மலை நிறையும் குளிர்.
கணப்பாய் மாறிய உடல்.
கவலைகள் அற்று அதுவரை உறங்கிய அவளது உறக்கம்
முதல் முறையாகத் தொலைவது அப்பொழுதுதான்.
இன்னொருபுறம்,
அவளது முகத்தை நினைவிற்குக் கொண்டுவர முயல்கிறான்
அவன்.
மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறான்.
அவனுக்கு முதலில் தோன்றுவது அவளது அந்தப் பார்வைதான்.
முதற்பார்வையில் அந்தக் கண்கள் அவனோடு புரிந்த
போர்.
அவனை வீழத்திய அந்தக் கணம்.
அவன் வீழ்ந்த அக்கணத்தில் அவள் உதட்டில்
எழுந்த செருக்குடைய சிறு புன்னகை.
அதன்முன் எல்லாம் இழந்து தோற்ற தன்னை அவள் ஏற்க வேண்டி இரந்து
நிற்கும் அவனது நிலை.
மெல்லக் கவனிக்கிறான்.
இப்போது அவளது கண்களில் ஒரு சினேக பாவம் தெரிகிறது.
ஓஒ..! அந்தக் கண்கள் போர் செய்வன அல்ல.
அவை அருள் மழை பொழிந்து தன்னை ஆதரிப்பவை. தன் மிச்ச வாழ்வின் புதுநீர்ப் பெருக்கு .
அவள் மெல்லச் சிரிக்கிறாள். அவளது கூரிய
பற்கள் தோன்றி மறைகின்றன.
இதுவா தன்னைச் சாய்த்துவிட்டோம் என்ற கர்வத்தில் எழுந்தக் கேலிக்குறுநகை…..?
இலலை இல்லை.
சாய்ந்த அவன் என்றும் வாழத் தேவையான அமிழ்தம்
ஊறுகின்ற சிவந்த இதழ்கள் அல்லவா அங்கிருப்பன..?
அவளது நினைவு இன்னும் கூர்மையடைகிறது.
அவன் அறையெங்கும் பரவுகிறது அவளது வாசனை…..!
அது எங்கிருந்து வருகிறது?
ஆற்றின் நீர் பாய்ந்து போன தடத்தில் வெண்மணல்
கருப்பாய் மாறித் தெரிவது போன்ற அவளது கூந்தல்.
அவன் அறையில் பரவுகின்ற அந்த மணம் சந்தனத்தாலும் அகிலாலும் புகையூட்டப்பட்ட கருமணற் பரப்புப் போன்ற அவளது கூந்தலில்
இருந்துதான் வருகிறது.
அவன் மனம் அவனோடு பேசுகிறது.
“கவலைப்படாதே! இன்மைகளில் இருந்து நான் அவளை உனக்கு உருவாக்கித்
தருகிறேன்.“
பாடல் இதுதான்.
“ உள்ளிக் காண்பென் போல்வென் முள்எயிற்று
அமிழ்தம் ஊறுமஞ் செவ்வாய்க் கமழ்அகில்
ஆரம் நாறும் அறல்போல் கூந்தல்
பேர்அமர் மழைக்கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே ". ( குறுந் 286 )
இப்பாடலைப் பொருள் கொள்ள இப்படி மாற்றி அமைத்துக்
கொண்டேன்.
( இப்படி எல்லாம் நீ நினைச்சமாதிரி அமைத்துக்
கொள்ள முடியுமா..? முடியும். இலக்கணங்கள் இதனை ‘மாட்டு‘ என்கின்றன. )
( பேர் அமர் கண் கொடிச்சி மூரல் முறுவலொடு
மதைஇய நோக்கே போல்வல்! உள்ளிக் காண்பேன். மழைக்கண், அமிழ்தம் ஊறும் செவ்வாய். அகில் ஆரம் நாறும்
அறல்போல் கூந்தல். )
இனிச் சொற்களின் பொருள்.
பேர் அமர் கண் என்பதற்குப் பெரிய போர் புரியும்
கண்கள் என்பது பொருள்.
யாருடன் போர் புரிந்தன அவை ? அப்பார்வைக்காய்த் தன்னையும் இழக்கத் தயாராய் இருக்கும் அவனுடன்!
கொடிச்சி – குறிஞ்சி நிலப்பெண்.
மூரல் முறுவல் – மெல்லிய புன்னகை
மதைஇய நோக்கு – ( அவனை வீழ்த்திய ) செருக்கினை
உடைய பார்வை.
போல்வல் – உடையவளாகத் தோன்றுகிறாளே..?
உள்ளிக் காண்பேன் - ஆழமாக நினைத்துப் பார்க்கிறேன்.
உள்ளிக் காண்பேன் - ஆழமாக நினைத்துப் பார்க்கிறேன்.
மழைக்கண் – இரக்கம் சுரக்கும் கண்.
கூர் எயிற்று – கூரிய பற்களை உடைய
அமிழ்தம் ஊறும் அம் செவ் வாய் – அமிழ்தம்
ஊறக்கூடிய அழகிய சிவந்த வாய்.
அகில் – அகில் என்னும் நறுமணப்பொருள்.
ஆரம் – சந்தனம்
நாறும் - நறுமணம் வீசும்
நாறும் - நறுமணம் வீசும்
அறல் – ஆறு அறுத்துச் செல்வதால் உண்டாகும்
வெண்மணலிற் கருமை கலந்த மணற் பரப்பு.
அவள்தான் தனக்கானவள். அவளை மீண்டும் காணும்வரைக் கழியும் காலங்களில்
ஒவ்வொரு நொடியும் அவளை அவன் தனக்குள் நிரப்பிக்
கொள்கிறான்.
தனது இன்னொரு பகுதி அவள்.
அவனுக்கெனக் குறியிடப்பட்ட இன்னொரு ஆன்மா!
உடல் மெலிகிறது.
தான் கொண்ட வேட்கையைச் சொல்ல வேண்டும் என்கிற
எண்ணம் மிகுகிறது. கண்ணில் படுவோரிடம் எல்லாம் அவளைக் குறித்து விசாரிக்க வேண்டும்
. எல்லோரும் அவளைப் பற்றியே பேச வேண்டும் என்ற மனம் விரும்புகிறது.
அவள் யார்?
இத்தனைநாள் எங்கிருந்தாள்?
எங்கு எதைப்பார்த்தாலும் அது அவளின் நினைவுகளையே
தூண்டுவதாக அந்நினைவு அமைகிறது.
தான் செய்ய வேண்டிய வேலைகள் அத்தனையையும்
மறந்து அவள் நினைவொன்றையே கொண்டலையச் செய்யும் மனப்பித்து.
எல்லாம் மறந்த மயக்க நிலையை மனம் அடைகிறது.
அவளுக்காக இந்த உயிரை இழக்கலாம். அவளுக்காகத்
தன்னுயிரையும் தரத் தான் இருக்கிறேன் என்பதை
அவள் அறிந்து கொண்டால் போதும் என்ற எண்ணம் மேலிடுகிறது.
இன்னொருபுறம் அவனைக் கண்ட அவளுக்கும் இதே
நிலைதான்.
இயற்கைப் புணர்ச்சியின் உச்சகட்டம் இது.
இயற்கைப் புணர்ச்சி என்பது இரு நிலைகளில்
அமைகிறது.
1)
மனதால்
ஒன்றாகும் நிலை ( உள்ளப்புணர்ச்சி)
2)
உடலால்
ஒன்றாகும் நிலை ( மெய்யுறு புணர்ச்சி)
களவில் நிகழும் செயல்பாடுகளுள் முதலாவது
இந்த இயற்கைப் புணர்ச்சிதான்.
இந்தக் காமத்தின் படிநிலையை இலக்கணம் இப்படிப் பத்தாகக் காண்கிறது.
1)
காட்சி
( காணுதல் )
2)
வேட்கை
( விரும்புதல் )
3)
உள்ளுதல்
( நினைத்தல் )
4)
மெலிதல்
( நினைப்பதை அடைய முடியாமையால் இளைத்தல் )
5)
ஆக்கஞ்செப்பல்
( விருப்பத்தைப் பிறரிடம் கூறுதல் )
6) நாணுவரை
இறத்தல் ( பிறர் தன்னை என்ன நினைப்பார்களோ என்கிற சமூகப் பிரக்ஞையை இழத்தல் )
7) நோக்குவ
எல்லாம் அவையே போறல். ( பார்ப்பவை எல்லாம் அவள்/ அவன் தொடர்புடையதாகவே தோன்றுதல் )
8)
மறத்தல்
( வேறு நினைவுகளை மறத்தல் )
9)
மயக்கம்
( தன் நினைவை இழந்து அவள்/ அவன் நினைவாதல் )
10) சாக்காடு ( இறத்தல் )
தொல்காப்பியம் இவற்றுள் ஒன்பது நிலைகளையே
சொல்கிறது. பின் வந்த அகப்பொருள் நூல்களே இவற்றைப் பத்தாய்க் காண்கின்றன.
பத்து அவத்தைகள் என இவை குறிப்பிடப்படுகின்றன.
தலைவனுக்குத் தலைவிக்கு என இதில் சில படிநிலைகள்
உள்ளன.
காதலின் ஒவ்வொரு நிலையையும் எப்படி வெளிப்படுத்துவது என்றெல்லாம் இலக்கணங்கள்
விளக்குகின்றன. அவற்றை அவ்வப்போது பார்ப்போம்.
இப்பொழுது,
இந்த உறவு வேறு யாரும் அறியாமல் தலைவனுக்கும்
தலைவிக்கும் மட்டுமே நிகழும் என்றாலும் இதை
இன்னும் இரண்டு பேர் அறிந்திருக்கச் சங்க மரபு அனுமதிக்கிறது..
அவர்கள்,
தலைவியின் தோழியும் ( பாங்கி என்றும் இவள்
அழைக்கப்படுகிறாள்.)
தலைவனின் தோழனும் ( பாங்கன் என்றும் இவன்
அழைக்கப்படுகிறான். )
தோழியும் பாங்கனும் தலைவன் தலைவிக்கு இடையே
நடக்கும் களவைத் தாங்களாகவே அறிவதும் உண்டு.
தலைவனும் தலைவியும் அவர்களது உதவி வேண்டி
அவர்களாகவே கூறுவதன் மூலம் அறிவதும் உண்டு.
இறுதியாய்,
காதலின் இந்தப் பத்து நிலைகளில் எவை எவை
இன்றைய வாழ்விற்கும் பொருந்துகின்றன..?!
பின்குறிப்பு-
சங்ககாலத் தமிழில் காமம், காதல், கேண்மை,
நட்பு என்பன ஒரே பொருள் உடைய சொற்கள்தாம். :)
பட உதவி - நன்றி தினமணி.
Tweet |
தமிழ் மணம் 2 பிறகு வருவேன்.
ReplyDeleteவணக்கம் நண்பரே..!
Deleteஇதென்ன மின்னல்வேகம்..!!!!!!!!
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!!
அன்புள்ள அய்யா,
ReplyDelete“அந்தக் கண்கள் போர் செய்வன அல்ல.
அவை அருள் மழை பொழிந்து தன்னை ஆதரிப்பவை.
தன் மிச்ச வாழ்வின் புதுநீர்ப் பெருக்கு “.
கொடிச்சியின் மூரல் முறுவலை...அவள் மெல்லச் சிரிக்கிறாள். அவளது கூரிய பற்கள் தோன்றி மறைகின்றன.
இதுவா தன்னைச் சாய்த்துவிட்டோம் என்ற கர்வத்தில் எழும் கேலிக்குறுநகை…..?
இலலை இல்லை. சாய்ந்த அவன் என்றும் வாழத் தேவையான அமிழ்தம் ஊறுகின்ற சிவந்த வாய் அல்லவா அது….?“
குறுந்தொகைப் பாடலுக்கான அற்புதமான... அருமையான விளக்கம் தாங்கள் கொடுத்தது கண்டு அசந்து போனேன்.
பாடலை மடக்கிப் படிக்கின்ற பொழுது அழகாகக் காட்சிப்படுத்திப் படமாகப் பார்க்க வைத்து விட்டீர்கள்!
காமத்தின் படிநிலையைக் கூறிப் பத்துக்குப் பத்துப்போட வைத்து விட்டீர்களே!
நன்றி.
த.ம. 2.
அய்யா வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் பாரட்டிற்கும் மிக்க நன்றி!
மிகச்சிறப்பான விளக்கம்! அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி திரு. தளிர். சுரேஷ் அவர்களே!
Deleteஅருமையான பகிர்வு ஐயா...
ReplyDeleteஅழகான விளக்கம்...
அசத்தல் தொடரட்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
Deleteமூன்று முறை படித்தேன் கவிஞரே.... புரியாமல் அல்ல, புரிந்து கொள்ள....
ReplyDeleteகாரணம் எமக்கு லேட் பிக்கப்பு.... தொடரட்டும்....
நிச்சயமாய் இன்னும் எளிமையாய் எழுத வேண்டும் நண்பரே!
Deleteதங்களின் வெளிப்படையான கருத்துகள் அதற்கு உதவும்!
இனி வரும் இடுகைகளில் கவனமாய் இருக்கிறேன்.
தொடர்ந்து வருகின்றமைக்கும் கருத்துப் பகிர்கின்றமைக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள்.
காமத்தின் 10 படிநிலைகளை படிக்கும் போது சங்க காலத்திற்கும் இன்றைய நிலைக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
ReplyDeleteத ம 5
பதிவின் இறுதியில் கேட்டிருந்த கேள்விக்குப் பதிலளித்தமைக்கு நன்றி அய்யா!
Deleteபழைய இலக்கியங்களைக் குறிப்பாகச் சங்க இலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை இந்தப் பதிலில் இருக்கிறது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!
காதலின் இந்தப் பத்து நிலைகளில் எவை எவை இன்றைய வாழ்விற்கும் பொருந்துகின்றன..?!
ReplyDelete1) காட்சி ( காணுதல் )
2) வேட்கை ( விரும்புதல் )
3) உள்ளுதல் ( நினைத்தல் )
4) மெலிதல் ( நினைப்பதை அடைய முடியாமையால் இளைத்தல் )
5) ஆக்கஞ்செப்பல் ( விருப்பத்தைப் பிறரிடம் கூறுதல் )
6) நாணுவரை இறத்தல் ( பிறர் தன்னை என்ன நினைப்பார்களோ என்கிற சமூகப் பிரக்ஞையை இழத்தல் )
7) நோக்குவ எல்லாம் அவையே போறல். ( பார்ப்பவை எல்லாம் அவள்/ அவன் தொடர்புடையதாகவே தோன்றுதல் )
8) மறத்தல் ( வேறு நினைவுகளை மறத்தல் )
9) மயக்கம் ( தன் நினைவை இழந்து அவள்/ அவன் நினைவாதல் )
10) சாக்காடு ( இறத்தல் )
இதுமட்டும் அல்லாமல்
11. குறுந்தகவல் அனுப்புதல்
12. காபி குடிக்க அழைத்தல்
13. பாடம் பார்க்க அழைத்தல்
ஒரு பட்டியலே நீளும் ஆனால் ஏதும் தப்பவில்லை
வாருங்கள் திரு. செந்தில்,
Deleteதங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
இந்தப் பத்து நிலையும் அவன் அவள் மனதையும் அவள் அவன் மனதையும் புரிந்து ஏற்கும் வரைதான்.
ஏற்றால், அன்றும்
தூதனுப்பலும் கம்பங்கூழும் கூத்தும் எல்லாம் நடந்திருக்குமோ என்னவோ..:))
பத்துப் படிநிலையை
ReplyDeleteகற்றுக்கொடுத்த
இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்
வாருங்கள் திரு. யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம்!
Deleteஇது நான் கற்றுக் கொடுத்தில்லை.
நம் இலக்கணங்கள் கூறுவன அல்லவா..?!
தங்களி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!
உங்களின் அற்புதமான விளக்கங்களில் நாங்கள் மாட்டி பல மாதங்கள் ஆகி விட்டன... நன்றி...
ReplyDeleteமனங்கள் சேருவதற்கு பதில் பணங்கள் சேருவதால்... இன்றைய வாழ்விற்கு...?
நீங்கள் மாட்டிக் கொண்டீர்களா..?! :))
Deleteசேரும் மணங்களில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை.
பணங்கள் சேர்வது வாழ்க்கைக்குப் பயனாய் இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது.
உண்மைதான் உங்கள் கருத்திற்கு நன்றி.
என்னுயிரே... என்னுயிரே... என் ஆருயிரே...
ReplyDeleteஎன்னுயிரே... என்னுயிரே... என் ஓருயிரே...
கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே... என் ஓருயிரே...
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை...!
இது எந்த நிலை என்று தோன்ற வில்லை...
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை...
என் ஆருயிரே... என் ஓருயிரே...
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு...!
சூரியன் சந்திரன் வீழ்ந்ததிந்து போய் விடும்...
நம் காதலிலே வரும் ஜோதியிலே இந்த பூமியிலே ஒளி கூடிடுவோம்...
காதலர் கண்களே சூரியன் சந்திரன் ஆகாதோ...?
கைகள் நான்கும் தீண்டும் முன்னே...
கண்கள் நான்கும் தீண்டிடுமே...
மோகம் கொஞ்சம் முளை விடுமே...
கண் பார்வை முதல் நிலையே...
ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்...
என்னுயிரே காதலில் இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்...
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ...
இது காதலின் மூன்றாம் படி நிலையோ...
என் உடல் வழி அமிர்தம் வழிக்கின்றதோ...
என் உயிர் மட்டும் புது வித வழி கொண்டதோ...
என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்...
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்...?
இதில் நான்காம் நிலையை அடைந்து விட்டேன்...
என் நறுமலரே உன்னை தொழுது விட்டேன்...
என் சுய நினைவென்பதை இழந்து விட்டேன்...
அந்த சூரியன் எழும் திசை மறந்து விட்டேன்...
என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்...
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்...
இதுதான் காதலில் ஐந்து நிலை...!
நான் உன் கையில் நீர் திவலை...
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை...
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை...
படம்: உயிரே
வணக்கம் டி.டி. சார்.
Deleteஉங்களது திரைப்படப்பாடல் அறிவு வியக்க வைக்கிறது.
இப்பாடல் நம் இலக்கணங்கள் கூறுவதில் இருந்து எழுந்ததுதான்.
பொதுவாக நம் இலக்கணங்கள்,
காட்சி, வேட்கை, உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல் எனும் ஆறு நிலைகளையும் நற்காதலுக்கு ( அன்பின் ஐந்திணை எனல் மரபு) உரியவையாகக் காட்டுகின்றன.
பொதுவாகத் தலைவிக்கு அடுத்த நான்கு அவத்தைகள் ஏற்படுவதே இல்லை . அவை அவளுக்கு ஆகா என விலக்குகின்றன.
பாடலாசிரியர் இதை மனதிற்கொண்டேட இவ்வாறு நிலைகளையும் பாடலில் காட்டிப் போயிருக்கலாம்.
நம் திரைப்படப்பாடல்களில் பலவற்றிலும் இது போன்ற இலக்கண இலக்கிய தாக்கம் இருக்கலாம்.
உங்களின் வருகை அதை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.
மிக்க நன்றி.
டிடி அண்ணா..நானும் இப்பாடலை நினைவுகூர்ந்தேன்.. :)
Deleteசங்க காலக் காதலின் பத்து படி நிலைகள் இன்றைய கால கட்டத்தில் பொருந்துவதில்லை என்றே சொல்வேன் முதலில் காணுதல் வேண்டுமானால் பொருந்தும் அடுத்து உள்ளுதல் மெலிதல் ஆக்கஞ்செப்பல் இவற்றிற்கு எல்லாம் நேரம் இல்லாதது போல இருக்கும் காலமாகவும் டைம் பாஸ் என்று சொல்கிறார்களே அந்த விதத்திலும் உள்ளது இன்றைய காதல் பொருளாதாரத்தை முதலில் பார்க்கிறார்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அடுத்து இந்தப் பகிர்வின் தலைப்பை மையப்படுத்தியே (உடல் கவர்ச்சி) இன்றைய காதல் அமைந்துவிடுகிறது. ஆரோக்கிய காதல் என்பதும் அன்றைய காலத்தோடே முடிந்து விட்டது என்பது என் கருத்து. பாடலை அற்புதமாக விளக்கினீர்கள் சகோ. நன்றி.
ReplyDeleteபகிர்வின் தலைப்பு அன்று இச்சொல் பயன்பாட்டில் இருந்த கருத்தை ஒட்டியே அமைக்கப்பட்டது சகோ!
Deleteஉங்கள் கருத்தோடு முழுவதுமாக உடன்பட முடியாவிட்டாலும் தங்களது கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
காமத்தின் பத்து படிகளில் விட்டது பித்து பிடித்தல் எனலாமா. சாக்காடு சரியாய் தெரியவில்லை. ஓ..... அது அந்த காலத்தைய நெறியோ.?இயற்கைப் புணர்ச்சியில் மெய்யுறு புணர்ச்சி திருமணத்துக்கு முன்பே அனுமதிக்க பட்ட காலம் அல்லவா.
ReplyDeleteபித்துப் பிடித்தல் போன்ற நிலையைத்தான் மயக்கம் என்கிறார்கள்.
Deleteசில வரையறைகளை என் புரிதலின் அடிப்படையிலேயே இங்குத் தந்திருக்கிறேன்.
நோக்குவை எல்லாம் அவையே போறல் என்பதற்கு, யாராவது தன்னைப் பார்த்தாலோ ஏதாவது கேட்டாலோ அது தன் மனதில் தான் மறைத்து வைத்திருக்கும் காதலைத் தெரிந்து கொண்டு கேட்கப்படுவதா எனக் காதல் வயப்பட்டவரின் உள்ளத்தில் தோன்றும் சந்தேகம் என்பதாகவே நச்சினார்க்கினியர் குறிப்பிடுவார். அவர் மொழியில் சொல்ல வேண்டுமானால், “பிறர் தம்மை நோக்கிய நோக்கெல்லாந் தம் மனத்துக் கரந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றாரெனத் திரியக் கோடல்“
சாக்காடு என்பது இறப்பது என்று பொருள் தந்தாலும் இலக்கியத்தைப் பொருத்தவரையில் உயிர்விடுவதல்ல.
அது மடலேறுதலும் வரைபாய்தலும் போல்வன கூறல் ( தொல். பொருள்.100. நச்.)
அதாவது
மடலேறுவேன் ( தன் மானம் இழத்தல் )
வரைபாய்வேன் ( மலை மேல் இருந்து விழுந்து செத்துப் போவேன் )
என்று கூறுதல்.
ஒரு வகையில் தனது அன்பை ஏற்குமாறு அவளை மிரட்டுதல்.
நீங்கள் சொல்வது போல்,
இலக்கியங்களில்,
கற்பிற்கு முன்பே களவில், மெய்யுறு புணர்ச்சி அனுமதிக்கப்பட்டிருந்தது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிவைப் படித்ததும் ,மீண்டும் புலவர்க் கல்லூரி வகுப்பில் கேட்பதும், இருப்பதும் போன்ற உணர்வு! பெற்றேன்!
ReplyDeleteஉண்மை! மிகையல்ல!
வாருங்கள் அய்யா!
Deleteஉங்களின் வருகையும் என் போலும் சிறியவர்களை ஊக்குவிப்பதும் மனதை நெகிழச் செய்கின்றன.
மிக்க நன்றி.
#சங்ககாலத் தமிழில் காமம், காதல், கேண்மை, நட்பு என்பன ஒரே பொருள் உடைய சொற்கள்தாம். :)#
ReplyDeleteகடைசி வரியில் கொள் போட்டு ஜெயித்து விட்டீர்கள் :)
அன்று ஒரே அர்த்தம் என்றாலும் ,இன்று அர்த்தமே வேறுதான் ,அன்று இருந்தது உண்மைக் காதல் ,இன்று இருப்பது காமம்தான் :)
நீங்கள் காலைக் குறிக்கியதால்தான் கோல் போட முடிந்து இல்லையா :))
Deleteஹ ஹ ஹா
இனிச் சங்ககாலத் தொடர்ச்சியில் வரும் மற்ற இடங்களிலும் இதை இன்றைய அர்த்தத்தில் எடுத்தக் கொள்ளக் கூடாது ஜி.
அன்றும் காதலாய்க் காமம் இருந்து.
இன்று காமமே காதலாகி விட்டது என்கிறீர்களோ ? :))
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!
காமத்தின் படிநிலையை இலக்கணம் இப்படிப் பத்தாகக் காண்கிறது.--- இருந்தாலும் அந்தக்காமும் இடம்-ஏவல்- பொருள் சார்ந்துல்லவா நடக்கிறது.
ReplyDeleteநிச்சயமாய் வலிப்போக்கரே!
Deleteஉங்களின் வருகை மகிழ்ச்சி.
கருத்திற்கு மிக்க நன்றி!
கொள் என்பதை கோல் என்று திருத்தி வாசிக்கவும் ..கோலை தவற விட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் :)
ReplyDeleteஇதென்ன பாண்டியனின் கையில் இருந்து தவறிய செங்கோலா ? :))
Delete( “தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன் “ - சிலப்பதிகாரம்; வழக்குரைகாதை )
விடுங்கள் பகவானே.!
நீங்கள் நகைச்சுவைக்காய் அப்படி எழுதுதினீர்கள் என்றல்லவா நினைத்தேன்.
ஹ ஹ ஹா!!!!!!
ஆசானே! தங்களது விளக்கங்களைப் பார்க்கும் போது (மூன்று தடவை வாசித்திருப்போம்....அதான் தாமதம்....) சங்க காலத்துக் காதல், காமத்திற்கும் இன்றையக் காலகட்டதின் காதல் காமத்திற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே! அதாவது உண்மையானக் காதலைப் பற்றிப் பேசும் போது. இப்போது காமம் மிஞ்சி இருந்தாலும், அன்றையச் சூழல்களுக்கு ஏற்றவாறு அன்றும் காமம் மிஞ்சித்தான் இருந்தது.. (மக்கள் தொகையும் குறைவுதானே அப்போது!!!) சூழல்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம். இப்போதும் உள்ளப்புணர்ச்சி இருக்கின்றதோ இல்லையோ, மெய்யுணர்ச்சி திருமணத்திற்கு முன் இப்போதும் நடக்கத்தானே செய்கின்றது. அந்தப் பத்து நிலைகளில் மெலிதல் இன்று இருப்பதைப் போல் தெரியவில்லை....உண்மையானக் காதலாக இருந்தால் இருக்கலாம். பிறிதில் இல்லை. ஆக்கஞ் செப்பல் இப்போது நேரடியாகவே சொல்லுவதாகத்தான் தெரிகின்றது. சொல்லிவிட்டு நண்பர்களுக்குள் சொல்லிக் கொள்வதாகத்தான் தெரிகின்றது. பொருத்தம் இருக்கோ..!!!
ReplyDeleteஅடுத்து நாணுவரை இறத்தல் இப்போது மிக மிஞ்சியே இருப்பதாகத்தான் தெரிகின்றது....
சாக்காடு என்பது இப்போதும் இருக்கின்றது, அதுவும் மனம் பக்குவம் அடையும் முன்பே கூட காதலில் விழுந்து இறத்தல்....
என்ன வித்தியாசம் தெரிகின்றது என்றால் ஒன்றே ஒன்று, இந்த விளக்கங்களில் இருன்ந்து....அன்றையக் காதல், பெரும்பான்மையாக உண்மையாக இருந்தது போன்றும், இப்போதைய காதலில் பெரும்பபான்மையானவ மனம் பக்குவம் அடையும் முன்னே தோன்றுபவையோ என்று தோன்றுகின்றது.....
என்றாலும் இந்த உணர்வுகள் அன்றும் இன்றும் தொடரத்தான் செய்கின்றன....
காமத்தின் படிநிலைகள் பத்து என்பதை அறிந்தேன். அக்காலத்துக்கும் இக்காலத்துக்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. முதல் படியில் மட்டும் வித்தியாசமிருக்கிறது.
ReplyDeleteஅக்காலத்தில் கண்டவுடன் காதல் (காட்சி) வந்துவிடுகிறது. (Love at first sight) எல்லாப் பாடல்களுமே இப்படித்தானா?
இக்காலத்தில் எல்லோருக்கும் முதல் படி பொருந்தாது. சிலர் நீண்ட நாட்கள் நண்பர்களாய் இருந்து விட்டுக் காதலர்களாக ஆகிறார்கள்.
குறுந்தொகை பாடல் விளக்கம் நன்று. தொடருங்கள்!
இதை நாம் படித்துக் கடக்கின்றபோதெல்லாம் நாடகவழக்கும் உலகியல் வழக்கும் கலந்து எழுதப்பட்ட புலமை வழக்கிது என்று கொள்ள வேண்டும் சகோ!
Deleteஉலகியலில் இருந்து எடுத்துக்கொண்டு அவை சுவைபடச் சொல்லுவதற்கான வழிமுறைகளையே இலக்கணம் சொல்கிறது. சிற்சில இடங்களில் நாடக மரபு கூடுதலாகவும் சில இடங்களில் உலகியல் மரபு கூடுதலாகவும் இருக்கும்.
நட்பு காதல் ஆதல்.... நட்பு என்பதற்கும் காதல் என்று பொருள் சொல்கிறது பழந்தமிழ்.
““நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே““ :))
நன்றி.
சங்ககாலத் தமிழில் காமம், காதல், கேண்மை, நட்பு என்பன ஒரே பொருள் உடைய சொற்கள்தாம். :)
Deleteநட்பிற்கும் காதல் என்ற பொருள் இருக்கிறது என்று நீங்கள் சொன்ன பிறகும் நான் இந்தச் சந்தேகம் கேட்டிருக்கக்கூடாது. ஆனாலும் பொறுமையாக மிண்டும் பதில் சொல்லியிருப்பதற்கு நன்றி சகோ!
அன்பின் படிநிலைகள் பத்து, நன்று. இன்றைய காதல் தோழிக்கோ,தோழனுக்கோ தெரிந்தால் அவன் அவள் தலைவன் தலைவி ஆகினார்,,,,,,,,,,,, இன்று வரும் காதல் மனம் வலிக்கிறது. தாங்கள் சொன்ன விளக்கங்கள் அருமை. தங்கள் கோனம் வித்தியாசமாக இருக்கிறது.
ReplyDeleteவாருங்கள் சகோ..
Delete//இன்றைய காதல் தோழிக்கோ,தோழனுக்கோ தெரிந்தால் அவன் அவள் தலைவன் தலைவி ஆகினார்,// என்று நீங்கள் சொல்வதன் பொருள் விளங்கவில்லை.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
எங்களை சங்க காலத்திற்கு அழைத்துச் சென்று பல அரியனவற்றைப் பகிர்வதற்கு நன்றி.
ReplyDeleteகுறுந்தொகைப் பாடல் விளக்கத்தோடு சங்க காலத்தில் காதலின் காமத்தின் படிநிலைகளை மிக அழகாக எடுத்தியம்பி ரசிக்கத்தக்க வகையில் வழங்கியுள்ள தங்களுக்கு நன்றிகள் பல. மடலேறுதலும் வரை பாய்தலும் சாக்காட்டின் கீழ் வருமென்று பின்னூட்டக் கருத்துகள் வாயிலாய் அறிந்தேன். பழந்தமிழ்ப் பெட்டகத்தில் எவ்வளவு பொக்கிஷங்கள் பாமரரால் பார்க்கப்படாமலேயே கிடக்கின்றன. தங்கள் பதிவால் பலவும் அறிந்தேன். நன்றி.
ReplyDeleteகாதலை வைத்து அரசியலே நடத்தும் சாதி சமய வெறி மிகுந்த இன்றைய தமிழ்ச் சூழலில், காதல் நம் பழம்பெரும் பண்பாடு என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அப்படியொரு நினைவூட்டலை நெற்றியடியாக இத்தனை ஏராளச் சான்றுகளுடன் காட்டியிருக்கும் வகையில் இந்தப் பதிவு முதன்மைத்தனம் பெறுகிறது என்பது சிறியேனின் பணிவன்பான கருத்து. அருமையான பதிவு! நான் விரும்பிக் கேட்டபடி, சொல்லுக்குச் சொல் தனித் தனியே பதவுரையும் வழங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி! தங்கள் இன்தமிழ்ச்சேவை என்றென்றும் தொடர்க!
ReplyDeleteஅண்ணா, மிக மிக மிக அருமை..என்ன ஒரு இனிமை உங்கள் பதிவைப் படிக்க!
ReplyDeleteநன்றி அண்ணா
த.ம.15
ReplyDeleteவணக்கம்!
பத்து நிலைகளைப் பற்றிப் படித்திட்டேன்!
கொத்து மலாின் கொழிப்புற்றேன்! - முத்தாகத்
தீட்டும் எழுத்தெல்லாம் செந்தேன் மதுவூட்டும்!
காட்டும் திறனைக் கமழ்ந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு