Sunday 5 July 2015

நான்கு வரியில் சிலப்பதிகாரக் கதை ; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-11



கோவலன் கண்ணகியின் சிலப்பதிகாரம் ஒரு பெருங்காப்பியம். ஆனால் நான்கு வரிகளில் அச்சிலம்பின் பெரும்பகுதியும் சிலப்பதிகாரத்தின் வினைக் கோட்பாடும் கூறப்பட்டிருந்தால் அது  ஆச்சரியம் தரக்கூடிய செய்திதானே?

மணம்புரிந்த  கண்ணகியை விட்டு மாதவியோடு போய்த் தன் வணிகத்தைக் கவனிக்காமல் செல்வம் யாவும் இழக்கிறான் கோவலன்.

குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தரும்

என்று வறுமையால் தன் சொந்த நாட்டில் வாழுவதற்கு வெட்கப்பட்டவனாய்ப் பொருள்தேடி மதுரைக்குத் தன் மனைவியோடு புறப்படுகிறான்.

வழியில்  சமணத் துறவியான கவுந்தியடிகள் அவர்களோடு சேர்கிறார்.
அவர்களைக் காத்து வழிநடத்தி மதுரையில் மாதரியின் வீட்டில் பத்திரமாய்ச் சேர்ப்பிக்கிறார்.

அங்கிருந்து தன் மனைவியின் காற்சிலம்பை விற்கப் புறப்படுகின்றவனை, அதுவரை நீதியில் வழுவாத பாண்டியனையும் நீதி தவறச் செய்து  அவனுடைய உயிரையும் மாய்த்துவிடுகிறது கோவலனது ஊழ்வினை என்கிறது சிலப்பதிகாரம்.

‘என்னைய்யா நாலுவரியில் சிலப்பதிகாரம் என்று சொல்லிவிட்டு வந்த கதை போன கதையெல்லாம் சொல்லிக்கொண்டு…’ என்பவர்களுக்கு இதோ இக்கதையைச் சொல்லும் அந்த நான்கு வரிகள்…,

காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி
மாதரிக்குக் காட்டி மனையின் அகன்றுபோய்க்
கோதில் இறைவனது கூடற்கண் கோவலன்சென்
றேத முறுதல் வினை.”

உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற இந்த தொடர்பதிவினைத் தொடர்பவர்களுக்கு  ‘என்ன திடீரென இங்குக் காப்பியக் காற்று வீசுகிறது’ என்ற சந்தேகம் வரலாம். அப்படி நம் தமிழைத் தெரிந்து கொள்ள இந்தப் பாடலில் என்ன இருக்கிறது என்று அறிய எண்ணுகின்றவர்கள் மட்டும் இனித் தொடர்வார்களாக..!

இந்தப் பாடலைச் சிலப்பதிகாரக் கதையைச் சொல்வதற்காக நான் எடுத்துக்காட்டவில்லை.

தமிழில் எட்டு வேற்றுமைகள் சொல்லப்படுகின்றன.

அவற்றில் இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறு வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

அவை,

இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல் / ஒடு
நான்காம் வேற்றுமை உருபு – கு
ஐந்தாம் வேற்றுமை உருபு – இன்
ஆறாம் வேற்றுமை உருபு – அது
ஏழாம் வேற்றுமை உருபு – கண்

என்பனவாகும்.

இப்பொழுது பாடலை  மீண்டும் பாருங்கள்.

“ காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி
மாதரிக்குக் காட்டி மனையின் அகன்றுபோய்க்
கோதில் இறைவனது கூடற்கண் கோவலன்சென்
றேத முறுதல் வினை.”

ஆறு வேற்றுமை உருபுகளையும் அதே வரிசையில் அமைத்துச் சிலப்பதிகாரக் கதையையும் அதன் உள்வைத்துத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் வேற்றுமை,  ‘பிறிது பிறிதேற்றல்’ என்பதற்கு உதாரணமாக இப்பாடலைக் காட்டுகிறார் தெய்வச்சிலையார் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர்.

இது போன்ற பாடல்களைப் படிக்குந்தோறும் இவர்களது புலமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

வேற்றுமைகளை வறட்டுத்தனமாக விளக்கும் வகுப்பறைகளில் இந்தப் பாடல் சொல்லிக்கொடுக்கப்பட்டால் கதைக்குக் கதையாயும் ஆயிற்று இலக்கணத்திற்கு இலக்கணமாயும் ஆயிற்றுத் தானே!

தமிழ் இனிமையானது என்பது வார்த்தைகளில் இல்லை. அது எப்படிக் கற்பிக்கப்படுகிறது என்பதிலேயே இருக்கிறது.

வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்..!


 பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

57 comments:

  1. என்ன ஒரு புலமை.....
    தமிழை கற்கிறோம்
    கற்கண்டாய் தாங்கள் கற்பிக்கிறீர்களே சகோ
    தம பிறகு வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  2. தமிழோடு கதைபேசு என்கிறீர்கள்.

    அருமை அய்யா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு. பாண்டியராஜ்.

      Delete
  3. உருபுகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள உருப்படியாய் ஒரு செய்யுள் கண்டேன் ,நன்றி :)

    ReplyDelete
  4. உருபுகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள உருப்படியாய் ஒரு செய்யுள் கண்டேன் ,நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்,
      இப்படி எனின் உருப்போட வேண்டா,
      நன்றி.

      Delete
  5. தமிழை மிக அழகாகச் சொல்லித் தருகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு குமார்.

      Delete

  6. வணக்கம்!

    கன்னல் கவியைக் கனியொடு கூட்டாக்கித்
    தின்னக் கொடுத்தீர்! செழுந்தமிழ்க்கு - என்றென்றும்
    நற்புகழின் சீர்படைத்தீர்! நல்ல புலவனது
    கற்பனைக்க டல்கண் களித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      கூட்டுக்குள் சிக்கிக் குறுகும் தமிழொருபால்!
      ஏட்டிற்குள் வாடும் எழிலொருபால்! - காட்டுகின்ற
      சின்னப் பணிசெய்தேன்! செந்தமிழ்ப்பா சிந்துமுங்கள்
      கன்னற் றமிழாற் களித்து.

      வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
    2. தாங்கள் இருவரும் இப்படிக் கருத்துரைப் பெட்டியில் இடும் வெண்பாக்களைத் தொகுத்தே தாங்கள் இரண்டு மின்னூல்கள் வெளியிடலாம் என நினைக்கிறேன். எப்படியும் இதற்குள் ஒரு நூறு தேறும்!

      Delete
  7. அன்புள்ள அய்யா,

    சமணத் துறவியான கவுந்தியடிகள் மதுரையில் மாதரியிடம் கோவலன் கண்ணகியை அடைக்கலப் படுத்திவிட்டுச் செல்ல... பின் நடந்தவற்றை நான்கு வரியில் சிலப்பதிகாரக் கதையை தெய்வச்சிலையார் என்னும் தொல்காப்பிய உரையாசிரியர்எடுத்துக்காட்டிய பாடலில் ஆறு வேற்றுமை உருபுகளையும் அதே வரிசையில் அமைத்துப் பாடியது அருமை. அதைத் தாங்கள் எடுத்துக்காட்டியது தமிழுக்குப் பெருமை.

    நன்றி.
    த.ம.6.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      வேற்றுமை உருபுகளை விளக்கும் இடத்துத் தங்களைப் போன்ற தமிழாசிரியர்கள் இப்பாட்டை எடுத்துக் காட்டினால் அதுவே இப்பதிவின் பயன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. வேற்றுமைகளை வறட்டுத்தனமாக விளக்கும் வகுப்பறைகளில் இந்தப் பாடல் சொல்லிக்கொடுக்கப்பட்டால் கதைக்குக் கதையாயும் ஆயிற்று இலக்கணத்திற்கு இலக்கணமாயும் ஆயிற்றுத் தானே!

    ஆனால் தமிழின்மீது பற்றுகொண்ட் தமிழாசிரியர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டதே
    கோணாரே கதியென்று மாறிவிட்டனரே
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      நீங்கள் சொல்வது உண்மைதான்.

      எல்லாக் கதவுகளும் அடைபட்ட நிலையில் தமிழ் இலக்கியம் படிக்க வருபவர்கள்தான் இன்று அதிகமாக உள்ளனர்.

      இன்னும் பத்தாண்டுகளில் தமிழ்க்கல்வி இன்னும் மோசமாகும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  9. கதைக்குக் கதை வேற்றுமைக்கு வேற்றுமை. நம் தமிழில் அனைத்துக் கூறுகளும் ஒருங்கே அமைந்து நம்மை பிரமிக்க வைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  10. இனிமையை கற்றுக் கொண்டு ரசிக்கவும் செய்கிறோம் ஐயா... நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.

      Delete

  11. // வேற்றுமைகளை வறட்டுத்தனமாக விளக்கும் வகுப்பறைகளில் இந்தப் பாடல் சொல்லிக்கொடுக்கப்பட்டால் கதைக்குக் கதையும் ஆயிற்று இலக்கணத்திற்கு இலக்கணமாயும் ஆயிற்றுத் தானே!//

    பள்ளியில் கற்காததை உங்கள் பதிவின் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறோம். வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு.வே.நடனசபாபதி அவர்களே.

      Delete
  12. வேற்றுமையை ஒன்றாய் வியக்கும் வகையினில்
    போற்றிடச் சொன்னார் புலமிக்கோர் - ஏற்பவர்கள்
    அன்னைத் தமிழின் அமுதுண்டு நல்லின்பம்,
    என்றும் பெறலாம் இனிது!

    எத்தனை எளிதாக ஒரு நொடியில் வேற்றுமையைக் கற்கக் கூடியதாக கூறியிருக்கிறார்கள் இப்படி இருந்தால் யார் தான் கற்க மாட்டார்கள் தமிழை. இலகு வழிகளை கையாள்வது எல்லோருக்கும் கைவராது. நீங்கள் தமிழையும் கற்றுக் கொடுத்தால் உங்கள் மாணவர்கள் நிச்சயம் ஆர்வமாக கற்றுக் கொள்வார்கள். அதுவுமில்லாமல் மாணவர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள் ஸ்கூலுக்கு தமிழும் அழியாது. ம் ..ம் நான் என்ன வேண்டாம் என்றா சொல்கிறேன் என்கிறீர்களா? அதுவும் சரி தான். மிக்க நன்றி ஆசானே ! மேலும் தமிழை கற்க ஆவலாக உள்ளேன். வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
    Replies
    1. ஏன் அம்மா.

      நான் ஒழுங்காக வேலை பார்த்துச் சம்பளம் வாங்குவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

      என் வகுப்பில் தமிழ் எடுத்தால் சும்மாவிடுவார்களா?

      ஹ ஹ ஹா

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. தனியாகத் தங்கள் வீட்டில் தமிழ் வளர்ச்சி வகுப்பு ஒன்றைத் தாங்கள் தொடங்கலாம் இல்லையா?

      Delete
  13. தங்களின் வாசிப்புத் தேடல் பிரமிக்க வைக்கிறது. அதிலும் படிப்பதோடு விட்டுவிடாமல் அதினின்றும் தமிழை அழகாக கற்கக் கொடுக்கும் விதம் பாராட்டுக்குரியது. வகுப்பறையில் கற்க முடியாத பாடங்களை இனியாவது கற்கிறோம் தொடருங்கள் ஆசிரியரே. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிரமிக்க வேண்டியது ஒன்றுமில்லை கவிஞரே!

      எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது.

      உங்களுக்குக் கவிதை கைவருவது போல...!


      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. சிலப்பதிகாரத்தை நான்கடியில் சிந்தி
    சிந்திக்க வைத்ததோ வேற்றுமை உருபுகளை
    அழகுத் தமிழைச் சுவை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. அதுதான் உயர்தனிச் செம்மொழியின் உயரிய அடையாளம் கற்றோரே கற்றோரைக் காமுறுவர் என்பதுபோல தமிழின் சிறப்புகள் எண்ணிலடங்கா பதிவிற்கு பாராட்டுகள் ..........

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  16. வேற்றுமைகளை வறட்டுத்தனமாக விளக்கும் வகுப்பறைகளில் இந்தப் பாடல் சொல்லிக்கொடுக்கப்பட்டால் கதைக்குக் கதையாயும் ஆயிற்று இலக்கணத்திற்கு இலக்கணமாயும் ஆயிற்றுத் தானே!

    இவ்வரிகள் சொல்வன முற்றிலும் பொருத்தமே! தங்களின் நுட்பமான ஆய்வுத் திறன் கண்டு வியக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா

      வணக்கம்.


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  17. வணக்கம் என் ஆசானே,
    சிலப்பதிகாரம் என்றவுடன் கொஞ்சம் பயந்தேன்,
    அப்பாடா,,,,,,,
    எப்படியும் பின்னால் இருக்கும் அதனைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்,
    இலக்கணத்திற்கு சான்று நன்று,
    தங்களின் தேடல் அசாத்தியமானது,
    தேடியதைத் அறியத் தாருங்கள் கற்கிறோம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      சிலம்பென்றால் நீங்கள் பயப்படக் காரணம் என்ன?

      இவை எல்லாம் அசாத்தியம் என்று தாங்கள் சொல்லலாமா? :)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல:)

      நன்றி.

      Delete
    2. வணக்கம் ஆசானே,
      நம் தமிழ்க்குள் பொதிந்து இருக்கும் பொக்கிஷங்களைக் தேட வில்லையே என்று தான்,,,,,,,,,,,,
      நன்றி.

      Delete
  18. Replies
    1. சிலப்பதிகார கதையும் தெரியும், சிவப்பதிகார படமும் தெரியும்..அந்த உருபு மட்டும் தெரியவே மாட்டேன்கிறது நண்பரே

      Delete
    2. ““““நண்பரே“““““ என்பது விளி வேற்றுமை.

      அதற்கு உருபு கிடையாது என்பதால் ஒருவேளை தங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

      அதனால் ஒன்றும் பிழையில்லை வலிப்போக்கரே‘!

      Delete
  19. அருமை ஐயா! புலவரின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை! இதையெல்லாம் நம் பள்ளிகளில் ஏன் சொல்லிக் கொடுக்கவில்லை? என்ற வருத்தம் ஏற்படுகிறது. சிறப்பாக விளக்கியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு சுரேஷ் .

      Delete
  20. வேற்றுமைகளை வறட்டுத்தனமாக விளக்கும் வகுப்பறைகளில் இந்தப் பாடல் சொல்லிக்கொடுக்கப்பட்டால் கதைக்குக் கதையாயும் ஆயிற்று இலக்கணத்திற்கு இலக்கணமாயும் ஆயிற்றுத் தானே!

    தமிழ் இனிமையானது என்பது வார்த்தைகளில் இல்லை. அது எப்படிக் கற்பிக்கப்படுகிறது என்பதிலேயே இருக்கிறது.//

    உண்மை உண்மை உண்மை!!! இதுவே முதல் முறை ஆசானே! இப்படிப் பாடலில் 2-7 வேற்றுமைத் தொகைகள் அமைந்துள்ளது என்பதை அறிந்தது.....இப்படிக் கற்றுக் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாகக் கற்றிருந்திருக்கலாம்.....ஹும்...இப்போதாவது கற்றுக் கொள்ள முடிகின்றதே என்ற மகிழ்வுதான்.....தமிழ் இனிதே! மறுப்பதற்கில்லை அதுவும் இப்படிக் கற்றுக் கொடுத்தால் இனிதாக இல்லாமல் இருக்குமா ஆசானே!

    அருமை அருமை!!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆசானே.

      இந்தப் பாடல் இப்படி ஆறு வேற்றுமை உருபுகளைக் காட்டுவதற்காக வந்ததில்லை என்பது இன்னும் சிறப்பானது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  21. அருமையான இப்பாடலை மனப்பாடப்பகுதி செய்யுளாக வைத்திருந்தால் ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்திருக்கலாம். இப்போதுங்கூட பாடத்திட்டக்குழு உறுப்பினர் யாராவது தெரிந்தவர் இருந்தால் இதனை மனப்பாடச் செய்யுள் பகுதிக்குப் பரிந்துரைக்கலாம். வேற்றுமை உருபுகளைத் தனியே மனனம் செய்ய வேண்டியத் தேவையில்லை. பாடலாகப் படித்தால் நீண்ட காலம் நினைவில் தங்கும். நல்லதொரு பாடலை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      எல்லாம் தெரிந்தவர்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

      அவர்கள் எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பதால்தான் எதுவுமே தெரிந்துகொள்ள முடியாதவர்களாகவும் போகிறார்கள்.

      நான் நம் பாடத்திட்டக் குழு உறுப்பினர்களைப் பற்றிச் சொல்கிறேன்.

      ஆலோசனை என்ன என்பதைப் பார்க்காமல் கூறுவது யார் எனப் பார்ப்பதுதான் அனைத்து மட்டங்களிலும் இன்று இருக்கிறது.

      எனக்குத் தெரிந்த ஆளுமை ஒருவரின் பாடப்புத்தகத் தயாரிப்புக்குழுவில் பணியாற்றிய அனுபவம் கொண்டு இதைச் சொல்கிறேன்.

      மொத்தத்தில் மாணவரைப் பற்றி யார்தான் சிந்திக்கிறார்கள்.

      விட்டால் இதை ஒரு பதிவிற்கு நீட்டிவிடுவேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  22. சுவையான பழங்கள் எவை என ஒவ்வொன்றாகச் சுவைத்துச் சுவைத்துத் தேர்ந்தெடுத்து வழங்கிய அன்னை சபரியைப் போல் அருந்தேன்தமிழ்ப் பெருங்கடலிலிருந்து பார்த்துப் பார்த்துப் தேர்ந்தெடுத்த துளிகளை மட்டும் பருகத் தரும் தங்கள் சேவையில் மீண்டும் ஒன்று! மிக்க அருமை ஐயா!

    வழக்கம் போல் ஓர் ஐயம்! ;-)
    இந்தப் பாடல் தொல்காப்பிய உரையில் தெய்வச்சிலையார் எடுத்துக்காட்டியது என்றீர்கள். இதை எழுதியதும் அவர்தானா? அதைச் சொல்லவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. ஐயா தாங்கள் என்மேல் கொண்ட அன்பினுக்கு முதலில் நன்றி.

      என் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவரும் உங்கள் எல்லாருக்குமல்லவா நான் நன்றி சொல்ல வேண்டும். அது தான் தகுதி உடையதும் கூட.

      இந்தப் பாடலைத் தெய்வச்சிலையார் எடுத்துக்காட்டுகிறார்.

      இந்த வேற்றுமைகளை அறிமுகப்படுத்துவதற்காக இல்லை. வேறொரு பொருண்மைக்காய்.

      மிகுந்த புலமை நயமிக்கபாடல் இது. ( கவனிக்கவும் கவிநயம் அல்ல)

      நான் சொன்னது மிகச்சிறிதுதான்.

      இது எடுத்துக்காட்டும் நுட்பத்தை விளக்க இன்னும் ஆழ இலக்கணத்துள் போக வேண்டும் என்பதால் தவிர்த்தேன்.

      இந்தப் பாடல் தெய்வச்சிலையார் எழுதியதாக இருக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  23. 125ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா......

      உண்மையில் நீங்கள் சொல்லும்வரை இதனைக் கவனிக்கவே இல்லை ஐயா.

      மிக்க நன்றி.

      Delete
  24. பள்ளியில் “ஐ ஆல் கு இன் அது கண் விளிவேற்றுமை” என்று நினைவில் வைத்தது இப்போது நினைவுக்கு வருகிறதுநான்கு வரியில்வெற்ருமை உருபுகளை வரிசையாக அமைத்து சிலம்பு! அழகு!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      நான் படித்ததும் நீங்கள் படித்ததைப் போன்றே தான்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  25. ஐயா ஒரு சந்தேகம் இந்தப் பாடலை எழுதியபோது இந்த வேற்றுமை உருபுகளை விளக்கவா எழுதி யிருப்பார்கள். காரணம் சொல்ல முடியாத நிகழ்வுகளை ஊழ் வலி என்று சொல்லித் தப்பிக்கும் தன்மைதான் எனக்கு முதலில் தெரிகிறது. இருந்தாலும் இப்பாடல் வேற்றுமை உருபுகளை விளக்கவும் பயன் படுதல் சிறப்பு,

    ReplyDelete
    Replies
    1. ஐயா

      வணக்கம்.

      இந்தப் பாடலை எழுதியது இந்த வேற்றுமை உருபுகளை விளக்குவதற்காக இல்லை.

      ஆனால் வேற்றுமை தொடர்புடைய வேறொரு இலக்கண நுட்பத்தைக் காட்டத்தான்.

      சிலம்பு ஊழ்வலிதான்.


      சமணம் பற்றிய தொடர்பதிவின் முடிவில் ஊழை அவர்கள் எவ்வளவு பிராதனமாகக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவரும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  26. வணக்கம்
    ஐயா

    சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete