Friday 31 July 2015

ஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.




‘ஆனந்த யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன். இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்து இட்டதில்லை. ஆனால் இந்தப்பாடலின் கருத்தோட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதால் தொடர்ந்து இடவேண்டியதாயிற்று. இப்பதிவுடன் அவ்வளவுதான் இப்பாடலின் பொருள் வேட்டை என்னளவில் நிறைவுற்றது.

என் பதிவிற்கான பழைய தலைப்பிலிருந்தே தொடங்குகிறேன்.

யாழ் என்ற பழைய நரம்பிசைக்கருவி  பழந்தமிழரின் முக்கிய இசைக்கருவிகளுள் ஒன்று. இது பற்றிய விபுலானந்த அடிகளின் யாழ்நூல் முக்கியமானது. இன்று வீணை என்று சொல்லும் கருவிக்கு முன்னோடி இது.

முல்லை வைந்நுனை என்ற பாடலில், “நரம்பார்ப்பன்ன“ என்ற ஒரு சொல்லுக்கு, நச்சினார்க்கினியார், 

.““ அதன் கழுத்துவளையும் படி விசித்தவாரொலி நரம்பிற் கோதிய நால்வகைக் குற்றத்தினு மார்ப்பென்னுங் குற்றமெய்திய நரம்போசைபோல விசைப்பவென்க.“““

என்னும் குறிப்பினையும்

அவ்வாரொலி தாதுண்பறவை யொலிக்கணடங்குதலின் கேட்கின்றிலை“
என்னும் குறிப்பினையும் அளித்தது எனக்குச் சில சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இங்கு நச்சினார்க்கினியர் மேலே சொன்னதன் பொருளைப் பார்ப்போம்.

குதிரையின் கழுத்தில் இடப்பட்ட கடிவாளம், அது தன் கழுத்தை அசைக்கும்போதெல்லாம் ஒரு வித ஒலியை ஏற்படுத்துகிறது.

அவ்வொலி யாழின் நரம்பினை மீட்டும்போது எழும் ஆர்ப்பு என்னும் குற்றம் எய்திய நரம்பின் ஓசையைப் போல இசைக்கும்; அது வண்டுகள் செய்யும் ஒலியை ஒத்திருக்கும் என்பது அவர் சொல்லும் பொருள்.

நச்சினார்க்கினியர் கூறும் இக்கருத்தை ஆராயும் முன்,

யாழினை மீட்டும் விதங்கள் என்ன?

அதனை மீட்டும் போது ஏற்படும் குற்றங்கள் யாவை என்பதை முதலில் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

யாழினை நான்கு வகையாக மீட்டுவதற்கான குறிப்பினைப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான, பொருநராற்றுப்படை இப்படிச் சொல்கிறது,

“வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்“ ( பொருநர். 23 )

இதற்கு,

வாரியும் – நரம்புகளைக் கூடத் தழுவியும்

வடித்தும் – உருவியும்; வடித்தல் – நரம்பெறிதலென்றும் உரைப்பர்

உந்தியும் – தெறித்தும்

உறழ்ந்தும் – ஒன்றை விட்டு ஒன்றைத் தெறித்தும்.

என்று நச்சினார்க்கினியர்  உரையெழுதுவார்.

வார்த்தல் என்பது சுட்டுவிரலால் நரம்புகளை அசைத்தல் என்றும், வடித்தல் என்பது சுட்டுவிரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல் என்றும் உந்தல் என்பது நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும் மெலிவிற் பட்டதும் நிரல்பட்டதும் நிரலிழிபட்டதும் என்று அறிதல் என்றும் உறழ்தல் என்றது ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல் என்றும் இதனை விளக்குவார் சிலப்பதிகாரத்தின் உரையாசிரியராகிய அரும்பத உரையாசிரியர். ( சிலம்.7. கட்டுரை, 12 )

இந்நான்கு வகையன்றி யாழினினை எட்டுவகையாக மீட்டுவார்கள் என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுவார்.

“மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருட னுருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏருடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்து “ ( சிலப்பதிகாரம். கானல் வரி – 10-15)

இங்கு யாழினை மீட்ட எட்டுவகையான கரணங்கள் ( முறைகள் ) பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளன. இங்கும் யாழின் நரம்பொலி வண்டின் ஓசையைப் போன்று இருக்கிறது என்று சிலப்பதிகாரம் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

வார்தல்
வடித்தல்
உந்தல்
உறழ்தல்
உருட்டல்
தெருட்டல்
அள்ளல்
பட்டடை

எவ்வெவ் விரல்களை எந்தெந்த நரம்புகளில் எவ்விடத்தில் மீட்டி யாழினை இசைக்க வேண்டும் என்பதற்கான முறைகளே இவ்வெட்டும் ஆகும்.

சரி இப்போது யாழ் மீட்டும் போது ஏற்படும் குற்றங்கள் ஏதாவது இருக்கின்றனவா?

அதனையும் நச்சினார்க்கினியார்,

தீந்தொடை நரம்பின் தீமை சிறிதலாப் பொழுது மோதிப்
பூந்தொடை யரிவை காணப் புரிநெகிழ்த் துரோமங் காட்ட
தேங்கம ழோதி தோற்றாள் செல்வனுக் கென்ன மைந்தன்
வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான் ( சீவக சிந். 721 )

எனும் பாடலின் உரையில் குறிப்பிடுவார்.

நரம்பின் தீமை,

“கொடும்புரி மயிர்தும்பு முறுக்கிவை நான்கும்
நடுங்கா மரபிற் பகையென மொழிப “

என,

கொடும்புரி,

மயிர்

தும்பு

முறுக்கு

யாழ் நரம்பின் குற்றங்கள் நான்கென்பதே நச்சினார்க்கினியர் காட்டும்  மேற்கோள்.

பொதுவாக  யாழின் நரம்பினை மீட்டும் போது ஏற்படும் ஒலி வண்டுகளின் இம் மென்னும் ஒலிபோன்று இருக்கும் என்பதாக நம் இலக்கியங்களில் நிறைய குறிப்புகள் உண்டு.

வண்டுகள் செய்யும் ஒலி யாழின் ஓசையைப்  போலக் கேட்கும் என்பதற்கான பல குறிப்புகளை நச்சினார்க்கினியரே அவர் உரையெழுதிய பத்துப்பாட்டின் வெவ்வேறிடங்களில் காட்டுகிறார்.

அவற்றுள் சில,

பொருநராற்றுப்படையுள்,

“துடிக்குடிஞைக் குடிப்பாக்கத்
தியாழ்வண்டின் கொளைக்கேற்ப “(210-11)

= யாழோசை போலும் வண்டினது பாட்டினைக் கேட்டு

குறிஞ்சிப்பாட்டுள்

“காழகி லம்புகை கொளீஇ யாழிசை
யணிமிகு வரிமிஞி றார்ப்பத் தேங்கலந்து” (110-111)

=யாழோசையினது  அழகு மிகுகின்ற பாட்டினையுடைய மிஞிறுகள்  ஆரவாரிக்கும்படி அகிலினது நெய்கலந்து

நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கைகவர்  நரம்பி னிம்மென விமிரு
மாதர் வண்டொடு சுரும்புநயத் திறுத்த (146- 148 )

= நட்டராகம் ( பகலில் பாடப்படும் பண்களில் ஒன்று ) முற்றுப்பெற்ற  பாலையாழை வாசிக்க வல்லவன் தன் கையாலே வாசித்த நரம்பு போலே இம்மென்னும் ஓசைபட ஒலிக்கும் காதலை உடைய வண்டினத்தோடே தன்னிடத்து மணத்தை விரும்பித் தங்கின சுரும்பினங்களை

முல்லைப் பாட்டுள்,

“யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு
நாழ கொண்ட நறுவீ முல்லை
யரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது“ ( 8 – 10 )

= நறிய பூக்களை உடைய முல்லையினது அரும்புகள் யாழினது ஓசையினை உடைய இனமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி அவிழ்ந்த பூவை

என்பன அப்பாடலடிகளும் அவற்றிற்கு நச்சினார்க்கினியர் அளித்த உரையும் ஆவன.

இவற்றை நோக்க,

யாழின் நான்கு குற்றங்களுள் ஒன்று வண்டின் ஒலியை ஒத்த ஆர்த்தல் என்று கடந்த பதிவுகளில் நாம் பார்த்த பாடலுள் நச்சினார்க்கினியர் சொல்வது சரியா என ஐயுறத் தோன்றுகிறது.

இங்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது.

“நண்டுந் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே“

என்ற தொல்காப்பியர் கூற்றுப்படி,

நண்டு தும்பி போன்றவற்றிற்கெல்லாம் கேட்கும் திறன் இல்லை.

கேட்கும் திறன் இல்லாத தும்பியின் கிளையான வண்டு, நாம் பார்த்த பாடலில் தன்னுடைய தேரின் ஒலி கேட்டு  மருளும் என்று எண்ணும் தலைவன் அறிவில்லாதவனா?

அல்லது வண்டுக்குக் கேட்கும் திறன் உள்ளதா?

நமக்குத் தொல்காப்பியர் சொன்னாலென்ன நச்சினார்க்கினியர் சொன்னாலென்ன…ஏற்புடைய,அறிவிற்குகந்த கருத்துகளை மட்டுமே ஏற்க முடியும்.

ஆனால் நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்கள் மூல நூல் ஆசிரியர்கள் மேல் கண்மூடித்தனமான பக்தியை வைத்திருப்பவர்கள். ‘தொல்காப்பியராவது தவறு  செய்திருப்பதாவது’ என்றுதான் எண்ணப் பழக்கப்பட்டவர்கள்

( இதே பாடலுக்கு உரையெழுதிய பேராசிரியருக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. நண்டிற்கு மூக்கு இருக்கிறதா இல்லையா? அவர் ஒரே போடாக எப்படிப் போடுகிறார் பாருங்கள்,

நண்டிற்கு மூக்குண்டோ எனின் ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம்“ )

.தொல்காப்பியரே சொல்லிவிட்ட பிறகு, வண்டிற்குக் காது இருக்கிறது. கேட்கும் திறன் அதற்கு உண்டு என சொல்லிவிட முடியுமா?

ஆனால் இலக்கியம் வண்டு  கேட்கும் என்கிறது. என்ன செய்வது? இதனை நச்சினார்க்கினியர்  என்னென்னவோ சொல்லி எப்படியெல்லாம் சமாளித்துத் தொல்காப்பியரைக் காப்பாற்றுகிறார் பாருங்கள்!

பெரும்பாணாற்றுப் படையுள்,

பல்கால் பறவை கிளை செத்து ஓர்க்கும் – (183)

என்னும் அடியை,

= பல காலினை உடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிச் செவிகொடுத்துக் கேட்கும்.

என விளக்கும் நச்சினார்க்கினியர்,

வண்டுகளுக்குச் செவியால் கேட்கும் திறன் உண்டா என்பதை,

நண்டுந் தும்பியும்“ ( தொல்.மரபியல்.சூ 31) என்னும் சூத்திரத்தில் செவிப்பொறியான் இவை உணர்தல் கூறினாம்.“

என்று கூறிவிட்டார்.

ஆனால், நச்சினார்க்கினியர் தொல்காப்பிய மரபியலுக்கு எழுதிய உரை அழிந்துவிட்டது. அது இன்றில்லை.

அதே நேரம், சீவக சிந்தாமணியில்

“மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்
றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
உண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்

என்னும் பாடலின் உரையில் நச்சினார்க்கினியார்,

தும்பியின் இனம் என,

சுரும்பு

மிஞிறு

வண்டு

தேன் (ஈ)

என்னும் நான்கினைக் குறிப்பிடுகிறார்.

இந்நான்கனுள்,

எல்லாவிடங்களிலும் சேர்ந்து எல்லா மணத்திலும் செல்வன சுரும்பும் மிஞிறும் என்றும் இவ்வரண்டனுள் சிறந்தது சுரும்பு என்றும் கூறுகிறார்.

வண்டும் தேனீயும் நல்ல மணத்தினையே நாடிச் செல்லும்.

இவற்றுள் வண்டு தேனை உண்ணும்.

தேனீ தேனைக் கொண்டு தன் அடையில் சேர்க்கும் என வண்டினையும் தேனீயையும் வேறுபடுத்துகிறார்.

தும்பிக்குக் காது கேட்குமா என்னும் சர்ச்சைக்கு,


நண்டுந் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே “

என்று மரபியலில் தொல்காப்பியர் நண்டிற்குப் பிறகு, தும்பியை இரண்டாவதாகக் கூறியது அதற்கு அடுத்து,

 “மாவு மாக்களும் ஐந்தறிவினவே

 என்னும் சூத்திரத்தில் சொல்லப்படும் ஐந்தறிவு, தும்பிக்கும் உள்ளது என்பதைச் சொல்வதற்காகத்தான். இது வராததினால் வந்தது முடித்தல் என்னும் தந்திர உத்தி என்று கூறித் தொல்காப்பியரைக் காப்பாற்ற முயல்கிறார்.

இங்கே அவரால் வண்டுகள் கேட்கும் ஆற்றல் பெற்றன எனக் கூறும் சங்க இலக்கியத்தை ஏற்கத் தடையான தொல்காப்பியத்தை மறுக்க முடியாமல் தம்வசதிக்கேற்பத் தந்திர உத்தியால் மாற்றி ஏதேதோ சொல்லி  அவர்படும் பாட்டை நம்மால்  காண முடிகிறது.

இதோ நச்சினார்க்கினியர் கூறுகிறார்,

நண்டுந்…..பிறப்பே” என்று தும்பிக்குச் செவியின்றெனவே இவற்றிற்குஞ் செவியின்றாமாதலாலே வருத்த மிகுதியான் இவற்றை வாளா கூறியதன்றி வேறன்று. இவை ஈண்டு வந்து கரி போதலில. கேள்வியில்லன வருதலென்னை? என்பது கடா.

அதற்கு விடை.

ஆசிரியர் “நண்டுந் தும்பியும்“ என்று தும்பியைப் பின்வைத்தது, மேல் வருஞ் சூத்திரத்தின், “மாவு மாக்களு மையறிவினவே“ ( தொல் – மரபு. 32) என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற்கென்றுணர்க.

இதனை வாராததனால் வந்தது முடித்தலென்னும் தந்திர உத்தியாற் கொள்க வென்று ஆண்டு உரை கூறிப்போந்தாம். அதுவே ஆசிரியர் கருத்தென்பது சான்றோருணர்ந்தன்றே,

“பூத்த பொங்கர்த் துணையென வதிந்த
தாதுண் பறவை பேதுற லஞ்சி

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்“ என்று அப்பொருள் தோன்றக் கூறியதென்று உணர்க.

இக்கருத்தான் இவரும் செவியுணர்வுண்டென்று கூறினார்.“

நாம் பார்த்த பாடலில் வரும்,

துணையென வதிந்த தாதுண் பறவை

என்பதைக் கூட நச்சினார்க்கினியர் நாம் பொருள் கொண்டதுபோல் ‘துணையோடு தேனை உண்ணும் வண்டு’  என்ற பொருளைச் சொல்லவில்லை.

துணையொடு வசிக்கும் பறவை, வண்டும் தேனீயும் என்றும், தாதுண் பறவை சுரும்பென்றும்  அந்தச் சோலையில் மூவகை தும்பியின் இனங்கள் நிறைந்திருந்தன என்றே சொல்கிறார்.

முல்லை வைந்நுனை என்றபாடலை இந்த மட்டும் முடித்துக் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொள்கிறேன்.

இவ்வளவு நீளமான நிறைய மேற்கோள்களுடன் அலுப்பூட்டக் கூடிய பதிவென்பதால்தான் தலைப்பைப் “ படிக்க முடியாத பதிவு “ என்பதாகக் குறிப்பிட்டேன்.

இவ்வளவு நேரம் செலவு செய்து இந்தப் பதிவை நீங்கள் முழுவதுமாய் படித்திருந்தால், ஏறக்குறைய இப்பதிவிற்கென நான் செலவிட்ட  பல மணி நேரங்களைப் பயனுள்ளதாக்கி இருக்கிறீர்கள்.

அதற்கு எனது நன்றியும் வணக்கங்களும்.

தொடர்வோம்.



என்னும் முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி.



பட உதவி- நன்றி-  http://blog.dinamani.com/wp-content/uploads/2014/03/Yaaz.jpg




Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

24 comments:

  1. #இவ்வளவு நேரம் செலவு செய்து இந்தப் பதிவை நீங்கள் முழுவதுமாய் படித்திருந்தால்,#படிக்கும் போது வந்த புரட்சி கவியின் பாடல் ...
    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து மீட்ட மாட்டாயா :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு யாழ் மீட்டத் தெரியாது பகவானே..!

      உங்கள் கோரிக்கையை மறுக்க முடியுமா?

      உங்களுக்குக் கேட்க வேண்டுமென்று தோன்றினால் ஒரு பெட்டி நிறைய வண்டுகளைப் பார்சலில் அனுப்புகிறேன்.

      “ யாழிசை இனவண் டார்ப்ப“

      கேட்டு மகிழ்க. துன்பம் நேர்கையில் :)

      நன்றி.

      பதிவெழுதுதலுக்கான அவ்வளவு சுமையையும் ஒரு நொடியில் கலைத்துப் போன உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.


      Delete
  2. வாசித்தேன் ஐயா ! ஆனாலும் மீண்டும் மீண்டும் பொறுமையாக வாசித்து தான் கருத்து இடுவேன். சொல்லிட்டேன். ok வா ....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.

      Delete
  3. இன்னும் கற்றுக்கொள்ளவேண்டியதும் அதிகம் உள்ளது என்பதை உணர்த்துகிறது உங்களது பதிவு.

    ReplyDelete
    Replies
    1. “கல்விக் கரையில கற்பவர் நாள் சில “ என்பது எல்லார்க்கும் ஆனதுதான் ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. ஒவ்வொன்றும் பற்றிய தொடர்புடைய குறிப்புகள், அதற்கான விளக்கங்கள் என அசர வைக்கிறீர்கள்... இந்த தேடல்... தேடல் என்பதை விட ஆய்வு உங்களால் மட்டுமே முடியும்... பாராட்டுகள்...

    மற்றபடி எதிலும் உங்களின் திருப்தியே முக்கியம்... இந்த "எதிலும்" என்கிற புரிதலுக்கு நன்றி... வாழ்த்துகள்...

    நேரில் சந்திக்கும் போது நிறைய பேசுவோம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      இந்தப் பதிவிற்கான தேடல் சற்று அதிகம்தான் என்றாலும், இந்தப் பதிவு சுவையானதாய் இல்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.

      இதை இப்படித்தான் சொல்ல முடியும் என்பது வேறு.

      தங்களின் அறிவுரைக்கு நன்றி.

      நேரில் சந்திப்பு?!

      தங்களின் அன்பினுக்கு நன்றி.

      Delete

  5. அன்புள்ள அய்யா,
    ஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.
    மிகமிகப் பொருத்தமான தலைப்பு.

    முல்லை வைந்நுனை என்ற பாடலில், “நரம்பார்ப்பன்ன“ என்ற ஒரு சொல்லுக்கு, நச்சினார்க்கினியார், சொன்ன பொருளையும்...
    யாழினை மீட்டும் விதங்கள் என்ன?
    அதனை மீட்டும் போது ஏற்படும் குற்றங்கள் யாவை என்பதை விரிவாக விளக்கி ஆராய்ந்து பார்த்து ஆழம்வரை சென்றிருக்கிறீர்கள்.

    யாழினை நான்கு வகையாக மீட்டுவதற்கான குறிப்பினைப் பத்துப்பாட்டு , இந்நான்கு வகையன்றி யாழினினை எட்டுவகையாக மீட்டுவார்கள் என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் நின்று பாடல்கள் மூலம் எவ்வெவ் விரல்களை எந்தெந்த நரம்புகளில் எவ்விடத்தில் மீட்டி யாழினை இசைக்க வேண்டும் என்பதற்கான முறைகளையெல்லாம் விரிவாக பாடம் எடுத்து விட்டீர்கள்.

    நண்டுந் தும்பியும் நான்கறி வினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.[ஞிமிறு – தேனீ ]

    நான்காம் அறிவு நெய்தல் , முல்லை – பகல் ,மாலை


    கடற்கரையில் நண்டுகளை காண்கிறான் கையில் எடுத்துப் பார்க்கிறான் உயிருடன் .
    தும்பிகளின் காட்சித் தொகுப்பு .[முல்லை ]
    பல்லாயிரம் பழுதுண்ட ஒரு பெரிய குகையினில் தேனீக்களின் கூடாரங்கள் பல நூறு .அங்கு [தேனீ ] ஞமிறு
    தனின் செயல்களை காண்கிறான் .

    நண்டு தும்பி போன்றவற்றிற்கெல்லாம் கேட்கும் திறன் இல்லை
    என்ற தொல்காப்பியர் கூற்றைப் பறைசாற்றியிருக்கிறீர்கள். நமக்குத் தொல்காப்பியர் சொன்னாலென்ன நச்சினார்க்கினியர் சொன்னாலென்ன…ஏற்புடைய அறிவிற்குகந்த கருத்துகளை மட்டுமே ஏற்க முடியும் என்று நக்கீரனைப் போல் உரைத்திருக்கிறீர்கள்.
    ஆனந்த யாழை மீட்டுகிறாய்
    அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
    அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
    அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்.........

    அந்தி மழை பொழிகிறது
    ஒவ்வொரு துளியிலும்
    உன் முகம் தெரிகிறது...!
    -மிக்க நன்றி.
    த.ம. 6.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      ஒரு கை விரல்களால் தட்டச்ச முடியாத போதும் இவ்வளவு நீளமான பின்னூட்டம் காண நெகிழ்கிறேன்.

      உங்களின் அன்பினுக்கு என்ன செய்ய..!!

      இந்தப் பதிவிற்கான தேடலில் கிடைத்த சில சுவையான செய்திகளைத் தங்களோடு பகிர்ந்து கொண்டது ஆறுதல்.


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. வாசித்தும் கருத்து எழுதும் அளவிற்கு போதவில்லை அறிவு!
    மீண்டும் வாசித்து நன்கு மனதில் பதித்துக்கொண்டு வருகிறேன்.

    வாழ்த்துகிறேன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. மேலாய்விற்கு வேண்டுமானால் இக்கட்டுரை பயன்படலாம் சகோ.

      மற்றபடி,

      தேடக் கிடைத்த மேற்கோள்களின் தொகுப்பு அவ்வளவே!

      நீங்கள் அதிகம் சிரமப்பட வேண்டாம்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  7. வணக்கம்

    இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் கருத்திட்டேன்.

      நன்றி அண்ணா.

      Delete
  8. வணக்கம் சகோதரா !

    இந்த ஆக்கத்தினைப் படித்துக் கருத்துரைக்கும் அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை என்றே தான் சொல்வேன் !உங்களின் ஒவ்வொரு ஆக்கங்களும் மெய் சிலிர்க்க வைத்துப் போவது தான் உண்மை ! வாழ்த்துக்கள் சகோதரா மென் மேலும் இது போன்ற ஆக்கங்களைத் தாருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      நீண்ட நாட்கள் கழித்து வரும் உங்கள் வரவு மகிழ்வு.

      தகுதி இல்லை என்றெல்லாம் சொன்னால் நான் என்ன ஆவது? :(

      விளங்கும் படி எழுதென்று கூடச் சொல்லலாம்.

      தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  9. பழந்தமிழரின் யாழ் என்ற இசைக்கருவி பற்றி இன்று விரிவாக அறிந்துகொண்டேன். இதுவரை வீணை என்றே நினைத்திருந்தேன்.
    இலக்கியம் வண்டுக்குக் காது கேட்கும் என்கிறது; இலக்கண ஆசிரியரோ கேட்காது என்கிறார். இந்நிலையில் உரையாசிரியரின் பாடு கொஞ்சம் சிரமம் தான்.
    மூல நூல் ஆசிரியரைக் காப்பாற்ற நச்சினார்க்கினியர் சமாளிக்கும் விதத்தைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தீர்கள். உரையாசிரியர்களின் இது போன்ற சமாளிப்பு விஷயங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்வது இதுவே முதல் தடவை. உரையாசிரியர் நடை கடினம் என்பதால் அந்தப் பக்கமே இதுவரை போனதில்லை. நீங்கள் விளக்கியதால் தெரிந்து கொள்ள முடிந்தது.
    இத்தனை செய்திகளை விரிவாகச் சொல்லும் இப்பதிவுக்கு எத்தகைய கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அரிதின் முயன்று தேடித் தந்த தகவல்களுக்கு மிகவும் நன்றி சகோ! த ம வாக்கு 9
    படிக்க முடியாத பதிவு என்ற தலைப்பு படிக்க நினைப்பவர்களையும் இப்பக்கம் வரவிடாமல் விரட்டி விடும். எனவே இது போன்ற தலைப்பு கூடாதென்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      யாழ் தான் வீணையாகப் பெயர் மாற்றமும் உருமாற்றமும் பெற்றது.

      இந்தப்பதிவை முழுமையாகப் படித்ததற்கு முதலில் என் நன்றி.

      இதுபோன்ற கட்டுரைகளை வலைத்தளத்திற்கு வந்த புதிதில் எழுதி இருக்கிறேன்.

      கட்டுரைக்கான தரவுகளைத் தொகுத்துத் தட்டச்சுச் செய்தபின், எனக்குத் தோன்றியதையே தலைப்பாக இட்டேன்.

      இனிமேல் கவனமாய் இருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. வணக்கம்,
    அய்யா தாங்கள் ,,,,,,,,,,,,,
    தங்கள் உழைப்பிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
    பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  11. அப்பா ஒரு மாதிரி வாசித்து முடித்தேன்.
    யாழை எப்படி மீட்டுவது போன்ற நுண்ணிய விபரங்களுடன் குதிரையின் கழுத்தில் இடப்பட்ட கடிவாளம், அது தன் கழுத்தை அசைக்கும்போதெல்லாம் ஒரு வித ஒலியை ஏற்படுத்துகிறது.

    அது யாழை மீட்டும் ஒலி போல் உள்ளது. யாழோ வண்டுகள் ரீங்காரம் செய்வது போல் உள்ளது. எத்தனை ஆழ்ந்த வாசிப்பு அற்புதம் நீங்கள் இப்படி விளக்க விட்டால் சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல தானே இருந்திருக்கும் என் போன்றோருக்கு.

    வண்டுக்கும் தும்பிக்கும் நான்கறிவு அப்படியிருக்க கேட்கும் திறனில்லாதா போது ஏன் மணியின் நாவைக் கட்ட வேண்டும். இதில் யார் அறிவற்றவர்கள். சரியானகேள்விகள் எழவும் அதை தொடர்ந்த தேடுதல் விளக்கம்.
    நூல் ஆசிரியரைக் காப்பாற்ற நச்சினார்க்கினியர் சமாளிக்க படும் பாடு என்று ஓவொன்றும் விளக்க ம்..ம்..ம் இதை வாசிக்கவும் விளங்கவும் நானும் அதிக நேரம் தான் எடுத்துக் கொண்டேன் ஆனாலும் ரசித்துப் படித்தேன். அப்போ. தாங்கள் நிச்சயம் பெருமளவு நேரம் செலவு செய்திருப்பீர்கள். really great நிச்சயம் தலை வணங்க வேண்டிய பதிவு தான் மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. முழுவதுமாய் வாசித்துவிட்டோம். என்றாலும் மீண்டும் வாசிக்க வேண்டும்....

    பொருநராற்றுப்படை எழுதப்பட்ட காலத்திற்கும் சிலப்பதிகாரம் எழுடப்பட்ட காலத்திற்கும் உள்ள வேறுபாடு அந்த யாழ் வாசிப்பில் ஏற்பட்டிருக்கலாமோ? அதனால் தான் வாசிக்கும் வகைகள் கூடுதலாகச் சொல்லப்பட்டதோ சிலப்பதிகாரத்தில்? என்றாலும் அதே தான் இன்றும், யாழ், வீணை, கோட்டுவாத்தியம், ருத்ரவீணை என்று பல வடிவங்கள் பெற்றிருந்தாலும் பொருந்துகின்றது. இராவணன் கூட மீட்டியது வீணை என்று சொல்லப்பட்டாலும் அது யாழாகத்தான் இருக்க வேண்டும்...

    மிக அருமையான விளக்கங்கள். எப்படி இப்படி எல்லாம் தேடித் தேடி வாசித்து எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றீர்கள்! அதற்கே உங்களுக்கு பல வணக்கங்கள்! எங்களுக்கும் ஆர்வம் மேலிடத் தொடங்கிவிட்டது! மிக்க நன்றி! மிக்க நன்றி!
    ஏதோ ஒரு கலைப்பொருள் காட்சியகத்தில் யாழ் பார்த்திருக்கின்றோம் ஆனால் அது இந்த வடிவில்-நீங்கள் கொடுத்திருக்கும் படத்தில் உள்ளது போல் இருந்ததாக நினைவில்லை.

    தொடர்கின்றோம்...

    --கீதா

    ReplyDelete

  14. வணக்கம்!

    சங்க இலக்கியங்கள்! தண்டமிழ்த் தாய்தந்த
    தங்க இலக்கியங்கள் சாற்று!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete