Monday, 6 April 2015

அறிவைப் பெருக்கும் வழிகள் ஆறு.

பண்டைய நூல்களை வாசிக்கும்போது சில சொற்களுக்குப் பொருள் காண்பதோ கண்டவர் வாய்க் கேட்டறிவதோ மிகக் கடினமாக உள்ளது. உரை எழுதியவன் போகிற போக்கில் அருத்தாபத்தி என்பான்... அனுமானப் பிரமாணம் என்பான். அன்றைய காலத்தில் அது புரிந்திருக்கும். ஆனால் இன்று.........?!

என் புரிதலுக்காக இவற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தபோது இவை மனிதனின் அறிவைப் பெருக்கும் வாயில்கள் எனப்பட்டதும் இவற்றின் மூலமாகத்தான் அவன் அறிவைப் பெறுகிறான் என்பதும் தெரியவந்தது. தமிழில் அவை அளவைகள் எனப்படுகின்றன. அளவைகள் என்றால்........... அறிவை அளக்கும் அளவைகள். அறிவை அளந்து நாம் பெற்றுக் கொள்ள உதவும் அளவைகள்.


இவை மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகின்றன.

சிங்கம் எப்படி இருக்கும் என்று கேட்பவனை அது இருக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்று “ இதோ பார் சிங்கம் ” என்று காட்டுவது காட்சி அளவை எனப்படுகிறது. பெரும்பாலும் நம்முடைய அறிவு இந்த அளவையைக் கொண்டுதான் வளரத் தொடங்குகிறது. கண் முதலிய ஐம்பொறிகளால் அடையும் அறிவு இது.

மண்வாசனை வீசுவதைக் கொண்டு எங்கேயோ மழை பெய்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறோம். அங்கே மழை பெய்து கொண்டிருக்கிறதா என்று நாம் பார்க்கவில்லை. ஆனால் மழை துளித்துளியாகக் காய்ந்த  மண்ணில் விழுந்தால் எழும் மணத்தை நாம் அறிந்திருக்கிறோம். அதை நம் மூளை பதிந்து வைத்திருக்கிறது. காற்றில் அந்த வாசனை வரும் போது மழை பெய்கிறதா என வெளியே பார்க்கிறோம். மேக மூட்டமாகத்தான் இருக்கிறது . ஆனால் நாம் இருக்கும் இடத்தில் மழை பெய்யவில்லை. இந்த வாசனை மழை மண்ணில் படும்போதுதான் தோன்றும். மழை இங்கே பெய்யவில்லை. ஆனால் வாசனை அடிக்கிறது. அப்படியானால்  அது எங்கேயோ பெய்து கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறோம். இதுவே கருதல் அளவை.

அணுவைப் பிளக்கும் போதும், சேர்க்கும் போதும் அளவுகடந்த சக்தி வெளிப்படுவதாக அறிவியல் கூறுகிறது. அறிவியல் அறிஞர்கள் இதைக் கூறுகிறார்கள். அதை நான் கண்டதில்லை. ஆனால் அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன். இது எனது காட்சிக்கோ கருதலுக்கோ அப்பாற்பட்டது. நான் ஏன் நம்புகிறேன் என்றால் அறிஞர்கள் சொல்கிறார்கள். அதனால் அதில் உண்மை இருக்கும் ( பொய்யாய்க் கூட இருக்கலாம். ) எல்லா விடயங்களையும், காட்சி கொண்டோ என் புலனறிவிற்கு உட்பட்ட கருத்து கொண்டோ அறிய முடியாதபோது, அப்படி அறிந்தவர்கள் கூறும் கூற்றை ஏற்கத்தான் வேண்டி இருக்கிறது. அப்படி நாம் ஏற்றுக் கொள்ளும் அறிவிற்குப் பெயர் உரை அளவை.

வடமொழியில் இவை

பிரத்தியட்சப் பிரமாணம் (காட்சி அளவை)

அநுமானப் பிரமாணம் (கருதல் அளவை)

ஆப்த வாக்கியப் பிரமாணம். (உரை அளவை) எனப்படுகின்றன. 

இங்குக் கொண்டுவந்து ஏன் வடமொழி வழக்கைச் சேர்க்கிறான் என்று நீங்கள் நினைத்தால் இப்படியே இதைத் தமிழில் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகத்தான்.

சொல்லாராய்ச்சிக்குப் போனால்,

பிரமா என்னும் வட சொல் அறிவு எனப் பொருள் படுவதாகும்.
எதன் வழியாக அறிவு பெறப்படுகிறதோ அதுவே பிரமாணம் எனப்படுகிறது.

நீங்கள் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் நமது அறிவினை இம்மூன்றின் அடிப்படையில்தான் நாம் பெற்றுக் கொண்டிருப்போம்  வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியவரும்.

இவையன்றி இன்னும் மூன்று அளவைகளும் நம் மரபில் கையாளப் பட்டுள்ளன.

இருக்கின்ற ஒன்றை அல்லது தெரிந்த ஒன்றைக் கொண்டு தெரியாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றை விளக்குவது. இது உவமையளவை.

“ஆப்போலும் ஆமா” எனும் எடுத்துக்காட்டு தொல்காப்பிய உரையில் உள்ளது.

காட்டுப்பசு எப்படி இருக்கும் என்று என்றறியாத ஒருவனிடம் அது வீட்டுப் பசுவினைப் போல இருக்கும் என்று சொல்வது உவமையளவை. (உவமானப் பிரமாணம்).

 நல்லகுணம் இல்லாதவன் என்று சொல்வதன் வழியாக அவன் தீயவன் என்று  நாம் அறிவது போலச் சொன்னதைக் கொண்டு சொல்லாததை உணரச் செய்வது பொருள் அளவை. ( அருத்தா பத்தி

தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறோம். பார்க்கின்றவனுக்குத் தண்ணீர் இருந்தால் இருக்கிறது என்று தெரிவது போலவே  தண்ணீர் இல்லாவிட்டால் இல்லை என்பதும் தெரியும்தானே? அவன் பார்த்தபோது தொட்டியில் தண்ணீர் இல்லை.. ஆனால் ஒன்றை அறிந்தவன் தன் அறிவு மூலம் அது இருக்கிறதா இல்லையா என்று பார்த்து இருக்கும் ஒன்றிலிருந்து இல்லாத ஒன்றைத்  தெரிந்து கொள்வது இன்மை அளவை. வடமொழியில் இதனை அனுபலப்திப் பிரமாணம் என்கிறார்கள்..

இன்மையும் உவமையும் காட்சி அளவையிலும் பொருள் அளவை கருதல் அளவையிலும் அடங்கும்.

உரைகளின் இடையே தமிழிலும் வடமொழியிலும் வழங்கப்பெறும் இச்சொல்லாட்சிகளைப் புரிந்து கொள்ளச் சரியான விளக்கங்கள் இல்லை. பண்டைய தத்துவமரபு மொழியோடு  நடத்திய ஊடாட்டத்தின் விளைவாகவே இச்சொல்லாட்சிகள் இலக்கணத்தில் புகுந்துள்ளன. அன்றியும் இலக்கண உரையாசிரியர்களின் சமயப் பற்றும் இந்த ஆட்சியைத் தம் உரைகளில் கலக்கக் காரணமாய் இருக்கலாம்.

மொத்தத்தில் அறிவைப் பெறும் வாயில்கள் இவை என்கிறது நம் தத்துவ மரபு.

ஒருவேளை நீங்கள் பழைய உரைகளின் பக்கம் போவதாய் இருந்தால் இந்தச் சொற்கள் வரும் இடங்களில் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த இடுகை துணைசெய்யும்.

படம் - நன்றி https://encrypted-tbn1.gstatic.com/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

46 comments:

  1. அன்புள்ள அய்யா,

    ‘அறிவைப் பெருக்கும் வழிகள் ஆறு’
    தீடீர்ன்னு தத்துவம் எல்லாம் சொன்னா என்ன செய்வது?

    எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ... தேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு...! கண்ணதாசனின் ‘ஆண்டவன் கட்டளைதான்’ தெரியும்.


    தமிழில் அறிவை அளந்து... நாம் பெற்றுக் கொள்ள உதவும் அளவைகள் மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்ற செய்தி தாங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.

    காட்சி அளவை - இதோ பார் ‘சிங்கம் சிங்கிளா வருகின்றது’ என்று காட்டி புரியவைத்து விட்டீர்கள்.

    கருதல் அளவை - ‘மண்வாசனை’ பாரதிராஜா நுகரச் செய்த
    மழை இங்கே பெய்யவில்லை. ஆனால் வாசனை அடிக்கிறது.

    உரை அளவை- அறிஞர்கள் சொல்கிறார்கள். அதனால் அதில் உண்மை இருக்கும் ... உண்மை இல்லாமல்கூட இருக்கலாம். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்...! எனக்கும் ரொம்ப நாளா சந்தேகம்... ஆமா...

    பூமி சுத்துது ...சுத்துதுங்கிறாங்களே...அறிவியல் அறிஞர்கள் சொல்வது என் புலனறிவிற்கு உட்பட்ட கருத்து கொண்டோ அறிய முடியாதபோது, அப்படி அறிந்தவர்கள் கூறும் கூற்றை ஏற்கத்தான் வேண்டி இருக்கிறது. அப்படி நாம் ஏற்றுக் கொள்ளும் அறிவிற்குப் பெயர் உரை அளவை.

    ஓ... அதுதான் உரை அளவையோ..!. இரவு பகல் ஏற்படுவது எப்படி என்பதிலிருந்து உணர்ந்து கொள்ளவேண்டியதுதான்... என்று சொல்கிறீர்களா...? அய்யா... இப்பப் புரியுதுங்கய்யா... புரியுது...!

    உவமையளவை - “ஆப்போலும் ஆமா”

    பொருள் அளவை. ( அருத்தா பத்தி )

    இன்மை அளவை- எனது மூளைத்தொட்டியில அறிவுத்தண்ணீர் இருக்கிறாதா? என்று பார்க்கச் சொன்னால் இல்லை என்பதை உணரமுடிகிறது.

    அறிவைப் பெருக்கும் ஆறுதலான வழிகளைக் காட்டி அருமையான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    த.ம. 2.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      முதன் முதலில் வந்து இவ்வளவு விரிவான கருத்திட்டதற்கு முதலில் நன்றி.

      உரை அளவைக்கு நீங்கள் காட்டிய உதாரணம் நான் காட்டியதை விடச் சிறந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  2. இந்த அளவைகளின் மூலம் தமிழா ,வடமொழியா ?பழந்தமிழகத்தில் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை ,ஆரியக் கலப்பினால் வந்த ஆறா இது :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜி...
      அந்தக் கால சமய வழக்கைச் சார்ந்து உரை எழுதியவர்கள் காட்டிய மூலமே இது:))

      Delete
  3. இதுவரை கேள்விபட்டிராத காட்சி அளவை, கருதல் அளவை, உரை அளவை என்ற மூன்றைப் பற்றியும் தெளிவான விளக்கம் தந்தீர்கள் அய்யா!
    மிக்க நன்றி!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. இலக்கண நிரூபணங்களுக்காய் மொழியிலும், கொள்கை விளக்கத்திற்காய் இலக்கியத்திலும் சித்தாந்தங்களிலும் பயன் படும் அளவைகளே இவை அய்யா!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  4. பிரமாண்டமான அளவுகோல் கவிஞரே.... தொடரட்டும் அளவுகள்
    தமிழ் மணம் 6 மனமே 6

    ReplyDelete
    Replies
    1. யார் மனம் ஆறாவிட்டாலும் என் மனம் ஆறிவிடும் நண்பரே!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete

  5. வணக்கம்!

    தன்னேர் இலாத தமிழின் சிறப்பறிந்து
    முன்னோர் மொழிந்த உரைகண்டேன்! - நன்றே
    அறிவைப் பெருக்கும் வழியாறும், ஆய்வின்
    செறிவை அளிக்கும் செழித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வீழ்தல் குழியென்றால் வித்தாய் விழுவோம்நாம்
      ஆழ்தல் அறிவிற் கழகன்றோ? - வாழ்மட்டும்
      காண்போம்! கருத்துரைப்போம்!! கன்னித் தமிழ்வாழப்
      பூண்போம்!!! புதுமைபடைப் போம்!

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  6. அறிவைப் பெறும் வாயில்கள் அறிந்தேன்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  7. சரியான உதாரணங்களுடன் சொல்லப்பட்ட அளவைகள் அனைத்தும் அருமை...

    என்னைப் பொருத்தவரை...

    நன்றின் பால் உய்ப்பது அறிவு...

    ReplyDelete
    Replies
    1. சென்ற இடத்தால் செலவிடாமைக்கும், தீதொரீதற்கும், இவை தேவைப்படாதோ டி.டி சார். :))

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  8. நேரம் கிடைப்பின் : முக்கால் அடியில்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/01/Intellect-Part-2.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி சார்.
      பார்த்தேன் கருத்திட்டேன்.

      Delete
  9. சைவசித்தாந்தப் பயிற்சி வகுப்பு சென்றபோது இவைபோன்ற சில சொற்களைப் படித்துள்ளேன். தேவைப்படும்போது படிக்கக்கூடிய அளவில் மேற்கோள் நிலையில் நல்ல பதிவாக தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா!
      இவை தத்துவத்திலும் சித்தாந்தத்திலும் சொல்லப்படுபவைதான். அதற்கு இலக்கியத்திலும் இலக்கணத்திலும் உரிய இடம் இருக்கிறது.
      சைவ சித்தாந்தம் படித்திருக்கிறீர்கள் என்றால் இன்னும் கூடுதலாக,

      ஒரு கொலை நடந்திருக்கிறது. பிணத்தைச் சுற்றி நான்குபேர் மட்டுமே இருக்கின்றனர். தக்க காரணங்களால் அங்குள்ள நால்வரில் மூன்று பேர் அக்கொலையைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றால் நான்காவதாக இருப்பவனே கொன்றிருப்பான் என்ற முடிவுக்கு வருவது போன்ற [co="blue"]ஒழிபு அளவை (பாரிசேடப் பிரமாணம்)[/co]
      என்பதையும்,


      நான் பத்துச் சட்டைகள் வைத்திருக்கிறேன் என்றால் என்னிடம் ஐந்து சட்டைகள் இருக்கும் என்று அறிவது. ஏனெனில் பத்திற்குள் ஐந்து அடங்கும் என்பது போல் அறியும் [co="blue"]உண்மை அளவை ( சம்பவப் பிரமாணம் )[/co] என்பதையும்,

      வேப்பமர உச்சியில் பேய் இருக்கிறது என்பதை நம்புவது போல வழிவழியாக வந்த நம்பிக்கைகளைக் காரண காரியம் அறிந்தோ அறியாமலோ ஏற்றுக் கொள்ளும் அறிவான [co="blue"]மரபு அளவை ( ஐதிகப் பிரமாணம் )[/co] என்பதையும்,

      கல் என்னும் சொல்லுக்கும் கல்லுக்கும் எந்தத் தொடர்பு இல்லாவிட்டாலும் கல் என்று சொன்ன மாத்திரத்திலேயே அதன் கடினம் உருவம் போன்ற அதன் இயல்புகள் நம் மனத்தில் தோன்றுவதற்குக் காரணமான அறிவு எனப்படும் [co="blue"]இயல்பு அளவை ( சுபாவப் பிரமாணம் )[/co] என்பதையும் அறிந்திருப்பீர்களே…!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. அட அளப்பதற்கு மட்டும் தான் அளவை என்றல்லவா எண்ணினேன். இப்போ தான் புரிகிறது அறிவையும் பெருக்குகிறது அளவைகள் என்று காட்சியளவை, கருதல் அளவை, உரையளவை ம்..ம்... அருமையான விளக்கங்கள். தொடருங்கள் தொடர்கிறோம் ஆர்வமுடன் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மை!

      Delete
  11. அறிவின் அளவைகள் பற்றிக் கூறி இருக்கிறீர்கள்சுட்டியில் இருக்கும் பதிவில் காணும் விஷயங்கள் எந்த அளவையின் கீழ் வரும் நீங்கள் என் பதிவைப் படிக்க வைக்கும் உத்தியாகவும் கொள்ளலாம்
    http://gmbat1649.blogspot.in/2012/04/blog-post_28.html

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!
      சற்றுத் தாமதமானாலும் நிச்சயம் கண்டு கருத்துரைக்கிறேன்.
      முனைவர் ஜம்புலிங்கம் அய்யாவிற்கு அளித்த கருத்துகளையும் காண வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  12. பெருகி வரும் ஆற்றலை
    பருகிய பாமகன் ஆறறிவுடையோர்
    சிந்தைக்கு சிறப்புறவே தந்தார்
    பந்தாய் சுழலும் பூவுலகிற்கு!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம + 1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  13. அளவைகள் குறித்த விளக்கம் சரியான அளவுடன் (எடுத்துகாட்டுகளுடன்) தந்த விதம் சிறப்புங்க சகோ. புதிய வடமொழிச் சொற்கள் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!

      Delete
  14. எனது இடத்தை முறைகேடாக அளந்து கணக்கீட்டீல் பதிவு செய்த (நில)அளவையரே தெரியாமல் தவிக்கும்போது..தாங்கள் சொன்ன அளவைகள் எனக்கு புரியவா போகிறது.?????

    ReplyDelete
    Replies
    1. அதுவே அவர்களின் இயல்பு அளவையாக இருக்குமோ வலிப்போக்கரே..))
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  15. அய்யா,
    வணக்கம்.
    கருதல் உரையளவு என்றிரண்டும் காட்டி
    பொருளாம் அளவைப் பொலிவாய் பொருத்தி
    உவமையும் காட்சியும் இன்மையும் இட்டீர்
    உவப்புடன் ஊட்டம் நிறைத்து.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வெண்பா..!!!!

      மிக்க நன்றி சகோ!

      Delete
  16. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் சார்.

    10 மாணவர்களை எடுத்துக்கொண்டால், ஒரு சிலருக்கு ஒரு முறை சொன்னாலே புரிந்துவிடும். ஒரு சிலருக்கு 10 முறை சொன்னாலும் புரியாது. முதலாமவள் அறிவைப் பெருக்குவது எளிது. இரண்டாமவள் மிகவும் உழைக்க வேண்டும். முதலாமவளுக்கு படிப்பு வருது. ரெண்டாமவள் மக்கு. இப்படித்தான் உலகம் நேரிடையாகவோ,மறைவாகவோ பேசும்.

    உண்மை என்னவென்றால்..ஐ க்யூ ஒரு சிலருக்கு குறைவாக இருக்கிறது என்கிறார்கள். ஒரு சிலருக்கு அதிகம் இருக்கிறார்கள். அதன்படி அவர்கள்புரியும் தன்மை அமைகிறது.

    உழைப்புக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. உழைப்பவளை மக்கு என்றும், உழைக்காமலே எல்லாமே புரிந்துகொள்பவளை அறிவாளி என்றும் சொல்லும் உலகம்.

    இன்னொரு சிச்சுவேஷன்..ஒருத்தி அழகாப் பிறந்து விடுகிறாள். இன்னொருத்தி அவலட்சணமாகப்பிறந்து விடுகிறாள். இருவரும் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் வேறு வேறு. இப்போ, மேலே உள்ள முதலாமவள், இரண்டாமவள் அறிவையும், கீழே உள்ள அழகாகப் பிறந்தவள், அழகில்லாமல் பிறந்தவள் இரண்டையும் இணைத்து நால்வரை உண்டாக்குவோம்.

    அழகு- அறிவு
    அழகிண்மை-அறிவு
    அழகு-அறிவின்மை
    அழகின்மை-அறிவின்மை.

    இந்த நாலு வகை பெண்கள் உங்க பதிவை வாசிக்கிறாங்கனு வச்சுக்குவோம். இதன் படி அறிவைப்பெருக்க முயல்றாங்கனு வச்சுக்குவோம். இவர்கள் 1, 2, 3, 4 இடத்தை பெறுவார்கள். அனைவரும் # 1 ஆக முடியாது.

    ஆகையால், there is going to be an "uneven" and "unfair" situation no matter how much effort one puts.

    The discouraging message here is, LIFE IS NOT FAIR! Neither "God" is! We need to understand that. Once we understand, we should do our level best whether we fall in any of the four categories. People in general dont understand. That's why the world is a complicated place to live.

    If one day everyone become equally intelligent, equally beautiful, equally talented, equally nice the world will disappear on that day. There is no need/job for God then either :-)

    எனிவே, அறிவை என்னதான் பெருக்கினாலும், 1,2,3,4 இடங்கள் உருவாகுவதைத் தவிர்க்க முடியாது. அதனால்தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது. :)

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.

      இவ்விடுகை பொதுவாக நாம் பெறும் அறிவின் வாசல்கள் இன்னவாறு என்பதை விளக்குவதற்காகத்தான் எழுதினேன். இவற்றின் வாயிலாகவெல்லாம் நாம் அறிவு பெறுகிறோம் என்பதைச் சொல்லுவது என் நோக்கமே அன்றி
      அது
      அறிவை அடைதலின் வகையில் ஆட்களை வகைப்படுத்துவதல்ல.

      முனைவர் ஜம்புலிங்கம் அய்யா சொல்லி இருப்பது போல இது சமயிகளால் பெரிதும் எடுத்துக் காட்டப் படுவது என்றாலும் இது சார்ந்த சில விடயங்கள்சங்க இலக்கியங்களை விளக்கும் அடுத்த பதிவிற்குத் தேவைப்பட்டன. அதனால் தான் இதை இங்குச் சொல்லிப் போனேன்.
      சமணம் பௌத்தம் தொடர்பான சில கருத்துகளைச் சொல்லவும் நான் விரும்புகிறேன். அதற்கும் ஒரு அறிமுகமாக இது இருக்கட்டும் என நினைத்தேன்.
      மற்றபடி,
      தாங்கள் கூறியுள்ள கருத்தோடு உடன்படுகிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  17. வணக்கம்
    ஐயா

    அறியாத விடயங்களை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.. விரிவான விளக்கம் தொடருங்கள் படிக்க காத்திருக்கோம் பகிர்வுக்கு நன்றி த.ம15


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் அளிக்கும் தொடர் ஊக்கத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி திரு.ரூபன்.

      Delete
  18. நீங்கள் கொடுத்திருக்கும் எடுத்துக்காட்டுகள் அறிவின் ஆறு அளவைகளை எளிதாகப் புரிந்து கொள்ள உதவியது. மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!
      இம் மூன்றில் பிறவும் அடங்குமென்றாலும் இவ்வாறு அன்றி இன்னும் நான்கும் சொல்லப்படுகின்றன.
      முனைவர் ஜம்புலிங்கம் அய்யாவின் பின்னூட்டத்திற்கான பதிலில் கூறியிருக்கிறேன்.
      தங்களின் தொடர் வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  19. ஆசானே! அடேங்கப்பா! அறிவைப் பெறும் வாயில்கள் இப்போது சொல்லப்படுவதை விட வித்தியாசமாக இருந்தாலும் சரிதானே என்று சொல்ல வைக்கின்றது. வடமொழி வார்த்தைகளும் கொடுத்து....சத்தியப்பிரமாணம் ??என்று சொல்லுவது..இங்கு பிரமாணம் என்பது?

    ஆசானே இதுவரை அறிந்திராத ஒன்றை இங்குத் தந்தனைமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே..........!

      இவை நம் மரபில் தத்துவங்கள் எனப்படுகின்றன ஆசானே.

      நாத்திகம் எனப்படும் உலோகாயுதமும், பௌத்தமும் சமணமும் வைதிக சமயங்களும் இவை பற்றி இன்னும் விரிவாகப் பேசுகின்றன.
      சமயங்களைப் பற்றிய இடுகைகளை எழுதலாமா என்ற தயக்கம் எனக்கிருக்கிருக்கிறது.

      ஆனால் அவை நம் மொழியோடு தொடர்புற்றே இருப்பவை.

      சமயிகளின் கருத்தின் அடிப்படை தெரியாமல் நம்மால் திருக்குறளை முழுமையாகப் பார்க்க முடியாது.

      தமிழில், காப்பியங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த இலக்கண இலக்கிய நூல்களை உணர்ந்து படிக்க அக்காலச் சமயக் கொள்கைகளைப் பற்றிய அடிப்படை அறிவு தேவையாய் இருக்கிறது.

      உ.வே. சாமிநாதையர் அவர்கள் சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கும் போது சமணம் பற்றி அறியாமல் அவர் அடைந்த இன்னல்கள் குறித்து அவரது சரித்திரம் கூறும்.

      சத்தியப்பிரமாணம்.....

      அதுவும் சத்தியத்தை அளத்தல்தானே:))

      நன்றி ஆசானே.

      Delete
  20. வடமொழிச் சொற்களின் விளக்கத்தைப் பகிர்ந்தது உபயோகமாக இருக்கும், பழைய உரைகளைப் படித்துக் குழம்பத் தேவையில்லை. நன்றி அண்ணா.
    தெளிவாச் சொல்லிக் குடுக்கிறீங்களே..உங்க மாணவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ !!

      என் மாணவர்களிடம் இது பற்றிப் பேச முடியுமா என்ன :))

      Delete
    2. இது போலத்தானே அனைத்துப் பாடங்களையும் தெளிவாகக் கற்றுக்கொடுப்பீர்கள் :)

      Delete
  21. துவரையிலும் நான் அறிந்திராத விசயம். வழக்கம் போலவே, உங்கள் பதிவுகளின் மூலம் என் அறிவு கொஞ்சம் விருத்தியாகிறது ! ( கொஞ்சம் என்றதற்கு காரணம், என் புத்தி கற்பூரத்தின் தரம் அப்படி !!! )

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புத்தியை நான் அறிவேனே அண்ணா..!
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  22. இலக்கண உரையாசிரியர்களின் சமயப் பற்றும் இந்த ஆட்சியைத் தம் உரைகளில் கலக்கக் காரணமாய் இருக்கலாம்.இது தான் இந்த வடமொழி கலப்பிற்குனும் காரணமாய் இருக்கும் என்று எம் கருத்து,
    தங்கள் விளக்கம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோ,
      பதிவுகளில் ஏதேனும் தவறிருப்பின் மாற்றுக் கருத்திருப்பின் தயங்காது சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
      தங்களைப் போன்றோர் விவாதிக்க வரவேண்டும்.

      நன்றி.

      Delete
  23. நல்ல பதிவு! இப்படிப்பட்ட பதிவுகளை உங்களிடம்தான் படிக்க முடியும் என்பது உங்கள் தனிச்சிறப்பு! நன்றி ஐயா!

    ReplyDelete