Saturday 3 January 2015

யாப்புச் சூக்குமம் IV [ விருத்தத் தூண்டில். ]


வலைத்தளம் கொலைக்களமாக மாறும் முன் இந்தத் தொடர்பதிவை முடித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. கம்பன் சொல்லுவானே,

''ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன்'' 

என. அப்படி நானும் ஆசை பற்றி அறையலுற்ற இந்த யாப்புச்சூக்குமத்தின் சாவியை உங்கள் கையில் கொடுத்துவிட்டு, முற்றும் போட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.

( என்ன மணவை ஜேம்ஸ் அய்யா………………….சந்தம் வண்ணம் எல்லாம் வேணுமா? )

மரபுக் கவிதைகளுக்கும் புதுக்கவிதைகளுக்கும் உள்ள வித்தியாசம் இந்த ஓசைதான். தமிழின் இந்த ஓசை லயம் மரபுக் கவிதைகளை மனப்பாடம் செய்வித்தது. அரங்குகளின் கடகட எனப் படிக்கப்படும் போது கைதட்டல் பெற்றுத் தரக் காரணமானது.

இதுவரை இந்த யாப்புச்சூக்குமத்தில் திறந்த கதவுகளைக் கண்டிருந்த நீங்கள் இனி கண்படும் எந்தக் கதவையும் திறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலில் சில பாடல்கள்….., இவற்றை எல்லாம் விருத்தத்திலிருந்துதான் கொடுக்கப் போகிறேன்.

ஏற்கனவே கொடுத்துள்ள விருத்தத்தின் எலும்புக்கூட்டில் அறுசீர் விருத்தம் ஒன்றைக் குறித்து விவாதித்திருந்தோம். பார்க்காவிட்டால் அதைப்பார்த்துவிட்டு வந்து விடுங்கள்.

இதற்கு முன்புள்ள பின்வரும் இடுகைகளைப் பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு வருவது, புரிதலுக்கு உகந்ததாயிருக்கும்.






இதோ இங்கு மேலும் சில விருத்தப்பாடல்கள்…

அச்சத் தளையில் அடிமையென
    அறிவைத் தொலைத்துக் கால்புழுதி
மெச்சிக் கிடக்கும் மிதியடியோ?
    மேன்மை யுறவே மனமிலையோ?
எச்சில் கலனோ உனிலுமிழ்ந்தார்!
    எழுவாய் என்றன் தோழமையே!
பிச்சை ஏற்ற பழங்கதைகள்
     புதுக்கப் படைப்பாய் சரித்திரமே !

இதிலும் எத்தனை எதுகை என்று பாருங்கள். நான்கு எதுகை. எனவே இந்த விருத்தம் மடக்கி எழுதப்பட்ட இரண்டு அரையடிகளை உடைய நான்கு அடிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அடிக்கும் உள்ள சொற்களைக் கணக்கிட்டுப் பாருங்கள். ஆறு சொற்கள். அப்பொழுது இது அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

அடுத்து இதைப்பாருங்கள்..

வானத்துப் பறவையென வசந்தத்தில் வாழ்வினையே
           வடித்த நாளும்
கானத்தின் இனிமையிலே கண்மூடிக் களிப்போடு
           கழித்த நாளும்
ஞானத்தின் நெறிதேடி ‘நான்யாரோ‘ ஞாலத்தில்?
           நவின்ற நாளும்
ஊனத்துப் போயினவே என்னுயிரே உனையெண்ணி
           உருகும் இன்னாள்  “



இங்கும் ஆறு சீர்கள்தான். இதுவும் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்தான்.

ஆனால் இரண்டையும் சத்தமாய்ப் படித்துப் பாருங்கள். ஓசை வேறுபடுவது தெரிகிறது அல்லவா..?

இதற்கான காரணத்தைத்தான் பார்க்கப் போகிறோம். அதில் தான் இருக்கிறது எந்த விருத்தத்தையும் திறப்பதற்கான சாவி.!

மரபில் ஒரு பாடலின் ஓசை உங்களது மனதைக் கவர்கிறது என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அதை அறுத்துப் பார்த்துவிடுவதுதான்.

ஆம்! அறுத்துப் பார்த்தல்.

யாப்புச்சூக்குமத்தில் சொன்னதுபோல 1 2   ஆகவோ, அல்லது உங்களுக்குத் தெரிந்த தேமா புளிமா ஆகவோ… அதனை அறுத்துப் பார்க்க வேண்டும்.

அப்படிச் செய்யும் போது அந்தப் பாடலின் அமைப்பு உங்களுக்குப் புலப்படும்.

அதன் ஒரு அடியில் வரும் சீர்களின் அமைப்பைக் கண்டால் போதும்.
விருத்தத்தைப் பொருத்தவரை அந்த அமைப்பிலேயே மற்ற அடிகளும் அமையும்.

இப்போது இந்த இரண்டு பாட்டையும் அறுத்துப் பார்ப்போம்.

அச்சத்  தளையில்  அடிமையென

( 1  1 )  ( 2  1)     ( 2  2  1)


      அறிவைத் தொலைத்துக் கால்புழுதி

       ( 2   1 )  ( 2       1)    ( 1 2 1 )

மெச்சிக் கிடக்கும் மிதியடியோ?

( 1  1 )  ( 2   1)   ( 2  2  1)

     மேன்மை  யுறவே  மனமிலையோ?

      ( 1  1 )     (2  1 )  (  2  2  1)

எச்சில் கலனோ உனிலுமிழ்ந்தார்!

(1   1)  ( 2  1)   (  2    2    1 )

     எழுவாய் என்றன் தோழமையே!

     (  2  1 )   ( 1  1)  ( 1  2   1)

பிச்சை  ஏற்ற  பழங்கதைகள்

(1   1)   (1 1)   (2     2   1)

      புதுக்கும் உண்மை நீஎழுது!

      ( 2  1 )  ( 1   1  )  ( 1 2 1)

முதலில் இந்த வடிவத்தின் பொதுமை  என்ன என்று பார்க்க  வேண்டும்.

இதன் அரையடியாக மடக்கி எழுதப்பட்ட மூன்று மூன்று சீர்களும் ( எ. கா. அச்சத் தளையில் அடிமையென………அறிவைத் தொலைத்துக் கால்புழுதி )ஏறக்குறைய ஒரே தன்மையில் உள்ளன.

முதல் சீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  ( அச் – சத் )… ( 1   1 )…..
தே மா.

இரண்டாம் சீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ( தளை – யில்)….(2  1)… 
புளி மா.

மூன்றாம் சீர் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ( அடி-மையெ-ன) (2 2 1)  கருவிளங்காய்.

இதைப்போலவே நான்காம் ஐந்தாம் சீர்கள் இரண்டாகவும், ஆறாம் சீர் மூன்றாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது இதன் பொதுவடிவம் இப்படி இருப்பதாகக் கொள்ள முடியும்.


( *  1  ) ( * 1) ( * * 1) ( *  1  ) ( * 1) ( * * 1)

* குறியிட்ட இடத்தில் ஒரு எழுத்தோ இரண்டு எழுத்தோ வரலாம்.
இதையே மரபிலக்கண வாய்பாட்டில் சொல்ல வேண்டும் என்றால்,
(…மா,  ….மா, ………… காய்..) என்று சொல்வார்கள்,

அதாவது மா என்னும் இடத்தில், தேமாவோ புளிமாவோ வரலாம்.
காய் என்னும் இடத்தில் காயில் முடியும் சீர்கள் வரவேண்டும்.

நீங்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது.

முதல் இரண்டு சொற்கள் ஈரசை ( இரண்டாகப் 

பிரிக்கப்படும்) அவை ஒன்றில் முடிய 

வேண்டும்.

மூன்றாவதாக வரும்சொல் மூவசை அதுவும்

ஒன்றில் முடிய வேண்டும்.


இப்பொழுது, எழுதலாமா,


அன்னை தமிழே ஆருயிரே
        அமிழ்தே உன்னை  நான்மறவேன்!
--------------------------------------------------
        ---------------------------------------------------
--------------------------------------------------
        ---------------------------------------------------
--------------------------------------------------
        ---------------------------------------------------.


விரும்புகிறவர்கள் முயற்சி செய்து முடிக்கலாம். முதல் இரண்டு சீர்கள் இரு அசை. மூன்றாம் சீர் மூன்றசை. எல்லா சீரும் இறுதியில் 1 இல் முடியவேண்டும்.

முயற்சி செய்து பாருங்கள். முந்தைய பதிவில் சொன்னது போலத்தான்  இங்கும் முதலாம் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை இருக்க வேண்டும்.
இப்பொழுது அடுத்த விருத்தம்…

வானத்துப் பறவையென வசந்தத்தில் வாழ்வினையே
           வடித்த நாளும்
கானத்தின் இனிமையிலே கண்மூடிக் களிப்போடு
           கழித்த நாளும்
ஞானத்தின் நெறிதேடி ‘நான்யாரோ“ ஞாலத்தில்
           நவின்ற நாளும்
ஊனத்துப் போயினவே என்னுயிரே உனையெண்ணி
           உருகும் இன்னாள்  “

இந்த வகை விருத்தத்தின் பொது அமைப்பைப் பாருங்கள்.

முதல் நான்கு சீர்களும் மூன்றாகப்பிரிக்கக் கூடிய மூவசைச் சீர்கள்.
அடுத்த இரண்டும் இரண்டாகப் பிரிக்கக் கூடிய ஈரசைச் சீர்கள்.
மூவசைச்சீர்கள் நான்கும் 1 இல் முடிகின்றன. 
இரண்டசை்சீர்கள் ஐந்தாம் சீரிலும் ஆறாம் சீரிலும் வருகின்றன.

வா-னத்-துப் பற-வையெ-ன வசந்-தத்-தில் வாழ்-வினை-யே

( 1  1  1)    (  2  2  1)    ( 2  1  1 )    ( 1     2    1) 
           
           வடித்-த    நா-ளும்

           ( 2   1)     ( 1  1)

சரி இதன் பொதுவடிவத்தை ஆராய்ந்தீர்கள் என்றால்,

(* * 1)   (* * 1)   (* * 1)   (* * 1)

       ( * 1)   ( 1 1 )


என்ற அமைப்பைக் காண முடியும். மரபு வாய்பாட்டில் சொல்ல வேண்டுமானால்,

.....காய்- .......காய்- .....காய்- ....காய்- ..மா- தேமா

இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.

இது ஆறுசீர்தானே? ஏன் மூன்று மூன்றாக மடக்கி எழுதாமல்

நான்கு இரண்டாக மடக்கி எழுதுகிறோம்?

முதல்காரணம். இந்த விருத்தத்தில் முதல்நான்குசீர்கள் மூவசையாகவும்   அடுத்த இரண்டு சீர்கள் இரண்டு அசையாக ஓசை வேறுபட்டு இருப்பதாலும் அப்படி அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த காரணம், இந்த வகை விருத்தத்தில் ஓசை மாறும் இடமான, ஐந்தாம் சீரில்  மோனை அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்காக இப்படிக் காட்டுகிறோம்.

என்ன எழுதிப்பார்க்க வேண்டுமா?

இதோ,

“ அன்னையவள் ஈன்றிடுவாள் அகமகிழ்வாள் புறவுலக
            அறிவை நல்க

---------------     ----------------     -------------------     --------------------
             -----------      ------------
---------------     ----------------     -------------------     --------------------
             -----------      ------------

---------------     ----------------     -------------------     --------------------
             -----------      ------------


முடித்துவிட்டீர்களா!!!!!! அப்படியே பின்னூட்டத்திலும் அறியத்தாருங்கள்.

சரி இனி நேராகச் சில வகை விருத்தங்களைப் பார்த்துவிடுவோம்.
நீங்கள் அறுத்துப் பார்த்து பொதுமையைக் கண்டறியுங்கள் பார்க்கலாம்.
பாடலின் சீர்களின் எண்ணிக்கையை மட்டும் கொண்டு அதன் வகையை மட்டுமே இனிக் காட்டிச் செல்லப் போகிறேன்.

“வெள்ளியோ வானம் தன்னையே பார்க்க
      விரும்புகண் ணாடியோ நீதான்
அள்ளியே வானக் கூந்தலில் சூட
       அலர்ந்தவெண் தாமரை யோநீ?
துள்ளியே வானில் திரியுவிண் மீன்கள்
       துணையெனும் மேய்ப்பனும் நீயோ?
உள்ளிலே கோடி விடையிலாக் கேள்வி
       உறுபதில் சொல்லிட வாராய்!!!“

ஏழு சீர்கள் ஓரடியில் இருப்பதால் இது எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

இதை அறுத்துப் பாருங்கள்.

அடுத்து..,


மாடுகளாம் ஐம்புலன்கள் மாட்டிச் செய்த
       மானுடத்தேர் நகர்ச்சியிலே மாடாம் ஐந்தும்
ஓடுதிசை ஒவ்வொன்றாய் ஓட்டை வண்டி
       ஓலமிட்டுக் கோலங்கெட்டே ஓய்ந்து வீழும்
ஆடுமிதை ஆறறிவால் அடக்கா விட்டால்
    ஆறறிவை யாரறிவார்? அடிமை செய்யக்
கூடுமிதைக் குலவுகின்ற குரங்கு, கொள்ளிக்
    கொண்டுதலை சொறிகிறதே நான்என் செய்வேன்?

இதையும் கூறிட்டுப்பாருங்கள் எண்சீர் விருத்தத்தில் மிகப்பழக்கமுள்ள வடிவம் இது.

(* * 1)    (* * 1)   ( * 1)     ( 1 1 )

இது அரை அடிக்கான பொது வடிவம்.

மரபு அறிந்தவர்கள், “ ……..காய் - ……….காய் - …மா  - தேமா “ என்பார்கள்.

சரிசரி இதற்குமேல் உங்களைச் சோதிக்க விரும்பவில்லை.

இப்பொழுது இதே எண்சீரில் இன்னொரு வடிவம்,

(* * 1)   (* * 1)   (* * 1) ( 1 1 )

அதாவது  அரையடிக்கு வரும் நான்கு சீர்களில் முதல் மூன்று சீர்கள் 1 இல் முடியும் மூவசைச் சீர்கள்.

அரையடியின் இறுதிச்சீர் அதாவது நான்காவது சீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அசையிலும் ( பகுப்பிலும் ) 1  எழுத்து வரும் வண்ணம் அமையும் சீர்.  ( 1 1 )
கீழே காட்டப்பட்ட பாடலில் இன்பாம் எனும்  சொல்லையும் என்பேன் எனும் சொல்லையும் பாருங்கள் . இது (1  1) என்பதில் முடியும். ( தேமா )

மரபில் இதனை காய் காய் காய் தேமா என்பார்கள்.

“அன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்
        அடுத்ததொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன்
----------------     ---------------   -----------------      ---------
     ----------------     ---------------   -----------------      ---------
----------------     ---------------   -----------------      ---------
     ----------------     ---------------   -----------------      ---------
----------------     ---------------   -----------------      ---------
     ----------------     ---------------   -----------------      ---------

போதும் போதும் என்கிறீர்களா..?

பட்டது போதும் ஆளைவிடு என்கிற குரலும் கேட்கிறது.
மரபுக் கவிதைகளில் ஒரு பாடலின் சந்தம் உங்களைக் கவருகிறது என்றால் அதனை இப்படிப் பிரித்துப் பார்த்துவிட்டீர்கள் என்றால் அதன் வடிவம் உங்களுக்குப்  புலப்பட்டுவிடும். பின்பு அந்த வடிவத்திற்கு நீங்கள் உயிர் கொடுக்கலாம்.

நான் இங்குத் தொட்டுக்காட்டியது ஒரு சிறுதுளிதான்.
சுவையாக இருந்தால் இன்னும் பருகலாம்.

உங்கள் பின்னூட்டப் பாடல்களுக்காகக் காத்திருக்கிறேன்.

எழுத்துக்காட்டுப்பாடல்கள் அடியேனின் சொந்த சரக்கே!
குற்றம் குறையிருந்தால் அதைத் திருத்தி நீங்கள் நன்றாக எழுதுங்கள்.

படஉதவி - www.thecorrectness.com
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

66 comments:

  1. தாங்கள் செய்திருப்பது மாபெரும் தமிழ்ச் சேவை ...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ச்சேவையோ என்னமோ தோழர்,..
      நம்மிடத்துள்ளதை ஆகச்சுலபமாக்கிக் கொடுப்பதுதானே நம் தொழில்!
      அதைச் செய்கிறோம் அவ்வளவே!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  2. தங்களின் பதிவு தாமதமானதின் காரணம் புரிந்து விட்டது கவிஞரே.....
    படித்ததும் கருத்துரை இடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தாமத்தின் காரணம் தெரிந்ததோ?
      ஹ ஹ ஹா
      சற்றுப் பணிச்சுமைதான் நண்பரே!
      தங்களின் முதல் வருகைப் பதிவும் இரண்டாம் கருத்திடும் வருகையும்
      எப்பொழுதும் போல உவப்பாகவே உள்ளது.
      நன்றி

      Delete
  3. ஆஹா ஆஹா அருமையாகவே தொடர்கிறது என் தமிழ் பயணம் ரயில் பயணம் போல் ம்..ம்..ம். சரி மீண்டும் வருகிறேன்.நன்றி குருவே தங்கள் அரும்பணிக்கு.
    வாழ்க வளமுடன் ....!

    ReplyDelete
    Replies
    1. குருவா ..................?!!!
      யார் அது !!!!!
      ஓஒ குரு உச்சத்தில் இல்லையே!
      சனிப்பார்வையல்லவா இப்போது நடக்கிறது!!!!
      ஹ ஹ ஹா
      வாழ்த்திற்கு நன்றிம்மா!

      Delete
  4. கவிஞரே பிரமாண்டமான பதிவு எனக்கும் புரிய ஆரம்பித்து விட்டது நன்றி
    தமிழ் மணம் 1 எனது புதிய பதிவு எ.எ.எ.

    ReplyDelete
    Replies
    1. புரிதல்தான் நண்பரே இப்பதிவின் இலக்கு.
      இதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறென்ன?!
      தங்களின் மறு வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!!!

      Delete
  5. வணக்கம் சகோதரர்
    தங்களின் தமிழ்ப்பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தொலைதூரக் கல்வியில் என்னவென்றே தெரியாமல் படித்து தேர்ச்சி பெற்ற என்னைப் போன்றோர்க்கு தங்களின் நான்கு பதிவுகளும் பொக்கிசம். புகழ்ச்சியில்லை உண்மை. என்னை மெருகேற்றிக் கொள்ள தங்களின் படைப்புகள் உதவி செய்கின்றன என்பதைத் தயங்காமல் தெரிவிக்கிறேன். தொடர்க பணி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!
      தொலைதூரக்கல்வியில் படித்தால் என்ன தங்களின் தமிழறிவை நான் அறிவேன்.
      நிச்சயம் நீங்கள் எல்லாம் மரபில் வந்தால் அதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறென்ன..?

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!!

      Delete
  6. வணக்கம்!

    விருத்த விருந்தளித்தீர்! வெல்லுதமிழ் கற்கப்
    பொருத்தக் கவியளித்தீர்! பூத்து - விரிந்தாடும்
    வண்ண மலர்போன்றே எண்ணம் மணக்கிறது!
    விண்ணின் அளவாய் விளைந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. விண்ணில் விளங்குமதி வீற்றிருக்கும் ஓர்புறம்‘உம்
      பண்ணில் படுகதிரும் பாய்ந்தெழும்பும்! - நண்ணிதமிழ்
      நாவாடும்! ஆட நலங்கூடும்!! நாவலர்‘உம்
      பாதேடிக் கொண்டார் பலம்!!!“

      தங்களது வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா!

      என் பணி முகங்காட்டா வெறும் பதிவுகளில் மட்டுமே!

      உங்கள் பணியோ, மரபின் முட்டறுத்து இளமதியார் போன்ற ஆகச் சிறந்த மரபாளுமைகளை உருவாக்கிய.... இன்னும் பலரை உருவாக்கும் பணி...!
      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  7. எதைக் காரணத்தையும் கொண்டும் தொடரை விரைவில் முடித்து விடாதீர்கள் எனது எனது கோரிக்கை... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. டி டி சார் உங்களின் கோரிக்கையை நிச்சயம் மனம் கொள்கிறேன்.
      மீனைக் கொடுப்பதை விடத் தூண்டிலைக் கொடுப்பது நல்லதல்லவா..?!!
      எனவே தான் இப்பதிவில் அதை நிறைவு செய்திட நினைந்தேன்.
      இது கடல்.
      உள்ளே நுழைந்து பார்க்கத் தூண்டும் சிறு தோரண வாயில் மட்டுமே என் பதிவுகள்.
      தங்களின் தொடர்வருகைக்கும் என் மேல் கொண்ட அன்பிற்கும் என்றும் நன்றியுண்டு.

      Delete
  8. தங்களின் தமிழ்ச் சேவை பாராட்டிற்கு உரியது நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களது பாராட்டிற்கு நன்றி அய்யா

      Delete
  9. அன்னை தமிழே ஆருயிரே
    அமிழ்தே உன்னை நான்மறவேன்
    என்னை மறந்தே எழுதிடுவேன்
    என்றும் உன்றன் உயிர்காப்பேன்
    பொன்னே உன்னை புகழ்ந்திடுவேன்
    பூவாய் எண்ணி மலர்ந்திடுவேன்
    இன்னும் உன்னை கற்றிடுவேன்
    இனிதாய் மேலும் இயற்றிடுவேன்


    அன்னையோ ஈன்றிடுவாள் அகமகிழ்வாள் புறவுலக
    அறிவை நல்க!
    கண்ணையோ இழந்திடுவாள் காத்திடுவாள் மகவாக
    பின்னே செல்க!
    பொன்னையோ வெறுத்திடுவாள் எண்ணிடுவாள் பூவாக
    நின்று சூழ்க !
    பண்ணையோ பாராளே பாடுவளே பணிவாக
    வாழ்க வெல்க !

    அப்பாடா ஒரு மாதிரி முடித்து விட்டேன் மிகுதியையும் முயற்சி செய்கிறேன் குருவே இதில் தேர்வு பெற்றால். ஹா ஹா குருவே பார்த்து சொல்லுங்கள் தெரிவிட்டேனா என்று ok வா .... தங்கள் பொறுமைக்கும் நேரத்திற்கும் தலை வணங்குகிறேன். எல்லாப் புகழும் பெற்று பெருமையடைய வாழ்த்துகிறேன். மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. விருந்தாய் படைத்தீர் வலையில் விருத்தம்
      மருந்தெனவே உண்டு களித்தோம் விரும்பி
      பருகவே எண்ணம் பொறுமை பெறவே
      வருத்தம் மிகாது தொடர்!

      நன்றி! நன்றி !நன்றி! குருவே வேறு என்ன சொல்ல முடியும். இதையே பெரிதாய் ஏற்றுக் கொள்ளுங்கள். ஹா ஹா ...

      Delete
    2. அன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்
      அடுத்ததொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன்
      கன்னிமொழி கற்பதனால் கொண்டாட்டம் எங்கும்
      கொழுந்துவிட்டு எரிகிறது குலைத்துவிட எண்ணம்
      என்தமிழை உலகமெலாம் பரப்பிடவே ஏங்கும்
      உள்ளங்கள் அத்தனையும் உயர்ந்திடவே மகிழும்
      பின்னையொரு பிறவியிலும் பிறந்திட்ட போதும்
      வல்லதமிழ் கற்றிடவே ஆசைகளும் தோன்றும்

      சரியோ பிழையோ அப்பாடா ஒரு மாதிரி முடித்து விட்டேன் அம்மாடியோ குருவே சரணம் .....ஏன் குரு எஸ்கேப் பண்ணப் பாக்கிறீர்கள் அவ்வளோ இம்சையா ......தருகிறோம் ஹா ஹா ....ஆமா எப்போ திருத்தப் போகிறீர்கள். ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன் எத்தனை பிழைகளோ . கடவுளே காப்பாத்து.

      Delete
    3. அன்னை தமிழே ஆருயிரே
      அமிழ்தே உன்னை நான்மறவேன்
      என்னை மறந்தே எழுதிடுவேன்
      என்றும் உன்றன் உயிர்காப்பேன்
      பொன்னே உன்னை புகழ்ந்திடுவேன்
      பூவாய் எண்ணி மலர்ந்திடுவேன்
      இன்னும் உன்னை கற்றிடுவேன்
      இனிதாய் மேலும் இயற்றிடுவேன்


      அன்னையோ ஈன்றிடுவாள் அகமகிழ்வாள் புறவுலக
      அறிவை நல்க!
      கண்ணையோ இழந்திடுவாள் காத்திடுவாள் மகவாக
      பின்னே செல்க!
      பொன்னையோ வெறுத்திடுவாள் எண்ணிடுவாள் பூவாக
      நின்று சூழ்க !
      பண்ணையோ பாராளே பாடுவளே பணிவாக
      வாழ்க வெல்க !

      இரண்டிலும் நூற்றிற்கு நூறு.

      அன்னையோ என்பது 1 2 கூவிளமாக வந்துவிட்டது இதை இளமதியார் சுட்டினார்கள். எனவே அன்னையவள் என்று திருத்திவிட்டேன்.
      ஆகவே என் வினாவில் தவறு தவிர உங்கள் விடைகள் எல்லாம் சரியே..!
      அருமை
      அடுத்ததற்கு வருகிறேன்.

      Delete
    4. //அன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்
      அடுத்ததொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன்
      கன்னிமொழி கற்பதனால் கொண்டாட்டம் எங்கும்
      கொழுந்துவிட்டு எரிகிறது குலைத்துவிட எண்ணம்
      என்தமிழை உலகமெலாம் பரப்பிடவே ஏங்கும்
      உள்ளங்கள் அத்தனையும் உயர்ந்திடவே மகிழும்
      பின்னையொரு பிறவியிலும் பிறந்திட்ட போதும்
      வல்லதமிழ் கற்றிடவே ஆசைகளும் தோன்றும் ///

      இங்கு மகிழும் என்று வரும் இடத்தை மட்டும் பாருங்கள் அம்மா.
      இது மகி - ழும் என்று பிரிக்கப்பட்டு, ( 2 1 ) அல்லது புளிமா என்று ஆகும்.
      வாய்பாடு படி, இங்கு (1 1 ) அல்லது தேமா என்பதுதான் வரவேண்டும்.
      நீங்கள் எழுதிய பாடலிலும் இந்த இடம்தவிர மற்ற இடங்களில் எல்லாம் இப்படித்தான் வந்துள்ளது . இந்த இடத்தையும் மாற்றிவிட்டால் சரியாகிவிடும்.
      வாருங்கள் மீண்டும்.
      நன்றி

      Delete
    5. உள்ளங்கள் அத்தனையும் உயர்ந்திடவே (மகிழவே) வேண்டும் அடடா கவனிக்காமல் விட்டு விட்டேன். ம்..ம்..ம்.

      \\\\அன்னையோ /////இந்த சந்தேகம் எனக்கும் வந்தது ஐ இடையில் வரும் போது குறில் தானே என்ன செய்வது ஏன் எப்படி வருகிறது என்று தான் யோசித்தேன் பின்னர் ஒரு வேளை இந்த இடத்தில் நெடிலாகத் தான் வருமாக இருக்கலாம் விதி விலக்காக இருக்கலாம் என்றே எண்ணினேன் ஆகையினால் தான் அதே சவுண்ட் வரும் படியாகவே அனைத்தையும் இட்டேன் வேறு சொற்களை எப்படி அமைப்பது என்று குழம்பியே இதை செய்தேன். இதை பற்றிய விளக்கத்தை கேட்கவும் இருந்தேன். மிக்க நன்றி கேட்காமலே விளக்கம் கிடைத்தது விட்டது. ஹா ஹா ....எப்படி நன்றி சொல்வது தங்கள் அளப்பரிய செயலுக்கு தலை வணங்குகிறேன் குருவே !எல்லாச் சிறப்புகளும் பெற்று நீடூழி வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகிறேன் ...!

      Delete
  10. வணக்கம் ஐயா!

    யாப்பினது சூக்குமம் ஈர்க்க! முயன்றுநான்
    தோப்புக் கரணமிட்டேன் தோற்று!

    அட டா!.. அருமை! என்ன சொல்ல! என்ன எழுத?...!
    வாழ்த்துக்கள் ஐயா! தொடருங்கள் உங்கள் பணியை!..
    வருகிறேன்!..:)

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் என் வணக்கம் ஐயா!

      அன்னையவள் ஈன்றிடுவாள் அகமகிழ்வாள் புறவுலக
           அறிவை நல்க!
      என்றனுயிர்த் தந்தையுமே எண்ணுவரே உயர்ந்தோனாய்
           என்னைக் ஆக்க!
      இன்னலென நினைப்பேனா என்னுறவு என்பவரை
           இணைந்து காக்க!
      பொன்னெனவே இவ்வாழ்வும் புலர்ந்திடுமே! வருங்காலம்
           பூக்கும் நன்றே!

      எனது முயற்சியாக அறுசீர் விருத்தமொன்றை இங்கு தந்துள்ளேன்!
      சரியா தவறா கூறுங்கள்!!!

      ஐயா!.. தங்களின் பணியை எப்படிக் கூறுவதெனத் தெரியவில்லை!..

      தமிழ்மொழி வாழத் தங்களின் கடின முயற்சியும் அதற்கான உழைப்பாயுமே இதனைக் காண்கின்றேன்!
      ஒவ்வொரு விருத்தத்தையும் எழுதி அதன் வாழ்பாட்டினையும் கூறி, எல்லோருக்கும் புரிதற் பொருட்டு இலகுவாக அதைப் பிரித்துக் காட்டி... மிகச்சிறப்பான உங்கள் பணியைப் பதிவாகக் காண்கின்றேன்!

      மிக அருமை ஐயா!..

      அடுத்தடுத்த விருத்தங்களையும் எழுத்திப்பார்க்க ஆவல்..
      தொடர்ந்து எழுதுவேன்!..

      ஐயா!.. ஏன் இதோடு இந்த யாப்புப் பயிற்றுவித்தல் முடிவு பெற வேண்டும்?..
      இல்லவே இல்லை ஐயா!.. அப்படிச் செய்யாதீர்கள்!.. தொடருங்கள்!..
      தமிழுலகிற்குத் தங்கள் சேவை மிகவும் அவசியம்!
      வேண்டி விரும்பிக் கேட்கின்றேன்!..
      எத்தனை பேர் பயிலுகின்றனர் பாருங்கள்! முடிவு என்பதெல்லாம் வேண்டாம்! தொடரட்டும் தங்கள் பணி!

      மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

      Delete
    2. தோப்பில் கரணமிட்டுத் தோற்ற“கவி“ யானவன்நான்
      யாப்பில் அடிபட்டேன் யாருமினிப் - பாப்புனைய
      இந்தச் சிரமங்கள் ஏன்படவோ என்றெண்ணி
      வந்தவனும் சொன்னேன் வழி!!!

      மரபறிந்து நீங்கள் தோப்புக் கரணமிட்டால் நான் எல்லாம் என்ன ஆக சகோ?
      ஹ ஹ ஹா

      பின்னூட்டம் என்ற பெயரில் என்னையும் வெண்பா எழுத வைத்துவிடுகிறீர்கள்
      நன்றி!

      Delete
  11. வணக்கம்
    ஐயா.
    அள்ளி இரைத்து வீசீனிர் அன்னம் போல்
    அள்ளி பருகினேன் அமுதத்தின் சுவையை
    சுவை ததும்ப இன்பமாய் சொன்னீர்கள்
    சுவைத்து சுவைத்து படித்தேன்
    மனதில் சுமையது இறங்கியது
    மன்னில் விதைத்த விதை முளை
    பசுமையாய் வளர்வது போல
    தினமும் ஓதி வளர்கிறேன் இன்பத் தமிழை...

    ஐயா சிறப்பான விளக்கம்... எக்காரனம் கொண்டும் இடை நிறுத்த வேண்டாம் தொடருங்கள் எப்போதும் எங்களை ஒரு கனம் மனதில் நினையுங்கள்... த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ரூபன்,
      இடை நிறுத்தம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.
      விளங்கிக் கொள்ளும் வழியைச் சொல்லிக் கொடுத்தபின்,
      இன்னும் வள வள கொழ கொழ என்று எதற்கு நீட்டுவானேன் என்றுதான்..!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்

      Delete
  12. என்னது வலைத்தளம் கொலைக்களமாக மாறுகிறதா...?ஃஃ எனக்கு புரியவில்லையே..........

    ReplyDelete
    Replies
    1. எதுகைக்காகச் சொன்னாலும் விட மாட்டீர்களே வலிப் போக்கரே...!
      ஆம் எவ்வளவு நாளைக்குத்தான் ஒன்று மில்லாததை இருப்பது போல் காட்டிக் கொண்டிருப்பது..!
      தேடி அடிக்க வர மாட்டார்கள்..!!
      அதுதான்!
      நன்றி அய்யா!

      Delete
  13. படிக்கையில் எளிமையாய் தெரிகிறது ,செந்தமிழும் நாப் பழக்கம் என்பதால் எழுத எழுதத்தான் வரும் போலிருக்கு :)
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் எவ்வளவு முயன்றாலும் உங்களைப் போல நகைச்சுவை எழுத முடியவில்லையே பகவானே.....!
      தயையும் நட்பும் கொடையும் பிறவிக் குணம் என்பது போல அதனுடன் நகைச்சுவையையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ?
      வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி ஜி.

      Delete
  14. வணக்கம் சகோதரா !

    அன்னைமொழி என்தமிழே ஆனதனால் இன்பம்
    அடுத்தொரு பிறவியிலும் அமையட்டும் என்பேன் !
    பொன்னையொரு வர்தரினும் நான்வியக்கேன் இன்னல்
    புகுந்திடும் வழியெனவே சினங்கொள்வேன் ஏட்டில்
    தென்னையொரு நற்பிறவி ஏற்றதுபோல் நாளும்
    தெருவெலாம் உருண்டெனினும் பிறப்பேற்பேன்! இல்லை
    என்னைத்தமிழ் ஏந்திடவே ஏழ்கடலும் சூழ்ந்த
    இடந்தனில் கலந்திருப்பேன் இதுபோதும் என்பேன் !

    இதுக்கு மேல என்னை எவரும் சோதிக்கக் கூடாது அழுதிருவன் :))))))
    எனக்கு இந்த இடம்தான் கஸ்ரமாய்த் தெரிந்தது அதனால் முடிந்தவரை முயற்சித்தும்
    உள்ளேன் .பார்க்கலாம் எத்தனை வெட்டுக் கொத்து வருகுதென்று :)

    ReplyDelete
    Replies
    1. அருமை சகோ..!
      ரொம்ப காக்க வைத்துவிட்டேனோ?
      வெட்டும் இல்லை கொத்தும் இல்லை
      எல்லாம் சரியே!
      நன்றி

      Delete
  15. என்னையேன் ஈன்றெடுத்தாய் இகழுகின்ற உலகுடனே
    இணைந்து நிற்க !
    நன்மையான் செய்திடினும் நலம்பெற்றோர் மறந்தனரே
    நடிப்பில் மூழ்கி !
    பொன்னைத்தான் வேண்டுகிறார் புலமைக்குள் புகுந்தவரும்
    புகழ்ந்து பேசி !
    தன்னைத்தான் காத்திடவே வழியின்றித் தவிப்பவரின்
    தலைவன் ஆனேன் !

    அப்பாடா ஒரு மாதிரி நாட்டு நிலவரத்தைப் பாட்டில் சொல்லி விட்டேன்
    இது போதும் :))))

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை
      அவ்வளவுதான் சகோ!
      வந்துவிட்டது இதுவும்!
      முயற்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துகள்!!

      Delete
  16. என்னைத்தமிழ் ஏந்திடவே ஏழ்கடலும் சூழ்ந்த
    இடந்தனில் கலந்திடுவேன் இதுபோதும் என்பேன் !

    ReplyDelete
  17. தமிழில் இவ்வளவு உள்ளனவா என வியக்கும்படி உள்ளது. தாமதமானாலும் பரவாயில்லை. இப்போதாவது தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததே என மகிழ்கின்றேன்.

    ReplyDelete
  18. தமிழின் பெருமையை அறிய அறிய மகிழ்வாக உள்ளது. இப்போதாவது இவற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டதே என மனநிறைவு ஏற்படுகிறது.

    ReplyDelete
  19. ஏன் இந்த அவசரம்?? உங்களை யாராவது கழுத்தில் கத்தி வைத்து"" இத்தோட நிறுத்திக்கோ"" என்று மிரட்டினார்களா?? இல்லை பின்னூட்டத்தில் நாங்கள் இடும் அதிலும் நான் இடும் மொக்கை முயற்சிகள் உங்களை அயர்ச்சி அடைய வைகின்றனவா? என்னை பொறுத்தவரை ஒன்றை மனம் திறந்து சொல்கிறேன். நீங்கள் இந்த முயற்சி எடுத்திருக்காவிட்டால், சரவ நிச்சயமாக நான் மரபு பயின்றிருக்க மாட்டேன். பகல்கனவு நூல் வாசித்திருப்பீர்கள். அந்த ஆசிரியரை போல உங்கள் பொறுமையை நாங்கள் சோதித்துவிட்டோமோ என்னவோ:((( என்றாலும் நிறைய விஷயத்தை இந்த பதிவில் அடக்கி, தளும்பத் தளும்ப தந்திருகிறீர்கள். என் சிறிய கைகளால் அதனை சிந்தாமல் எப்படி பெறுவது என ஆயாசமாக இருக்கிறது. ஒரு நல்ல மாணவியை உங்களிடம் உரிமையாய் கேட்டுவிட்டேன். ஆனாலும் உங்கள் பொன்னான நேரத்தை இதற்கு மேல் நான் கேட்பதும் உங்கள் விருப்பத்தை மதிக்காத செயல் தான். மன்னியுங்கள் அண்ணா. இது உங்கள் பார்வைக்கு. எனக்கே மட்டுறுத்தல் செய்து நிறுத்தி வைப்பதும், publish செய்வதும் உங்கள் விருப்பம். நான் முயலவே நினைக்காத ஒரு கதவை திறந்து காட்டி, பொக்கிஷத்தை தந்த உங்களுக்கு நன்றி, இனி கைகொள்ள முகர்ந்து கொள்ள எனக்கு மற்றொரு வழியும் உண்டு.tats copy அண்ட் பிரிண்ட் :))) பின்ன ஒரே மூச்சில் இதை படிக்க எனக்கு தில் இல்ல பாஸ்:)

    ReplyDelete
    Replies
    1. கழுத்தில் கத்தி வைப்பதா?

      ஓஒ அதையும் செய்ய முடியுமோ?

      நான் அறுக்கும் அறுவைக்கு அதையும் செய்துவிடலாம்.

      மரபு பயிலுதல், ஆர்வமும் நேரமும் இருக்கும் யாருக்கும் கூடுவதே..!

      பகல்கனவு நூல் வாசிக்க வில்லை.

      பொறுமைக்கு சோதனை ஒன்றுமில்லை.

      பொதுவாகவே அவ்வளவுதான் என்று சொல்ல வேண்டியதை இன்னும் நீட்டி முழக்கிப் பலபதிவுகளுக்கு இழுக்க வேண்டாம் என்பதால்தான் இந்தச் சுபம்.

      மன்னிப்பு எதற்கு...!

      ஓய்விருக்கும் போது படியுங்கள்..!

      முயலுங்கள்..!

      முத்துநிலவன் அய்யா சொல்லியுள்ள நூல்களையும் பாருங்கள்..!

      இன்னும் புதிய சாத்தியங்களுக்கு முயலுங்கள்..!

      முற்றுமிட்டது எத்தனைநாளைக்கு மரபைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது.. கொஞ்சம் மாறுதலுக்கு நவீனத்தின் பின் வரலாம் என்றுதான்..!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..!

      Delete
  20. எளிமை, இனிமை கலந்து
    மரபில் நாட்டம் கொள்ள
    வழிகாட்டிய தங்கள் பதிவுகளை
    எனது
    யாப்புச் சூக்குமம் படித்துப் பாருங்களேன்!
    http://paapunaya.blogspot.com/2014/11/blog-post_10.html
    பதிவில் இணைத்துவிட்டேன்...
    பலர் கற்றிட உதவிய
    பயன் தரும் பதிவுகள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தாமதப் பதிலுக்கு மன்னியுங்கள்!
      இணையம் வரச் சூழல் வாய்க்க வில்லை.

      தங்களின் அன்பினுக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் பல!

      Delete
  21. தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை! வாழ்த்த வயதிருக்கிறது! தமிழுக்கு தங்கள் பணி என்றும் தேவை! மேலும் தாங்கள் பதிவுகள் அனத்தையும் இன்று
    விடாமல் படித்தேன்! அனைத்தும் முத்துக்கள்! தனித் தனியே தட்டச்சு செய்து பாராட்ட இயலாத முதுமை! வளரும் இளங்கவிஞர்களுக்கு தங்கள் பதிவு வழிகாட்டியாகும்! வாழ்க நீர் பல்லாண்டு!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி அய்யா!
      என்னுடைய தளத்திற்குத் தங்களைப் போன்ற மரபில் எழுதுகின்றவர்களின் வருகையையும் கருத்துக்களையும் பெரிதும் விரும்புகிறேன்.
      உங்களின் எதிர்மறையான விமர்சனங்களையும் சேர்த்து..!

      தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  22. //வலைத்தளம் கொலைக்களமாக மாறும் முன் இந்தத் தொடர்பதிவை முடித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது...// - ஐயய்யோ! அப்படியென்ன ஆயிற்று?

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவுதான் இந்தத் தொடர்பதிவை நீட்டிக் கொண்டு போவது என்ற சலிப்பில் சொன்னது அய்யா!!
      தூண்டிலைக் கொடுத்துவிட்டால், மீன் கொடுக்கத் தேவையில்லையே, என்பதால் முடித்திட நினைத்தேன்.
      நன்றி

      Delete
  23. அன்புள்ள அய்யா,

    வணக்கம். தாமதமான வருகைக்கு வருந்துகிறேன். எனது வலைத்தளக் குதிரை சண்டித்தனம் செய்தது. அதன் லாயத்தின் கதவு திறப்பதில் சிக்கல். இன்றைக்குத்தான் லேசாக திறந்தது.

    யாப்புச் சூக்குமம் IV [ விருத்தத் தூண்டில். ] பார்த்தேன். தூண்டிலில் சிக்கிய மீனானேன். நானா? நீனா? என்பது கேட்கிறது.

    ஆமா... இது என்னய்யா கேள்வி? .சந்தம் வண்ணம் எல்லாம் வேணுமா? வேணாம் என்று சொல்வேனா? நல்ல சந்தத்தில்...நல்ல கவிஞர்கள் சிந்தியதை... நாங்கள் அறிய தாங்கள் அவசியம் தரவேண்டும்... பிறகு வருகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரலாம் என்று நினைக்கிறேன் அய்யா!
      கொஞ்சம் நவீனத்தின் பாலும் வரலாமே..!
      எவ்வளவுநாளைக்குத்தான் முகமூடி போட்டுக் கொண்டிருப்பது என்றுதான்...!
      நீங்கள் அறியாததா?
      நன்றி அய்யா!

      Delete
  24. வலைத்தளம் கொலைக்களமாக மாறும் முன் இந்தத் தொடர்பதிவை முடித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது."

    தோன்றலின் தோன்றாமை நன்று!
    இதுபோன்ற கருத்தினை வென்று!

    மரபுக்கான மணிமகுடத்தை பிறருக்கு சூடி அழகு பார்க்கும் இது போன்ற பதிவினை கண்டு, பிறருக்கு ஏன் அய்யா வரக் கூடாது? இத்தகைய தரமிகு தமிழ்த் தொண்டு?
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தமிழ்த்தொண்டெல்லாம் நீங்கள் செய்வதுதான்...!!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  25. தாமதத்திற்கு நீங்களும்தான் காரணம் விஜூ. இவ்வளவு செறிவான பதிவுக்கு உடனுக்குடன் எப்படிப் பின்னூட்டம் இடுவது? (கொஞ்சம் அவசர வேலை இருந்ததைச் சொல்லி எத்தனை முறைதான் சமாளிப்பது?) எனினும் மிகவும் செறிவான, அதே நேரம் எளிதான விளக்கங்கள். இந்த ஐந்து பதிவுகளையும் “எளிய கவிதை இலக்கணம்“ எனும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிடலாம். “காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேலே“ எனும் இலக்கணத்திற்கு எதிரி யாரோ எழுதியதை நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள். எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். (ஒரே ஒரு வேண்டுகோள் இவ்வளவு அழகான இலக்கண விளக்கத்தின்போதே, தமிழைப் பழையபடி தாய் என்று சொல்லி வழிபாட்டிற்கு அழைக்காதிருந்தால் மேலும் மகிழ்ந்திருப்பேன். வளர்க்கத்தான் வேண்டுமே அன்றி வணங்குதற்கு உரியதல்ல நம் தமிழ் என்பது எனது கருத்து) மற்றபடி, முற்றுப் புள்ளி வைக்காமல் கவிதை பற்றிய பதிவுகள் தனிக்கோப்பாக வந்துகொண்டே இருக்கட்டும். எழுதிமுடித்தபின் கவிதை கவிஞருடையதல்ல என்பதே போல எழுத முடியாது என்று சொல்வதும் சரியாகாது. கவிதை அது தேவையானபோது வரட்டும்.. அவ்வப்போது..
    தோளில் கரம்பதித்து...வாழ்த்துகளுடன் உங்கள் நண்பன் -நா.மு. (த.ம.12)

    ReplyDelete
    Replies
    1. அத்தோடு, அறுசீர் விருத்தம் பழக பாரதிதாசனின் “அழகின் சிரிப்பு“, எண்சீர் விருத்தம் பழக “புரட்சிக்கவி”, வெண்பாப்பழகப் புகழேந்தியின் “நளவெண்பா“, முத்தொள்ளாயிரம் மற்றும் பாரதியின் “குயில்பாட்டு“, மற்றும் 6சீர், 7சீர், மற்றும் எண்சீர் விருத்த வேறுபாடுகளை ரசிக்க சிந்தாமணி, கம்பன் அழகா செறிவான ஆசிரியப்பாவுக்கு சிலம்பு, அகம்-புறம், பெருஞ்சித்திரனாரின் “நூறாசிரியம்“ என வழிகாட்டுவதும் அவசியம் என்று நினைக்கிறேன். புத்தகமாக்கும் போது இப்படி படிக்க வேண்டிய பாவியங்களையும்எடுத்துப் போடுங்கள்.(அதிகப் பிரசங்கித் தனமாகத் தெரிந்தால் மன்னியுங்கள்...நல்ல கவிதை எழுத வழிகாட்டும் உங்கள் பணி இன்னும் சிறக்க இது உதவும் என்று தோன்றியதால் உடனே எழுதிவிட்டேன்)

      Delete
    2. தங்கள் அன்பினுக்கும் தொடர்வருகைக்கும் முதலில் நன்றி!!
      புத்தகமாக வெளியிடும் எண்ணமெல்லாம் என்றும் இல்லை அய்யா!!
      ஆம் அய்யா .... கவிபாடக் காரிகை வேண்டாம் என்றாலும் நானுட்பட பலருக்கும் காரிகையை நினைக்கத்தான் , கவிதை (?) என்று ஏதோ ஒன்று வந்திருக்கிறது.
      தமிழை வழிபாட்டிற்கு உரியதாக்கத் திட்ட மிடவில்லை.
      எழுதுதற்கெளிமையான எதுகைபெற்ற வரியொன்றை இதற்கு முந்தைய பதிவில் கொடுத்திருந்ததால் நீட்சி கருதி அதனையே வாய்பாட்டு மாற்றம் செய்ய நேர்ந்தது.
      தங்களது இக்கருத்தை உளம் கொள்கிறேன்.
      வடிவத்தை அடுத்து உள்ளடக்கம் வர வேண்டும். சற்றுதாமதமானாலும் எழுதுவேன் என்று நினைக்கிறேன்.
      பல கவிதைகளை, கவிஞர்களை அவர் படைப்பு கவிதை அல்ல என்று மறுக்க வேண்டிவரும் என்கிற பேரச்சம் தான் உள்ளடக்கம் பற்றி எழுதத் தடையாய் இருக்கிறது.
      அதற்கான மனத்துணிவை இன்னும் நான் பெறவில்லை.
      எனது படைப்புகளை முதலில் விமர்சிக்கலாம் என்று பார்க்கிறேன்.
      காலம் கூடும்.
      தாங்கள் சொன்ன நூற்பட்டியலில் புறப்பொருள் வெண்பாமாலையின் வெண்பாக்கள் நளவெண்பாவிலும் வெண்பாவிற்குச் சிறந்த சான்றாகும் என்பது என் தனிப்பட்ட வாசிப்பனுபவம்!!
      உள்ளீடு நோக்க முத்தொள்ளாயிரம் சிறந்தது!
      நூறாசிரியம் படித்ததில்லை.
      படிக்க வேண்டும்.
      நீங்கள் சொன்னது நிச்சயம் நானுட்படப் பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என்பதில் அய்யமில்லை.
      அதில் என்ன அதிகப்பிரசங்கித்தனம் அய்யா..........................
      ஏன் மன்னிப்பென்றெல்லாம் பெரிய வார்த்தை.........................!
      நீங்கள் திருத்தும் இடத்தில் இருக்கிறீர்கள்......!
      நான் கற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன்!!!!!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!

      Delete
  26. ஆஹா .....விடை வந்து விட்டது :))மனமும் மகிழ்ந்து கொண்டது
    மிக்க நன்றி சகோதரா பாராட்டிற்கும் இப் பகிர்வுக்கும் .மென் மேலும்
    தொடருங்கள் நாமும் தோடர்ந்து வருகிறோம் .வாழ்த்துக்கள் .வாழ்க
    தமிழ் !

    ReplyDelete
    Replies
    1. தங்களது தொடர்வருகைக்கும் கவிதைப் பணிக்கும் வாழத்துகளும் நன்றியும் சகோ!!!!

      Delete
  27. குறித்துக் கொண்டோம் ஆசானே! நிதானமாகப் படிக்க வேண்டிய ஒன்று! எனவே, நிதானமாகப் பல தடவை படித்து மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டிய ஒன்று! அருமையான பாடம். மிக்க நன்றி!

    ReplyDelete
  28. அன்னையவள் ஈன்றிடுவாள் அகமகிழ்வாள் புறவுலக
    அறிவை நல்க!
    பொன்னையவள் புறக்கணிப்பாள் புரிதலுடன் வளர்த்திடுவாள்
    போற்றிக் காக்க!
    மண்ணையவள் மதித்திடுவாள் மனங்குளிர வாழ்த்திடுவாள்
    மானம் பேண!
    கண்ணையவள் காத்திடுவாள் கதிரவன்போல் உயிர்வாழ
    காலம் வெல்ல !
    மீண்டும் இதை திருத்தி எழுதியுள்ளேன் குருவே . தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  29. ஐயா நானிப்படிப்பட்ட விளக்கங்களைத்தான்
    தேடிக்கொண்டு இருக்கிறேன் (தொலைதூரக்கல்வி)
    இவற்றிலிருந்து விலகி இருத்தல் ஆயிற்று
    இப்படிஒரு ஆசிரியர் கிடைக்கஎன்ன தவம்
    செய்தேனோ? என் நேரத்தைசரிசெய்துகொண்டு
    தங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் மாணவியாக
    வருகிறேன். நல்ல வேல் நான் கொஞ்சம் தாமதமாக
    வந்தேன் இல்லேன்னா நீங்க முதல் பதிவிலேயே
    முடிச்சிருப்பீங்க கடவுள் கப்பாத்தினார்(தப்பிச்சிடீங்கசகோ)
    நான் மிகவும் வருத்தப் படும் விடயம் ரெகுலர்ல
    தமிழ் படிக்க முடியலியேங்கறதுதான்.
    நன்றிசகோ தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்,
    தமிழ் புத்தாண்டு நல் வழ்த்துக்கள்.
    உழவர் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. தங்களது பதிவைப் படித்து ஒரு வெண்பா இயற்றி அதை எனது
    நினைத்துப்பார்க்கிறேன்
    என்ற வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளேன். நேரம் இருப்பின் படித்து தங்களின் மேலான கருத்தை சொல்ல வேண்டுகிறேன்.

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete