Monday, 27 April 2015

“‘ஐயா’ இது சரியா அய்யா ?”உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – ( 3 )


ஒரு மொழியின் ஓர் எழுத்தின் ஒலியை அதே மொழியின் இன்னொரு எழுத்தை அல்லது எழுத்துகளைச் சேர்த்து எழுத முடியுமா?
அப்படி எழுத முடிந்தால் பின் அந்த இரண்டு எழுத்துகள் எதற்கு ?
எதையாவது ஒன்றை வைத்துவிட்டு இன்னொன்றை எடுத்து விட வேண்டியதுதானே?

இப்படிப் பட்ட சிக்கலில் மாட்டிக் கொண்ட உயிர் எழுத்துகள்தாம் எனும் எழுத்தும் எனும் எழுத்தும்.

பெரியாரிய எழுத்துச் சீர்திருத்தம் வலியுறுத்திய முக்கியமான மாற்றங்களில் ஐயாவை அய்யா எனப் பரிந்துரைத்ததும் ஒன்று.

ஆனால் இந்தச் சிக்கல் நம் மொழியில் எப்பொழுது தோன்றியது?

சென்ற நூற்றாண்டிலா என்றால் இல்லை.

அது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தோன்றிவிட்டது.

அவரிடமும் இக்கேள்வி எழுப்பப்பட்டது.

அஇ என்பதை சேர்த்தால் வருகிறதே! எனும் எழுத்தை அஇ என்று எழுதினால் என்ன தவறு?” என்று ஒருவன் கேட்கிறான்.

அருகில் இருக்கும் இன்னொருவன்,  “ ஏன் அதை அய் என்று எழுதக் கூடாதா அய் என்று எழுதினாலும்  என்னும் ஒலி வருமே? ” என்கிறான்.

தொல்காப்பியர்தான் என்ன செய்வார் பாவம்?
                                                            
இருதரப்பிலும் நியாயம் இருக்கும்போது தீர்ப்புச் சொல்லும் இடத்தில் இருப்பவருக்குத்தானே சிரமம் தெரியும்?

கடைசியில் தொல்காப்பியரும் நம் வழிக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.

“அட போங்கப்பா..!

நீங்க இரண்டுபேர் சொல்றதும் சரிதான்!” என்று சொல்லிவிட்டார்.

ஆனால் அவர்கள் விடவில்லை.

“அப்படியெல்லாம் சொல்லிட்டுப்  போக முடியாது. சொன்னத எழுதிக் கொடுங்க” என்று  கேட்கவே எழுதியும் கொடுத்துவிட்டார்.

அதுதான்,

“அகர இகரம் ஐகாரம் ஆகும்”

“அகர உகரம் ஔகாரம் ஆகும்”

“அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” 
                                      
                                                   ( தொல். மொழிமரபு-21,22,23 )

இப்ப உள்ள தமிழில் சொல்லனும் என்றால்,

“அ வோட இ சேர்த்தா ஐ“ ( அஇ = ஐ )

“அ வோட உ சேர்த்தா ஔ” (அஉ = ஔ ) 

“அ வோட ய் சேர்த்தா அதுவும் ஐ மாதிரி இருக்கும்”    ( அய் = ஐ )
  
என்பதுதான் இதற்குப் பொருள்.

ஆனால் நாம் கவனிக்க வேண்டியது,

ஐ என்கிற எழுத்தை அய் எனவோ அஇ எனவோ எழுதிவிட முடிகிறபோது ஐ என்ற எழுத்துத் தமிழில் எதற்கு? அதை நீக்கிவிடலாமே என்று தொல்காப்பியர் நீக்கிவிடவில்லை.

அதற்கும் வலுவான காரணங்கள் இருந்தன. இருக்கின்றன.

பொதுவாக நம் இலக்கண மரபில்,

ஒரு சொல்லில் ஒரு எழுத்து இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்து(கள்) வந்து பொருளை வேறுபடுத்தாமல் இருக்குமானால் அந்த எழுத்துப் போலி எழுத்து எனப்படுகிறது.

இதன் அடிப்படையில் பார்த்தால்,

ஐ என்பதை அய் என்று எழுதுவது போலி.

எனவே ஐயா என்று எழுதுவதே ஒரிஜினல்.

ஐ என்பதை அய் என்று சொல்லிவிடலாம்  என்றால் பின் அந்த எழுத்துத் தமிழ் நெடுங்கணக்கில் எதற்கு? ஐ என்கிற எழுத்தையும், அதே போல உள்ள ஔ என்கிற எழுத்தையும் நீக்கித் தமிழ் உயிர் எழுத்துகளைப் பத்தாக்கிவிடலாம் என்ற தமிழறிஞர்களின் குரலும் ஒலிக்கத்தான் செய்தது . இதனை ஒட்டிய பெரியாரிய எழுத்துச் சீர்திருத்தக் கருத்திற்குப் பின் இக்குரல் சென்ற நூற்றாண்டில் மேலும் வலுப்பெற்றது.

இதன் தொடர்ச்சியாகப் பல தமிழறிஞர்களும் ஐ என்கிற எழுத்தை விட்டுவிட்டு அது மெய்யோடு இணைந்து வருமிடத்திலும் அய் என்றும் ஔ என்கிற எழுத்தை அவ் என்றும் எழுதலாயினர். ( சாலை இளந்திரையன் = சாலய் இளந்திரயன். பழமலை = பழமலய் ) ஆனால் அது நிலைபெறவில்லை.

வலைத்தளத்திற்கு வந்த ஆரம்ப நாட்களில் நான் ஐயா என்றே எழுதி இருக்கிறேன்.

வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே ” என்று தொல்காப்பியம் சொல்லும். 

இதற்குப் பொருள், கல்வி கேள்விகளில் உயர்ந்தவர்களே உயர்ந்தவர்கள். அவர்கள் வழங்குவதே வழக்கு.

என்போன்றோர்  அதைப் பார்த்துக் கற்கின்றவர்.

எனவே நான் மதிக்கும் எழுத்தாளுமைகள் பலரும் இங்கு அய்யா என எழுதக் கண்டதால் அதுவும் ஏற்கப்பட்ட வடிவம்தானே எனக்கருதி, ஐயாவை அய்யா என மாற்றி எழுதத் தொடங்கினேன். அதற்கு இலக்கண அமைதியும் இருந்தது.

ஆனால் என்னால், ஐ என்னும் எழுத்தை முற்றிலும் விட முடியவில்லை.

ஐ எனும் எழுத்தை அய் என எழுதும் என்னைப் போன்ற பலர்க்கும் எல்லா இடங்களிலும் இந்த ஐ யை விட்டுவிட்டு அதற்குப் பதில் அய் என்று எழுத முடியாது.

சென்ற பதிவில் காட்டிய, பேதைமை என்ற சொல்லை  “பேதய்மய்” என்று எழுதிப் பார்த்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. இது தமிழ்ச்சொல் போன்றே எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கும் இது ஏதோ தட்டச்சுப் பிழை என்றுதான் தோன்றும் என நினைக்கிறேன்.

எனவே ஐ என்ற எழுத்து வருமிடத்தில், அதனை அய் என எழுதச் சொல்லி விட்டு,
அது உயிர்மெய்யோடு வரும்போது மட்டும் ( எடுத்துக்காட்டு; தொகை – இதில் கை என்பது க்+ஐ சேர்ந்தது. என்பதை அய் என மாற்றினால் பின் இதைத் ‘தொகய்’ என்றுதானே எழுத வேண்டும்?) ஐ சேர்ந்த மெய்யின் வடிவத்தில் எழுதச்  சொல்லும் இரட்டை நிலைப்பாட்டைத் தவிர்க்கலாம் என்பதே என் பரிந்துரை.

“ஏன் பெரியாரியச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் ஐகார உயிர் மெய்யையும் மாற்றித் தொகை என்பதை தொகய் என்று சொல்வதில் என்ன தவறு?” என்றால் அப்படிச் சொல்லும் போது, மரபிலும் இலக்கணத்திலும் சில சிக்கல்கள் நேர்கின்றன. ( இதைச் சரி என்று யாரேனும் வாதிட்டால் அவர்களுக்கு மறுமொழி சொல்வதற்காக அதை இப்போது சொல்லாமல் பதுக்கி வைத்திருக்கிறேன் :). பதிவு நீண்டுவிடக் கூடாது என்பதும் முக்கிய காரணம். )

இறுதியாகப் பதிவின் தலைப்பில்  கேட்கப்பட்ட கேள்விக்கு என் புரிதலின் அடிப்படையிலான பதில்,

‘ஐயா’ என்று எழுதுவது மிகச் சரியானது.

அய்யா என்பது இன்றைய உயர்ந்தோர் வழக்கில் பரவலாக நம்மிடையே இருக்கிறது.

அப்படித் தொல்காப்பியர் கால மொழிப்பயில்விலும் இதைப்போலச் சொல்ல அனுமதி இருந்திருக்கிறது.

எனவே  ஐயா என்பதை அய்யா என்று வழங்குவதையும் தவறன்று என்று ஏற்க வேண்டி இருக்கிறது.


என்ன இருந்தாலும் ஐ என்கிற எழுத்தை விட்டுவிட வேண்டாமே !

சரி. நீங்கள் இனி எப்படிச் சொல்லப் போகிறீர்கள்?

ஐயாவா....? அய்யாவா...?



மாற்றுக் கருத்துகள் இருப்பின் அறியத் தாருங்கள்.

வாருங்கள்..! நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்



ஆகிய பதிவுகளின் தொடர்ச்சி.

பின் குறிப்பாக,

இந்த ஐ என்பதையும் ஔ என்பதையும் சந்தியக்கரம் என்னும் வழக்கு நன்னூலிலும் அதற்குப் பின் வந்த இலக்கண நூல்களிலும் காணப்படுகிறது.

ஐ என்பதையும் ஔ என்பதையும் சந்தியக்கரம் என்பது சரியா?

தேட நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் பதிலளிக்கலாம்.




காத்திருக்கிறேன்.
பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

56 comments:


  1. இன்றும் ஔவையாரை ஒ-ளவையார் என்று வாசிப்பவர்களும் உண்டு. ஐ, ஔ – இரண்டினுக்கும், முறையே அய், அவ் என்பன போலிகள் என்பதனை நன்கு விவரித்தீர்கள். (சந்தியக்கரம் – எப்போதோ உருப் போட்டது நினைவுக்கு வருகிறது. முழுதும் வந்த பாடில்லை). உங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும். தொடருகிறேன்.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. ஆரம்ப நிலையில் இது அறியாமையாலும் அறிந்த நிலையில் இது கிண்டலுக்காகவும் இப்படிப் படிக்கப்படுவதாக நினைக்கிறேன் ஐயா.

      சந்தியக்கரம் பற்றிச் சற்று ஆராய்ந்து தகவல்களைத் தரலாமே...!

      உங்களைப் போன்றவர்களிடம் இருந்துதானே இதற்கான பதிலை எதிர்பார்க்க முடியும்.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!

      Delete
  2. 'ஐ என்பதை அய் என்று சொல்லிவிடலாம் என்றால் பின் அந்த எழுத்துத் தமிழ் நெடுங்கணக்கில் எதற்கு?' அதுவும் இருக்கட்டும் இதுவும் இருக்கட்டும். வழக்கு நோக்கி எது நிற்கிறதோ அது நிற்கட்டும். (இதுவும் தொல்.சொல்தான்)
    ஐயய்யோ? - இதில் இரண்டுமதான் இருக்கிறது.
    இதை, ஐஐயோ என்றா சொல்கிறோம்? கை காலப்போக்கில் கய் ஆகட்டும் பிறகு ஐயை எடுத்துவிடலாம். இப்போது அவசரமில்லை அதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம். நாம் அவசரப்பட வேண்டியதில்லை.
    அய்யா என்பது, பெரியாரியத் தொடர்ச்சி. நான் இதைப் பயன்படுத்த அதுவும் ஒரு காரணம்தான் அய்யா! நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      முதலில் இதுவும் இருக்கட்டும் அதுவும் இருக்கட்டும் என்று நீங்கள் சொல்வதுதான் எனது நிலைப்பாடும்.

      ஐஐயோ என்பதை ஐயய்யோ அல்லது ஐயைய்யோ என்றுதான் நாம் சொல்ல முடியும்.

      தமிழ்மரபில் இரண்டு உயிர்கள் சேர்ந்து வருதல் யாண்டும் இல்லை என்பது தாங்கள் அறியாததன்று.

      இந்த அஇ என்பது கூட ஐ என்பதன் மாற்றுவடிவம் தானே தவிர அதை சொல்லாய் ஆளுதல் இல்லை. அளபெடை இதற்கு விதிவிலக்கு என்றாலும் அங்கும் இரு உயிர் வருதல் குறியீட்டளவில் ஆனதுதானே தவிர, உச்சரிப்பில் ஆண்டும் அது நெடிலின் நீட்டமாகவே அமையும்.

      ஐயைய்யோ என்பதை ஐயய்யோ என்று ஐகாரம் நீக்கிச் சொல்வது கூட உச்சரிப்பின் எளிமை எழுத்திலும் புகுந்து, பழைமை என்பதை பழமை என்று ஐகாரம் அகரமாய்த் திரிந்தாற் போலத்தான்.

      ஐ என்பதை எடுத்து விடலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை அய்யா. அப்படிச் செய்வோமானால், யாப்பு, உடம்படுமெய், புணர்ச்சி இவற்றில் நாம் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரும்.
      அவற்றைச் சரி செய்ய நாம் புதிய விதிகளை விதிவிலக்குகளை வகுக்க வேண்டிவரும்.

      ஐகாரமே இல்லாதபோது ஐகாரக் குறுக்கம் எங்கே...!

      அதை எல்லாம் நீக்க வேண்டிவரும்.

      இன்று நேற்றல்ல இந்தப் பிரச்சினை தொல்காப்பிய காலந்தொட்டே இருந்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நெடுங்கணக்கில் இருந்துவரும் இந்த ஐ எனும் எழுத்து இனியும் இருக்கும் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.

      பெரியாரின் சமூகப்பணிகள் போற்றுதற்குரியன என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை என்கிறபோதும் மொழிபற்றியப் பெரியாரியக் கருத்துகள் பலவற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை.

      முக்கியமாய்த் தமிழ் மொழி குறித்த அவரது பார்வை, திருக்குறள், தொல்காப்பியம் குறித்தெல்லாம் அவர் குறித்த கருத்துகள்......!

      அது பற்றி இங்குக் குறிப்பிட்டு விவாதிக்கவும் விரும்பவில்லை ஐயா!

      ஐ என்பதை எடுத்துவிடலாம் என்பது போன்றே, மொழியியல் தமிழ்ப் பேரறிஞர் முத்துசண்முகம் அவர்களின் பரந்த ஆய்வில் பெரிதும் வழக்கில் இல்லாத ‘ழ’கரமும் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

      இது போன்ற விவாதங்களை ஏற்றும் கடந்தும்தான் நம் மொழி வந்திருக்கிறது.

      பார்ப்போம் ஐயா..!

      மொழியின் வளர்ச்சியும் மாற்றமும் காலத்தின் கைகளில் அல்லவா உள்ளது.?


      தங்களின் வருகைக்கும் மேலான கருத்துகளுக்கும் மிக்க நன்றி!



      Delete
  3. ஏதோ தமிழ் தட்டச்சு செய்யும் போது எளிமை செய்யும் பொருட்டு பெரியார் இந்த சீர்த்திருத்தங்கள் கொண்டுவந்ததாக படித்திருக்கிறேன். இன்று போல் வகை வகையாய் கீ-போர்ட் இல்லாத காலகட்டத்தில் தன் விடுதலை நாளிதழில் இந்த ஐ சீர்திருத்தத்தை கொண்டுவந்தார் என அறிகிறேன்.மேலும் ளை, ளை போன்றவை ல போட்டு மேலே யானையின் துதிக்கை போல ஒரு கொம்பு போட்டு தட்டச்சு செய்வதும் சிரமமாய் இருந்ததென்றும் இந்த ளை பெரியார் பயன்படுத்தியாதாகவும் படித்திருக்கிறேன், ஆனால் ஆதாரம் வேண்டுமே!!! இருங்க wiki, கூகுள் image ரெண்டிலும் பார்த்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஆம் சகோ..!
      நீங்கள் சொல்வது உண்மைதான்.
      இம்மாற்றம் பற்றிய சிந்தனை பெரியாரின் மனத்தில் தோன்றியதற்குக் காரணமான சம்பவம் ஒன்றையும் சொல்வார்கள்.

      யானையின் கொம்பு எழுத்தில் இருந்தமை குறித்துத்தான் அடுத்த பதிவு.

      இங்குச் சிக்கல், தமிழின் இரு எழுத்துகளை நீக்கிவிடலாம் என்கிற தமிழை எளிமைப் படுத்தும் கருத்தில் இருந்து எழுகிறது.

      தேடிச் சொல்லுங்கள்.

      காத்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
  4. மிகவும் சிறப்பான தமிழ்ப்பணி ஐயா! எனக்கு அய்யாவைவிட ஐயா என்று சொல்வதே பிடித்திருக்கிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!

      Delete
  5. பெரியாரிய சீதிருத்தம் என்று வருவது விளங்கவில்லை.தந்தை பெரியார் எனப்படுபவர் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தாரா?இந்த லை ளை போன்ற எழுத்துக்களுக்குக் கொம்பு போட்டு ஒரே எழுத்தாய் எழுதியும் கற்பிக்கப் பட்டும் வந்திருக்கும் என்னைப் போன்றவர்களால் இன்றைக்கும் கையால் எழுதும் போது கொம்பு போட்டுத்தான் எழுத முடிகிறது. நீங்கள் சொல்வது போல் சில வார்த்தைகளை வித்தியாசமாய் எழுதுவதைப்பார்க்கும் போது சிரிப்பு வருகிறதுஎழுத்தில் கொம்பை நீக்குவதிலாவது காரணம் தெரிகிறது. தவறியும் கூட என்னால் அய்யா என்று எழுத வராது என் பதிவு சுய தம்பட்டம் கண்ணில் படவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.
      எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய கருத்துகளை முன்வைத்த பின்னரும் கூட பெரியாராலும் இந்த கொம்புகளை விட்டு எழுத முடியவில்லை .
      பழக்கத்தில் வந்ததை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது.
      லை ளை போன்ற எழுத்துகள் கொம்பிட்டு எழுதப் பட்டதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

      அச்சில் அவற்றிற்காகத் தனித்த எழுத்துருக்களை அமைக்க வேணடிய நிலையில் பெரியார் கொண்டு வந்த மாற்றம் நடைமுறைக்குகந்ததுதான்.

      தாங்கள் ஐயா என்று எழுதுவது மிகச் சரியானது என்பது எனது கருத்து.

      பெரியாரின் கருத்தன்று.

      நன்றி.

      Delete
  6. ஐயா! நீங்கள் சொல்வதை வழிமொழிகின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      நான் சொல்வதையா வழிமொழிகிறீர்கள் அல்லது ஜி.எம்.பி ஐயா சொல்வதையா?

      வருகைக்கும் கருத்திற்கும மிக்க நன்றி

      Delete
    2. ஐயா என்று நீங்கள் சொல்வதைத்தான் வழிமொழிகிறேன்.

      Delete
  7. கவிஞர் ஐயா என் சிற்றறிவுக்கு ஐயா 80தே சரியென்று 8கிறது.
    ஐயம் 80தை அய்யம் என்றால் ? ஏற்பதற்காகுமா ? 80ம் ஐயமாகிறதே ஐயா.
    இதில் ஐயம் உண்டெனில் தெளிவு படுத்துக ஐயா

    தமிழ் மணத்திற்காக மூன்று ஐயா.

    எல்லாம் சரி ஐயா அதென்ன ? ‘’உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று வெளியில் நிற்பது முறையா ? ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சிற்றறிவிற்குப் புலப்பட்டால் சரி நண்பரே!

      அதையே ஏற்றுக் கொள்ளுங்கள்.

      உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றால் அதற்குப் பொருள், என் தமிழ் இல்லை என்பதன்று நண்பரே..!



      உங்களிடம் இருக்கும் திறமையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்பது போன்ற ஆட்சி அது.

      பதிவின் இறுதியல் சொல்லி இருப்பேனே,

      நம் தமிழை நாம் தெரிந்து கோள்வோம் என்று..!

      நான் எப்போதும் உள்ளேதான் நிற்கிறேன் நண்பரே!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  8. ***எனவே ஐயா என்று எழுதுவதே ஒரிஜினல்.***

    நுனிப்புல் மேய்ந்ததில் பார்த்தது/கற்றது இது. இன்னொரு முறை வாசிக்கிறேன். நன்றி விஜு சார்! :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாசிப்பிற்கு நன்றி ஐயா:)

      Delete
  9. நீண்ட நாள் குழப்பத்திற்கு விடை அளித்துள்ளீர்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  10. ஐயா என்பதற்கே என் வாக்கு. :)
    ஐ எவ்ளோ அழகா இருக்கு..அத எப்படி விட முடியும்? மைதிலி சொல்ற மாதிரி தட்டச்சு, பிரிண்டிங் என்பதற்காகச் சீர்திருத்தம் வந்தா பரவாயில்லை..அது கூட நாம ஏன் நம் எழுத்தை மாற்றனும்? தொழில் நுட்பத்தை நம் மொழிக்கு ஏற்றார் போல செய்ய முடியாதா என்று தோன்றுகிறது. ல, ள, ன என்பதற்கு மேல் கொம்பு போட்டு எழுதுவதும், கீழே வளைத்து எழுதுவதும் என்று முந்தைய எழுத்துகளைச் சிறுவயதில் தாத்தா எழுதிப் பார்த்த எனக்கு, அவை பரிச்சயமாக இருந்தது..எதற்கு இப்படி மாற்றுகிறார்கள் என்றே தோன்றியது.
    கை கய் ஆக வேண்டாம் என்பதே என் கருத்து..எழுத்துச் சீர்திருத்தத்தை விட்டுவிட்டு மொழியை இன்றைய தொழில்நுட்பத்தில் எங்கும் கொண்டு செல்ல உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எதற்கு இந்த சீர்திருத்தம் என்ற புரியாமை கூட காரணமாய் இருக்கலாம்..கற்றுக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன். நன்றி அண்ணா.
    சந்தியக்கரம் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்..இதெல்லாம் தெரியவில்லையே, தமிழ் தானே படித்தேன் கல்லூரி வரையிலும்!! :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தே என் கருத்தும் சகோதரி...!

      சந்தியக்கரம் தெரியாவிட்டால் என்ன சங்க இலக்கியம் தெரிந்திருக்கிறதே :)

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி

      Delete
  11. ஐயா, அய்யா என்பதில் பெரிய குழப்பமில்லை. ஆனால் லை, ளை என்பதை நான் படிக்கும் காலத்தில் கொம்பு போட்டுத் தான் எழுதினேன்.
    க+ஐ= கை, ம+ஐ=மை என எல்லா எழுத்துக்களையும் எழுதும் நாம், ல வுக்கும் ள வுக்கு மட்டும் ஏன் கொம்பு போட வேண்டும்? அதையும் லை, ளை என்றே எழுதலாம் என்ற பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதும் புரிதலும் மிகவும் எளிதாயிற்று.
    எ என்பதன் கீழே கோடு போட்டு ஏ என்று வீரமாமுனிவர் மாற்றினார் என்று படித்திருக்கிறேன். உண்மையா?
    எனவே மொழியை எளிதாகக் கற்றுக் கொள்ளப் பயன்படுகிறது என்பதால் பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரிக்கிறேன். சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் விரைவிலேயே கொம்பை நீக்கி எழுதப் பழகிக் கொண்டேன்.
    ஐயா, அய்யா இரண்டுமே சரி என்று தொல்காப்பியரே கூறியிருக்கிறார் என்பது நான் அறியாதது.
    சந்தியக்கரம் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. அறிந்து கொள்ள ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. “““““““க+ஐ= கை, ம+ஐ=மை என எல்லா எழுத்துக்களையும் எழுதும் நாம், ல வுக்கும் ள வுக்கு மட்டும் ஏன் கொம்பு போட வேண்டும்?“““““““““

      உங்கள் கேள்விக்கான விடை அடுத்த பதிவில்.

      தொடர்கின்றமைக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  12. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க கொண்டு வரப் பட்ட சீர்திருத்தம் இது ,தொடர்வது நல்லதுதானே ?

    பகவான்ஜி என்பதை ப்அ க்அ வ்ஆ ன் ச்இ என்றும் எழுதி எண்ணிக்கையைக் குறைக்கலாம் ,இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்று படுகிறது :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஆஹா...

      எதுதான் சாத்தியமில்லை பகவான்ஜி..!

      உயிர்மெய் எழுத்துகளும் வேண்டாம் என்னும் உங்களின் கருத்தில் முக்கியமான தத்துவ சிந்தனை இருப்பதாகப் படுகிதே!

      உயிரும் மெய்யும் சேர்வதனால்தானே இத்தனைச் சிக்கலும்...!

      இரண்டும் தனித்தனியே இருந்துவிடட்டும்..என்கிறீர்களோ :)

      பின் எங்கள் சிரிப்பிற்கு எங்கே போவதாம்?

      அது இப்போதைக்குச் சாத்தியப்படவே வேண்டாம்.!!

      நன்றி

      Delete
  13. வணக்கம்
    ஐயா.
    பல நாள் கேட்ட வினாவுக்கு இன்றுதான் விடைகிடைத்து விட்டது... போலிஎது .ஒரிஜினல் எது என்பதை அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல... விளக்கம் அருமை மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் தங்களின் பதிவை த.ம10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. திரு.ரூபன்.

      நீங்கள் என் பதிவொன்றின் பின்னூட்டத்தில் கேட்ட கேள்விக்கு இவ்வளவு விரிவாக இல்லாவிடினும் அப்பொழுதே பதிலிட்டுவிட்டேனே!
      ..!
      பார்க்கவில்லையோ..!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி

      Delete

  14. வணக்கம்!

    ஐயா எனும்ஆய்வை ஆழ்ந்து படித்திட்டேன்!
    மையாய் உளமனம் மாறிடுமே! - தையாய்த்
    தழைத்துத் தமிழோங்க நாளும் அமுதைக்
    குழைத்துக் கொடுப்பீர் குளிர்ந்து!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்!

      ஐயென்றால் ஐய மருந்தலைவ னைந்தாகும்
      ஐயே வியப்பா மழகன்றோ? - ஐநீங்கக்
      கேட்டார் விடையிறுத்தேன்! கேளாரும் கேட்குமும்
      வெட்பமொழி வெண்பா ‘விருந்து‘!“

      நன்றி ஐயா!

      Delete
  15. ஐயா என்பதே எளிதாகப் படுவதுபோல் தோன்றுகிறது. 1989-92இல் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தரின் (முனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள்) நேர்முக உதவியாளராக நான் இருந்தேன். தட்டச்சில் நான் அவ்வப்போது தவறு செய்வதுண்டு. அப்போது அவர் எழுதுவது எளிதாகவும் படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் அமைந்தால் போதுமானது என்றும்,அதற்காக அதிக முயற்சி எடுத்து விவாதிக்கும் பொருளிலிலிருந்து விலகிவிடக்கூடாதென்பார். அது ஒரு நல்ல உத்தியாக எனக்குத் தெரிந்தது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் தமிழ்இலக்கணத்திலும் தொல்காப்பியத்திலும் தேர்ந்தவர்கள் அல்லர் என்ற நிலையில் அதிகத் தவறின்றி எழுதுபவர்களும் படிப்பவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினால் சரி என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      ஏனோ தமிழில் தட்டச்சுச் செய்யும் போது ஒரு தட்டலில் ஐ என்பதைக் கொண்டுவந்துவிட முடிவதாலும் எழுதும் போது ஐ என்கிற ஓர் எழுத்தைப் பயன்படுத்தினால் போதும் என்பதாலும் முயற்சி எளிமை என்று படுகிறது.

      தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் தொல்காப்பியத்தையும் பிற இலக்கண நூல்களையும் தேர்ந்திருக்க வேண்டியதில்லை ஐயா.

      அப்படி வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தம் மொழிப்பயனப்பாட்டில் ஏதேனும் ஐயம் இருக்கிறது என்று கேட்கும் போது அதைத் தீர்ப்பதற்காக நிச்சயமாய் மொழி படித்தவர்கள் தங்கள் இலக்கண நூலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு.

      பொதுவாக யாரும் தவறாக எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை.

      அது பழக்கத்தினாலும் அறியாமையாலும் நேர்கிறது.

      பழக்கத்தைச் சரிசெய்வது மாற்றுவது சற்றுக் கடினம்.

      அறியாமையை எளிதில் மாற்றிவிடலாம் என்றே நான் கருதுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  16. ஐயைய ஐகாரம் ஔகாரம் சிக்கல்தான்
    ஐயாதான் மெய்யாய் பொருந்திடும் ஐபோனால்
    வைகையும் பொய்கையும் என்னாகும் ஐயம்தான்
    கை மைதான் வார்த்தைக் கழகு!

    என்று தான் எனக்குப் படுகிறது கை (கய் )என்றும் மை (மய்) என்று எழுதும் போதும் சிரிப்பு தான் வருகிறது நீங்கள் சொல்வது போல இப்போதும் லை யை நான் கொம்பு போட்டு முன்னர் எழுதுவது போலவே தான் எழுதுகிறேன். என்னால் மாற்ற முடியவில்லை தட்டச்சும் போது வேறு வழியில்லாமல் வருவதை ஏற்றுக்கொள்கிறேன். இவற்றை எல்லாம் ரசித்துக் கொண்டே நாம் கற்றுக் கொள்ளும்படி தரும் பதிவுகளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மிக்க நன்றி! மேலும் ஆவலோடு காத்திருக்கிறேன் கற்க. தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. ஐ எத்தனை ஐ...

      நன்றி எல்லாம் என்ன அம்மா..

      நீங்கள் எல்லாம் வந்து என் எழுத்துகளைப் படித்துக் கருத்திடுவது போதாதா..?

      இதை விட எழுதுகின்றவர்களுக்கு வேறென்ன ஊக்கம் வேண்டும்.

      தங்களின் தொடர் வருகைக்கும் வெண்பாவில் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றமைக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

      Delete
  17. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. யார் சொன்னாலும் அப்படி நினைத்திட வேண்டாம் ஐயா!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..!

      சரி நீங்களாவது பின்னூட்டத்திற்கான மறுமொழியைக் காண வருவீர்களா ? :)

      நன்றி.

      Delete
  18. அன்புள்ள அய்யா,

    ‘ஐயா’ இது சரியா அய்யா ? தங்களுக்கே அய்யாமா அய்யா?
    ஐ என்பதை அய் என்று எழுதுவது போலி. அய்யா என்பது இன்றைய உயர்ந்தோர் வழக்கில் பரவலாக நம்மிடையே இருக்கிறது என்பதால் அதை ஏற்றுக்கொள்ள தொல்காப்பியர் அனுமதி அளித்துள்ள போது எழுதுவதற்கு எளிதாக இருக்கின்ற படியால் ‘அய்யா’ என்றே எழுதலாம் அய்யா!

    போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்றாலும்கூட... இதில் ஏமாறலாம் என்று சொல்கிறீர்கள்.

    நன்றி.
    த.ம. 13.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.
      “““““போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்றாலும்கூட... இதில் ஏமாறலாம் என்று சொல்கிறீர்கள்.““““““

      நான் இப்படிச் சொல்லவில்லையே ஐயா..!

      ஏமாறுவதும் ஏமாறாமல் இருப்பதும் உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது அல்லவா?

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  19. பழந்தமிழ் பிராமி எழுத்துக்களில் ஐ, ஔ ஆகிய இரு எழுத்துக்களும் கிடையாதே? பிராமி கல்வெட்டுக்களில் ஐ, ஔ இல்லை என்றே பல ஆய்வாளர்கள் சொல்லியும் எழுதியும் வருகின்றனர். வட்டெழுத்து பல்லவ எழுத்து வந்த பின்னரே ஐ, ஔக்கு தனி வரிவடிவம் வந்திருக்கின்றது என்கின்றனர்.

    பிற்காலத்தில் தான் இந்த இரு எழுத்துக்கள் வந்துள்ளன என்றால், அப்படி இருக்க தொல்காப்பியர் ஐ, ஔ என்பதை எப்படி எந்த வரிவடிவத்தில் எழுதி இருப்பார் என்ற ஐயம் எனக்கு நெடுங்காலமாக இருந்து வருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தொல்லியல் சார்ந்த பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவரும் தாங்கள் என் தளத்திற்கு வருவதும் கருத்துப் பதிவதும் மிக மிக மகிழ்வாக இருக்கிறது.
      என் வாசிப்பு மிகக்குறைந்த அளவே உள்ள தமிழ்ப்பகுதி இத்தொல்லியல்.
      தங்களின் பதிவுகள் வாயிலாக அதை விரிவு செய்கிறேன்.

      நிற்க,

      தாங்கள் பிராமி எனக்குறித்த தமிழி(?) எனுஞ் சிறப்பெழுத்தால் எழுதப்பட்ட, நமக்குக் கிடைக்கும் பானை ஓடுகள், நடுகற்கள், கல்வெட்டுகள், குயவராலும் சாதாரண மக்களாலும் தங்கள் பேச்சு வழக்கில் தாங்கள் பயன்படுத்தும் எழுத்து வழக்கில் ஆவணப் படுத்தப்பட்டதாய் நினைக்கிறேன். இது என் கருத்தே எனவே தவறிருக்கலாம். திருத்துங்கள்.

      இலக்கணத்திற்கு வழக்கையும் செய்யுளையும் ஆய்ந்து சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒன்றை விட்டுவிட்டு இன்னொன்றில் மட்டும் காலூன்றி அதனால் இயங்க முடியாது.

      தொல்காப்பியம் சுட்டும் ஐ என்பது அய் என ஆகும் இந்நூற்பா மக்கள் வழக்கில் வழங்கிய ஆட்சியைச் சுட்டுவதாகவும் இருக்கலாம். இதுபோல் மக்கள் வழக்கை அது சுட்டிச் செல்லும் இடங்களுக்கு வேறு சான்றுகளும் உள்ளன.

      எனக்குச் சட்டென நினைவுக்கு வருவது, சங்க கால மன்னன் எனப்பட்ட இரும்பொறை என்பான் பெயரைக் கல்வெட்டொன்றில் வெட்டியிருந்த சான்று,

      அங்கு அவன் இரும்பொறய் என்று குறிப்பிடப் படுவதாக இருந்தது.

      இதே சேர மன்னனைச் சங்க இலக்கியங்கள் குறிப்பாகப் பதிற்றுப் பத்து இரும்பொறை எனவே குறிப்பிடக் காண்கிறேன்.

      உலகியல் வழக்கிற்கும் இலக்கியவழக்கிற்கும் உள்ள வேறுபாடாக இதைக் காண முடியுமா என்பதை உங்களைப் போன்ற அறிஞர்கள்தான் கூற வேண்டும்.

      பிற்காலத்தில் இவ்வெழுத்துகள் வந்தன என்பதற்கும் தொல்காப்பியத் தோற்றுவாய்க்கும் உள்ள முரணை நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்.

      நிச்சயமாய்ப் பல்லவ எழுத்து வந்த பின்னரே ஐ ஔ என்னும் எழுத்துகளுக்குத் தனிவரிவடிவம் வந்திருக்கிறது என்பது ( தொல்காப்பியருக்கு முன்பே இவ்வடிவம் இருந்தது தொல்காப்பியரே முன்னோர் மொழி பொருளை ஏற்று “என்கிறார்கள்“ என்றே கூறுகிறார். ) என்று சொல்வது தொல்காப்பிய காலத்தை ஆதாரங்களுக்கு மாறாகப் பெரிதும் பின் நகர்த்திப் போகும்.

      என் பதிவில் இலக்கண ஆதாரங்களையே எடுத்துக் கொண்டேன்.

      மாறாய்க் கல்வெட்டு, தொல்லியல் போன்றவற்றையும் பார்க்க வேண்டும் என்று உணர்த்திய உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

      அதையும் படிக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் மேலான கருத்துகளுக்கும் நன்றி.

      தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

      Delete
    2. தங்களின் நீண்ட ஆழமான பின்னூட்டத்துக்கு நன்றிகள்.. தொல்காப்பியர் காலத்தில் ஐ, ஔ என்ற இரு எழுத்துக்களுக்கான வரி வடிவம் எப்படி இருந்தது என அறிய எனக்கு ஆவலே. ஆனால் தமிழ் பிராமி ( தமிழி ) எழுத்துக்களில் இது வரை அது சிக்கவில்லை, இனி மேல் கிடைத்தால் நல்லது. என்ன தான் உலக வழக்கு ( கொச்சைத் தமிழ், கொடுந்தமிழ், பேச்சுத் தமிழ் ) பானை ஓடுகள், கல்வெட்டுக்களில் இருந்தாலும், இலக்கிய வழக்கில் ஐ, ஔ ஆகியவற்றுக்கு தனி எழுத்துக்கள் இருந்திருந்தால் அது எங்காவது ஓரிரு இடத்திலாவது இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

      ஐ, ஔ ஆகிய எழுத்துக்கள் இருந்திருக்கலாம், ஆனால் தனி வரிவடிவம் இருந்திருக்காதோ என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. இப்போது கூட ஔ -க்கு தனி வரிவடிவம் கிடையாது நாம் இதனை ஒ + ள = ஔ என்றே எழுதுகின்றோம் கவனித்தீர்களா? தமிழில் மட்டுமல்ல மலையாளம், சிங்களம் ஆகிய மொழி எழுத்துக்கள் கூட இதே முறையைத் தான் பின்பற்றுகின்றன..

      அதே போல பண்டைய காலத்தில் ஐ, ஔ என்பது முறைய அஇ, அஉ ஆகிய இரு வரிவடிவங்களை இணைத்து எழுதப்பட்டு இருக்கலாம், சிலர் அய், அவ் எனவும் எழுதி இருக்கலாம். அதனால் தொல்காப்பியர் இரண்டும் சரி தான்யா போடா எனச் சொல்லி இருக்கலாம்.

      ஆங்கிலத்தில் கூட முன்பு S, F வரிவடிவம் இருந்திருக்கவில்லையாம் பெர்ணார்ட் ஷா ஒருமுறை சொன்னார் Fish என்பதை பழங்கால ஆங்கிலத்தில் Ghoti என எழுதுவார்களாம். இப்போது caption என எழுதும் போது இடயில் வரும் ti என்பதை s என ஒலிப்பது அதன் எச்சமே.

      ஆக ! ஐ, ஔ என்பதன் வரிவடிவ பரிணாமம் பிற்காலத்தில் நடந்திருந்தாலும் சில எழுத்துக்கள் முன்பே இருந்திருக்கலாம். கல்வெட்டில் இன்னுமொரு சுவையான அவதானிப்பு Dha என்ற ஒலிக்கு தமிழியில் தனி வரிவடிவம் இருந்தது. வடக்கில் இருந்து சமணர்கள் அந்த ஒலிக்கு வரிவடிவம் போட்டு, இப்போதுள்ள கிரந்த எழுத்துக்கள் போல எழுதியுள்ளனர். ஆனால் தமிழ் நெடுங்கணக்கில் அது சேராது, அது பின்னர் வழக்கொழிந்து போனது.

      அடிப்படை மொழியியல் ஆய்வின் படி திராவிட மொழிக்கான அடிப்படை உயிர் எழுத்துக்கள் பத்து தான், ஐ, ஔ என்பவை அரையுயிர்களாக கருதுகின்றனர். அதே போல, ய், வ் என்பவையும் அரையுயிர் போன்றவையாக கருதப்படுகின்றது.

      இந்த ஐ, ஔ என்பவை அதிக சுவாரஸ்யமிக்க ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஆனால் 2500 ஆண்டுக்கு முன்னரே அதைக் கவனித்து இலக்கணம் செய்த தொல்காப்பியரை வியக்காமல் இருக்க முடியவில்லை. தற்கால Linguistic அறிஞர்களுக்கு ஒப்பாக அவர் இருந்திருக்கின்றார். பெரிய ஆள் தான் ! அவரு என்பேன்.

      Delete
  20. வணக்கம்.
    தொல்காப்பியம் நூல் சான்றுடன் “ஐயா” “அய்யா” சொல் பயன்பாடு குறித்த தங்கள் கட்டுரை, என் ஐயம் நீங்கப்பெற உதவியது. மிக்க மகிழ்ச்சி.
    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  21. ****என்ன இருந்தாலும் ஐ என்கிற எழுத்தை விட்டுவிட வேண்டாமே !***

    அருமையான ஆலோசனை, ஐயா! (நான் அருமை என்று உள் மனதிலிருந்து சொல்வது அரிது! :) )

    ஆமாம், "ஐ" இல்லைனா நான் எப்படி "ஐஸ்" வைப்பது ஐயா?!

    பெரியார் சொல்லிவிட்டார் என்று உடனே "பெரியார்" வழி நடக்கிறேன் நான் என்பதும் பகுத்தறிவு இல்லையே? பெரியாருக்கே அவர் சொல்வதை அப்படியே கேட்பதும் தொடர்வதும் பிடிக்காதுனு நான் சொல்லணுமா? அதனால்தானே அவர் பகுத்தறிவுவாதி!!

    சரி, நிறுத்திக்கிறேன். வேலை கிடக்கு! :)

    ReplyDelete
  22. மிக அருமையான பதிவு. நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டொம். எளிதான முறையோ....

    ReplyDelete
  23. நீங்கள் ஏன் 'ஐயா'வை 'அய்யா' என எழுதுகிறீர்கள் என்கிற கேள்வி எனக்கு வெகு நாட்களாகவே இருந்துதான் வந்தது. நானே கேட்க நினைத்திருந்தேன். ஆனால், நீங்களே இதோ விளக்கமளித்து விட்டீர்கள்.

    பெரியார் ஐகார உயிர்மெய்யெழுத்துக்களை அச்சு வடிவத்துக்கேற்பத் திருத்தியதை அறிவேன். ஆனால் ஐ, ஔ ஆகிய எழுத்துக்களையும் அவர் புறக்கணிக்கக் கூறியது அண்மைக்காலம் வரை தெரியாதிருந்தது. சில மாதங்கள் முன் பெரியார் எதிர்ப்பாளர் ஒருவர், பெரியார் இந்த எழுத்துக்களைப் புறக்கணிக்கப் பரிந்துரைத்ததற்கும் ஏதோ ஒரு பழியான காரணத்தைக் கூறித் தமிழை அழிக்க அவர் முயன்றதாகக் குற்றஞ்சாட்டினார். உண்மையில், தமிழ்ப்பற்று மிகுந்தவரான, வரலாறு பற்றி எனக்கு ஓரீர் அரிய தகவல்களைப் பகிர்ந்த அவரே பெரியாரைப் பழித்ததால் "நீங்களுமா இப்படி" என்று கேட்டுவிட்டு அத்துடன் விட்டுவிட்டேன். அவருடைய குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லவில்லை; எனக்குப் பதில் தெரியாது என்பதும் முதன்மைக் காரணம். இப்பொழுது தாங்கள் கூறித்தான் தொல்காப்பியரே இதைச் சரியென்று கூறியிருப்பதை அறிகிறேன். பெரியார் பெரியாரே! இந்தப் பதிவை அந்த நண்பருக்குக் காட்டுவேன்.

    ஆனால் பெரியார், ஓரீர் எழுத்துகளை மட்டும், அதுவும் அச்சு வடிவத்தின் நலன் கருதி மாற்றினார். ஆனால் இன்று?... தமிழ் எழுத்துக்களின் அடிப்படை வடிவத்தையே மாற்றப் பலரும் பரிந்துரைக்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால், அப்படிப் பரிந்துரைப்பவர்கள் எல்லோருமே தமிழின் பால் அளவிட முடியாத பற்றுடையவர்கள்! தமிழ் அடுத்த தலைமுறைக்குச் செல்லாமல் அழிந்து விடுமோ என்கிற அச்சத்தினால் ஏதேதோ என்னென்னவோ சிந்தித்து எழுத்து வடிவத்தை முற்றிலும் மாற்றப் பரிந்துரைக்கிறார்கள். கேட்டால், பெரியாரை எடுத்துகாட்டாகக் கூறுகிறார்கள். பெரியார் காலம் வேறு, நம் காலம் வேறு. அன்று, தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் கட்டாயம் தமிழ் தெரிந்தாக வேண்டும் என்கிற சமூகச் சூழல் இருந்தது. ஆனால், இன்றைக்கு, தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமலே எந்தவித இடையறும் இன்றி வாழக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டு விட்டது. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ் எழுத்துமுறையை முற்றிலுமாக மாற்றினால், தற்பொழுதைய தலைமுறையினரிடமிருந்து தமிழ் அயல்பட்டுவிடும். தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் எனும் கட்டாயம் இல்லாததால், புதிய வரிவடிவைக் கற்றுக்கொள்ள யாரும் முன்வராமல் தமிழ் இந்தத் தலைமுறையின் பயன்பாட்டிலிருந்து அகன்று போகும். இந்த எளிய ஏரணம் புரியாமல் ஆனானப்பட்ட ஜெயமோகன் முதல் மதன் கார்கி வரை அனைவரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பெரியாரைச் சுட்டிக்காட்டிப் பரிந்துரைப்பது வியப்பளிகிறது! வேதனை தருகிறது!

    பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் விரிவான கருத்திற்கும் வேதனையைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி ஐயா...!

      நானும் இக்கருத்துடையவனே!

      நன்றி.

      Delete
  24. ஐ.ஒள ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்


    சந்தியக்கரம்

    சந்தியக்கரம்

    அகர இகரம் ஏகாரம் ஆகும்.

    அகர உகரம் ஓகாரம் ஆகும்.

    இகார உகாரம் என்னும் இவற்றோடு

    ஆகாரம் ஐ ஒள ஆகலும் உரித்தே.

    இவ்வுரைச் சூத்திரங்களால் ஈரெழுத்தாகிய சந்தியக்கரம் என்றும்
    ஓரெழுத்தாகிய ஏகாக்கரம் என்றும் அறிக”
    கூகுள் தேடலில் கிடைத்தது.
    ஐயா என்றழைப்பது தான் சிறப்பு என்று எங்கோ படித்த நினைவு. கற்கும் நிலையில் இருக்கும் எனக்கு சரியான பகிர்வுகள் . நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. வடமொழி சந்தியக்கரமும் இதுவும் வேறானது .

      வேறொரு பதிவில் காணலாம்.

      Delete
  25. இலக்கணப்போலி என்று நன்னூல் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்திலும் உண்டு.
    இந்த முறைமையை வடநூலார் சந்தியக்கரம் என்பர்.
    சொல்லில் ஒரு எழுத்து இருக்குமிடத்தில் மற்றொரு எழுத்து மயங்குகிறது. இதனைப் போலி என்கிறோம்
    அ ஐ மயக்கம், ந ஞ மயக்கம்.
    மொழியின் இறுதியில் வரும் இந்த எழுத்துக்கள் மயங்கும். நன்னூல் இதனைப் பொதுப்படக் கூறினாலும் வருமொழி உயிர்முதல் ஆயின் மயங்கும்.
    ஐகாரத்தை முதலெழுத்தாக உடைய நகரமும், யகர ஒற்றை அடுத்து வரும் நகரமும் ஞகரமாக மயங்கும்.
    தொல்காப்பிய நூற்பா
    மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
    னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
    புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. –
    இது மயங்காது என்கிறார்.
    ன் என முடியும் 9 வார்தைதைகள் ம என மயங்காது என்று.
    அய்யா எனக்கு தெரிந்தவரையில்,தாங்கள் சொல்வதை கற்க நிற்கிறேன்.




    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்னிடம் கற்பதா...?!

      இதுதானே வேண்டாம் என்பது..!

      போலி என்பதும் சந்தியக்கரம் என்பது ம் வேறானது.

      காண்போம் அம்மா!

      நன்றி.

      Delete
  26. இப்பதிவைத் தாமதமாகவே பார்த்தேன். எனது குறிப்பு - நன்றி அய்யா!

    ReplyDelete
  27. நல்ல பகிர்வு

    ReplyDelete
  28. University of Madras Lexicon
    சந்தியக்கரம்
    canti-y-akkaram n. சந்தி¹ +. Diphthongs, viz., `ē', `ai', `ō' and`au'; இரண்டு உயிரெழுத்துக்கள் கூடி அமைவனவாகியஏ, ஐ, ஓ, ஔ என்னும் எழுத்துக்கள். (பி. வி 5, உரை )

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete