Monday, 3 August 2015

தூக்கமும் ஒரு கனவும்.


நல்ல கனவுகள் தொடர வேண்டும் என்றும் கெட்ட கனவுகள் கலைந்து எழுந்தால் போதுமென்றும் நினைப்பது மனித இயல்புதான். இன்னொரு புறம் தூங்காத ஒருவருக்குத் தூக்கமென்பதே கனவுதான்.

அப்படித் தூக்கம் தொலைத்தவள் அவள்.

பாண்டியனைக் கண்ட நாள் முதல் அவளுடைய தூக்கம் போயிற்று. நெடுநாட்களுக்குப்பின் வலிந்து மூடின இமைகளுக்குள் வந்து நுழைந்தது ஒரு கனவு.

அது அவன் அவளைக் கரம் பற்றும் கனவு.

இப்படியும் நமக்கு நடக்குமா என்ற பூரிப்பில் திடுக்கிட்டு எழுகிறாள் அவள்.

எழுந்ததும்தான் தெரிகிறது வந்தது கனவுதான்.
அது உண்மையில்லை.

எழாமல் இருந்திருந்தால் கனவிலாவது அவனைக் கைப்பிடித்திருக்கலாம்.
நடக்காத ஒன்றை நடத்திக்காட்டிய  கனவும் போயிற்று. நனவிலும் அவன் இல்லை.

பாண்டியன் மேல் காதல் கொண்ட ஒருத்தியின் நிலையாக முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் உள்ள வெண்பா இந்தக் கலைந்த கனவை இப்படிச் சொல்கிறது.

ஓராற்றான் என்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறனென் கைப்பற்ற – வாரா
நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன்
கனவும் இழந்திருந்த வாறு“

= ஒருவழியாக என்கண்களின் இமைகள் சேர்ந்து சற்று உறக்கம் வரவும், அங்கு, கூரிய வேலையுடைய பாண்டியன் என் கையைப் பற்றினான். நடக்க முடியாத ஒரு செயல் நடக்கிறதே என்ற ஆனந்தத்தில் எழுந்துவிட்டேன். எனது தீவினையை என்னவென்று சொல்வது. இப்போது கனவும் போயிற்று.
நனவிலும் அவன் இல்லை.

சோகம் தான் :(

பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

34 comments:

  1. ஏற்கனவே..செத்து போன ஒருத்தர் கனவு கானச் சொன்னாரே....????

    ReplyDelete
    Replies
    1. ஆம் வலிப்போக்கரே!

      அது இறந்தவரின் உயிரோடு இருக்கும் கனவு.

      நன்றி.

      Delete
    2. அருமையான நச் பதில் ...
      கேள்வியும் நன்று பதிலும் நன்று

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இப்போது கனவும் போயிற்று.
    நனவிலும் அவன் இல்லை.

    வேதனைதான் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  4. இந்த முத்தொள்ளாயிரப் பாடலை படித்த பிறகே
    கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்......
    இந்த திரைப்பாடலை எழுதியிருப்பார்களோ?
    அற்புதமான வெண்பாவை விளக்கிய விதம் மிகவும் ஈர்த்தது. நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!

      கண்ணதாசன் நமது இலக்கியத்தின் பல பாடல்களில் இருந்தும் நிறைய எடுத்து எளிய தமிழில் எல்லார்க்கும் தந்தவர்.

      பழைய மரபிலக்கியங்களின் பிரதிபலிப்புகளை நீங்கள் அவரது திரையிசைப்பாடல்களில் பார்க்க முடியும்.

      தமிழ்க்கவிதை மரபை எளிமையாக்கி எல்லார்க்கும் தந்ததில் அவருக்குப் பெரும் பங்குண்டு. நன்றி.

      Delete
  5. இதனைப் படித்த போது கங்கைக் கரைத்தோட்டம், கன்னிப்பெண்கள் கூட்டம், கண்ணன் நடுவினிலே என்ற பாடலின் சில வரிகள் நினைவுக்கு வந்தன.
    “கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
    கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
    பொன்னழகு மேனியென்றான்
    பூச்சரங்கள் சூடித்தந்தான்
    கண்திறந்து பார்த்தேன்
    கண்ணன் அங்கு இல்லை
    கண்ணீர் பெருகியதே,”
    கண் திறந்து பார்க்காமல் இருந்திருந்தால் கனவு கலையாமல் இருந்திருக்கும்’ இப்போது கனவும் போயிற்று நனவிலும் அவன் இல்லை என்பது பெரிய சோகம் தான். நீங்கள் அறிமுகப்படுத்தும் முத்தொள்ளாயிரம் பாடலின் தாக்கத்தில் இத்திரையிசைப் பாடலைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பாரோ? நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      உண்மைதான் கண்ணதாசன் பல இலக்கியப் பாடற்கருத்துகளை எளிமையாக்கி எல்லார்க்கும் புரியும் விதத்தில் திரையிசைப் பாடல்களில் தந்திருக்கிறார்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  6. வேதனையை அருமையாகப் பகிர்ந்துள்ள விதம் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  7. மாலைப் பொழுதின் மயக்கத்தில் கனவு கண்டால் துயரம்தான் :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஆமாம்.காலையில் கண்ட கனவுதான் பலித்துவிடும் என்பார்களே!!! :)

      Delete
  8. அன்புள்ள அய்யா,

    முத்தொள்ளாயிரம் வெண்பா கலைந்த கனவைப் படித்த பொழுது எனக்கு கண்ணதாசனின் கனவு நினைவிற்கு வந்தது சரியா... தப்பா?


    மாலை பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி
    மனதில் இருந்தும்
    வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி காரணம் ஏன்
    தோழி (மாலை)

    இன்பம் சில நாள் துன்பம்
    சில நாள்
    என்றவர் யார் தோழி
    இன்பம் கனவில் துன்பம்
    எதிரில்
    காண்பது ஏன் தோழி காண்பது
    ஏன் தோழி (மாலை)

    மணமுடித்தவர் போல்
    அருகினிலே ஓர்
    வடிவு கண்டேன் தோழி
    மங்கை என் கையில்
    குங்குமம் தந்தார்
    மாலையிட்டார் தோழி

    வழி மறந்தேனோ வந்தவர்
    நெஞ்சில்
    சாய்ந்து விட்டேன் தோழி
    அவர் மறவேன் மறவேன் என்றார்
    உடனே மறந்து விட்டார் தோழி
    மறந்து விட்டார் தோழி
    பறந்து விட்டார் தோழி (மாலை)

    கனவில் வந்தவர் யாரென
    கேட்டேன்
    கணவர் என்றார் தோழி
    கணவர் என்றால் அவர் கனவு
    முடிந்ததும்
    பிரிந்தது ஏன் தோழி
    இளமை எல்லாம் வெறும் கனவு
    மயம்
    இதில் மறைந்தது சில காலம்
    தெளிவும் அடையாது முடிவும்
    தெரியாது
    மயங்குது எதிர் காலம்
    மயங்குது எதிர் காலம் (மாலை)

    -நன்றி.
    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. சரிதான் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  9. அருமை ஐயா!

    வெண்பாவும் அதனை விளக்கிய விதமும் சிறப்பு!
    கற்கின்றேன் நானுமிங்கே தொடர்ந்து...
    தொடருங்கள் ஐயா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  10. இலக்கிய சுவையூட்டும் பதிவு ..
    தொடர்க தோழர்.
    தம +

    ReplyDelete
  11. அருமை...

    நண்பர்கள் பலரின் பாடல்கள் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  12. வணக்கம் ஐயா,
    பேதையவள் என் செய்வாள்,,,,,,,,,,,,
    தங்கள் விளக்கம் அருமை,
    நன்றி தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பேதையவள் என்ன செய்தாள் என்பது அடுத்த பதிவில்............

      தொடருங்கள் பேராசிரியரே!

      நன்றி.

      Delete
  13. கனவும் போச்சு;நனவிலும் இல்லை!
    காதலின் வேதனை
    அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  14. நல்ல விளக்கம் . முத்தொள்ளாயிர வெண்பாக்கள் பலவும் சுவையானவை . மேலும் சில பாக்களை விளக்கக் கோருகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் செய்கிறேன் ஐயா.

      தங்களின் வருகை உவப்பு.

      நன்றி

      Delete
  15. முத்தொள்ளாயிரப் பாடல்கள் சுவை நிறைந்தவை! அதில் சிறப்பான ஒன்றை அழகாக விளக்கியமை அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  16. இதுதலைக் கொள்ளி எறும்பாய் துடிப்பாளே பாவம் நங்கை.
    ஏக்கம் நிறைந்த அவள் காதலை கனவின் மூலம் விளக்கியது அருமை !
    சுவை நிறைந்த பாடல்கள் மேலும் நல்குக ! நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  17. புதிய பாக்களை அறிமுகம் செய்து விளக்கமும் சொன்னது சிறப்பு. நுண்ணிய காதல் உணர்வை அழகாக சொல்கிறது வெண்பா

    ReplyDelete
  18. பல சமயங்களில் கனவுகள் பொய்த்துவிடுகின்றனதான். பாடல் சொல்லும் அந்தக் காதல் உணர்வை எவ்வளவு அழகாக நீங்கள் விளக்கம் தந்திருக்கின்றீர்கள்! காதல் கனவானால் வேதனைதான்...மிக அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி! சகோதரரே! தொடர்கின்றோம்..

    ReplyDelete