Thursday 25 June 2015

விடுகதை தெரியும்! அதென்ன விடுகவி?-;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-(10)
சமணத் தத்துவத்தில் முக்கியமான ஒன்று அநேகாந்தவாதம் என்பது. உண்மை அதன் இன்மைகளாலும் ஆனது என்பது அதன் அடிப்படை. சற்று விளக்க வேண்டும் என்றால், ஒரு பொருளில் உள்ள குணங்கள் மட்டுமே அப்பொருளைத் தீர்மானிப்பதில்லை. அதில் இல்லாத குணங்களும் அப்பொருளினைத் தீர்மானிக்கும் காரணிகளாகின்றன என்பர் சமணர்.

முதலிலேயே குழப்புகிறேனா..?!

இப்படிச் சொன்னால் புரியும் என நினைக்கிறேன்.

“அந்தப் பொண்ணு எப்படி இருந்தா?”

என்ற கேள்விக்கு,

“சிவப்பா உயரமா இருந்தா” என்று ஒருவர் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

அந்தப் பெண்ணின் தோற்றம் சிவப்பாய் உயரமாய் இருக்கிறது என்பது உண்மை.

ஆனால் இந்த உண்மையைக் கொண்டு மட்டும்தான் அப்பெண்ணைத் தீர்மானிக்க வேண்டும் என்பதில்லை.

அவள்  கருப்பாய், நீலமாய், பச்சையாய், எனப் பிற நிறங்களில் இல்லை என்பதும், குட்டையாய் இல்லை என்பதும் அவளது இயல்புதானே?

இப்படிப் பெண் என்றல்ல. இவ்வுலகின் எப்பொருளையும் அதன் ஒற்றை இயல்பாயன்றி  அவற்றின் இயல்பின்மைகளாலும் தீர்மானிக்க முடியும்.

இதைத்தான் சமணர்கள் ஒரு பொருள் உண்மைகளால் மட்டுமன்றி இன்மைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள்.

ஒரு பொருளை ஒரு கோணத்தில் இருந்து பார்த்து அது இப்படித்தான் இருக்கிறது என வாதிடுவது அப்பொருளை முற்றிலும் அறிந்ததாகாது என்று வாதிடுவர் சமணர். 

இதை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். ஏனெனில், இந்தப் பதிவு சமணம் பற்றியதல்ல.


யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் என்னும் பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர் முருகேச பண்டிதர் என்பவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மயிலணி சிலேடை வெண்பா, ஊஞ்சல் பதிகம் முதலிய நூல்கள் இவரால் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. என்னைப் போன்றவர்களால் அதிகம் அறியப்படாத ஆனால் அறியப்பட வேண்டிய ஆளுமை இவர்.

இவர் எழுதிய பாடலுள் ஒன்று,

“நாலுகால் படைத்திருக்கும், நடப்ப தில்லை!

       நம்மைப்போல் இருகையுண்டாம், பிடிப்ப தில்லை!

ஏலவே பின்னலுண்டாம், முடிப்ப தில்லை!

      இடையிடையே கண்களுண்டாம், பார்ப்ப தில்லை!

கோலமுடி அரசருக்கும் எல்லா ருக்கும்

      கொடுத்திடுமுட் காருதலைத் தவிர்ப்ப தில்லை!

சீலமிகு பொருள்விளங்க எங்கு மாகித்

      திகழுதய பானுவே செப்பு வாயே!

இந்தப் பாடலைப் பார்த்தபோது தோன்றிய சமணரின் கருத்துத்தான் இப்பதிவின் தொடக்கத்தில் இருப்பது. ஏனெனில் இப்பாடலும் உண்மையின் இன்மையில் இருந்து பொருள் ஒன்றை உருவாக்கிக் காட்டுகிறது.

இப்பாடலில் புதிர் ஒன்றிற்கான குறிப்புகளைத் தருகிறார் முருகேச பண்டிதர்.

நான்கு கால்கள் இருக்கும். ஆனால் நடக்காது.

நம்மைப்போல் இரண்டு கைகள் உண்டு. ஆனால் பிடிக்காது.

பின்னப்பட்டதால் பின்னல்கள் உண்டு. ஆனால் அதனால் அள்ளி முடிக்க முடியாது.

பின்னலின் இடைவெளிக் கண்கள் உண்டு . ஆனால் அதனால் காண முடியாது.

என்று வரிசையாய்க் கூறி,

அரசர்க்கு அமர இடம் தரும். அடுத்தவர் அமரினும் அதைத் தவிர்க்காது என்ற புதிரை விடுவிப்பதற்குரிய இறுதிக் குறிப்பொன்றை அளித்து,

“ உதய பானுவே இதற்குச் சரியான விடையைச் சொல்!” என்கிறார் புலவர்.

இது போன்ற புதிரை அவிழ்க்கும் கவிதைகள் தமிழில் விடுகவிகள் எனப்பட்டன.

இதில் கவிதை நயம் கொஞ்சம்தான். ஆனால் புலவனின்  சொல்வன்மையைத்தான் இங்கு நாம் ரசிக்க வேண்டும்.

ஒரு பொருள் பற்றிய நுட்பமான பார்வையை இந்தப் பாடல் காட்டுகிறது.

இனி கொஞ்சம் இலக்கணம்.

இலக்கணத்தில் இதுபோன்று அமையும் பாடலை விரோதச் சிலேடை என்று சொல்கிறார்கள்.

சிலேடை என்பது நமக்குத் தெரியும் ஒரே நேரத்தில் இரண்டு பொருள்பட ஒரு சொல்லையோ தொடரையோ கூறுவது.

அந்தமானைப் பாருங்கள் அழகு ”  என்பதைப் போல!

சிலேடை என்பதைத் தூயதமிழில் இரட்டுற மொழிதல் என்பர்.

அது என்ன விரோதச் சிலேடை..?

இருபொருளின் ஒப்புமையை முதலில் சொல்லிவிட்டு அதன் பின்னர் அவ்விரண்டிடையே உள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுவது.

இவ்விலக்கணப்படி இந்தப் பாடலைப் பின்வருமாறு காணலாம்.

பாடலைப்படிக்கும் போதே  விடையைக் கண்டுபிடித்தவர்கள் அமர்ந்து கொள்ள

“நாலுகால் படைத்திருக்கும்” என்பது விலங்கிற்கும் நாற்காலிக்கும் ஒப்புமையானது.

நடப்பதில்லை” என்பதால் இங்கு விலங்கு தவிர்க்கப்பட்டு நாற்காலி பொருளானது.

கை இருந்தல் மனிதருக்கும் நாற்காலிக்கும் பொது.

பிடிப்பதில்லை என்பதால் அது மனிதரின் கையாகாமல் நாற்காலியின் கையானது.

பின்னி இருத்தல் என்பது   முடி வளர்த்தவர்களுக்கும் பின்னப்பட்ட நாற்காலிக்கும் பொது.

(அள்ளி) முடிப்பதில்லை என்பதால் அது தலைமுடிப் பின்னலைக் குறிக்காமல் பின்னப்பட்ட நாற்காலியைக் குறித்தது.

கண்கள் இருத்தல் என்பது காணும் உயிர் அனைத்திற்கும், சிறு இடைவெளி வைத்துப் பின்னப்பட்ட நாற்காலிக்கும் பொது.

காண்பதில்லை என்பதால் அது கண்ணுடைய உயிர்களை விலக்கி, நாற்காலியைக் குறித்தது.

இவ்வாறு, இரண்டின் பொதுமையை முதலில் கூறி ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறு படுத்திக்காட்டுவதுதான் விரோத அணி.

நாற்காலியை இலங்கைத் தமிழில்  கதிரை என்கிறார்கள்.

இவ்வழக்கு நான் அறியாதது.

வாருங்கள். நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.

படங்கள் உதவி- நன்றி 1) http://4.bp.blogspot.com/
                              2) https://encrypted-tbn2.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

62 comments:

 1. அன்புள்ள அய்யா,

  ‘விடுகவிகள்’ - விரோத அணியை யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் என்னும் பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர் முருகேச பண்டிதர் இயற்றிய பாடலின் மூலம் விளக்கிய விதம் அழகு. தமிழுக்கு நாற்காலி போட்டு அமரவைத்தது பெருமை.... அருமை!

  நன்றி.
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.

   தங்களின் உடனடி வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.

   நன்றி

   Delete
 2. விரோதச் சிலேடை....வியப்பு
  பாடல் படிக்கையிலேயே நாற்காலி என நினைத்தேன்...சரியாக உள்ளது,,

  கதிரை...தெரிந்து கொண்டேன்...இலங்கைத்தமிழில் நாற்காலியென....

  தொடர்கிறேன் சகோ

  தம 3

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சகோ.

   Delete
 3. பல் புதிய செய்திகளை அறிந்து கொண்டேன் சுருக்கமாகச் சொல்கிறேன்.பதிவின் சிறப்பு--சொல்லால் வசப்படுமோ சொல் பொருளும் ஒத்திடுமோ?

  ReplyDelete
 4. விடுகவி பற்றி தற்போதுதான் அறிந்தேன். தங்களின் இத்தொடர்மூலமாக பல அரிய செய்திகளை அறிகிறோம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

   Delete
 5. ஆனா, இந்த டைப் கதிரை எனக்குப்பிடிக்கதே!! கொஞ்சம் வயசாளிகளும், அதிகாரத்தை நிலைநாட்டும் செயலோடும் இருப்பதாக தோன்றுகிறது. so கண்டுபிடித்த எனக்கு bean bag வேணுமாக்கும்:)))

  ReplyDelete
  Replies
  1. பீன் உண்டாம் பின்னலில்லை
   கண்களுண்டாம் தோல் கொண்டு மூடி
   உட்காரலாம் கதிரை இல்லை
   அந்த bean bag தான் வேணுமா தோழி? :-)

   Delete
  2. இதோ சகோ கிரேஸ் அவர்கள் இன்னொரு விரோதச் சிலேடை எழுதத் தொடங்கிவிட்டார்.

   நீங்கள் அதை எடுத்துக் கொள்ளலாம். :)

   நன்றி சகாஸ்.

   Delete
 6. பிடிக்காதே ன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ளே ஒரு கால் ஒடஞ்சுடுச்சே!!!

  ReplyDelete
  Replies
  1. கதிரை பிடிக்கா விட்டால் மாற்றிடுவோம். ok வா உங்க அண்ணன் தானே மாத்திடுவார். பாருங்க. அப்போ எப்பிடி வேண்டுமின்னு மட்டும் சொல்லிடும்மா அம்மு.

   Delete
  2. ஒருகால் பிடிக்காததால் இருக்குமோ:)

   Delete
 7. பதவி 'நாற்காலி'யில் அமர ,கட்சியிலேயே 'விரோத அணி' உருவாகுவது சகஜம்தானே :)

  ReplyDelete
  Replies
  1. எதற்கும் எச்சரிக்கையாய் இருப்பொம் என்றுதான் பதிவின் முதலிலேயே அநேகாந்த வாதம் என்று ஆரம்பித்தேன்.

   இது அதுதானே ஜி..:)

   Delete
 8. மட்டமான பதிவுகள் ஊமைக் கனவுகளில் இடம் பெறாது. இது விரோதஅணி யா ? அப்புறம் வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மட்டமான பதிவுகள்....

   அப்படியே நினைக்கிறேன் அம்மா.

   ஆனால் தரம் தரமின்மை என்பதெல்லாம் பார்ப்பவர்கள் கண்களைப் பொறுத்தல்லவா..?!

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 9. கதிரை அறிந்து கொண்டேன்.
  அதில் அமர்ந்தும் கொண்டேன் :-)

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பதிவைப் படிக்கும் முன்னரே நீங்கள் அதில் அமர்ந்திருப்பீர்கள் என எனக்குத் தெரியும் :)

   Delete
 10. எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் அண்ணா? பிரமாதம் போங்க :-)

  ReplyDelete
  Replies
  1. நாற்காலியைத்தானே:)

   அதைத்தான் பலரும் கண்டுபிடித்துவிட்டார்களே:))

   நன்றி.

   Delete
 11. மிகவும் நல்ல பதிவு, இன்னம் கொஞ்சம் விளக்கியிருக்கலாம்... நல்ல விடுகவியையும் அறியத்தந்தீர்கள். :) யாழ் தமிழில் நாற்காலி கதிரை என்பர் மலையாளத்தில் கசிரை என்பர், இரண்டும் போர்த்துகீச சொல்லான cadeira என்பதில் இருந்து வந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்.

   தங்களின் பாராட்டிற்கு முதலில் நன்றி.

   எதை விளக்கி இருக்கலாம் என்று சொன்னால் இனிவரும் பதிவுகளில் கவனமாய் இருப்பேன்.

   கதிரையின் பொருளே எனக்குத் தெரியாது.

   அதன் வேர்ச்சொல் மலையாள மொழிப்புழக்கம் குறித்து நீங்கள் சொல்லிய செய்திகள் முற்றிலும் அறியாதன.

   அறிவூட்டும் உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி.

   Delete
 12. வணக்கம் பாவலரே !

  கவிதை படிக்கும் போதே புரிகிறது நாற்காலிதான் என்று ஆனால் அதைக் கொண்டு விளக்கிய இலக்கணச் சொற்கள் புதிது வாழ்த்துக்கள் பாவலரே
  அறியத் தந்தமைக்கு நன்றிகள்
  வாழ்க வளமுடன்
  தமிழ்மணம் +1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே.

   Delete
 13. ஒன்றைச் சொல்லி அழகாக விளக்கம் கொடுத்து... அருமை... வாசிக்க வாசிக்க இனிமை...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி டிடி சார்.

   Delete
 14. கற்றது கைம்மண்ணளவு என்பது சரியே! இனி கற்கவேண்டியது ஏராளம் என்பதை விடுகவி பற்றிய தங்கள் பதிவு சொல்லாமல் சொல்கிறது. புதிய சொல்லை அறிய வைத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 15. யாழ்ப்பாணத்துக் கவிகள் பற்றியெல்லாம் தங்களைப்போன்று பட்டப்படிப்பு படித்தவர்கள் வேண்டுமானால் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. என்னைப்போன்றவர்களுக்கு தங்கள் பதிவின் மூலமே தெரியவருகிறது. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  'கதிரை' என்ற புதிய சொல்லும் அறிந்தோம். நன்றிங்க ஆசிரியரே.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கவிஞரே.

   படித்த பட்டத்திற்கும் இதற்கும் எல்லாம் எந்த சம்பந்தமும் இல்லை.

   அதனால் உங்கள் கருத்தை ஏற்பதற்கில்லை.

   வாசிக்க நேரமும் ஆர்வமும் இருந்தால் அதுபோதாதா?

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 16. ஆசானே! என்ன ஒரு தேடல்! அருமையான விளக்கம்....என்ன அழகாகக் கற்றுத் தருகின்றீர்கள்! விடுகவி பற்றி படித்த நினைவுண்டு ஆனால் இந்த அளவிற்கு இல்லை......கற்கின்றோம்...கற்று கொண்டே இருக்கின்றோம்...கற்பதற்கு முடிவு உண்டா என்ன!!!?

  நாற்காலியில் அமரும் பாக்கியம் கிடைத்தாலும் அமரவில்லை (படிக்கும் போதே தெரிந்துவிட்டதால்....நீங்கள் அமருங்கள் என்று சொல்லி இருந்தாலும்...)....ஒன்று அது தமிழ் நாற்காலி.....ம்ம்ம் அப்புறம் பதவியைச் சொல்ல நாற்காலி பிடிப்பது என்றுதானே சொல்லாடப்படும்...அந்த பயம்....வேண்டவே வேண்டாம்...எப்போதும் மாணவர்களாக இருப்பதே விருப்பம்....

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹா

   எப்போதும் மாணவராக இருப்பதே நம் விருப்பம் என்று சொல்வோம்ஆசானே.

   நன்றி

   Delete
 17. தமிழை தெரிந்து கொண்டு வருகிறேன்.அ்ய்யா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 18. வணக்கம் என் ஆசானே,

  தங்கள் விளக்கம் அருமை,

  சுன்னகம் முருகேச பண்டிதர் பற்றி படித்துள்ளேன். அவரின் மாணாக்கர் பெயர் நினைவில் இல்லை, இருவரும் "தோடஞ்ஞர்" (பிறரின் இலக்கிய பிழைகளைக் கண்டு பிடிப்பவர்) எனப் பெயர் பெற்ற புலவர்களாவார்கள்.

  தங்களைப் போல்,,,,,,,,,,,,

  சுன்னாகம் முருகேச பண்டிதருக்கு இலக்கிய ஆற்றலுடன் இலக்கணப் பயிற்சியுமிருந்ததால் "இலக்கணக் கொட்டர்" என்றும் அவர் சிறப்பிக்கப்பட்டார்.

  தங்களையும் இலக்கண புலமைக்கு சிறப்பிக்கலாம்,,,,

  வெறும் வார்த்தைகள் அல்ல இவை,

  கும்பகோணம் கல்லூரியில் பணியில் இருந்ததாக செய்தியும் உண்டு.
  இகழ்வது போல் புகழ்ந்த பாட்ல் ஒன்று படித்துள்ளேன்.
  மயிலணிச் சிலேடை வெண்பா, உள்ளிட்ட பல நூல்கள் எழுதியுள்ளார்,

  விரோதவணி, விரோத அணி இரண்டும் சரி தானே,

  மாறுபடு சொல், பொருள், மாறுபாட்டு இயற்கை,
  'விளைவு தர உரைப்பது விரோதம் ஆகும்." என்கிறது தண்டியலங்காரம்.

  சொல் விரோதம்

  பொருள் விரோதம்

  சிலேடை விரோதம்

  என்பதும்
  சரியா? ஆசானே,
  நாற்காலி யின் இலங்கைப் பெயர் அறிந்தோம்.

  தங்கள் பகிர்வுக்கு நன்றி,

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பேராசிரியரே!

   “““““என்னைப் போன்றவர்களால் அதிகம் அறியப்படாத ஆனால் அறியப்பட வேண்டிய ஆளுமை இவர்.“““““““

   என்று சொன்னது இதற்காகத்தான் பேராசிரியரே.

   இப்பாடல் ஒன்றின் மூலமாகத்தான் இவரைப் பற்றி அறிந்தேன்.

   இவர் பற்றிய கூடுதல் செய்திகள் எனக்குத் தெரியாது.

   தங்கள் வழி இவர் குறித்த கூடுதல் செய்திகள் அறிய நேர்ந்ததில் மகிழ்ச்சி.

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 19. உண்மை அதன் இன்மைகளாலும் ஆனது.உ-ம் அரை பாட்டில் காலி அரை பாட்டில் ஃபுல் சரியா. விடுகவியில் முடிவில் சொல்லப்படும் பொருள் கொடுக்கப்பட்டதா.?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.

   நீங்கள் சொல்வதிலும் யானையைக் கண்ட குருடர் என்பது இன்னும் பொருத்தமானது.

   விடுகவியில் முடிவில் சொல்லப்படும் பொருள் கொடுக்கப்பட்டது.

   விரோதச் சிலேடை என்பது கொடுக்கப்பட வில்லை.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 20. மிக அருமையானதொரு விடுகவி! விரிவான விளக்கங்கள்! ரசித்து மனதில் பதிந்து கொண்டேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 21. இரு பொருட்களின் ஒப்புமையைக் கூறிவிட்டுப் பின்னர் அதன் வேற்றுமைகளைக் கூறுவது விரோத சிலேடை என்றறிந்தேன். இலங்கையில் நாற்காலிக்குக் கதிரை என்பார்கள் என்பதை முன்பே அறிந்திருக்கிறேன். சமணத்தத்துவத்தின் அநேகாந்தவாதத்தைப் புரியும் படி விளக்கியதற்கு நன்றி. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   கதிரை பற்றி அறிந்திருந்தீர்களா? :)
   நான் தெரிந்து கொண்டது இப்போதுதான்.:(

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 22. அநேகாந்தவாதமும், விரோதச் சிலேடையும், அதன் பொருளும், இலங்கை யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் என்னும் பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர் முருகேச பண்டிதர் அவர்கள்தம் பாடலின் உதாரணமும், எளிய நடையில் அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 23. நாற்காலி என்று கண்டுபிடிக்க முடிந்தாலும் விடுகவிப் பாடல் அமைத்த விதம் அருமை அதற்கான தங்கள் விளக்கம் விரோத சிலேடையை அறிய முடிந்தது. நாங்கள் அறியாத தமிழின் சுவையை உங்களுக்கே உரித்தான நடையில் எங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு நன்றி.

  இந்த புதுக் கவியையும்(?) விடுகவி என்று சொல்லலாமா?
  நான் யார்? சொல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கவிதையும் விடுகவிதான்.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 24. என்தமிழை இங்கீந்தாய் இன்முகம் காட்டியே
  நன்றிதனைக் கூறுகிறேன் இன்னும் பலவுண்டு
  நான்கதைத் தால்வரும் சொல்லெல்லாம் கேட்டால்பின்
  ஏனென்று கேட்பீரே நீர்!

  அம்மா முதல்ல கதிரையை போடுங்கோ
  சும்மா கதைக்காமல் வந்தவைக்கு - மும்மரமா
  வந்தவுட னேயே தொடங்கீட்டா வக்கணையா
  சிந்தாம சொல்லு சிரித்து!

  எங்கட பாசையில சொன்னனான் சும்மா நீங்களும் கேட்டுப் பாக்கட்டும் எண்டிட்டுத் தான்.
  நீங்கள் குறையா நினக்காட்டிச் சரி அப்ப நான் போய்ற்று வாறன்.
  நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா.

   வெண்பாவிலேயே பின்னூட்டம் இடும் பதிவரில் சேர்ந்து விட்டீர்கள்.

   நானெல்லாம் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 25. தமிழை பற்றி அறியாத பல நிலைகளை தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
  த ம 17

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 26. புதிரை விடுவித்தீர் ! அறிந்தேன்! உடன் கதிரைக் காட்டினீர் !அமர்ந்தேன்! உமக்கு நிகர் நீரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.

   Delete

 27. வணக்கம்!

  விடுகதை ஏந்தி வியக்கின்ற வண்ணம்
  விடுகவி நெஞ்சை விழுங்கும்! - தொடுகின்ற
  ஆக்கம் அனைத்தும் அமுதின் சுவையென்பேன்!
  ஊக்கம் பெறும்என் உயிர்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் இனிய வெண்பாவிற்கும் நன்றி ஐயா.

   Delete

 28. வணக்கம்!

  விடை தெரிந்தால் சொல்லுங்கள்

  வாயுண்டு, பேச வழியில்லை! உண்கின்ற
  காயுண்டு, காட்ட புளிப்பில்லை! - தாயீந்த
  கன்னல் கனியுண்டு, வெண்பா பெறுவதில்லை!
  மின்னும் கொடியே விளம்பு?

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்.

   தாங்கள் அடியேனை இப்படிச் சோதிக்கலாமா? :)


   பிஞ்சுவாய் பேசாது! போய்ப்பறிப்பா ரில்லாமல்
   மிஞ்சுங்காய் எல்லாம் முதிர்ந்தினிக்க - எஞ்சும்
   புளிப்பில்லை! வெண்பா புகலில்லை! கொண்டு
   களிப்புண்டேன், [si="3"]தேமாங் கனி![/si]


   விடை சரியா என்பதையும் தாங்கள் காட்டிய விடுகவி யாரால் எழுதப் பட்டது என்பதையும் அறியக் காத்திருக்கிறேன்.

   நன்றி.

   Delete

  2. வணக்கம்!

   உங்கள் விடை சாியே!
   அழகிய வெண்பாவில் அமைந்த விடை
   அருந்தமிழ்த் தாய் அளித்த கொடை! வாழ்த்துக்கள்!

   கொஞ்சும் தமிழிற் கொடுத்த விடைகண்டு
   நெஞ்சம் நெகிழ்ந்துருகி நீந்திடுமே! - விஞ்சுபுகழ்
   ஏற்றொளிரும் ஊமைக் கனவென்னும் இன்வலையே
   போற்றொளிரும் வெண்பாப் புதிர்

   கவிஞர் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
  3. ஐயா வணக்கம்.

   இவ்விடுகவியை எழுதியவர் யார் என்பதைப் பற்றி அறிந்திட விழைகிறேன்.


   நன்றி.

   Delete
 29. இப்படிப்பட்ட பாடல்கள் ஒன்றிரண்டை நான் படித்திருக்கிறேன் ஐயா! ஆனால், படித்த நூல்களில் இவை விடுகதைப் பாடல்கள் என்றும், சிலேடைகள், இரட்டுற மொழிதல் பாக்கள் என்றும்தான் குறிக்கப்பட்டிருந்தன. 'விடுகவி' என இதற்கொரு தனிப்பெயர் இருப்பது தெரியவே தெரியாது. மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 30. பாடலைப் படிக்கும் போதே விடையைக் கண்டுபிடித்தவர்கள் அமர்ந்து கொள்ள நாற்காலி போட்டிருந்தீர்கள். அசத்தல்!

  பாடல் என்னவோ எளிமையாகத்தான் இருந்தது. ஆனால், கடைசிப் பாதி சரியாகப் புரியாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், பாடலின் உரையைப் படித்தவுடன் கண்டுபிடித்து விட்டேன். ஆக, மொத்தத்தில் நீங்கள் விடையைச் சொல்லும் முன்பே கண்டுபிடித்து விட்டதால், நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து கொள்ளவா?

  ReplyDelete