அவன்
அவளுடன் கொண்ட உறவை ஊர் அறிந்தது. அவளது உறவினர்களும்
அறிந்துவிட்டனர். “ இனி இவன் நம் ஊர் எல்லையில் கால் வைக்காமல் நாங்கள் பார்த்துக்
கொள்கிறோம். உங்கள் வீட்டுப்பெண்ணை நீங்கள் பத்திரமாய் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என
ஊர் அவளது பெற்றோர்க்கு அறிவுரை வழங்கிற்று.
எத்தகைய
காவல் இருப்பினும் தன்னைப் பார்க்க அவன் எப்படியும் வருவான் என்று அவளுக்குத் தெரியும்.
ஆனால்
வரும் வழியில் ஊரில் உள்ள யாராவது அவனைப் பார்த்தால்
அவனது நிலைமை என்ன ஆகும்?
“ அவனுக்கு
ஏதாவது நடந்தது என்னும் செய்தி என் காதில்
விழுந்தால் அடுத்த கணமே என் உயிர் உடலில் இருந்து
போய்விடுமடி!” எனத் தன் தோழியிடம் புலம்புகிறாள் அவள்.
தோழிக்கும்
அவளுக்குமான தொடர்பு இன்று நேற்றுத் தொடங்கியது
அல்ல.
விவரம்
தெரிந்ததில் இருந்தே அவர்கள் இணைபிரியாதவர்கள்.
ஒருவரை
விட மற்றவரை நன்கு அறிந்தவர்கள்.
தோழியின்
உள்ளம் நடுங்குகிறது.
எவ்வளவு
எளிதாகச் செத்துவிடுவேன் என்று சொல்கிறாள்.
நட்பையும்
விட்டுத் தொலைக்க வைத்துவிடுகிறதே இந்தப் பாழும் காதல்?
இருள்
அவள் மனம் கவிழ்கிறது.
…………………..
அவன்
உடல் தொப்பலாய் நனைந்திருக்கிறது.
அங்கு
ஊர்க்காவல் இருக்கிறது.
காவலன்
கண்களுக்கு யாரும் தப்ப முடியாது.
அவர்கள் கண்ணில் படாமல் நழுவி இங்குவர, இவ்வூரில் இவனுக்கு உதவி செய்ய யாரோ இருக்கிறார்கள்.
அவர்கள்
உதவியுடன்தான் இவன் இங்கு வந்திருக்க முடியும்.
இருந்தாலும்
யார் கண்ணிலாவது பட்டுத் தொலைத்தால்….?
“ என்
உயிர் போய்விடும் ”
என்ற
தலைவியின் குரல் இன்னொரு முறை எதிரொலித்து அடங்குகிறது அவள் செவியில்..!
தோழி
அவனிடம் சொல்கிறாள்,
“ உங்களுக்கு
முன்பெல்லாம் இனிதான காடு இப்போது கொடிய காடாயிருக்கும்.
நீங்கள்
வழக்கமாய் வரும் அவ்வழியில் வந்திருக்க முடியாது. உங்கள் வரவை எதிர்பார்த்து கண்டதும் கொல்ல அங்கு வளைந்த கால்களை உடைய ஆண் முதலைகள் காத்திருக்கும்.
காதலியைப்
பார்க்க வேண்டும் என்று உயிர் பற்றிய அச்சமின்றி
வரும் உங்கள் அன்பு பெரியதுதான். அது பாராட்டப்பட வேண்டியதும் கூட..!
ஆனால்
உங்களது காதலி இருக்கிறாளே…! அவளுக்கு நீங்கள் எப்படியும் அவளைப் பார்க்க வருவீர்கள்
என்பது தெரியும். ஆனால் அவள் இந்த ஊராலும் அவள் உறவாலும், உங்களுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ
என்று அழுது புலம்புகிறாள். ஆற்றமுடியாததாய் இருக்கிறது அவளது அவலம். அவளை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு
ஏதாவது நேர்ந்தது என்றால் அதன்பின் அவள் ஒரு கணம்
கூட உயிர் தரித்திராள்.
இணைபிரியாத அவளுடைய இந்த நிலையைக் கண்ட என் நிலைமையோ, உடலொட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில்
ஒன்று நஞ்சினை உண்ண, ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இன்னொன்று செய்வதறியாது துடிப்பதைப் போல
இருக்கிறது.”
நட்பின்
இறுக்கத்தை இதைவிட நுட்பமான உவமை மூலம் விளக்கிவிட முடியாது என்று தோன்றுகிறது.
உடலொட்டிய
இரட்டையர் என்பவரைப் பழந்தமிழர் கவைமகன் என்ற பெயரால் குறித்திருக்கின்றனர்.
கவை என்பது
ஒன்றிலிருந்து கிளைத்து இரண்டாதல் என்னும் பொருளை உடையது.
மரத்தின் கிளை இரண்டாகப் பிரிதலைக் கவை என்று சொல்லும் மரபு உண்டு.
மரத்தின் கிளை இரண்டாகப் பிரிதலைக் கவை என்று சொல்லும் மரபு உண்டு.
“கவையாகிக்
கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்” என்பாள் ஔவை.
கவண்,
கவட்டை, என்பவை ஒன்றிலிருந்து இரண்டாகப் பரியும் பொருளைக் குறித்து வருபவை.
இதோ பாடல்,
“ கொடுங்கான் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
இனமீ னிருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையி னுயங்கும் யானது
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே.” ( குறுந்தொகை – 324 )
சொற்பொருள் விளக்கம்.
கோள் வல் முதலை ஏற்றை – கொல்லும்
வலிமை உடைய ஆண் முதலையானது
வழி வழக்கு அறுக்கும் – செல்லும்
வழியின் குறுக்கே கிடந்து அந்த வழியில் செல்லவிடாமல் தடுக்கும்.
( எனவே
வழக்கமாய் வரும் அவ்வழியில் வர இயலாமல் நீ )
கானலம் – கடற்கரையின்
பெருந்துறை இருங்கழி - பெரிய
ஆறு கடலில் சேர்கின்ற இடத்தில்
இனமீன் நீந்தி – மீன்
கூட்டங்கள் நிறைந்த இடத்தில் இருந்து நீந்தி
நீ நின் நயனுடைமையின் வருதி – நீ
அவள்பால் உள்ள அன்பினால் ( ஆபத்தினைக் கண்டு
அஞ்சாமல்) அவளைத் தேடி வருகிறாய்.
இவள் தன் மடன் உடைமையின் உயங்கும் – இவளோ
நீ வரும் வழியில் உனக்கு என்ன ஆபத்து நேருமோ என்றும் அவ்வாறு நேர்ந்தால் அதன்பின் ஒரு கணம் கூட உயிர் வாழேன் என்றும் எண்ணிக்
கலங்குகிறாள்.
யான் அது நெஞ்சத்தானே – ( அதைக் காணும் ) எனது
நெஞ்சமோ,
கவைமகன் நஞ்சு உண்டாங்கு – ஒட்டிப்
பிறந்த இருவருள், ஒருவன் நஞ்சினை உண்ண இன்னொரு உடலும் மடியத் துடிப்பது போல
அஞ்சுவல் பெரும! - அஞ்சித் துடிதுடிக்கிறது தலைவனே!
( எனவே,
விரைவில் அவளை உன்னுடன் அழைத்துச் சென்று அவள்படும் துயரை ஆற்றுவாயாக )
……………………
கவைமகன்
சென்ற
பதிவில் சொல்லப்படாத உடற்குறை இதுதான்.
நட்பின்
ஆழத்தை இவ்வளவு அழகான உவமை கொண்டு விளக்கிய புலவரின் பெயரைக் காலம் அழித்துவிட்டது.
பிறவிக் கோளாறுகளின் வகைகள் என்ற பதிவின் தொடர்ச்சி.
பட உதவி - நன்றி. http://www.brepettis.com
Tweet |
சுவைபட சொல்லிச் சென்றீர்கள் ஐயா.
ReplyDeleteசங்க காலப் பாடல்களை எப்பொழுதும் ஆர்வமுடன் கற்கத் தூண்டுகிறது தங்கள் பதிவு.
தங்களின் தொடர் வருகைக்கும் முதற் கருத்திற்கும் நன்றி ஐயா.
Deleteசங்க காலத்துப் புலவர்களின் புலமை கண்டு வியந்து நிற்கின்றது மனம் !
ReplyDeleteமிகவும் அருமையான படைப்பு ! மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘கவைமகன் நஞ்சு உண்டாங்கு’ ஒட்டிப் பிறந்தவர்கள் ...ஒருவர் செய்வதற்கு மற்றவர் என்ன செய்ய முடியும் என்றாலும் ஒட்டிப் பிறந்தவர்கள் போல தோழி தலைவியின் காதலை வெட்டி விடாமல் ஒட்டிவைக்க துடிக்கும் துடிப்பு அருமை.
நன்றி.
த.ம. 3
ஐயா வணக்கம்.
Deleteதட்டச்சுச் செய்ய இயலா சூழலிலும் உடல்நலனையும் பாராது இங்கு வந்து கருத்திடுகின்றமைக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும்.
அருமையான பதிவு. ரசித்துப் படித்தேன்.
ReplyDeletehttp://newsigaram.blogspot.com
தங்களின் வருகைக்கும் முதல பின்னூட்டத்திற்கும் நன்றி திரு. சிகரம்பாரதி.
Deleteவணக்கம் ஆசானே, அருமையான விளக்கம், வேறு என்ன சொல்ல,
ReplyDeleteநன்றி.
தங்களது பாராட்டிற்கு நன்றி பேராசிரியரே.
Deleteஎப்படி ஒரு நட்பு! வாவ்! காதல், நட்பு, எதிர்ப்பு, உதவி எல்லாம் அழகாகச் சொல்லும் பாடல்..
ReplyDelete(இப்போ ஒரு வரிக்கு நாலு அந்நிய வார்த்தை பயன்படுத்துவதை நினைத்தால்...)
த.ம.+1
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிசகோ.
Deleteதங்களின் சங்க இலக்கியப் பதிவிற்குக் காத்திருக்கிறேன்
நன்றி.
வெகு அபூர்வம் இப்படிப் பட்ட நட்பு அமைவது. அமைந்தால் வேறென்ன வேண்டும் உலகில். ம்..ம்.ம் கவைமகன் பற்றி எவ்வளவு அழகா காவிதையிநூடே கொண்டுவந்து புரிய வைத்துள்ளீர்கள்.எப்போதும் போல். அருமையான பதிவுகள் மூலம் எவ்வளவு விடயங்களை இலகுவாக கற்றுக் கொடுக்கிறீர்கள். wow மிக்க நன்றி ஐயா! தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மை
Deleteவணக்கம் பாவலரே !
ReplyDeleteகவையெனும் ஓர்சொற் கருப்பொருள்! ஆன்றோர்
அவையில் அளித்ததைப் போலும் - சுவைமிகக்
கூட்டிக் கொடுத்தவிதம் கூர்மதி யாள்ஔவைப்
பாட்டியை ஒத்ததோர் பண்பு !
இவ்வளவு அழகாகச் சொல்லிப் புரியவைத்த புலமைக்கு கோடானு கோடி நன்றிகள்
இன்னும் நாங்கள் படிக்க ஏராளம் உண்டு தொடர்ந்து தர வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள் பாவலரே வாழ்க வளமுடன்
தமிழ்மணம் +1
தங்களது இனிய வெண்பாவிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நன்றி கவிஞரே!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
அழுதமாய் சொல்லிய வார்த்தைகள்
கரை சேரும் கலங்கரை விளக்கு போல்
அருவியாய் கொட்டும் வார்த்தைகள்.
அற்புத விளக்கு போல் மின்னுது..... ஐயா
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது தொடர்வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திரு. ரூபன்.
Deleteநட்பின் பெருந்தக்க யாவுள
ReplyDeleteநன்றிநண்பரே
தம 9
ஏதுமிலை ஐயா.
Deleteபெண்ணின் பெருந்தக்கவும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
உங்களுக்கு ஏதாவது நேர்ந்தது என்றால் அதன்பின் அவள் ஒரு கணம் கூட உயிர் தரித்திராள் என்ற சொற்றொடர் ஏதோ நம்மிடம் நேராகப் பேசுவது போல உள்ளது. நல்ல பதிவு.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வளமார் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.
Deleteஎன்னவொரு விளக்கமான பதிவு... சொன்ன விதம் ரொம்ப அருமை ஐயா...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅப்போதெல்லாம் இப்போது போல் சுய தம்பட்டம் அடித்துக்கொள்வோர் இல்லைபோலும். அந்த படைப்பாளிகள் தங்களின் பெயரை தெரிவிக்காமல் இருந்ததன் காரணமாகவே, அவர்களின் பெயர் தெரியாததால் அவர்களை கவை மகன் என்றும் காக்கை பாடினியார் என்றும் அழைத்தார்கள் போலும். இது குறித்து நீங்கள் ஒரு பதிவிடலாமே.
ReplyDeleteஒரு புதிய சொல்லை அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி!
ஐயா வணக்கம்.
Deleteநம் சங்கப்பாடல்கள் பலவும் வாய்மொழி மரபில் இருந்து தொகுக்கப்பட்டவை என்ற பார்வை உண்டு.
தொன்மை மொழிகளில் உள்ள இலக்கியங்கள் பலவும் வாய்மொழி மரபில் இருந்து தொகுக்கப்பட்டனவே.
சங்க இலக்கியத்தின் சில பாடல்களும் வாய்மொழி மரபில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளன.
வாய்மொழி மரபில் பாடலே பிரதானம் அன்றி அதை ஆக்கியவன் பெயர் இரண்டாம் பட்சமே.
அப்படிப் பட்ட இயற்றிய புலவர்களின் விடுபடல்கள் தொகுப்பின் சில பாடல்களுக்கு நேர்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
பெயர் அறியாப் புலவர்களுக்குப் பாடலின் சிறந்த சொல்லாட்சி கொண்டு பெயர் வைத்ததில் ஒரு நுட்பம் இருக்கிறது.
ஏதேனும் ஒருபதிவில் அதுபற்றிச் சொல்ல உங்கள் ஆலோசனை உதவும்.
சுயதம்பட்டம் பற்றி தமிழின் இரு கருத்துகளை இங்கு சொல்லத் தோன்றுகிறது.
ஒன்று தன்னைத்தான் புகழ்தல் தகாது என்பது பற்றியது,
”தோன்றாத் தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி யன்றே”
( பலரால் முடியாத ஒன்றைச் செய்து பல்துறை அறிவைப் பெற்றிருக்கும் ஒருவனது தகுதி, இதை நான் பெற்றிருக்கிறேன் என்ற மாத்திரத்தில் இல்லாமல் போகிறது.)
சரி இத்தகு திறமை படைத்தவர் பற்றி அடுத்தவர் வியந்து கூறுவது தகுமோ எனின்,
“மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.“
என்றும் கூறப்பட்டிருக்கிறது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வணக்கம் என் ஆசானே,
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் தங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது,
நன்றி.
வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி பேராசிரியரே!
Deleteநட்பின் இறுக்கத்தைச் சொல்லும் உவமையை மிகவும் ரசித்தேன் என்பது தவிர வேறென்ன சொல்ல. ?வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
Deleteஇதன் முற்பகுதியையும் படித்துவிட்டே, இரண்டுக்குமான கருத்தை இங்கே பதிகிறேன்.
ReplyDeleteஆக, இப்பொழுது இருக்கும் பல பிறவிக்கோளாறுகள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கின்றனவா? இதுவரை, சித்த மருத்துவம் பற்றி நிறையவே படித்திருக்கிறேன். எல்லோரும் அந்தக் காலத்திலேயே எயிட்சு இருந்தது, இளம்பிள்ளைவாதம் இருந்தது, இவற்றுக்கெல்லாம் மருந்துகளும் இருந்தன என்றுதான் எழுதியிருக்கிறார்களே தவிர, இப்படிப்பட்ட பிறவிக் கோளாறுகள் இருந்ததைப் பற்றி இதுவரை எந்த சித்த மருத்துவரும் எழுதி, நான் படித்ததில்லை. மிகவும் அரிய தகவலைப் பதிந்திருக்கிறீர்கள்! நன்றி ஐயா!
ஐயா வணக்கம். மருந்து என்னும் அதிகாரத்தின் பரிமேலழகர் உரை இப்படித் தொடங்குகிறது.
Delete“பழவினையானும், காரணங்களானும் மக்கட்கு, வாத முதலிய பிணிகள் வரும். அவற்றுட் பழவினையான வருவன அதன் கழிவின்கண் அல்லது தீராமையின் அவையொழித்து, ஏனைக் காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின் திறங்கூறுகின்றார்.“
இதில் பரிமேலழகர் கூற வருவது “ நோய்கள் இரண்டு வகையால் தோன்றுவன.
ஒன்று- பழவினையால் தோன்றும் பிறவிப் பிணிகள்.
இரண்டு- பிறந்தபின் ஏதேனும் காரணங்களால் தோன்றுவன.
இவ்விரண்டில், முதலில் சொல்லப்பட்ட முன்வினையால் தோன்றிய (?) பிறவிக்குறைபாடு, அப்பிறவி முடியும் மட்டும் தீராது.
பிறந்த பின்ஏதேனும் காரணங்களால் தோன்றும் பிணிகளுக்குத்தான் மருந்து ஆற்றவல்லது “ என்பதே.
இது அக்கால மருத்துவக் கருத்தே.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
கூடுதல் விளக்கத்துக்கு நன்றி ஐயா!
Deleteமிக அருமையான விளக்கம்! இந்த பாடலை நான் படித்து இருந்தாலும் நீங்கள் சொன்ன விளக்கம் நெஞ்சில்பதிகின்றது! கவை மகன் என்ற விளக்கமும் அறிந்தேன்! நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு தளிர் சுரேஷ் அவர்களே.
Deleteவலைச்சரம் பக்கம் வாருங்களேன் என் ஆசிரியப் பொறுப்பில் உங்கள் தளம் அடையாளப் படுத்தப் ப்ட்டு இருக்கிறது
ReplyDeleteதங்களால் அடையாளம் காட்டப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.
Deleteநன்றி.
நட்பின் அன்பிருக்கம்......அழகான சங்ககாலப்பாடல் விளக்கம் சகோ
ReplyDeleteதம +1
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
Deleteஎத்தனை அபூர்வமான தோழியவள்.. ஆனால் அவளை சும்மா இருக்க விடுகிறாளோ தலைவி
ReplyDeleteஉள்ளார் கொல்லோ தோழி....
..........
நோம்என் நெஞ்சே நோம் என்நெஞ்சே...
.... இப்படியெல்லாம் புலம்பி என்ன பாடு படுத்துகிறாள்.
"கவைமகன்" சென்ற பதிவின் பதிலையும் அழகான ஆழமான பொருள் தந்த குறுந்தொகைப்பாடலும் மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது.
பகிர்வுக்கு நன்றி ஆசிரியரே.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே.
Deleteகவை மகன் எவ்வளவு அழகான சொல்! இச்சொல்லின் ஒரு பகுதி மரத்தோடு சம்பந்தப்பட்டது என நீங்கள் குறிப்புக் கொடுத்திருந்ததால் மீண்டும் மீண்டும் கிளை என்ற சொல்லை அடிப்படையாக வைத்து யோசித்துப்பார்த்தேன். கவை என்ற சொல் என் நினைவுக்கு வரவே இல்லை. நட்பின் ஆழத்தை இதை விடப் பொருத்தமான உவமை சொல்லிப் புரிய வைக்க முடியாது தான். பாம்பு பூத்த குளம் போல இதுவும் புதுமையான உவமை! அழகான பாடலையும் புதுமையான பொருள் பொதிந்த உவமையையும் நாங்கள் ரசிக்கும்படி சுவையாக அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ. த ம வாக்கு 14.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ.
Deleteதங்களின் ரசனைக்கு நன்றிகள்.
சமயம் பற்றிய பதிவைத் தொடரலாமா..? :(
சமயம் பற்றிய பதிவைத் தொடரலாமா..? :( ஹா ஹா ஹா! மாணவர்களிடம் 'அனுமதி,' கேட்டு, ஆசிரியர் பாடம் நடத்தும் காலமிது அல்லவா? தாராளமாகத் தொடரலாம். சங்க இலக்கியப் பாடம் துவங்கிய சமயத்தில் "திணை வகுத்தல் அதில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி நிச்சயம் விவாதிப்போம்," என்று தாங்கள் சொன்னதையும் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.
Deleteகவர்ச்சியான தலைப்பு கொடுத்து அந்த சுவாரசியம் குறையாமல் சங்கப் பாடல் அழகை விவரித்தது அருமை
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅண்ணா,
ReplyDeleteஅது என்ன ஆன்மாவை தொடும் இசையைப்போல, மனக்கண்ணில் பதிந்துவிட்ட ஒரு புகைப்படம் போல, நின்று சுடர் விடும் தீபம் போல அழகும், நிறைவுமாய் இப்படி ஒரு எழுத்தை எங்கு பெ(க)ற்றீர்கள் !!!!!! குறுந்தொகை தோழியின் நட்பைபோல உங்கள் எழுத்துக்களும் கடந்து நிற்கத்தான் போகிறது:) இனி வழமைபோல அருமை என்று சொல்லவும் வேண்டுமோ!!!!
உண்மையாகவா?
Deleteமிக்க மகிழ்ச்சி !!
அக்காலத்திலேயே பிறவிப் பிணிகள் பற்றிப் பேசியிருப்பது நாம் எத்தனை நல்ல விடயங்களை அறியாமல் போய்விட்டோம் என்றே தோன்றுகின்றது. நம் மக்கள் எதையுமே வெளிப்படுத்தாமல் எல்லோரும் அறியும் வகையில் செய்யாமல் இருந்ததால் இருக்குமோ....மேலை நாட்டு மருத்துவம் ஆங்கில மருத்துவம் எல்லாமே வெளிப்படையாகப் பேசப்படுவதால் பிராபல்யமானதோ?
ReplyDeleteபிறவிப் பிணிகள் முற்பயன் என்று சொல்லி இருப்பது இந்த ஜீன் சம்ப்ந்தப்பட்டதோ? நம் மூதாதையர்களின் ஜீன் கூட வரக் காரணமாயிருக்கலாம் என்பதால்தான் இதை முற்பிறவியின் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்களோ?!!
அழகிய பதிவு சென்ற இடுகைக்கும் சேர்த்து கருத்து....
கவை மகன் புதிய ஒரு சொல்லை அறிந்தோம். ஆசானே மிக்க நன்றி! சயாமீஸ் இரட்டையர்கள் என்று சொல்லப்படுவதுதானே கவை மகன்....???!!! நல்லபதிவு எளிமையாகப் புரியவைக்கும் பதிவு! ஆசானே வாழ்த்துகள்!
ReplyDeleteவணக்கம்!
குறுந்தொகை தந்த குளிர்தமிழ் கண்டு
பெறுஞ்சுவை ஓங்கிப் பெருகும்! - நறுந்தொகைப்
பாக்களை தேடிப் படைக்கின்றீர்! என்னன்பு
பூக்களைத் தந்தேன் புகழ்ந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
பாக்களைத் தேடிப் படைக்கின்றீர்
Deleteஎன்று படிக்குமாறு வேண்டுகிறேன்
ReplyDeleteமீண்டும் வணக்கம்!
கொடுங்கான் முதலைக் கோள்வ லேற்றை என்ற அடிக்கு
கொடிய காட்டில் வாழும் முதலை என்று பொருள் எழுதியுள்ளீர்
கொடுங்கால் முதலை என்றே பொருள் காணவேண்டும்
கொடுங்கால் - வளைதலையுடை கால்
மேலும், தாங்கள் உரைத்த உரை முன்னோர் உரைக்கு மாறுபட்டுள்ளது.
ஐயா வணக்கம்.
Deleteகொடுங்கான் என்பதற்குத் தாங்கள் காட்டிய கொடுங்கால் என்ற புணர்ச்சிக்குட்பட்ட வடிவம் சரிதான்.
குறிஞ்சிப்பாட்டில்,
“ஒடுங்கு இரு குட்டத்து அரு சுழி வழங்கும்
கொடு தாள் முதலையும் இடங்கரும் கராமும்” (256-257)
என்னும் வரிகளை விளக்கும் நச்சினார்க்கினியர் ‘புடைபட்ட கரிய ஆழத்திடத்துப் போதற்கரிய சுழியிடத்தே திரியும் வளைந்த தாளையுடைய முதலையும் இடங்கரும் கராமும்’ என்று கூறி ‘இவைமூன்றும் சாதிவிசேடம்.’ என்பதை நோக்க இது முதலையுள் ஒருவகை என்று விளங்குகிறது.
திருத்தி விட்டேன்.
சுட்டியமைக்கு மிக்க நன்றி.
அடுத்ததாய்,
நான் உரைத்தது முன்னோர் உரைக்கு மாறுபட்டு உள்ளது என்கிற தங்களின் கருத்திற்கு வருகிறேன்.
அதற்குமுன் பதிவினைப் படிப்பதோடு மட்டும் அல்லாமல் மூல உரைகளையும் பார்த்து நெறிப்படுத்தும் தங்களின் அன்பினுக்கு என்றும் நன்றியுடையவனாவேன்.
இது வெறும் பேச்சல்ல.
தாங்கள் முன்னோர் உரை எனக் குறித்தது உ.வே.சாமிநாதையரின் உரையாய் இருக்கும் என்ற கணிப்பிலேயே அது குறித்து இங்குக் கூறுகிறேன். (வேறவரின் உரையெனின் நான் மாறுபட்ட இடத்தை அறியத்தாருங்கள்.)
உ.வே.சா. அவர்கள் “கவை மகன் நஞ்சு உண்டாங்கு அஞ்சுவல்“ என்பதற்கு,
“இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர்திறத்தும் ஒரு தாய் வருந்துவது போல, - நீ அங்ஙனம் வருதலை அஞ்சுவேன்“ எனப்பொருள் கூறி அதன் விளக்கமாக. “ “இரண்டு மகவினுக்கும் ஒருங்கே நஞ்சு தீர்க்கும்மருந்து தருதலே தக்கதாதல் போல, இருவருக்கும் நன்மை தரும் வரைவே ஏற்புடைத்து“ எனத் தோழியின் கவைமகன் நஞ்சுண்டல் உவமை பொருள்படுவதாகக் காட்டுகிறார்.
நல்லவேளையாகக் கவைமகன் என்பது இரட்டையரைக் குறிக்கும் என்பதை அவர் மறுக்கவில்லை. ஏனெனில் பதிவு அவ்வொருசொல்லின் விளக்கத்திற்காய் அமைக்கப்பட்டதுதான்.
தலைவி பிறந்ததில் இருந்தே தலைவியின் மாட்டு அன்புடையவள்.
தலைவி விரும்புவதால் மட்டுமே தலைவியின் நலனுக்காக அவள் தலைவன் பால் அன்புடையவள் ஆகிறாள்.
எனவே தோழி தலைவிமாட்டு கொண்ட அன்பை ஒப்பிட, அவள் தலைவன் மாட்டுகொள்ளும் அவ்வன்பில் வேறுபாடு உண்டு.
அதே நேரம் ஒருதாய் தன் இரட்டைக் குழந்தைகளிடம் காட்டும் அன்பு வேறுபாடு உடையதல்ல.
இங்குத் தாயைத் தோன்றா எழுவாயாகக் கொண்டால், தலைவி இடத்தும் தலைவனிடத்தும் தோழி கொண்டுள்ள அன்பு சமம் என்றாகிறது.
ஆனால் தோழி தலைவனைவிடத் தலைவியிடத்துப் பேரன்பு பூண்டவள்.
ஒருவேளை தலைவனுக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தாலும் அதைத் தாங்க இயலாத தலைவியை தேற்றவேண்டியவள்.
அதேநேரம், தலைவிக்கு ஏதேனும் நேர்ந்தால் அதைத் தாங்க ஒண்ணாத அன்பினள்.
எனவே தோழியும் தலைவியும் ஈருடல் ஓருயிர் என்றிருத்தலுக்குக் கவைமகன் என்னும் உவமை நன்கு பொருந்துவதாகக் கருதுகிறேன்.
அன்றி உ.வே.சா. அவர்கள் பொருள்காண்பதைப் போல, தாயைத் தோன்றா எழுவாயாக்கி இருமக்களுள் எவருக்கு இடரெனினும் தாய் வருந்துவதுபோலத் தலைவனுக்கோ தலைவிக்கோ இடரெனின் தோழி ஒரே போல வருந்துவாள் என்பது அவ்வளவு பொருள் சிறப்பதாய்த் தோன்றவில்லை. தலைவியும் தோழியும்தான் கவை மக்கள் என்று நான் பொருள் கொள்ள நேர்ந்ததன் காரணம் இதுவே.
அது அவரிடையே உள்ள நட்பிற்கான மிகப்பொருத்தமான உவமையாக எனக்குத் தோன்றியது.
தமிழ்ச்சங்க இலக்கியங்களை ஆய்ந்த ஹெர்மன் டீக்கன் சங்க இலக்கிய மொழிபெயர்ப்புக் குறித்துச் சொல்லும் கருத்து உரைகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
“சங்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பவர்கள் அவற்றிற்கான உரைகளை மொழிபெயர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
பாடலின் பொருளைப் பாடலின் வழி உணர்ந்து மொழிபெயர்க்க இவர்கள் முயலவேண்டும்”
என்னைப் பொருத்தவரை, இப்பதிவுகளில் சங்கப்பாடல்களை அணுக உரைகளைத் துணையாகக் கொள்கிறேன்.
அதே நேரம் நான் மூலமாகக் கொள்வது சங்கப்பாடல்களையே அன்றி உரைகளை அல்ல.
“முன்னோர் உரைமரபைப் போன்னேபோற் போற்றுதலும்
இன்னுங் கவியாழ மீர்த்திடலால் – சொன்னயத்தின்
கன்னில் கருத்துதிக்கும் காட்சிகளின் கட்டறுத்துச்
சொன்னேன் தமிழின் சுவை!
தோற்றப் பிழையிருப்பின் தோற்கும் பொருளுரைத்து
வேற்றுக் கருத்தாள விட்டிருப்பின் – மாற்றெனவே
கூறவது மீறலிலை சாறுதமிழ்ச் சேருபொருள்
ஊறடக்கத் தேறுமிவ் ஊன்!
தங்களின் வருகைக்கும் வழிப்படுத்தும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
Deleteவணக்கம்!
அன்பின் மிகுப்பால் அளித்த கருத்தாய்ந்தே
இன்பச்சீர் பாய எழுதுகின்றீர்! - என்..நன்றி!
உங்கள் பதிவுகளில் ஊறும் தமிழ்ச்சுவையை
இங்கெவர் ஈவார் இனி?
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
அருமையான பதிவு... அறிந்திராததை அறிய தந்தமைக்கு....
ReplyDelete