Friday, 8 May 2015

காமத்தின் வரைவிலக்கணம்.


காமம் என்னும் உணர்வு எப்படிப்பட்டது என்று கேட்டால் அதனை எப்படிச் சொல்ல முடியும்? மொழியினால் கட்புலனாகாத உணர்ந்தறியக் கூடிய ஒன்றை எந்த அளவிற்குக் காட்சிப்படுத்த முடியும்…? நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் நம் சங்க அக இலக்கியங்கள் அதனைக் காட்டப் பெரிதும் முயன்றிருக்கின்றன. இந்தப் பதிவு காமத்தைச் சங்கப் புலவர்கள் சொற்களால் எவ்வாறு வரையறுக்க முயன்றிருக்கிறார்கள் என்பதை ஒட்டிய சங்க இலக்கியப் பதிவுகளின் தொடர்ச்சியாய் அமைகிறது.


காமம் என்றால் அன்று காதலைக் குறித்தது என முன் பதிவுகளில் பார்த்தோம். அது வந்தால் உண்ணத்தோன்றாது…உறங்கத்தோன்றாது… மனதிற்குப் பிடித்தவரையே நினைத்திருக்கத் தோன்றும் என்றெல்லாம் அதன் நிலைகளை விளக்க முடியும்.

இன்னொருபுறம் வரையறை அல்லது வரைவிலக்கணம் என்பது உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. கறார்த்தனமானது. பிதகோரஸ் தேற்றத்தை வரையறை செய்யும்போதோ அல்லது பாஸ்கலின் விதியை விளக்கும் இடத்திலோ அலங்காரச் சொற்களுக்கோ,  உணர்ச்சிக்கோ எந்த வேலையும் இல்லை.

அடுத்ததாய் வரைவிலக்கணம், என்பது முற்றிலும் உணர்ச்சி சாராதது. முற்றிலும் அறிவுசார்ந்த, வறட்சியும் கட்டுப்பாடும் கொண்ட மொழியால் ஆனது.

ஆனால் கட்புலனாகாத உணர்ச்சி சார்ந்த ஒன்றை  வரையறுக்கும் போது செழுமையும் சுதந்திரமும் கொண்ட நுட்பமான மொழியின் தேவை இருக்கிறது. சங்கமொழி மரபு அதனைப் புரிந்து கொண்டிருக்கிறது.

அதனால் அது ஒரு காணப்படும் காட்சியின் ஊடாக, அதை வாசிப்பவன் மனதில் இன்னொரு உணர்ச்சியை ஏற்படுத்தி  அந்த அனுபவத்தைப் புலப்படுத்த முயல்கிறது. இலக்கிய இன்பம் என்றெல்லாம் நாம் சொல்வது இவை போன்ற முயற்சிகளைத்தான்.

தமிழ்ச் சங்க மரபு அதனை முயற்சித்திருக்கிறது. நாம் இதற்கு முன் பார்த்த , நீர்ப் பொழிவால், உடையும் விளிம்பில் இருக்கின்ற கரை என்றது இதுபோன்ற கருத்து நிலையிலான ஒன்றின்  காட்சிப்படுத்தல் தான்.
.
பொதுவாக நாம் இதுவரை கண்ட சங்க இலக்கியப் பதிவுகள் பெரிதும் யானையை, அதிலும் குறிப்பாக ஆண் யானையை மையம் கொண்டிருப்பதை இப்பதிவினைத் தொடர்பவர்கள் அவதானித்திருக்கலாம்.

பழங்காலத்தில் “யானை நூல்” என்றொரு நூல் இருந்தது. நாம் இழந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இலக்கியத்தின் வாயிலாக, நாம் யானைகளைப் பற்றிய பண்டைய மக்களின் புரிதல் பலவற்றை மீட்டெடுக்க இயலும்.

யானைகள் தாய்வழிச் சமூக அமைப்புக் கொண்டவை. அவை கூட்டம் கூட்டமாகவே  வசிப்பன.

கூட்டத்திலிருந்து விலகும் யானை ஆண் யானையாகவே இருக்கும்.

விலகுவதற்குப் பொதுவான காரணம் அதற்குத் தோன்றும் மதம்.

பொதுவாக இம்மதம் அதன் பருவச்சுழற்சியில் ஏற்படும் பாலுணர்வு மிகுபடும் போது தோன்றுகிறது. அந்நிலையில் தன் கூட்டத்தில் இருந்து அது பிரிந்து செல்கிறது.

இதைத் தூண்டும் இன்னொரு காரணியாகக் குளகு என்னும் செடியைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதைத் தின்றால் சில தருணத்தில் பருவம் வந்த ஆண் யானைக்கு மதம் இளகும் என்பதைப் பதிவு செய்து வைத்திருக்கின்றன.

இந்தக் குளகு என்பதற்குத் தழை உணவு என்று பொதுவாகப் பொருள்சொல்கின்றனர் நம் உரையாசிரியர்கள்.

இது, அதிமதுரம் என்னும் செடியைக் குறிப்பது என்னும் பார்வையும் உண்டு. உறுதிப்படுத்தப்படவில்லை.

குறிப்பிட்ட பருவத்தில் ஓர் யானை, இந்தக் குளகைத் தப்பித்தவறித் தின்றுவிட்டால் அதற்கு  மதம் பிடித்துவிடுகிறது.

சென்ற பதிவில் தோழனின் அறிவுரையைப் பார்த்திருந்தால் இந்தத் தொடர்ச்சி புரிந்திடச் சிரமம் இருக்காது.

அதில் காதல் வசப்பட்டவனின்  தோழன், “உன் காதல் உன் நிலையைச் சீரழித்துவிடும், பெரியவர்கள் உன்மேல் கொண்ட மதிப்பைக் கெடுத்துவிடும் அதனால் காதலை விட்டொழி!” என்று சொல்வான்.

அதற்குக் காதல் வசப்பட்ட தலைவன் இந்தக் குளகைத் தின்று மதம் கொண்ட யானையை எடுத்துக்காட்டுகிறான். யானைகள் காட்டிலுள்ள பல்வகைப்பட்ட தாவரங்களை உண்கின்றன. அவற்றுள் குளகும் இருக்கும்.

ஆனால், உரிய பருவம் வந்த காலத்தில்,  அக்குளகை மென்றுவிடும் போது யானைக்கு மதம் பிடிக்கிறது.

இங்கு யானைக்குப் பருவம் வந்த போதும் மற்ற தழை உணவுகளை உண்ணுங்காலத்து மதம் தூண்டப்படுவதில்லை.

எனவே மதம் பிடிப்பதற்குப்  பருவம் மட்டுமே காரணம் இல்லை.

சரி… குளகுதான் அதற்குக் காரணமோ என்றால்,

மற்ற நேரங்களில் மற்ற மற்ற யானைகள் குளகை உண்ணும் போதும் அவற்றிற்கு  மதம் பிடிப்பதில்லை.

எனவே காதல் தகாது என்னும் நண்பனிடம் யானையைக் காட்டித் தலைவன் சொல்வது இதுதான்,

“ யானை கொண்ட மதத்திற்குக் காரணம், அதற்குத் தோன்றிய பருவ உணர்வு மட்டுமோ, அல்லது அது உண்ட குளகு மட்டுமோ அன்று.

உரிய பருவத்தில், மற்ற தழைகளுக்கு இடைப்பட்ட குளகினைத் தின்னும் போது யானைக்குள் இருக்கும் மதம் வெளிப்படுவதுதான் அதன்காரணம்.

காதலும் அப்படித்தான், அது, உரிய பருவம் வந்த ஒருவன், தனக்குரிய பெண்ணைக் காணும் போது மட்டும் அவனுக்கு உள்ளிருக்கும் அவ்வுணர்வு தூண்டப்பட்டு வெளிப்படும் தன்மையையும் உடையது.

எனவே காதல் கொண்டவரைக் காணும்போது எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டானே என வருந்த வேண்டியதோ, அல்லது ஏதோ தொற்று நோய் உற்றவனைக் கண்டாற் போல விலக்க வேண்டியதோ இல்லை.

அதனால் காதல் என்பது  மனதால்  மட்டும் ஏற்படுத்தப்படும் துன்பம் இல்லை. ( பிணி )
அது வெளியிலிருந்து வரும் வருத்தம் ( அணங்கு ) எனவும் கொள்ள வேண்டியதில்லை.

அது, தீயாயும் இல்லை. பனியாயும் இல்லை.

வெம்மைக்கும் தண்மைக்கும் இடைநிகர்த்ததாய்த் தோன்றும் உணர்வு, உரியவர்களைக் காணும் போது சிலர்க்கு,  சில நேரங்களில் வெளிப்படும் தன்மையை உடையது. ”

எனத் தானுற்ற உணர்வினை மொழிப்படுத்துகிறான் அவன்.

இதோ அந்தப் பாடல்,


காமம் காமம் என்ப காமம்
   
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
   
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
   
குளகுமென்று ஆள்மதம் போலப்
           
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.

குறுந்தொகை - 136
மிளைப்பெருங் கந்தன்.

இனி இந்தப் பாடலின் சொற்பொருளாராய்ச்சியும் சில நயங்களும்...

காமம் காமம் என்ப – என்னமோ காதல் காதல் என்று குறை சொல்கிறீர்களே!

காமம் அணங்கும் பிணியும் அன்று – அந்தக் காதலைக் கொண்டவர்கள் மேல் வருந்த வேண்டியதோ, அவர்கள் நோயுற்றவர்கள் எனப் பரிதாபப்பட வேண்டியதோ இல்லை.
( அணங்கு என்பது பிறரால் உண்டாகும் வருத்தம்
பிணி என்பது தன்னுக்குள் தோன்றும் நோய் எனச் சொற்பொருளை விளக்குகிறார் உ.வே.சா. )
இப்படிக் கொண்டால் அணங்கை, குளகிற்கும் பிணியை யானையின் பருவத்திற்கும் ஒப்பிடலாம்.

நுணுங்கி – நுண்மையாகி

கடுத்தலும் தணிதலும் இன்றே –  வெம்மையானதாகவும் தண்மையானதாகவும் இல்லை.

குளகு மென்று – குளகு என்னும் இலையை மென்று

ஆள் மதம் போல – அதனால் மதம் கொண்ட யானையைப் போல

காணுநர் பெறின் – தனக்கென உரியவர்களைக் கண்டால்

பாணியும் உடைத்தது – வெளிப்படவும் கூடியது அது.

( வெளிப்படவும் கூடியது என உம்மை கொடுத்துச் சொல்வதால், அது வெளிப்படாமல் மனதிற்குள்ளேயே இருக்கலாம் )

காணுநர் எனப் பன்மையில் சொல்வதால், இக்காதல் உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உணர்வு என்பது புலப்படுத்தப்படுகிறது.

சரி நம் புலவர்கள் காமத்தை வரையறுத்து விட்டார்களா…..?
இவ்வளவுதானா என்றால்,

இது தலைவனின் வரையறை….! இது முழுக்கச் சரியாகுமா..?

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் தோழன் என்ன சொல்கிறான்..?
அவன்  இதற்குச் சொல்லும் இலக்கணம் என்ன..?

தொடர்வோம்.

பின்குறிப்பு - போர்க்களங்களில் யானைக்கு வெறியூட்ட பயன்பட்டவற்றுள் ஒன்றாக இக்குளகு பயன்பட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இது குறித்து மேலும் ஆராய வேண்டும்.

நன்றி - படத்திற்கு https://encrypted-tbn1.gstatic.com/


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

43 comments:

  1. அய்யா வணக்கம்.
    குளகு என்ன போதைத் தரும் செடியா?
    சரி. அப்படி எனின் காதல் என்ன போதையா?
    காதல் உயர்ந்தோர் மாட்டு தோன்றும் என்பது,,,,,,,,
    மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முதல்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  2. கண்ணிருந்தும் குருடராய்...
    காதிருந்தும் செவிடராய்...
    வாயிருந்தும் ஊமையாக ஆக்கிவிடும் காதலின் நிலையை மதங்கொண்ட யானையுடன் ஒப்பிட்டுக் கூறுவது சரியே. சங்ககாலப் புலவர்களை எண்ணி எண்ணி வியக்கவேண்டியுள்ளது.
    போர்களத்தில் யானைகளுக்கு குளகு கொடுக்கப்படுவது போன்ற பல தகவல்களை இந்தப் பகிர்வில் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி!

      Delete
  3. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
    செவ்வி தலைப்படு வார்.
    அந்தக் காதலை இப்படியா,,,,,,,,,
    வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லா ஒரு உருண்டையும் உருளுதடா
    பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க முடியுமோ
    காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும், காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது
    குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிபூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன் தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான்.

    தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும்இளங்கோவடிகள், 'வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன் என்று குறிப்பிடுகின்றார்.
    இருப்பினும் தாங்கள் சொல்ல வரும் விதம் நல்லாதான் இருக்கு. வாழ்த்துக்கள். நன்றி.


    ReplyDelete
    Replies
    1. தனிப்பதிவிடும் அளவிற்கு நிறையச் செய்திகளைப் பின்னூட்டத்தில் தந்திருக்கிறீர்கள்...!

      உங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

      Delete
  4. காதல் உணர்வுகளை யானைக்கு ஒப்பிட்டு, ஐயடா m அவ்வுணர்வு உள்ளவர்க்கும் மதம் பிடிக்கும் இல்ல ம்...ம்..ம். அதனால் தான் பொல்லாத காதல் என்கிறார்கள் இல்லையா ம்..ம்.ம் காதல் பற்றி அழகாக கூறியுள்ளீர்கள். குளகு இலையின் மகத்துவமும் அறிந்தேன். மிக்க நன்றி !
    அதுவும் இல்லாமல் போர்க்களத்திலும் குளகு இலையை கொடுத்து துவம்சம் செய்ய விட்டிருகிறார்களா. மிக்க நன்றி ! பதிவுக்கு. மிகுதியையும் அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. காதல் பற்றிச் சங்க இலக்கியம் கூறுவதுதானே அம்மை..!

      போர்களத்தில் யானைகளுக்கு இவ்விலை கொடுக்கப்பட்டதா என இன்னும் ஆராய வேண்டும்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  5. அழகிய பாடல்! அருமையான விரிவான விளக்கம்! தொடரட்டும் தமிழ்த் தொண்டு! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  6. அய்யா,
    வணக்கம். மிளைப்பெருங் கந்தனார் இயற்றி குறுந்தொகையில் 136- வது பாடலாக இடம்பெற்ற பாடலும், அதன் பொருளும் ஓர் பதிவாக விளக்கமுற அளித்துள்ளீர்கள்.
    காமம் தீதல்ல என்றும், அது உரிய காலத்தில் உரியவளைக் கண்ணுறும் போது இயல்பாக வெளிப்படும் என்ற கருத்தில் தலைவன் தோழனுக்கு விளக்குவதாக இப்பாடல் அமைந்துள்ளது என்பதை அறியத்தந்தீர்.
    குளகு புதிய செய்தி.
    தலைவிக்கு அதை உவமையாகக் கூறிய பாங்கு குறிப்பிடத்தக்கது.
    பருவ காலத்தில் வரும் காமம் பிணியாகா.
    சங்கத் தமிழினைச் சுட்டிச் செல்லும் ஆற்றல் வியக்க வைக்கிறது.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்ச்சிக்கும் கருத்திடுகின்றமைக்கும் நன்றி சகோ!

      உங்களின் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.


      நன்றி.

      Delete
  7. அணங்கைக் குளகுக்கும், பிணியை யானையின் பருவத்துக்கும் ஒப்பிட்டது மிகப் பொருத்தம். குளகு பற்றிய செய்தி புதுமை. பாடலின் விளக்கமும் நன்று. தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளைத் தொடர்வதற்கும் பாராட்டியமைக்கும் நன்றி சகோ.

      Delete
  8. சொல்லி(ல்) தோன்றுமா மன்மதக் கலை :)

    ReplyDelete
    Replies
    1. அவனாலா குளகாலா என்பதுதானே இங்கே பிரச்சினை ? :))

      நன்றி பகவான்ஜி.

      Delete
  9. நிறைய விடயங்கள் அறிந்தேன் கவிஞரே நன்றி கூறி தமிழ்மணத்தில் நுழைக்க 7

    ReplyDelete
  10. விளக்கம் நன்று! பலரும் அறிய எளிமை இனிமை அமைந்துள்ன!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புலவர் ஐயா!

      Delete
  11. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
  12. //குளகுமென்று //
    உண்மையிலேயே ஆராய்தற்குரிய பொருள்தான் நண்பரே
    அறியா செய்திகள பலவற்றை அழகுத்தமிழில் தர தங்களால் மட்டுமே இயலும்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கு நன்றி கரந்தையாரே!

      Delete
  13. குளகு பற்றிய செய்தி அறிந்திராதவை... நன்றி...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  14. பதிவைப் படித்தபின்னர் காமத்தின்மீது ஒரு காமம் எழுந்துவிட்டது. நல்ல ஒப்புமைகள், உதாரணங்களோடு கூடிய அழகான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. காமம் செப்பாது கண்டது மொழிகின்ற நீங்கள் இப்படிச் சொல்லலாமா? :))

      நன்றி ஐயா!

      Delete
  15. அன்புள்ள அய்யா,

    உதகை செல்லும் வழியில் ஒரு யானை சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்ததை அறிந்த ஓட்டுநர் மகிழ்வுந்தை நிறுத்தி யானையைக் காட்ட எதிரே இருந்தவர்கள் ‘வண்டிய நிறுத்தாதீர்கள்’ என்றுசத்தம்போட வாகனத்தை வேகமாக எடுத்தார்... அப்பொழுதுதான் தெரிந்தது... கத்தியவர்கள் லாரியில் வந்தவர்கள் என்று... அவர்கள் அந்த யானைக்குப் பயந்து தள்ளி நின்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்தது... இரவு நெருங்கும் நேரம்... இப்பொழுதுதான் தெரிகிறது...அந்த யானை ஒரு வேளை குளகினைத் தின்று மதம் பிடித்திருக்கும்
    என்று... நல்ல வேளை தப்பித்தோம் பிழைத்தோம் என்று நகர்ந்தோம்.... !

    உரிய பருவத்தில், மற்ற தழைகளுக்கு இடைப்பட்ட குளகினைத் தின்னும் போது யானைக்குள் இருக்கும் மதம் வெளிப்படுவதுதான் அதன்காரணம் என்று

    முன்பே சொல்லியிருக்கக் கூடாதா?

    நன்றி.
    த.ம. 13.

    ReplyDelete
    Replies
    1. தங்களது உதகைப் பயணம் குறிததும் பதிவிடலாமே ஐயா.!
      எதிர் பார்க்கிறேன்.

      முன்பே சொல்லியிருக்கலாம்தான்.

      என்னை விட்டுவிட்டுப் போய்விட்டீர்கள் அல்லவா..?

      அதனால்தான் சொல்லவில்லை:)

      வருகைக்கு நன்றி ஐயா!

      Delete
  16. குளகு பற்றி இப்போதுதான் தெரிந்துக் கொண்டேன்...அழகான தமிழில் சுவைப்பட கூறிய விதம் மிக ரசனை. காதலை பற்றி இன்னும் என்னவெல்லாம் தான் இருக்கிறதோ , ஆச்சர்யமாக உள்ளது.

    போர்களத்தில் நம் முன்னோர்கள் இதை பயன்படுத்தி இருக்கலாம் என்பதை எண்ணும் போது வியப்பு ஏற்படுகிறது.

    தொடர்ந்து உங்களின் பிற பதிவுகளையும் படித்தே தீரவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. படிக்கிறேன்...நன்றி.
    வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.
      தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  17. வணக்கம்
    ஐயா
    அருமையான விளக்கம் அறியாத தகவல் தங்களின் பதிவுவழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 14
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  18. குளகு எனப்படும் தழை அடையாளம் காட்டப் படுமா. இல்லை சங்ககாலத்திய பாடலில் வரும் ஒரு தகவல் மட்டும்தானா.

    ReplyDelete
    Replies
    1. கண்டறிந்தால் நிசசயம் காட்டப்படும் ஐயா!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  19. எவ்வளவோ அறியாத செய்திகள் இருக்கின்றன....யானை,குளகு,சங்ககால இலக்கியம்..என அறியத்தருகிறீர்கள் சகோ. நன்றி தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  20. அருமையான விளக்கம் குளகு இன்றுதான் மீண்டும் கேட்கின்றேன் பள்ளிக்காலம் போனபின். தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி திரு தனிமரம்.

      Delete
  21. சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட நுட்பமான செய்திகளை விவரிக்கும் பாங்கு அருமை.

    ReplyDelete
  22. அருமையாய் விளக்கி இருக்கீங்க சங்ககாலப் பாடலுடன் இனியும் சந்தேகம் வருமா என்ன ?
    நன்றி நன்றி பாவலரே பயணம் தொடர வாழ்த்துக்கள் !
    தம +1

    ReplyDelete

  23. வணக்கம்!

    தமிழளித்த காமத்தைத் தந்தீர்! இனிக்கும்
    அமுதளித்த ஆக்கம் அது!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete