Saturday 9 January 2016

உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1. 2




ஏறுதழுவுதல் தொடங்கிவிட்டது. வேகமாகச் சீறிப்பாயும் காளையை அடக்க வீரன் ஒருவன் களமிறங்கிவிட்டான். அது தொழுவில் இறங்கி நிதானமாக நின்று தன்முன் சிறுபதரென நிற்கும் அவனையே ஊன்றிப் பார்க்கிறது.

தோழி தலைவிக்கு அதைக் காட்டிச் சொல்கிறாள்.

“கூட்டுள் இருந்து வெளிவந்த சிறு பட்டுப்பூச்சி போலச் சிறிய கண்களால் அவனை உற்று நோக்கும் அந்த ஏற்றின் பார்வையைப் பார்!

அவனோ அதற்கு ஒருசிறிதும் அச்சம் அடையவில்லை.

இதோ அதன்மேல் பாய்கிறான்.

ஐயோ! அவன் பிடிக்கு விலகித் தன் தலையால்  அவன் மார்பை முட்டிவிட்டது அந்தக் காளை.

அவன் கதையை முடித்தே விட வேண்டும் என்கிற ஆவேசத்தில் அதன் கொம்புகள் அவன் நெஞ்சைக் குத்தி உள்ளிறங்குகின்றன.

இரத்தம் நனையும் நிலம்.

ஒருமுறை சிலிர்த்தடங்கிய உடலினின்று கடைசியாய் உதிர்ந்தது அவன் உயிர்.

இந்தக் காளை,

கௌரவர்கள் அவை நடுவே,

சூதில் பணயமாய் வைத்து இழந்த 

திரௌபதியின் கூந்தலைப் பற்றத்

தன் கையை நீட்டினானே துச்சாதனன்,

அவனைக் கொல்ல உறுதி பூண்டு,

எதிரிகள் முன்னிலையிலேயே

அவன் மார்பைப் பிளந்து,

தன் சபதத்தை

நிறைவேற்றிக் காட்டிய

பீமசேனனைப்  போலல்லவா தோன்றுகிறது?

மேற்பாட் டுலண்டின் நிறனொக்கும் புன்குருக்கண்
நோக்கஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக்
கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றங்காண்!
அஞ்சீ ரசையில்  கூந்தற்கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண்தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம். ”

தோழி மேலும் தொடர்கிறாள்.

இதோ,

அடுத்த காளை களத்தில் இறக்கிவிடப்படுகின்றதைப்  பார்!

காரிருளில் எழுந்த பிறை போலக்

கரிய உடல் கொண்ட அதன் நெற்றியில்

தோன்றுகிறது அந்த வெள்ளைச் சுழி!

ஒருவனின் மரணத்தைக் கண்டபின்பும்,

இதனை அடக்க அந்த வீரர் கூட்டத்தில் இருந்து யார் வரப் போகிறார்கள்?

அதோ….!

மலையில் பூக்கும் அழகிய மாலையை அணிந்த ஒருவன் தொழுவில் இறங்கி அந்தக் காரிக் காளையை நோக்கி முன்னேறுகிறான்.

அதுவும் அவனை நோக்கி வேகமாகப் பாய்கிறது.

ஐயோ!

இதென்ன..?

தழுவ முயன்ற அவன் வயிற்றைக் கிழித்திறங்கி விட்டனவே

அதன் கூரிய கொம்புகள்!

வயிறு கிழிந்து அவனது குடல் வெளியே தோன்றுவதைப் பார்!

உலகம் முடியும் காலத்து அனைத்து உயிர்களையும் அழிக்கும் உமையொருபாகனான சிவபெருமான், இறுதியில், எருமையை வாகனமாகக் கொண்ட கூற்றுவனுக்கு அதற்குப்பின் உயிர் வாங்கும் வேலையின்மையால், அவனையும் அழித்து அவன் குடலை உருவிக் கூளியின் பசிக்கு உண்ணக் கொடுக்கின்றதைப் போன்றல்லவா இருக்கிறது வீரனின் குடலை உருவிய இந்தக் காளையின் கோபம்?

“ சுடர்விரிந் தன்ன சுரிநெற்றிக் காரி
விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடிக்
குடர்சொரியக் குத்திக் குலைப்பபதன்  தோற்றங்காண்!
படரணி யந்திப் பசுங்கட் கடவுள்
இடரிய ஏற்றெருமை நெஞ்சிடந் திட்டுக்
குடர்கூளிக் கார்த்துவான் போன்ம்.


தோழி தொடர்கிறாள்.....,

“ காதுகளின் பின்புறம் சிவந்த புள்ளிகளை உடைய எருது இறக்கிவிடப்படுவதைப் பார்! மிகுந்த ஆவேசத்தோடு சீறிப்பாய்ந்து வருகின்ற இதன் முன் யாராவது நிற்க முடியுமா?

இதோ, அதன் கோபத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அதன் கொம்புகளைப் பற்றப் பாய்கிறான் வீரனொருவன்.

காளை அதற்கு இடம் கொடுக்காமல், தன் தலையைத் திருப்பி, தன் கொம்புகளால் அவ்வீரனின் தலையைக் குத்தி மண்ணில் சாய்த்தபின்னும் கோபம் அடங்காமல் அவன் முகத்தைச் சிதைக்கிறது!

இது,

துரோணாச்சாரியாரைக் கொன்ற  திட்டத்துய்மனின் தலையைத் திருகிக் கொன்ற அஸ்வத்தாமனின் செயலினைப் போன்றல்லவா தோன்றுகிறது?

செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளைக்
கதனஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாடி
நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் றோற்றங்கா
ணாரிரு ளென்னா னருங்கங்குல் வந்துதன்
றாளிற் கடந்தட்டுத் தந்தையைக் கொன்றானைத்
தோளிற் றிருகுவான் போன்ம்

இப்பொழுது,

தலைவிக்குக் ‘காளையை அடக்கப் புகுகின்ற நம் காதலனுக்கும் இக்கதி ஏற்படுமோ?’ என்ற கலக்கம் வருகிறது. தோழியின் மனம் அவள் கலக்கத்தை உணர்ந்து கொள்கிறது. அந்த நேரம் பார்த்து, ஆயர் தம் குழலினை ஊதுகின்றனர். இதைத் தோழி அவள் கலக்கத்தை விரட்டப் பயன்படுத்துகிறாள்.

“ இதோ ஆயர்கள் மங்கலகரமான தம் குழலை ஊதுகின்றனர். இது நல்ல நிமித்தம்.

எனவே நீ அஞ்சாதே!

நிச்சயமாய்க் காளையை அடக்கி  அவன் உன்னை மணந்து கொள்வான்!”

“ எனவாங்கு;
அணிமாலைக் கேள்வற் றரூஉமா ராயர்
மணிமாலை யூதுங் குழல்

தோழி இப்படிச் சொல்லிவிட்டாளே தவிர, அவளது மனதிலும் தலைவனைக் குறித்த அச்சமும் கலக்கமும் இருக்கிறது.

அவள் நேரே வீரர் கூட்டத்திடையே நின்று கொண்டிருக்கும் தலைவியின் காதலனை நோக்கிச் செல்கிறாள்.

எதற்காக அவனை நோக்கிப் போகிறாள்?
தொடர்வோம்........


நயங்கள்.

1) இந்தப் பகுதியின் முதலில் வரும் காளையின் தோற்றத்திற்கு உவமை கூறப்படுவது  “மேற்பாட்டு உலண்டு” இதற்கு “உயர்ந்த கொம்பினில் வைத்த உலண்டின் நிறம் போல” என்றே நச்சினார்க்கினியரும் உரைக்குறிப்புகளை எழுதிய பிற ஆசிரியர்களும் குறிப்பிடுவர். அதாவது இதன் நிறம் காளையின் நிறத்திற்கு உவமம்.

உலண்டு என்பது பட்டுப் பூச்சி.

நிறம் என்பதற்கு வண்ணம் என்று மட்டும் அல்லாமல் உடல் என்ற பொருளும் உண்டு.

கூட்டிலிருந்து வெளிப்பட்டுத்தோன்றும் பட்டுப் பூச்சியின் தோற்றம் போல என எருதின் தோற்றத்திற்கும் நிறத்திற்கும் ஒருசேர  இதன் பொருள் இருப்பின் இந்த உவமை இன்னும் துல்லியமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இதோ உலண்டின் படத்தைப் பாருங்கள்.

மேற்பாட்டுலண்டின் நிறனொக்கும் தோற்றம் காண்


வடிவத்திற்கும் நிறத்திற்கும் மட்டுமன்றிச் சிறகுகளைக் காளையின் பாய்ச்சலுக்கான வினை உவமாகவும் கொண்டால்  இந்த உலண்டு காளையின் தோற்றத்திற்கு எவ்வளவு பொருத்தமான உவமை?

2) திரௌபதியின் கூந்தலுக்குக்  கொடுக்கப்படும் அடைமொழியைப் பாருங்கள்.

அஞ்செஞ்சீரசையியல் கூந்தல் =  அம் + செம் + சீர் + அசை + இயல் + கூந்தல்.

இதற்கு நச்சினார்க்கினியர்,

‘அழகிய தலைமையினை உடைய மனமசைந்த இயல்பினை உடையோளாகிய திரௌபதையின் கூந்தல்’ என உரையமைப்பார்.

பொதுவாகவே இதுபோன்ற சொற்களைச் சேர்த்தமைத்தல் இக்காலக் கவிஞர்கள் பயன்படுத்துகின்ற, அவர்களுக்கு மிகப் பயன்படும் நல்ல உத்தி.

3) “குடர் கூளிக்கார்த்துதல்” “குடலை உருவி மாலையாக இடல்” போன்றன தொல்குடிகளின் வழிபாட்டினோடு தொடர்புடைய இன்றும் வழக்கில் இருக்கும் தன்னளவில் பொருள் நீர்த்த சொல்லாடல்கள்.

4) இப்பாடலில் இப்பதிவில் நாம் பார்த்த பகுதியில், மூன்று விதமான தோற்றமுடைய காளைகள் களமாடின.

1) உலண்டின் தோற்றமும் நிறமும் உடைய காளை.

2) நெற்றியில் வெள்ளையை உடைய கரிய காளை.

3) காதுகளில் சிவப்புப் புள்ளிகளை உடைய காளை.

மூன்றுவிதமான புராணச் செய்திகள் காளையின் செயல்களோடு தொடர்பு படுத்தப்பட்டன.

1) துச்சாதனனின் மார்பினைப் பிளந்து கொண்ட பீமன்.

2) எருமையேறிய எமனை அழித்து அவனது குடலைக் கூளிக்களித்த சிவன்.

3) திட்டத்துய்மனின் தலையைத் திருகிக் கொன்ற அஸ்வத்தாமன்.

மூன்று வீரர்கள் மூன்று வெவ்வேறு முறைகளில் காளைகளால் தாக்கப்பட்டனர்.

முந்தைய பகுதியில் நாம் மூன்று மலர்களைப் பார்த்ததையும் இங்கே நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு மும்மூன்றாக வருவதென்பது நாட்டார் வழக்காற்றியலோடு பெரிதும் தொடர்புடையது.

இந்த அளவுப் புராணச் செய்திகள் வேறெந்த சங்க இலக்கியத்திலும் இல்லை. கலித்தொகையில் இச்செய்திகள் பேரதிகம் காணப்படுவது என்பது சங்க கால நூல்களில் காலத்தால் பிற்பட்டது இந்நூல்  என்பதற்கான பல தரவுகளில் மிக முக்கியமானது.

5) ஏறுதழுவும்  காட்சியைக் காணும் தலைவியின் கலக்கத்திற்கான காரணம், வாசிப்பவரின் ஊகத்திற்கே விடப்படுகிறது.

பாடலில் அது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

உரையாசிரியர்,  ‘கொல்லப்பட்ட ஆயர்களுக்கு நேர்ந்த கதி தன் காதலனுக்கும் ஏற்படுமோ?’ என்ற தலைவியின் கலக்கம் கண்டு தோழி நன்னிமித்தம் காட்டுகிறாள்’ என்று  கூறுகிறார்.

இங்குத் தலைவி ஏன் கலங்குகிறாள் என்பதற்கான காரணம் இப்பாடலைப் படிக்கும் நாம் உய்த்துணர வேண்டியது. படைப்பிலக்கியத்தில், அது கவிதையானாலும் கதையானாலும் இதுபோல வாசகன் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டிய வெற்றிடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வாசிப்பவனை அந்த இடத்தில் படைப்பாளியாக உரு மாற்றி அவனைச் சிந்திக்கச் செய்பவை. படைப்போடு அவனைத் ‘தான் கலக்கச்’ செய்பவை என்பதால் போற்றத்தக்கவை.

என் வாசிப்பில் தலைவியின் கலக்கத்திற்குப் பின்வரும்  காரணங்கள் தோன்றின.

1) வெல்லமுடியாத கொல்லும் வெறியுடைய காளைகளைத் தன் காதலன் அடக்கிவிடுவானா?

2) அவன் களத்தில் இறங்கும் முன் வேறுயாராவது களத்திறங்கி நம் காளையை அடக்கி நம்மை மணம்புரிந்து கொண்டு விடுவார்களா?

இவை முடிந்த முடிபல்ல. உங்களுக்கு வேறேதேனும் காரணம் தோன்றினால் பகிருங்கள்.

இப்பதிவு குறித்த உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன்.

பொருள் சொல்லும் முறையில் மாற்றம், சுருக்கமாகக் கூறுதல் அல்லது இப்பதிவின் புரிதலுக்கு உதவும் வேறேதேனும் அறிவுரை இப்பதிவு காணத் தோன்றினால் தெரிவிக்க வேண்டுகிறேன். 

மாற்றுக் கருத்துகளை மனம் திறந்து வரவேற்கிறேன்.

இத்தொடரின் முந்தைய பதிவிற்கான நச்சினார்க்கினியர் உரை சொற்பொருள் விளக்கம் போன்ற பகுதிகள் மற்றொரு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இப்பகுதிக்குரிய அவரது உரையும் விளக்கமும் அங்கு இடம்பெறும்.

நாம் இங்குக் காணும் பாடற்பகுதிக்குரிய நச்சினார்கக்கினியரின் உரைக்கான விளக்கமும் சொற்பொருளுமாகவே அப்பதிவில் இதன் தொடர்ச்சி அமையும்.

படிக்க விரும்புபவர்கள் தொடர்வதற்கான சுட்டி மனம்கொண்டபுரம்

இத்தொடர்பதிவின் முதல் பகுதி.

பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள். பகுதி - I


படங்கள் - நன்றி

1) https://encrypted-tbn1.gstatic.com/images

2) https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e4/Bombyx_mori_antennen.jpg
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

52 comments:

  1. இன்றைய காலகட்டத்தில் விவாதத்தில் உள்ள பொருண்மையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட களமும், இணைப்புகளும் அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் முனைவர் ஐயா.

      இப் பதிவிற்கு உடனடியாக வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் தங்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  2. காளையிடம் உயிரைப் பறிக் கொடுப்பதை விட ,காதலை துறப்பது நல்லது என்று காதலன் ஓடிவிட்டானோ :)

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் சஸ்பென்ஸைக் கலைப்பது நியாமா பகவானே? :)

      Delete
  3. விளக்கமாக தந்துள்ளீர்கள்

    ReplyDelete
  4. விளக்கமாக தந்துள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  5. உலண்டின் தோற்றத்துக்கும் காளையின் தோற்றத்துக்குமான ஒற்றுமை அறிந்தேன். அப்பப்பப்பப்பா! ஒரு பாடலை இவ்வளவு நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், எந்த அளவுக்கு நீங்கள் ஒவ்வொரு பாடலுக்கும் நேரம் செலவிட்டிருக்க வேண்டும்! மலைக்கிறேன் ஐயா!!! அசத்தலான பதிவு! மாற்றுக் கருத்து எனச் சொல்ல எதுவும் இல்லை. நீளம் கருதி எதையும் குறைத்து விட வேண்டா; இப்பொழுது எழுதுவது போலவே தொடர்ந்து எழுதுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்! அப்படி நீங்கள் குறைத்து விடவும் மாட்டீர்கள் எனத் தெரியும். காரணம், பாடல் பற்றிய விளக்கங்களே இவ்வளவு நீளம் ஆகிவிடுவதால்தான், பாடலுக்கான விளக்கம் அருஞ்சொற்பொருள் ஆகியவற்றை இனி தனிப்பதிவாக வெளியிட முடிவு செய்துள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கருவூலத் தரமான இப்பதிவுக்காக மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      வணக்கம்.

      “ஒரு பாடலை இவ்வளவு நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், எந்த அளவுக்கு நீங்கள் ஒவ்வொரு பாடலுக்கும் நேரம் செலவிட்டிருக்க வேண்டும்”

      உண்மைதான். மரபார்ந்த ஆசிரியரிடத்துப் பாடம் கேட்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அது இருந்திருப்பின் பாடுகள் கொஞ்சம் குறைந்திருக்கும். ஆனாலும், “ அறிதோறும் அறியாமை காணும் சுகம் ” அலாதியானது. அறிந்தோர்க்கே அது புலனாகும்.

      இதைப் பதியும் போதும், அதை வாசிக்கின்ற நேரம் செலவிட்டுக் கருத்திடுகின்ற உங்கள் ஒவ்வொருவரைக் காணும்போதும் புத்துணர்ச்சி எழுகிறது. அது இன்னும் இன்னும் படிக்கவும், படித்தவற்றைப் புதுக்கிக் கொள்ளவும் உறுதுணையாய் அமையும்.

      பொதுவாக இவ்வளவு நீண்ட பதிவுகளைத் தொடர்கின்றவர்கள் குறைவுதான்.

      அதுகுறித்துக் கவலை கொண்டிருக்க முடியாது.

      ஒரு காலம்வரை, இந்த ஆகாத இலக்கியங்களைப் படித்து என்ன ஆகப்போகிறது என்ற கருத்தினைக் கொண்டிருந்தவன்தான் இங்கே தட்டச்சிக்கொண்டிருக்கிறான்.

      இதே பாடலுக்கான நச்சினார்க்கினியர் உரையும், உரைப்பொருளும், உரைநயமும், சில சொற்களுக்கான நுண்பொருளும் மனம்கொண்டபுரத்தில் எழுதியிருக்கிறேன்.

      அதற்கான உழைப்புப் பேரதிகம்.

      உங்களைப் போன்றோரின் கருத்து இன்னும் என்னை ஊக்குவிக்கும்.

      நேரம் இருக்கும்போது பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  6. சொல்ல மறந்து விட்டேனே! "ஏறுதழுவலுக்கு அரசு ஒப்புதல் வழங்கி விட்டது" என்ற செய்தி வந்தவுடன், பதிவையே நீங்கள் "ஏறுதழுவுதல் தொடங்கிவிட்டது" என்று தொடங்கியிருப்பது அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      இது திட்டமிட்டு அமைத்ததன்று. எதிர்பாராதது.

      தங்களின் மீள்வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  7. என்ன சொல்வது ... பதிவுகளை வாசிக்க நேரமும் செலவும் அதிகம் என்றாலும் , நூறு சதவிகிதம் தகுதியான பதிவு தங்களுடையது.
    தங்களின் உழைப்பு வியப்பைத் தருகிறது.

    ReplyDelete
  8. என்ன சொல்வது ... பதிவுகளை வாசிக்க நேரமும் செலவும் அதிகம் என்றாலும் , நூறு சதவிகிதம் தகுதியான பதிவு தங்களுடையது.
    தங்களின் உழைப்பு வியப்பைத் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி அண்ணா.

      Delete
  9. பட்டுப்பூச்சிகளின் சிறகுகளைக் காளையின் கொம்புகளாக நினைத்துப் பாய்ச்சலை கற்பனை செய்தால் உவமை வெகு பொருத்தமாயிருக்கிறது! உங்கள் கற்பனை நயம் வெகு அழகு!
    தலைவியின் கலக்கத்துக்கான காரணம் சொல்லப்படாமல் வாசகரின் ஊகத்துக்கு விடப்படுவது வெகு சிறப்பு. முக்கியமான காரணங்களை நீங்களே சொல்லிவிட்டீர்கள். இவை தவிர வேறு என்னவாயிருக்கும் என்று யோசித்ததில் எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று:-
    வீரர்களைக் கொல்லும் காளையின் செயல்களைத் துச்சாதனின் மார்பைப் பிளந்த பீமன், எமனை அழித்த சிவன், திட்டத்துய்மனின் தலையைக் கொய்த அஸ்வத்தாமன் என்பனவற்றோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து பேசுகிறாள் தோழி. அப்படியானால் இங்குக் காளை தவறு செய்தவர்களை அழிக்க வந்த தர்மத்தின் தலைவனாக, அறங்காவலனாகப் போற்றப்படுகின்றது. இப்படிப்பட்ட காளையைத் தன் காதலனால் வெல்ல முடியுமா? ஒரு வேளை இந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கதியே, அவனுக்கும் ஏற்பட்டால் அதற்குப் பிறகு என் கதியென்ன? மரணத்தைத் தழுவுவதா? மனதில் அவனை நினைத்துக்கொண்டு இன்னொருவனை மணந்து எப்படி வாழ்வது என்ற சிந்தனையின் காரணமாக இருக்கலாம் அருமையான பாடல். த ம வாக்கு 7.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      பட்டுப்பூச்சியின் சிறகுகள் அல்ல அவை. சிறகுகள் பின்னால் இருக்கின்றன. அவை அதன் உணர்வுக் கொம்புகள்.

      “““உங்கள் கற்பனை நயம் வெகு அழகு! ““““

      கற்பனை புலவனுடையது அல்லவா?

      ““““““““வீரர்களைக் கொல்லும் காளையின் செயல்களைத் துச்சாதனின் மார்பைப் பிளந்த பீமன், எமனை அழித்த சிவன், திட்டத்துய்மனின் தலையைக் கொய்த அஸ்வத்தாமன் என்பனவற்றோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து பேசுகிறாள் தோழி. அப்படியானால் இங்குக் காளை தவறு செய்தவர்களை அழிக்க வந்த தர்மத்தின் தலைவனாக, அறங்காவலனாகப் போற்றப்படுகின்றது. இப்படிப்பட்ட காளையைத் தன் காதலனால் வெல்ல முடியுமா? ஒரு வேளை இந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கதியே, அவனுக்கும் ஏற்பட்டால் அதற்குப் பிறகு என் கதியென்ன? மரணத்தைத் தழுவுவதா? மனதில் அவனை நினைத்துக்கொண்டு இன்னொருவனை மணந்து எப்படி வாழ்வது என்ற சிந்தனையின் காரணமாக இருக்கலாம் ””””””

      இப்பதிவினைப் படித்ததோடு மட்டும் அல்லாமல் அதுபற்றிச் சிந்தித்து உங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

      காளையை அடக்க வரும் வீரர்கள் தவறு செய்தவர்கள் அல்லர். அன்றைய மரபுப்படி மணமுடித்தலுக்காகத் தாம் விரும்பும் பெண்ணை அடைய ஏறுதழுவிட வந்தவர்கள்.

      இங்குக் காளைக்குப் புராண மாந்தர்களை உருவகப்படுத்துவது காளையை மனித ஆற்றலை விஞ்சிய பேராற்றல் மிக்கதாகக் காட்டும் உத்தியாக எனக்குப் படுகிறது.

      அப்படிப்பட்ட காளையை அடக்க வேண்டும் என்றால் அவனிடம் எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டும் என வாசகனை ஊகிக்கச் செய்யும் உத்தி இது என்று நினைக்கிறேன்.

      திரைப்படங்களில், எதிர்நிலை மாந்தரை ( வில்லன் ) பேராற்றல் மிக்கவனாகவும் காட்டி அவனை கதாநாயகன் வெல்லுவதாகக் காட்டுவதில்லையா அது போல.

      “ காதலனால் வெல்ல முடியுமா? அவனுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் என்னாவது ” என்று நீங்கள் சொல்ல உணர்வுகள் நிச்சயம் அவள் மனதில் ஏற்பட்டிருக்க இடமுண்டு.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. மிக ஆழமாக தமிழின் அழகோடு சொல்லும் தங்களின் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது.
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
  11. வணக்கம் பாவலரே !

    இந்தத் தோழிகளின் தொல்லை தாங்காமல் எத்தனை தலைவிகள் தலையை முட்டிக்கிட்டாங்களோ தெரியலையே !

    சங்கப் பாடல்களையும் அதன் பொருள்களையும் அழகாகக் கூறினீர்கள் நன்றி

    வாசகன் என்னும் இடத்தில் இருந்து நான் இட்டு நிரப்ப வேண்டியவை என்னவென்று இன்னும் புரியவில்லை பாவலரே மீண்டும் வருகிறேன் கருத்துக்களோடு நன்றி !
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  12. உங்களின் நுக்கமான விளக்கங்கள் வியக்க வைக்கிறது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப் பின் உங்களின் வருகையும் கருத்தும் ஊக்கமளிக்கிறது.

      தொடர வேண்டுகிறேன்.

      கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  13. வியக்க வைக்கும் விளக்கங்கள்
    அதுவும் இன்றைய விவாதப் பொருள் பற்றி
    அருமை நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
  14. அன்புள்ள அய்யா,

    ‘பழந்தமிழக ஜல்லிக்கட்டுகள்’ பற்றிய செய்திகள் எல்லாம் குறிப்புகளில் இல்லை எனப் பெண் மந்திரிகள் பேசிவரும் நிலையில் தாங்கள் அதற்கு மறுப்பு சொல்வதைப் போல பல இலக்கியச் சான்றுகளைத் தருவதை அவர்கள் பார்த்தால் வாய்பொத்தி மௌனியாகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

    தாங்கள் பெரிதும் முயன்று கலித்தொகையிலிருந்து காட்டும் பாடல்கள் - நயங்கள் - நச்சினார்கக்கினியரின் உரைக்கான விளக்கமுடன் அதை நயமாக விளக்கிச் சொல்கின்ற முறையைப் பார்க்கின்ற பொழுது கண்முன் காணொளிக் காட்சியாகவே விரிகிறது.

    இதைப்படிக்கின்ற பொழுது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தில் வரும் ஜல்லிக்கட்டுக் காட்சி எனக்கு நினைவிற்கு வந்தது. வெள்ளையம்மாளின் சீறிக்காளை சிங்கம்போல் வரும்.

    அஞ்சாத சிங்கம் என் காளை இது
    பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
    ஆபத்தை நாடிவரும் மாவீரன்
    பாரிலே யாரடி?
    அஞ்சாத சிங்கம் என் காளை இது
    பஞ்சாப் பறக்கவிடும் ஆளை
    கும்மாளம் போடும் உன் காளை இது
    கொட்டம் அடங்குமடி நாளை அங்கே
    கூசாமல் போராடும் மாவீரனை
    நேரிலே பாரடி
    கும்மாளம் போடும் உன் காளை இது
    கொட்டம் அடங்குமடி நாளை
    கூரான கொம்பு ரெண்டு சீராக மின்ன கண்டு
    கூரான கொம்பு ரெண்டு சீராக மின்ன கண்டு
    வீராதி வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு
    மாறாத ஆசையுடன் வீராப்பு பேசிக்கொண்டு
    மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு
    மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு
    ஆண் வாடை கண்டாலே ஆகாது இது
    ஆவேசம் கொண்டாலே பொல்லாதது
    அஞ்சாத சிங்கம் என் காளை இது
    பஞ்சாப் பறக்கவிடும் ஆளை
    வேலேந்தும் காளையெல்லாம் உன்
    வேல் விழியால் சொக்கிடுவார்
    வேங்கை போல் துள்ளிடுவார்
    வெற்றி அடைந்திடுவார்
    வேங்கை போல் துள்ளிடுவார்
    வெற்றி அடைந்திடுவார்
    கண்ணாலம் பண்ணாத ஆண் பிள்ளை உனக்குக்
    கட்டாயம் ஆவானே மாப்பிள்ளை
    அஞ்சாத சிங்கம் என் காளை இது
    பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
    ஆபத்தை நாடிவரும் வீரன்
    பாரிலே யாரடி?
    வெள்ளையத்தேவன் காளையை அடக்க வரும்போது...
    தோழி சொல்லுவாள், “அம்மா வெள்ளையம்மாள்... வந்ததடியம்மா ஒ காளைக்கு ஆபத்து.....!”

    நன்றி.
    த.ம.+1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      சில பதிவுகளுக்குப் பின், தொடர்புடைய திரைப்படப் பாடலுடன் வந்திருக்கிறீர்கள்.

      ரசித்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  15. வணக்கம் ஐயன்!

    ஆஹா! வியக்க வைக்கும் வாசிப்பு எத்தனை நுணுக்கமாக ம்..ம் போன பதிவில் மலர்களை செடி, கோடி, மரம் என்று வகைப் படுத்தி அதனை நுணுக்கமாகக் கண்டறிந்தீர்கள்.

    இப்போ நிறங்களை அடிப்படையாக வைத்து புராணத்தைப் பற்றி ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்று மட்டும் புரிகிறது.ம்..ம் ..

    அதுவும் அல்லாமல் வாசகனை சிந்திக்க வைக்கவும் பதிவோடு கலக்கச் செய்யவும் விடுத்த கேள்வி அசத்தல். அது பதிவை மிகவும் உன்னிப்பாக வாசிக்கத் தூண்டும் வகையில் அமைந்தது.
    தோழியின் பேச்சில் மிரண்ட அவள் தன் காதலன் வெல்வானா என்றும், இவர்களைப் போல அவனும் மாண்டு விடுவானோ என்று எண்ணியிருப்பாள் என்றே தோன்றியது ஆனால் அதை நீங்களே கூறி விட்டீர்களே.

    இருந்தாலும் இப்படி எண்ணியிருப்பாளோ இந்த ஏறுதழுவல் அவசியம் தானா அநியாயமாக இத்தனை பேர் என் திருமணத்திற்காக ஏன் இறக்கவேண்டும். இன்னும் எத்தனை பேர் இறக்கப் போகிறார்களோ என்றும்.

    எப்படி இருந்தாலும் என் காதலனை ஏற்றுக் கொள்ள நான் தயார். நான் தான் ஏற்கனவே அவரையே என் கணவராக வரித்துக் கொண்டு விட்டேனே. அவரைத் தவிர என்னால் வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்கமுடியதே. இதில் ஏன் இந்தத் தேவை இல்லாத போட்டி என்று எண்ணி இருப்பாளோ என்று தோன்றிற்று.

    இது சும்மா தோன்றியதை எழுதினேன்.

    சரி தங்கள் நுணுக்கமான பார்வையில் என்ன தான் சொல்கிறீர்கள் அறிய ஆவலோடு காத்திருக்கிறேன். பதிவு சுவாரசியமாகச் செல்கிறது. விளக்கவுரையும் அருமை! பதிவுக்கு நன்றி! தொடர்கிறேன். மீண்டும் ஏதும் தோன்றினால் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா.

      பதிவினை நான் எழுதியதைவிட ஆர்வத்துடன் படித்து, அது குறித்த உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து போனதற்கு முதலில் என் நன்றியும் வணக்கங்களும்.

      இன்றைய மனவோட்டத்தில், அந்த ஆயர்குலப்பெண், வீரர்களைக் கொல்லும் காளையின் செயல்களைத் துச்சாதனின் மார்பைப் பிளந்த பீமன், எமனை அழித்த சிவன், திட்டத்துய்மனின் தலையைக் கொய்த அஸ்வத்தாமன் என்பனவற்றோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து பேசுகிறாள் தோழி. அப்படியானால் இங்குக் காளை தவறு செய்தவர்களை அழிக்க வந்த தர்மத்தின் தலைவனாக, அறங்காவலனாகப் போற்றப்படுகின்றது. இப்படிப்பட்ட காளையைத் தன் காதலனால் வெல்ல முடியுமா? ஒரு வேளை இந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கதியே, அவனுக்கும் ஏற்பட்டால் அதற்குப் பிறகு என் கதியென்ன? மரணத்தைத் தழுவுவதா? மனதில் அவனை நினைத்துக்கொண்டு இன்னொருவனை மணந்து எப்படி வாழ்வது என்ற சிந்தனையின் காரணமாக இருக்கலாம் ”

      இப்படி எண்ணியிருக்க வாய்ப்பில்லை.

      ஏனெனில் அன்றைய அவர்களின் வாழ்வியல் மரபு, கால்நடைகளைப் பெரிதும் சார்ந்திருந்தது.

      அவற்றைக் கையாளவும்,அவற்றைக் கள்ளர்களிடம் இருந்து காக்கும் பலம் பெற்றிருக்கவும், அவளை மணமுடிக்கும் ஆணுக்குத் தகுதி வேண்டி இருந்தது.

      காளையைத் தழுவாமல் தன் உயிர் பற்றி அஞ்சுபவனை இந்தப் பிறவியில் அன்று மறு பிறவிகளிலும் ஆயர் மகள் தோள்சேராள் என்று இனிவரும் பாடல் கூறும்.

      "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
      புல்லாளே ஆய மகள்"

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      இணைந்திருங்கள்.

      நன்றி

      Delete
  16. ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?? இந்த சுட்டியையும் படித்துப் பாருங்கள் நண்பரே....

    http://www.vinavu.com/2015/01/21/jallikattu-represents-casteist-domination/

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வலிப்போக்கரே!

      இவ்விடுகையை இதன் இன்னொரு இழையையும் தாங்கள் சுட்டி தரும் முன்பே படித்தேன்.

      இது பற்றி “ நாம் ” விவாதித்து முடிவெடுக்க வேண்டுமேயல்லாமல் இதுபற்றிச் சிறிதும் அறியாதவர்கள் தலையிடக் கூடாது என்பதே என் கருத்து.

      விவாதங்களும் மாற்றுக் கருத்தும் வரவேற்கப் பட வேண்டியதே!

      இங்கு நம் இலக்கியப் பழம் பாடலொன்றின் பொழிப்பினை நான் கூறிச்செல்கிறேன்.

      அவ்வளவே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      தொடர்ந்திட வேண்டுகிறேன்.

      Delete
  17. இந்த மாதிரி உயிர் வாங்கும் ஏறு தழுவுதல் நிச்சயம் தடை செய்யப்பட வேண்டும் . ஆனால் இன்றோ ஒரு எருதை எத்தனைபேர் துன்புறுத்துகிறார்கள் அந்தக்காலத்தில் ஏறு தழுவுதலென்பதுகாளையுடன் ஒண்டிக்கு ஒண்டிதானே. பாடல்களும் அவற்றை விளக்கிப் போன விதமும் பாராட்டுக்குரியது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      Delete
  18. சிறப்பான பாடல்களும் அதன் விளக்கமும் ரசித்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  19. தஙுகளுக்கே உரிய அருமையான விளக்கம்! சொல்லாவா வேண்டும்

    ReplyDelete
  20. ரசித்தேன், தொடர்கிறேன் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ஸ்ரீ.

      Delete
  21. புதிய செய்திகளையும் சொற்களையும் அறிந்து கொண்டேன்! அருமையான விளக்கம்! மூன்று காளைகள் மூவரைக் கொன்ற விதம் அதற்கு கையாளப்பட்ட உவமைகள் பிரமிக்கவைத்து காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே!

      Delete
  22. விளக்கங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.ஒன்று நிச்சயம் .எப்போதும் இழப்புகள்தான்(இறப்புகள்) அதிகமாக இருக்கின்றன வெற்றிகளை விட.காலத்துக்கேற்ற பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ஐயா.

      Delete
  23. யம்மாடியோவ்! எத்தனை நுணுக்கமான விளக்கங்கள் சகோ! உங்கள் தேடல், வாசிப்பு, விளக்கங்கள் எல்லாம் என்னே என்று வாய் பிளந்து வியக்கச் செய்கின்றது. ஒப்பீடு அழகு.
    காரணங்கள்..தலைவிக்குத் தன் காதலன் போட்டியில் கலந்து கொள்ளவும் வேண்டும் ஆனால் கலந்துகொண்டால் ஒரு வேளை ஒரு வேளை அடக்க முடியாமல் போய்விட்டால் என்று நீங்கள் குறிப்பிட்ட மூன்று காரணங்களின் கலவையாகவும் இருக்கலாம் அல்லவா...

    மாற்றுக் கருத்துச் சொல்லும் அளவு எங்கள் வாசிப்பு இல்லையே சகோ...இத்தனை விரிவான அழகான உங்கள் கருத்துகள் விளக்கங்களைத் தானே நாங்கள் முதன் முறையாக வாசிக்கின்றோம் சகோ.

    நிறைய தெரிந்து கொள்ள முடிகின்றது. தொடர்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      நீங்கள் சொல்வதுபோல கலவையான மனவோட்டம் இருக்கலாம். கற்பனை செய்வது நமதுரிமை தானே?

      பாடலின் முடிவில் தெரிந்துவிடும்.

      நம் எல்லோருக்குமே வாசிப்பு குறைவுடையதன்று சகோ.

      பதிவுகளில் ஒவ்வொரு துறைசார்ந்ததாக எவ்வளவு எழுதுகிறோம். அதற்காய் எவ்வளவு விடயங்களைப் பார்க்கிறோம் படிக்கிறோம் சிந்திக்கிறோம்.

      நான் ஓரிரு துறைகளில் மட்டுமே அமிழ்ந்திருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றலாம்.

      உங்களைப் போன்று பல துறைகளில் விசாலமான பார்வை என்னிடத்தில் இல்லை அல்லவா?

      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  24. அருமையான விவரமான அசரவைத்த பதிவு. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  25. வணக்கம்
    ஐயா
    தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பற்றி சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அதுவும் நயத்துடன் படிக்க படிக்க தண்ணீர் தாகம் தீர்ந்தது போல ஒரு உணர்வு..ஐயா. வாழ்த்துக்கள் தொடருங்கள்.த.ம17

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  26. வணக்கம் ஐயா,

    தாமதமான வருகைக்கு மன்னியுங்கள். கைப்பேசியில் படித்துவிட்டேன். அதில் பதில் அளிக்க சிரமம். எனவே தான். தங்கள் விளக்கம் அருமை என்று மட்டும் தான் சொல்ல இயலுகிறது.
    மூன்று மூன்றாக நாட்டார் வழக்கு,,,,,,,, ம்ம்,
    உலண்டின் படம் அருமை, உண்மையிலே தங்கள் தேடல் ஆர்வம் அலாதிதான் ஐயா, அதன் உருவம் தெளிவில்லாமல், பட்டுப்பூச்சிக் கான உருவம் எதையோ நினைத்து கற்பனையில் ஆழ்ந்ததுண்டு. ஆனால் இன்று அதன் உருவம் தங்கள் பதிவில் கண்டு( இப்போதாகிலும் தேடியிருக்கலாம் இணையத்தில், என் சோம்பல் தான்,,,) அதிசயத்தேன். அதன் உருவம் அப்படியே காளையின் உருவம்,,கொம்புகள்,, அப்பப்பா,,
    தாங்கள் சொல்லும் கருத்து விளக்கம் நன்றாக இருக்கிறது. ஏன்???????

    மீண்டும் வகுப்புக்குச் செல்கிறேன்,,,
    தொடர்கிறேன்.

    ReplyDelete
  27. உலண்டின் படம் இவ்வளவு பொருத்தமாகத் தேர்ந்தெடுத்த உங்களுக்குப் பாராட்டுகள் அண்ணா. காலை சிலிர்த்துக் கொண்டு பாயத் தயாராய் இருப்பதைப் போலவே இருக்கிறது. சங்க காலப் புலவர்கள் இயற்கையை எவ்வளவு அறிந்துவைத்திருக்கிறார்கள்!!!
    மரணங்களைப் பார்த்துக் கலங்கினாலும் அக்காலத்து வாழ்க்கை முறை இப்படி வீரத்துடன் இயந்து இருந்திருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மரணங்களைப் பார்த்தபின்னும் களம் இறங்கும் வீரனின் காதல் எத்துனைப் பெரிதாய் இருந்திருக்கவேண்டும்!! அதே நேரத்தில் பிடிக்காத பெண்ணை அடைய வேண்டும் என்ற வெறி கூட ஒருவனை இறங்கச் செய்யுமோ என்றும் தோன்றாமல் இல்லை. தலைவியின் எண்ண ஓட்டம் எப்படி இருந்திருக்கும்? நம் தலைவன் காளையை அடக்கி என்னைச் சொந்தமாக்கிக் கொள்வானா? எங்கள் காதல் கண்டிப்பாக இதை நிறைவேற்றும் என்று ஒரு புறமும், தலைவனுக்கு ஆபத்து ஏற்பட்டால் அந்த இழப்புடன் வாழ்வதைக் காட்டிலும் கொடியது அல்லவா வேறொருவனை மணம் புரிவது!! அப்படி ஒன்று நிகழுமாயின் நான் உயிருடன் இருக்கக் கூடாது என்று ஒருபுறமும் எனக்காகத் தலைவன் இப்படி ஒரு ஆபத்தை எதிர்கொள்ள வேண்டுமா? அதற்கு மணம் முடிக்காமல் அவன் நினைவுடனே வாழ்ந்துவிடலாமா, அல்லது உடன்போக்கு சென்றுவிடலாமா...
    ஆஹா! அண்ணா , தலைவியின் எண்ணமாக எவ்வளவு தோன்றுகிறது! :))) உங்கள் பதிவில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிகிறதே அன்றி மாற்றுக்கருத்தொன்றும் தோன்றுவது அரிது ஆசானே! :)
    நன்றி மட்டும் பல முறை பதிகிறேன்! த.ம.18

    ReplyDelete
    Replies
    1. 'காளை'என்பது காலை என்று வந்திருக்கிறது, கவனிக்காமல் விட்டுவிட்டேன், மன்னிக்கவும் அண்ணா.

      Delete
  28. தமிழில் பொதிந்துகிடக்கும் அரிய பொக்கிஷங்களைத் தோண்டிக்கொணர்ந்து இப்படி எங்கள் கைகளில் அள்ளித்தந்து ரசனையில் ஆழ்த்தும் தங்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  29. வணக்கம்!

    காளை யடக்கும்வன் காளைகளின் வீரத்தை
    மூளை மணக்க மொழிந்துள்ளீர்! - வேளை
    மறந்து நெகிழ்கின்றேன்! மாண்பெண்ணித் துள்ளிப்
    பறந்து மகிழ்கின்றேன் பார்!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete