Wednesday 6 August 2014

படைப்பின் உயிர். (2 )- முறைவைப்பு.









மெய்ப்பாட்டுச் சுவைகளின் வரிசை முறைக்குக் காரணம் உள்ளது என்பது பற்றிச் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை முதலில் பார்த்து விடுவோம்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் ( எட்டே) மெய்ப்பாடென்ப“  ( தொல்-மெய்.3.)
எனத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் இந்த  வரிசை முறையில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
மனிதர்களால் மட்டுமே வெளிப்படுத்தக் கூடிய, படிப்போர் மிகவும் விரும்பக் கூடிய சுவையாக இருப்பதால் நகைச்சுவை முதலிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவைக்கு எதிரான சுவையாக இருப்பதனால் அழுகை இரண்டாம் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அழுகையோடு தொடர்புடையதாகையால் துன்பம் ( இளிவரல் ) அடுத்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் குறையால் துன்புற்று எளியவராகித் தாழ்ந்த நிலையிலேயே தம்மைவிட வலியவரைக் கண்டு வியப்பு தோன்றும் என்பதால் வியப்பு       ( மருட்கை) அடுத்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
வியப்பாகிய சுவையைச் சார்ந்தும் அச்சம் தோன்றும் என்பதால்  அச்சம் அதற்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அச்சத்திற்கு எதிரான சுவையாக இருப்பதால் பெருமிதம் ( கர்வம் ) அதற்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளது.
பெருமிதம் கொள்ளும் அளவு உயர்ந்தவனிடத்தில் கோபம் உடனடியாக வெளிப்படும் என்பதால் கோபம் ( வெகுளி ) அடுத்துக் கூறப்பட்டது.
கோபத்திற்கு எதிரான சுவையாதலால் சந்தோஷம் ( உவகை) அடுத்து வைக்கப்பட்டது.
நகையே அழுகை இளிவரல் ( துன்பம் ) மருட்கை ( வியப்பு ) அச்சம், வெகுளி ( கோபம் ) பெருமிதம்  உவகை எனத் தொல்காப்பியர் இந்த வரிசையை நினைத்து எழுதினாரோ இல்லையோ இதற்குப் பொருள் கூறிய ஆசிரியர்கள் இதனால் தான் இந்த வரிசையில் இவை வைக்கப்பட்டன என்று கூறிவிட்டார்கள். இது சரியாக இருக்கிறதா இல்லையா என்பது வேறு. ஆனால் ஒரு காலத்தில் இதைக் கற்பித்த ஆசிரியர்கள் இந்த வரிசையை நியாயப்படுத்தத்  தலையைப் புண்ணாக்கி ஆலோசித்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
சரி ! வடமொழி என்ன சொல்கிறது என்று பார்த்துவிடுவோம். இங்கே அடிக்கடி வடமொழியை ஒப்பிடுவது அதைப் பற்றித் தெரிந்ததைக் கூற வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழ் எப்படி அம்மொழியில் இருந்து வேறுபட்ட மரபை உடையது என்பதை விளக்குவதற்காகத் தான்.
வட மொழியில்
முதல் ரசமே சிருங்காரம் தான் அதாவது காமம்.
இரண்டாவது ஹாஸ்யம். ( நகை) ,
மூன்றாவது கருணை, ( தமிழ் அழுகையின் வகைகளுள் ஒன்றாக இதைக் கொள்ளும்),
நான்காவது ரௌத்திரம்,( கோபம்)  
ஐந்தாவது வீரம் ( தமிழ் பெருமிதச் சுவைக் களங்களுள் ஒன்றாக இதைக் கொள்ளும்),
ஆறாவது பயம் ,
ஏழாவது குற்சை ( அருவருப்பு. தமிழில் இச்சுவை இல்லை. )
எட்டாவது அற்புதம் ( தமிழ் இதை வியப்பின் சுவைக்களங்களுள் ஒன்றெனக் கொள்ளும், )
ஒன்பதாவதாய்ச் சாந்தம் அதாவது
எந்தவித உணர்வையும் காட்டாத நிலை. ( தமிழின் முதன்மை
மெய்ப்பாடுகளுள் இது இல்லை).
வடமொழி மரபு நாட்டிய சாத்திரத்தில் ஆடுவோர்  வெளிப்படுத்த வேண்டிய சத்துவங்களாக  இதைக் கொள்கிறது.
தொல்காப்பியம், ஒரு படைப்பினில் படைப்பாளி இதைத்  திட்டமிட்டுப் படைப்பை உருவாக்குவதன் மூலம் வாசிப்பவனிடத்து இந்த உணர்வுகளை ஏற்படுத்த முடியும் என்கிறது. அடுத்தபடியாய் அகப்பொருள் இலக்கியங்களில் வரும் பாத்திரங்களின் மெய்ப்பாட்டுக் குறிப்புகளை அறிவதன் வழியே அந்த மாந்தர்கள் கொள்ளும் மனக் குறிப்பினை வாசகன் உணர்ந்து கொண்டு ஒன்றிணையும் வாய்ப்பைத் தருகிறது.

ஒவ்வொரு மெய்ப்பாட்டினை ஏற்படுத்தவும் சில பரிசோதனைக் களங்களை அது முன்வைக்கிறது. படைப்பின் பாத்திரங்களின் மன வெளிப்பாடுகளைக் கண்டறிய இது துணைபுரிகின்ற போதும் மெய்ப்பாட்டின் இலக்கு, படிப்போர் இவ்வுணர்வுகளை அனுபவிக்கும் படிச் செய்வதே!
படைப்போன் படைப்பதைக் காண்போர் அடைதல் என்பதை இங்குப் பொருத்திப் பார்க்கலாம்.
படைப்பு
படைப்பில் பொதிந்த சுவை
படிப்போனின் அனுபவத்தில் தோன்றும் குறிப்பு
குறிப்புணர்ந்து கொள்ளும் வாசகனிடத்துத் தோன்றும் மாற்றங்கள் ( நகை. அழுகை முதலாயின )

எனவே எந்த ஒரு படைப்பாயினும் வாசகனிடம் மாற்றத்தை ஏற்படுத்தச் சுவை, சுவைக்கான குறிப்பு இந்த இரண்டும் அவசியமானதாகும்.
சுவை இருந்த போதும் அது வாசக அனுபவத்தினைத் தொடாத போது அல்லது அதனைத் தாண்டாததாக அமைந்து விடும் போது மெய்ப்பாடுகள் தோன்றுவதில்லை. புரிதலுக்காகத் திரும்பவும் திரைப்படத்திற்கே வருவோம்.
சோகக் காட்சிகளி்ல் சிலநேரங்களில் சிரிப்பு வந்துவிடுவதும், நகைச்சுவைக் காட்சியில் சீரியஸாக இருப்பதும் இதன் எதிர்மாறல் விளைவுதான்.ஒன்று படைப்பாளன் அம்முயற்சியில் வெற்றி பெற வில்லை. அல்லது காண்போன் அனுபவத்தில் அது எதிர்மறை விளைவினை ஏற்படுத்திவிட்டது. இலக்கியப் படைப்பினுக்கும் இது பொருந்துவதாகும்.
ஒரு படைப்பினில் உள்ளுறை, இறைச்சி, படிமம் போன்றவற்றை மறைமுகமாக வாசகன் ஆராய்ந்து அறியத்தக்க வகையில் குறிப்பாக அமைக்கலாம். அது சுவையாகவும் அமைந்து விடக்கூடும்.
ஆனால் தொல்காப்பியர் கருத்துப்படி, மெய்ப்பாடு என்பது, ஊகித்து உணரும் படி இல்லாமல், நேரடியாகப் படைப்பவனின் வாசிப்பனுபவத்தில் புலப்படும் படி முதன்மையானதாக, வெளிப்படையாக  இருக்க வேண்டும்.
“ உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்
 மெய்ப்படச் செய்வது மெய்ப்பா டாகும் “ ( தொல். செய். 204 )
என்கிறான் தொல்காப்பியன்.
நகைச்சுவை, அதன் வகைகள், அது தோற்றம்பெறும் களங்கள்  குறித்து அடுத்த பதிவில் காண்போம்.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

14 comments:

  1. ஒ! இவ்ளோ இருக்கா? இதெல்லாம் தெரியாம தான் இவ்ளோ நாளாய் குப்பைகொட்டுறேன்:( அருமையா விளக்கிருக்கீங்க அண்ணா!
    சென்ற என் பதிவில் உங்க அழகான பின்னூட்டத்திற்கும், அவையடக்கதிற்கும் முதலில் என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள் அண்ணா! வேலைப்பளு என்னை இத்தனை தாமதமாய் நன்றி சொல்லவைத்துவிட்டது. விரைவில் அங்கும் என் நன்றியை பதிவு செய்கிறேன்.அண்ணா தங்கையை மன்னிக்கவேண்டும். உண்மையில் படைப்பை படித்தது முதல் அதனை பாடிப்பார்க்கும் படி என் சொல்பேச்சு கேளாத என் கவிதைகள் கூச்சலிட்ட படி இருந்தன. அத்தனை உணர்ச்சிக்குவியலாய் இருந்தது தங்கள் படைப்பு. இப்போ தானே உங்க சீக்ரெட் ரெசிபி தெரிஞ்சுகிட்டேன் :) நானும் முயன்று பார்கிறேன்:) நன்றி அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!
      எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் அறிந்து நம்மில் யாரும் தமிழ் கற்றுக் கொள்வதில்லை.
      அதைப்போலத்தான் இலக்கணமும்!
      நிச்சயமாய் இது என்னுடைய சீக்ரட் ரெசிபி இல்லை.
      இதைத் தெரிந்து கொள்வது நம் படைப்புகளில் இதைப் பொருத்திப் பார்க்கவும் , பழைய இலக்கியங்களை வாசிக்கும் போது சில குறிப்புக்களைக் கொண்டு அதிலுள்ள சுவைகளை ஊகித்துணரவும் துணை செய்யலாம்.
      ஒரு படைப்பாளி ஆனபின் நம் மொழியை இன்னும் ஆழமாய் அறிதல் சுகம்.
      படைப்பாளியாகத் தம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்குத் தம் அனுபவத்தைச் சுவைபடக் கூற இவை ஒரு வேளை துணைசெய்யலாம்.
      நீங்கள் எல்லாம் ஏற்கனவே வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகென்ன?
      நன்றி!

      Delete
  2. தெளிவான விளக்கம்..மிக நன்று...காத்திருக்கின்றேன் அடுத்த பதிவிற்காய்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  3. வணக்கம் ஐயா!

    தன் உளமுணர்த்தும் உள்ளுணர்வைப் படைப்பாக்கும்போது
    அதைப் பார்ப்பவரிடமோ படிப்பவரிடமோ பிரதிபலிக்கக் காண்பது
    படைப்பாளியின் வெற்றியாகும்.

    இதுவே விமர்சனத்திற்காளாவதும் அத்தகையது தானோ?
    ஏதோ ஒரு தாக்கம் ஏற்படுத்தியமையாலேயே விமர்சிக்கப்படுகிறது எனக் கொள்ளலாமோ?
    அருமையான விளக்கம் தந்தீர்கள் ஐயா! தொடர்ந்து தாருங்கள்!..

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் என்பது குறையையோ நிறையையோ அல்லது இரண்டையுமோ சுட்டுவதுதான்.
      ஆனால் நாம் விமர்சிப்பது என்றால் குறைசொல்வது என்ற பொருளைத்தான் பெரும் பாலும் கொள்கிறோம்.
      நிச்சயமாய் தான் நினைக்கின்ற உணர்வை வாசகரிடம் கொண்டு சேர்ப்பதில் தான் படைப்பாளியின் வெற்றி இருக்கிறது. ஆனால் பல நேரங்களின் படைப்பவனின் உணர்வினைக் கடந்தும் வாசகன் சென்று விடுவது உண்டு.
      சில படைப்புகள் உணர்வின் எல்லை மீறிப்போய் வாசகன் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூடப் படித்திருக்கிறேன் ( உயிரை வாங்கும் படைப்புகள் இருப்பது வேறு! )
      சில கதைகளைக் கவிதைகளை நம் நெஞ்சோடு சுமந்தலைய,
      எத்தனை முறை படித்தாலும் அதே அனுபவம் பெற வைக்கக் கூடியதாய்ப் படைப்புகள் இருக்கும் போது பெரு வெற்றி பெறுகிறது.
      நன்றி சகோதரி!

      Delete

  4. வணக்கம்!

    அருந்தமிழ்ச் செந்தேனை அள்ளி அளித்தீா்
    பெருஞ்சுவை பாக்கள் பிழிந்து!

    தொல்காப் பியா்சொன்ன துாயமெய்ப் பாடுகள்
    ஒல்காப் புகழுடைத்தாம் ஓது!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  5. அய்யாவின் வருகைக்கும் பாடலுக்கும் நன்றிகள்!
    தாங்கள் காட்டிய எழுத்துப்பிழைகளுள் சிலவற்றைச் சரிசெய்து விட்டேன்.
    மிக்க நன்றி!

    ReplyDelete
  6. பிரமிப்பாக இருக்கிறது நண்பரே...தொடரட்டும் தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  7. தொல்காப்பியர் கருத்துப்படி, மெய்ப்பாடு என்பது, ஊகித்து உணரும் படி இல்லாமல், நேரடியாகப் படைப்பவனின் வாசிப்பனுபவத்தில் புலப்படும் படி முதன்மையானதாக, வெளிப்படையாக இருக்க வேண்டும்.//

    இப்படிப் படைக்கப்படுபவை நிச்சயமாக வெற்றி அடையும்...ஆனால் ஒரு சில படைப்புகளே அவ்வாறு நாம் அதில் ஊறிப் போய் விடும் அளவிற்கு இருக்கின்றன. நாம் வாசிக்கும் போது வாசிப்பவரின் மனநிலையையும் பொருத்துத்தானே அது அமைகின்றது? சில சமயம் நல்ல நகைச் சுவை கூட நமக்கு சிரிப்பு வரவழைப்பதில்லை....அது படைப்பாளரின் தவறல்லவே.....வாசிப்பவரின் மன நிலையில்தானே குழப்பம்......சரியா இல்லை சொல்லியது தவறோ?

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கமும் நன்றியும்!
      தங்களின் கேள்வி சரியானதுதான்! ( நேர் காணல்களின் போது பதில் அளிக்க சிரமப்படுவோர் “ உங்க கேள்வி நல்ல கேள்வி என்பது போல...........!)
      மெய்ப்பாடுகளை உணர்வதற்கும் ஒரு மனம் வேண்டும்.
      காட்சி அறிவும் கேள்வியும் ஞானமும் கொண்டவர்களாக இருப்பவர்களால் மட்டுமே இந்தச் சுவைகளைத் துய்க்க முடியும்.
      அதுவும் அவர்கள் அதை தெளிவாக உணரும் அறிவினை( மன நிலையை?)பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
      தொல்காப்பிய மெய்ப்பாட்டியலின் இறுதி நூற்பா இப்படி முடிகிறது.
      “ கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
      உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
      நன்னயப் பொருள் கோள் எண்ணருங் குரைத்தே “
      ( உணர முடியாதவன் கிட்ட நீ என்ன சொன்னாலும் அதனோட சுவை அவனுக்குப் புரியாதுப்பா! அதுனால அவன்கிட்ட போய் இதை எல்லாம் சொல்லிகிட்டு இருக்காதே - என்பதை இதன் பேச்சு வடிவ உரையாகக் கொள்ளலாம் )
      எனவே சுவையைச் சுவைக்கும் உணர்வுடையவர்களாலேயே அந்தச் சுவையைத் துய்க்க முடியும் . மற்றவர்களால் அதைத் அனுபவிக்க முடியாது என்று கூறி முடிக்கிறது தொல்காப்பியம்.
      அதே நேரம் அத்தகைய அறிவுடையவர்களிடத்து தான் ஏற்படுத்த விரும்பிய சுவையைப் படைப்பாளியால் ஏற்படுத்த இயலாதாயின் படைப்பு அங்கே தோற்று விடுகிறது. எனவே “நான் எழுதுறத புரிஞ்சுக்கிற தகுதி உங்களுக்கு இல்ல“ எனப் புரியாத விஷயங்களை எழுதிப் படைப்பாளி எல்லாரிடத்தும் பம்மாத்தும் காட்ட முடியாது.
      நன்றி!

      Delete
    2. எங்கள் கேள்விக்கு நல்ல விளக்கமான பதில் உரைத்து தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா! புரிந்து கொண்டோம்! தாங்கள் மிகவும் நேர்மையான படைப்பாளி! அதாவது, பொதுவாகப் பின்னூட்டம் இட்டு விட்டு பின்னர் அந்த வலைத் தளத்திற்கு அடுத்த பதிவு வரும் போதுதான் வருகை தருவார்கள்/கிறோம். நாம் கொடுக்கும் பதில்கள் கருத்து பகிர்தலாகத் தொடர்வதில்லை பெரும்பாலும். ஆனால் தாங்கள் தங்கள் வலைத் தளத்தில் இப்படிப்பட்டக் கருத்துப் பகிர்தலை வளர்ப்பது மிகவும் சுவையாகவும், அறிவை வளர்ப்பதாகவும் இருக்கின்றது.
      வலைத்தளங்களும் முகநூல் போன்று "லைக்" மட்டும், இல்லையென்றால் டெம்ப்ளேட் கருத்துக்கள் மட்டும் சொல்லி விட்டு போவது போன்று ஆகின்றதோ என்ற ஒரு வருத்தம் வரத்தான் செய்கின்றது.

      தாங்கள் இப்படிப் பதில் உரைத்து அதை எங்கள் வலைத்தளத்திலும் அறிவித்து தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா!

      Delete
  8. அய்யா தங்கள் பதிவுகளை என்னால் ஒருமுறை மட்டும் படிக்க,,,,,,,,,,,
    படியெடுத்து பல முறைப் படிக்க வேண்டியவை. நான் செய்வது அது.
    நன்றி.

    ReplyDelete