
      தெரிந்தவர்களுக்குக் கூறுகிறேன்.

      Delete
  9. "காலக் கணிதம்" காலத்தால் கணிக்க முடியாத கற்கண்டு படைப்பு. நூலில் படித்ததை,
    நுட்பமான தங்களது நுண்ணறிவில், படைப்பாக காணும்போது, குறிப்பாக வாசகர்களின் பாராட்டுக்கு பதில் தரும் பாங்கு சிறப்பு. வலைதளம் பக்கம் வாருங்கள் நண்பரே!
    புதுவை வேலு (kuzhalinnisai.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
      தங்களின் வலைத்தளம் வந்தேன் .
      கருத்திட்டேன்.

      Delete
  10. கால்அரைக்கால் நான்அறியேன்
    கற்கண்டும் தானறியேன் நீர் இறைக்க
    நின்று நான் நனைகிறேன் தெப்பமாய்
    மகிழ்ச்சி வெள்ளத்தில்

    ஆஹா அருமை அருமை இவைகளை படிக்க படிக்க ஒரு பரவசம் என்னையே மறந்து விடும் அளவுக்கு.தேன் தமிழை அள்ளிப் பருகவே ஆசை ஆனால் பிரைன் கப்பாசிட்டி காணாதே. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அம்மாடியோ எவ்வளவு ஞாபக சக்தி உங்களுக்கு சகோ god is great ல்ல. உங்கள் தளத்தை விட்டுப் போக மனமே வராது சகோ நின்று நிதானிக்க நேரம் போதாமையால், அவசரமாக ஓடவேண்டியதாக இருக்கிறது. மேலும் மேலும் வளர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ....! எங்கேயோ இவ்வளவு காலமும் ஒளித்து இருந்திருக்கிறீர்களே. நிலவன் அண்ணா அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களை உரிய இடத்தில் கொண்டு வந்து சேர்த்தமைக்கு. கடவுளுக்கு நன்றி சொல்கிறதா திட்டுகிறதா என்று தெரியவில்லை. இப்பவாவது கொண்டு வந்து சேர்த்தானே அதனால் நன்றி தான் சொல்லவேண்டும். இல்லையா சகோ.ஹா ஹா ...நன்றி பதிவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி என்ன விட்டால்,
      ஏடறியேன் எழுத்தறியேன்..
      என்று பாடுவீர்கள் போல! ஹஹஹா!
      எங்கடா ரொம்ப நாளா காணோமேன்னு நினைச்சசேன்.
      வந்தாலே சந்தோஷம் தானே!
      உண்மையாகவே வெறும் படிப்பு மட்டுமே கொண்ட ஏட்டுச் சுரைக்காய் நான்!
      இது போல் எழுதுவது இப்பொழுதுதான்.
      தெரிந்தவர்களைத் தவிர பிறரிடம் பேசவும் பயம்தான்!
      மேடைப்பேச்சென்றாலோ அவ்வளவுதான்!
      அட..
      நம்ம எழுதுறதையும் இம்புட்டுபேர் படிக்கிறாங்களே என்னும் போது அடைகிற சந்தோஷத்தை இதுவரையில் அனுபவித்ததில்லை சகோதரி!
      இணையத்தில் நான் வந்ததால் அடைந்த நன்மை அறிவும் திறமையும் உடைய ஏராளமானவர்களைக் காண்பதும்,
      என்மேல் சற்று நம்பிக்கை வந்ததும் தான்!
      நிச்சயமாய் எனக்கு இதனைக் கற்றுக்கொடுத்தவர்களுக்கு எப்போதும் மாறாத நன்றி என்னிடத்தில் உண்டு!

      Delete
  11. அன்பு நண்பரே,

    ‘யானோர் காலக்கணிதம்...கருப்படு பொருளை உருப்பட வைப்பவன்’ என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வந்தன.
    அருமையான காலக்கணிதம் தந்த நீங்கள் ஒரு ’காலக்கணிதம்” .
    வாழ்த்துகள்.


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நானும் அவ்வரிகளில் இருந்துதான் இந்த வார்த்தையை எடுத்துக்கொண்டேன் மணவையாரே!
      ஆனாலும்
      கவியரசு தன்னைச் சொல்லியதை
      நீங்கள் என்னைச் சொல்வது....
      நிச்சயம் பொருத்தமாயில்லை அய்யா!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  12. தமிழ் ஆசிரியரே வழக்கம் போல் பின்னூட்டங்களையும் அழகிய பதிவாக....ஆஹா அருமை அதுவும் சிலேடைக் கவி காளமேகப் புலவரின் அருமையான பாடலுடன்....

    பாபநாசம் சிவன் பாடிய பாடல் நினைவுக்கு வருகின்றது! இதே அர்த்தத்தில் ஆனால் அவர் தற்காலத்தில் வாழ்ந்தவர். நீங்கள் அறிந்திருப்பீர்கள்! அந்தப் பாடல்கள் கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழ் பாடல் வரிசையில் பாடப்படுவதுண்டு! இது போன்ற காளமேகப் புவவரின் பாடல்களைக் கூடப் பாடி இலக்கியம் பரவச் செய்யலாமே! பார்ப்போம்!

    இதோ அந்தப்பாடல்

    நம்பிக் கெட்டவர் எவரைய்யா உமை
    நாயகனை திரு மயிலையின் இறைவனை!
    ................................................................
    அந்தி செயலழின் தலம் வரும் பொழுது சிவன் பெயர் நாவில் வாராதே ஆதலினால் மனமே இன்றே அவன் நாமம் சொல்லிப் பழகு!

    பட்டினத்தார் பாடலும் அருமை! புதிதாய் தெரிந்து கொண்டோம்.....

    ReplyDelete
    Replies
    1. தமிழ் ஆசிரியரே என்று நீங்கள் சொல்வது மணவையாரைத்தானே துளசி அய்யா!
      தமிழாசிரியராக இல்லாவிட்டாலும் இணையத்து யாரும் தமிழ் பேசுவதைத் தடுத்திட மாட்டார்களே!
      பாபநாசம் சிவன் பற்றி பெயர்கேள்விதான் உண்டு.அவர் பாடல்களை அறிந்ததில்லை.
      இதை அறியத்தந்தமைக்கு நன்றி!
      சித்தர் பாடல்களில் இக்கருத்துடைய பல பாடல்கள் உள்ளன.
      பட்டினத்தாரின் என்னைக் கவர்ந்த மற்றும் ஒரு பாடல்,
      “ இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
      ஒருத்தர்க்கும் தீங்கினை ஒண்ணாதே! - பருத்ததொந்தி
      நம்மதென்று நாமிருக்க நாய்நரிகள் பேய்கழுகு
      தம்மதென்று தாமிருக்கும் தான்“
      ஊரை ஏய்த்துப் பிழைத்து நீவளர்க்கும் உன் வயிறு உன்னுடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?
      அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாயும் நரியும் பேயும் கழுகும். ஆஹா , பயல் எவ்வளவு அருமையாக நமக்காக வளர்த்து வைத்திருக்கிறான் என்று எச்சிலூறப் பார்க்குமாம்.
      இது இடுதலும் ( புதைத்தல் ) சுடுதலும் அன்றி இன்றைய பார்சிகளின் சடங்குபோல் அக்காலத் தமிழகத்தில் பிணங்களைக் கழுகுகளும். நாய்களும் நரிகளும் இரையாக்கிக் கொள்ள விடும் வழக்கத்தையும் இந்தப் பாடல் காட்டுகிறது.
      என் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னொரு பாடலும் பட்டினத்தாருடையதுதான்.
      வகுப்பறையில் ஒவ்வொருவரும் உங்களைக் கவர்ந்த பாடலைக் கூறுங்கள் என்று பேராசிரியை ஒருவர் கூற, வரிசையாய்த் திருக்குறள் மற்ற மாணவர்களால் கூறப்பட என் முறை வந்த போது நான் கூறிய பாடல்,
      “ சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
      வெற்றம் பலந்தேடி விட்டேனே - நித்தம்
      பிறந்தஇடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
      கறந்தஇடம் நாடுதே கண்“
      எங்கே இன்னொரு முறை சொல் என்று சொன்ன அப்பேராசிரியை “ உடனடியாக வகுப்பை விட்டு வெளியே போ“
      என்றுவிட்டார்.
      அப்பொழுது எழுதப்பட்டதைத்தான் மெய்யாய் ஒரு பொய் http://oomaikkanavugal.blogspot.in/2014/05/blog-post_2234.html
      என்று பதிவிட்டிருக்கிறேன்.
      பதிவு பழையதுதான் என்றாலும் உங்களின் கருத்தை அதற்கு வேண்டுகிறேன்.
      நன்றி!

      Delete
  13. வணக்கம் ஊமைக்கனவுகள் !

    நான்பெற்ற நற்பயனோ நாதன்தன் வாழ்த்தோ'இவ்
    வான்போன்ற நற்புலவன் வாசலிலே - தேன்சுரக்கும்
    பூப்போல தெள்ளுதமிழ் பார்க்கின்றேன் ! எல்லாமே
    மூப்பேதும் கொள்ளாத முத்து !

    காலக்கணிதம் கண்டேன்
    அப்படியே நெஞ்சுருகி நின்றுவிட்டேன் பதில் கருத்த எப்படி சொல்வது என்று தெரியல்ல ஆனாலும் காளமேகம் என்றதும் நினைவுக்கு வந்தது இதுவே

    கத்துக் கடல்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
    அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
    உலையிலிட ஊர்அடங்கும் ஓரகப்பை அன்னம்
    இலையிலிட வெள்ளி எழும் !

    எப்போவாவது அம்மா அப்பாவின் அருகாமை கிடைக்கும் போது புராண இதிகாசக் கதைகள் சொல்வார்கள் கேட்பேன் அதில் நினைவில் இன்றும் நிற்கும் காளமேகத்தின் சிலேடை வெண்பா தான் உங்கள் பதிவை படித்ததும் நினைவில் வந்தது !

    இவ்வளவு அழகான கருத்தாளம் மிக்க பதிவுகளை மேலும் தர வேண்டிக்கொள்கிறேன் கடந்துபோன காலங்களில் தவறவிட்டதையும் கற்றுக் கொள்கிறேன்

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் !


    ReplyDelete
    Replies
    1. இப்பொழுதுதான் தங்களின் மொழி சுவையாக இருப்பதன் காரணம் விளங்குகிறது. என்னவொரு அநாயாசமான சொல்லாடல்...?!
      இந்தக் காளமேகத்தின் நிந்தாதுதிப் பாடல் சுவையானதுதான்.
      உங்களிடமிருந்து நிறையக் கற்கிறேன் என்பதே உண்மை சீராளரே!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  14. வணக்கம் சகோ உங்களின் வலைப்பூவால் இன்று வலைச்சரம் சிறக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பினுக்கு நன்றி கவிஞரே!

      Delete
  15. காளமேக புலவரை கண்முன் கொண்டு வந்தவருக்கு, வலைச் சரத்தில் மேள தாளத்துடன் வரவேற்பு. இன்றைய நிகழ்வில் காணுங்கள். நண்பர் ஜோசப் விஜூவின் மகிழ்சிசியில் நானும் பங்கேற்கின்றேன்.குழலின்னிசை தங்களுக்கு குதுகூல இசை இசைக்கிறது. வாழ்க வளர்க!
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா,
      தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!
      தொடருங்கள்!

      Delete
  16. தமிழ் இலக்கணத்தை முறையாகக் கற்கவேண்டும் என்ற ஆவல் தங்களின் பதிவுகளைப் பார்த்ததும் மேம்படுகிறது. வித்தியாசமான முறையிலான பதிவுகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் அய்யா!

      Delete

  17. வணக்கம்!

    அலேக்கென்று துாக்கி அணைத்திடுமே நம்மைச்
    சிலேடையென்னும் செந்தேன் செழும்பாட்டு! - சலாக்கென்று
    தண்ணீரில் கையாடும்! தண்டமிழ் தந்துவக்கும்
    பண்ணீரில் மெய்யாடும் பாய்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  18. காளமேகத்தின் பாடலை கேள்விப்பட்டு இருக்கிறேன்! சிறப்பான விளக்கம்! இலக்கணமும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  19. எனக்குபிடித்த பாடல் சரியான விளக்கம். அருமை. நன்றி,

    ReplyDelete