அந்தக் காலத்து அகமரபில் தலைவனது பெயரையோ
தலைவியது பெயரையோ சுட்டிச் சொல்லும் வழக்கம் இல்லை. அகப்பாடல்கள் எங்கும் அவர்கள் பெயரற்றே
உலவுகிறார்கள்.
செவிலி, நற்றாய், பாங்கன் (தோழன்), பாங்கி
( தோழி ) இப்படிப் பொதுப்பெயர்களால் மட்டுமே அவர்கள் சுட்டப்படுகிறார்கள்.
இலக்கணமும்,
“ மக்கள் நுதலிய அகனைந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்“
என்பதாகவே இருக்கிறது.
சரி இப்பொழுது நம் கதைக்கு வருவோம்.
தினைகளை விதைத்துக் காவல் காக்கத் தன் மகளை
அனுப்புகிறான் அம் மலைநிலப் பொருப்பன்.. ( பொருப்பு = மலை )அவளும் அவள் தோழியும் ஆடிக்கொண்டும் பாடிக்
கொண்டும், பறவைகளை விரட்டியும் காவல் காக்கின்றனர்.
அன்று என்ன காரணத்தாலோ தோழி வரவில்லை. அவள்
மட்டும் தினைப்புலக் காவலுக்குச் செல்கிறாள். தினைப்புலம் விளைந்து அறுவடைக்குத் தயாராக
இருக்கிறது. தினைப்புலத்தைக் காவல் காக்கும்போது, விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பித்துக்
கொள்வதற்காக, மரத்தின் மேல் பரண் ஒன்றை அவள் தந்தை அமைத்துக் கொடுத்திருக்கிறான். அவள் அதன் மேல் இருக்கிறாள்.
வேட்டையில் தப்பிய விலங்கொன்றைத் துரத்தியபடி அவன் அங்கு வருகிறான். மறைவின் ஆழங்களைத் துழாவும் அவன் கண்களுக்கு மரத்தின் மேல் பரணில் இருந்த அவளைக் கண்டுபிடிப்பதில் சிரமமிருக்கவில்லை.
வேட்டையில் தப்பிய விலங்கொன்றைத் துரத்தியபடி அவன் அங்கு வருகிறான். மறைவின் ஆழங்களைத் துழாவும் அவன் கண்களுக்கு மரத்தின் மேல் பரணில் இருந்த அவளைக் கண்டுபிடிப்பதில் சிரமமிருக்கவில்லை.
எத்தனையோ பெண்களை அதுவரை அவன் வாழ்வில் கண்டிருக்கிறான்.
ஆனால் இவளைக் கண்டதும்தான் அவனுக்கு முதன்முறையாகச்
சந்தேகம் வருகிறது. இவள் இந்த உலகத்தைச் சேர்ந்தவள்தானா? அல்லது
தேவலோகப் பெண்ணா?
பின்
அவன் மனதில் ஒன்று மட்டும் உறுதிப்படுகிறது. இவள் எனக்கானவள். இப்பிறவி இனி இவளோடுதான். அவளும் அவனை நோக்குகிறாள். இது போன்று ஓர் ஆடவனை அவள் தன் குடியில்
கண்டதேயில்லை.
அட... இவன் என்ன என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறானே…!
நாணப்பெருக்கின் திரைமூட விழிதாழ்த்தி மனதினால்
ஒரு ஆடவனின் பார்வையை முதன் முறையாய் உள்ளுணரும் சுகம்.
காலம்
நாழிகைகளை இமைநொடிக்கும் குறைவாக மாற்றுகிறது.
இப்படி ஒருவன் பார்க்க நாமும் உள்ளுக்குள் அதை ரசித்து நின்று கொண்டிருக்கிறோமே..!!!
இது சரியா தவறா ?
விலக்க வேண்டும் என்கிற எண்ணம்.
அவன் பார்வைக்குள் தன்னை நிலையாய்ப் பதித்த
வைக்க விரும்புகின்ற நெஞ்சம்.
நடுவே…,
திரைப்படம் போலத்தான் திடீர் மழை.
காட்டில் மழையென்றால் கேட்கவா வேண்டும்..?
மேகம் மண்ணின் மீது உள்ள தன் தாளாப் பெருங்காதலைக்
கொட்டித் தீர்க்கிறது.
அவள் இறங்குகிறாள்.
இருவரும் மழைத் தடுப்புள்ள ஓரிடத்தில் வந்து நிற்கின்றார்கள்.
அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்
என்பது அவளுக்குத் தெரிகிறது.
அவள் மனதில் ஓர் ஐயம்.
இவன் யாரென்று நமக்குத் தெரியாதே?
இவன் நம் இனத்தைச் சேர்ந்தவனும் இல்லையே..!
நாமாக ஏதாவது மனதில் கற்பனை வளர்த்துக் கொண்டு ஆசைப்பட்டால் அது
நிறைவேறுமா..? நம் வீட்டில்தான் ஒத்துக் கொள்வார்களா?
அவன் அவள் மனவோட்டத்தைப் புரிந்து கொள்கிறான்.
மனம் மனதிற்கு மறுமொழி கூறுகிறது..
சற்று நேரம் முன்பு வரை, நீ யாரென்றும் நான்
யாரென்றும் நமக்குத் தெரியாதே..! பார்த்த மாத்திரத்திலே என் மனமும் உன் மனமும் ஒன்றிணைந்தது எப்படி? இதோ உன்னையும் என்னையும் இங்கு இப்படிச் சந்திக்கச்
செய்தது எது..?
அது
விதியா, கடவுளா, இயற்கையா எதுவானாலும் அது நம்மைச் சேர்த்து வைக்கும்.
அவளுக்கு வியப்பாய் இருக்கிறது.
அவன் நினைப்பது நமக்கு எப்படித் தெரிகிறது.
அவள் அவனைப் பார்க்கிறாள்.
அவன் கண்களைக் கீழே தாழ்த்தி அங்குப் பார்
எனக் காட்டுகிறான்.
அவளது காலின் கீழே மண்ணொடு கரைந்து தன் நிறம் இழந்து மண்ணின்
நிறம் பெற்றுத் தனக்கென ஒரு பாதை வகுத்தவாறு சிரிப்பும் கும்மாளமுமாக ஓடிக்கொண்டிருக்கிறது மழைநீர்ப்பெருக்கு
அவளுக்குப் புரிகிறது.
அவள் நிலம். எளிதில் கரைந்தாலும் தன்னுள் அவனை ஈர்த்துக் காடாக்கும் விதையை தன்னியல்பிலேயே கொண்ட அமைதியும் பொறுமையும் அவளிடம் இருக்கிறது.
அவன் நீர். சலசலப்பும் வேகப்பெருக்கும்,
சேருமிடத்திற்கு ஏற்பத் தன் தன்மை இழந்து
போதலும் அவனது இயல்பு
அவளைப் பார்க்கும் வரை நிறமற்றிருந்த அவன் மெல்ல மெல்ல அவளது நிறமாய் மாறுகிறான்.
இந்தக் குறுந்தொகைப்பாடல் நீங்கள் அறிந்ததுதான்.
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும்
எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி
அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்
கலந்தனவே.“
குறுந்தொகை -40
திணை – குறிஞ்சி
பாடியவர்-செம்புலப்பெயனீரார்
பாடியவர்-செம்புலப்பெயனீரார்
உள்ளம் ஒன்றிணைந்த அக்கணத்தில் அது கண்முன் வேறெதனையும்
காணும் திறத்தை இழக்கிறது. மெல்ல மீண்டு சுயநினைவுக்கு வரும்போது அவள் அவனைக் கொண்டும்
அவன் அவள் இயல்பாகியும் விடைபெறுகிறார்கள்.
அவனை ஈர்த்து அவள் தன்குடில் அடைகிறாள்.
தன் நிறம் மாறி அவன் தன்னூர் சேர்கிறான்.
“என் தாயும் உன்
தாயும் யார் யாரோ ?
என் தந்தையும் உன்தந்தையும் எவ்வுறவோ?
நான் உனையும் நீ எனையும் எப்படி அறிவோம் ?
ஆனாலும் கண்ட இக்கணத்தில்
பயன்படு நிலத்தில் பெய்மழைபோல்
நம் உள்ளம் ஒன்றாகிக் கலந்து போயிற்றே “
தமிழ்ச் சங்கப் பாடல்களில் தலைவனுக்கும் தலைவிக்கும்
இதுபோல் பெயர் சூட்டும் மரபில்லாவிட்டாலும் தமிழ்த்தொன்ம மரபில் வேட்டையாட விலங்கைத்
துரத்திவந்து, தினைப்புலம் காத்த மலைமகளிடம் தன் மனதை இழந்த தலைவனுக்கு “முருகன் “
என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். தலைவியின் பெயர் வள்ளி.
இனிக் கொஞ்சம் சொல்லாராய்ச்சி.
இந்த யாய், ஞாய், என்பதெல்லாம் நம்காலத்
தமிழில் இல்லை.
நமக்கு எல்லாம் தாய்தான்
என் தாய்
உன் தாய்
அவன் தாய்
எனத்தான் தன்மை முன்னிலை படர்க்கையில் நாம் இப்போது
சொல்கிறோம். இந்தக் காலத்தில் இது சரிதான்.
ஆனால் சங்க காலத்தில் இதைச்சொல்ல வேண்டுமானால்
யாய்
ஞாய்
தாய்
என்று சொன்னால் போதும்.
அதே போல,
என் தந்தை
உன் தந்தை
அவன் தந்தை
என்று சொல்வதைச் சங்ககால வழக்கில்
எந்தை
நுந்தை
தந்தை
என்றே வழங்கி இருக்கிறார்கள். ( நம் பகவான்ஜி
என்ன சொல்லப் போகிறாரோ :) )
கேளிர் என்றால் உறவினர்கள்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்.‘
கேளிர் என்பதில் ளி யை ளீ ஆக்கி யாவரும்
கேளீர் ( எல்லோரும் கேளுங்கள் என்பதுதான் என்
பள்ளிப் பருவப் புரிதல். பின் தவறு புரிந்த போது அசட்டுச் சிரிப்பு. இப்படி நிறையச் சிரிப்புகளைச்
சேர்த்து வைத்திருக்கிறேன். )
அறிதும் என்றால் இன்றைய வழக்கில் அறிந்து
கொண்டோம் எனச் சொல்லலாம்.
செம்புலம் – என்பதை சிவந்த நிலம் என்றும்
நல்ல நிலம் என்றும் இரு பொருள் கொள்ளலாம்.
பெயல் – பெய்தல்
எளிதாகப் புரிந்து கொள்ளும் படியாகத்தானே இருக்கிறது இந்தச் சங்கப்பாடல்?!!
நாளையும் அவன் அவளைத் தேடி அவளைக் கண்ட அதே இடத்திற்கு வருவான்.
அவளுக்கு இவ்வுறவைத் தொடர்வதில் விருப்பம் இருந்தால் தோழியை ஏதாவது காரணம் சொல்லி விலக்கி விட்டுத்
தனியே அவனைக் கண்ட இடத்திற்கு அவளும் வருவாள்.
இலக்கணங்கள் இதனை இடந்தலைப்பாடு என்கின்றன.
பிறகு என்ன நடக்கும்…?
மீண்டும் காணும்வரை அவனுக்கும் அவளுக்கும்
இடையில் தோன்றும் மன உணர்வுகள் என்ன….?
காத்திருங்கள்.
பட உதவி - நன்றி
Tweet |
# ( நம் பகவான்ஜி என்ன சொல்லப் போகிறாரோ :) )#எந்தை நுந்தை தந்தைக்கு விளக்கம் சொல்லும் போது இதென்ன விந்தை :)என் நினைப்பு எப்படி வந்தது ?
ReplyDeleteஇந்த யாராகியரோதான் ,யார் யார் அவள் யாரோ என்று தொடங்கும் வரிகளை, நம் கண்ணதாசனுக்கு கொடுத்திருக்க வேண்டுமென நினைக்கிறேன் !
நீரின் தன்மையையும் ,நிறத்தின் தன்மையையும் நீங்கள் சொன்ன விதம் ரசிக்க வைக்கிறது !
த ம 2
வாருங்கள் பகவானே..!
Deleteஉண்மையாகவே அவ்வரிகளைத் தட்டச்சுச் செய்த போது உங்களின் ஞாபகம்தான் வந்தது..!
“““““““யார் யார் அவள் யாரோ என்று தொடங்கும் வரிகளை, நம் கண்ணதாசனுக்கு கொடுத்திருக்க வேண்டுமென நினைக்கிறேன் !“““““““
ஆம் ... நீங்கள் சொல்வது சரிதான்.
இதைவிட எளிமையாகத் தமிழில் சொல்லிவிட முடியாதுதானே?
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘‘அவனுக்கு ‘முருகன் ‘ என்பது பெயர்.’’ அவனும் அவளும் ‘கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல’
-என்ற வள்ளுவனின் வார்த்தையையே பொய்யாக்கிவிடுவதைப்போலல்லவா தங்களின் வாய்ச்சொற்கள் வந்து விழுகின்றன...நல்ல கற்பனைக் கலந்த நாடகப்பாங்கில் எழுதி அசத்தியிருக்கிறீர்கள்...! அவள் திணைப்புலக் காவல் காத்துக் கொண்டும்... அவன் அவள் மனசுக்குள்ளும்... அவள் அவன் மனசுக்குள்ளும் இடம் பெயரும் காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்களே!
“ தினைகளை விதைத்துக் காவல் காக்கத் தன் மகளை அனுப்புகிறான் அம் மலைநிலப் பொருப்பன்.. ( பொருப்பு = மலை )அவளும் அவள் தோழியும் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும், பறவைகளை விரட்டியும் காவல் காக்கின்றனர்.” இதைப் படித்தவுடன் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது...
“ வள்ளி திருமணம்“ நாடகம் கிராமத்தில் விடிய விடியப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். “குகனை மணந்த குறிஞ்சி மலர்” என்றுகூட அந்த நாடகத்திற்கு பெயர் சூட்டி நடத்தப்படுவதும் உண்டு. நாடகம் இரவு 10 மணிக்கு மேலே தான் இரவு 11.00க்குள்ளாக ஆரம்பிக்கப்படுவது வழக்கம். விடிய விடிய நாடகம் நடத்தப்பட்டாக வேண்டும்... ஏன் விடிந்தும்கூடி சில ஊர்களில் முருகனுக்கும் வள்ளிக்கும் தர்க்கம் சூடு பிடித்து ஒருவருக்கொருவர் தன் திறமையைக்காட்டி வாக்குவாதத்தில் ... போட்டி போட்டுக்கொண்டு விட்டுக்கொடுக்காமல் இருக்க.......... கிழக்கு வெளுத்துவிடும்... வேறு வழியில்லாமல் நாடகத்தை முடிக்கின்ற நிர்பந்தத்தில் முடிப்பார்கள்.... சபாஷ் சரியான போட்டி என்று பெருமையாகப் பேசிக்கொண்டு வீடுதிரும்புவார்கள்!
இதற்காகத்தான் அன்று சொல்லி இருப்பார்களோ “குடியானவன் மேற்கே பார்ப்பான்...கூத்தாடி கிழக்கே பார்ப்பான்”... ஏனெனில் அவனுக்கு பொழுது சாயுங்காலம்தான் கூலி... இவனுக்கு பொழுது விடிந்தால்தான் கூலி!
ஜோக்காளிகளாக பபூன் பாங்கன் (தோழன் ), பாங்கி ( தோழி )... பாட்டுப் பாடி... ஆட்டம் ஆடி...நையாண்டியுடன் நன்றாகச் சிரிக்கச்செய்து மக்களை மகிழ்விப்பார்கள்.
வள்ளியின் தந்தை... வள்ளி ...தோழி... தோழன்.. நாரதர்...கலகம்...முருகன்...மோதல்...ஊடல்... இறுதியில் வள்ளி திருமணம்...
இன்றளவும் கிராமங்களில் அதிகம் நடக்கும் நாடகம் இதுதான்.
என் தாய் (யாய்) உன் தாய் (ஞாய்) அவன் தாய் ( தாய் ) சங்க காலத்தில் சொன்ன வழக்குச் சொல்லைச் சொல்லி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறீர்கள்.
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?” அருமையான விளக்கத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்...!
நேற்று வரை நீ யாரோ...? நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?
-நன்றி.
த.ம. 5
Deleteஅய்யா வணக்கம்.
Deleteமுருகன் வள்ளி என்கிற தமிழ்த்தொன்மம் நாம் சங்க இலக்கியத்தில் காணும் தலைவனுக்கும் தலைவிக்கும் சூட்டப்பட்ட பெயர்களாகவே எனக்குத் தோன்றுகிறது.
நீங்கள் சொல்லிய பாடலும் அருமையானதுதான்.
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி
வணக்கம்
ReplyDelete1ம் நூற்றாண்டு மரபை 21ம் நூற்றாண்டில் ஒப்பிட்டு எழுதிய விதம் நன்று கொடுத்த விளக்கம் மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் அருமை வாழ்த்துக்கள் ஐயா.. தொடருகிறேன்..த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteஅழகாய் ஒரு கதை சொல்லி இலக்கியப் பாடலுக்கு வந்துவிட்டீர்களே..அருமை அண்ணா.
ReplyDeleteநன்றி சகோ!
Deleteஇலக்கியச் சுவை சொட்டும்
ReplyDeleteஇனிய பதிவு இது!
தொடருங்கள்
தங்களின் ஊக்கத்திற்கு நன்றி அய்யா!
Deleteஅழகான விளக்கம்... ரசித்தேன்...
ReplyDeleteஞாபகம் வந்த பாடல்கள் :
பெண் : உள்ளம் ரெண்டும் ஒன்று...
நம் உருவம் தானே ரெண்டு...
ஆண் : உயிரோவியமே கண்ணே...
நீயும் நானும் ஒன்று...
(படம் : புதுமைப்பித்தன், பாடல்வரிகள் : TN ராமய்யா தாஸ்)
அடுத்த பதிவில் மன உணர்வுகள் இப்படி இருக்குமோ...?
உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டும் தூரம் தான்
இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே
ஊசி போடும் ரெண்டு கண்களில்
உயிரை குடித்தவள் நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில்
உலகை உடைப்பவள் நீ
காதல் சாதல் ரெண்டும் ஒன்று...!
என்னே விந்தையடி...!
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும்...!
கண்ணே உண்மையடி...!
உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெருப்பு காதலே
உயிரின் இருப்பு காதலே
உண்மைக் காதல் உலகை விடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில்
குலுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் கானல் வெளியிலும்
படரும் நிழல் இதுவே...
(படம் : இரண்டாம் உலகம், பாடல் வரிகள் : வைரமுத்து)
உங்களைப் பற்றிப் பேசும் போது உங்களின் தொழில்நுட்ப அறிவு கடந்து நாங்கள் வியப்பது, எந்தச் சூழலுக்கும் பொருத்தமுற எடுத்தாளும் உங்களின் திரைப்படப் பாடல் ஆட்சி. மற்றும் திருக்குறள் அறிவு.
Deleteபதிவுகளைத் தொடர்வதற்கும் கருத்துரைப்பதற்கும் வாக்களிப்பதற்கும் நன்றிகள்.
ஏதேனும் தவறிருப்பின் தயங்காது சுட்டிக் காட்டுங்கள்.
நன்றி
காத்திருக்கிறேன் நண்பரே
ReplyDeleteஆவலுடன்
தம 9
நன்றி அய்யா!
Deleteபோகிற போக்கில் ஏதோ படித்து விட்டுச் செல்லுவதாக இல்லாமல் மனதில் பதிய வைக்கும் வகையில் உள்ளன உங்கள் பதிவுகள்! என்பதே சிறப்பாகும்! வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழத்திற்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteஆசானே! ஆரம்பமே அட்டகாசம்! மனதை மயக்கும் வரிகள்.....இளம் வயதென்றால் நிச்சயமாக இந்த வரிகள் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும்.....(அப்போ இப்போது அப்படி இல்லையா என்றால் ...ம்ம்ம் பதில் சொல்ல முடியாதே....ஹஹஹ்)
ReplyDeleteஅந்த வரிகளுடன் அப்படியே சங்க இலக்கியத்திற்குள் அழைத்துச் செல்கின்றீர்கள் பாருங்கள்....ம்ம்ம் உங்கள் மாணவர்கள் நிச்சயமாகக் கொடுத்து வைத்தவர்கள்!!! நாங்கள் இப்போதும் ரசிக்கின்றோம்.....உங்கள் மாணவர்களாக இருந்திருந்தால் ஆஹா....மிக மிக ரசித்திருப்போம்....
தமிழ் கீர்த்தனைகள் இயற்றுவதில் வல்லவர்களாக இருந்த அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை, முத்துத் தாண்டவர் நினைவுக்கு வருகின்றனர் என்றாலும் அருணாச்சலக் கவிராயரின் "யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே" கூட இந்தச் சங்ககாலப் பாடல்வரிகளின் உந்துதலாக இருக்கலாம்...இல்லையா ஆசானே!?? உங்கள் வரிகள் இந்தப் பாடலை உடனே நினைவுபடுத்தியது. என்ன ஒரு வித்தியாசம் அது முருகன், வள்ளி என்றால் இவர் ராமன், சீதை என்கின்றார்.....
மிக மிக ரசித்தோம்...தொடர்கின்றோம்.....
அருணாச்சல கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனைகள் எம் ஊரில் அரங்கேற்றப் பட்ட நூல் என்பதன்றி அது பற்றி வேறேதும் நான் அறிந்ததில்லை ஆசானே..!!
Deleteஆனால் நீங்கள் சொல்வது போல சங்கப் பாடல்களின் கருத்தைப் பலரும் தம் பாடல்களில் எடுத்தாண்டு போயிருக்கிறார்கள்.
முருகன் சீதை என்பதுதான் நம் தொன்ம மரபு.
இதன் தொடர்ச்சியான வள்ளி திருமண நாடகக்கூத்து மிகப்பிரபலமாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நடைபெற்று வந்திருக்கிறது.
சங்க இலக்கியம் காட்டும் காட்சிக்கு வேறானதில்லை அவர்களின் களவுப் புணர்ச்சி.
இதில் தலைவனுக்கும் தலைவிக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.
தங்களின் வருகைக்கும் ஊக்க மூட்டுதலுக்கும் கருத்திற்கும் அமைதியான வாக்கிற்கும் மிக்க நன்றி.
இந்த உலகத்தைச் சேர்ந்தவள்தானா? அல்லது தேவலோகப் பெண்ணா?—திருக்குறள், விதியா, கடவுளா, இயற்கையா – இலக்கண நூல்கள், என அருமையான இலக்கண மேற்கோள் போலவும், இலக்கிய உரை போலும் அழகாகச் சொல்லிவிட்டீர்கள் விஜூ.
ReplyDeleteஇறுதியாக நீங்கள் பெண்ணும் ஆணும் தம்மைப் புரிந்து, தம்முள் கரைந்து வாழும் அவசியத்தை - “அவள் நிலம். எளிதில் கரைந்தாலும் தன்னுள் அவனை ஈர்த்துக் காடாக்கும் விதையை தன்னியல்பிலேயே கொண்ட அமைதியும் பொறுமையும் அவளிடம் இருக்கிறது. அவன் நீர். சலசலப்பும் வேகப்பெருக்கும், சேருமிடத்திற்கு ஏற்பத் தன் தன்மை இழந்து போதலும் அவனது இயல்பு அவளைப் பார்க்கும் வரை நிறமற்றிருந்த அவன் மெல்ல மெல்ல அவளது நிறமாய் மாறுகிறான்“ என்று சொன்னது வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வழிகாட்டும் வரிகள்.
மிகவும் அருமை நண்பா! தொடருங்கள் – த.ம.12
அய்யா வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!
கண்ணோடு கண்ணினை நோக்கினால் வாய்ச் சொற்கள் பயனில்லாதன...
ReplyDeleteஆனால் அகம் பேசியதையும் அப்படியே காட்சிப்படுத்திய விதம் வெகு அழகு.
"அடுத்தென்ன காதல் சாதல் இரண்டும் ஒன்று" என்று மறுமொழி தந்த சகோவையும் பாராட்டுகிறேன். அடுத்த பாடலுக்கு காத்திருக்கிறோம்.
“““'ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வாலே நுகர்ந்து இன்புறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார் ““““ என்று அகம் என்பதை விளக்குவார் நச்சினார்க்கினியார்.
Deleteதீ சுடும் என்பது எல்லாருக்கும் தெரியும்.
சூடு என்கிற உணர்வு எப்படி இருக்கும்......?!
அதை உணராத ஒருவனிடத்து எப்படி அதனை விளக்க முடியும் ?
இன்னொரு புறம் அக உணர்வுகளைப் புலப்படுத்துவதில் தமிழ் மரபில் இருந்த நுண்மையும் வசீகரமும்.
இப்பாட்டின் சூழல், பார்த்தவுடன் ஏற்பட்ட உள்ளப் புணர்ச்சி என்பதாய் நானாக அமைத்துக் கொண்டது.
அதற்கேற்பவே இப்பாடலின் பொருளை விளக்கினேன்.
ஒருவேளை இதை நீங்கள் தலைவி தன்னைக் கொடுத்தபின் ( இழந்தபின் ) தலைவன் தன்னை ஏமாற்றிவிடுவானோ என்கிற அச்ச உணர்வுக்கு ஆட்பட்ட போது அதை மாற்ற தலைவன் இதைக் கூறியிருப்பதாக வைத்துப் பார்த்தால், செம்புலப்பெயல் நீர் அவ்விருவரின் உடற்கலப்பை உணர்த்தும்.
செம்புலம்
உள்ளுறைந்து கிடக்கும் விதைகள்
பெயல் நீர்
என..........................................
அது விரிக்கும் அர்த்தங்கள் பெருகும்.
(நானும் பதிவில் அவ்வாய்ப்பையும் தொட்டுப்போனேன்.)
இந்த நாகரிகத்திற்குத்தான் உள்ளுறை இறைச்சி என்று பாட்டிற்குள் கட்டி வைத்தார்கள்.
உள்ளத்து உணர்வால் நுகர்ந்து இன்புறும் விடயத்தை வெளிப்படையாக வைக்காமல் உள்ளத்துணர்வுடையோர்க்கே விளங்கும்படியாக உட்பொதிந்து வைத்துள்ளது சங்க அகப்பாடல் மரபு.
“கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் “
என்று சொல்லும் நம் இலக்கணங்கள்.
கண்ணும் செவியும் இருந்தால் போதாது .
அவற்றால் நாம் பெற்ற அறிவைக்கொண்டு நுண்ணிதின் உணர வேண்டுமாம்.
சங்கப் பாடல்களின் சிறப்பே அதன் ஒவ்வொரு அடுக்கிலும் ஊடுருவிக் கிடக்கும் பொருள்தான் .(Layers of Meaning ).
வாசிப்பின் அனுபவத்தில் அவற்றின் சாத்தியங்களை மீட்டெடுத்தல் சுகம்.
அதைப் பகிர்வது நீங்களும் இதுபோல் மீட்டெடுக்க முடியும் என்பதால்தான்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
உண்மைதான் சகோ. வாசிப்பின் சுகத்தை தங்களைப்போன்று வனப்புடன் சொல்ல தங்களிடமே நானும் பழக வேண்டும்.
Deleteவணக்கம் சகோதரா !
ReplyDeleteமுத்தான பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .எப்போதும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து அதன் உட்பொருளை ஒட்டு மொத்தமாக உள்வாங்க வைக்கும் சிறந்த பகிர்வுகளில் ஒன்றாகத் தங்களின் பகிர்வினைக் காண்கின்றேன் ! வாழ்த்துக்கள் சகோதரா தொடர்ந்தும் இது போன்ற பகிர்வுகளைத் தாங்கள் எமக்குத் தந்த வண்ணம் இருக்க வேண்டும் என வேண்டுகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் நிச்சயம் நன்றி சகோ!
Deleteஎன்ன இன்னமும் ஒருமுறைக்கு இருமுறை வாசிக்கும் படியாகவா எழுதுகிறேன் ?!
இனி முதல் வாசிப்பிலேயே பொருள் விளங்கும் வண்ணம் எழுத முயல்கிறேன்.
தங்களைப்போன்றோரின் அன்பும் ஆதரவும் மென்மேலும் நான் கற்கத் துணைசெய்து போகின்றன.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
பதிவையும் விரிவுரையையும் ரசித்தேன். குண்டக்காமண்டக்கா என்று கேள்விகள் எழுகின்றன. தலைவன் தலைவி தோழி தோழன் எல்லாம் சரி/ தோழிகள் எப்போதுமே தோழிகள்தானா. தலைவியாக முடியாதா.?இல்லை இந்தப் பாடல்கள் தலைவன் தலைவியை முன் வைத்தே பாடப் படுமா. ?
ReplyDeleteவாருங்கள் ஜி. எம். பி. சார்!
Deleteஉங்களது கேள்விகள் ஒன்றும் குண்டக்க மண்டக்கக் கேள்விகளாய்த் தோன்றவில்லையே...!
நீங்கள் கேட்பது நியாயமான கேள்விதானே..:))
தலைவி - தோழி என்கிற மாறாத பாத்திரப்படைப்பாக இதைக் கொள்ள வேண்டியதில்லை.
தோழிகளும் காதலிக்கப்படும் போது தலைவியாகி விடுவார்கள்.
காதல் யாருக்கு வருகிறதோ அவள் தலைவியாகி விடுகிறாள்.
அவளோடு இருப்பவள் அப்போதைக்கு அவளது தோழி.
தோழிக்குக் காதல் வந்தால் தோழி அங்குத் தலைவியாகிவிடுவாள்.
தலைவி தோழியாகி விடுவாள்.
( குழப்பம் இல்லாமல் சொல்லி விட்டேனா )
தங்கள் வருகை மகிழ்ச்சியே தருகிறது அய்யா!
நன்றி
வணக்கம் சகோ!
ReplyDeleteஇன்றைய பாடத்தில் இடந்தலைப்பாடு தவிர புதிய செய்திகள் அதிகமில்லை. பாடலும் ஏற்கெனவே நன்கு தெரிந்த பாடல். மழைபெய்து செம்மண் குழம்பு ஆறாகப் பெருகி ஓடும் போது செம்புலப்பெயர் நீர் போல என்ற உவமை நினைவுக்கு வந்து இன்பம் பயக்கும். தொடருங்கள். த,ம. வாக்கு 15.
தாமதமாகப் பதிலளிப்பதற்கு மன்னியுங்கள்.
Deleteஎப்பொழுதும் மிக நீளமாகத்தான் பதிவினைத் தட்டச்சுகிறேன்.
பதிவுகள் மிக நீளமாக இருக்கின்றன என்று வருகின்ற நட்புகளின் கருத்திற்கு மதிப்பளித்தே ஒரு பதிவினை இரண்டாய் மூன்றாய்த் துண்டிட நேர்கிறது.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!
யாயும் ஞாயும் யார் ஆகியரோ? என்ற பாடலுக்கு ”முருகன்” என்ற பெயரில் புதுமையான நல்ல கற்பனை விளக்கம்.
ReplyDeleteத.ம.16
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா
Deleteசிறப்பான இலக்கணப் பதிவு அருமை.
ReplyDeleteஇரு மனத்தின் இயல்பான பேச்சினை அமைதியாக கவிதை நடையில் தாங்கள் தந்துள்ளவிதத்தைப் படிக்கும்போது நிகழ்விடத்திற்கே சென்ற உணர்வு ஏற்பட்டது. எழுத்துக்களில்கூட ஒரு மென்மையைக் காணமுடிகிறது. அதுதான் தமிழ். அதுதான் சங்க இலக்கியம்.
ReplyDeleteமுனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
Deleteவணக்கம் ஊமைக்கனவுகள் !
ReplyDeleteசங்குள்ளே நெருப்பூட்டி சாம்பலை தேடுவோராய்
எங்கும் அறியாமை இருக்கின்ற வேளையிலே
சங்கப் புலவனுக்கும் சளைக்காத உம்திறமை
பொங்கிடக் கண்டுமனம் பூரித்துப் போகின்றேன் !
வலைப்பூ வருவதற்கு நேரம் இல்லாவிட்டாலும் தங்கள் தளம்பார்க்க கண்டிப்பாக வருவேன் அடுத்த பதிவையும் பார்த்திட்டு கருத்திடுகிறேன் ...தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடன் !
தம + 1
தங்களது வருகைக்கும் கவிதைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நன்றி கவிஞரே!
Deleteசுவையான பதிவு! இதை நான் இப்பொழுதுதான் படிக்கிறேன். தாய், யாய், ஞாய் வேறுபாடு இதுவரை தெரியவே தெரியாதது! வியக்கிறேன். நன்றி ஐயா!
ReplyDeleteஅண்ணா, மிகவும் ரசித்தேன்..எப்பொழுதும் போல் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.
ReplyDelete//அவன் கண்களைக் கீழே தாழ்த்தி அங்குப் பார் எனக் காட்டுகிறான்..// அழகு அண்ணா
ReplyDeleteவணக்கம்!
சங்கத் தமிழமுதைப் பொங்கும் உரைவடிவில்
இங்குப் படைத்தீர் இனிமையுடன்! - தங்குதடை
இல்லாமல் செல்லும் எழில்கண்டேன்! காட்சிகளைச்
சொல்லாமல் காட்டும் தொடர்ந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு