Tuesday, 12 January 2016

சொல்லாத சொல்லுக்கும் பொருள் உண்டு; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-17


தொடர்பதிவுகளை இடைவெளிவிட்டுத் தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நான் கடந்த சில பதிவுகளாகக் கலித்தொகைப் பாடலொன்றைத் இடைவெளியின்றிப் பதிந்து போனேன். இன்னும் அந்த ஒருபாடலே முடிவு பெறவில்லை. சரி…., நீண்ட பதிவிற்கு ஓர் இடைவெளிவிட்டுச் சிறிய பதிவொன்றை இடலாமே என்று இதனைத் தொடர்கிறேன்.

தலைப்பு,  உங்களுக்கு எல்லாம் தெரிந்த ஒரு குறளோடு தொடர்புடையது. 

குறள் இதுதான்,

“பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்!“

முதலில், இதற்கு எளிமையான இரு உரைகளைக் கீழே தருகிறேன்.

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.”

இது மு.வ அவர்களின் உரை.

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.”

இது சாலமன் பாப்பையா அவர்களின் உரை.

சரி,
இதற்குப் புகழ்மிக்க உரையாசிரியரான பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ஏனெனில், அதுவே இப்பதிவிற்குத் தலைப்பாக அமைந்தது.

இறைவன் அடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்;

 சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

இங்கே,

பெரிதுபடுத்திக் காட்டப்பட்ட,  “சேர்ந்தார்” என்ற சொல்லைக் கவனியுங்கள்.
அந்தச் சொல் திருக்குறளில் இருக்கிறதா?

குறளிலேயே வராத ஒரு சொல் இங்கு சேர்க்கப்பட்டு அதற்குப் பின் பொருள் கூறப்படுகிறது.

“ பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி சேரா தவர் ” என்பதில்,

‘பிறவிப் பெருங்கடல் நீந்தார் இறைவன் அடிசேரார்’ என்ற கருத்து பாடலில் இருக்கிறது.

பாடலில் மீதம் இருப்பது,

நீந்துவார் என்ற சொல் மட்டுமே!

நீந்தாதவர்கள் சேரமாட்டார்கள் எனப்பாடலில் வருவதால், (நீந்துபவர்கள்) சேர்வார்கள் என்று பாடலில் ஒரு சொல் வரவேண்டும். ஆனால் குறளில் அச்சொல் வரவில்லை. என்ன செய்வது? பாடலில் சொல்லப்படாத இந்தச் சொல்லை உரையெழுதும்போது பாடலில் சேர்த்துக் கொண்டு பொருள் எழுதுகிறார் பரிமேலழகர்.

இப்படி, பாடலில் பொருள் கொள்வதற்கு அவசியமான ஒரு சொல் குறைந்து வந்து, சொல்லாத அச்சொல்லை வருவித்துக் கொண்டு பொருள் கொள்ளும் இடங்களை நம் இலக்கணங்கள் ” சொல்லெச்சம் ” என்கின்றன.

சொல் எச்சம் என்பது, பாடலில் வர வேண்டிய அத்தியாவசிமான ஒரு சொல் வராமல் இருப்பது.

சொல்லாத சொல்லுக்குப் பொருள் இருக்கிறது சரி.

சொல்லிய சொல்லுக்குப் பொருள் இல்லாமல் இருக்குமா ?

( ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறது தொல்காப்பியம். )

ஆனால் பொருள் இல்லாமல் நிற்கும் சொற்களும் இருக்கின்றன எனக் காட்டி, அதற்கும் நம் இலக்கணம் பெயர் சூட்டி இருக்கிறது.

அதுபற்றி அறிந்தவர்கள் சொல்லுங்கள். அறியவிரும்புகின்றவர்களுக்கு விடை,

எனும் பதிவில் இருக்கிறது.

பி.கு.

இந்தக் குறள் நயம்மிக்க குறள்களுள் ஒன்று.
பதிவின் எல்லை கருதி  இத்துடன் நிறுத்துகிறேன்.
பரிமேலழகரின் உரைகொண்டே இதன் நுட்பத்தை விளக்கமுடியும்.

இப்பாடலுக்கு மேலே காட்டியதன்றி, எஞ்சி உள்ள பரிமேலழகரின் உரை,

காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். ~சேர்ந்தார்~ என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்கு பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.

அறிந்தோர் பகருங்கள்.


தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

49 comments:

 1. சொல்லாத சொல்லுக்கும் பொருளுண்டு
  தமிழின் அருமை அறிந்து வியக்கின்றேன் நண்பரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

   Delete
 2. சொல்லாத சொல்லிற்குப் பொருளும், பொருளின்றி ஓசைக்கு வரும் சொல்லும்.. இரண்டுமே அணி சேர்ப்பவை இல்லையா அண்ணா?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ!

   உணர்வார்க்கு அணி!

   உணரார்க்குப் பிணி!

   சரிதானே?:)

   தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.

   Delete
 3. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்றார் கவியரசர். சொல்லாத சொல்லுக்குப் பொருளுமுண்டு என்பதையும்
  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆம். இவ்விடுகைக்குத் தலைப்பிடும்போது இவ்வரிகளை நினைவு கூர்ந்தேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

   Delete
 4. பேசிய வார்த்தையை விட பேசாத வார்த்தைக்கு அதிகம் மதிப்பு உள்ளதாகக் கூறுவர். தங்களது இப்பதிவு அதனையொத்து உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி முனைவர் ஐயா.

   Delete
 5. சொல்லெச்சம் பற்றி அறிந்து கொண்டேன்! எளிமையான விளக்கம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

   Delete
 6. தங்களின் நுட்பத்தைக் கண்டு வியக்கிறேன்... தொடர்கிறேன் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வலைச்சித்தரே!

   நீங்கள் குறளுக்கு விளக்கம் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 7. வணக்கம்
  ஐயா

  ஒவ்வொரு விளக்கவுரையும்..விதவிதமாக உள்ளது..நுற்பமாகா விளக்கம் கொடுத்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள் ஐயா.
  த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 8. விளக்கம் அருமை.கவர்ந்து இழுக்கக் கூடிய தலைப்பு. மேம்போக்காக படைத்தவற்றின் நுட்பங்களை அறியத் தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் பின்னூட்டமும் மிக்க மகிழ்ச்சி தருகிறது.

   மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

   Delete
 9. சொல்லாத சொல்லுக்குப் பொருளா? ம்..ம் நல்லது அது " சொல்லெச்சம் "என்று அறிந்தேன்.
  சொல்லிய சொல்லுக்கும் பொருள் இல்லாமை ம்..ம் இதற்கு விடை அங்கு தேடணுமா? சரி தேடிட்டு வாறன். ஆத்தில போட்டிட்டு குளத்தில தேடுவது மாதிரி இல்லையே ஹா ஹா சும்மா தான் சொன்னேன். ஐய என்ன சிரிப்பு.... முடியுமா பார்க்கலாம்?.....

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா!

   இது போன்ற பழமொழிகளை நீங்கள் பின்னூட்டத்தில் கையாண்டு நாளாயிற்றுத்தானே?

   ஆம் இது ஆறுதான் . ஓடிக்கொண்டிருக்கிறது.

   அந்தத்தளம் தேங்கிக் கிடப்பதால் குளம் என்கிறீர்களோ?

   ;)

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

   Delete
 10. அன்புள்ள அய்யா,

  சொல்லாத சொல்லுக்கும் பொருள் உண்டு... இதையும் சொன்னால்தான் தெரிகிறது!

  வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
  -திருக்குறள் கலைஞர் உரை.

  த.ம.+1

  ReplyDelete
  Replies
  1. கழகக் கண்மணிகளுக்காக சொல்லப்பட்ட அறிவுரை போலுள்ளதே ஐயா? :)

   பரிமேலழகரைப் பாருங்கள்.

   வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

   Delete
 11. எளிய குறள் ஒன்றைக் குறிப்பிட்டு உடனுரைத்த சொல்லெச்சம் குறித்த விளக்கத்துக்கு நன்றி. பாடலில் சொல்லப்படாத செய்தியொன்றை படிப்போர் ஊகித்து உணரும்படி அமைந்திருந்தால் அதன்பெயர் என்னவென்பதையும் தாங்கள் கொடுத்துள்ள சுட்டிவழி சென்று அறிந்தேன். நன்றி விஜி சார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் இருதளங்களையும் படித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 12. மேலும் ஒரு சொல் பாடலில் பொருளற்று அசையாது நின்றால் அதன் பெயர் என்னவென்றும் அறிந்தேன். அறிந்திராத பல இலக்கண இலக்கியத் தகவல்களை அறியத் தரும் தங்களுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 13. தங்களின் பதிவைப் படிக்கும்போது தமிழின் மீது இன்னும் காதல் பிறக்கிறது. மொழியின் நுட்பங்களை அறிந்துகொள்ள முடிகிறது. தொடருங்கள். தொடர்கிறேன்.
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

   Delete
 14. பரிமேலழகர் உரை சில இடங்களில் வலிந்து எழுதப் பட்டுள்ளது என்ற ஒரு குற்றச் சாட்டு உண்டு!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் புலவர் ஐயா.

   நீங்கள் சொல்வது உண்மைதான்.

   இந்தத் தளத்திலேயே பரிமேலழகரின் உரைக் கோளாறுகளைப் பற்றி விவாதித்திருக்கிறோம்.

   நயமான உரைகளையும் அவர் எழுதியிருக்கிறார். அவற்றை ஏற்கலாம் அல்லவா?

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

   Delete
 15. அருமையான விளக்கம்.

  ReplyDelete
 16. அருமையான விளக்கம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete


 17. ‘சொல் எச்சம்’ பற்றியும் ‘இசையெச்சம்’ பற்றியும் அறிந்தேன். ‘கற்றது கைமண்ணளவு என்பதை தங்கள் பதிவை படிக்கும்போது அறிகிறேன். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அநேகம் என்பதை உணரவைத்த தங்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். முதலில் இப்பதிவுடன் இணைந்துள்ள பதிவினைப் படித்து உள்வாங்கிக் கருத்தளித்தமைக்கு எனது நன்றி.

   யாரேனும் இதனைக் கேள்வியாகக் கேட்க மாட்டார்களா?

   இங்கே சொல்லெச்சம் என்றிருக்கிறீர்கள், அங்கே இசையெச்சம் என்றிருக்கிறீர்கள் இரண்டிற்கும் வேறுபாடு என்ன என்றெல்லாம் எண்ணிக் காத்திருந்தேன்.

   நீங்கள் அதனைப் படித்து உணர்ந்து கொண்டதோடு கருத்தும் இட்டிருக்கின்றமைக்கு மிக்க நன்றி.

   Delete
 18. சொல்லெச்சத்தை உங்களால் அறிந்தேன் ,மிச்சத்தையும் நீங்களே சொல்லிடுங்க :)

  ReplyDelete
 19. சொல்லெச்சத்தை உங்களால் அறிந்தேன் ,மிச்சத்தையும் நீங்களே சொல்லிடுங்க :)

  ReplyDelete
  Replies
  1. இப்படி நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது பகவானே! :)

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 20. தமிழ் மேலும் மேலும் சுவையூட்டி ஈர்க்கின்றது சகோ தங்கள் பதிவுகளைப் படிக்கும் போது. கண்ணதாசன் அவர்களின் வரிகள் சொல்லாத சொல்லுக்கு விலையேது என்பதும் நினைவுக்கு வந்தது. இங்கு சொல்லாத சொல்லுக்குப் பொருள்!!!

  சொல்லெச்சம் பற்றி அறிய முடிந்தது. முதல் முறையாக

  சொல்லிய சொல்லுக்குப் பொருள் இல்லாமல் இருக்குமா ?// ஓ இப்படியுமா இருங்கள் நீங்கள் சொல்லியிருக்கும் பதிவிற்குச் சென்றுக் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று பார்க்கின்றோம்..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ.

   தங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள் என்பது தெரியும்.

   தங்களின் ஆர்வத்திற்கும் வாசிப்பிற்கும் தலைவணங்குகிறேன்.

   நன்றி.

   Delete
 21. மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளளாகி என்னை வருத்தப்பட வேண்டா என நின் திருவடி சரணம் என்று நான் நம்பி வந்தேன்

  எனும் பாடல் நினைவுக்கு வருகிறது.

  எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்தோம் எடுப்போம் என்ற கணக்கில்லை.
  கணக்கு வைத்திருப்பவன் கணினியிலே எனக்கொரு இடம் நிரந்தரம்.

  அந்த கணினியின் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகவேண்டின்
  அவன் கருணை புரியவேண்டும்.
  அவன் அருளாலே அவன் தாள் வேண்டி என்று உரைத்ததுபோல்,
  இறைவன் அடி சேருவதற்கும் அவன் அருள் வேண்டும்.
  happy Pongal.
  சுப்பு தாத்தா
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சுப்புத்தாத்தா!

   தங்களின் விளக்கம் அருமை.

   திருக்குறளுக்குக் காலந்தோறும் உரையெழுதப் படுவதைப் போல் இக்காலத்திலும் தங்களால் புதிய உரை எழுத முடியும் போன்று எனக்குத் தோன்றுகிறது.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 22. பொங்கல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

   தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனதினிய வாழ்த்துகள் உரித்தாகுக.

   நன்றி.

   Delete
 23. “எனவாங்கு;

  அணிமாலைக் கேள்வற் றரூஉமா ராயர்

  மணிமாலை யூதுங் குழல்”//

  இதில் நச்சினார்க்கினியரின் உரையில் எனவாங்கு எனும் சொல்லிற்கு (அசை நிலை) தம் கருத்தால் பொருள் உரைத்தல் சரியா? இதுதானே அது? சகோ.

  ReplyDelete
  Replies
  1. சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள் சகோ!

   தங்களின் வாசிப்பும் ஆர்வமும் காணப் பெருமகிழ்வு.

   நன்றி.

   Delete
 24. இன்று தான் இப்பதிவைப் படித்தேன். சொல் எச்சம், இசை எச்சம் இரண்டுக்குமான வேறுபாடுகளை நான் எழுதியிருக்கிறேன். நான் புரிந்து கொண்டது சரியா?
  இசையெச்சத்தில் விடுபடுவது ஒரு சொற்றொடர்; சொல் எச்சத்தில் ஒரேயொரு சொல் மட்டும்.
  இசை எச்சம் = விடுபட்ட சொற்றொடரின் பொருளை ஊகித்து உணர்தல்
  சொல் எச்சம்- சொல்லை வருவித்துப் பொருள் காண்தல்

  ReplyDelete

 25. வணக்கம்!

  பத்துவகை எச்சங்கள் பாங்குடன் நான்படித்தும்
  முத்துவகைச் சொல்லில் மொழிவேனோ? - கொத்துமலர்
  கொஞ்சக் கொடுக்கின்ற கோலப் பதிவுகளை
  விஞ்ச உளார்..யார் விளம்பு?

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
 26. நல்ல விளக்கம் ஐயா

  ReplyDelete