வெட்டும்விழி கொட்டும்கணை
ஒட்டும்‘எனை நாடும்!
விட்டும்பிடித்
திட்டும்‘எனைத் தொட்டும் சுகம்தேடும்!
பட்டும்‘உள மொட்டும்மதி
கட்டும்‘உணர் வாடும்!
கிட்டும்‘எனச்
சுட்டும்நிலை கெட்டும்‘உனைப் பாடும்!
காற்றும்கவி ஊற்றும்‘எனில்
ஆற்றும்‘அவள் ஈரம்!
போற்றும்‘ஒளிக்
கீற்றும்மனம் ஏற்றும்பெரும் பாரம்!
நேற்றில்‘இவள்
ஆற்றல்வர வேற்றின்றுயிர் தேறும்‘
மாற்றும்மனக் கூற்றோ‘இவள்
தோற்கும்‘எனின் வீரம்!
குன்றோ‘ஒளிக் குவையோ‘இவள்
நன்றோ‘இலை தீதோ?
பொன்னோ‘உடல் பூவோமனம்
என்னோஇவள் மாதோ?
கண்ணோ‘இது விண்ணோ‘இரு
மின்னல்வரத் தோதோ?
பெண்ணாம்‘இவள்
அன்பைப்பெற மண்ணில்விலை ஏதோ?
சிந்தும்‘அமு தெங்கும்பர
வுந்தேன்தமிழ்ப் பாவை!
சொந்தம்‘என வந்தாள்‘அவள்
எந்தன்‘உயிர்த் தேவை!
முந்தும்நினை வந்திப்பகல்
சிந்தித்திடும் பூவை!
இந்தப்பொழு தில்லையெனில்
சந்திப்பனே சாவை!
கண்டும்மனம் கொண்டும்‘உனை
அண்டும்நினை வெல்லாம்
உண்டும்களி மொண்டும்சுகம்
என்றும்‘அதைச் சொல்லும்!
வண்டோவிழி? கண்டால்மலர்ச்
செண்டோமுகம்? என்றே
பண்பாடிடும் ஒண்பேரழ
கென்றன்மனம் நின்றே!
தேடும்விழி தேடும்நிதம்
நாடும்‘உனை நெஞ்சம்!
வாடும்‘அது பாடும்கவி
ஏடும்‘உனைக் கெஞ்சும்!
வீடும்சுடு காடேயென
ஆடும்நினை வஞ்சும்!
மூடும்பனி யோடும்‘எனக்
கூடிக்குளிர் கொஞ்சும்!
கல்லாம்மனத் துள்ளே‘உறை
வெள்ளம்‘என நின்றாய்!
சொல்லாக்கவி யெல்லாமினும்
சொல்லித்தரு கின்றாய்!
வில்லாம்விழி முள்ளால்‘உடல்
கொல்லாதுயிர் வென்றாய்!
இல்லா‘உணர் வெல்லாம்‘எழ
உள்ளந்தனைக் கொண்டாய்!
உற்றும்‘எனை விற்றும்‘உனைக்
கற்றும்‘உயிர் வாழும்!
முற்றும்‘நினை
வற்றும்‘அது வெற்றாய்‘உனில் ஆழும்!
பற்றும்கொடி சுற்றும்கிளை
அற்றால்‘உடன் தாழும்!
குற்றம்‘எனச் சற்றே‘உனை
விட்டால்‘உயிர் வீழும்!
உன்றன்‘அருள் இன்றும்எனில்
நின்றேவர வேண்டும்!
அன்றும்‘இனி யென்றும்அது
வொன்றே‘உயிர் தீண்டும்!
என்றன்‘உணர் வுன்றன்வழி
கண்டின்றிதை மீண்டும்
நன்றே‘இனி யென்றன்‘உயிர்
உண்ணத்தர வேண்டும்!
பொங்கும்‘அழ கெங்கும்‘அவள்
தங்கும்‘இட மாகத்
தொங்கும்‘இள தெங்கின்சுவை
அங்கேமொழி யாகும்!
அங்கம்‘அதில் மங்கும்‘எனத்
திங்கள்முகம் வேகும்!
நங்கை‘இவள்
எங்காதலில் இங்கென்நினை வாகும்!
Tweet |
ஏதோ கவிதைன்னு போட்டிருக்கிங்க ...............
ReplyDeleteகவிதை எங்க சார்?
( யாரும் கேட்டிறக் கூடாதில்ல..
அதான் முந்திகிட்டேன் )
ROFL:)))
Deleteஇனியவை நாற்பது வரிகளும்..ம்ம்ம்ம்ம்ம் !
ReplyDeleteஅடுத்து இன்னா நாற்பதையும் சொல்லிவிட்டால் போகிறது பகவான்ஜி!
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
ஆஹா அருமை சார்..
ReplyDelete///உற்றும்‘எனை விற்றும்‘உனைக் கற்றும்‘உயிர் வாழும்!
ReplyDeleteமுற்றும்‘நினை வற்றும்‘அது வெற்றாய்‘உனில் ஆழும்!
பற்றும்கொடி சுற்றும்கிளை அற்றால்‘உடன் தாழும்!
குற்றம்‘எனச் சற்றே‘உனை விட்டால்‘உயிர் வீழும்!///
அருமை
நண்பரே
அருமை
அண்ணா!!!! யுரேகா ! யுரேகா! இந்த பாடல் திருப்புகழ் மெட்டில் வந்திருக்கிறது:) இப்படி விதவிதமா ஏழுதி என்னை கன்னாபின்னான்னு திட்ட வைக்காதீங்க:) ஏன்னா நான் ரொம்ப சந்தோசபட்ட அப்படிதான் திட்டுவேன்(சந்தேகம் என்றால் துளசி அண்ணாவை கேளுங்க. எப்பவும் அவங்க ரெண்டு பேரையும் பிசாசுங்கன்னு தான் சொல்வேன்)
ReplyDelete** தேடும்விழி தேடும்நிதம் நாடும்‘உனை நெஞ்சம்!
வாடும்‘அது பாடும்கவி ஏடும்‘உனைக் கெஞ்சும்!
வீடும்சுடு காடேயென ஆடும்நினை வஞ்சும்!
மூடும்பனி யோடும்‘எனக் கூடிக்குளிர் கொஞ்சும்!** செம !!!
ஆமாம் ஆமாம் விஜு ஐயா....சசோதரி அப்படித்தான் எங்களச் சொல்லும்.......அப்படி சொல்லுங்க சகோதரி! சரி நாம் மூணு பேரும் சேர்ந்து விஜு ஐயாவை "தமிழ் பிசாசே" ந்னு சொல்லிடலாமா....உங்க கட்சில நாங்களும்...அட அட அட...என்னாம்ம்ம பிச்சு உதறராரு.........நீங்க கோட் பண்ணியிருக்கற வரிகளும் ரொம்ப ரசிச்சோம்...இருங்க எங்க பின்னூட்டம் கீழ.....
Deleteஅட சகோதரி...என்னங்க இது...நாங்க ஹைலைட் பண்ணி வைச்ச வரிகள் தான் நீங்களும் போட்டுருக்கீங்க.....ஹ இதுல கூட ஒத்துமையா இந்த பிசாசுங்க உங்க கூட...
Deleteஒத்த ரசனை என்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது சகாஸ்! ( இந்த பக்கம் வந்த விசைப்பலகை கூட தமிழ் தான் பேசுது பாருங்க ஆங்கில, தமிழ் பிசாசுகளே:))))
Deleteஒத்த ரசனை என்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது சகாஸ்! ( இந்த பக்கம் வந்த விசைப்பலகை கூட தமிழ் தான் பேசுது பாருங்க ஆங்கில, தமிழ் பிசாசுகளே:))))
Deleteமுதலில் யுரேகா!
Deleteஒரு வேளை அவளின் திருப்புகழ் என்றால் சரி!
அருணகிரியின் முருகன் திருப்புகழில் இந்த வண்ணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஒரு வேளை நீங்கள் “ முத்து நிலவு இங்கு பதிந்த “ குளத்தில் விழுந்தெழுந்தால் சரியாகக் கண்டுபிடித்து யுரேகாவைச் சரியாகச் சொல்லாம்!
அடுத்து ஆங்கிலப் பிசாசு, அது ஒண்ட வந்த பிடாரி!
மெல்ல ஊர்ப்பிடாரியை விரட்டி விடாது இருக்க வேண்டும்.
வயிற்றுப் பிழைப்பிற்காக அதையும் கொண்டு அலையத்தான் வேண்டியிருக்கிறது.
அப்புறம் “ பிசாசு “ எனத்தமிழ் உலகில் புகழ்பெற்ற ஒருவர் இருக்கிறார்.
( நிஜமாவே நான் பாத்து பயந்து ( வியந்து ? ) போன பிசாசுங்க அது!)
இது கேள்வி!
அது நான் இல்லங்க!
விடையைச் சரியாகக் கண்டு பிடிச்சுச் சொல்றவங்களுக்கு ஒரு வெண்பா பரிசு!(ஏதோ நம்மால முடிஞ்சது...)
ஒ! பாத்துட்டேன். இது கம்பர் சந்தமா? இன்னும் வளரணும் மைதிலி:(
Delete**அடுத்து ஆங்கிலப் பிசாசு, அது ஒண்ட வந்த பிடாரி!** அண்ணா நான் சரியாய் விளக்கவில்லை. மன்னியுங்கள். ஆங்கில பிசாசுகள் என்பது தில்லையகம் பிசாசுகளுக்கு நான் (செல்லமா) கொடுத்த பட்டம்.
**விடையைச் சரியாகக் கண்டு பிடிச்சுச் சொல்றவங்களுக்கு ஒரு வெண்பா பரிசு!(ஏதோ நம்மால முடிஞ்சது...)**
நமக்கு தெரிஞ்சதெல்லாம் மிஸ்கினின் அடுத்த படம் பிசாசு. அம்புட்டுதான். மைதிலி உனக்கது இல்ல, உனக்கது இல்ல:(
(திருவிளையாடல் தருமி குரலில் இந்த வார்த்தைகளை வாசிக்கவும்:)
நண்பரே!
ReplyDeleteசொல்லாக் கவி சொல்லி எல்லாக் கவியையும் வென்றாய்.
தொடை நயத்துடன் தொடுத்தாய்...அருமை...மிக அருமையென
ஏத்தும் புகழால் நிலைத்தாய்....
மணவையாரின் வருகை ஆனந்தம்!
Deleteஇந்நேரம் திரையுலகில் நல்ல இயக்குநராக இருந்திருக்க வேண்டிய ஆளுமை நீங்கள்......!
என்ன செய்ய ?
அறியப்படாத அறிஞர்களில் ஒருவராக நீங்கள் ஆகிப்போனதைக் குறித்து நான் வருத்தப்பட்டதுண்டு!
தோழர் மதுவின் பாணியில் சொல்ல வேண்டுமானால்
“ உங்கள் வருகை என் உவகை “
நன்றி
வணக்கம் ஐயா!
ReplyDeleteசொட்டும் அமுதூற
விட்டீர் நற்கவிதான்!
மொட்டும் முகிழ்ந்தாட
முட்டும் மணமாக!
கொட்டும் முரசறைந்து
கிட்டும் புகழும்மை!
விட்டும் விலகாமல் உமைத்
தொட்டே தொடர்ந்திடுமே!
அருமையான உங்கள் கவிதைப் படைப்பிற்கு
அடியேனின் சிறு வாழ்த்து அது!
உங்கள் கவிதை மிகச்சிறப்பு ஐயா!
பாடிப் பார்க்கையில் உள்ளம்
அங்கேயே ஒன்றிக் கொள்கிறது!
வாழ்த்துக்கள் ஐயா!
மெட்டும்மன மேற்றிச் சொட்டும்கவி வாக்கில்
Deleteஎட்டும்வெளி எல்லாம் கொட்டும்மழை யானீர்!
பட்டின்அழ காகிக் கட்டும்இதம் பெற்ற
மொட்டேஇள மதியே! கிட்டும்புகழ் இனியே!
நன்றி சகோதரி!
வணக்கம் ஐயா!
ReplyDeleteகொட்டிய நற்கவி கூட்டும் சுவைதனியே!
தொட்டீர் உளங்களைச் சூழ்ந்து!
அருமையான உங்கள் கவிதைப் படைப்பிற்கு
அடியேனின் சிறு வாழ்த்து அது!
உங்கள் கவிதை மிகச் சிறப்பு ஐயா!
பாடிப் பார்க்கையில் ஒசை நயத்தில் உள்ளம்
அங்கேயே ஒன்றிக் கொள்கின்றது!
வாழ்த்துக்கள் ஐயா!
“சூழ்ந்த கருத்தாற்றில் சிக்கி மணல்கரைய
Deleteஆழ்ந்து தவிக்கும் அகம்“
மீண்டும் நன்றி சகோதரி!
வணக்கம்
ReplyDeleteஐயா.
சொல்வதற்கு வார்த்தை ஏது... மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்கேயும்...... எப்போதும்..... எல்லார்க்கும்.....
Deleteகைமாறு வேண்டாக் கடப்பாடு.
அன்புடன் மிக்க நன்றி ரூபன்.
எல்லாம் இனிப்புத்தான் என்றாலும் அல்வா வேறு, மைசூர்பா வேறுதானே? அப்படித்தான் ஓசைக்குள் உங்கள் ஆசை.. எனினும்..
ReplyDelete“குன்றோ‘ஒளிக் குவையோ‘இவள் நன்றோ‘இலை தீதோ?
பொன்னோ‘உடல் பூவோமனம் என்னோஇவள் மாதோ?
கண்ணோ‘இது விண்ணோ‘இரு மின்னல்வரத் தோதோ?
பெண்ணாம்‘இவள் அன்பைப்பெற மண்ணில்விலை ஏதோ?“
இது நம் பாட்டன் சொத்து... பேரா... புகுந்து விளையாடு..
சந்தத்தில் சொக்கிப்போனேன்..
“வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியில் மறைய
பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோமர கதமோ மறிகடலோ மழை முகிலோ..
அய்யோஇவன் அழகென்பதொர் அழியாஅழ குடையான“ எனும் கம்பனின் -பலவிவாதங்களைக் கிளப்பிய- பாடல் நினைவுக்கு வந்தது. என்றாலும் நம் மரபைத் தொடரும் மகாகவிகளின் வரிசையில் விஜூ.. நீங்கள் இடம்பிடிக்க வேண்டும் வேறுவேறு சந்தங்களோடும் விதவிதமான உள்ளடக்கங்களோடும் வலம் வருக!
நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளோடு என் அன்பான வணக்கமும் தோழா!
அது, வார்த்தை விளையாட்டில் மனம்சிக்கிக் கிடந்த காலம்.
Deleteஉலா பார்த்து உலாக்களும், தூது பார்த்துத் தூதுகளும் படைப்பது போலத்தான் ரசிக்கும் சந்தங்களில் நான் வார்த்தைகளை இட்டு நிரப்பிக்கொள்வது!
தேமா, புளிமா விட்டு அதிலும் கடினமென்ற “வண்ணங்களின்“ வயப்பட்டிருந்த காலத்தில், கம்பனை, பாரதியை, கைபிடித்து நடைபழகிக் கொண்ட பயணங்களுக்குச் சாட்சியாய் என்னிடத்து மிச்சம் இருப்பவை இவை!
இவை கவிதையா என்பதில் இன்றெனக்கு முரண்பாடுண்டு!
ஆனால் தமிழ்ச் சந்தத்தைத் தாங்கள் உட்பட இத்தனை பேர் ரசிப்பதைப் பார்க்கும் போது எனது கூச்சம் சற்று மாறிச் சந்தோஷம் தோன்றுகிறது.
சகோதரி மைதிலி உங்களின் பின்னூட்டத்திலிருந்து சந்தத்தின் சொந்தக்காரரைக் கண்டுபிடித்திருப்பார். ஆனால் இந்த சந்தத்தின் சொந்தக்காரன் கம்பனும் அல்லன் என்பது ‘தேவ‘ரகசியம்!
நீங்கள் சொன்னபடி, விதவிதமான சந்தங்கள் முடியுமா என்பதைவிட வேண்டுமா என்று நினைக்கிறேன் அய்யா!
அடுத்து,
விதவிதமான உள்ளடக்கம்.....
நிச்சயம் அதன் தேவையை உணர்கிறேன்.
தங்களின் அக்கறையை, ஆதரவை வாழ்த்தை உளங்கொள்கிறேன்.
இன்னும் வாழ்த்துகளைப் பெறுவேன் பெறவேண்டும் என ஆசை இருக்கிறது.
நன்றி!
அதிலும் குறிப்பாய்,
“ஐயோ! இவள் அழகென்பதோர் அழியா அழகுடையாளுக்காக “
இந்த ஒரு வரியில் பல பதிவுகளுக்கான செய்தி இருக்கிறது.
மீண்டும் நன்றி அய்யா!
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கிறது ஐயா,
ReplyDeleteகவிதைப்போட்டிக்கு கவிதை அப்படினு பேரு வச்சு ரெண்டு அனுப்பியிருக்கிறேன் தேறுமானு பார்த்து ஆறுதலா மூணு வார்த்தை சொல்லுங்க நண்பரே...
Deleteநன்றி நண்பரே!
Deleteநீங்கள் சொல்லியதைச் செய்திருக்கிறேன்.
ReplyDeleteவணக்கம்!
பாட்டின் இயைபுகள் இதயத்தைக் கவ்விக்கொண்டன!
பலமுறை படித்து இன்புற்றேன்!
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தானா
பொங்கும்தமிழ் தங்கும்நிலை திங்கள்நல சூடும்!
தங்கம்நிறை உங்கள்உயிர் சங்கம்நிறை பாடும்!
எங்கள்வள அங்கம்தனில் மங்கும்நிலை ஓடும்!
இங்கும்தமிழ்! அங்கும்தமிழ்! எங்கும்தமிழ் ஆடும்!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
“இங்கும்தமிழ்! அங்கும்தமிழ்! எங்கும்தமிழ் ஆடும்!“
Deleteஅருமை கவிஞரய்யா!
என் பதிவிற்குப் பின்னூட்டமிடுவீர்கள் என்று பார்த்தால்
உங்கள் பின்னூட்டத்தை ரசித்துக் கருத்திடச் செய்துவிட்டீர்கள்!!!
நன்றி!
தேடும்விழி தேடும்நிதம் நாடும்‘உனை நெஞ்சம்!
ReplyDeleteவாடும்‘அது பாடும்கவி ஏடும்‘உனைக் கெஞ்சும்!
வீடும்சுடு காடேயென ஆடும்நினை வஞ்சும்!
மூடும்பனி யோடும்‘எனக் கூடிக்குளிர் கொஞ்சும்!//
என்ன ஐயா இது!!! இப்படி எல்லாம் கவிதை அருவியாகக் கொட்டினால் அதுவும் தேனில் ஊறிய பலாச் சுளைகள் போல இனிமைத் தமிழில் எங்களை ஊற வைத்தால்....ஏற்கனவே நாங்கள் மிகவும் இனிமையானவர்கள் (எங்கள் உடம்பில் சர்க்கரை...) திளைக்கின்றோம் தமிழ் அமுதினில்!
திரும்பத் திரும்ப வாசிக்கின்றோம்!!!!
ReplyDeleteநீங்கள் கவலைப் படத்தேவையில்லை அய்யா!
Deleteஇனித்தாலும் இவை சுகர் ஃபிரீ தான்!
வருகைக்கும் தொடர்கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் ஒருசேர நன்றி!
என்ன சகோ! இப்படி புலம்ப வைத்து விட்டீர்களே. எதுவும் எனக்கு புலப்படவே இல்லை எப்படி வாழ்த்துவது என்று திக்கு முக்காடியல்லவா போகிறேன். தமிழுக்கு இவ்வளவு அழகா பிரமித்துப் போய்விடுகிறேன் சகோ இப்போதெல்லாம். தங்கள் கவிமழையில் நனையவும் தகுதி இல்லாதவள் நான் என்றே தோன்றுகிறது ஹா ஹா...... ஆனாலும் விடமாட்டேன் தீர்த்தம் மாதிரி தொட்டு ஆவது தலையில் தெளிக்காமல் விடமாட்டேன். சரி தானே சகோ. வாழ்த்துக்கள் வானளவு உயர........!
ReplyDeleteகவி அருவியில் நனைபவர்களுக்குக் கவி மழை சாதாரணம் தானே சகோதரி!
Deleteதீர்த்தம்?!
சரி சரி..
கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
நன்றி!
வணக்கம்
ReplyDeleteஎன்னே ஒரு கவி வடிவம் !
உள்ளம் வியந்து பாராட்டுகின்றேன்
வாழ்த்துகின்றேன் சகோதரா
வாழ்க தமிழ் !வளர்க நின் பணி
தங்களின் முதற் கருத்துக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும்
Deleteஆசீர்வாதத்திற்கும் நன்றி சகோதரி!
அடடா.... அடடடா.....
ReplyDeleteஎன்னவென்று பாராட்டுவது?
தெரியாமல் திரும்புகிறேன் “ஊமைக்கனவுகள்“ ஐயா.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கவிஞரே!
Deleteமின்னல்வரி கன்னல்சுவை வெந்தும்'விரல் தேடும்
ReplyDeleteஉன்னில்தமிழ் அள்ளிக்கனி ஊட்டும்'விழி நாடும்
பொன்னின்மணி பூவின்இதழ் கண்ணின்'இமை ஆடும்
சிந்துகவி சொந்தம்'இனி செத்தும்'உயிர் பாடும்
ஆஹா இதை கவனிக்காமல் போய்விட்டேனே
என்ன சொல்லி வாழ்த்த ம்ம் ஒன்றும் தோணலியே
உள்ளான்மா சிந்தும் உயிரணுவோ உம்கவிகள்
கொள்ளையிடத் தோணுதையா குற்றமோ - அள்ளி
அருந்த அமுதில்லை ஆனாலும் பாடி
உருகி உணரும் உயிர் !
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருந்த அமுதில்லை! ஆசையாய்க் காண
Deleteவிருந்தாய் அவளில்லை வெம்பி - இருந்தாலும்
சீராளா உங்கள் சிறப்பான பின்னூட்டம்
தீராத போதை தரும்!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!