Monday 18 August 2014

எனக்குத் தெரியாது!




 






சென்னைக் கிறித்தவக்கல்லூரியில் விரிவுரையாளருக்கான நேர்காணலுக்கு வந்திருந்த மறைமலை அடிகளிடம் பரிதிமாற் கலைஞர் கேட்டதாகச் சொல்லப்படும் கேள்வி
“குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்திற்கும் எடுத்துக்காட்டுத் தருக“
மறைமலையடிகள் சொன்ன பதில்
“ எனக்குத் தெரியாது “

மிகச் சரியான பதில் என்று பாராட்டிப் பரிதிமாற்கலைஞர் மறைமலையடிகளை வேலைக்குத் தேர்ந்தெடுத்தார் என்று ஒரு துணுக்குச் சொல்லப்படுவதுண்டு. பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
உண்மையா என்று தெரியாது.
ஆனால் குற்றியலுகரம் முற்றியலுகரங்களைப் பிடித்துக்கொண்டு ஏன் இவ்வளவு சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் எனப் பல நேரங்களில் நான் நினைத்திருக்கிறேன். இன்றைய உரைநடைப் பயன்பாட்டில் இவ்விரண்டும் தேவையே இல்லை.
அன்று இவை தேவையாய் இருந்திருக்கிறதா?
தொல்காப்பிய இலக்கணத்தில் எடுத்த உடனேயே ( இரண்டாவது நூற்பாவில் ) சொல்லவேண்டிய அளவிற்கு இவற்றை விளக்க
அப்படி என்ன தலைபோகிற தேவை........?
அந்தத் தேவை இன்று எங்கே போய்விட்டது?
இந்தக்கேள்விகளை எழுப்பிக்கொண்டால் தான் குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆய்தம் என்பன அன்றைய மொழியமைப்பில் தோற்றுவித்த சிக்கல்களையும், நமது இலக்கணக்காரர்கள் மண்டையைக் குடைந்து கொண்டு அதற்கான தீர்வினை யோசித்து விடையை ஓரளவிற்குக் கண்டுபிடித்து வகைப்படுத்தி இருப்பதையும் அறிய முடியும்.
பள்ளி இலக்கண வகுப்புகளில் ( கல்லூரிக் கல்வியில் இருக்கிறதா எனத் தெரியவில்லை )
வல்லெழுத்து ஆறினையும் ( க்,ச்,ட்,த்,ப்,ற் ) ஊர்ந்து வரும் உகரம் ( வல்லின மெய்கள் ஆறோடும் சேரும் ‘உ‘ எனும் எழுத்து ) தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து அரைமாத்திரையாய் ஒலிக்கும்.
அதுதான் குற்றியலுகரம். என்று மாணவர் படிக்கும் போது நானும் இப்படித் தமிழ் படித்தது நினைவுக்கு வரும். (குறைந்து ஒலிக்காமல் தன் மாத்திரை அளவிலேயே ஒலித்தால் முற்றியலுகரம் )
இது சரியா?
என்னைப் பொறுத்தவரை முற்றிலும் தவறு!
என்ன பிரச்சனை?
இலக்கணம் படிக்கும் போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்,
1) கருவி
2) செய்கை. என்பவை.
ஆனால் இவற்றைப் பற்றிய அறிமுகம் இன்றித்தான் நமது இலக்கணப்படிப்புப் பெரும்பாலும் தொடங்குகிறது. வளர்கிறது
ஒரு மொழியின் அடிப்படையாக அமைவது என்ன ?
அந்த மொழி எழுதப்படும் போது  “ எழுத்து “
அம்மொழி பேசப்படும் போது   “ எழுத்திற்குரிய ஒலி “
இதுதான் கருவி. [ Tool ]
இதைக்கொண்டு சொற்கள், சொற்றொடர்கள், என அமைத்துக்கொள்ளலாம். கருவியைக் கொண்டு நாம் விரும்பும் வண்ணம் சொல்லாகவோ சொல்லை அடுக்கித் தொடராகவோ அமைப்பது, அப்படி அமைக்கும் போது ஏற்படும் மாற்றம் இவைதான் செய்கை [ Process  ]
மொழியின் இயல்பை ஆராய்ந்து, எழுத்துக்கள் எவையெவை, அதன் தன்மை என்ன, எது சொல்லின் முதலில் வரும், முதலில் வராத எழுத்துக்கள் எவையெவை, சொல்லின் இறுதியில் வரக்கூடிய எழுத்துக்கள் எவை எவை.... இப்படியெல்லாம் மொழியை அக்குவேறு ஆணிவேறாக அலசித்  தீர்வு காணுகின்ற சூத்திரங்களை நாம் கருவிச்சூத்திரங்கள் என்போம்.
அந்த எழுத்துக்களைக் கொண்டு சொல்லாக்குதல், ஒரு சொல்லை இன்னொரு சொல்லோடு இணைத்தல், அப்படி இணைக்கும் போது ஏற்படும் மாற்றங்கள்... இவற்றை விளக்கும் சூத்திரங்களைச் செய்கைச் சூத்திரங்கள் என்போம்.
இதைப்புரிந்து கொண்டுதான் குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆய்தம் ஆகியவற்றை விளக்கும் சூத்திரம் கருவிச் சூத்திரமா? அல்லது செய்கைச்சூத்திரமா என வகைப்படுத்த வேண்டும்.
வல்லின எழுத்துக்கள் ஆறோடும் சேர்ந்து வரும் கு, சு, டு, து, பு, று என்பன இப்படி நாம் சொல்லும் போது குற்றியலுகரம் ஆகுமா,
அப்படி ஆனால் இவை கருவிச் சூத்திரங்களே!
ஆனால் தனியே இவை வரும் போது இவற்றைக் குற்றியலுகரம் என்பதில்லை. அவை குற்றெழுத்துக்களே! ( ஒரு மாத்திரை அளபு பெறும் முற்றியலுகரங்கள் ) இவை சொல்லாகும் போதுதான் நிற்கும் இடம் சார்ந்தும் வருமொழிப் புணர்ச்சி சார்ந்தும்  இவை குற்றியலுகரமா இல்லையா என இனம் காணமுடியும். எனவே இவற்றைச் செய்கைச் சூத்திரங்களாகவே கொள்ள வாய்ப்பு உள்ளது
இன்னும் விளக்க வேண்டுமானால் எழுத்துக்களாக( கருவியாக) இவற்றைக் காட்ட இயலாது . சொல்லில் ( துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால் சொற்கள் சேரும் புணர்ச்சியில் அதாவது செய்கையில் ) தோன்றுவன இவை.
இப்போது பள்ளி மாணவன் குற்றியலுகரத்திற்கு மனப்பாடம் செய்யும் வரையறை சரியா தவறா?
அடுத்த பிரச்சனை “ குறுகிய ஓசை “
பேச்சு வழக்கில் குற்றியலுகரம் குற்றியலிகரம், ஆய்தம் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்துப் பேசுவதற்காய்  இலக்கணம் எழுதப்படவில்லை. அது எழுத்து வழக்கு அதாவது யாப்புக் கட்டமைப்புக் குறித்தே விவாதிக்கிறது. உரையாசிரியர்கள் சொல்லுவார்கள், எழுத்தும், சொல்லும் பொருளும் என இவற்றிற்கு இலக்கணம் சொல்லுவதெல்லாம் செய்யுளியலைக் கருதியதாகத்தான் என்று.
மீண்டும் கருவி – செய்கைக்கு வருவோம்.
ஒரு புரிதலுக்காகக் கருவி என்பதைச் செங்கல் என்று வைத்துக்கொள்வோம்.
செங்கல் கருவி என்றால் செங்கல்லைக் கொண்டு அடுக்கிக் கட்டப்படும் சுவர்,  இந்தச்  சுவர்கள் பல சேர்ந்த வீடு இவைதான் செய்கை.
சிமெண்டை வேண்டுமானால்  மெய்யெழுத்தென்று வைத்துக்கொள்ளுங்கள். (அதுவும் கருவிதான். ஆனால் அதை தனி அளவாக எடுத்துக்கொள்வதில்லை.)
இப்போது செங்கல்லின் அளவைக் கணக்கிடுவோம். ஒரு செங்கல் ஒரு அடி. இருக்கிறது.
ஆறு செங்கல்லை அடுக்கி எழுப்பும் சுவர் ஐந்து அடியாக அமைந்து விட்டால் ..................?
ஒரு செங்கல் எங்கு போனது? என்ன ஆனது ? உயரம் எப்படிக் குறைகிறது?
செங்கல் தான் எழுத்து. எழுத்தைக் கொண்டு செய்யும் சுவர்தான் தொடர்.
“ எனக்கு அளித்தான் “ இது ஒரு தொடர்.
மெய்யெழுத்தை நீக்கிய எழுத்துக்களை எண்ணிப்பாருங்கள். 
மொத்தம் ஆறு எழுத்துக்கள். அதாவது ஆறு செங்கல்.
இதைச் சேர்த்து எழுதும் போது  “ எனக்களித்தான் “ என்றாகிறது.
இப்பொழுது எண்ணிப் பாருங்கள்.
மெய்யெழுத்துக்கள் நீங்கி ஐந்து எழுத்துக்களாகி விட்டது.
ஆறு செங்கல் ஐந்து செங்கலாகக் குறைந்து விட்டது.
தொல்காப்பிய மரபில் அடிகள் எழுத்தெண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே அளவிடப்பட்டன. அவர்களுக்கு இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் சில இடங்களில் எண்ணி அமைக்கும் சொற்கள் சேரும் போது எழுத்துக்கள் மாயமாகி விடுகின்றன. எங்கு? எப்படி? எவ்வாறு?
இங்கு இன்னொரு பிரச்சனையும் வருகிறது. அது பொருளோடு தொடர்புடையது.
எனக்களித்தான் என்பதை எப்படிப் பிரிப்பது?
எனக்கு அளித்தனா?
எனக் களித்தானா ?
இதற்கான தேடலின் போதுதான் நம் முன்னோர்கள் ஆறு இடங்களில் உ என்னும் எழுத்து வல்லினம் ஆறொடும் சேர்ந்து மொழிக்கு இறுதியில் வந்தால் அதனை அடுத்து உயிர் எழுத்தில் வரும் சொல் வரும் போது ஓர் எழுத்துக் குறைகிறது என்பதைக் கண்டறிந்தார்கள். விதி அமைத்தார்கள். அந்த இடத்தை இனம் கண்டு அங்கு வரும் எழுத்தை அடையாளம் காட்ட அதன்மேல் புள்ளியிட்டு வழங்க அறிவுறுத்தினர். இதற்குப் பொருள் இன்னொரு சொல்லோடு சேரும் போது இந்த எழுத்து காணாமல் போய் விடும் வாய்ப்பு இருக்கிறது கவனமாய் இருங்கள் என்பதற்காகத்தான். எந்த இடத்தில் காணாமல் போகும்? இந்த ஆறு எழுத்துக்களும் வந்து அவற்றிற்கு அடுத்து வரும் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால் காணாமல் போகும். அதையே இப்போதும் நாம் கடைபிடிக்கிறோம். குற்றியலுகரச் சொற்களை புணர்ச்சிக்குட்படுத்தாமல் எழுதும் போது அதைக்குறிப்பதற்கு அடைப்புக்குறியைப் பயன்படுத்துகிறோம். அவர்கள் குற்றியலுகரத்திற்கு மேல் ஒரு புள்ளியை வைத்துக் காட்டினார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
தேடலில் கிடைத்த வெற்றி தான் குற்றியலுகரம்.அது தனி எழுத்தல்ல செய்கையில் ( இங்குப் புணர்ச்சி ) ஏற்படும் எழுத்தின் மாற்றம்.
காணாமல் போனால்தான் அந்த உகரம் குற்றியலுகரம். காணாமல் போகாமல் சொல்லோடு நின்றால் அப்போது அது குற்றியலுகரம் ஆகாது ஓசை சிறிது மாறலாம். ஆனால் அளவு குறையாது என்பது நான் புரிந்து கொண்டது.
வல்லினம் ஆறு இடத்தும் சொல்லின் இறுதியில் குறுகும் என்பதும்  பெரும்பான்மை கருதித்தான்.
“கதவு அடைத்தான்“ என்பதில் கதவு எனும்  இச்சொல் குற்றியலுகரம் அன்று. ஏனெனில் இதன் இறுதி எழுத்து வ் என்பது வல்லினம் அன்று.
ஆனால் கதவடைத்தான் என்னும் சொல்லில் இது குற்றியலுகரம் போலவே புணர்கிறது.
எனவே இதை என்ன சொல்வது?
நன்னூலான் முற்றியலுகரமும் சில இடங்களில் குற்றியலுகரம் போலப் புணரும் என நெகிழ்ந்து விதி அமைத்தது இது கருதித்தான்.
மொழியியல்காரர்கள் முற்றியலுகரம் இதழ்குவிந்தும் குற்றியலுகரம் இதழ் விரிந்தும் ஒலிக்கும் என்று பிறப்பின் அடிப்படையில் கூறுவர்.
குரங்கு எனும் சொல்லிலைச் சொல்லிப்பாருங்கள். முதலில் வரும் கு வை நாம் சொல்லும் போது நமது உதடுகளின் அமைப்பும், இறுதியில் வரும் கு வை உச்சரிக்கும் போது உதடுகளின் அமைப்பும் வேறுபடுவதைக் காட்டி குரங்கில் முதல் கு  முற்றியலுகரம் என்றும் இறுதியில் வரும் கு குற்றிலுகரம என்றும் இனம் காட்டுவர் அவர்கள்.

ஆனால் ஒலிப்பு முயற்சியில் இவை வேறுபடுகிறதே தவிர மாத்திரை அளவில்  ஒரு மாத்திரை அளவே இரண்டு இடத்திலும் இருக்கும் எழுத்தின் எண்ணிக்கையிலும் ஒவ்வோர் எழுத்தென்றே இவை கணக்கிடப்படும் என்று கருதுகிறேன்.
ஆகப் புணர்ச்சியில் குற்றியலுகரம் உயிர்வருமிடத்து மாயமாகின்றமை நோக்க எழுத்தெண்ணிக்கையை முதன்மையாகக் கொண்டு அடியமைத்தத் தொல்காப்பியமும் அதன் முந்து நூல்களும், அவ்வெழுத்து வரும் இடங்களில் புள்ளி வைத்து அடையாளப்படுத்தின எனக் கொள்ள இடமுண்டு.
நாம் இப்பொழுது எழுதும் நாடு என்பது தொல்காப்பியர் காலத்தில்
 நாடு் என் டு் வின் மேல் புள்ளி வைத்தே எழுதப்பட்டு வந்துள்ளது. தமிழில் அச்சுப் பதிப்பின் ஆரம்பக் காலகட்ட நூல்களில் பழைய மரபின் தொடர்ச்சியாகக் குற்றியலுகரங்களின் மேல் புள்ளி வைக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்ட நூல்களை நான் கண்டிருக்கிறேன்.
ஆச்சரியப் படத்தக்க செய்தி என்னவென்றால் மலையாளம் இம்மரபை இன்னும் பின்பற்றி வருவது தான்.   
உதாரணமாகச் சோறு என்பதை அவர்கள் சோறு் என்று று் மேல் புள்ளிவைத்து எழுதி சோறுஅ என்றே உச்சரிக்கிறார்கள்.
அதே நேரம் இச்சொல் சோறு உண்டான் ( சோறுண்டு ) என்று வரும் போது  று என்னும் எழுத்தின் மேல் புள்ளி வருவதில்லை. ஏனெனில் குற்றியலுகரம் தன் பண்பின் படி உகரம் நீங்கிப் புணர்ந்து விட்டது.
இலக்கண விதிகளில் இருந்து எடுத்துக்காட்டுகளை இனம் கண்டு நடப்புத் தமிழில்  வலிந்து அமைக்கும் கட்டாயத்தில் ஈடுபட்டு வரும் தமிழறிஞர்கள் , அன்றைய இலக்கியப்பயன்பாட்டில் இந்த இலக்கணக் கூறுகளின்  பயன்பாடு மற்றும் தேவையை உய்த்துணர்ந்து இலக்கணச் சூத்திரங்களை மீள்வாசிப்புச் செய்யும் ஆய்வுகள் பல புதிய விடியலுக்கு வழிவகுக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

26 comments:

  1. எனக்குத் தெரியாது என்ற தலைப்பில் இவ்வளவு தெரிந்த விசயங்களா ? ஆச்சர்யமாக இருக்கிறது நண்பரே,,,,

    மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம் ஒரு சந்தேகம் ஆகவே கேட்கிறேன் எனக்குத் தெரியாது இதில் ''த்'' வருமா ?

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி!
      நிச்சயமாய்த் தவறாக நினைக்க மாட்டேன்!
      குற்றியலுகரத்தின் வகைகளை அதற்கு முன்புள்ள எழுத்துக்களைக் கொண்டு வகைப்படுத்துவார்கள்.
      இங்கு “எனக்கு“ என்பதன் முன் உள்ள எழுத்து ‘க்‘ இது வல்லினம். இதனால் இது வன்தொடர் குற்றியலுகரம் என்னும் வகையில் படும்.
      இப்படி வன்தொடர் குற்றியலுகரம் வந்து அதற்கு அடுத்து வரும் சொல் , க, ச , த, ப, எனும் எழுத்தில் தொடங்கினால் அங்கு அதே எழுத்துக்கள் மெய்யாய் நடுவில் வரும்.
      எனக்கு + தெரியாது என்பதில் தெரியாது என்பது த் இல் தொடங்குகிறது ( த் +எ = தெ )
      அதனால் எனக்கு தெரியாது என்பதற்கு இடையில் த் வரும்.
      கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதா?
      ஹஹஹா!!
      நன்றி!

      Delete
    2. விளக்கவுரைக்கு நன்றி நண்பரே,,, குறித்துக்கொண்டேன்.

      Delete
  2. முற்றியலுகரங்களே ஆனாலும் முற்று பெறவில்லையா ?அடுத்த
    விவாதிப்புக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜியின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
      தொடர்வது குறித்து மகிழ்ச்சி!

      Delete
  3. வணக்கம்!

    குற்றியலுகரம் முற்றியலுகரம் பற்றி உரைத்த விளக்கம் அருமை!
    ஆசிரியரிடத்தில் பாடம் கேட்டதுபோல் மொழிநடை அமைந்திருந்தது.

    கட்டுரையின் முடிவு மேலும் ஆய்வுக்குரியது.

    குற்றியலை, முற்றியலைக் கூறும் உரையிதனை
    முற்றும்நான் ஏற்று மொழிவேனா? - கற்கும்
    எனக்குத் தெரியாது எனவுரைப் பேனா?
    மனத்துள் மணக்கும் மரபு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. மனத்துள் மணக்கும் மரபென்னும் பூவோ?
      இனத்தின் இடர்காக்கும் வாளோ? - வனமாக
      நிற்கின்ற உங்கள்முன் நீரற்று நோம்செடியாய்க்
      கற்கின்றேன் பாடல் கவின்!

      Delete
  4. வணக்கம் ஐயா!

    ஆழ்ந்த, விரிவான ஒரு அலசல்.
    மூளையில் ஏற்றிப் பதித்துகொள்ள முயல்கின்றேன்.

    கொஞ்சம் புரிந்தது. மீண்டும் மீண்டும்
    வாசித்து முடிந்தவரை புரிந்துகொள்ள விழைகின்றேன்.
    அருமையான பதிவு!

    பகிர்வினுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. புரியும் படி எழுதவே முயல்கிறேன் சகோதரி!
      புரியாமை இருப்பின் விளக்கக் காத்திருக்கிறேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      Delete
  5. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான இலக்கண விளக்கம் உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகள் எல்லாம் நன்றாக உள்ளது தொடருகிறேன் ஐயா பின்பு நான் கருத்துப் போடுகிறேன் படித்தபின்...
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. புதிய விடியலுக்கு ஆய்வுகள் வரி செய்யட்டும்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி கரந்தையாரே!
      முயல்கிறேன்.

      Delete
  7. "எனக்குத் தெரியாது" சரியே....இருங்க இருங்க....எங்களுக்கு உகரம், இகரம் பற்றி தாங்கள் சொல்லியது போல் பள்ளியில் படித்தது என்றாலும் ...நாங்கள் படிக்கும் போது கல்லூரியிலும் வந்தது. ஆனால் இத்தனை ஆய்வு விளக்கங்கள் புதிது தங்களிடமிருந்து

    உகரம், இகரம் கற்று முற்றியலுகரம் ஆனோம்....இன்னும் கற்கின்றோம்.....மிக அருமையான தமிழ் இலக்கண வகுப்பு.....மிக்க நன்றி! குறித்து வைத்துள்ளோம்....

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இலக்கண வகுப்பா?
      ஹ ஹ ஹா!
      முதல் ஆளாகஓடுவது நானாகத் தான் இருப்பேன்.
      தமிழ் இலக்கணத்தில் இப்படிச் சொல்லப்பட வில்லை.
      நாம் புரிந்து கொண்டதை விவாதத்திற்கு உள்ளாக்கலாம் என்ற ஆசையில் இடப்பட்ட பதிவு!
      நன்றி அய்யா!

      Delete
  8. விரிவான ஆய்வும் எளிதாகப் புரியும்வண்ணம் விளக்கமும்..அடுத்த பாடத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி சகோதரரே.

    நேரம் கிடைக்கும்பொழுது பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்..
    http://sangamliteratureinenglish.blogspot.com/2014/08/crab-severs-white-sprouts.html

    ReplyDelete
    Replies
    1. மார்போடுத் தழுவியவள் வருந்துவது ஏன்? http://thaenmaduratamil.blogspot.com/2014/08/blog-post_48.html என்னும் தங்களின் ஐங்குறுநூற்று உரைக்கும் விளக்கத்திற்கும் நான் புரிந்து கொண்ட படி பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.
      ஔவை துரைசாமிப் பிள்ளையின் கருத்து வேறாக இருக்கிறது.
      நியாயப்படுத்தக் காரணங்கள் இருந்தால் நாம் புரிந்து கொண்டது போல் பொருள் எழுதலாம்தானே? அதைத்தான் செய்தேன். உங்களின் முயற்சிக்கு முன் இதுவெல்லாம் ஒன்றுமில்லை.
      தொடருங்கள்.
      நிச்சயம் தொடர்வேன்!
      நன்றி!

      Delete
  9. அருமையான விளக்கங்கள் சகோ. க் ச் ட் த் ப் ற் ஐ தான் கசடதபற என்று படித்த ஞாபகம். ஆனால் கு சு டு து பு று என்று இப்போ தான் கேள்விப்படுகிறேன். மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் அப்பொழுது தான் நன்றாக விளங்கும் சகோ ஞாபகத்திலும் நிற்கும். அது தான் தாமதம். என்ன சகோ ஏதோ முணுமுனுக்கிற சத்தம் கேக்குது. இது புறக்குடத்தில வாக்கிற தண்ணி மாதிரி என்று. சச்சா நான் குவளையில் ஆவது ஏந்திடுவேன் சகோ dont worry ok வா ஹா ஹா தொடர்கிறேன் தொடருங்கள் வாழ்த்துக்கள் சகோ ...!

    ReplyDelete
    Replies
    1. ஆகத் தலைப்பு உங்களுக்கானதல்ல
      ஏனென்றால்
      உங்களைப்பற்றித்தான்
      எனக்குத் தெரியுமே!!!!!!!
      நன்றி

      Delete
  10. குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்திற்கும் எடுத்துக்காட்டு
    சிறந்த இலக்கண விளக்கம்
    பயனுள்ள பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  11. வாத்தியார் வேலை வலைப்பூவில்!...
    படியெடுத்துப் எமது நண்பர்களுடன் விவாதித்து செறிவாக்கி உள்வாங்கி பின்னர் வருகிறேன்..
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தமிழிலக்கணத்தில் எங்கும் இப்படிச் சொல்லப்படவில்லை தோழர்!
      இலக்கணம் கூறும் வரையறை தாண்டி இப்பதிவு குறித்துத் தமிழாசிரியர்களிடம் வேறு பார்வை இருந்தால் உரிய காரணங்களை நிச்சயம் விவாதிக்கப் பெரிதும் விரும்புகிறேன்.
      பயன்பாடு தெரியாக் கல்வியால் பாதிக்கப்படும் மாணவர்களைக் காப்பாற்றலாம் தானே?
      வாத்தியார் வேலை வலைப்பூவிலுமா????????
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  12. ஊமைக்கனவுகள் என்றுவிட்டு என்னமாய் அசத்துகிறீர்கள் மிக்க நன்றி.
    படிக்கிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வரவினுக்கும் பாராட்டிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

      Delete
  13. இலக்கணப் பாடம் என்றாலே நெஞ்சம்
    கலங்கிய காலம் நினைவுக்கு வருகிறது
    ஆனாலும் கற்றுவிட்ட இலக்கணங்கள் மீண்டும்
    பட்டை தீட்டப் படுகின்றன உங்கள் பதிவுகளால்
    மிக்க நன்றி பாவலரே

    தொடரட்டும் அறியாமைகள் நீக்கிக் கொள்கிறேன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete