Tuesday, 21 July 2015

சமணம் ( 5 ) – தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?



உலகத்தின் தோற்றத்திற்கு அணுக்கள் ஒன்றிணைந்து அதனோடு, காலம் ஆகாயம் எனுமிவை சேரவேண்டும் என்றும் அதே நேரம் இவையன்றி வேறு சிலவும் வேண்டுமென்பது சமணர் கருத்து என்றும் சமணம் பற்றிய சென்ற பதிவில் முடித்திருந்தோம்.

இப்பதிவு அணுக்கள், காலம் ஆகாயம் என்பதோடு உலகின் தோற்றத்திற்குச் சமணம் சொல்லும் மேலும் இரு கூறுகளைப் பற்றியது. 

அவை,
       தருமம்
       அதருமம் என்பன.

சமீபத்தில் ஒருபதிவருடைய பின்னூட்டத்தில் தருமம் என்ற சொல்லைப் பதிவில் இருந்து காட்டி இதன் பொருள் வேறு என்பதாக வேறொரு பதிவர் குறித்திருந்தார்.

அந்தப் பொருளைப் பற்றி விளக்குவதாகவும் கூறியிருந்தார்.

எப்பதிவு பின்னூட்டம் இட்டவர் யார் என்பதை நான் மறந்துவிட்டேன்.

ஆனால் அதைப் பார்த்தபோது, ஒருவேளை சமணக் கருத்தியலின் படி சொல்கிறாரோ என  நினைத்துக்கொண்டேன்.

ஏனெனில் சமணக் கருத்துப்படி,

நாம் இன்று வழங்கும் நியாயதர்மம், அநியாயம் என்ற பொருளில் இந்தத் தருமம் அதர்மம் என்பன குறிப்பிடப்படவில்லை.

சமணர் தருமம் என்பதை ஒன்றினை இயக்கும் சக்தியாகக் கொள்கின்றனர்.

அதர்மம் என்பது நிறுத்தி வைக்கும்  சக்தி.

அதே நேரம், இந்தத் தருமம் என்னும் இயக்கும் சக்தியால், இயங்குகின்ற ஒருபொருளைத் தொடர்ந்து இயக்க  முடியுமே ஒழிய நிலையாக உள்ள ஒரு பொருளை ஒருபோதும் இயக்க முடியாது.

இதைப் போன்றே, அதருமம் என்னும் நிறுத்தும் சக்தியால், இயங்காமல் இருக்கும் பொருளை அதே நிலையில் வைத்திருக்க முடியுமே தவிர இயங்கிக்கொண்டிருக்கும் ஒருபொருளை நிறுத்த முடியாது.

தருமம் அதருமம் என்பதற்குச் சமணர் கொள்ளும் பொருள் நாம் இன்று வழங்கும் பொருளுக்கு வேறானது.

எனவே

அணுக்கள் சேர்ந்த நிலையில் உள்ள ஸ்கந்தம், ஒரு பொருளில் இருந்து பிரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு, மேலும் பிரிக்க முடியாத நிலையை அடைகின்ற அணு என இவ்விரண்டு நிலையில் உள்ள  புற்கலம்.

இவற்றின் திரட்சியும் பிரிவும் ஏற்படும் நொடி முதல் ஊழிவரை ஆகும் காலம்,

இவை நிகழ இடமளிக்கும் ஆகாயம்,

இயக்கத்தை அதன் நிலையிலேயே வைத்திருக்கும் இயக்க ஆற்றலான தருமம்,

நிலைமத்தை ( இயங்காப்பொருளை ) அதன் தன்மையிலேயே நீடிக்கச்செய்யும் அதர்மம்,

இவ்வைந்துமே  உலகில் காணப்படும் அனைத்து அசீவ ( உயிர்த்தன்மை இல்லாத / குறைவுள்ள ) பொருட்களின் தோற்றத்திற்குக் காரணம் என்பர் சமணர்.

இவ்வைந்தனுள், காலத்திற்கு மட்டுமே பருமன் இல்லை.

புற்கலம், தர்மம், அதர்மம் ஆகாயம் என்னும் நான்கும் சமணர் கருத்துப்படி பருமன் உடையன.

சீவனுக்கும் அசீவனுக்கும் ஏற்படக்கூடிய தொடர்பிற்குத் தொடக்கம் என்ற ஒன்று இல்லை. ( அநாதி ). ஆனால் முடிவு உண்டு.

தொடக்கம் இல்லாத ஒன்றிற்கு முடிவு என்பது உண்டா என்றால் உண்டு என்பார் அவர்கள்.

பொதுவாகத் தொடக்கம் – முடிவு என்பதன் அடிப்படையில் எல்லாவற்றையும் நான்கு வகையாகப் பாகுபடுத்துகின்றனர்.


1)   தொடக்கம் உள்ளது. முடிவு இல்லாதது.

2)   தொடக்கம் இல்லை. முடிவு உண்டு.

3)   தொடக்கமும் உண்டு. முடிவும் உண்டு.

4)   தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை.

இதில் சமணர் காட்டும் சீவ அசீவ தன்மை தொடக்கம் இல்லை. முடிவு உண்டு என்பதே!

பதிவிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ இதை முடிக்கும் போது நினைவிற்கு வந்தபாடல்...,

“எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்! “


தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn3.gstatic.com/images.


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

36 comments:

  1. அடுத்த முறையும் சுவாரஸ்யமாக ஏதாவது சாப்பாட்டோடு தான் வருவீர்கள் என்று நினைத்தேன். என்ன சரியான சாப்பாட்டு ராமி என்று திட்டுகிறீர்களா என்ன.......... சரி சரி திரும்ப வருகிறேன் . ok வா

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்.

      ஹ ஹ ஹா..

      சாப்பாடு..!

      வந்து கொண்டே இருக்கிறது.

      பசி எல்லாம் அடங்கிபின் படிக்க வேண்டியவைதானே இது போன்ற பதிவுகள்?!

      தங்களின் முதல் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  2. அன்புள்ள அய்யா,

    தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?

    புற்கலம், காலம், ஆகாயம், தருமம், அதர்மம் இவ்வைந்துமே உலகில் காணப்படும் அனைத்து அசீவ பொருட்களின் தோற்றத்திற்குக் காரணம் என்பர் சமணர் என்று விளக்கியிருக்கிறீர்கள். இதெல்லாம் சிற்றறிவிற்குப் புரியமாட்டேன் என்கிறது.

    புரியாதததைப் புரியவைக்கும் புதுஇடமோ?!

    ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
    யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
    ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
    ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

    -நன்றி.
    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. என் சிற்றறிவிற்கும் புரிந்தா விளக்குகிறேன்?!

      ஹ ஹ ஹா

      புரிந்தால் அது பேரறிவாகிவிடாதா?


      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வணக்கம் என் ஆசானே,
    தங்கள் விளக்கம் அருமை,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்படி பொசுக் கென முடித்துவிட்டீர்கள்.

      நன்றி

      Delete
  5. \\\சமணர் தருமம் என்பதை ஒன்றினை இயக்கும் சக்தியாகக் கொள்கின்றனர்.

    அதர்மம் என்பது நிறுத்தி வைக்கும் சக்தி.

    அதே நேரம், இந்தத் தருமம் என்னும் இயக்கும் சக்தியால், இயங்குகின்ற ஒருபொருளைத் தொடர்ந்து இயக்க முடியுமே ஒழிய நிலையாக உள்ள ஒரு பொருளை ஒருபோதும் இயக்க முடியாது.

    இதைப் போன்றே, அதருமம் என்னும் நிறுத்தும் சக்தியால், இயங்காமல் இருக்கும் பொருளை அதே நிலையில் வைத்திருக்க முடியுமே தவிர இயங்கிக்கொண்டிருக்கும் ஒருபொருளை நிறுத்த முடியாது.////
    தர்மம் அதர்மம் என்று பேசிக் கொள்கிறோம்.அதற்கேற்ப நடக்கவேண்டும் என்று எத்தனிக்கிறோம் அவர்களோ இப்படி வேறு அர்த்தம் கொள்கிறார்கள்.
    ம்..ம் அப்போ நமக்கு விடுதலையே இல்லாமால் முடிவின்றி தொடர்ந்து உழலப் போகிறோம் போலிருக்கிறது இப் பூவுலகில். சமணர்கள் விநோதமாகவே சிந்தித்து செயல் படுகிறார்கள். எப்போதும் போல் ஆச்சரியப் படுத்தும் பதிவு மேலும் அறிய அவா. நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா.

      இது அவர்கள் கருத்து.

      அவர்களின் நியாயம்.

      அவர்களின் நம்பிக்கை.

      அவ்வளவுதான்.


      நன்றி.

      Delete
  6. தர்மம், அதர்மம் விளக்கம் அருமை...
    அருமையான பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே

      Delete
  7. தர்மம், அதர்மம் இப்படி பொருள் படுமா? நிறைய அறிந்துகொண்டேன், நன்றி அண்ணா.

    இந்த தொடர்பதிவை என் முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. சில கூறுகளைப் பார்க்கும்போது சைவ சித்தாந்தம் போல புரிந்தது புரியாமலும் புரியாதது புரிந்தும் காணப்படுகிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சைவ சித்தாந்ததின் பல கூறுகளும், சமண பௌத்த கருத்தாக்கங்களில் இருந்து எழுந்ததுதான் எனக் கருதுகிறேன் முனைவரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  9. நல்ல விளக்கம்...

    முடிவு இல்லாதது அன்பு ஒன்றே (என்னைப் பொருத்தவரை...)

    ReplyDelete
    Replies
    1. நானும் உடன்படுகிறேன். என்னைப் பொருத்தவரையும் .

      நன்றி.

      Delete
  10. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொரு விடயத்தையும் பற்றி சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் புரிதல் அதிகம்.. பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா!

    உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்தாற்தான் கொஞ்சமாவது
    என் (மர)மண்டைக்குள் ஏறும்! இடையில் வந்து
    ஆடுபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கடித்து...
    அதற்குப் பின்னூட்டம் எனும் பெயரில் ஏதும் எழுதுவது அர்த்தமில்லை!..

    ஆயினும் நிறையத் தெரிந்துகொள்கிறேன் உங்கள் பதிவுகளால்!

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  12. கோட்பாடுகளின் விளக்கம் அருமை

    ReplyDelete
  13. இந்த தர்மம் அதர்மம் பற்றி நிறையவே கோட்பாடுகள் வந்து விட்டன. மஹாபாரத தர்மம் கீதா தர்மம் இப்போது சமண தர்மம் அதர்மம் , எல்லாமே குழப்புகின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நான் சொல்லியதில் ஏதேனும் குழப்பம் இருப்பின் சொல்லாம்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. தருமம்
    அதர்மம் என்பதற்கு சமணர்கள் புரிந்து கொள்வது வேறு பொருளில் இருக்கிறது. இது போல் இன்னும் நாம் பயன்படுத்தும் பல்வேறு சொற்களுக்கும் அவர்களின் புரிதல் வேற மாதிரியாகத்தான் இருக்கும் போல...

    ReplyDelete
    Replies
    1. ஓரளவிற்கு அப்படித்தான்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  15. சமணம் பற்றி அறிந்துகொண்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி நண்பரே!

      Delete
  16. தருமம், அதருமம் என்ற சொற்களுக்குச் சமணர் கூறும் கருத்துக்களை அறிந்தேன். தொடக்கம் இல்லாததற்கு முடிவுண்டு என்று அவர்கள் கூறுவதைத் தான் நம்ப முடியவில்லை. அதற்கு அவர்களின் விளக்கம் என்ன? தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரையும் போல இது சமணரின் நம்பிக்கை.

      இதற்கு நான் அறிந்தவரை தர்கத்தில் ஆதாரமில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  17. கமலச் சூத்திரத்தை சாதாரணமாய் புரிந்து கொள்ள முடியாது என்பார்கள் ,நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அதைத் தானா :)

    ReplyDelete
    Replies
    1. நான் பட்டத்திற்கு இடும் சூத்திரக் கயிறுக்கே தடுமாறுபவன்.

      என்னிடம் கமல சூத்திரம் என்றெல்லாம் கேட்கலாமா பகவானே?
      :)

      நன்றி

      Delete
  18. இந்தத் தருமம் என்னும் இயக்கும் சக்தியால், இயங்குகின்ற ஒருபொருளைத் தொடர்ந்து இயக்க முடியுமே ஒழிய நிலையாக உள்ள ஒரு பொருளை ஒருபோதும் இயக்க முடியாது.

    இதைப் போன்றே, அதருமம் என்னும் நிறுத்தும் சக்தியால், இயங்காமல் இருக்கும் பொருளை அதே நிலையில் வைத்திருக்க முடியுமே தவிர இயங்கிக்கொண்டிருக்கும் ஒருபொருளை நிறுத்த முடியாது.//

    இயக்கும் சக்தி தருமம், நிறுத்தும் சக்தி அதருமம் பொருள், அதன் விளக்கமே வித்தியாசமாக இருக்கின்றதே...இது எதைச் சொல்லுகின்றது என்பது சற்று புரியவில்லை...உலகம் தோன்றியது எப்படி என்று சொல்லும் இயற்பியலில் உள்ள ஸ்டாட்டிக்- நிலையான, டைனமிக்-மாறுவது பற்றிச் சொல்லுகின்றதோ....

    தொடர்கின்றோம் புரியும் என்று நினைக்கின்றோம்....


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே.

      முழுக்க முழுக்க அறிவியலைக் கொண்டு ஒரு மதம் உருவாக முடியாது.

      பின் அது அறிவியல் ஆகிவிடும்.


      எல்லாச் சமயத்திலும் பகுத்தறிவிற்கொவ்வாச் சில நம்பிக்கைகள் இருக்கின்றன.

      சமணமும் அதற்கு விதிவிலக்கல்ல.

      இன்னும் அடுத்தடுத்துச் சமணத்தில் நாம் காணப்போவது அதன் இந்த மறுபக்கம்தான்.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  19. இதுவரை எழுதிய ஐந்து பகுதிகளையும் படிச்சாச்சு சார்.
    அருமையானத்ஒரு தொடர்.
    இதற்கு முன்பு ஏதும் சமணம் பற்றி அறியாத எனக்கு
    உங்களின் இந்த தொடர் உதவியாக இருக்கும்.
    பதிவில் பலது புரிந்தும் சிலது புரியாமலும் இருக்கு.
    இது சகஜம்தான் மீண்டும் வந்து வாசிப்பேன்!

    பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள், பதில்கள் என்று
    எல்லாவற்றையும் மிகவும் ரசித்தேன்.
    அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் சார்!

    ReplyDelete

  20. வணக்கம்!

    நல்ல சமணம் நவின்ற நெறிகளைச்
    சொல்லச் சுரக்கும் சுவை!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete