Wednesday, 10 May 2017

ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இறப்பு என்னும் பெரும் புதிரின் நடுவே  இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன என அறியாமல் மாறிமாறி உழன்று, முடிந்து போகின்ற வாழ்வு பற்றிய அச்சுறுத்தலில் இருந்து நாம் பெறமுடியும்.


வைதிக சமயங்கள்  அதைத் தெய்வசித்தம் என்கின்றன.

உலகாயதம் நீங்கிய சமண பௌத்த சமயங்கள் அதை வினைப்பயன் அல்லது கருமம் என்கின்றன.

ஆசீவகம் அதனை ஊழ் என்கின்றது.

அனைத்திற்கும் காரணம், தெய்வச்செயல் என்பவரை விட்டுவிடுவோம்.

வினைப்பயன் அல்லது வினைக்கொள்கை என்பது ஒருவர் அடைகின்ற நன்மை தீமைகளுக்குக் காரணம், அவர்கள் சென்ற பிறவியிலோ அல்லது இந்தப் பிறவியிலோ செய்த செயல்கள்தான் என்று சொல்வது. வடமொழியில் இது கர்மா ( கருமம் ) எனப்பட்டது.

ஆசீவகம் சொல்வது, நாம் ஒரு செயலைச் செய்யும் முன்னரே அது எப்படி நிகழவேண்டும் என்பதை வரையறுத்து வைத்திருக்கும் ஆற்றல் ஒன்று உள்ளது. அதனுடைய திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.

அதனைத் தமிழில்  ஊழ், என்றும்  முறை என்றும் ஏன் அந்த ஆற்றல்தான் தெய்வம் என்றும் கூட வழங்கினர். வடமொழியில் இதனை நியதி என்றனர்.

வினைக்கொள்கைக்கும் ஊழ் என்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை நாம் முதலில் மனதிருத்த வேண்டும்.

ஏனெனில், இவை இரண்டும் ஒன்றெனக் கருதி விளக்கப்படுதலும் விளங்கிக் கொள்ளுதலும் பலநூறாண்டுகளாகத் தமிழில் நிகழ்ந்து வந்துள்ளது. ஊழ் என்பதுடன் வினை என்பதையும் சேர்த்து ஊழ்வினை என்று இன்று நாம் இயல்பாக வழங்குகிறோம். ஆனால் ஊழ் என்பதும் வினை என்பதும் வேறுவேறானவை.


இந்தப் பதிவை நான் எழுத வேண்டும் என்பதும் நீங்கள் படிக்க வேண்டும் என்பதும் கூட ஆசீவகர் கூற்றுப்படி ஊழ்தான். அது இன்றேல் நான் இதனை எழுதி இருக்கவோ நீங்கள் படித்திருக்கவோ முடியாது.

ஏழையால் பிறந்துவிட்ட ஒருவன் செல்வனாவதற்கும், படிப்பறிவற்ற பின்புலத்தில் இருந்து வந்த ஒருவன் கல்வியறிவில் சிறந்து விளங்குவதற்கும் முயற்சி ஒன்று போதாதா? முயன்றால் முடியாதது உண்டோ? என்று ஆசீவகரைக் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில், அப்படிச் செல்வனாகவோ, கல்வியறிவுள்ளவனாகவோ அவனுக்கு ஊழ் இருந்தால் ஒழிய அவன் என்ன முயன்றாலும் அவனால் அந்த நிலையை அடைய முடியாது. எனவே ஊழே வலிது.

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி 
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த 
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் 
பருவத்தால் அன்றிப் பழா”


“வருந்தி அழைத்தாலும் வாரத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா”

இந்தப் பாடலின் வரிகளையும் இதைப்போன்று நம்மிடையே உள்ள பாடல்கள் மற்றும் பழமொழிகளையும் நினைவு படுத்திப்பாருங்கள். இறந்து போன ஆசீவகக் கோட்பாட்டைத் தெரிந்தோ தெரியாமலோ இப்பாடல்கள் உட்பொதிந்து வைத்திருக்கின்றன.

நம் சமூகத்தில் விதி என்றும் தலையெழுத்தென்றும் இன்றும்  நடந்து முடிந்த ஒன்றை ஆற்றுப்படுத்த  நாம் சொல்லும் சமாதானங்கள் யாவும் ஆசீவகத்தின் கொட்பாடுகளே!

வினைக்கொள்கையின் படி, இவை ஒருவன் செய்த செயல்களைச் சார்ந்து அமைபவை. அது முற்பிறப்போ இப்பிறப்போ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால்,

நடந்து முடிந்தனவே இனி நடப்பவற்றைத் தீர்மானிக்கும் என்று வினைக்கொள்கை சொல்ல, நடப்பதனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான் என ஆசீவகரின் ஊழ்க்கோட்பாடு சொல்கிறது.

இங்கு, ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்ட அந்தத் திட்டத்தை அறிந்து கொள்ளும் ஊழும் சிலருக்கு அமைகிறது என்பதையும் அவர்களே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு எதிர்காலத்தில் நிகழ்வதைக் கணித்து அறியும் வல்லமை பெறுகிறார்கள் என்றும் ஆசீவகம் நம்புகிறது.

சாணன், கலந்தன், கணியாரன், அச்சித்தன், அக்கிவேசாயனன், கோமாயபுத்தன் ஆகிய ஆறு ஆசீவகத்துறவிகளும், மக்கலியிடம் இருந்து பெற்ற, இன்பம், துன்பம், பேறு, பேறின்மை, பிறப்பு, இறப்பு ஆகிய கோட்பாடுகளைத் தொகுத்து  எட்டுப் பகுதிகள் உடைய நூலை அமைத்தனர்.

இந்த மகாநிமித்தங்கள் எனப்படும் எட்டும், ஆசீவகக் கோட்பாட்டின்படி, வரையறுக்கப்பட்டுவிட்ட இவ்வுலகின் எதிர்காலத்தைக் கணித்து உரைக்கும் பகுதிகளாக விளங்கின. இன்றைய சோதிட நூல்களனைத்திற்கும் ஆதிநூல் என மகாநிமித்தத்தை நாம் துணிந்து கூறலாம்.

நாம் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருப்பதுபோல, சமணத்துறவி, இந்த மகாநிமித்தங்களைக் கற்கக் கூடாது. எச்சூழலிலும் இவற்றைப் பயன்படுத்தி வாழ்தல் கூடாது என்றெல்லாம் அக்காலச் சமண நூல்கள் இதற்குத் தடைவிதித்திருந்தன.

நகைமுரண் என்னவென்றால், இப்படித் தொகுக்கப்பட்ட ஆசீவகரின் நூலொன்று இருந்தது; அதில் இந்த ஆறுபேரும் எட்டு நிமித்தகங்களை இன்னின்னவாறு தொகுத்துரைத்துள்ளனர் என்று நாம் இன்று தெரிந்துகொள்ளத் துணைபுரிவன இந்தச் சமணநூல்கள்தாம்.

இந்த நேரத்தில் இரு முக்கியமான விடயத்தையும் நாம் மனதிருத்த வேண்டும்.

1. வினைக்கொள்கையும், ஊழ் கோட்பாடும் ஆரியர் வருகைக்கு முன்பே தொல் இந்தியக் குடிகளிடையே வழக்கில் இருந்த கோட்பாடுகள். 

2. ஆசீவகம் என்னும் சமயமும் அவர்தம் கொள்கைகளும் இந்தியப்பெருநிலத்தில் இருந்து முற்றிலும் அழிந்திருந்தாலும் அவர் பற்றிய செய்திகளையும் கொள்கைகளையும் நாம் அறிந்து கொள்ள உதவுவன சமண பௌத்த நூல்கள் மற்றும் அவற்றிற்கு எழுதப்பட்ட உரைகள்தாம். இன்னொருபுறம், வேறெந்த இந்திய இலக்கியங்களிலும் காணக்கிடைக்காத அளவிற்கு ஆசீவகருடைய கோட்பாடுகளைத் தொகுத்துச் சொல்லும் இலக்கியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.

இவற்றைக் குறித்துப் பார்க்கும்முன் ஆசீவகர் எதிர்காலம் குறித்துக் கணித்தறியப் பயன்பட்ட அந்த எட்டு நிமித்தங்கள் குறித்துப் பார்த்து விடுவோம்.

இத்தொடர்பதிவின் முந்தைய பதிவுகளைக் காண கீழே சொடுக்கவும்.

1. ஆசீவகம் – 3 : நெருப்பினுள் இருக்கலாம்!

2. ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்

3. ஆசீவகம். – காமம் எப்படித் தோன்றுகிறது?

4. சமணம் – சில அனுபவங்கள்..!


தொடர்வோம்.

படஉதவி - நன்றி https://i0.wp.com/neutralearth1.files.wordpress.com/2016/11/image
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

21 comments:

 1. விளக்கம் புரிகிறது கவிஞரே...
  தொடர்கிறேன்.
  த.ம.

  ReplyDelete
 2. ஆசீவகம் சொல்வது, நாம் ஒரு செயலைச் செய்யும் முன்னரே அது எப்படி நிகழவேண்டும் என்பதை வரையறுத்து வைத்திருக்கும் ஆற்றல் ஒன்று உள்ளது. அதனுடைய திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.// அப்படி என்றால் இதைத்தான் நம்மில் பலரும், நம் மூத்தோரும் சொல்வதோ?! விதி என்று சொல்லுவது இதைத்தானோ? அப்படி என்றால் விதியை மதியால் வெல்லலாம் என்ற கூற்று தவறா? ஆசீவகம் சொல்லுவதை ஏற்க முடிகிறதுதான். ஒரு சில நம் கட்டுப் பாட்டிற்குள் இல்லை என்று சொல்லலாம். நாம் தலைகீழாக நின்றாலும் நிறைவேறாமல் போவது..அப்போதும் இது நினைவில் வந்தாலும் கூட மனம் சொல்லும் இல்லை உன் முயற்சியில் எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது...என்று உடன் மற்றொரு மனம் சொல்லும் அந்தத் தவறு நிகழ்வதற்கும் கண்ணை மறைப்பதற்கும் காரணம் இதுதான் இப்படித்தான் நடக்க வேண்ட்ம் என்றிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது என்று மனம் விவாதம் நடத்தும்.

  அபப்டியென்றால் இந்துமதத்தில் சொல்லுவது போல முற்பிறவியில் செய்த வினைகளுக்குத்த்தான் இப்போது நமக்கு நடப்பது என்று...ஊழ்வினை என்றுதான் அர்த்தம் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது உங்கள் விளக்கத்தின் படி பார்த்தால் ஊழ் வேறு வினை வேறு என்று. அதன் அர்த்தம் சரியாக விளங்கவில்லைதான். அடுத்த பதிவு வந்தால் விளங்கும் என்று நினைக்கிறோம்....என்ன தெரிகிறது என்றால் ஆசிவகர் சொல்லியதைத்தான் எல்லா தத்துவங்களும் சிறிய மாறுபாடுகளுடன் சொல்லப்படுவது போல் தோன்றுகிறது...

  பல விடயங்களை அறிய முடிகிறது. சுவாரஸ்யமான பதிவு...தொடர்கிறோம்..

  கீதா

  ReplyDelete
 3. மற்றொன்றும் நான் அடிக்கடி மனதில் நினைப்பது. நாம் முயற்சி செய்து கடினமான முயற்சி செய்து தடங்கல்கள் இன்னல்கள் இடையூறுகள் வந்தாலும் இறுதியில் வெற்றியுடன் முடித்துவிட்டால் சொல்லுவது "விதி?பார் எத்தனை தடங்கள் வந்தது. முடியாது என்று எல்லோரும் சொல்லிய பின்னும் இப்போது முடித்துவிட்டாயிற்று..காரணம் விடா முயற்சி....எனவே விதியை மதியால் வெல்ல முடியும் என்பதே உண்மை" என்று மனம் கெக்கலிக்கும்.

  பல முயற்சிகள் செய்தும் தோல்வியுற்றால் "ஹிஉம்... என்ன செய்ய எல்லாம் விதிப்படித்தானே நடக்கும்...விதியை மாற்ற முடியுமா? இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எழுதியிருந்தால் அதை யார் மாற்ற முடியும்....அந்த ஆண்டவனே வந்தால் கூட மாற்ற முடியாது..." என்று மனம் விதியின் மீது பழி சுமத்தி வேடிக்கை பார்க்கும்..சமாதானம் கொள்ளும்...

  நான் நினைப்பதுண்டு...ஒரு வேளை மனித மனம் தான் எல்லாம் வென்றுவிட முடியும் என்று இறுமாப்பு கொள்ளாமல் இருக்கத்தான்தன்னையும் மீறி ஒரு சக்தி உண்டு என்பதற்குத்தான் இப்படி விதிப்படிதான் நடக்கும் என்றும் தலையில் ஒரு குட்டு வைத்து இறுமாப்பை அடக்குவதற்கு உதவுகிறதோ என்றும் தோன்றும்...

  கீதா

  ReplyDelete
 4. இதைத்தான் இந்துமதத்தில் சொல்லியிருப்பார்கள் கீதையில் சொல்லியிருப்பதாக...

  "நமக்கு நடப்பதற்கும் இறைவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி..." என்று. எது நடந்தாலும்....எல்லாம் அவன் செயல்... அவனுக்கும் இதற்கும் த்டோர்பில்லாத போது ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்று தோன்றும். மனதில் பிரார்த்தித்துக் கொள் இறைவன் நலல்து செய்வான் என்று சொல்லி, அது நடக்காத போது அவ்விறைவன் மீது கோபம் கொண்டு இறைவனே இல்லை என்ற உணர்வும், நமக்கு அப்பாற்பட்ட சக்தியைத் தூற்ற்வதும் எதற்கு என்று தோன்றும். அதே சமயம் நாம் நினைத்தது நடந்துவிட்டால் பார் இறைவனை வேண்டினால் நலல்தே நடக்கும் என்றும் சொல்லுவதும். போற்றுவதும் முரணாகத் தோன்றும். இறைவனை வேண்டுவது என்பது நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் வளர்த்டதிடவும், நாம் நினைத்தது நடக்காத போது, அதை ஏற்றுக் கொள்ளும் மன உறுதியை ஏற்படுத்தவும் தான் என்றல்லாமல் நமக்கு நடப்பதற்கும் அந்த நம்மை மீறிய சக்திக்கும் தொடர்பு இல்லை என்றே தோன்றுகிறது.என் தனிப்பட்டக் கருத்து.ஆசிவகர் கருத்துகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.. மிக்க நன்றி சகோ..

  கீதா

  ReplyDelete
 5. அருமையான விளக்கம்.

  ReplyDelete
 6. எல்லாமே விதியின்படிதாம் நடக்கின்றன என்கிற நம்பிக்கை இன்றும் பலருக்கு உண்டு. எனக்கும் அந்த ஐயம் கொஞ்சம் உண்டு. ஆனால், இந்தக் கோட்பாடுகளையெல்லாம் இந்து சமயக் கோட்பாடுகளாகவே அனைவரும் அறிந்துள்ளனர். ஏதோ உங்களைப் போல் ஆராய்ந்தறிபவர்கள் ஓரிருவர் சொல்ல, எங்களைப் போல் ஒரு சிறு குழுவினர் இந்தக் கொள்கைக் கொள்ளைகளை அறிகிறோம்! இந்து சமயம் எல்லா வகையிலும் ஏமாற்றுகிறது! இதைப் பெரும்பான்மை மக்களுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பதுதான் நம்முன் உள்ள பெரும் சவால்!

  ReplyDelete
 7. ஊழ் - எல்லாம் முன் குறிக்கப்பட்டது. மனித முயற்சி பொருளற்றது.
  வினைக்கொள்கை - ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு.
  பொதுவாக மனிதர்களைக் கர்ம வினை குறித்த அச்சமே நன்னெறியில் நடக்கக் கட்டுப்படுத்துகிறது.
  Einstein அவர்களுடைய மேற்கோள் நினைவில் வருகிறது.
  "தெளிவான பதில்களை விடச் சிறந்த கேள்விகளை எழுப்புவது கடினமானது "
  விடை தெரியாதவரை வினாக்கள் சுவாரஸ்யமானவையே!
  நுட்பமான வேறுபாட்டை அழகாக விளக்கியுள்ளளீர்கள்!

  ReplyDelete
 8. வினைக்கும் ஊழுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறது (என்றுதான் நினைக்கிறேன்) . ஆங்கிலத்தில் சொல்லப்படும் Fate இதற்குப் பொருத்தமாக வருமா?

  ReplyDelete
 9. “நம் சமூகத்தில் விதி என்றும் தலையெழுத்தென்றும் இன்றும் நடந்து முடிந்த ஒன்றை ஆற்றுப்படுத்த நாம் சொல்லும் சமாதானங்கள் யாவும் ஆசீவகத்தின் கொட்பாடுகளே!”
  ஒன் தலையெழுத்தை மாத்த யாரால முடியும்?
  பொறந்த அன்னிக்குத் தலையில எழுதினதை, மாத்தியா எழுத முடியும்?
  விதி முடிஞ்சு போச்சு! என்றெல்லாம் நாம் அன்றாடம் கேட்கும் வசனக்கள் அனைத்தும், ஆசீவகத்தின் கோட்பாடுகள் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்.
  வேறெந்த இந்திய இலக்கியங்களிலும் காணக்கிடைக்காத அளவிற்கு ஆசீவகருடைய கோட்பாடுகளைத் தொகுத்துச் சொல்லும் இலக்கியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன என்பதை அறிந்தும் வியந்தேன்.
  எட்டு நிமித்தங்கள் குறித்துத் தொடருங்கள். தொடர்கிறேன். நன்றி.

  ReplyDelete
 10. சைவ சித்தாந்தக் கோட்பாட்டில் வருகின்ற சஞ்சிதம், ஆகாமியம், பிராரர்த்தம் என்பனவற்றோடு இது சற்று ஒத்துப்போவது போல எனக்குத் தோன்றுகிறது.

  ReplyDelete
 11. மற்கலியின் ஆசீவகம் பற்றி ஓரளவு எனக்குத் தெரியும் ; தெரியாத பல விஷயங்களை உங்கள் கட்டுரையால் அறிந்தேன் , நன்றி .வினைக் கோட்பாட்டுக்கும் ஊழ்க் கோட்பாட்டுக்கும் இடையே யுள்ள வேறுபாட்டை ரத்னச் சுருக்கமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் ; பாராட்டுகிறேன் .

  ReplyDelete
 12. ஊமைக் கனவை இத்தனை காலமும் அறியாமல் இருந்திருக்கிறேனே. வேறு ஒரு பக்கத்தில் உங்கள் அறிவை வியந்தே இங்கு வந்தேன். மீண்டும் வருவேன். பலவற்றை அள்ளிக்கொண்டு போவேன் . சிறப்பு பாராட்டுக்கள்

  ReplyDelete
 13. வணக்கம் பாவலரே !

  எனக்குப் புதிதான புதிரான பதிவாக இருக்கிறது தொடர்ந்து படிக்கிறேன்
  பகிர்வுக்கு நன்றி

  வாழ்க நலம்

  ReplyDelete
 14. இப்போது தான் வந்தேன். விடுபட்டவற்றை படித்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
 15. ஊழ் என்பது இப்படித் தான் நடக்கும் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இப்பிறவியிலோ முற்பிறவியிலோ செய்த பாவ புண்ணியங்களுக்கு தொடர்பில்லை.
  வினை என்பது , இப்போது உனக்கு நடப்பதெல்லாம் நீ இப்பிறவியிலோ முற்பிறவியிலோ செய்த பாவ புண்ணியங்களின் பலன்.

  என் புரிதல் சரியா விஜூ ?

  ReplyDelete
 16. வணக்கம் நண்பரே
  உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
  வாழ்த்துக்கள்
  discount coupons

  ReplyDelete
 17. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete
 18. அன்னை மரியாளின் சேயே, அல்லலை அகற்றுவாயே!

  ReplyDelete
 19. அவ்வளவுதானா? மீதி ?

  ReplyDelete