Sunday 10 May 2015

காத்திருப்பின் நீட்சி...!
நாடகங்கள் தொடர்வதுவும் யாருமறி யாமல்
    நாம்நடித்துக் கொள்வதுவும் மேடைகளும் இன்றி
வீடகத்தும் வெளிப்புறத்தும் வீதிநெடு கெங்கும்
     விரட்டுகின்ற ஞாபகத்தின் வேதனைக ளோடு
சாடுகின்ற போதினிலும் சூடுமறி யாமல்
     சற்றுசிரித் திட்டுவருஞ் சங்கடங்கள்  இந்த
ஏடறியா எழுத்தறியா நீயுமறி யாயோ?
     ஏனுணராப் பாவனைகள்…? ஏற்றிடுத லென்று..?

காத்திருக்கச் சொல்லிவிட்டாய்! கால்கடுக்க நின்றேன்.
     காதவழி பார்த்திருந்தேன்.. கண்களிமைக் காமல்!
பூத்திருக்கும் பெருவெளியில் புதைகுழிகள் நூறு..!
     புல்வெளியில் வாய்புதைத்துப் பொழுதுறங்கும் நேரம்!
தீத்துகளாய் உடலழுது தேடுகின்ற போதும்
    ‘தேற்றவரு வாள்பொறு‘உன் தேவதை’யும் என்றேன்.
நீத்தொதுக்கி நீவிலக்கிப் போனதென்ன கோலம்?
     நீர்விழிகள் யாரறிவார்…? நீயறித லன்றி..?

பூட்டுகளால் புலனிறுக்கிப்  பாதைகளை மூடிப்
    பூதங்கள் புலம்பியழப் பெருமிதங்க ளோடு
கூட்டினுளே சிறகறுத்துக் கூவிடுமென் பாடல்
    கேட்டுவந்தோ மீட்டுகிறாய்.! கேவல்‘அழ கென்று..?
வேட்டையிலே நான்பலியாய்... விட்டுவிட்டுச் சென்றாய்!
    வேகுமுயிர் சாகவுமுன் தாகம்பெரி தாகக்
காட்டவறி யாக்கனவு கொண்டிமைகள் மூடும்!
    கவிதையதை அடித்துனது காலடியில் போடும்!

போய்வருக! புன்னகையின் போர்க்களத்தில் தோற்றுன்
    பேர்முழங்கி யேமகிழ்ந்து போகுகஎன் ஆவி!
காய்ந்திறுகும் மனவெளியைக் கீறியெழும் முள்ளின்
    காயமறி யாவலிகள்! கால்கடுக்க நிற்பேன்!
நோய்பெரிது! என்மருந்து நீயுணர வேண்டாம்!
    நோவினிது.. நீதருதல் நித்தமினி தாக,
ஓய்ந்திருக்கும் என்றேனும் நீவருவாய் என்றே
    உயிர்த்திருக்கும் தருணம்வரை என்விழிகள் பார்க்கும்!

பட உதவி- நன்றி https://encrypted-tbn3.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

34 comments:

 1. தமிழ் மணம் 1 வருகிறேன்.

  ReplyDelete
 2. ஓய்ந்திருக்கும் என்றேனும் நீவருவாய் என்றே
  உயிர்த்திருக்கும் தருணம்வரை என்விழிகள் பார்க்கும்!

  அருமை அருமை நண்பரே
  அன்னையர் தின வாழ்த்துக்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ரசனைக்கு நன்றி கரந்தையாரே!

   Delete
 3. புறநானூற்றுப் பாடல் போலிருக்கும் இக்கவிதையின் கருவான காத்திருப்பு அனைவருக்கும் பிடித்த ஒன்றே.

  ReplyDelete
 4. வணக்கம்
  ஐயா

  கருத்து செறிவான பாடல்... சொல்லிய கருத்து ஆழ்மனதில் மிக நேர்த்தியாக பதிந்துள்ளது... பகிர்வுக்கு நன்றி த.ம6
  இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. ஓய்ந்திருக்கும் என்றேனும் நீ வருவாய் என்றே
  உயிர்த்திருக்கும் தருணம்வரை என் விழிகள் பார்க்கும்

  கடைசி இரண்டு வரிகள் விழிகள் கணத்தன கவிஞரே....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!

   Delete
 6. எதுவும் கடந்து போகும்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் டிடி சார்....
   கடந்து போயிற்று :)

   நன்றி.

   Delete
 7. காதலி ,வார்த்தை ஒன்று மெல்ல சொன்னால் ,நோய் பறந்து போகுமோ தன்னால் :)

  ReplyDelete
  Replies
  1. சொல்லிய பிறகு சொல்கிறேன் பகவானே..
   இருக்கிறதா பறக்கிறதா என :)

   நன்றி.

   Delete
 8. காத்திருப்பின் நீட்சி...! காதலின் காட்சி...!
  பூத்திருப்பின் ஆட்சி...! வந்துவிட்டாள் மீட்சி...!
  அவள் வந்துவிட்டாள்...! அவள் வந்துவிட்டாள்...!
  உயிர்த்திருக்கும் தருணம்... உயிர்த்தெழுவாய்...!

  அருமை!
  த.ம. 9.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும் நன்றி ஐயா!

   Delete
 9. காத்து இருத்தல் என்பது சங்ககாலம் மட்டும் இல்லை. இன்றுவரை காதலில் நடக்கும் ஒன்று.காய்ந்திறுகும் மனவெளியைக் கீறியெழும் முள்ளின்
  காயமறி யாவலிகள்! கால்கடுக்க நிற்பேன்!
  நோய்பெரிது! என்மருந்து நீயுணர வேண்டாம்!
  நோவினிது.. நீதருதல் நித்தமினி தாக,
  அந்த மருந்து உயிர் மருந்து ,,,,,,,,,,,,,,,
  காலம் கடந்தேனும் காதல் கைகூடும் என்று.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் :)

   நன்றி.

   Delete
 10. ** காட்டவறி யாக்கனவு கொண்டிமைகள் மூடும்!
  கவிதையதை அடித்துனது காலடியில் போடும்!***
  உங்கள் கவிதைகள் படிப்பது கசல் பாடல்கள் கேட்பதை போல சொல்லதெரியாத சுகம், ஊணுயிர் மீட்டிச்செல்லும் இந்த ரசவாதம் எங்கு கற்றீர்கள் அண்ணா! வாஹ்....வாஹ்ரே வாஹ்!!

  ReplyDelete
  Replies
  1. அது சரி சரி....
   ரசவாதம் மாயாவதாம்.......

   இதெல்லாம் உண்மையின் முன் தோற்றுப் போய் அநேக நாட்களாகிவிடவிலலையா...? :)

   நீங்கள் அறியாததா..?!

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 11. காதல் வந்த பொழுது
  காத்திருத்தல் விதியே
  கனிய வேண்டிபொருத்திருத்தல்
  காலம் இனிமையாக்கும்.

  நன்று சகோ..தம +1

  ReplyDelete
  Replies
  1. இனிமையும் கசப்பும் காலத்தின் கைகளில்தான் எப்போதும்...!!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

   Delete
 12. அய்யா,
  வணக்கம்
  தோண்டவரும் மணல்ஊற்றில் இனியமுதம் பாயும்
  தொல்லையெல்லாம் வெம்பனியாய்த் துவண்டோடி மாயும்
  வேண்டவரும் வரமணைத்தும் விருந்தென்று கிட்டும்
  வெல்லமுடன் தீங்கனியும் சுவைபலவும் கூட்டும்
  காண்பவரும் கண்டிங்கு களிப்புற்று போவர்
  காலமூன்றும் கண்களிலே வைத்துன்னை ஏற்பர்.
  தீண்டிவரும் வான்திங்கள் மருந்திட்டு நாணும்
  தித்திக்க அவள்வருவாள் முகமலர்ந்தே காணும்.

  படிக்கத் தோன்றியதை உங்கள் கவி சாயலில்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு எழுதும் உங்களின் பதிவில் புதிதாய் எழுதும் எழுதாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

   உங்கள் விருத்தங்களின் முன் நான் இப்படியெல்லாம் எழுத முடியவில்லையே என்ற வருத்தம்தான்..!

   நன்றி.

   Delete
 13. நாவிலொரு சோலை நறும்பூக்கள் வீசுகின்ற
  காவியம் போன்றே கவிதைகளைக் - கேவி
  அழுநெஞ்சோ டென்னில் அணைக்கின்றேன் உண்மை
  தழுவும்நீ பாடும் தமிழ்!

  தேடக் கிடையாத் திரவியமே மனப்பாரம்
  ஓடக் கிடைத்த ஒளிர்நிலவே - பாடத்தான்
  இன்பம் உனையன்றி இவ்வுலகில் வேறுண்டோ?
  அன்பெரிய நிற்கும் அகல்!

  ஆஹா என்னவென்று சொல்வேன்
  கவியழகில் சொக்கி கண்ணீரில் மூழ்கி விட்டேன்
  தவிக்கிறேன் மேலும் கேட்க தாரும் இனிய கவிகள். பதிவுக்கு நன்றி !
  வாழ்க வளமுடன் ...!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வாருங்கள்.....

   இப்படி வெண்பாவிலும் விருத்தத்திலும் எல்லாம் வெளுத்து வாங்க ஆரம்பித்தால் பின் நாங்கள் எல்லாம் என்ன செய்ய....!!!!!

   தொடருங்கள்.

   இதுபோலத் தனியே எழுதி பதிவிட்டால் அது நன்றாக இருக்குமே...!!!


   காத்திருக்கிறேன்.

   நன்றி.

   Delete
 14. நன்றி திரு. தளிர். சுரேஷ் அவர்களே.

  ReplyDelete
 15. பூத்திருக்கும் பெருவெளியில் புதைகுழிகள் நூறு.....

  ReplyDelete
 16. கூட்டிவிடும் வாசலிலே கோலமிடப் பிள்ளை
  .........கொடுக்காத இறைவனையே கும்பிடுதல் போல
  வாட்டிவிடும் வலியெல்லாம் வழங்கிவிட்ட பெண்ணை
  .........வி(வ)ருத்தத்தில் பாடுவதால் விளைந்திடுமோ லாபம்
  காட்டிலுதிர் காய்கனிகள் இலைமரங்கள் எல்லாம்
  .........காட்டுவளம் ஆக்கிடுதல் காலத்தின் சேர்க்கை
  நாட்டிலிது போல்வழ்வும் நடைமுறையை மாற்றும்
  .........நாமிறந்து போய்விடினும் நகலிருந்து போற்றும் !


  காலம் தாழ்த்திய கருத்துத்தான் பொறுத்தருள்க பாவலரே !

  வார்த்தைகளில் விளையாட உங்களைப்போல் யாரும் இல்லை
  அத்தனை வரிகளும் அழகாய் இருக்கிறது வாழ்த்துக்கள் கவிஞரே
  வாழ்க வளமுடன் !
  தம +1

  ReplyDelete
 17. “காய்ந்திறுகும் மனவெளியைக் கீறியெழும் முள்ளின்
  காயமறி யாவலிகள்!”

  காத்திருத்தலின் வலியை வெளிப்படுத்தும் மனதைத் தொட்ட வரிகள்.

  ReplyDelete


 18. வணக்கம்!

  காத்திருக்கும் எண்சீர்க் கவிதையிலே தேனேந்திப்
  பூத்திருக்கும் காதல் பொழில்!

  ReplyDelete

 19. வணக்கம்!

  காத்திருக்கும் பாட்டுக்குள் கன்னல் தமிழ்ப்பூக்கள்
  பூத்திருக்கும் நன்றே பொலிந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete