Thursday 28 August 2014

வாராயோ கண்மணியே!












முத்தை விளைத்தெடுத்த மோகப்பூஞ் சித்திரமே!
தத்தை குரல்கற்கும் தங்க ரதவடிவே!
குளத்தில் தாமரையும் கூம்பி‘இதழ் விரிப்பதுபோல்
உளத்தில் மலர்ந்தென்னுள் உயிரான மெய்ப்பொருளே!
கண்ணில் நீவந்து கலந்திட்ட நாள் முதலாய்
என்னில் நான்வேறாய் ஏன்‘ஆகிப் போகின்றேன்!
உறக்கம் பகைத்தும்‘என் உணவைப் பகைத்தும்‘உன்
மறக்கும் நினைவலையில் மனம்செல்லத் துடிக்கின்றேன்!
புருவ விழிதிருப்பிப் புலன்நோக எனைக்காண
விருப்பம் தனைச்சொல்ல வாயின்றித் தவித்தேனே!
நீயோ இதழ்மடிப்பாய்! நிற்பாய்பின் நடந்தகன்று
போயுன் விழிதிருப்பிப் “ போய்வரவா “ எனக்கேட்பாய்!
யாரும் அறியாமல் நமைசேர்க்கும் மௌனத்தில்
சேரும் இராகங்கள் நான்சொல்லும் தன்மையதோ?
என்னை அறியாயோ? எண்ணம் புரியாதோ?
உன்னை உயிராகக் கொண்டே உடலிளைத்தேன்!
நீண்ட வானத்தை நினைத்துப் பறந்தவனைக்
கூண்டுக் கிளியாக்கிக் கூவியழ வைத்தாயோ?
பொட்டும் பொன்முகத்தில் பொலிகின்ற சந்தனமும்
விட்டு விலகுமனம் வீழ்த்திச் சிரிப்பதென்ன?
விழியை மொழிபெயர்த்து விளையாடிக் கிடக்கையிலே
கழியும் காலங்கள் கனவாகிப் போகிறதே!
காயும் நிலவிருக்கக் கற்பனைகள் மொட்டவிழ
நீயற்ற நெருக்கங்கள் நெருப்பாய்த் தகிக்கிறதே!
ஓயா நின்னலைகள் ஓடிவந்(து) எனைத்தழுவ
நீயோ முகம்திருப்பி நிற்காமல் போவதுமேன்?
கன்று தாய்தேடிக் கதறித் துடிப்பதுபோல்
இன்றுன் நினைவால்‘என் இதயம் துடிக்கிறதே!
பார்த்தாய்! சிரித்தாய்! பழகென்றாய்! எப்போதோ
தூர்ந்த கிணற்றைநீ தூய்மைபுரிந் தாண்டதென்ன?
உன்னை விட்டென்றன் உடல்விலகி வந்தாலும்
என்னை நினைவாலே எப்போதும் ஆள்கின்றாய்!
கண்ணும் கதைபேசக் கருத்தில் இசைசேர்ந்தோர்
பண்ணும் கவிதையெனப் பவனிவரப் பார்க்கிறதே!
காற்றை மறந்தாலும் காதலியே உன்நினைவின்
ஊற்றை மறப்பேனோ உயிரோடு உளமட்டும்?
பொன்னே ஒளிமுத்தே போற்றுந் திரு‘உருவே!
விண்ணே கண்வைக்கும் வியப்புப் பெருஞ்சீரே!
கண்ணே! எக்கவியும் காணாத கற்பனையே!
என்னே உன்னழ(கு) இங்கெழுத ஆகுவதோ?
சித்திரம் தீட்டாமல் சிலைவைத்துப் பூட்டாமல்
பித்தம் எனைப்பற்றப் பிரம்மனுனைப் படைத்தானோ?
வந்தும் உன்கண்ணின் வற்றாத தேனுண்டும்
நொந்தும் என்நெஞ்சம் நொறுங்கிப் போவதென்ன?
ஒருநாள் உன்னழகுத் திருமுகம் காணேனேல்
இருந்தும் என்‘ஆவி இல்லாமல் போகிறதே!
கொல்லாக் கண்ணழகும் குறையாச் சிரிப்பழகும்
இல்லா என்நெஞ்சில் இப்போதும் இனிக்கிறதே!
ஓங்கும் உன்னழகை ஒதுங்கிநின்று பார்க்காமல்
ஏங்கித் தவித்தேநான் ஏழையென ஆவதென்ன?
நெஞ்சைத் திறந்துள்ளில் நீயே எனக்காட்ட
அஞ்சித் தேய்ந்தறி(வு) அடங்கிப் போகிறதே!
வெள்ளம் அணையிட்டும் வேகம் தாளாமல்
உள்ளம் உடைகிறதே உயிரேநான் என்செய்வேன்?
எங்கும் எதிலும்கண் இமையும் இருளகமும்
தங்கும் உனைக்கண்டுத் தடுமாறிப் போகின்றேன்!
உணர்வுக் கொதிப்பில் நான் உருகிக் கரைகின்றேன்!
கனவுக் கடலில்‘உன் கதிதேடித் தவிக்கின்றேன்!
உப்பேதும் இல்லாத உணர்வற்ற என்வாழ்வில்
ஒப்பேதும் இல்லாத உயிரோட்டம் நீதந்தாய்!
நினைவுச் சருகிலினி நெருப்பிட்டுப் பார்ப்பாயோ?
அணையும் உயிர்த்தீயை அன்பால் வளர்ப்பாயோ?
மறக்கும் வழிசொல்லும் மனமுனக்(கு) உண்டானால்
இறக்கும் வழியெனக்(கு) எளிதாகப் படுகிறதே!
பூத்துக் குலுங்கியெனில் புன்னகைக்கும் நந்தவனம்
நீக்கி நான்மட்டும் நொடிப்பொழுதும் வாழ்வேனோ?
ஆடும் மனக்கதவு அன்பிலுனை அகம்நிறைத்து
வாடும் வலிதீர்க்க வாராயோ கண்மணியே?
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

30 comments:

  1. படித்து முடித்த எனக்கு(ம்) வந்தது ஏக்கப்பெருமூச்சு.....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா.....?
      கருத்திற்கு நன்றி நண்பரே!
      எங்கே புதிய பதிவுகள் எதையும் காணோம்?

      Delete
  2. எக்கவியும் காணாத கற்பனை - உங்கள் கவிதை, இல்லாத உங்கள் நெஞ்சில் வரும் இனிப்பைப் போல் படிக்கும் எங்களுக்கு இனிப்பாய் இருக்கிறதே..

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின்
      வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி!

      Delete
  3. ஒவ்வொரு வரியிலும் உயிரின் ஓசை அழகாய் செதுக்கி இருக்கீங்க அருமை அருமை

    கருத்தினை வெண்பாவில் எழுத முயன்றேன் தப்பாகிடுமோ என்னும் தயக்கத்தில் விட்டு விட்டேன் ஹி ஹி ஹி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      உங்களுக்கு வெண்பா தப்பாகிடுமா...?!
      நானென்றால் நன்றாக அப்படித் தப்பாக எழுதி மாட்டிக்கொண்டிருக்கிறேன்.
      உங்களைப் பார்த்துப் பெரிதும் வியப்பவன் நான்!
      உங்களின் வருகையும் கருத்தும் கண்டு பெரிதும் மனம் உவக்கிறேன்.
      மிக்க நன்றி!

      Delete
  4. ** உப்பேதும் இல்லாத உணர்வற்ற என்வாழ்வில்
    ஒப்பேதும் இல்லாத உயிரோட்டம் நீதந்தாய்!**
    அட்டகாசமான எழுத்தாக்கம், கட்டமைப்பு அண்ணா! இந்த அகப்பாடல்கள் அகம் நிறைக்கின்றன:))

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் மரபுக்குள் வருகிறீர்கள்.
      நானும் புதுக்கவிதை முயன்று பார்க்கிறேன்.
      மரபில் எனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறேன்.
      எனக்கும் சொல்லிக் கொடுங்கள்.
      நன்றி

      Delete
  5. ஆடும் மனக்கதவு அன்பிலுனை அகம்நிறைத்து
    வாடும் வலிதீர்க்க வாராயோ கண்மணியே?//

    ஆஹா...வரிகள் அனைத்தும் அருமை... ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உங்களின் ரசனைக்கும் நன்றி சகோதரி!

      Delete
  6. வணக்கம் ஐயா!

    உதிக்கும் கதிராக ஓங்கும் நினைவு!
    பதித்திடும் பாதங்கள் பாய! - மதிக்கின்ற
    மாண்பினள் மாதவம் வாய்த்தவள்! மாற்றேது?
    காண்கிறேன் காட்சிபல நின்று!

    என்னவெனச் சொல்ல?..
    எல்லாச் சீர்களும் உங்களிடம் சரணடைந்து விட்டன!
    வானவில்லைக் கையிலேந்திக் காணுகின்ற அழகுணர்வு!
    அருமையோ அருமை ஐயா!

    மனதார வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. காட்சிக்குத் தோற்ற கதைபலவும் செய்கின்ற
      ஆட்சிக்குத் தோற்கும் கவிதைகளும் - சாட்சியென
      நிற்கின்ற திங்கே நிழலும் நிஜங்களையே
      கற்கின்ற நாள்திறக்கும் கண்!

      Delete
  7. முத்தை விளைத்தெடுத்த மோகப்பூஞ் சித்திரமே!
    தத்தை குரல்கற்கும் தங்க ரதவடிவே!
    குளத்தில் தாமரையும் கூம்பி‘இதழ் விரிப்பதுபோல்
    உளத்தில் மலர்ந்தென்னுள் உயிரான மெய்ப்பொருளே!
    கண்ணில் நீவந்து கலந்திட்ட நாள் முதலாய்
    என்னில் நான்வேறாய் ஏன்‘ஆகிப் போகின்றேன்! அம்மாடியோ ஆரம்பமே அமர்க்களம் ஆஹா ஆஹா அருமை அருமை சகோதரரே!

    வாயடைத்து நிற்கின்றேன்
    வண்ணவிழி நீராட.
    தாயைகண்ட சேய்போல
    மகிழ்வோடு !


    இத்தனை காதல் இதயத்தில் சதிராட
    எத்தனை விதமான கற்பனை புதிராட
    அத்தனை கவிநயமும் வந்தே அழகூட்ட
    மெத்தவே மனம் மகிழ்ந்து கூத்தாடுதே!
    வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகையும் கருத்தும் மனமகிழ்ச்சியும் இருக்குமானால்
      இருப்பதனைத்தையும் ஒரே நாளில் பதிவேற்றி விடலாம் போல...!
      நன்றி சகோதரி!

      Delete
  8. நீண்ட வானத்தை நினைத்துப் பறந்தவனைக்
    கூண்டுக் கிளியாக்கிக் கூவியழ வைத்தாயோ?

    வெள்ளம் அணையிட்டும் வேகம் தாளாமல்
    உள்ளம் உடைகிறதே உயிரேநான் என்செய்வேன்?

    நெஞ்சில் நிற்கும் நிறைவரிகள்.
    அகவலை விஞ்சும் அழகு நடை

    பாவகை சொல்லிப் பதம்பிரிக்க மனசில்லை
    புதுக்கவி யென்றும் பொய்யுரைக்க இடமில்லை.
    என்ன வகையென்றே எடுத்துரைத்தால் நன்றி.


    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      புத்தக வெளியீட்டுப் பணியிடையிலும் தங்களின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி!
      இதனை நிலைமண்டில ஆசிரியமாகக் கொள்ள இடமுண்டு அய்யா!
      நன்றி.

      Delete
    2. ஐயா வணக்கம்!

      ஆசிரியர் பாவில் மூவசைச்சீர் அருகி வருவதுண்டு. நுாறு அடிகளில் எழுதும் ஆசிரியர் பாவில் ஒன்று இரண்டு இடங்களில் மூவசைச்சீர் வரலாம்.

      நுண்ணிய புலமையுடையோர் தேமாங்காய், புளிமாங்காய்ச் சீர்களை அகவலில் கொள்வார். விளங்காய் வருவதைத் தடுப்பார்.

      காய்ச்சீரை வகையுளி செய்து அலகிட்டால் அடியில் நான்கு ஈரசை சீர்கள் இருப்பதைக் காணலாம்

      இயற்சீர் அனைத்தும் இனிதே நடந்தால்
      உயர்சீர் அகவலென ஓது!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    3. வணக்கம். நான் தங்களைப் போன்ற தமிழாசிரியர்களிடத்தில் பாடம் கேட்டதில்லை. அதனால் தவறுகள் நேரலாம்.
      நேரிசை ஆசிரியப்பாவிற்கு இலக்கணம் கூறும்
      “கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர்
      இடைபல குன்றி னிணைக்குற ளெல்லா வடியுமொத்து
      நடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத்
      தடைதரு பாதத் தகவ லடிமறி மண்டிலமே.“

      எனும் காரிகை (28) அதற்கு எடுத்துக்காட்டும் பாடல்

      “நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
      நீரினு மாரள வின்றே சாரற்
      கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு
      பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.' (குறுந். 3)

      இதன் நான்கு வரிகளில் மூன்று இடங்களில் ( முயர்ந்தன்று,, குறிஞ்சிப்பூக்,, நாடனொடு ) மூவசைச் சீர்கள் வருகின்றன.
      இதில் நாடனொடு எனும் சீர் நிரைநடுவனதாகிய வஞ்சி உரிச் சீரே! இந்தச் சீரை நாடன்+ஒடு எனப்புணர்வதால் குற்றியலிகரமாகக் கொள்ளவும் இயலவில்லை.

      “சிறியகட் பெறினே“ (புறம்-235) என்னும் ஆசிரியத்துள்ளும் பதினைந்திற்கு மேற்பட்ட மூவசைச் சீர்கள் வருகின்றன.
      அவற்றுள் புலவுநாறும் என்ற நிரை நடுவனதாகிய சீரும் உண்டு.
      அதே நேரம் ஆசிரியப் பாவில் நிரை நடுவதாகிய வஞ்சிஉரிச் சீர் வராது என இலக்கணம் சொல்லுவதாகத் தாங்கள் சொல்வது சரிதான்.
      ஆனால் இலக்கியத்தின் வழி இலக்கணத்தை நோக்க இது போன்ற வஞ்சி உரிச் சீர் வருவதைக் காண முடிகிறது.
      சங்கப்பாடல்கள் பலவற்றுள் இதற்கான சான்றுளது.
      தங்களின் இலக்கணத் திருத்தப் பின்னூட்டத்திற்கான என்னுடைய பதிலாக அன்றிப் பார்வையாக இதைக் கொள்ள வேண்டுகிறேன்.
      நன்றி!

      Delete

    4. வணக்கம்!

      இரண்டு நாள்கள், யாப்பிலக்கண வகுப்பு நடத்துவதற்காகச் சுவிசு நாட்டிற்குச் சென்றிருந்தேன். இப்போதுதான் வந்தேன். தங்கள் கருத்துக்களைக் கண்டு இன்புற்றேன்.

      முன்னோர் படைத்த இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்து நாம் கவிதை படைக்கிறோம். அவர்களிடம் இருந்தே கவிதைக்கலை நுட்பங்களைக் கற்கிறோம்.

      முதலில் ஒன்றைக் கண்டுபிடிப்பது கடினம். கண்டுபிடித்த ஒன்றிலிருந்து மேலும் சிறப்பானவற்றை உருவாக்குவது எளிதாக அமைகிறது.

      முன்னோர் படைத்த அகவலைப் பாடிப் பாடிச் சுவைத்த நாம் அவர்களைவிடச் சிறப்பான அகவலைப் பாடவேண்டும் என்று விரும்புவது இயற்கை.

      காய்ச்சீர் வரலாம் என்ற விதியிருந்தும், காய்ச்சீர் இன்றி, ஈரசைச் சீர்களை மட்டும் ஏற்று நடைபோடும் அகவல் சிறப்புடையது என்பது என் கருத்து.

      ஓசை சிறந்தோங்க! ஒண்நடைத் தேனோங்க!
      ஆசை அகவல் அழகோங்க! - வாசமுடன்
      ஈரசைச் சீர்களை ஏந்திப் படைத்திடுவோம்!
      சீரிசை பொங்கும் செழித்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  9. நீண்ட வானத்தை நினைத்துப் பறந்தவனைக்
    கூண்டுக் கிளியாக்கிக் கூவியழ வைத்தாயோ?//

    ஆஹா!! என்ன ஒரு வரிகள்.....

    எல்லா வரிகளும் மனதை ஆட்கொண்டதால்
    எந்த வரி சிறப்பென்று
    எடுத்தியம்பத் தடுமாற்றம்!
    இப்படி எழுதிக் கவர்ந்தால்
    எப்படிப் பின்னூட்டம் இடுவதாம்
    எமை இப்படி மயக்கிவிட்டீர்
    பாம்பாட்டி மயக்குவது போல்
    தமிழ் மகுடி ஊதியே!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      உங்கள் அன்பினுக்கு நன்றிகள்.
      ஒரு காலத்தெழுதப்பட்டு மூலையில் கிடந்தவற்றை நீங்கள் எல்லாம் ரசிக்கின்றீர்கள் என்றெண்ணும் போது உண்மையாக நான் கலங்கி நிற்கிறேன்.
      என்ன தவம் செய்தனை மனமே..........?!
      நன்றி!

      Delete
  10. "ஆடும் மனக்கதவு அன்பிலுனை அகம்நிறைத்து
    வாடும் வலிதீர்க்க வாராயோ கண்மணியே?" என்ற
    அழைப்பை வரவேற்கிறேன்.

    சிறந்த பாவரிகள்

    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  11. நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகமம்ஆகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க
    வேகம் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க///
    ஆகா சிவபுராணம் போல் அல்லவா? இருக்கிறது இது காதலி புராணமா வசித்துக் கொண்டு போக அப்படித் தான் இருந்தது நிஜமா சகோ. நான் சொல்வது சரியா.
    அம்மாடியோ எவ்வளவு, எந்த சருவி இது கட்டுக் கடங்காமல் கரை யுடைத்து பாய்கிறது. மூச்சு வாங்குது சகோ தொடர்ந்து வாசித்து.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ....! மூச்சு.... அதுவா அது ஒரு பேச்சுக்கு சொன்னேன் ..... நிஜம் என்று நினைத்து குறைச்சு எழுதிடாதீங்க ok வா .

    ReplyDelete
    Replies
    1. ஆகா!
      சகோதரி...!
      உங்களின் மீள் வருகையும் பின்னூட்டங்களும் அப்பப்பா....!
      சிவ புராணம்............?! உங்களுக்குத் தெரியுமா.? நான் பாராமல் பாராயணம் செய்த முதற்பாடல் அது!
      ( இதை அவ(ள்) புராணம் என்று வேண்டுமானால் சொல்லலாமோ..? )
      அது கலிவெண்பா யாப்பு சகோதரி!
      வெண்டளை பிறழாமல் பன்னிரு அடிகளுக்கு மேல் பாடிக்கொண்டே போவது ... அடி வரையறை இல்லாமல் எழுதுபவனின் மனம் போன படி...!
      அனேகமாய் எனது அடுத்த பதிவு அதுவாய்த்தான் இருக்கும்.
      மிகத் தூய்மையான யாப்பு வடிவம் அது!
      நீங்கள் எல்லாம் தான் அதில் கலக்கி எடுக்கிறீர்களே!
      அப்பறம் சிவபுராணத்தைப் பற்றிச் சொல்லியதால் ஒரு செய்தி!
      அதில் வரும்
      கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
      வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்
      எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்
      என்று அடிகள் வருகின்றதல்லவா?
      அது
      “கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்“
      என்றிருக்க வேண்டும் என்றொரு பார்வையுண்டு.
      சொன்னவர் வ.உ.சி. என்று நினைக்கிறேன்.
      இப்படிப் பாடம் கொள்வதுதான் மிகப் பொருத்தமானது என்று நினைக்கிறேன்.
      ஏனெனில் இழிவான உயிர்களையும் அதனைத் தொடர்ந்து உயர்வான உயிர்களையும் பற்றிக் கூறும் போது அங்கு உயிரற்ற கல்லைக் கூறுவது பொருத்தமாக இருக்காது.
      கல்லாத மனிதன் எனக் கூறுவதே சரியானதாக இருக்கும்.
      ஒரு வேளை நீங்கள் சிவபுராணம் சொல்லுகிறவராக இருந்தால் இம் மாற்றத்தை உளம் கொள்வீர்கள் என்பதற்காகச் சொல்கிறேன்.
      வேறொன்றுமி்ல்லை.
      நானெழுதிய இந்தப் பாடல் நிலை மண்டில ஆசிரியம்!
      இயற்சீராலும் ( ஈரசைச் சீர்) காய்ச்சீராலும் நான்கு சீர் கொண்ட அடியாக அமைக்கலாம்.
      வெண்டளையோ ஆசிரியத்தளையோ தான் வர வேண்டுமென்ற கட்டாயம் இல்லாத இலகுவான வடிவம்.
      நீங்களும் முயன்று பார்க்கலாமே!
      நன்றி!

      Delete
    2. \\கல்லாத மனிதன் எனக் கூறுவதே சரியானதாக இருக்கும்.
      ஒரு வேளை நீங்கள் சிவபுராணம் சொல்லுகிறவராக இருந்தால் இம் மாற்றத்தை உளம் கொள்வீர்கள் என்பதற்காகச் சொல்கிறேன். வேறொன்றுமி்ல்லை.// ஆமாம் சகோ அதை ஏற்றுக் கொள்கிறேன். சகோ அது தான் சரி! கல்லா மனிதர் தான் காலப் போக்கில் கல்லாய் என்று மாறியிருக்க வேண்டும். என்பதை நானும் நம்புகிறேன்.

      வெண்டளையோ ஆசிரியத்தளையோ தான் வர வேண்டுமென்ற கட்டாயம் இல்லாத இலகுவான வடிவம்.
      நீங்களும் முயன்று பார்க்கலாமே! அப்படி என்றால் முயற்சி செய்து பார்த்திட வேண்டியது தான் சகோ. தகவலுக்கு மிக்க நன்றி!
      வாழ்த்துக்கள் ...!

      Delete
  12. அருமை அருமை அருமை...இது தவிர என்ன..வென்று சொல்வது.

    ReplyDelete

  13. வணக்கம்!

    வாடும் வலிதீர்்க்க வஞ்சியை வாவென்று
    பாடும் கவிதை பசுந்தேனே! - ஆடும்
    மயிலழகாய்! வண்ண மலரழகாய் மின்னும்
    உயிரழகாய்ச் சொற்கள் உயர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete