Tuesday, 15 July 2014

மதி வென்ற கதிர்!





முடிந்த கதைகளைத் தொடங்கெனவே – தினம்
     மூர்க்கமாய்த் தாக்குமென் மனவிலங்கைக்
கடிந்(து) அடக்கவோர் வழியிலையே! – ஐயோ
     கடித்துக் குதறினும் பொறுப்பதன்றி!
விடிந்தன இரவுகள்! வெளிச்ச மில்லை!! – மதி
     வென்றிடத் தண்கதிர் விரும்பவில்லை!
இடிந்ததிர் பூமியின் கூக்குரலில் – சின்ன
     இதயத்தின் கதறல்கள் கேட்பதில்லை!

அழுவதை என்மனம் விரும்பவில்லை! – துயர்
     அடக்கிடக் கவி‘உண்டு கவலையில்லை!
விழுவதும் எழுவதும் என்னியல்பே! – அன்றி
     வீரமும் உன்னிடம் வென்றதில்லை!
ஒழிவதை ஒளிவதை நீவிரும்ப – உனை
     ஒட்டிட ஒன்றிட நான்விரும்ப,
கழிவது காலமே! காதலில்லை!! – உன்
     கற்பனை நதிகடல் சேர்வதில்லை!

கண்ணெதிரே நீ தோன்றுவதும் – பின்னர்க்
     காதினில் மந்திரம் ஓதுவதும்,
புன்னகைத்து மெல்ல உன்னகத்தே – கொண்டு
     புதிரெலாம் புரிந்திடக் கூடுவதும்,
என்கனவோ? அது என்கனவே!!- எனில்
     என்றுமவ் வுறக்கமே போதுமது
இன்பமடி! பேரின்பமடி! – எங்கும்
     இத்துணை இன்பமொன் றில்லையடி!

நீரூற்ற நீயற்ற வேளையிலும் – நெஞ்சு
     நூறாயிரம் கள்ளிப் பூவளிக்கும்!
வேருற்ற வேதனை காட்டிடாமல் – நீ
     வெறுப்பினும் உன்னையே காதலிக்கும்!
யார்குற்றம்? என்குற்றம் ஆகிடட்டும்! – நான்
     ஆயுளெலாம் உந்தன் கைதியாவேன்!
தேர்வெழுதி இங்குக் காத்திருந்தேன்! – எனை
     திருத்தவும் விரும்பாதேன் ஒதுக்குகிறாய்?
                                     ( தொடரும்........) 
(வீழ்ந்து விட்டேன்!  மற்றும்  உயிர் திரும்பும்!   ஆகிய இரு பதிவுகளின் தொடர்ச்சி     )
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

34 comments:

  1. திரும்பவும் வரும் என்ற ஏக்கப்பெருமூச்சை விடவைத்து விட்டது கவிதை அருமை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. மிக நன்றி அய்யா!
      காத்திருக்கச் செய்து விட்டேனோ?
      இன்னும் ஒரு பதிவில் முடிந்து விடும்.
      கருத்திட்டமைக்கு நன்றி!

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    பொருள் உணர்ந்து பா ...புனைந்த விதம் கண்டு மகிழ்ந்தேன்
    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது ரசனைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்!

      Delete
  4. "அழுவதை என்மனம் விரும்பவில்லை! – துயர்
    அடக்கிடக் கவி‘உண்டு கவலையில்லை!" என்ற
    தன்னம்பிக்கை வரிகளை விரும்புகிறேன்!
    சிறந்த கவிதை!

    ReplyDelete
    Replies
    1. வரிகளை விரும்புகின்றமையை விரும்புகிறேன்.
      படித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள்!

      Delete
  5. மீண்டும் ஒரு அருமையான கவிதை, கண்ணுக்கு குளிர்ச்சியான படத்துடன்.

    "//ஒழிவதை ஒளிவதை நீவிரும்ப – உனை
    ஒட்டிட ஒன்றிட நான்விரும்ப,
    கழிவது காலமே! காதலில்லை!! //"

    தங்களின் வார்த்தை ஜாலத்தை கண்டு மயங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பெருந்தகையீர்,
      கண்ணுக்குக் குளிர்ச்சியான படத்துடன் என்பதில் வஞ்சப் புகழ்ச்சி எதுவும் இல்லையே!
      சில வரிகளை நானும் விரும்புகிறேன். நீங்கள் அதைச் சொல்லிப் போகிறீர்கள். நன்றி!

      Delete
  6. காத்திருந்தால் ஒரு நாள் பலன் உண்டு...!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வலைப்பூ வகுப்பெடுக்கும் நாளெண்ணிக் காத்திருக்கிறேன்.
      சென்ற முறை தவற விட்டுவிட்டேன்.
      காத்திருந்தால் ஒரு நாள் பலன் உண்டுதானே குறள் செல்வரே?
      நன்றி

      Delete
  7. தமிழ் வார்த்தைகள் ஜாலம் செய்கின்றன தங்கள் எழுத்தில்! கவிதையில் சொக்கிவிட்டோம்! காதலில் காத்திருத்தல் சுகம் போல் தங்கள் கவிதையின் தொடர் வ்ரக் காத்திருக்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நிறை. சொக்கன் சுப்பரமணியம் சொல்லியிருப்பதை அப்படியே உங்கள் பதிவிலும் காண்கிறேன்.
      அறிஞர்கள் ஒன்றாகத் தான் சிந்திப்பார்களோ?
      உங்கள் ரசனைக்கு என் படைப்புகள் இலக்காகின்றமை குறித்து
      மகிழ்வடைகிறேன்.
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  8. மதியை வென்ற கதிரா?
    இல்லை மதி வென்றது கதிரையா ?
    சிந்திக்கதொடங்கிவிட்டேன் தலைப்பு முதலே!!
    எப்படி பட்ட கோழையும் வெல்லும் இடம்,
    எப்படிப்பட்ட வீரனும் தோற்கும் இடம்
    வீழ்வதாலே வெல்லும் இடம்
    வெற்றி பெற்றே வீழும் இடம்-இல்லையா அது:)
    ஒவ்வொரு வரியையும் குறிப்பிடவைக்கிறது:))
    இந்த சந்தக்கவிதையை அண்ணா அனுமதித்தால் என் பாணி புத்துகவிதையாக்க விருப்பம். பிடித்த பாடலை நம் குரலில் பாடிப்பார்ப்போம் இல்லையா அது போல!
    கிட்டத்தட்ட இந்த உணர்வை நான் ஏழெட்டு சிறு கவிதையாக எழுதுவிட்டேன்.
    அப்புறம் ஒரு ஐயம் சகா !
    ஆண்கள் இதுபோல் கவிதை எழுதினால் அதை ரசிக்கும் சமூகம், ஒரு பெண் இந்த வலியை பாடினால் அதன் நதிமூலம், ரிஷி மூலம் பார்ப்பதேன். தமிழ் மனம் வாக்கு போடலாம்னு பார்த்தேன். submit என்று இருக்கிறது. submit செய்ய முயன்றால் ஏற்கனவே சேர்க்கப்பட்டதாய் சொல்கிறதே?

    ReplyDelete
    Replies
    1. சகோதரி!
      வியக்கிறேன். என்ற ஒருவரியுடன் இதற்கான என் பதிலைப் பதிவு செய்து விடலாம். ஆனால் அதன் காரணத்தைச் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு படைப்பின் தலைப்புகளுக்குப் பல நேரங்களில் படைப்பை விட அதிகம் யோசிக்க வேண்டி இருக்கும். நாம் கருதுவதைப் பல நேரங்களில் படிப்பவர்கள் புரிந்து கொள்ளாமலே போய் விடுவர். ஒத்த அலைவரிசையில் அது புரிந்து கொள்ளப்படும் போது ஏற்படும் மகிழ்வை அனுபவத்தில் இன்று உணர நேர்ந்தது. ஆம்! அந்தத் தலைப்பு அவ்விருவாய்ப்புகளும் கருதி இடப்பட்டதுதான்!
      நீங்கள் சொன்ன “ ambiguity “ ஆக இதைக் கொள்ளலாம் அல்லவா? கவிதையில் இந்த ambiguity வாசிப்பின் பன்முகப் பரிமாணத்திற்கு உதவும் என்பது நான் கண்டது.
      தமிழில் தடுமாறு தொழிற் பெயர் என்று ஒன்று இருக்கிறது.
      “ புலி கொல் யானை“ எனும் தொடரை அதற்கு எடுத்துக் காட்டுவர் மரபிலக்கணத்தார்.
      புலியை யானை கொன்றதா? யானையைப் புலி கொன்றதா? என ஐயப்பாட்டிற்கு இடமாக ‘ கொல் ‘ எனும் தொழிற் பெயர் நிற்பதால் அது தடுமாறு தொழிற் பெயர் எனப்படும். அது போலத்தான் இதன் தலைப்பும் வென்றதும் வெல்லப்பட்டதுமாய்.....!
      படைப்போன் தான் சொல்லக் கருதும் விடயங்களுக்கான சொற்களைத் தெரிந்து பயன் படுத்த வேண்டும் என்கிறது தொல்காப்பியம்.
      “ குறித்தோன் கூற்றந் தெரித்துமொழிக் கிளவி “ (கிளவி-56)
      அப்படிச் சொல்லிவிட்டானானால் அந்தப் படைப்புச் சொல்ல நினைத்ததை அப்படியே வாசகரிடம் கொண்டு போய் சேர்க்கும் என்று பிறிதோரிடத்தில் கூறும்.
      “பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின்“ (உரியியல்- 96)
      அப்படி சொல்லும் போதும் உணருவோரின் மனஅறிவிற்கேற்பவே அதை அவர்கள் உணர்ந்து கொள்ள வாய்க்கும் எனக் கூறித் தொடரும்.
      “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே“ (உரியியல்-97)
      படைப்போன் - படைப்பு - படிப்போன் எப்படி இருக்க வேண்டுமென இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லிச் சென்றவனின் அனுபவத்தை இன்று உங்கள் கருத்தின் முனை நிறுத்திக் காண்கிறேன். படித்ததில் கிடைப்பதை விடப் பட்டறிதலில் கிடைக்கும் மகிழ்ச்சியின் சுவை அபரிமிதமாய்த் தெரிகிறது.
      உங்களுடைய புதுக்கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
      கலைஞன் உணர்வின் லயங்களுக்கேற்ப அழவும் சிரிக்கவும், அடிக்கவும், அணைக்கவும் தெரிந்த மன விகற்பமில்லா அற்புதக் குழந்தை! தங்கள் விகாரங்களை உங்களில் தேடிக் காணாமல் உங்களை உடைக்கும் கரங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். உடையும் ஆயிரமாயிரம் சில்லுகளிலும் அவற்றைப் இன்னுமின்னுமாய்ப் பிரதிபலித்துக் காட்டிச் சிரிக்கக் கற்றுக் கொள்க!
      தமிழ் வசப்படும்!
      நன்றி!

      Delete
    2. “ஆண்கள் இதுபோல் கவிதை எழுதினால் அதை ரசிக்கும் சமூகம், ஒரு பெண் இந்த வலியை பாடினால் அதன் நதிமூலம், ரிஷி மூலம் பார்ப்பதேன்” - அதுதானே ஆணாதிக்க உலகம்!
      இதற்கு, “கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
      பெண்ணிற் பெருந்தக்க தில்“ எனும் சப்பைக்கட்டு வேறு (அண்ணன் திருவள்ளுவர் வழுக்கிய இடங்களில் ஒன்று)

      Delete
    3. “எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேற்
      பொற்புடை நெறிமையின் இன்மையான“
      எனும் தொல்காப்பியத்தையும், அதற்கான நச்சினார்க்கினியர் உரையையும் உடன்நினைத்தேன்.
      பின்னைய, பக்தி இலக்கியங்களிலும் உலா நூல்களிலும் பெண் மடலூர்தல் குறித்துக் கூறுகின்றமைக்குச் சான்றுண்டு.
      ஆண்டாளின் பாசுரங்களை விட பெண்ணின் மன உணர்வை நுண்ணிதாய்க் காட்டிய இலக்கிய வடிவத்தைப் பண்டைய சங்க இலக்கியங்களிலும் கண்டதில்லை.
      அவள் இறைவன் மேல் பாடியதால் அதைப் பதிவுசெய்து வைத்துப் பக்தியுடன் படிக்கச் சொல்லும் நம் சமூகத்தின்
      ஆழங்களில் குரள்வளை நெறிக்கப்பட்டு புதையுண்டு போன பெண் கவிகளின் பெருங்குரல்களின் எதிரொலிப்புகளைக் கேட்கக் கூடிய காலத்தில் வாழ்கிறோம் என்பது நமக்கு ஆறுதல்!

      Delete
  9. வணக்கம் ஐயா!

    ஓரா யிரமெண்ணம் ஊடுருவ உம்கவிச்
    சீராம் எழுத்தின் சிறப்பென்னே! - தீராது
    தீராதென் தேடல் தினமும்தான்! பாடலைப்
    பாராது போகேன் படித்து!

    உங்கள் பாக்கள் எம்மைக் கட்டிப் போடுகின்றன!...
    வரிந்து கட்டிகொண்டு வந்துவிழும் சீர்களின் சிறப்பைச்
    சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா!
    கவிதை ஆயிரமாயிரம் காட்சிகளை விரிக்கிறது.
    மலைக்கின்றேன்!..

    மனமுவந்த வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. நல்லமனம் கொண்டீர்! நறுங்கவிதை பின்னுாட்டச்
      சொல்லம்பால் நெஞ்சத்துச் சேர்கின்றீர்! - வில்லம்போ
      சாயப் புறப்படும்! செத்துவிழும்! உம்அம்/(ன்)/போ
      காயம் அழிக்கும் களிம்பு!
      அன்பினுக்கு நன்றி சகோதரி!

      Delete
  10. தங்கை மைதிலி சொன்னது போல, ஒவ்வொரு வரியையும் நின்று நிதானித்து ரசித்து விளங்கி விளக்கிக்கொண்டே இருக்கலாம் போல.. அவ்வளவு செறிவு..
    விழுவதும் எழுவதும் என்னியல்பே! – அன்றி
    வீரமும் உன்னிடம் வென்றதில்லை!” யார்தான் காதலியை வெலல் முடியும்..“ஒண்ணுதற்கோ உடைந்ததே என்கிறாரே வள்ளுவக்காதலர். அல்லாமல், “ஊடலில் தோற்றவர் வென்றார்” என்பது தவிர.வேறெங்கு முடியும்? மிக அரிய நயமான கவிதை ஜோ.

    ReplyDelete
  11. சகோதரரே !

    ஒரு விறுவிறுப்பான துப்பறியும் கதைக்கு காத்திருப்பதற்கும் மேலாக ஒரு கவிதைக்கு நான் காத்திருப்பது என் வாழ்க்கையிலேயே இதுதான் முதல் முறை !
    ( உங்கள் கவிதைகளை துப்பறியும் கதைகளுடன் ஒப்பிடுவதற்கு என்னை மன்னிப்பீராக ! )

    மேலே உள்ள வரிகள் வேண்டாம், இப்படி வைத்துக்கொள்ளலாமே... காதலிக்காக காத்திருக்கும் பதைப்புக்கு ஈடாய் !

    நான் மகிழ மற்றொரு காரணம், உங்கள் வலைப்பூவின் மூலம் கிடைக்கும் மொழி பற்றிய மிக ஆரோக்யமான பின்னூட்டங்கள் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      வணக்கம். “காதலிக்காகக் காத்திருக்கும் பதைபதைப்பு”
      விட்டால் என் கவிதைக்குப் போட்டியாக வந்து விடுவீர்கள் போல்......?!
      உங்களின் பின்னூட்டங்களை விரும்புகிறேன்.
      மொழி பற்றி நிறையத் தான் பேச வேண்டி இருக்கிறது.
      அதற்கான தருணங்கள் அடிக்கடி வாய்ப்பதில்லையே.....!
      கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்!
      பயன்படின் அதைவிட மகிழ்ச்சி வேறேது....?
      நன்றி!

      Delete
  12. நீரூற்ற நீயற்ற வேளையிலும் – நெஞ்சு
    நூறாயிரம் கள்ளிப் பூவளிக்கும்!
    வேருற்ற வேதனை காட்டிடாமல் – நீ
    வெறுப்பினும் உன்னையே காதலிக்கும்! ஆஹா தெய்வீகக் காதலா நன்று நன்று ..!

    அழுவதை என்மனம் விரும்பவில்லை! – துயர்
    அடக்கிடக் கவி‘உண்டு கவலையில்லை! ( அதானே! )
    விழுவதும் எழுவதும் என்னியல்பே! – அன்றி
    வீரமும் உன்னிடம் வென்றதில்லை! (அட பாவமே!) ம்..ம்...ம்

    சரி கவிஞரே அசத்துங்கள் !
    அசந்து போகும் அளவுக்கு கற்பனை திறனும், அதனை அழகுதமிழில் இடும் கோலமும் என் சிந்தையில் படிய ஓவ்வொன்றும் ரசித்தேன்!
    விழுவதும் எழுவதும் என்னியல்பே! என்று சொல்லி இப்போ எங்களை யல்லவா வீழ்த்தி விட்டீர்கள் எழும்பவே முடியாதபடி.
    தொடர வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி, எந்த நகைச்சுவையும் கூறாமல் புன்னகையை என் முகம் ஒட்டவைத்துப் போகிறீர்கள் சகோதரி?
      அநுகரனம் என்றொரு சொல் தமிழில் கேள்விப் பட்டிருப்பீர்கள்!
      நானும் முயன்று பார்க்கிறேன். எழுத்தாகும் உங்கள் குரல்களுக்குள்ளிருந்து.............!
      வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மகிழ்ச்சியை எனக்களித்துப் போகின்றமைக்கும் சேர்த்து நன்றி!

      Delete
  13. மதி வென்ற கதிர்....

    அருமையான கவிதை ஐயா.
    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்கின்றமைக்கும் கருத்திடுகின்றமைக்கும் நன்றிகள் சகோதரி!

      Delete
  14. ///என்றுமவ் வுறக்கமே போதுமது
    இன்பமடி! பேரின்பமடி! – எங்கும்
    இத்துணை இன்பமொன் றில்லையடி!///
    அருமை நண்பரே

    ReplyDelete
  15. ஒருதலைக் காதலை ஓதும் அடிகள்
    அருஞ்சுவை ஊட்டும் அகத்து!

    பின்னர் என்ற சொல்லின் பின் வல்லினம் மிகுது்ள்ளதைக் கண்டு மகிழ்வுற்றேன். நன்கு கற்றவர்கள் முன்னர் பின்னர்ச் சொற்களின் பின் வலி மிகாமல் எழுதி எனக்கு வலியைத் தந்துள்ளனர்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. தங்கள் வலிமாற்றும் வண்ணம் தவறின்றி எழுதுகின்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன் அய்யா!
      நன்றிகள்!

      Delete

  16. தங்கள் பார்வைக்கு மட்டும்

    உந்தன்

    உன்+ தன் - உன்றன் என்று வரும்
    உம் + தம் - உந்தம் என்று வரும்

    உந்தன் என்பது தவறான புணா்ச்சியாகும்

    இதை வெளியிட வேண்டாம்

    ReplyDelete
  17. வருகைக்கும் வழிநடத்துதலுக்கும் பெரிதும் நன்றியுடையேன்.
    இலக்கணப்படி தாங்கள் சொல்வது மிகச்சரியே ஆகும்.
    என் ஆட்சி தவறானதே ஆகும்.
    உன் எனும் ஒருமையை உம் எனும் பன்மை வடிவாய்க் கொண்டமையால் இப்பிறழ்ச்சி நேர்ந்தது.
    “எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
    நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
    ..............................................................................
    வானம் இல்லை என்றால் மதியும் இல்லை!
    உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை“
    எனும் பாடல் எண்பதுகளின் இறுதியில் வெளிவந்த போது தமிழறிஞர்களால் இவ்விலக்கணச் சர்ச்சை எழுப்பப் பட்டதாக அறிகிறேன்.
    இச்சொல் இதே வடிவில் எங்காவது என் வாசிப்பில் பழக்கமாயிருக்கும்.
    “ கடிசொல் இல்லை காலத்துப் படினே “
    என்றும்
    “ புதியன புகுதல் வழுவல “ என்றும் இதற்கு அமைதி கூற முடியாது தானே!
    என்ன தவறு செய்துள்ளேன் என்பதையும் இதன் சரியான வடிவம் எப்படி இருக்க வேண்டுமென்பதையும் அனைவரும் அறியவே என் பதிவில் மாற்றாமலும், பின்னூட்டத்தை அனைவரும் அறிவும் தங்கள் சொல் மீறி வெளியிடுகிறேன்.
    இனி ‘உன்றன்‘ சொல் வருமிடங்களில் கவனமாயிருப்பேன் அய்யா!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே“ - என்பதும் அப்படித்தான். ஆனால், ஜோ, உந்தன் எனும் சொல் அளவிற்கு உந்தம் (பன்மை) வழக்கில் இல்லை இந்தச் சொல்லின் இடத்தை உங்கள் என்னும் சொல் பிடித்துவிட்டது.
      என்பதையும் கவனிக்க.
      இன்றைய தமிழில் இது பெருவழக்காகிவிட்டது.
      அருகாமை என்பது அருகில் எனும் பொருள்பெற்றது போல..
      நாற்றம் மணம் பெற்றதுபோல... கேவலம் சிறப்பிழந்ததுபோல இந்த வழக்குகளை என்ன செய்வதென்று அய்யா பாரதிதாசன் போலும் இலக்கண அறிஞர்கள்தான் சொல்லவேண்டும்.
      “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்..“ என, வழக்குக்கு முதலிடம் தந்த தொல்.பாயிரம் சொல்லவருவதென்ன?

      Delete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete