Wednesday, 16 July 2014

நீயல்லால் வேறொரு காட்சியில்லை!




 








பாதம் அழுந்திய நின்தடங்கள் – எங்கும்
     பசுமையாய் என்றும் நினைவிருக்க
ஏதும் அறியாமல் நீயிருப்பாய்! – உனை
     என்றும் அறிந்திட நானிருப்பேன்!

போதும் எனச்சொல்லப் போவதில்லை! – நித்தம்
     பெருகும் உனைஎனில் நிறைத்த லல்லால்
மீத மிருக்கின்ற வாழ்க்கையிலே – நான்
     மெச்சிக் கொள்வதற் கெதுவு மில்லை!

கூட்டிப் பெருக்கி எனைவெளியே – நீ
     கொண்டுபோய் இடலாம்! புறத்திருந்தும்
பூட்டிப் பொதிந்துன் ஞாபகங்கள் – பெரும்
     பொக்கிஷ மாய்நான் சேர்த்து வைப்பேன்!
தீட்டாய் நினைக்கலாம் நீயுமென்னைக் – காலத்
     தீயுள் அமிழ்த்தி எரித்திடலாம்!
வாட்டித் தொலைக்குமுன் நினைவைவிட – அந்த
      வலிகள் எனக்கொன்றும் பெரியதில்லை!

மலைகள் ரசித்து, மழைரசித்து, – வெளி
      மண்டும் மலர்கள் மரம்ரசித்துக்
கலைகள் ரசித்துக் கதிர்ரசித்து, – வாடிக்
     கலையும் நிலவு பனிரசித்து,
அலைகள் ரசித்துக் கடல்ரசித்து, – விழும்
     அருவிரசித்(து) அகம்நிறைத்த
நிலையில் ரசித்த துன்னை‘என்கண்! – இனி
     நீயல்லால் வேறொரு காட்சியில்லை!
........................................................................................................................
  மதிவென்ற கதிர்!  ஆகிய பதிவுகளின் நிறைவுப் பகுதி)

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

25 comments:

  1. வணக்கம்
    ஐயா

    கவியில் செப்பிய அழகு வரிகண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பதிவில் வருவது போல பள்ளியிலும் முதன் மாணாக்கனாக வந்திருப்பீர்கள் போலிருக்கிறது.
      வருகைக்கும் ரசனைக்கும் நன்றி அய்யா!

      Delete
  3. திரும்பவும் எப்பவரும் என்ற ஏக்கப்பெருமூச்சு அடங்கி விட்டது நண்பரே...

    தற்போது எமது ''கடவுளும், கொலையாளியும்.'' காண்க,,,,

    ReplyDelete
  4. உன் கவிதைக் கடலில்- நான்
    வீழ்ந்து விட்டேன்!
    பெருமைமிகு அலையில்-என்
    உயிர் திரும்பும்
    மதி வென்ற கதிர் - காலை
    கிழக்கே எழும்போது.
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கவிதை,
      மரபை மீறிய புதுக்கவிதையா?
      புதுக்கவிதையுள் புதைந்த மரபா?
      கருத்துக்கு நன்றி வேலு அவர்களே?

      Delete
  5. ஐயா வணக்கம்!

    கருத்தில் புகுந்துநற் காட்சியென் றான
    உருத்துடை யானவளோ ஓது!

    ஐயா! மீண்டும் மீண்டும் படித்திடத் தூண்டுகின்ற
    ஆற்றலை நீங்கள் கொண்டுள்ளீர்கள்!
    படைக்கும் ஒவ்வொரு கவிகளுமே அதற்குச் சான்று!.

    மேலுங்கூற இயலாமல் வார்த்தைகளைத் தேடுகிறேன்.
    சொற்பஞ்சம் என்னிடம் தலைவிரித்தாடுகிறது.
    பிச்சை எடுக்க வேண்டும் விரைவில் நான்...:)

    ரசித்தேன் ஐயா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      தங்கள் சொல்பின்வருநிலையையும், பொருள்பின்வரு நிலையையும், சொற்பொருள் பின்வருநிலையையும் கண்டேன்.
      ஆசியர் ஒன்று கூறினார். நீங்கள் மூன்றினுக்கும் சான்று காட்டுகிறீர்கள். சொற்பஞ்சம் உங்களுக்கென்றால் நாங்களெல்லாம் எங்கே போவது...........?
      கற்றறிந்தவர்கள் இல்லாத இடத்து என்போன்றோர் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அறிஞர்கள் இருக்கின்ற அவையிலே, ரொம்ப அடக்கி வாசிக்க வேண்டுமாம்.
      கிளிக்கு நான்கு வார்த்தைகள் தெரியும்.
      அதன் பேச்சை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கும். ( அட! கிளி பேசுகிறதே...!!!)
      மொழியை வசமாக்கி வைத்திருப்பதாகக் கனவு கண்டிருக்கும் கிளியின் புலமை பூனையைப் பார்க்கும் வரை தான்....!
      உங்களைக் கண்டு வியக்கிறேன். ( இப்பொழுது எனக்குத் தான் வார்த்தைகள் வரவில்லை)
      “ காணாமல் வேணதும் கத்தலாம் கற்றார்முன்
      ..நாணாமல் வாய்திறக்கக் கூடாதே - கோணாமல்
      ..பேச்சுபேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
      ..கீச்சுகீச் சென்னுங் கிளி!“
      ( நினைவின்நின்று எழுதுதலால் வார்த்தைகள் மாறி இருக்கலாம்)
      தங்களின் நல்ல மனத்திற்கு நன்றிகள்!

      Delete
  6. "வாட்டித் தொலைக்குமுன் நினைவைவிட – அந்த
    வலிகள் எனக்கொன்றும் பெரியதில்லை!" என்றவாறு
    உள்ளத்தைத் தொடும் கவிதை!

    ReplyDelete
  7. ஆகா
    ரசித்து
    ரசித்து
    எழுதிய கவியை
    ரசித்து
    ரசித்து
    சுவைத்தேன் நண்பரே நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தும் படி(த்)தேன்!

      நன்றி!

      Delete

  8. வணக்கம்!

    காணுகின்ற காட்சிகளில் கன்னி கமழ்ந்தாட
    வேணுமோ இன்பமும் வேறு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கருத்தும் கவியாகக் காட்டுமுமக் கில்லை
      இருந்தமிழ் ஞாலத்தில் ஈடு!
      நன்றி அய்யா!

      Delete
  9. ஆஹா. நானும் ரசித்து, ரசித்து, மீண்டும் மீண்டும் தங்கள் தளத்திற்கு வந்து தமிழை சுவைக்கிறேன்.

    கடைசிப்பத்தியை திரும்ப திரும்ப படித்து ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. பெருந்தகையீர்!
      தொடர்கின்றமைக்கும் கருத்திடுகின்றமைக்கும் ரசிக்கின்றமைக்கும் நன்றியுடையேன்!

      Delete
  10. இன்னும் எத்தனை பொக்கிசங்கள் வைத்துள்ளீர்கள்... தொடர வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
    Replies
    1. அலிபாபா திறந்த குகையின் திருத்தப்பட்ட கடவுச்சொல் அறிய உங்களிடம் தான் வருவேன்!
      எடுக்கும் பொக்கிசங்களில் உங்களுக்குச் சரிபாதி உண்டு!
      தொடர்வோம்!

      Delete
  11. அழகான கவிதை! அதிலும் கடைசி விருத்தம் மிக மிக மிக அருமை!

    ReplyDelete
  12. உங்கள் கவிதைகளை படிக்கும்போதெல்லாம் என் மனக்குளத்தின் அடியாழத்தில் நிறைந்திருக்கும் நினைவுப்பாறைகள் புரளுவதால் மேற்பரப்பில் சலன அலை !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  13. //மழை தூறதொடங்கிவிட்டது
    நிலமெல்லாம் மண்வாசம்
    நினைவெல்லாம் உன் நேசம் !//


    //செல்லாத தீவு நீ
    கடலை மூழ்க்கடிகிறாய் !
    தொலைத்ததாய் நினைத்துக்கொண்டிருந்தேன்
    தொலைந்தது தெரியாமல் !//


    //நீ மட்டுமே நீ
    என்று தெரிந்த பொழுது
    நீயாகியிருந்தேன் நான் !!!//
    இப்படி என் பல கவிதைகளின் சாயல் உங்கள் கவிதைகளிலும் காண முடிவதால் எனக்கு என்னையே பார்ப்பது போல் இருக்கிறது. விடாது தொல்லை செய்கின்றன என் சொற்கள். இந்த பதிவுகளை தான் பாடும் நாளுக்காக. அவற்றிடம் சொல்லிவைத்திருக்கிறேன். வலைச்சர பணி முடியும் வரை காத்திருக்கும் படி:) ஏதோ இச்சினி பறவை என்பார்களே அப்படி நச்சரிக்கின்ற இந்த வரிகள். கொஞ்சம் பொருமைகாக்கும்படி சொல்லிவையுங்களேன் பாவம் இல்லையா இந்த தங்கை!! ஏதாச்சும் புரிஞ்சதா சகோ!

    ReplyDelete
  14. இப்படி எல்லாம் நீங்கள் இழைத்து எழுதினால் நாங்கள் உங்கள் தளத்திலேயே குடி கொண்டுவிட வேண்டியதுதான்! மனம் வழுக்கிச் செல்கின்றது! நினைவலைகளில்!

    உருகி உருகிக் கவியெழுதி எமை
    உருக்கும் உமது மொழி அழகைப்
    பருகிக் களித்து அறிவைச் செதுக்கிட
    தருவீரோ உமது உமது ஞானப் பாலை!

    உங்கள் கவிதைகளைப் படித்ததால் வந்த விளைவு! பொறுத்துக் கொள்ளவும்!

    ReplyDelete
  15. கவிதை ரசனை இல்லாதவர் கூட தங்களின் கவிதையை ரசிப்பர். அவ்வளவு நேர்த்தி. நன்றி.

    ReplyDelete
  16. கூட்டிப் பெருக்கி எனைவெளியே – நீ
    கொண்டுபோய் இடலாம்! புறத்திருந்தும்
    பூட்டிப் பொதிந்துன் ஞாபகங்கள் – பெரும்
    பொக்கிஷ மாய்நான் சேர்த்து வைப்பேன்!
    தீட்டாய் நினைக்கலாம் நீயுமென்னைக் – காலத்
    தீயுள் அமிழ்த்தி எரித்திடலாம்!
    வாட்டித் தொலைக்குமுன் நினைவைவிட – அந்த
    வலிகள் எனக்கொன்றும் பெரியதில்லை!
    ஆஹா ஆஹா ! என்ன நான் சொல்வேன் என் தோழி இளமதிக்கே வார்த்தைக்கு பஞ்சமாமே. நான் எல்லாம் எம்மாத்திரம் வாய்மூடி மௌனிப்பதே மேல் சான்றோர் முன். நான் வரல இந்த விளையாட்டுக்கு நீங்கள் பொழிந்து தள்ளுங்கள். நாங்கள் அதில் நனைகிறோம அமைதியாய். வாழ்த்துக்கள் சகோ ! வலைச்சரத்தில் busy யாக இருந்தமையால் வரமுடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.

    ReplyDelete