Sunday, 12 July 2015

புதிருக்கு விடை கண்ட கதை.


காளிதாசனைப் பற்றிய கதை எல்லாருக்கும் நினைவிருக்கும். காளிதாசன் எனக் காளியின் தாசனாய் மாறுவதற்கு முன்னால் ஒன்றும் அறியாதவனாய், இளவரசியை மணமுடிக்கப் போய்,  அவள் மௌனமாய்க் கேட்கும் கேள்விகளுக்கு, மனம் போன போக்கில், 1, 2, என விரல்களைக் காட்டிப் பதிலளிக்க, அது தனது கேள்விகளுக்கான தத்துவார்த்தமான பதில் என்று இளவரசி அவனை மணம் முடித்துக் கொள்வாள்.

Saturday, 11 July 2015

மனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்.


பொருளுக்குச் சுவையூட்டுவது பற்றிய சென்ற பதிவின் தொடர்ச்சியாக அமையும் இந்தப் பதிவிற்கும் இதன் தலைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலில் வருவது கொஞ்சம் தலைப்பிற்குத் தொடர்பில்லாத செய்தி என்பதால் நேரத்தை வீணாக்க விரும்பாதவர்கள் நேராக இதன் இரண்டாம் பகுதிக்குச் சென்றுவிடலாம்.

Friday, 10 July 2015

நீங்கள் கையாளும் சொல்லுக்குச் சுவையூட்டுவது எப்படி என அறிவீர்களா?


பொதுவாக நமது எழுத்துகள் படிக்கப்படவேண்டும் என்றும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் எழுதுகின்ற எல்லாருக்குமே நினைப்பிருக்கும். ஆனால் அவை பரவலான கவனம் பெறாத போதோ, தவிர்க்கப்படும்போதோ ஏன் இப்படி…… என்கிற கேள்வி எழும்.
நாம் சொல்ல நினைப்பதில் விஷயம் ஏதும் இல்லாவிட்டால் நிச்சயமாய் எவ்வளவு நன்றாகச் சொன்னாலும் அது கவனம் பெறாது.
அதே நேரம், சொல்ல வருவதில் விஷயம் இருக்கிறது. ஆனால் சொல்வதில் சுவையில்லாதபோதும் அது உரிய கவனத்தைப் பெறுவதில்லை.

Tuesday, 7 July 2015

சமணம் (4) – கடவுளின் துகள்.


உயிர்கள் எப்படி உருவாயின? உலகத்தைப் படைத்தவர் யார்.. என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்குக் கடவுள் என்று ஒருவன் இருக்கிறான். அவன் நம்மையும் இந்த உலகத்தையும் படைத்தான் என்று சொல்வது  எவ்வளவு எளிதானது...!

இந்த உலகம் எப்படித் தோன்றியது?

கடவுள் படைத்தார்.

உயிர்கள் எப்படித் தோன்றின?

கடவுள் படைத்தார்.

Sunday, 5 July 2015

நான்கு வரியில் சிலப்பதிகாரக் கதை ; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-11



கோவலன் கண்ணகியின் சிலப்பதிகாரம் ஒரு பெருங்காப்பியம். ஆனால் நான்கு வரிகளில் அச்சிலம்பின் பெரும்பகுதியும் சிலப்பதிகாரத்தின் வினைக் கோட்பாடும் கூறப்பட்டிருந்தால் அது  ஆச்சரியம் தரக்கூடிய செய்திதானே?

Friday, 3 July 2015

சமணம்-(3): இந்த உலகம் எப்படித் தோன்றியது;எப்படி அழியும்?


பெரிய விளையாட்டரங்கத்தைச் சுற்றி ஓடுவதைப் பார்த்திருப்போம். அம்மைதானத்தை ஒரு சுற்று சுற்றுவது என்பது, எங்கு ஓடத்தொடங்கினோமோ அங்கு வந்து முடிவது என்பதுதானே? 

Wednesday, 1 July 2015

ஆதலினால் காதல் சுகம்.


சின்ன விழிக்குருவி செல்லச் சிறகசைக்கத்
தின்ன உயிர்கொடுத்துத் தீர்வதனால் – கன்னமிட்டுப்

Sunday, 28 June 2015

வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றவனின் வேதனை அனுபவம்!


சுற்றுலாவிற்கென அயல்நாடு செல்லுதலைப் போன்றதன்று பணம் சம்பாதிக்க அயல்நாடு செல்லுதல். அதுவும் திருமணம் ஆன புதிதில் மனைவியை விட்டுச் செல்லுதல் என்பது இன்னும் கடினம். மனைவியைப் பிரிந்து  பொருள் தேடி வேற்று நாட்டிற்குச் சென்றவனின் வேதனைகள் பல நாம் அறிந்ததும் அனுபவித்ததுமாக இன்று இருக்கலாம். ஆனால் நான் சொல்லப்போவது தோராயமாக இரண்டாயிரம் ஆண்டிற்கு முன் வாழந்தவனின் அனுபவம்.

Thursday, 25 June 2015

விடுகதை தெரியும்! அதென்ன விடுகவி?-;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-(10)




சமணத் தத்துவத்தில் முக்கியமான ஒன்று அநேகாந்தவாதம் என்பது. உண்மை அதன் இன்மைகளாலும் ஆனது என்பது அதன் அடிப்படை. சற்று விளக்க வேண்டும் என்றால், ஒரு பொருளில் உள்ள குணங்கள் மட்டுமே அப்பொருளைத் தீர்மானிப்பதில்லை. அதில் இல்லாத குணங்களும் அப்பொருளினைத் தீர்மானிக்கும் காரணிகளாகின்றன என்பர் சமணர்.

முதலிலேயே குழப்புகிறேனா..?!

Tuesday, 23 June 2015

காதலுக்குப் பலியான தோழி!



அவன் அவளுடன் கொண்ட  உறவை ஊர் அறிந்தது. அவளது உறவினர்களும் அறிந்துவிட்டனர். “ இனி இவன் நம் ஊர் எல்லையில் கால் வைக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் வீட்டுப்பெண்ணை நீங்கள் பத்திரமாய் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என ஊர் அவளது பெற்றோர்க்கு அறிவுரை வழங்கிற்று.

Friday, 19 June 2015

பிறவிக் கோளாறுகளின் வகைகள்! – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (9)


பழந்தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடன் பிறந்துவிடவில்லை. சில குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்தன. பிறப்பில் ஏற்படும் கோளாறுகளைத் தமிழர்கள் எண்வகையாகப் பிரித்திருந்தனர்.

Tuesday, 16 June 2015

பாம்புகள் பூக்கின்ற குளம்.




இரவு. நீர்நிறைந்த குளம். நெளிந்து அலையும் நிலவொளி. ஆர்ப்பரிக்கும் தவளைகளின் குரல். குளம்  நடுவே சிறுதிட்டு. அதில் நிலையாமையை எப்போதும்  உணர்த்திக்கொண்டு சிறுமண் பற்றி நிற்கும் கொஞ்சம் தாவரங்கள். அடர்ந்திருக்கும் அதன் இடைவெளி பின்னிச் செய்த சிறு கூடு.

Friday, 12 June 2015

அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் அந்தக்கால டெக்னிக்.


பண்டைய அரசர்கள், அவர்களின் அரசவை, கோட்டை கொத்தளங்கள் பற்றியெல்லாம் பழைமையின் கற்பனை நம்மிடத்தில்  நிறைய உண்டு. அவர்களது அரசவையின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்க என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதைப் பற்றியதே இந்தப் பதிவு.

Wednesday, 10 June 2015

மானங் கெட்டவன் மன்னன் ஆகலாம்! - வள்ளுவர் சொல்கிறார்!


மன்னன் மட்டும் அல்ல,  முதலமைச்சராக ஏன் பிரதமராகக் கூட ஆகலாம். மானங் கெட்டால் மட்டும் போதாது இன்னும் சிலவற்றைக் கூறி , அவையும் கெட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறதா?

Monday, 8 June 2015

சமணம் (2) – கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் உண்டு!


உயிரின் பெருக்கமும் சுருக்கமும் பற்றிச் சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்கான  சமணரின் விளக்கத்துடன் இப்பதிவைத் தொடர்வோம்.

Sunday, 7 June 2015

நோயற்ற வாழ்க்கைக்கு உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படும் தமிழ் மருந்து.

இன்றைய சூழலில் சர்க்கரை, இதயநோய், போன்ற பல வியாதிகள் வந்தவர்களுக்கும், வராமல் தடுக்க நினைப்பவர்களுக்கும் மருத்துவர்கள் சொல்லும் தாரக மந்திரம், உணவுக் கட்டுப்பாடு மற்றும்  உடற்பயிற்சி .

Wednesday, 3 June 2015

சமணம் – உயிரின் எடை.



ஒருகாலத்தில் கல்வியையும் மருத்துவத்தையும் இருகைகளில் ஏந்தி, உயிர்களை அன்பு செய்யுங்கள் என்ற கோட்பாட்டைத் தலையில் சுமந்து நாடெங்கும் அலைந்தவர்கள் சமணர்கள்.
அகிம்சை என்றால் உயிர்களைக் கொல்லாமை என்று நாம் கூறுகிறோம்.
சமணர்களின் கருத்துப்படி உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் அகிம்சை அல்ல. அவ்வுயிருக்கு நன்மை செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.

Tuesday, 2 June 2015

எங்கள் நீதி இப்படித்தான் சொல்கிறது கனம் நீதிபதி அவர்களே!



சட்டங்கள், வளைக்கும் வலிமை உள்ளவன் வளைக்கவும், நீதிமன்றங்கள் பணபலத்தின், அதிகாரத்தின், குவிமையத்தில் மண்டியிடவும் செய்கின்ற இந்தப் புன்மைச் சூழலில், எது அறம், எது வழக்கு, எது தண்டனை எனப் பழந்தமிழில் ஏதேனும் இருக்கிறதா என அறியும் ஆர்வம் இயல்பானதுதான்.

அப்படி ஒரு உரை நூலில் இருந்து எடுக்கப்பட்டதன் சாரம் தான் இப்பதிவு.

Saturday, 30 May 2015

அளப்பதற்கு இது கதையல்ல!-உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.(8)


சென்ற பதிவு ஒரு கேள்வியோடு முடிந்திருந்தது. அதற்கான விடை எளிதானதுதான். இதெல்லாம் ஒரு கேள்வியா இதற்குப் பதில் வேறு சொல்ல வேண்டுமா எனப் பலரும் நினைத்திருக்கலாம்.

கேட்டுச் சிலநாள் ஆனதால், கேள்வியை மீண்டும் நினைவு படுத்திக் கொள்கிறேன்.

Monday, 25 May 2015

நொடிப்பொழுதில் என்ன நடக்கிறது?; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.(7)


இந்தப் பதிவை நீங்கள் படிக்க நொடிப்பொழுதிற்குச் சற்று அதிக நேரம் ஆகலாம். ஆனாலும் இங்குப் பகிரப் போவது நொடியின் அளவில் என்ன நடக்கிறது என்பது குறித்தே..!

Friday, 22 May 2015

நாட்டு மருத்துவத்தின் நான்கு கூறுகள்: இவை இப்போதும் பொருந்தும்!


நவீன மருத்துவம் எவ்வளவுதான் வந்தாலும் இந்த நான்கு கூறுகளும் இல்லாமல் உலகில் எந்த மருத்துவமும்  எப்போதும் இருந்ததில்லை. வீட்டில் விஷம் செய்வதற்கான குறிப்பு என்ற சென்ற பதிவின் தொடர்ச்சிதான் இந்தப் பதிவு என்பதால் அந்தப் பதிவைப் பார்க்காதவர்கள் அதைப் படித்துவிட்டு இந்தப் பதிவைத்  தொடர்வது புரிதலுக்கு உதவும்.

Thursday, 21 May 2015

13 ஆம் நூற்றாண்டின் வீட்டில் விஷம் செய்வதற்கான குறிப்பு.


முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இதை நீங்கள் இப்போதே செய்து பார்க்க முடியும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. இது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட குறிப்புத்தான்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

Wednesday, 20 May 2015

பகவானின் பொருள் தெரியுமா ஜி ?


வெகுகாலமாக நாம் நினைவில் பதிந்து வைத்திருக்கிற அல்லது கற்றிருக்கின்ற ஒன்று தவறென்று அறியும் போதோ அல்லது அது பற்றிய கூடுதல் செய்தி ஒன்றை அறியும் போதோ  மனம் அடையும் உற்சாகம் பல நேரங்களில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

Tuesday, 19 May 2015

ஈறு கெடுவது எப்படி ?: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்- (6)


மொழியைக் கற்பிக்கும்போது குறிப்பாக இலக்கண வகுப்புகளில் பல சுருக்கு வழிகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. புரிந்துகொள்வதில் மாணவருக்குச் சிரமம் இருக்கும் போதோ ( புரியும்படி ஆசிரியருக்குச் சொல்லித்தர முடியவில்லை என்பதுதான் இதில் உண்மை ), அரிதான தருணங்களில் ஆசிரியருக்கே அவ்விடயம் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கும் போதோ இந்தச் சுருக்குவழிகள் கை கொடுக்கும்.
அப்படி ஒரு சுருக்கு வழிதான்,

Friday, 15 May 2015

கிழட்டுப்பசுவும் இளம்புல்லும்: காமத்தின் வரைவிலக்கணம் (2)



மாடு நமது மொழியில் நல்ல மாணவர்களுக்கு உதாரணமாகக் காட்டப்படுவது. முதல் மாணவன் என்பதற்கு இலக்கணம் சொல்லும் போது இந்த மாட்டினையும் ஒன்றாகச் சொல்வார்கள்.

மாடு புல்லை நன்றாக மேய்ந்து பின் ஓரிடத்தில் இருந்து அசையிடுவதைப் போல  ஆசிரியர் சொல்வதை நன்றாக உள்வாங்கிப் பின் அதனை அசையிட்டுப் பார்ப்பவன் நன்மாணாக்கன் என இலக்கண நூல்கள் சொல்லும்.

Wednesday, 13 May 2015

உலகாயதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்.


கடவுள் இருக்கிறான் என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அதே அளவிற்குக் கடவுள் இல்லை என்ற கொள்கையுடன் அதை எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல், மிகுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் முழங்கிய கூட்டமும் பழங்காலத்தில் நம் மத்தியில் இருந்தது.

Sunday, 10 May 2015

காத்திருப்பின் நீட்சி...!




நாடகங்கள் தொடர்வதுவும் யாருமறி யாமல்
    நாம்நடித்துக் கொள்வதுவும் மேடைகளும் இன்றி
வீடகத்தும் வெளிப்புறத்தும் வீதிநெடு கெங்கும்
     விரட்டுகின்ற ஞாபகத்தின் வேதனைக ளோடு

Friday, 8 May 2015

காமத்தின் வரைவிலக்கணம்.


காமம் என்னும் உணர்வு எப்படிப்பட்டது என்று கேட்டால் அதனை எப்படிச் சொல்ல முடியும்? மொழியினால் கட்புலனாகாத உணர்ந்தறியக் கூடிய ஒன்றை எந்த அளவிற்குக் காட்சிப்படுத்த முடியும்…? நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் நம் சங்க அக இலக்கியங்கள் அதனைக் காட்டப் பெரிதும் முயன்றிருக்கின்றன. இந்தப் பதிவு காமத்தைச் சங்கப் புலவர்கள் சொற்களால் எவ்வாறு வரையறுக்க முயன்றிருக்கிறார்கள் என்பதை ஒட்டிய சங்க இலக்கியப் பதிவுகளின் தொடர்ச்சியாய் அமைகிறது.

Monday, 4 May 2015

பிசாசு வகைகள்; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.- (5)


புது வீடு

இந்த இரண்டு சொற்களையும் பாருங்கள்.
இரண்டு சொற்களும் உ என்பதில் முடிகின்றன.
உ ஊ ஒ ஓ ஆகிய நான்கு எழுத்துகளையும் உச்சரிக்கும் போது இதழ் குவிய வேண்டும் என்று சொல்கின்றன நம் இலக்கணங்கள்.

இந்த எழுத்துகளைச் சொல்லும் போது இதழ்கள் குவிகின்றன தானே?
ஆம். எழுத்துகளின் பிறப்பிலக்கணப்படி இங்கு இதழ்கள் குவியத்தான் வேண்டும்.

Saturday, 2 May 2015

நூறாவது பதிவும் கலைந்த கனவுகளும்.


பதிவர் பின்னூட்டம், பிளாகர், என்கிற சொற்களை எல்லாம் சென்ற ஆண்டில் இதே நாள் நான் அறிந்திருக்கவில்லை. வாசகன் என்ற நிலையில் சில கடிதங்களை நூலாசிரியர்களுக்கு எழுதி இருக்கிறேனே தவிர, கட்டுரை என்றும், கருத்துகள் என்றும் பெரிதாய் எதுவும் எழுதியவனில்லை. மொழியின் மாயச்சுழலுக்குள் விழுந்து போய், காலங்களை வாசிப்பினால் மிதித்துக் கடந்த தருணங்கள்தான் சென்ற ஆண்டிற்கு முன்புவரை. அவ்வாசிப்பு ஒரு போதையைப்போல முற்றிலும் எனக்கானது என்பதைத் தவிர எந்தப் பயன்பாட்டுடைமை நோக்கத்தையும் கொண்டதன்று.

Friday, 1 May 2015

தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசியல் ; உங்களுக்குத் தெரியுமா?




அருள்திரு இராபர்ட் கால்டுவெல்

தமிழ் என்னும் மொழி சமஸ்கிருதம் என்னும் மொழியில் இருந்து தனித்து இயங்க இயலாது. அது சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு உட்பட்ட மொழியே என்ற சிந்தனை தமிழ்ப்பண்டிதர்களிடையே  இலக்கணவாதிகளிடையே வலிமை பெற்றிருந்த பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம்.

ஆட்சிப்பணிக்காகவும், மதம்பரப்புவதற்காகவும் வந்த ஐரோப்பியர்களுக்குத் தங்கள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைக் கொண்டாடவும் அதில் ஆய்வுகள் மேற்கொள்ளவுமான காரணங்கள் அதிகம் இருந்தன. சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்த மொழிகளே பிற இந்திய மொழிகள் என்கிற  பார்வை, சமஸ்கிருதப் பண்டிதர்கள் வழியாகவும் இந்திய மொழிகளை ஆராய்ந்த அயல்நாட்டினர் வழியாகவும் ஐரோப்பாவெங்கும் பரவி இருந்தது.

Wednesday, 29 April 2015

எழுத்துகளுக்குக் கொம்பிருந்த காலம்;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் -(4)


உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்னும் இந்தத் தொடரால், எனக்கு உள்ள நன்மை பின்னூட்டங்களின் வழியாகப் பலவற்றைக் கற்றுக் கொள்வதும், அதிலிருந்து அடுத்த பதிவிற்கான செய்திகள் கிடைத்துவிடுவதும் தான் .

எனவே உங்கள் ஒவ்வொருவரின் வருகையைப் போன்றே பின்னூட்டத்தையும் கேள்விகளையும் விரும்புகிறேன்.

இப்பொழுது நம்மிடையே இருக்கின்ற எழுத்தின் வடிவங்கள் காலந்தோறும் சிறு சிறு மாற்றங்களைப் பெற்று இன்று நாம் பயன்படுத்தும் இந்த நிலைமையை அடைந்திருக்கின்றன.

Monday, 27 April 2015

“‘ஐயா’ இது சரியா அய்யா ?”உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – ( 3 )


ஒரு மொழியின் ஓர் எழுத்தின் ஒலியை அதே மொழியின் இன்னொரு எழுத்தை அல்லது எழுத்துகளைச் சேர்த்து எழுத முடியுமா?
அப்படி எழுத முடிந்தால் பின் அந்த இரண்டு எழுத்துகள் எதற்கு ?
எதையாவது ஒன்றை வைத்துவிட்டு இன்னொன்றை எடுத்து விட வேண்டியதுதானே?

Saturday, 25 April 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?



“ கண்ணைத் திறந்து கொண்டே யாராவது குழியில் விழுவார்களா?” தன் மனக்குமுறலைக் கொட்டிய அவனிடம் நண்பன் கேட்ட கேள்வி இது.

”கண் என்று ஒன்று இருந்ததால்தான் எனக்கு இப்படி ஆனது! அது இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்” எனப் பதிலளிக்கிறான் அவன்.

“யாரோ ஒருத்தியைப் பார்த்தேன். பார்த்த உடனே அவள்மேல் காதல் வயப்பட்டேன் என்கிறாயே..! உன்னுடைய அறிவு எங்கே போயிற்று?
கண்போகிற இடத்தில் எல்லாம் போக விடாமல் அதைத் தடுத்து, நன்மை எதுவோ அந்த வழியில் போகச் செய்யத்தானே அறிவு?

Friday, 24 April 2015

கோபிநாத்தின் நீயா நானாவும் தினமணியும் - இரு அபத்தக் கருத்துகள்.


தமிழைக் காக்க மல்லுக்கட்டுவதாய்ச் சொல்லும்  பலரும் மிகச் சாதாரணமாகத் தமிழ் குறித்த தவறான தகவல்களைப் போகிற போக்கில் பகிர்ந்து போவதைக் கண்டிருக்கிறேன். பதிவெழுதுவதற்கு முன்பெல்லாம் மெல்லச் சிரித்துப் போய்விடுதலே அதைக் காணும்போதும் கேட்கும்  போதும் என் பதிலாக இருக்கும். எண்ணங்களிலும் எழுத்துகளிலும் உள்ள உண்மையைப் பார்க்காமல் எழுதுகின்றவர்கள் யார் சொல்கிறவர் யார் எனப் பார்க்கும் நிலைமை மாறுகின்ற வரை சிறிதளவு பிரபலமான ஒருவரால் கூடப் படிக்கும் அல்லது கேட்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை முட்டாளாக்கிவிட முடிகிறது.

Wednesday, 22 April 2015

உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – ( 2 )


அது திண்ணைப் பள்ளிக் கூடங்களில் இருந்து தமிழ் மெல்ல மெல்ல நவீனக் கல்வி மரபிற்குள் நுழைந்த காலம். பதினெட்டாம் நூற்றாண்டு. சுவடிகளில் இருந்து தமிழ்க்கல்வி, பாடப்புத்தகங்களுக்கு நகர்ந்த காலகட்டம். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் அப்பொழுது என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ அதன் தாக்கத்தினைப் பாடப்புத்தகம் என்று ஒன்று முதன் முதலில் தமிழுக்கு உருவானபோது காண முடிந்தது என்பதற்கு உதாரணம் தமிழ் எழுத்துகள் 247 என்ற வழக்குதான்.

Monday, 20 April 2015

உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள் - (1)


இத்தலைப்பில் அமையும் பதிவுகள்  நீண்ட பதிவுகள் அல்ல.
ஐந்து நிமிடங்களுக்குள் நீங்கள் படித்துக் கடந்து போகக்கூடியவை.

ஆங்கிலத்தைப் பொருத்தவரை இது போன்ற பல முயற்சிகள் அம்மொழி வளரச் செய்யப்படுகின்றன. மொழிப் பயன்பாட்டையும் மொழி பற்றிய புரிதலையும் மொழிச் செம்மையையும் மேம்படுத்துபவை இவை. 

தமிழ் பற்றி இங்கு நான் கூறப்போகும் செய்திகள் பலருக்கும் தெரிந்ததாக இருக்கலாம்.

Saturday, 18 April 2015

குழியில் விழுந்த கொம்பன்.



தன் கூட்டத்தை விட்டுத் தனியே பிரிந்து, மீண்டும் தன் இனத்தைத் தேடிச் செல்கிறது கொம்பன்.
தனிமையின் பதற்றத்தை உறவின் அண்மையால் அதற்கு  ஆற்ற வேண்டி இருக்கிறது.

Thursday, 16 April 2015

நான் தோற்ற க(வி)தை


நமக்கும் நாலு எழுத்துத் தமிழில் பிழையின்றி எழுதத்தெரியும் என்றும் நாம் எழுதுவது எல்லாம் கவிதை என்றும், காதலைப் பற்றியும் தமிழைப்பற்றியும் எழுதுவதே தமிழ்க்கவிதை மரபென்றும் துள்ளித் திரிந்த காலத்தில் எழுதப்பட்டு, கவிதைப் போட்டியில் போராடித் தோற்றுப் போன கவிதையின் ஒரு பகுதி இது. உண்மையில், இதை எழுதும் போது நிறைய உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன்  என்பது தெரிகிறது. இதை இன்று தட்டச்சுச் செய்யும் போதும் கூட இறந்த காலத்தில் நான் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட தமிழ்க்களங்கள் நினைவுக்கு வருகின்றன.

இக்கவிதை நிராகரிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன.

நான் எழுதியது அல்ல என்பது ஒன்று. ( பிறகு இது மிகுந்த பரிசீலனைக்கும் சோதனைக்கும்  பிறகு ஒருவாறாக ஏற்கப்பட்டது. )

இன்னொன்று இதில் இருக்கின்ற நாகரிகமற்ற, கவிதையின் புனிதத்தை அசுத்தப்படுத்தியதாகக் கருதப்பட்ட ஒரு சொல்லாட்சி.

அன்றும் எனக்குப் பரிசு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இல்லை. இன்னொருவருடையதைத் திருடி எழுதினேன் என்ற  குற்றச்சாட்டில் இருந்து மீண்டேனே என்ற மகிழ்ச்சிதான் இருந்தது.

Sunday, 12 April 2015

புற்றைவிட வேகமாகப் பரவுவதா இந்நோய்?



அறிவைப் பெருக்கும் வழிகள் என்னும் பதிவில் என்னடா திடீரென்று தத்துவக் காற்று அடித்தது என்று அதைப்படித்தவர்கள்  ஐயுற்றிருக்கலாம். காரணம் இல்லாமல் இல்லை. மனதில் தோன்றும் உணர்வுகள் இப்படி என்றும் இன்ன தன்மையை உடையது என்றும் காட்டமுடியாதை அகம் என்று கூறுகிறார்கள். அப்புறம் எப்படி அதைக் காட்டமுடியும்? சவாலான விஷயம்தானே அது?

Thursday, 9 April 2015

இப்படி ஒரு பெண்ணை வர்ணிக்க முடியுமா..?


பெண்ணைப் பார்த்துக் கவிஞரான ஆண்கள் பலபேர். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொருவருமே தங்களின் அறிவிற்கும் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்பப் பெண்களை வர்ணித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மட்டும் பெண்கள் ஆண்களோடு போட்டி போட முடியாது என்று நினைக்கிறேன். ஒருவேளை அதற்கான அனுமதி ஆணாதிக்கச் சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கலாம்.

Monday, 6 April 2015

அறிவைப் பெருக்கும் வழிகள் ஆறு.

பண்டைய நூல்களை வாசிக்கும்போது சில சொற்களுக்குப் பொருள் காண்பதோ கண்டவர் வாய்க் கேட்டறிவதோ மிகக் கடினமாக உள்ளது. உரை எழுதியவன் போகிற போக்கில் அருத்தாபத்தி என்பான்... அனுமானப் பிரமாணம் என்பான். அன்றைய காலத்தில் அது புரிந்திருக்கும். ஆனால் இன்று.........?!

என் புரிதலுக்காக இவற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தபோது இவை மனிதனின் அறிவைப் பெருக்கும் வாயில்கள் எனப்பட்டதும் இவற்றின் மூலமாகத்தான் அவன் அறிவைப் பெறுகிறான் என்பதும் தெரியவந்தது. தமிழில் அவை அளவைகள் எனப்படுகின்றன. அளவைகள் என்றால்........... அறிவை அளக்கும் அளவைகள். அறிவை அளந்து நாம் பெற்றுக் கொள்ள உதவும் அளவைகள்.

Friday, 3 April 2015

பெருமாள் முருகனின் அர்த்தநாரி – ஒரு பாமரனின் பார்வையில்.



மாதொருபாகனைத் தொடர்ந்தும் மாதொருபாகனின் சர்ச்சை பெரிதாக வலுப்பெறும் முன்பும் 2014 இன் இறுதியில் பெருமாள் முருகன் அவர்களால் அதன் தொடர்ச்சியாக இருநாவல்கள் எழுதப்பட்டன. மாதொருபாகனின் முடிவில் இருந்து கிளைத்துச் செல்லும் இரு முரணான பாதைகளைத் தேர்ந்தவை அவை.

மாதொருபாகனின் முடிவு, காளி தற்கொலை செய்து கொள்ளப் போகிறான் என்னும் குறிப்போடு முடிந்திருக்கத் தற்கொலை செய்து கொண்டான் ; உயிர்வாழ்கிறான் என்னும் இரண்டு சாத்தியங்களுக்கான வாசகனின் ஊகத்தினூடாக ஆலவாயனும் அர்த்தநாரியும் பயணிக்கின்றன. பொதுவாகவே நாவலின் இறுதி எவ்வாறு முடியலாம் என்னும் வாசகனின் சுதந்திரத்தை, எதிர்பார்ப்பை ஆசிரியரே முடித்துவைக்கும் அதிலும் இருவகை சாத்தியப்பாடுகளையுமே நிகழ்த்திக் காட்டும் மாதொருபாகனின் நீட்சியாக இவ்விரு நாவல்களையும் கொண்டு செல்கிறார். திரு.பெருமாள்முருகன்.