Thursday 23 July 2015

இந்த அளவு போதை தரும் சரக்கு டாஸ்மாக்கில் கிடைக்குமா?



குடிப்பது தீங்கானது. தமிழகத்தில் மதுவைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, திடீரென்று பெரிய போதை தரும் சரக்கைப் பழைய தமிழ் இலக்கியத்தில் இருந்து  கண்டுபிடித்து, ‘இதெல்லாம் அப்பவே நாங்க கண்டுபிடிச்சிட்டோம்’ என்று தோளுயர்த்திச் சொல்லுவதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை.

இந்தத் தலைப்பில் சொல்லப்படும் சரக்குத் தரும் போதையைப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் என்னோடு சற்றுச் சோழர் காலத்திற்கு வரவேண்டி இருக்கும்.

அது, பன்னிரண்டாம் நூற்றாண்டில் மூன்று தலைமுறை சோழ அரசர்களின் அரசவைக் கவிஞனாக விளங்கிய ஒட்டக் கூத்தர் வாழ்ந்த காலம்.

அவர்தான் இந்தச் சரக்கைப் பற்றி எட்டு நூற்றாண்டுகள் கழித்து இன்று நாம் அறியத் துணை செய்பவர்.

அவர் தன்னனுபவத்தில் இருந்து இதைச் சொல்லவில்லை.

எழுத்தில் சொல்ல முடியாத சில செய்திகளை, ‘வல்லார் வாய்க் கேட்டுணர்க!’ என்று  உரையாசிரியர்கள் சொல்வதுண்டு.

அதுபோல்,

ஒட்டக்கூத்தர், வல்லார்வாய்க் கேட்டு உணர்ந்த சரக்கின் தன்மை இது.

அந்த இறந்தகாலத்தின் காட்சியினை இப்படி மீட்டெடுப்போம்.

ஒட்டக்கூத்தர் செல்லும் வழியில், அன்றைய சோழர்கால டாஸ்மாக்.

அதை அரசு நடத்தவில்லை என்பதும் அதனால் அரசு நடைபெறவில்லை என்பதும் மட்டுமே இன்றைக்கும் அன்றைக்கும் உள்ள மதுக்கடைகளுக்கிடையேயான வேறுபாடு.

மற்றபடி கடைக்குள் முண்டியடிக்கின்ற கூட்டமும் வெளியே, மணலைப் பரப்பி வைத்து, மீன் வறுவல், நண்டுப் பொறியல், கொத்துக் கறி  எனத் தொட்டுக்கொள்ளப் பலசரக்கும் சுடச்சுடத் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்தக் கால மதுபானக்கடை சிற்றுண்டிச் சாலைபோல.

அந்த வழியாய் நடக்கும் ஒட்டக்கூத்தரின் கண்களில் தென்படுகிறது, குடித்துக் கும்மாளமிடும் ஒரு கூட்டம் .

அட ..! இவர்கள் இராமாயணத்தையும்  மகாபாரதத்தையும் ஊர் ஊராய்ச் சென்று பாடிப் பொருள் விளக்கும் குழுவினர் அல்லவா?

பல்லாயிரக்கணக்கான அதன் பாடல்களை மனம் கொண்டலையும் நூலகங்கள்...!

இவர்களா இங்கு…. இப்படி…!

ஒட்டக்கூத்தரின் மனம் சஞ்சலமடைகிறது.

மெல்ல அவர்கள் அருகில் சென்று நிற்கிறார்.

குழுவினருள் ஒருவன் தலையுயர்த்தி ஒட்டக்கூத்தரைப் பார்த்து, “ என்ன?“ என்று கேட்கிறான்.

“ இல்லை. பல நூல்களைப் படித்துப் பாராயணம் செய்து வைத்திருக்கும் உங்களைப் போன்றோர்கள் இந்த அறிவை மயக்கும் கள்ளைக் குடிக்கலாமா?“ என்று மனவருத்தத்துடன் கேட்கிறார் கூத்தர்.

“ எங்கள் அரசனின் மாலையில் இருக்கும் வண்டு கூடத் தேனை உண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படிப்பட்ட பூம்புகாரில் வாழும் நாங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா?

அதற்காகத்தான் ஒரு மிடற்றுக்கே ‘சுள்‘ என்று போதையேறும் இந்தக் கள்ளைக் குடித்துக் கொண்டிருக்கிறோம் ” என்கிறான் அவர்களுள் ஒருவன்.

கூத்தர் மெல்ல, “ இதைக்  குடித்தால் உங்கள் அறிவு மயங்கிவிடாதா? உங்களுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பினை நீங்கள் இழந்து விட மாட்டீர்களா?“ என்று கேட்கிறார்.

“ அட……… எவ்வளவு குடித்தாலும் நாங்க நிதானமாத்தான் இருப்போம்!

எங்களைப் பரிசோதித்துப் பார்க்கிறீர்களா?

உங்களுக்கு இப்ப  எதைச் சொல்லட்டும்?

இராமாயணத்தையா…. மகாபாரதத்தையா…

சரி ….! இரண்டில் பெரிது மகாபாரதம்தான்.

சாதாரணமா இருக்கும் போது, இதை எத்தனை மாதங்கள் சொல்வோம்.

இப்போ இதை ஒரே வரிலே சொல்றேன் பார், 

வாலி துரோபதையோட மூக்கறுத்த கதைதானே மகாபாரதம்?!

இப்பயாவது நாங்கத் தெளிவாத்தான் இருக்கிறோமின்னு நம்பு! போய் உன் வேலையைப் பார்“

  என்று அடுத்த மிடறினை உள்ளிறக்குகிறான் அவன்.

கூடி இருப்பவர்கள, “ நாங்க எவ்வளவு தெளிவா இருக்கோம், பார்த்தீர்களா?“ என்று கூத்தரைக் கேலி செய்து சிரிக்கிறார்கள்.

‘ஆமாமா! ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிங்க’ என்று மனதிற்குள் இவ்வளவு அறிவுடையவர்களையே நிதானம் இழக்கவைத்த, அந்தச் சுள் என்ற கள்ளின் மாயத்தை நினைத்தபடி அந்த இடத்தைவிட்டு அகன்று செல்கிறார் ஒட்டக்கூத்தர்.

பின்னே,

வாலி இராமாயணத்தில் வருபவன்.

துரோபதை மகாபாரதத்தில் வருபவள்.

மூக்கரியப்பட்டவள் சூர்ப்பனகை.

அரிந்தவன் இலட்சுமணன்.

வாலி திரௌபதையை மூக்கரிந்த கதைதானே மாபாரதம்? என்று சொன்னால் பாவம், ஒட்டக்கூத்தர் என்னத்தான் செய்வார்?

இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சேர்த்து ஒரு கலக்குக் கலக்கிவிட்டது அந்தப் போதை!

ஒரு கணம் ஒட்டக்கூத்தரையும்தான்.

அவ்வளவு போதை அந்தக் கள்ளுக்கு..!

பாடல் இதுதான்.


""புள்ளிருக்கும் தார்மார்பன் பூம்புகார் வாழ்களியேம்
 சுள்ளிருக்கும் கள்ளையுண்டும் சோர்விலேம் - உள்ளபடி
சொல்லவா வாலிது ரோபதையை மூக்கரிந்த
தல்லவா மாபா ரதம்?''

( தார் – மாலை.

புள் – ( இங்கு ) வண்டு

புள்ளிருக்கும் தார் மாலை என்பதால் வாடாத மாலை என்பதை அறியலாம்.

புள்ளிருக்கும் தார் மார்பன் – வண்டுகள் தேன் உண்ணும் வாடா மாலையை அணிந்த சோழன்

பூம்புகார் வாழ் களியேம் – பூம்புகாரிலே வாழ்ந்து என்றும் மகிழ்ந்திருப்போம்.

சுள்ளிருக்கும் கள் – குடிக்கச் சுள்ளென்று போதை தரும் கள்

உண்டு சோர்விலோம் – உண்பதனால் எங்கள்  அறிவு சோர்ந்து போகாது.

உள்ளபடி மாபாரதம் சொல்லவா? – உள்ளபடியே மகாபாரதத்தைச் சொல்லவா?

“வாலி துரோபதையை மூக்கரிந்ததுதானே மகாபாரதம்?“ )

…………………………………………………………………………………………………………………………………………………………………………………

தமிழில் இது போன்ற மதுவினைக்குறித்துப் பாடும் பாடல்கள் ‘களி’ என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றைக் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம் தனது பதினெட்டு உறுப்புகளுள் ஒன்றெனக் கொள்ளும்.

கள்ளின் சிறப்பைப் பாடுவதோ,  அல்லது கள்ளை உண்டவனது அர்த்தமற்ற உளறலைக் குறித்துப் பாடுவதோ  இந்தக் களி என்னும் உறுப்பின் பாடுபொருளாகும்.

இப்பாடலின் இந்த இறுதி வரியின் சுவையை உணராமல்,

‘வாலி என்பது வாலுத்தனம் செய்யும் துச்சாதனன் என்றும், மூக்கரிதல் என்பது அவமானப்படுத்துதல் என்றும் எனவே துச்சாதனன் துகில் உரிந்து திரௌபதியை அவமானப்படுத்தியதைத்தான் மாபாரதம் என்று புலவர் சிலேடையாய்ச் சொல்கிறார் என்றும்’ ஒட்டக்கூத்தரைக் காப்பாற்றும் முயற்சியை இணையத்துக் காண அது, கானகநாடன் சுனையைப் போல  இன்னொரு நகைச்சுவையாகவே எனக்குப் படுகிறது. 

இல்லை இல்லை ‘வாலி துரோபதையை மூக்கரிந்ததுதான் மகாபாரதம்’ என்று  இதற்குப் பின்னும் சாதிப்பவர்கள் சாதிக்கலாம். நான் உங்களைச் சந்தேகப்படப் போவதில்லை. :)

தொடர்வோம்!

பட உதவி - நன்றி  https://encrypted-tbn2.gstatic.com/images

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

52 comments:

  1. செம சரக்கு சகோ!! ஹஹஹ இங்கு சரக்கு என்பதற்கு இரு பொருள் கொள்க(நாங்களும் தமிழ் படிக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளத்தான் அஹஹஹ்ஹ்) சரக்கு பற்றி இத்தனை சரக்கா உங்களிடம் என்ற வியப்புதான்....டாஸ்மாக் நன்றாகவே ஆராய வைத்திருக்கின்றது...!!

    நாங்கள் வாசித்ததை வைத்து , நாங்கள் டாஸ்மாக் தமிழரின் அடையாளமா என்று (முதலில் அடையாளமாகிப் போகின்றதோ என்று வைத்துவிட்டுப் பின்னர் அடையாளமா என்று மாற்றினோம்...) போட்டு கொஞ்சம் நையாண்டி செய்யப் போக அதற்கான உங்கள் பின்னூட்டத்தில் காவேரிபூம்பட்டினம் குறித்து எழுதியதை வாசித்த போதே நீங்கள் ஆராயத் தொடங்கிவீட்டிர்கள் என்று நினைத்தோம் சரிதான்...

    நல்ல சரக்கு எங்களுக்கும் தந்ததற்கு மிக்க நன்றி...இப்போது நீங்கள் இலக்கியம் பேசப் போக எங்கள் எல்லோருக்குமே அது தொற்றிக் கொண்டுள்ளது சகோ...

    மிக்க நன்றி மீண்டும் டாஸ்மாக் சரக்கை விட விறு விறுப்பான சரக்கு தந்தமைக்கு!!

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா

      வாருங்கள் சகோ..!

      இந்தப் பதிவிற்கு நன்றி என்றால் அதை உங்களுக்குத்தான் சொல்ல வேண்டும்.

      “தமிழரின் அடையாளத்திற்கான தேடலில்“தான் இந்தப் பாடல் கிடைத்தது.

      அது சங்க காலம் என்பதால் இந்தச் சோழர் காலத்தைச் சேர்க்க முடியவில்லை.

      சரி...... தனியே ஒரு பதிவாக்கும் அளவிற்கு இதில் செய்தி ஒன்றும் இல்லை.

      சமணத்திற்கு இடையே இது போன்ற சிறு ஓய்வு தேவைப்படுகிறது.

      கொஞ்சம் என்னை நான் உற்சாகப் படுத்திக் கொள்ளவும்....!

      டாஸ்மாக் சரக்கைவிட விறுவிறுப்பான சரக்கைத் தந்தேன் என்றெல்லாம் இப்படிப் பலரறியக் கொளுத்திப் போட்டால் என் நிலைமை என்னாவது..?

      இப்பொழுதுதான் உணர்வு கொண்டு தமிழினம் ஆங்காங்கே, செருப்பும் விளக்கமாறுமாகப் புறப்பட்டிருக்கிறது.

      அதை அப்படியே நம்பக்கம் திருப்புவது போலத் தெரிகிறதே..!!!

      நம்மால் தாங்கலாகாது :)


      நன்றி.

      Delete
    2. ஹஹஹ உங்களை மட்டுமா சகோ! //மிக்க நன்றி மீண்டும் டாஸ்மாக் சரக்கை விட விறு விறுப்பான சரக்கு தந்தமைக்கு// என்று சொல்லி நாங்களும் அதில் மாட்டிக் கொண்டோமோ?!!!

      Delete
  2. ஆக! இன்னமும் மூக்கறிந்த கதையை சரிதான் என்பவர்களும் கள் குடித்திருப்பார்கள் என்றா சொல்லவருகிறீர்கள் அண்ணா!! (ஏதோ நம்மால் முடிந்தது:)))

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.


      நான் உங்கள் ஒரு சில பதிவுகளுக்கு வந்து பின்னூட்டமிடாதது என்தப்புத்தான்.

      அதற்காக இப்படி எல்லாம் வரிசை கட்டிக் கிளம்பினால் நான் என்னாவது ..:)

      கள் இல்லாத காலத்தில் கள் குடித்திருப்பார்கள் என்று நான் சொல்வேனா..?


      நன்றி.

      Delete
    2. ஓஹோ! அப்படியானால் குடித்திருப்பார்கள் என்று மட்டும் சொல்லுகிறீர்கள் இல்லையா?;)

      Delete
    3. குடிக்காமல் உயிர்~கள் வாழமுடியுமா என்ன? :)

      Delete
  3. போன பதிவிலேயே நினைத்தேன்(தோசை). சேர்மானம் சரி இல்லையே என்று. இப்போ தலைப்பைப் பார்த்ததுமே தலைசுற்றி விட்டது. யூ டூ விஜூ அண்ணா!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. உளுந்து அரிசியின் சேர்மானம் சரியாய் வரவில்லையோ..?!

      காண மகிழ்தல் கள்ளுக்கு இல்லை என்கிறான் வள்ளுவன்.

      உங்களுக்குக் கண்டதும் தலை சுற்றிவிட்டது என்றால் கொஞ்சம் அதிகம் தான்.

      ஹ ஹ ஹா

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. உளுந்தும் அரிசியும் இல்லை. மதுரையும், திருச்சியும். கம்மென்ட் இன்னும் வரல (இதை வடிவேலு டீ வரல மாதிரி படிச்சுக்கோங்க:))

      Delete
    3. மதுரையும் திருச்சியும் என்னும் போது,

      நாயக்கர் மஹாலை பெயர்த்தெடுத்துத் திருச்சியில் அமைக்கக் கொணர்ந்து, பின் மீண்டும் மதுரைக்கே எடுத்துப்போய் இருக்கும் இடத்தில் வைத்தாக என்றோ எங்கோ படித்ததுதான் நினைவுக்கு வருகிறது.

      மதுரைக்குச் சொந்தமானது மதுரைக்குத்தான்.

      உஷ்.........அப்பாடா...................

      Delete
  4. சகோ நாங்கள் எழுதி வைத்துச் சொல்லாமல் விட்ட ஒரு நல்ல கருத்தை நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள். //அதை அரசு நடத்தவில்லை என்பதும் அதனால் அரசு நடைபெறவில்லை என்பதும் மட்டுமே இன்றைக்கும் அன்றைக்கும் உள்ள மதுக்கடைகளுக்கிடையேயான வேறுபாடு.// நீங்கள் சொல்லியவிதம் அருமை..நாங்கள் இரண்டையும் பொருத்தி எழுதி வைத்திருந்த ஒரு பத்தியை எடுத்துவிட்டோம்...அதனால் இரண்டும் அவ்வளவாக ஒட்டாத து போல் தோன்றியது..

    களி போன்ற தெரியாத தகவல்கள் தந்து சரக்கை நல்ல சரக்காக கொடுத்துள்ளீர்கள்!

    மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      ‘நல்ல சரக்கு‘ என்கிற உங்களின் பாராட்டைக் கேட்க மகிழ்ச்சிதான்.


      தொடர்கின்றமைக்கு நன்றி.

      Delete
  5. அதெப்படி சரக்கேத்தினா மட்டும் ஸ்டெடி என்கிறார்கள். சரக்கேத் தினாலும் பிரச்சினை சரக்கில்லா விட்டாலும் பிரச்சினை தான். எனக்கு சாப்பிடும் களி தான் தெரியும். ஹா ஹா இதெல்லாம் உங்கள் புண்ணியத்தில் தெரிந்து கொள்கிறேன். கதை சரியாத் தெரியாவிட்டாலும் பிழையாய் சொல்லலாம். மறந்தும் மாறிச் சொல்லலாம் எல்லாம் சரக்கின் குற்றம் ஏன்று சொல்லக் கூடாது ok வா. ஒரு முறை எங்கோ மாறிச் சொன்னேன். அப்படி அதான் சொல்கிறேன். ஆமா viju என்றால் ஸ்டெடியா சொல்வாரா? என்று எண்ண சிரிப்பை அடக்க முடியவில்லை .....ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஆம். இல்லாததை இருப்பதாகச் சொல்லும் குணம்.

      எதுவும் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற அதீத தன்னம்பிக்கை.

      தவறான கணிப்புகள்.

      இதெல்லாம் இல்லாவிட்டால் அப்புறம் என்ன களிப்பு இருக்கக்கூடும் அதில்.?

      //ஆமா viju என்றால் ஸ்டெடியா சொல்வாரா?//

      இதுதானே வேணாங்கிறது. எல்லாருமா சேரந்துகிட்டு, ‘என்னம்மா... என்னை இப்படிப் பண்றிங்களேம்மா!

      நான் ஸ்டெடியா இருக்கேன்னாலும் பிரச்சினை...

      நான் ஸ்டெடியா இல்லைன்னாலும் பிரச்சினை....

      இந்தக் கதை நினைவுக்கு வருது,

      “ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யைச் சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

      நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

      ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

      அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''

      அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.

      உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.

      'அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதைச் சட்டென உணர்ந்து, ,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை. நீ சொல்வது உண்மைதான்! 'என்று அவசரஅவசரமாக மறுத்தான்.

      ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''

      விழி பிதுங்கிப் போனது அரசனுக்கு.

      வேறு வழி?

      அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

      நான் ஸ்டெடியாகச் சொல்லவில்லை அம்மை:)

      Delete
  6. அன்புள்ள அய்யா,

    இந்த அளவு போதை தரும் சரக்கு டாஸ்மாக்கில் கிடைக்குமா?

    “மதுவிலக்கு அமல்படுத்துவோங்கிற நேரத்தில...போயி...!”

    “யாரது...என்ன... ! தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் தலா 2 ‘எலைட்’ உயர்தர மதுக்கடைகள் திறக்க வாய்மொழி உத்தரவு எனத் ‘தினத்தந்தி’ செய்தியப் படிச்சிட்டு குடிமகன்களுக்கெல்லாம் ஒரே குஷி.

    “யோவ்... இந்த அண்டாவ வச்சு தண்ணி அடிச்சிட்டு வா”

    “இப்படி ஒரு பொறுப்பான வேலைய செய்யச் சொன்னா நா என்ன செய்ய மட்டேன்னா சொல்லுவேன்...”

    ...............................................................................................................................

    “யோவ்...எங்கய்யா அண்டா...?”

    “அண்டாவ வச்சேன்... தண்ணிய அடிச்சேன்....இருந்தாலும் சோம பாணம் .... சுரா பாணம் நம்ம நாட்டுச் சரக்கு ‘எலைட்’ ல கிடைக்குமா...? சாரி... இது உள்நாட்டுச் சரக்குல்ல...சுள்ளிருக்கும் கள்ளையுண்டாலும் ஸ்டெடியா இருப்போமுல்ல...”

    கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
    உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. #0930
    தெளிவுரை
    போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.
    சாலமன் பாப்பையா
    ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.
    கலைஞர்
    ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.
    மு.வரதராசன்

    -நன்றி.
    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா

      ஐயா வணக்கம்.

      தங்கள் பாணியே தனிதான்.

      குறளுக்கான விளக்கம் அருமை.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  7. அண்ணா, சமணம் படித்து சாந்தமாய் இருந்தால் இப்படி அதிர்ச்சி கொடுத்துவிட்டீர்களே! :)

    ReplyDelete
    Replies
    1. சாந்தம் என்பது, செஞ்சாந்தெறியினும் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந் தோடா நிலைமை“ அல்லவா?

      இதற்கே அதிர்ந்தால் எப்படி? :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  8. சரக்கு சோழர் காலத்திலும் சும்மா சுள்ளுன்னு வேலை பார்த்திருக்குல்ல...
    இல்லைன்னா இரண்டு காப்பியத்தையும் கலந்து சும்மா ஒரு வரியில சொல்ல முடியுமா என்ன... எம்புட்டு அறிவைக் கொடுக்குது... மக்களை அழிக்குதுன்னு இன்னைக்கு ஆளாளுக்கு இழுத்து மூடுவேன்னு சொல்றானுங்க... அறிவாளிக அழிஞ்சு போவானுங்கன்னு கொஞ்சமாவது யோசிக்கிறானுங்களா...

    நல்ல பகிர்வு சார்... அருமை.

    ReplyDelete
    Replies
    1. அதானே :)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  9. அனுபவமா என்றெல்லாம் கேட்க மாட்டேன் !!!

    காலம் எதுவானாலும் "கள்ளின்" குணம் ஒன்றுதான் என்பது மிக தெளிவாக புரிகிறது !

    " இல்லை இல்லை ‘வாலி துரோபதையை மூக்கரிந்ததுதான் மகாபாரதம்’ என்று இதற்குப் பின்னும் சாதிப்பவர்கள் சாதிக்கலாம். நான் உங்களைச் சந்தேகப்படப் போவதில்லை. :) "

    தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சாதிப்பவர்களுக்கு கள்ளே தேவையில்லையே !

    இந்தப்பக்க சீமை சரக்கை விடவும் சுள்ளாப்பான சரக்கு ! ( அனுபவம் இல்லை சகோதரா... ‘வல்லார் வாய்க் கேட்டுணர்க!’ கதைதான் !!!)

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அண்ணா..!

      வல்லார்வாய் கேட்டு உணர்தல்.... நான் கள்ளார் வாய்க் கேட்பதில்லை.

      முயலுக்கு மூன்றுகால் என்பர்கள் தனிரகம்.

      அது அவர் மனதில் இருக்கும் பிழை.

      இதைப்போல்தான் ஒரு பிடிவாதக்காரன், ஒரு ஞானியிடம் வந்தான்.

      அவனது கையில் ஒரு பட்டாம்பூச்சி இருந்தது.

      அதைக் கைகளால் மூடியபடி, அவரிடம் கேட்டான்.

      “இப்போது இந்தப் பட்டாம் பூச்சி உயிரோடு இருக்கிறதா?“

      ஞானி இறந்து விட்டது எனச் சொன்னால் கைகளை விரித்து அதைப் பறக்கவிட்டு நீ யெல்லாம் என்ன ஞானி என்று கேட்கலாம்.

      இல்லை. பட்டாம் பூச்சி உயிரோடுதான் இருக்கிறது என்று அவர் சொன்னால், கைகளை இறுக்கி நசுக்கி அதைச் சாகடித்துவிட்டு எங்கே உயிரோடு இருக்கிறது எனக் கேட்கலாம் என்பது அவன் திட்டம்.

      ஞானி மெல்லப் புன்னகைத்தபடி சொன்னார்,

      “ அது உயிரோடு இருப்பதும் சாவதும் உன் கைகளில் இருக்கிறது அப்பனே!”.

      முயலுக்கு மூன்றுகளால் என்பதும் அதைப் போன்ற மனநிலை.

      நாம் அதற்கு என்ன செய்ய ..?

      நன்றி

      Delete
    2. ஜோசப்...

      உங்களின் குட்டிகதை ஆஸ்திரிய விஞ்ஞானி Erwin Schrödingerன், Schrödinger's cat தியரியை ஞாபகப்படுத்துவது ஆச்சரியம் !

      Delete
  10. இப்படியும் பொருள் உள்ளதோ? சற்றே திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள். அண்மையில் நாவுக்கரசர் தேவாரப் பதிகம் (திருநாகேச்சரம்) படித்தபோது முதல் பாடல் ".....தீயவனை திருநாகேச்சுரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே" என்று நிறைவுற்றதைப் படித்தேன். சிவனை, தீயவன் என்கின்றாரே நாவுக்கரசர் என்று யோசித்தேன். உண்மை அவ்வாறு இல்லை. வேள்வித்தீயாய் இருப்பவன் என்ற பொருள் அமையும்படி அவர் கூறியுள்ளார் என்பதை பின்னர் உணர்ந்தேன். தங்களது இப்பதிவு என்னை நாவுக்கரசப்பெருமானிடம் அழைத்துச்சென்றுவிட்டது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ““““““““““இப்படியும் பொருள் உள்ளதோ? சற்றே திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.“““““““““““““““““

      புரியவில்லை முனைவர் ஐயா.

      நீங்கள் கொண்ட பொருள் என்ன?

      விளக்கினால் உதவியாய் இருக்கும்.

      நன்றி.

      Delete
  11. //பல்லாயிரக்கணக்கான அதன் பாடல்களை மனம் கொண்டலையும் நூலகங்கள்...!///
    அருமையான சொல்லாடல் நண்பரே
    ந்ன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. மணவை ஐயா கருத்துரையும் அருமை...

    நீங்களும் ஒரு கலக்குக் கலக்கி விட்டீர்கள் ஐயா... ரசித்தேன்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நான் இங்கு எதையும் கலக்கவில்லையே. ;)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  13. டாஸ்மார்க் சரக்கைப் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை.
    ஆனால் இது போன்ற தங்கள் பகிர்வுகளின் சரக்கு எங்களை மீண்டும் மீண்டும் இழுத்து வரத்தான் செய்கிறது.

    "மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்த்தவும்" என்ற புறநானூற்றுப்பாடல் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      இப்படிச் சங்க இலக்கியங்களில் இருந்தெல்லாம் மேற்கோள் நினைவுக்கு வரும்போது, இன்னும் எவ்வளவு படிக்க வேண்டும் என பிரமிப்பாய் இருக்கிறது எனக்கு.

      தொடர்கின்றமைக்கு நன்றி.

      Delete
    2. ஆசிரியரே எனக்கு மேற்கோள் மட்டும்தான் காட்டத்தெரிகிறது.
      தங்களைப் போல அழகாக விளக்கத் தெரியவில்லை பாருங்கள்.

      Delete
  14. பாடல் பழையது என்றாலும் உங்களது விளக்கம் எனக்கு புதிது. இலக்கிய இன்பம்! படிக்கப் படிக்க மயக்கம். அவ்வை கூட ’பெரிய கள்’ என்றும் ‘சிறிய கள்’ என்றும் சொல்லி இருக்கிறார்.

    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      நீங்கள் காட்டும் ஔவையின் பாட்டில் பெரிய கள் சிறிய கள் என்பது அதிக அளவு குறைந்த அளவு என்பதைக் குறிக்கப்பயன்பட்டிருக்கிறது.

      நன்றி.

      Delete
  15. பதிவில் தமிழ்நாட்டில்தான் குடிப்பவர்கள் அதிகம் என்னும் பொருள்தொக்கி நிற்கிறது. ஆனால் புள்ளிவிவரக் கணக்குப்படி ( அதெல்லாம் கேட்கக் கூடாது) தமிழ்நாட்டைவிட கேரள மக்களே அதிகமாய்க் குடிக்கின்றனராமே. குடிபோதையில் இருப்பவர் உண்மையைத்தான் சொல்வராமே. ஒரு வேளை “ வாலி துரோபதையை மூக்கரிந்ததுதானே மகாபாரதம் “ என்பது போலும் கதை இருக்கலாம்......!!!!

    ReplyDelete
    Replies
    1. யார் குடித்தால் என்ன ஐயா?

      இதை எல்லாமா ஒப்பிடுவது.

      குடிபோதையில் இருப்பவர்கள் உண்மையைச் சொல்வார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

      அப்படிக் கதை இருந்தால் அதுவும் நல்லதுதான்.


      நன்றி.

      Delete
  16. அருமை தங்களின் , (இலக்கிய உலகில்) தேடுதல் வேட்டையில் கிடைத்த வைரம்! இப்பதிவு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  17. முற்றிலும் புதிய தகவல். அருமையான நடை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  18. //தமிழில் இது போன்ற மதுவினைக்குறித்துப் பாடும் பாடல்கள் ‘களி’ என்று அழைக்கப்படுகின்றன.//

    மது குடிப்பவர்களுக்கு அது ‘மகிழ்ச்சி’ தருகிறது என்பதால் மது குறித்து பாடும் பாடல்களை களி என்கிறார்களோ. (களி என்பதற்கு மகிழ்ச்சி, என்ற பொருள் உள்ளது என எண்ணுகிறேன்.)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      களி என்ற சொல்லே கள் என்பதில் இருந்து வந்ததுதான்.

      கள் - களிப்பு - களி

      என்று கள்ளை வேர்ச்சொல்லாகக் கொண்டவையே இவை.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  19. குடித்தவன் உண்மையைத்தான் சொல்வான் என்று அப்பேயே சொல்லி அடித்திருக்கிறார்கள்...அப்போ..கள்ளு..இப்போ சாராயம்...

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் சொல்லப்படுவது உண்மையா வலிப்போக்கரே?!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  20. மது மயக்கத்தில் இருப்பவர்களின் உளறலுக்கு நகைச்சுவை மிக்க சிறந்த எடுத்துக்காட்டு வாலி திரெளபதியின் மூக்கறுத்த கதை தான் மகாபாரதம் என்பது. இதற்கு வேறு ஒரு விளக்கம் சொல்வது நிச்சயமாய் நகைச்சுவை தான். கனக நாடன் சுனை படிக்கவேண்டும். மது குறித்துப் பாடும் பாடல்கள் களி என்று அறிந்தேன். ஞானி குட்டிக்கதை சூப்பர்!.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      இப்படிப் பல பாடல்களை எழுதியவனைக் காப்பாற்றுகிறேன் என்று பாடலின் சுவையைக் கொன்ற கதைகள் தமிழில் நிறைய உண்டு.

      தமிழ் அதற்கும் இடமளிக்கிறது என்பதுதான் அதில் சிறப்பு.

      பின்னூட்ட மறுமொழிகளையும் படிக்கின்றமைக்கு நன்றிகள்.

      Delete
  21. அறிஞர்களையே பிறழ வைப்பது மது என்பதை அழகாக விளக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் தொடர்ச்சிக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  22. எவ்வளவு போட்டார்களோ,இவ்வளவு தெளிவாக இருக்கிறார்களே!
    எங்கிருந்தெல்லாம் எதைப் பற்றியெல்லாம் பாடலகளைப் பகிர்கிறீர்கள்.நன்று

    ReplyDelete
  23. வணக்கம் என் ஆசானே,
    சில காரணங்களால் உடன் வரஇயலவில்லை,

    பதிவு போதை அதிகமோ,,,,,

    இல்லை இல்லை ‘வாலி துரோபதையை மூக்கரிந்ததுதான் மகாபாரதம்’ என்று இதற்குப் பின்னும் சாதிப்பவர்கள் சாதிக்கலாம். நான் உங்களைச் சந்தேகப்படப் போவதில்லை. :)

    ஆம் உண்மைதான் ஏற்றுக்கொள்ள,,

    முயலுக்கு 3 கால் என ஓரு மொழி உண்டு,

    வாழ்த்துக்கள்

    நன்றி,

    ReplyDelete

  24. வணக்கம்!

    கள்ளை அளித்தீர்! களிப்புற்றேன்! இப்பதிவு
    கொள்ளையிடும் என்னைக் குடித்து!


    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete