Thursday 18 December 2014

உயிர் அகல்


வெள்ளம் பெருகிவர வீழ்மரமாய் உன்கரையில்

உள்ளம் நடுங்க உடல்தரித்தேன்! – கொள்ளும்

மனமுண்டேல் கொள்வாய்! தினமுண்டு போகும்

அனல்கொண்டு சாகும் அகம்!



உன்னை அடைகாத்(து) உயிர்க்கும் கவிதைகளோ

என்னை இரையாய் எடுக்கிறதே! –  தின்றாலும்

கூட்டிற்குள் உன்னைக் குடிவைப்பேன்! நீகாணா

ஏட்டிற்குள் ஏங்கும் எழுத்து!        


தூங்கும் இருள்சுமந்து தோள்கள் வலியெடுக்க

நீங்கும் உறக்கத்தில் நீவிழிக்க – ஏங்கக்

கருமை ஒளிப்பூவின் கண்திறக்கும் காலம்

அருமை உயிரங் ககல்!


கொல்லும் சிறுபார்வை! கொஞ்சும் கிளிப்பேச்சு!

கல்லும் கரைக்கின்ற கற்பனைகள்! – சொல்லும்

சிறுசெய்தி கூடச் செதுக்காத இந்தக்

குறும்பாடல் எல்லாம் குறை!


காய்ந்த மணல்பெருக்கில் கட்டவிழ்ந்த ஓடங்கள்

சாய்ந்து சவமாகும் சங்கடங்கள்! – ஓய்ந்த

மரமெல்லாம் சொல்லும் மலர்பூத்த நாளின்

உரங்கொண்ட உண்மைக்(!) கதை(?)
                                       
.......................தொடரும்...


 படஉதவி - நன்றி- background-pictures.picphotos.net





Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

68 comments:

  1. – காய்ந்த
    மரமெல்லாம் சொல்லும் மலர்பூத்த நாளின்
    உரங்கொண்ட உண்மைக் கதை!
    - கவி
    வேய்ந்தாய்! "வெல்லும் வளர்புவி சொல்லும்"
    ஊமைக் கனவுகள் மெய் யென்று அதை!



    உன்னை அடைகாத்தே உயிர்க்கும் கவிதைகளோ
    என்னை இரையாய் எடுக்கிறதே! – தின்றாலும்
    கூட்டிற்குள் உன்னைக் குடிவைப்பேன்! நீகாணா
    ஏட்டிற்குள் ஏங்கும் எழுத்து!

    புதைக்குழிக்குள் புகழை வதைக்கும்
    வலி(மை) நிறைந்த வரிகள்!
    "உயிர் அகல்" அகலாது
    என்றும் நெஞ்சை விட்டு!
    அகல் விளக்காய் ஒளி வீசும்
    எங்கள் கவி விளக்கு!
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. அகல்விளக்காய் ஒளிவீசுமோ?
      அதை வினைத்தொகையாய்க் கொண்டதால் நேர்ந்த வினையோ இதெல்லாம்..?!!!
      தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  2. ///காய்ந்த
    மரமெல்லாம் சொல்லும் மலர்பூத்த நாளின்
    உரங்கொண்ட உண்மைக்(!) கதை(?)///
    ஆகா அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி அய்யா!

      Delete
  3. வணக்கம் நல்லாசானே,
    கல்லும் கரையும் கற்பனைகள்? வாவ்..
    தொகுப்பு ஒன்றை மின்னூல் வடிவிலாவது வெளியிடலாமே ?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழர்!
      ரொம்ப நாளாயிற்று கண்டு..!!
      கரைக்கின்ற கற்பனைகள்...... கரைந்ததோ?
      இதுவே கொஞ்சம் அதிகம்தான் தோழர்!
      மின்னூலில் ஏதாவது நன்னூலை வெளியிடுவோம்!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete

  4. கொல்லும் சிறுபார்வை! கொஞ்சும் கிளிப்பேச்சு!

    கல்லும் கரைக்கின்ற கற்பனைகள்! – சொல்லும்

    சிறுசெய்தி கூடச் செதுக்காத இந்தக்

    குறும்பாடல் எல்லாம் குறை!**

    சொல்லுக்குள் என்னை சிறைபிடிக்கும் பாடல்கள்
    கல்லும் கரைந்திடவே தந்தாய் - மலர்வடித்த
    கள்ளை அருந்தியதாய் மாய்ந்து கிடக்கிறதே
    உள்ளமிது தும்பியோ கூறு:)

    ReplyDelete
    Replies
    1. துள்ளும் வழியற்ற தும்பி!
      என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்காது.......?
      ஓஒ உகரத்தில் முடிய வேண்டுமா?
      ச்சே என்ன செய்ய....!
      மீண்டும் வருகிறேன்.

      Delete
    2. சில சுதந்திரமான எண்ணங்களை வெளிப்படுத்த மரபில் தடைகளுண்டு.
      அதற்கு எடுத்துக்காட்டுத்தான் “துள்ளும் வழியற்ற தும்பி?“
      பாக்களுக்கு ஓசை வகுக்கும் போது வெண்பா செப்பல் ஓசை என்கிறார்கள்.
      அந்தச் செப்பலோசையைத் தருவதற்கு, வெண்பாவின் கடைசியில் வரும் சொல்தான் ஆதாரசுருதி.
      அது ஓரசையில் இருக்க வேண்டும்.
      ஈரசையாய் இருந்தால் உகரத்தில் முடியவேண்டும். ( தொல்காப்பியர் உகரத்தில் முடியும் இது போன்ற சொற்களும் ஓரசைதான் என்கிறார்! )
      உங்கள் பின்னூட்டம் இப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்ற போது, அது கொள்ளும் வடிவம் எதுவானாலும் மரபோ மீறலோ அதை அனுமதிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
      என் நிலைப்பாடு இதுதான்.
      எதை மீறுகிறோம் என்பதையும் எதற்காக மீறுகிறோம் என்பதையும் தெரிந்து வைத்திருப்பது அவசியமானது.
      மலர் நிறைந்த வெண்பாவில் மகிழ்நிறை!!!
      இன்னும் பூக்கட்டும்!
      தலைப்பு மற்றும் சில வரிகளில் இருபொருளைக் கணிப்பீர்கள் என்று நினைத்தேன்.
      தும்பியின் வண்ணச் சிறகசைப்பில் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது உண்மை..
      நன்றி!

      Delete
    3. கவனித்தேன் ஆனால் உங்கள் நான் உணர்ந்த வலியை என்னால் எடுத்துசொல்லமுடியாத அயர்சில் அதைசொல்ல மறந்தே போனேன் அண்ணா! இன்னும் சொல்லபோனால் ரீடிங் லிஸ்டில் தலைப்பை படித்ததும் சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். உயிரின் ஒளியா?? உயிரை ஒழியா?? வைரமுத்துவின் காதலித்துப் பார் நினைவுக்கு வந்தது
      வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
      செத்துக்கொண்டே வாழவும் முடியுமே
      காதலித்துப்பார்!!
      அந்த ரகமில்லையா:) உண்மையில் இப்படி நீட்டி முழக்கி எழுதும் சுகமும், சொல் நேர்த்தியும் இந்த வெண்பா பின்னூட்டங்களில் எனக்கு இன்னும் கைவசமாகவில்லை. எனக்கான இனைய நேரம்!! அது கடந்த மூன்று நாட்கள் வெகு அறிதாகவேறு இருந்தது:(( இதன் காரணமாகவே தில்லையகம் சகாக்களுக்கு அளிக்கவேண்டிய ஒரு நீளமான பின்னூட்டத்தை இன்னும் அளிக்கவில்லை. மன்னியுங்கள் அண்ணா:)
      இனி நேரம் எடுத்து நிச்சயம் உள்ளம் தைத்ததை எலாம் பின்னூட்டத்தில் தருகிறேன்:)

      Delete
    4. மன்னிப்பெதற்குச் சகோ?
      நீளமான பின்னூட்டங்கள் நானே அதைத் தற்பொழுதெல்லாம் தவிர்த்து வருகிறேன். வேண்டியதில்லை. சில வரிகளை தட்டச்சுச் செய்யும் போதே தோன்றும். யாராவது இதைக் குறிப்பிடுவார்களா பார்ப்போம் என்று!!
      இதற்கு முன் உள்ள சில பதிவுகளில் நீங்கள் அது போன்றவற்றைப் பிடித்து முன் நிறுத்தி இருக்கிறீர்கள் அதனால் தான் எதிர்பார்ப்பு.
      நமது நேரம் மனநிலை எல்லாம் பொருந்த வேண்டும் உண்மைதான்!!
      சொல் நேர்த்தியெல்லாம் கைவந்து விட்டது உங்களுக்கு!
      உங்களின் பின்னூட்ட வெண்பா சொல்லுமு் அதை!
      வலி அது ஏன்...............?
      புரியவில்லையே.....!!!!!!!!
      உங்கள் குறும்பாடல் எங்கே போயிற்று?
      நன்றி

      Delete
  5. சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி டி டி சார்!

      Delete
  6. " உன்னை அடைகாத்(து) உயிர்க்கும் கவிதைகளோ
    என்னை இரையாய் எடுக்கிறதே! – தின்றாலும்
    கூட்டிற்குள் உன்னைக் குடிவைப்பேன்! நீகாணா
    ஏட்டிற்குள் ஏங்கும் எழுத்து!"......அய்யா உங்கள் படைப்பின் ரகசியம் இதுதானா?!....
    "எங்கும் கவிமணக்க எந்தன் மனம்சிறக்க
    தங்கும் தமிழ்க்கவி தந்திட்டுப் பாரெங்கும்
    சங்கத் தமிழ்வளர்க்கும் சான்றோனே நீயென்றும்
    தங்கத் தமிழ்போல வாழ்!

    ReplyDelete
    Replies
    1. மரபுக்கூட்டின் மற்றொரு தேனீயே வருக வருக..........!
      “சங்கத் தமிழ் வளர்க்கும் சான்றோன் “ என்பதெல்லாம் சற்று அதிகப்படி இல்லையா நாவலரே!!
      இன்றைய தமிழை இன்னும் அழியாமல் காத்தால் போதாதா?
      நீங்கள் செய்வது அப்பணிதானே?
      அதுவே உயர்வானது அய்யா!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  7. ஒப்பற் றஉவமைகள் ஒன்றாக சேர்ந்திடவே
    தப்பற்ற நற்றமிழை தந்துவக்கும் பேரறிஞன்!
    பற்பலரும் போற்றிடும் விற்பனரே! நாமெலாம்
    கற்பதையும் கண்டு களி!

    அள்ளிக் கொடுத்தும் அழியாது நின்புலமை
    வெள்ளி எனமின்னும் விண்ணில்! வாழ்நாளில்
    பள்ளிசென்றும் பற்றாக் கவியதனை புள்ளியிட்டே
    கிள்ளித் தருவாயே தகும் !

    எப்பிடி சரி தானா ?
    ஹா ஹா .....வந்திட்டோமில்ல . வாழ்த்த

    ஆகா அருமை சகோ/! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. அய்யோ என்ன இது உங்கள் பாமாலை எல்லாவற்றையும் தாங்கி எனது கழுத்துச் சுளுக்கிக் கொள்ளப் போகிறது.
      அம்மம்மா!!
      கொஞ்சம் கழற்றி விடுங்களேன்!!
      வாழ்த்திற்கு நன்றி அம்மா!

      Delete
    2. பாமாலை வேண்டாமோ பாவறியும் உமைநன்கு
      பூமாலை சூடவே பாரறியும்! வியந்தேனே
      நானும் கவியும் இலக்கணமும் கண்டுமேலும்
      தேன்போல் தினமும் சொரி!

      களுக்கென் றுசிரியு மேன்கழுத்தில் வீழ்ந்த
      சுளுக்கு விழுமே சோர்ந்துமது காலடியில்
      வேண்டி யவரை வருந்தாதுநீ தாங்கலாம்
      வண்ணமலர் மாலை விரும்பு!

      எப்படி இப்போ இனி பிரச்சினை இல்லையல்லவா ஹா ஹா ........

      Delete
    3. விரும்பும் மனமுண்டேல் வேம்பும் இனிதாம்!
      கரும்பும் கசக்கும் கடுத்தால் -- இரும்பும்
      இளக்கும் கருத்துண்டேன்! என்னம்மை சொன்ன
      விளக்கம் அதுவே விடை!

      நன்றியம்மா!

      Delete
  8. தொடருங்கள் கவிஞரே....................

    ReplyDelete
  9. கட்டவிழும் கார்மேகக் காவியச் சொற்குவியல்
    மொட்டவிழ போர்த்திருக்கும் மூடுபனி மெட்டெடுத்து
    பாடிடவோ நாவடித்த பாட்டெல்லாம் நற்றமிழை
    சூடியே தந்த சுடர்.
    மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். படித்தவுடன் எனக்குள் தோன்றியதை எழுதிவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்ற மரபுக் கவிஞர்கள் என் தளம் வருவதும் படிப்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சி தான் சகோ!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  10. தின்றாலும் கூட்டிற்குள் உன்னைக் குடிவைப்பேன்!
    அருமை. ஏக்கம் வேண்டாம். அய்யா.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஏக்கம் நீங்கள் புதிய பதிவுகள் எதையும் இடவில்லையே என்பதால் இருக்கலாம்.
      புதிய பதிவினைத் தாருங்கள் நண்பரே!
      தங்களின் வருகைக்கும் பாரட்டிற்கும் நன்றி!

      Delete
  11. உன்னை அடைகாத்(து) உயிர்க்கும் கவிதைகளோ

    என்னை இரையாய் எடுக்கிறதே! – தின்றாலும்

    கூட்டிற்குள் உன்னைக் குடிவைப்பேன்! நீகாணா

    ஏட்டிற்குள் ஏங்கும் எழுத்து! //

    ஆசானே! இதோ உங்கள் கவிதையிலிருந்தே கேள்விகள்....ஹஹஹஹ்

    மரமெல்லாம் சொல்லும் மலர்பூத்த நாளின்

    உரங்கொண்ட உண்மைக்(!) கதை(?)

    அல்லது....

    கல்லும் கரைக்கின்ற கற்பனைகள்! ???

    ஏனென்றால்

    சிறுசெய்தி கூடச் செதுக்காத இந்தக்

    குறும்பாடல் எல்லாம் குறை!

    என்றும் சொல்லுகின்றீர்களே! அதனால்தான்.....ஆசானே நிஜமோ? கற்பனை\யோ?!! !!! ஹஹாஹ் ...

    எதுவாக இருந்தாலும்....ரசித்தோம்...சுவைத்தோம்..தமிழை!

    மதுவின் மொழியையும் வழி மொழிகின்றோம்...அதான் மின் நூலாகவாவதுக் கொண்டு வரலாமே! ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. இது உங்களின் குறும்பாடல் இல்லையா ஆசானே?
      உங்களிடம் மட்டும் ஒரு ரகசியம்.
      ஆசானிடம் சொல்வதில் தவறில்லை.
      இது நிஜத்தின் கற்பனை!
      கற்பனைகள் நிஜம்!
      சரிதானே?
      மின்நூல்..............................,
      இதுபோல் நீங்கள் படித்துக் கருத்திடுவதைவிட வேறென்ன வேண்டும் ஆசானே!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  12. வணக்கம்
    ஐயா
    செப்பிய வரிகள் சிகரம் தட்ட
    கற்பனை வரிகள் கரை புரள.
    சொல்லால் எடுத்தியம்பினாய்
    சொல்வதற்கரிய சொல் வரிகள்
    தொடருங்கள் பாவரியினை
    பாரில் உள்ள மாந்தர்கள்
    பாடி மகிழட்டும்...

    சொல்லிய வரிகள் எல்லாம் இரசனை மிக்கவை அருமையாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதிக்கு கார்த்திருக்கேன் பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
    Replies
    1. கவிதைகளாகவே பின்னூட்டம் இடுகின்றீர்களோ? முத்துநிலவன் அய்யாவை விடுவித்து விட்டீர்கள்தானே ரூபன்!
      காத்திருக்கிறோம்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்!

      Delete
  13. வெண்பா தொடரா? கலக்குங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  14. அன்புள்ள அய்யா,

    பாவையை எண்ணியே பாட்டெழுதும் உன்னுடைய
    பாவை வியந்ததேநான் பாராட்டும் - வெண்பாவின்
    தேரேறி காதலால் தென்பொதிகைத் தாய்த்தமிழைத்
    பாரேற்றிப் பாடிமகிழ் வாய்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உஙகள் வெண்பாவிற்கு முன் நானில்லை அய்யா!
      வருகைக்கும் வெண்பாப்பின்னூட்டத்திற்கும் நன்றி!
      வெண்பாப்பதிவொன்று இடலாமே!!!
      நன்றி

      Delete
  15. உயிர்க்கும் கவிதைகளோ எந்த அளவு இரையாய் எடுக்கிறதோ அந்த அளவு வெற்றி பெறுகிறோம் என நாம் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்துகளை உளம் கொள்கிறேன் முனைவரே!
      நன்றி

      Delete
  16. உயிரோட்டமாய் கவிதை வரிகள் அருமை கவிஞரே....

    ReplyDelete
    Replies
    1. தங்களது பாராட்டிற்கும் வலைச்சரப்பணிக்கிடையில் வந்தமைக்கும் நன்றிஜி!

      Delete

  17. வண்ணமிகு வலைச் சரத்தில்

    வாசமிகு பூ வானீர்!
    அருந்தேன் அமுதமென அற்புத
    படைப்பினை படைத்தமைக்கு!

    வாழ்த்தும் நெஞ்சம்;
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி அய்யா!
      பார்த்தேன் கருத்திட்டேன்.
      உங்களையும் நினைவு கூர்ந்தேன்!
      நன்றி.

      Delete
  18. தாமதமாக வந்து விட்டேன் ஆசானே .
    "//கல்லும் கரைக்கின்ற கற்பனைகள்!//' - இதுவல்லவா கற்பனை

    இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
    வலைச்சர அறிமுகம்

    ReplyDelete
    Replies
    1. பெருந்தகையீர்,
      வணக்கம். தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
      ஆம்,
      கற்பனை கல்லை வேண்டுமானால் கரைக்கும்!
      கருத்திற்கு நன்றி அய்யா!!!

      Delete
  19. எனக்கும் உங்களை ஆசான் என் விளிக்க ஆசையாக இருக்கிறது...

    "ஆஹா, அருமை" என்றெல்லாம் சொல்லிவிட்டு போய்விட முடியாத உயரம் !

    துளாசிதரன் அவர்களின் வார்த்தைகளையும், மதுவின் விருப்பத்தையுமே பின்னூட்டமிட ஆசை...

    "...என்றும் சொல்லுகின்றீர்களே! அதனால்தான்.....ஆசானே நிஜமோ? கற்பனை\யோ?!! !!! ஹஹாஹ் ...

    எதுவாக இருந்தாலும்....ரசித்தோம்...சுவைத்தோம்..தமிழை!

    மதுவின் மொழியையும் வழி மொழிகின்றோம்...அதான் மின் நூலாகவாவதுக் கொண்டு வரலாமே! ஆசானே!

    நன்றி சகோதரரே
    சாமானியன்


    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      உங்களின் ஆசைக்கு ஒரு அளவில்லையா?
      உயரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்டால் பின் தோன்றும், ஏன் ஏற வேண்டும்.... விழ வேண்டும்..... இப்படியே சமவெளியில் இருந்து விடலாமே என்று...!
      நல்ல வேளை நான் ஏறிவிழும் முன்னே எனக்கு ஞானம் கிட்டிவிட்டது.
      அதனால் அந்த முயற்சி எதுவும் செய்ய வில்லை.
      இங்கே ஊரில் சொன்னால் “ போடா சோம்பேறிப் பயலே“ என்கிறார்கள்!
      அதிலும் “ஏறி“ என்று வருகிறது. அது வேண்டாம்.
      “சோம்“ என்று வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.
      சரி என்று விட்டார்கள்.
      எனக்கென்னவோ, அவர்கள் சோம் சோம் என்று கூப்பிடுவது, இப்பொழுதெல்லாம் “ சாம்“ சாம்“ என்றுதான் கேட்கிறது.
      ஹ ஹ ஹா!
      நன்றி அண்ணா!

      Delete
  20. சகோதரரே...

    உங்களுக்கு ஞானம் கிட்டியது அறிந்துதானே அருள்பாலிக்கச் சொல்கிறோம் ?!...

    நல்லவேலை... வார்த்தை விளையாட்டில், சோம் சோம் என்று என்னை " சோன்பப்படி " ஆக்காமல் சாம் சாம் என்றீர்களே... அதுவரையில் சந்தோசம் ! ஜாம் ஜாம் என தொடருங்கள் !

    ( அதுசரி... சோம்பேறியை சோம் ஆக்கி அப்புறமா சாம் ஆக்கி... என்னை வச்சி காமெடி எதுவும் பண்ணலையே ?! )

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. கவிழ்த்த கண்ணாடிப் பேழை, பெட்ரோமாக்ஸ் வெளிச்சம், மணியொலியுடன் அந்தி மயங்கும் வேளையில்,
      இளைத்த காகிதப்பொட்டணத்தில், எட்டணாவிற்கும் ஒரு ரூபாய்க்கும் சோன்பப்படி வாங்கித் தின்ற அனுபவம் உண்டா அண்ணா?
      இழையிழையாய் வாயிலிட கரைந்திறங்குகின்ற ருசி, இன்று இனிப்பகங்களில் கட்டித்து வைக்கப்பட்டிருக்கிற சோன்பப்படிகளுக்கு இருப்பதில்லை!
      ஞானம் என்ன என்பதைத்தான் சொல்லிவிட்டேனே அண்ணா!!
      ஆசான் என்றெல்லாம் நீங்கள் சொல்லாமா அண்ணா!
      தவறாக நினைத்துவிட வில்லையே!
      நன்றி

      Delete
    2. இளைத்த காகிதப்பொட்டணத்தில், எட்டணாவிற்கும் ஒரு ரூபாய்க்கும் சோன்பப்படி வாங்கித் தின்ற அனுபவம் உண்டா அண்ணா?...

      சோன்பப்படி மட்டுமா ?... தெருமுக்கு பெட்டிக்கடையின் பழைய ஹார்லிக்ஸ் பாட்டிலில் இருந்த தேன்மிட்டாய்... பழுத்த பாலித்தீன் பையில் தொங்கிய குடல் வற்றல் தொடங்கி விடலைபருவத்தில், ஆஸ்பத்திரி கோடியில் வாங்கித்தின்ற மிளகாய் பஜ்ஜி, பாஸ் கடையின் நன்னாரி சர்பத் என இழந்த ருசிகள்தான் எத்தனை எத்தனை...

      சில பேரிழப்புகளின் போதுகூட குளமாக மறுத்த கண்கள் இதனை எழுதும் போதுமட்டும் பனிப்பதின் காரணம்.... ?

      இத்தனையையும் மீட்டுக்கொடுக்கும் உங்களை தவறாக நினைப்பதா ?

      நன்றி சகோதரனே !

      Delete
    3. ஆம் அண்ணா,
      அந்தக் குடல் வற்றல் தானென்று நினைக்கிறேன், இங்கு நாங்கள் ஒத்தைகாசு அப்பளம் என்போம்... ஐந்து காசிற்கு ஐந்து அப்பளங்கள்.... விரல்களில் மாட்டிக் கொண்டு கடித்துத் தின்னும் ஞாபகங்கள்.... தேன் மிடடாயைப் பிட்டுத் தேனை ( சர்க்கரைப் பாகு ) உறிஞ்சிய இனிப்பாய் இருக்கிறது உங்களின் பின்னூட்டம் நன்றி!!!

      Delete
  21. ***கொல்லும் சிறுபார்வை! ***

    அது ஏன் பார்வை எப்போது கொல்லுது? கொஞ்சாதா இல்லைனா கெஞ்சாதா கவிஞரே? :)

    ReplyDelete
    Replies

    1. அய்யா,
      வணக்கம்.

      கவிஞரா...... யாரது?

      பார்வை எப்போது கொல்லுது?

      “இருநோக்கு இவள் உண்கண் உண்டு ஒரு நோக்கு
      நோய் நோக்கு மற்று அந்நோய்க்கு மருந்து “ (குறள்)

      நோய் தரும் பார்வை ஒன்று.

      அதை குணமாக்க மருந்தாகும் பார்வை மற்றொன்று.

      நோய் நோக்கு -- கொல்லும்.

      அதற்கு மருந்தாவது கொஞ்சும் கெஞ்சும்.

      பதில் சரியாகச் சொல்லி விட்டேனா அய்யா?

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!!

      Delete
  22. வணக்கம் ஐயா!

    உயிரே அகலாம்! உணர்வுதான் நெய்யே!
    பயிலப் படைத்தீரே பா!

    முதலில் இத்தனை தாமத வருகைக்கு மனம் வருந்துகின்றேன் ஐயா!
    சில தடைகள் தாண்டி வரவேண்டியதாயிற்று....

    உயிர் அகல் உயிரகலாமல் காத்திட வேண்டும்!..
    வெண்பாவின் ஒவ்வொரு சீர்களும் சொல்லும் பொருள் மிகச் சிறப்பு!
    எப்படி இப்படியெல்லாம் கரைபுரண்டு ஓடிவந்து உங்களிடம்
    இத்தகைய சொற்கள் குவிகின்றன..!!
    எனக்கும் கொஞ்சம் கடன் தாருங்கள்!..:)

    மனம் லயித்துப் போனது! மிக அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

    த ம.6

    ReplyDelete
    Replies
    1. வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

      வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய

      சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

      இடராழி நீங்குகவே என்று.

      பிரபந்தத்தை ஞாபகப் படுத்தி விட்டீர்களே கவிஞரே!!!!

      நீங்கள் தாமதம் என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை.

      கடன்தானே ?
      எப்போது வேண்டும்?
      வட்டியோடு சேர்த்துத் திருப்பித் தரவேண்டும்!!
      வட்டி கொஞ்சம் அதிகம்!

      ஒரு சொல்லுக்குப் பத்துசொல்!

      சரியா?

      ஹ ஹ ஹா!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நன்றி !!!

      Delete


  23. வணக்கம்!

    உயிரகல் போன்றே ஒளிர்கின்ற பெண்ணை
    உயிர்..அகல் போதும்வாய் ஓதும்! - பயிர்கொண்ட
    வல்ல உரமாய் வடித்த கவிதைகளைச்
    சொல்லச் சுரக்கும் சுவை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தங்களின் வருகைக்கும் வெண்பா வாழ்த்திற்கும் நன்றி!

      Delete
  24. மிகவும் அருமையான வெண்பாக்கள் விஜு.
    கடைசி வெண்பாவின் ஈற்றடியை மிகவும் ரசித்தேன். உண்மை பக்கத்தில் ஆச்சரியக் குறி . கதைக்கு பக்கத்தில் கேள்விக்குறி. உண்மையும் கதையும் எதிரெதிர் துருவங்களோ ?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி அண்ணா!
      உண்மைக்கு எதிர்ச்சொல் பொய் அல்லவா ?
      கதையில் சற்று உண்மையின் சாரமும் கலந்திருக்கலாம் என்றே எண்ணுகிறேன்
      வருகைக்கும் கருதிற்கும் நன்றி அண்ணா!

      Delete
  25. அற்புத வெண்பாக்கள் அழகுச் சொல்நடை பற்பல சுவைகள் சொட்டச் சொட்டத் தெளித்தன. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும்
      நன்றி சகோ!!

      Delete
  26. அய்யா இது மாயனூரின் மாரிக்காலக் கவிதையல்லவே?
    உஙகள் கவிதைகளை ருசிப்பதற்காக ஒருமுறையும், ரசிப்பதற்காக மறுமுறையும் படித்தாலும், பின்னூட்டமிடப் பின்னும் ஒருமுறை படித்தாக வெண்டும். பின்னர் அமைதியாக வருகிறேன்... ஆமா..த.ம பட்டை எங்கே?

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்!
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!!
      மாயனூர் மாரிக் கவிதையில்லையா.... ஏன் அய்யா?
      சரியில்லையா ஏதேனும்!!
      த ம பட்டை பதிவின் கீழே இருக்கிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!

      Delete
  27. வணக்கம் !

    உன்னதமான உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து வந்த கவிதை
    வரிகள் கண்டு உள்ளம் வியப்புற்றது அன்புச் சகோதரனே !
    வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் இனிய கவிதை வரிகள் .த .ம .7

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும் என்றும் நன்றி!

      Delete
  28. வெண்பாக்கள் வழமைபோல அழகும் ஆழமுமாக நெஞ்சை அள்ளுகின்றன.
    இறுதி வெண்பாவின் உணர்ச்சிக்குறியும், வினாக்குறியும்தான்....!?!?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி அய்யா!
      இறுதி வெண்பாவில் நிறுத்தற்குறிகள் ? எனக்கேட்போருக்கான விடை!
      நன்றி அய்யா!!

      Delete
  29. உன் விழிக்கொஞ்சும், கெஞ்சும்
    மனதினை உன் கவியில்
    மரமெல்லாம் சொல்லும் மலர்பூத்த நாளின்
    உரங்கொண்ட உண்மைக்(!) கதை(?)
    அருமை யான உண்மைக் கவியே
    நன்றி.

    ReplyDelete