Friday 31 October 2014

தீ உறங்கும் காடு


எங்கேனும் ஓருள்ளம் என்‘எண்ணம் உணராதோ
           என்றென்றன் நெஞ்சம் ஏங்கும்!
       எடையிட்டுப் பார்த்துப்பின் உடைபட்டுப் போகின்ற
           ஏக்கத்தில் அஞ்சித் தேங்கும்!
தங்கத்தின் தரம்தேடித் தகரத்தின் இழிவாக்கித்
           தரையிட்டென் அன்பை மோதும்
      தாளொண்ணாத் துயர்வீழ்ந்து தடுமாறித் தனியேனாய்த்
           தவிக்கின்ற துன்பம் போதும்!
அங்கத்தை ஒளியூட்டி ஆன்மத்தை இருட்டாக்கும்
          அறியாமை கண்டென் உள்ளம்,
       அதிற்கொஞ்சம் ‘நகை‘வைத்(து) அழகென்று பொய்கூற
          அறிவென்முன் நின்(று) எள்ளும்!
பொங்கும்‘என் எண்ணத்தைப் பொழுதெல்லாம் எழுத்தாக்கிப்
          போகின்ற கால வாட்கும்,
       புதிராக எனைவையம் புரியா(து) எரியூட்டப்
          புறப்பட்ட ஓலம் கேட்கும்!


படைமுன்னில் நான்நின்று போர்செய்ய முனைந்தாலும்
        பகைவரென யாரு மில்லை!
     பகைத்தென்னை நகைப்போரைப் பாவமென நான்காணப்
           பகுத்தறிவுப் போரு மில்லை!
தடையெல்லாம் ஒன்றாகித் தனிநிற்கும் எனைத்தாக்கத்
        தண்ணீராய்த் தீயை ஏற்பேன்!
    தவறென்னில் சரியாக்கும் தகையுள்ள உள்ளத்தில்
          தமிழாமென் தாயைப் பார்ப்பேன்!
உடைபட்டு வருமென்றன் உலராத கண்ணீர்த்தூள்
          உணர்விற்குச் சாயம் பூசும்!
    ஊழென்றே ஒதுக்காமல் உளிகொத்தும் வலியேற்க
         உருவாகும் காயம் பேசும்!
அடைபட்ட கூட்டைவிட் டகலாமல்  காக்கின்ற
          அவலத்தீ பட்ட உள்ளம்
    அறிவார்யார்? தெளிவார்யார்? அகல்வார்யார்? புகல்வார்யார்?

           ஆசையின் திட்டம் வெல்லும்!


பட உதவி- கூகுள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

41 comments:

 1. வணக்கம் ஐயா!

  தீயுறங்கு காட்டில் தெளித்தீர் முகாரிராகம்
  நோயுறங்கு உள்ளம் நுகைத்திட்டே! - வானுறங்கும்!
  வண்ண நிலவுறங்கும்! வார்த்தகவி தானுறங்கா(து)
  எண்ணந் திறந்ததே இன்று!

  என்னவெனச் சொல்ல..! எப்படிச் சொல்ல..!
  உண்மையில் இருவிழி கசியப் படித்தேன்!

  உணர்வுக் குவியலாய்க் கவிதையைக் கொட்டிவிட்டீர்கள்!
  கொள்ளும் வழி அறிகிலேன்!..
  வலிமிக்க வார்ப்பு! வாழ்த்துவது எங்ஙனம்?!...
  உங்கள் கவித் திறமையைப் பாராட்டுகிறேன் ஐயா!

  தமிழ்மணம் 2

  ReplyDelete
  Replies
  1. இங்கோவென்,
   ஊருறங்கும் நேரம் ஒருமனதின் கூக்குரலை
   யாருணர வல்லார் இளமதிபோல்? - சீருணர்ந்து
   விண்டீர்! வியவேன்!! விழிதுஞ்சும் நேரமலோ
   கண்டார் மதியின் கவின்?
   வருகைக்கும் வெண்பா விளாசலுக்கும் நன்றி கவிஞரே!
   என்ன நாங்கள் தான் உங்கள் பின்னுட்டத்திற்கு வெண்பாவில் பதிலிடக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
   ம்ம்.
   அதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது.
   நன்றி சகோ!

   Delete
  2. ஐயா!.. மீண்டும் என் வணக்கம்!

   விளாசுகிறேனா... ஐயோ என் குரு வந்து விளாசப் போகிறார் என்னை..:)

   தவறு கண்டு திருத்தியுள்ளேன்.. மீளத்தருகிறேன்.. கீழே!..
   கற்றுக்குட்டியெனை மன்னி(பொறு)த்தருள்க..!
   அதிகமாகப் புகழுகின்றீர்கள் ஐயா!.. உங்கள் உயரம் ஏணி வைத்தாலும் எனக்கெட்டாது...:))
   நன்றி!

   திருத்தமுடன்......

   தீயுறங்குங் காட்டில் தெளித்தீர் முகாரிராகம்
   நோயுறங்கு(ம்) உள்ளம் நுகைத்திட்டே! - வானுறங்கும்!
   வண்ண நிலவுறங்கும்! வார்த்தகவி தானுறங்கா(து)
   எண்ணந் திறந்ததே இன்று!

   Delete
  3. யப்பா நம்ம டுமீல் குப்பம் தாதாக்களே பரவாயில்லை ...
   யாத்தி எப்புட்டு புலமை... ஜோ.விக்கும் இளமதிக்கும் ...
   இனி இந்தப் பக்கம் வருவேன்..
   இப்பவே கண்ணக்கட்டுதே ...

   Delete
  4. வரமாட்டேன் என்பதை வருவேன் என்பதற்கும் இலக்கணம் இருக்கிறது தோழர்!
   இப்படிப் பட்ட சொற்களைத் தமிழில் குறிப்புச் சொற்கள் என்று சொல்கிறார்கள்.
   எல்லாத்துக்கும் இலக்கணம் வைச்சிருக்காங்கன்னு நினைக்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கு!

   Delete
  5. எங்களுக்குத்தான் கண்ணக் கட்டுதுனு நினைச்சோம்...உங்களுக்குமா மது தோழரே! அது சரி கண்ணக் கட்டாத சகோதரி மைதில் எங்க காணோம்....

   Delete
  6. அய்யா,
   இப்படிக் கண்ணைக் கட்டாமல் எழுதத் தான் முத்துநிலவன் அய்யா சொல்கிறார்.
   இது முன்னர் எழுதப்பட்டதுதான்.
   இனி நிச்சயமாய்க் கண்ணைக் கட்டாதபடி எழுத முயல்கிறேன்.
   நன்றி ஆசானே!

   Delete
 2. திருவாக உருவாகி நின்ற யுன்னை
  கருவாக உயிர்த் தெழுந்தே-பாதம்
  தொழ நினைத்தேன் பெருந்தீயாய்
  பெருக்கெடுத்து காற்றோடு கைகலந்து
  அழி செயல் ஏனோ? அரங்க நாதா!
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தெருவினில் நின்ற பிள்ளை
   .... தெய்வத்தை வேண்டி நாளும்
   கருபடு வயிறை எண்ணிக்
   ....கலங்குதல் போலே அன்புத்
   திருமொழி காணக் காணத்
   .....தேம்பிடு மென்றன் நெஞ்சில்
   அருமொழி பகர்ந்தீர் நம்பி!
   ..... அரங்கனின் நாமம் நம்பி!
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!

   Delete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. "எங்கேனும் ஓருள்ளம் என்‘எண்ணம் உணராதோ
  என்றென்றன் நெஞ்சம் ஏங்கும்!
  எடையிட்டுப் பார்த்துப்பின் உடைபட்டுப் போகின்ற
  ஏக்கத்தில் அஞ்சித் தேங்கும்!" என்ற
  அழகுத் தமிழ் கொஞ்சும் அடிகளால்
  உள்ளத்தே வந்தமரும் சிறந்த பாவிது!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

   Delete
 5. அங்கத்தை ஒளியூட்டி ஆன்மத்தை இருட்டாக்கும்
  அறியாமை கண்டென் உள்ளம்,
  அதிற்கொஞ்சம் ‘நகை‘வைத்(து) அழகென்று பொய்கூற
  அறிவென்முன் நின்(று) எள்ளும்!

  நீங்காத துயர் தனை நெஞ்சிலே
  தாங்கிநீர் வடித்திட்ட கவிதை-எமை
  தூங்கவும் முடியாது சிந்தையில் நின்றே
  ரீங்காரம் செய்யுதையா

  சூழும் துன்பமது சூழாமல் செய்யும்
  சூட்சுமம் உன்னதைய்யா
  உளிபட்ட உன்னுள்ளம் தெளிபட்டு
  ஒளிபட்டு தெறிக்கின்றபோது மின்னும்!
  எங்கேனும் ஓருள்ளம் என்‘எண்ணம் உணராதோ
  என்றென்றன் நெஞ்சம் ஏங்கும்!
  எடையிட்டுப் பார்த்துப்பின் உடைபட்டுப் போகின்ற
  ஏக்கத்தில் அஞ்சித் தேங்கும்!

  பாட்டாலே அழித்திடு பாவமதை
  கேட்டாலே அழிந்திடும் அவலமெலாம்!

  அருமை சகோ! என்ன இப்படி உள்ளத்தை உடைக்கும் படியான கவிதை....!
  வார்த்தை வரவில்லை சகோ! பின்னர் வருகிறேன். எனது கருத்தை பாருங்கள் தளத்தில்.

  ReplyDelete
  Replies
  1. போதும் போதும் எனும் அளவிற்குக் கருத்திட்டுவிட்டேன் சகோதரி.
   தங்களின் வருகையும் கவிதைப் பின்னூட்டமும் கண்டு மகிழ்ச்சி

   Delete
 6. அன்புள்ள அய்யா,
  தீ உறங்கும் காட்டுக்குள் சென்றால்...
  ‘நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதே‘
  எங்கேனும் ஓருள்ளம் உன் எண்ணம் உணராதே
  பாரெல்லாம் உன்பாட்டு பாடும் பொழுது
  நீரெல்லாம் பேருள்ளம் பெறும் மகனார்
  சீருள்ளம் வேர்விட்ட ஆலமரம்
  நீ விட்ட விழுதெல்லாம் ஊரெல்லாம் தாங்கும்
  பகையில்லா உனக்குப் போரெதற்கு
  போரெனில்...
  பகுத்தறிவுப் போர்செய்யப் புகல்கின்றோம்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா,
   தீக்குள் விரலை வைத்த இன்பம்...
   அது கவி மனத்திற்கு மட்டுமே சுவைப்பது!
   அதனால் தானோ நீங்கள் சுவைக்கிறீர்கள்!!!
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

   Delete
 7. அறிவார்யார்? தெளிவார்யார்? அகல்வார்யார்? புகல்வார்யார்?-------
  யார் யாரென்று நீங்கள்தான் பகர வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அது தெரியாமல் தெளிவு வேண்டிதான் கேள்வியாய்க் கேட்டு வைத்தேன் வலிப்போக்கரே!
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
  2. ஹா ஹா இது அருமையான பதிலா இருக்கே அது சரி யாரை கேட்கிறீர்கள். பதில் உங்களை விட்டா யார் தருவா?

   Delete
  3. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லவா சகோ?
   இந்தப் பாட்டிலயே அதுக்கான விடையிருக்கு!
   யார் கிட்டயும் சொல்லிடாதிங்க என்ன!

   Delete
 8. மிகச்சிறப்பான வரிகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!

   Delete
 9. ஒவ்வொரு தபா படிக்கிரச்சையும் புத்சா கீதுப்பா ...
  ஜோரு ஜோரு..
  த.ம ஐந்து

  ReplyDelete
  Replies
  1. யப்பா நம்ம பக்கத்துக்கு ஒரு ஆளு கீதுப்பா! நம்மளயும் உன் செட்டுல சேத்துக்கப்பா....

   Delete
  2. அட மெட்ராஸ் பாஷையையும் விட்டுவைக்கவில்லையா ஆசானே?
   சரி சரி வெளுத்துக்கட்டுங்கைய்யா!

   Delete
 10. உங்கள் கவிதைச் சொல் வீச்சில் வீழ்ந்து விட்டேன் !ஊமைக் கனவுகளை என் கண்ணால் காண்கின்றேன் !

  ReplyDelete
  Replies
  1. வர வர உங்கள் நகைச்சுவை உணர்வு களைகட்டுகிறதே பகவான்ஜி!
   என் பின்னூட்டத்திலும்!
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

   Delete
 11. படைமுன்னில் நான்நின்று போர்செய்ய முனைந்தாலும்
  பகைவரென யாரு மில்லை!
  பகைத்தென்னை நகைப்போரைப் பாவமென நான்காணப்
  பகுத்தறிவுப் போரு மில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஆனால் அய்யா உங்கள் படைப்புகள் பலவும் பகுத்தறிவுப் போர்தானே?
   வருகைக்கு நன்றி!

   Delete
 12. ஆசானே தாங்கள் இட்டிருக்கும் அந்தப் புகைப்பட அருவி போல கொட்டி ஆர்பரிக்கின்றது தங்கள் கவிதை! அருவி இத்தனை பலமாக வீழ்வதால் அருகில் நின்று ரசிக்கின்றோம், தூவானத்தில் நனைந்து மகிழ்கின்றோம். ஆனால் அதனுள் நிற்க முடியவில்லையெ! இப்படித்தான் உங்களுக்கு பின்னூட்டம் இடும் சகோதரிகளும் கவி மழை கொட்டும் போது எங்களுக்கு என்ன சொல்ல இருக்கின்றது!! ரசிக்கின்றோம்! கற்கின்றோம். ஆனால் எழுதத்தான் வரவில்லை!ஹ்ஹாஹ்

  ReplyDelete
  Replies
  1. ஆசானே!
   வர வர உங்கள் கேலிக்கு அளவில்லாமல் போய்விட்டதே!
   இதில் கற்பதற் கென்ன இருக்கிறது.
   எழுத்தச்சனை இயக்கப் போகும் உங்களுக்கா எழுத வரவில்லை?
   நம்பிவிட்டேன்.
   புரியும் படி எழுது புரியும் எழுது என்று சொல்லிக் கொண்டே இனிமேல் மண்டையில் நன்றாக உறைக்கக் கொட்டிக் கொண்டே எழுதுகிறேன்.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

   Delete
 13. அய்யா வணக்கம்.! "தீ இனிது"என்பான் பாரதி. பாரதிதாசனுக்கு,கண்ணதாசனுக்குக் கைவந்த சந்தம் தங்களுக்கும் கைப்பட்டிருக்கிறது.
  "நடைபாதை வணிகனென நான் கூவி விற்ற பொருள்
  நல்ல பொருள் இல்லையதிகம் .
  நான் இடறி விழுந்த இடம் நாலாயிரம்- அதிலும்
  நான் போட்ட முட்கள் பதியும்..!....என்ற கவியரசரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.!
  "எங்கேனும் ஒருள்ளம் என் எண்ணம் உணராதோ
  என்றென்றும் நெஞ்சம் ஏங்கும்!
  எடையிட்டுப் பார்த்துப்பின் உடைபட்டுப் போகின்ற
  ஏக்கத்தில் அஞ்சித் தேங்கும்!" என்ற வரிகளும், தடைவரின்,"தண்ணீராய்த் தீயை ஏற்பேன்"...சரியாக்கும் உள்ளத்தில்
  "தமிழாமென் தாயைப் பார்ப்பேன் " வரிகளும் கவிதையின் உச்சம்..!
  "வார்த்தைகள் வந்து போனால் அது வசனம்; நடனமாடினால் அது கவிதை"என்பார் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். உங்கள் வார்த்தைகள் நடனமாடுகின்றன.! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா,
   உங்களின் பின்னூட்டத்தில் உங்களின் வாசிப்பு தெரிகிறது.
   இதற்குமுன் ஒரு இடத்தில் கூட காசி ஆனந்தனைக் குறித்தெழுதியிருந்தீர்கள்.
   கண்ணதாசன் வலம்புரி என ஒருகாலத்தில் சொக்க வைத்தவர்களின் சிம்மாசனம் உங்கள் மனதில் இருக்கிறது.
   தமிழறிவாளர்கள் இங்கு வருவதும் பின்னூட்டமிடுவதும் நானுற்ற பேறு.
   நானெல்லாம் எதுபற்றியும் பிரக்ஞையற்று எழுதித் தள்ளிக் கொண்டு இருக்கிறேன். நீங்களோ அளந்து தருகிறீர்கள்.
   சும்மாவா சொன்னார்கள்
   “பன்றி பல ஈன்றும் என்ன ? குஞ்சரம் ஒன்று
   ஈன்றதனால் பயன் உண்டாமே“ என்கிற சதக வரிகளைத்தான் நினைக்கத் தோன்றுகிறது.
   தங்களின் வருகைக்கும் விரிவான செறிந்த பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா!

   Delete
 14. நீர்கண்ட கனவெல்லாம் நிச்சயம் ஒருநாளில்
  நிஜமாகி முன்னே வரும்
  நின்தமிழ்க் கவிதைகள் நெடுங்காலம் நின்றுலகில்
  நீங்காத புகழைத் தரும்.
  யார்கண்டார் பாரதி, பாவேந்தன் பாடல்போல்
  உன்கவி உலகை வெல்லும்.
  யாருக்கும் சளைத்தவன் நானில்லை என்றுந்தன்
  இன்தமிழ் துணிந்து சொல்லும்.
  சீர்தளை யாப்பென்று சின்னதோர் இடத்திலும்
  சிறுபிழை செய்ததில்லை.
  செந்தமிழ்க் கவிகொண்டு நீதொட்டுச் சாதிக்க
  சிகரங்கள் தொலைவில் இல்லை.
  மார்தட்டிச் சொல்லுவாய் மண்ணில் உன் கவிதைக்கு
  மாற்றாக ஏதும் இல்லை.
  மனதார சொல்கிறேன் மதுவுண்ட வண்டுபோல்
  மயங்கினேன் மீளவில்லை.

  ReplyDelete
 15. மனதார சொல்கிறேன் மதுவுண்ட வண்டுபோல்
  மயங்கினேன் தெளியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. படிநின்று வாசலே பழியாக நிற்கவும்
   பகலிரவு பாரா மலே
   பெருங்கோடிக் கனவினுள் புதையுண்டு காலத்தின்
   புண்ணாகித் தீரா மலே
   வெடிகொண்டு துடிக்கின்ற உயிர்போகு மவலத்தின்
   வேதனை உறுப்பா கவும்,
   வெறிநாய்கள் கடித்துண்ண விரட்டத்தான் வகையற்ற
   விதிதாங்கச் செருப்பா கவும்,
   இடிகொண்ட மரமாகி இடர்பட்டு நலிந்தேபின்
   இருளுண்ட கரிபோ லவும்,
   இரைதேடி இரையாகும் வலைகோடி யெனைத்தேட
   ஏனென்று புரியா மலும்
   குடிமூழ்கு மென்பார்கள்! மூழ்கட்டும்!! உங்கள்கவி
   கொள்ளபல பிறவி வரினும்
   கொடுப்பினை வேறென்ன? கொள்ளேனோ அண்ணாவும்
   கவிதையோ டுறவு பெறவே!!!
   அய்யோ !
   உங்கள் முன் நானில்லை அண்ணா!!!
   நிச்சயமாய்ச் சொல்கிறேன் . உங்கள் வாழ்த்து என் மனதில் நிற்கிறது. ஒரு போதும் தலைக்கேறாது. உங்களைப் போன்ற மரபாளர்களின் முன் என் தகுதி எனக்குத் தெரியும்.

   நன்றி அண்ணா!

   Delete

 16. வணக்கம்!

  தீயுறங்கும் காடென்று தீட்டியுள கவிதையினைச்
    செந்தேனின் இல்லம் என்பேன்!
     திண்டாடும் துயர்தீரக் கண்டாக உன்சீா்கள்
       கொண்டாடி வாரித் தின்பேன்!

  வாயுறங்கும் நள்ளிரவில் வன்மறவன் நெஞ்சத்துள்
    வந்தொலிரும் சந்தம் கண்டேன்!
     வாழையடி வாழையென வந்தகவி வாணா்களின்
       வல்லமையைச் சூடிக் கொண்டேன்!

  சேயுறங்கும் தாய்மடியின் செம்மையென இவ்வாக்கம்
    சிந்தனையை அள்ளிக் கொள்ளும்!
     தீராத தாகத்தை ஆறாத காயத்தைத்
       தீர்க்கின்ற வழியைச் சொல்லும்!

  நாயுறங்கும்! நரியுறங்கும்! நன்றியிலா நெஞ்சுறங்கும்!
    நாமுறங்கக் காலம் இல்லை!
     நல்லதமிழ் இவ்வுலகை வெல்லுவரை போராடி
       நடப்பதுவே நம்மின் எல்லை!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 17. பலமுறைப் படித்திட்டேன் பதில் தேடி
  பாவில் எவ்விடம் என்று தெரியாமலே,
  அருமை அய்யா, நன்றி.

  ReplyDelete