Friday 9 October 2015

இன்புற வழிகள் ஏழு;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-15

முதலில் இவை ஓர் அரசனின் நன்மைக்காய்ப் புலவர்களால் சொல்லப்பட்ட வழிமுறைகள் என்பதைச் சொல்லிவிடுகிறேன். நமக்கும் பயன்படும் கருத்துகள் இதில் இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல்: “ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி ….” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்தான். அதன் உரையுள் அரசன் இன்புற்றிருக்க என்ன செய்ய வேண்டும் என சொல்லும் பாடல் இது.

ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்
வென்று களங்கொண்ட வெல்வேந்தே – சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையத்துள் ஐந்துவென்(று) ஆறகற்றி
ஏழ்கடிந்(து) இன்புற்(று) இரு.

இதில் வரிசையாக ஒன்று முதல் ஏழு வரையான எண்கள் இடம்பெற்றுள்ளன. அவை அந்த எண்களைக் குறிக்காமல் குறிப்பால் வேறு பொருளைக் குறித்து வருகின்றன.

ஒன்றில் இரண்டாய்ந்து என்பதற்கு அறிவினால் நன்மையும் தீமையும் ஆய்ந்து என்று பொருள் கொள்ளலாம்.

மூன்று அடக்கி என்பதற்கு, நட்பையும் பகையையும் ஏனையோரையும் தன்வயப்படுத்தி என்பது பொருள். இதில் நட்பை அன்பினாலும் பகையைத் துணிவினாலும் ஏனையோரை நடுவுநிலையாலும் தன்வயப்படுத்தலாம்.

நான்கினால் வெல்லுதல் என்பது சாம பேத தான தண்டம் என்னும் இவற்றால் வெல்லுதல். இதனை யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நால்வகைப் படைகளாலும் வெல்லுதல் என்றும் கொள்ளலாம்.

ஐந்து வெல்லுதல் என்பது ஐந்து புலன்களையும் நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் என்பதைக் குறிக்கிறது.

அகற்ற வேண்டிய ஆறு ஆவன, ( அகற்றுதல் என்பதற்கு அதிகரித்தல் என்ற பொருள் உண்டு . இங்கு அப்பொருளே கொள்ளப்பட வேண்டும்)
படை, மக்கள், உணவு, நல் ஆலோசகர் குழு ( அமைச்சு ), நட்பு, பாதுகாப்பு ( அரண் ).

விரட்டப்பட வேண்டிய ஏழாவன, பேராசை, கடுஞ்சொல், அதிகப்படியான தண்டனை, சூதாட்டம், அதிகப்படியான பொருள் சேர்த்தல், கள், அதிக காமம்.

 ஒன்றினால் இரண்டை ஆராய்ந்து, மூன்றை அடக்கி, நான்கினால் ஐந்தை வென்று,ஆறையும் பெருக்கி ஏழையும் விரட்டினால் இன்புற்று வாழலாம் என்கிறது இந்தப் பாடல்.

ஒன்று முதலான இந்த எண்களுக்கு வேறு சில பொருளும் சொல்கிறார்கள். அறிய வேண்டுவோர் புறப்பொருள் வெண்பாமாலை நூலைப் பார்க்கலாம்.

இப்படி எண்களை வைத்துக்கொண்டு பாடல்கள் எழுதுவதை எண்ணலங்காரம் என்று நம் இலக்கணம் சொல்கிறது.

பலருக்கும் தெரிந்த காளமேகத்தின்,

முக்காலை ஊன்றி மூவிரண்டு செல்கையில்
ஐந்துதலை நாகம் அழுத்த கடித்தது ,” ( என்ன செய்வது? ) 

என்ற கேள்வியும், அதற்கு,

பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால்வாங்கித் தேய்.“

என்ற பதிலும் இந்த எண்ணலங்காரத்தினுள்படுவதுதான். இப்பாடலும் இதற்கான பொருளும் இணையத்தில் பலராலும்  சொல்லப்பட்டுவிட்டது.

எனினும் இதுவரை அறியாதவர்க்காய்,

முக்கால் – இரண்டு காலுடன் கையில் ஊன்றும் கோலுடன் மூன்றுகால்.

மூவிரண்டு – ஆறு. தமிழில்ஆறு என்பதற்கு வழி என்ற பொருள் இருக்கிறது.

- கையில் கோலை ஊன்றி வழியில் செல்லும் போது

ஐந்து தலை நாகம் – ஐந்து தலை நாகம் என்பது எப்பக்கமும் முள்ளினை உடைய நெருஞ்சியைக் குறித்தது.

அழுந்தக் கடித்தது – (நடக்கும் போது கிடந்த நெருஞ்சியை காலால்) மிதிக்க அது குத்தியது.  ( என்ன செய்வது?)

அதற்கான பதில்,

பத்து ரதன் – பத்து – தசம், பத்து ரதன் - தசரதன்

புத்திரனின் மித்திரன் – தசரதனின் புத்திரன் இராமன். அவன் நண்பன் ( மித்திரன் ) சுக்ரிவன்

மித்திரனின் சத்துரு – மித்திரனாகிய சுக்ரிவனின் எதிரி ( சத்துரு ) வாலி .

சத்துருவின் பத்தினி – சத்ருவாகிய அந்த வாலியின் மனைவி தாரை.

பத்தினியின் கால் வாங்கித் தேய் – தாரை என்னும் சொல்லில் உள்ள ( துணைக்) காலை எடுத்துவிட்டு ( வாங்கி ) தேய். தாரை என்கிற சொல்லின் துணைக்காலை எடுத்துவிட்டால், தரை.

நெருஞ்சி முள் குத்தினால் என்ன செய்வது என்ற கேள்விக்குக் காலைத்  தரையில் தேய் என்னும் பதிலை இந்தப் பாடல் இப்படிச் சொல்கிறது. நேரடியாகச் சொன்னால் அதிலென்ன ரசனை இருக்கிறது?

இப்படிப்பட்ட பல சொல்லாடல்களுள் புதைந்து கிடக்கிறது மொழியின் நுட்பம்.

வாருங்கள் ...! நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

45 comments:

  1. அன்புள்ள அய்யா,

    புறப்பொருள் வெண்பாமாலையில் எண்ணலங்காரப் பாடலைச் சொல்லி அரசனின் நன்மைக்காய்ப் புலவர்களால் அன்று சொல்லப்பட்ட வழிமுறைகள் இன்றும் நமக்கு பொருந்துவதாய் இருக்கிறது. மேலும் காளமேகத்தின் பாடல் நெருஞ்சி முள் குத்தினால் என்ன செய்வது என்பதை இலக்கிய நயத்துடன் சொல்லப்பட்டிருப்பது கண்டு இன்புற்றோம்.

    த.ம.+1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகையும் பின்னூட்டமும் மகிழ்வளிக்கின்றது ஐயா.

      மிக்க நன்றி.

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    ஒவ்வாரு பாடலின் வரிகளை பரித்து அற்புதமாக விளக்கம் சொல்லியுள்ளீர்கள்... அழகாக விளங்கி கொண்டேன் ஐயா.. தொடருங்கள் காத்திருக்கேன் ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. எண்ணலங்கார இலக்கணச் சிறப்பும் கவி காளமேகப் புலவரின்
    பாடல் விளக்கமும் மிக அருமை ஐயா!

    சிறப்பான விளக்கம் கண்டு சிந்தை மகிழ்ந்தேன்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்
    புறப்பொருள் வெண்பாமாலைத் தரும் விளக்கமும் தனி பதிவாக எழுதலாம் இல்லையா ஐயா....
    உண்மை தான் ஐயா எதையும் நேரிடையாகச் சொன்னால் ரசனையாக இருக்காது தான்.
    நெருஞ்சி முள் தான்..
    நல்ல பதிவிற்கு நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      புறப்பொருள் வெண்பாமாலை தரும் விளக்கம் குறித்த பதிவினைத் தாங்களே எழுதலாமே..!

      காத்திருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  5. காலை தரையில் தேய் என்பதற்குதானா இவ்வளவு பில்ட்டப்பு ?காளமேகப் புலவர் எப்படித்தான் இப்படி யோசித்தாரோ :)

    ReplyDelete
    Replies
    1. வேற வேலை :)

      நன்றி பகவானே!

      Delete
  6. அருமையான பாடலுக்கு அழகான விளக்கம். சொல்லிய விதம் எல்லாவற்றையும் விட அலாதி!
    த ம 7

    ReplyDelete
  7. வணக்கம் பாவலரே !


    கலக்கிய நீரில் கொக்கும்
    ......,,கடியொளி சேர்த்துக் கண்ணில்
    விலக்கியே வேண்டாத் தீனை
    ........விரும்பிய மீனைக் கொத்தும்
    இலக்கியச் சுவையின் இன்பம்
    ........இருந்திடும் மறைவை வெட்டித்
    துலக்கிடும் முறைகள் கண்டேன்
    ........தொடர்ந்திட வேண்டிக் கொண்டேன் !

    அருமையான அழகான பதிவு பாவலரே
    பதில் இறுக்க வார்த்தைகள் தேடினேன்
    இவ்வாறுதான் வந்தது தவறுகள் இருப்பின்
    பொறுத்தருள்க பாவலரே வாழ்க வளமுடன்

    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு


    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாத்திறமும் மரபுநுட்பமும் காணப் பாவலர் என்கிற பட்டம் தங்கட்கே பொருந்துவதாகும் பாவலரே!

      புதிதாய் ஒன்றும் எழுதக் காணேணே..!

      தொடருங்கள்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  8. வகை(5) மரபுக்கவிதைப் போட்டி
    மின் இலக்கியப் போட்டி முடிவுகள்!

    மரபுக் கவிதை

    முதல் இடம்

    திருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி
    20. →புறப்படு வரிப்புலியே←

    போட்டியில் வெற்றி பெற்றமைக்கு
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  9. வணக்கம் ஐயனே!
    மரபுக் கவிதையில் முதலிடம் பெற்றமைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் நிறைந்த புகழும் வெற்றிகளும் வந்து குவியவும் எல்லா நலன்களும் கிட்டவும் வேண்டி வாழ்த்துகிறேன் ...! அதில் என்ன சந்தேகம் எனக்குத் தான் முதலிலேயே தெரியுமே ... பதிவை வசித்துக் கருத்து இடும் நிலையில் இல்லை பின்னர் வந்து இடுகிறேன். தயவு செய்து குறை நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோரின் எண்ணமே பலிதமாயிற்று அம்மா.!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  10. முதல் பாடல் நான் அறியாதது. இரண்டாம் பாடல் ஏற்கெனவே அறிந்தது என்றாலும் அதன் ஓசை நயத்தால் மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  11. கல்தோன்றி....என்பது புறப்பொருள் வெண்பாமலையில் உள்ளது என்பதை இப்பதிவின் மூலமாக அறிந்தேன். சொல்லுக்கான பொருள்களைப் பகிர்ந்துள்ள விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  12. மரபுக்கவியின் ஆசான் என உலகுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இடம் உம்மையன்றி யாருக்கு?
    மனம் நிறை வாழ்த்துக்கள் ஐயா
    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      இந்தப்பட்டமெல்லாம் எதற்குப் பேராசிரியரே!

      தங்களைப் போன்றவர்களின் வருகையும் ஊக்கமுமே என்னை இயக்குகிறது என்பேன்.

      அதற்காய் என்றும் நன்றியுண்டு.

      நன்றி.

      Delete
  13. வாழ்த்துகள் விஜு சார்!
    பரிசும் சிறப்புப் பெருகிறது!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  14. எதிர்பார்த்தது போலவே மரபுக்கவிதையில் முதற்பரிசு! பரிசு கிடைக்காமலிருந்தால் தான் வியப்பு! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கவில்லை என்பதே மகிழ்ச்சி!

      போட்டிகள் எனக்கு உவப்பானதில்லை.


      இருந்தும் சில நல்ல காரணங்களுக்காய்..!


      நன்றி.

      Delete
  15. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. நமக்கும் பயன்படும் கருத்துகள் இதில் இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.ஹா ஹா ..... பயன்படாத ஒரு பதிவும் நீங்கள் இடுவதில்லையே.அப்புறம் என்ன ...... நலன் பயக்கும் பதிவுகள் நயமுடனே நல்குவீரே. ம்..ம்
    எண்ணலங்காரம் இப்படியெல்லாம் இருக்கிறது என்று இப்போ தான் அறிகிறேன். எத்தனை சுவை மிகுந்த பாடல்களும் நற்கருத்துக்களும் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த மரமண்டைக்கு உறைக்கக் கூடிய நிறைய பதிவுகள், நல்வழிப் படுத்தும் வகையில் நல்க வேண்டுகிறேன். ஹா ஹா ......

    ஒன்றினால் இரண்டை ஆராய்ந்து, மூன்றை அடக்கி, நான்கினால் ஐந்தை வென்று,ஆறையும் பெருக்கி ஏழையும் விரட்டினால் இன்புற்று வாழலாம் என்கிறது இந்தப் பாடல்.
    இன்புற்றிருக்க இத்தனை வழிகள் இருக்கின்றனவே சரி இனி பின் பற்றிடுவோம். நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!
    அப்போ நாளை எல்லோரும் புதுகையில் கொண்டாட்டத்தில். எனக்கு வருத்தம் தான் நான் கலந்து கொள்ளவில்லை தங்களை எல்லாம் சந்திக்க முடிய வில்லை என்று...ம்ம்...ம்..ம் என்ன செய்வது தாங்கள் ஆயத்தம் தானே ......

    ReplyDelete
    Replies
    1. ம் அது எப்படிமா ஆயத்தம் ஆகாமல்..
      நானும் உங்களைப் போல் தான்.
      உங்களையெல்லாம் சந்திக்கும் அந்நாளுக்காய்....
      காணொளியில் காணுவோம் அம்மா.


      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  17. ஆஹா.. என்னவொரு அலங்காரம்... எண்ணலங்காரம்... பாடல்களின் விளக்கம் புரிந்தால் ரசிப்பு பெரிதும் கூடுகிறது.பகிர்வுக்கு நன்றி விஜி சார்.

    மரபுக்கவிதைப் போட்டியில் முதல்பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள் சார். நான் கணித்ததும் அதுவே என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.

      பாரட்டிற்கும் தங்களின் கணிப்பிற்கும் மிக்க நன்றி.

      Delete
  18. //ஒன்று முதலான இந்த எண்களுக்கு வேறு சில பொருளும் சொல்கிறார்கள். அறிய வேண்டுவோர் புறப்பொருள் வெண்பாமாலை நூலைப் பார்க்கலாம்// - தேவையே இல்லை ஐயா! நீங்கள் கூறுவதுதான் காலத்திற்கேற்பவும் அதே நேரம், மிகையற்றும் இருக்கும்.

    எண்ணலங்காரம் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, எடுத்துக்காட்டுப் பாடலோடு படித்தறிந்ததில்லை. மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் என்மேல் கொண்ட மிகுமதிப்பிற்கு முதற்கண் நன்றி ஐயா.

      இன்னும் நுட்பமான பொருள் இன்னொரு வாசிப்பில் கிடைக்குமென்றால் அது தமிழுக்கு நல்லதுதானே?

      நன்றி.

      Delete
  19. எண்களைக் கொண்டு எழுதப்படும் பாடல் எண்ணலங்காரம் என்றறிந்தேன். காளமேகப்புலவரின் நெருஞ்சி பற்றிய பாடலை ரசித்தேன். அறியச்செய்தமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  20. இந்தப் பாடலைப் படித்ததுண்டு என்றாலும் இப்போது அதைத் தங்கள் நடையில், மொழியில் வாசிக்க நேரிடும் போது இன்னும் அழகியல் கூடுகின்றது. ரசித்து ரசித்துப் படித்தோம். என்ன ஒரு அழகு! "பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
    பத்தினியின் கால்வாங்கித் தேய்.// அழகோ அழகு தமிழ்!!! வார்த்தைகளும், அதன் பொருளும்!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      தங்களின் வருகைக்கம் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.

      Delete

  21. வணக்கம்!

    பண்டைப் பசுந்தமிழைப் பாங்காய்ப் படித்தென்றன்
    மண்டை மணக்கும் மலர்ந்து!

    ReplyDelete
    Replies
    1. மலர்ந்து மணம்பரப்பும் மாமரபுப் பூவும்
      அலர்ந்திங் கிருப்ப தழகு

      தங்களின் வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா

      Delete