Thursday 16 July 2015

கொஞ்சம் அருவருப்புத்தான்.


இளகிய மனம் கொண்டவர்கள்  இதனைப் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் கூடிய காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவற்றைப் பார்க்காமல் நம்மில் சிலர் தவிர்த்திருப்போம். நகைச்சுவை, வீரச்சுவை, காதல், என எத்தனையோ சுவைகளைக் கொஞ்சமாவது இலக்கியத்தில் படித்துக் கடந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு ஓர் அருவருப்பு உணர்ச்சியை இதற்கு முன் எந்தப்பாடலும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.

 பாடல் இதுதான்.

          எனது‘எனச் சிந்தித்தலான் மற்று
                    இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்
        தினைப்பெய்த புன்கத்தைப் போலச்
                  சிறியவும் மூத்தவும் ஆகி
        நுனைய புழுக்குலந்து அம்மா
                  நுகரவும் வாழவும் பட்ட
       வினைய உடம்பினைப் பாவி
                 யான்‘எனது என்னலும் ஆமே.

     ( புன்கம் – சோறு, நுனைய – கூர்மையான )

நான், ‘என்னுடையது’ என்று பார்த்துப் பார்த்து எல்லா இன்பங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறேனே இந்த உடல்,

தினை அரிசியை உலையிட்டு கொதிக்க வைக்கும்போது, அவ்வுலையில் இருந்து, வெந்தும் வேகாதும் மேலெழுகின்ற சிறியதும் பெரியதுமான தினைச்சோற்றைப் போலச் சிறிதும் பெரிதுமாய் உள்ளிருந்து மேல்வரும் புழுக்கூட்டங்களின் கூர்மையான  வாய்க்கு ஒரு நாள் உணவாகப் போவதுதான்.

இதன் சுகத்திற்காக எல்லா பாவங்களையும் செய்யும் பாவியான நான், இவ்வுடல் என்றும் எனக்குரியது என்று இன்னமும் அதற்கான இன்பங்களைத் தேடித் திரிந்து கொண்டிருக்கிறேன்.  இது தகுமா?

இதுதான் இப்பாடலின் திரண்ட பொருள்.

 இந்த உடலும் இதன் புலன்களும் பாவத்திற்குக் காரணமாகி, உயிர் தனக்கு உரிய மெய்யறிவைப் பெறத் தடையாகின்றது, எனவே இவ்வுடல் வெறுக்கப்பட வேண்டியது என்பது போன்ற சித்தாந்தத்தினால் கட்டமைக்கப்பட்ட பல சித்தர் பாடல்களைப் படித்திருக்கிறேன்.

நம் உடலை வெறுக்க வேண்டும் என்பதற்காய்க் காட்டப்படும் பல்வேறு கருத்துகள் அவை நெடுகவும் உண்டு.

ஆனால்  குண்டலகேசியில் வரும் இந்தப் பாடல் ஏற்படுத்தியது போன்ற ஒரு அருவருப்பை இதுவரை எந்தப் பாடலும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.

அவ்வுணர்வு, இப்பாடலையும் அதன் பொருளை ஓரளவிற்கேனும் விளக்க முனைந்த அதன் உரையையும் படித்தபோது உங்களுக்குள்ளும் ஏற்பட்டதா?

அது எதனால் ஏற்பட்டது என்பதை நான் சொல்லவில்லை.

அவ்வுணர்வினை இந்தப் பாடல் உங்களுக்கும் ஏற்படுத்தியிருந்தால் அதை நீங்கள் சொல்லலாம்.தொடர்வோம்.

நன்றி - https://encrypted-tbn2.gstatic.com/images


.                     
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

28 comments:

 1. படிக்கும் போதே உடம்புலே புழு ஊர்வதைப் போல் உணர்ந்தேன் ,நாயகிக்கு ஏன் அந்த நிலை ஏற்பட்டது ? நீங்க சொன்னா தெரிஞ்சிக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. அது ரகசியம் பகவானே..!

   இங்கே பகிர முடியாது.

   நேரில் பார்க்கும் பொழுது சொல்கிறேன்.

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   உடம்புலே புழு ஊர்வதுபோல் இருக்கும் போதும் உங்களுக்கு நகைச்சுவை கேட்கிறது...!

   ம்ம்.

   புழுக்களும் சிரிக்கப்போகின்றன :)

   Delete
 2. வணக்கம் என் ஆசானே,
  வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
  நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
  ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
  பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.
  குருக்கத்திக் கொடியின் கீழ்க் களவிற்கலந்து, பின் கற்பு நெறியில் மணம் செய்துகொள்கின்ற தலைவனும், தலைவியும் தலைநாளில் இருந்த காதல், நாள்செல்லச் செல்லத் தெவிட்டுவதாய் விடப் பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டுவிடுவர். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு, அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கிவிட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் இடுவார்கள்.
  என் மனதை மிகவும் பாதித் பாடல்,,,,,
  இந்தப்பாடலே இவ்வளவு தானா வாழ்க்கை என்று உணரும் போதே உளம் ச்சே என்ன வாழ்க்கை எனும்,,,,,
  தாங்கள் சொன்னது போல் அருவெருப்பு கொள்ள நம் உடல் ,,,,,,
  குண்டலகேசி கூறும் பாடல் விளக்கம் அருமை,,,,,,,
  புதைக்கப்பட்ட உடல்கள் அப்படியே உள்ளதாக கூறும் ,,,,,,,,,,,,,
  அடுப்பில் சாதம் கொதிக்கும் போது பல நாட்கள் நினைவில் வரும் பாடல்,,,,,,,,,,,,,,
  இனி ,,,,,,,,,,
  நன்றி,,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் பாடலுக்கும் பொருள் விளக்கத்திற்கும் மிக்க நன்றி பேராசிரியரே.

   Delete
 3. அருவறுப்பை விட்டுவிடுவோம். பட்டினத்தார் பாடலைப் போல கருத்தை ஏற்போமே. அது சரிதானே?

  ReplyDelete
  Replies
  1. ஐயா,

   இந்தப் பாடலின் நோக்கம், உடலின் பால் அருவருப்பை உண்டாக்குவதுதான்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 4. நமது உயிர் பிரிந்தபின் உணர்வற்ற இந்த உடலை புழுக்கள் சாப்பிட்டால் என்ன, பூச்சிகள் சாப்பிட்டால் என்ற எண்ணம் வருவதால் இந்த பாடலும் கருத்தும் எனக்கு எந்த அருவருப்பையும் தரவில்லை. ஆனால் இந்த பாடல் ஒரு பாடத்தை நமக்கு சொல்கிறது என்பது உண்மை.

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்.

   இந்தப் பாடல் சொல்லும் கருத்தைவிட நுட்பமுள்ள கருத்தமைந்த பாடல்களைப் பெரிய ஞானக் கோவையுள் பார்த்திருக்கிறேன் ஐயா.

   ஆனால் இவ்வுவமை என்னை அந்த உணர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 5. கண்டிப்பாக தகாது... அறிந்து தெரிந்து புரிந்து உணர்ந்தால் அருவருப்பும் உண்டாகாது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.

   இந்தப்பாடலின் நோக்கம் அதுதான்.


   தினைச் சோறு போன்ற சிறிதும் பெரிதுமான புழுக்கள் என்ற சித்திரம் ஒரு கணம் அக்காட்சியை என் கண்முன் கொணர்ந்தது.

   இப்பாடலின் கருத்து இரண்டாம் பட்சம்தான்.

   அந்த உவமை என்னுள் ஏற்படுத்திய உணர்வுக்காகத்தான் இதனைப் பகிர்ந்தேன்.

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 6. “ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
  மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
  மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
  ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா
  உன் பாதம் சேரேனே?
  குண்டலகேசி பாடலை கண்டதும் . அழுகணிச் சித்தர் பாடல் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்.

   அழுகணிச் சித்தர்பாடல் மிக அழகானது.

   ஒரு கட்டத்தில் மிக மிக என்னைக் கட்டிப்போட்டது இதன் சந்தம்.

   பல சித்தர்பாடல்கள் நிலையாமையை உணர்த்துவன.

   இன்னும் அழகாய்.   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 7. அருவெறுப்பை விட்டுவிடுவோம் அதுதானே உண்மை ஐயா...
  நல்ல பாடல் விளக்கம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஒரு புறம் என்றாலும், பாடலைப் படிக்கத் தோன்றிய உணர்வையே சொல்லிப் போனேன் சகோ.

   இறப்பின் பயமோ, உடலின் நிலை குறித்த கழிவிரக்கமோ கொண்டல்ல.

   நெளியும் சிறிதும் பெரிதுமான புழுக்களை முன்னே கொட்டியது போன்ற ஓர் உவமை எனக்கு ஏற்படுத்திய உணர்ச்சயைச் சொல்லவே பதிந்து போனேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 8. நிலையாமையை அழுத்தமாக சொல்லும் பாடல். எடுத்துக் காட்டி விளக்கியது நன்று

  ReplyDelete
  Replies
  1. உவமைக்காகவே எடுத்துக் காட்டினேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 9. ஆடு செத்தா, மாடு செத்தா விலை கொடுத்து வாங்க ஆளுண்டு ! மனிதன் செத்தா அவனைத் தூக்கவே கூலி தரவேண்டுமே!

  ReplyDelete
  Replies
  1. அதைத்தான் நமக்கும் நாலுபேர் வேண்டாமா என்கிறார்களோ ? ;)

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 10. அருவெறுப்பு இங்கு நிலையாமையை குறித்தாலும் வாழும் மனிதருக்கு பிடிப்பு வேண்டும். இப்படி சொல்லி கொண்டே கடமைகளை தள்ளி விட்டால் எப்படி உலகம் இயங்கும். ஓரளவிற்கு இதை தெரிந்து வாழ்வை கவலைகள் அரித்து தின்னாமல் நல்ல வண்ணம் வாழ்ந்து செல்ல வேண்டும். திருக்குறள் எல்லா வழிகளையும் தந்து உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்.

   பாடல் நிலையாமையைக் குறித்தாலும் இவ்விடுகை, நிலையாமையை குறித்தானதல்ல.

   அதுவிளக்க எடுத்துக்காட்டும் உவமையிலிருந்து பெற்ற உணர்வினைக் குறித்தது.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 11. புழு என்றாலே அருவருப்பு! ஒரு மாதிரியான உணர்வு. நம்மைப் பார்த்து இன்னொருவர் அருவருப்பாக உணர்ந்தால் நமக்கு எப்படி இருக்கும்? புழுக்குப் புரிவதில்லை நாம் அதைப்பார்த்து அருவருப்புப் படுகிறோம் என்று. நமக்கும் புரிவதில்லை புழுவும் இவ்வுலகில் வாழ வந்த ஒரு உயிரினம். அது இயற்கையை சமன்படுத்த இதுபோல் பலவாறு உதவுகிறது என்று. அது இதுபோல் வாழவில்லையென்றால் நம் வாழ்வு இல்லாமல் போய்விடும்! மனிதனில் மிகச்சிறந்த அறிவாளிகள் என்று மனிதனாலேயே போற்றப்படுபவனும் அறியாமையில்தான் வாழ்ந்து சாகிறான். :)
  ---------------------------------

  யு எஸ் ல என்ன பண்ணுறாங்கனா புழுவை குழந்தைகளிடம் தொட்டு விளையாட விடுறாங்க. sensory play

  Why is Messy – Sensory Play so Important?

  Sensory play is important for young children, as it provides endless opportunities to develop and learn. All types of play are essential for a child’s development and early learning. Sensory play helps children to develop and improve their gross and fine motor skills, co-ordination and concentration. It also helps them to learn how to work co-operatively, use their senses to discover their environment, develop their imagination, creative thinking, and ability to problem solve and experiment with solutions.

  -------------------

  இந்தப் பாடலைப் படித்துவிட்டு, நிலையாமையை உணர்ந்த பிறகும், மனிதன் அதேபோல் தொடர்ந்து சுயநலம், போட்டி, பொறாமை, பேராசை என்றுதான் தொடர்ந்து வாழப்போகிறார்கள். அப்பபோ இதுபோல் சில தத்துவங்கள் பேசிக்கொண்டு மறுபடியும், பழையபடியே சிற்றின்பம், அறியாமையில் மூழ்கித்தான் வாழப்போகிறான் என்பதுதான் வேடிக்கை. :)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா

   நெடுநாளாயிற்று. நலம் தானே?

   நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.

   படைப்புகள் நம்மைப் பாதிப்பது என்பது நம் அனுபவத்தோடு தொடர்புடையது என்கிறார்கள்.

   எனக்கு புழுவென்றால் அருவருப்பு உண்டு.

   நான் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது என் நண்பன் (?) ஒருவன் இருந்தான்.   அப்பொழுது ஆறாம் வகுப்பு முடிந்து கோடைவிடுமுறை விட்டிருந்த தருணம்.

   அவன் தன் பாட்டியின் ஊருக்குப் போயிருந்தான்.

   அவன் வீட்டில் நாய் ஒன்று வளர்த்தார்கள்.

   அவன் ஊருக்குச் சென்றிருந்த நேரம் அது இறந்து விட்டது.

   அவன் வீட்டின் பின்புறம் அதைப் புதைத்துவிட்டார்கள்.

   ஏறக்குறைய ஒருமாதம் கழித்து அவன் வந்ததும் ஏகக் களேபரம் (?).

   நாயைப் பார்த்தே ஆக வேண்டும் என்று.

   நிஜமாகவே அதனைப் புதைத்த இடத்தில் புல் முளைத்துப் போயிருந்தது.

   புதைத்த இடத்தின் மேல் எலுமிச்சம் கன்று ஒன்றை நட்டிருந்தார்கள்.

   கூட வா என்று என்னை அழைத்துக் கொண்டு நாய் புதைக்கப்பட்டிருந்த அவ்விடத்திற்குப் போனான்.

   கன்றைப் பிடுங்கி எறிந்தான்.

   குழியை நோண்ட எதுவும் கிடைக்கவில்லை.

   அங்கிருந்த கொட்டாங்குச்சியால் முதலிலும் பின்பு கைகளாலும் பறிக்க ஆரம்பித்தான்.

   ‘வேண்டான்டா வேண்டான்டா’ என்ற போதும் அந்த நாய் என்னவாயிருக்கும் என்று பார்க்கும் ஆர்வமும் எனக்கிருந்தது.

   மண் இளகியது.

   அதுபோல் ஒரு ஆவேசத்தினை நான் அவனிடம் அதற்கு முன்பு கண்டதில்லை.

   ஒரு அரை மணி நேரம் ஆயிருக்கலாம்.

   ஒரு வாடையை நான் உணர்ந்த தருணம், அவன் கை நுழைந்த, நாயின் வெடித்த வயிற்றிலிருந்து சிறிதும் பெரிதுமான புழுக்கள் அவன் வாரிஇறைத்த மண்ணிற் கலந்து சிதறின.

   என் காலிலும் இருந்தன ஒன்றிரண்டு.

   ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் எல்லை வரைக்கும் ஓடினான் என்பதைப் போல, ஓடினேன் ஓடினேன் திக்குத் திசை தெரியாமல் ஓடினேன்.

   உடலெங்கும் ஏதோ ஊர்வது போன்ற அருவருப்பு.

   என் உடலோடு ஒட்டிக்கிடந்தது அங்கெழுந்த அந்த வாசனை.

   இந்தப் பாடலைப் படித்த போது, அதே உணர்வு மீண்டும் எனக்கு நேர்ந்தது.

   அன்று என் நாசி நுகர்ந்த அதே வாடையை மீண்டும் தந்தது இந்த உவமை.

   இந்தப்ப் பாடல் சொல்வது போல் நிலையாமை என்ற உணர்வெல்லாம் என் மனதில் தங்கவே இல்லை. அதை இன்னும் ஆழமாகவும், அழகாகவும் , தர்க்க ரீதியிலும் சொல்லும் பாடல்கள் தமிழில் உண்டு.

   பாடலைப் படைத்தவன் இதுபோன்ற ஒரு அருவருப்பு உணர்ச்சியைப் படிப்பவன் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்துப் படைத்திருப்பான் என்று நினைக்கிறேன்.

   தினையின் நிறமும், அது உலையில் கொதித்து மேல் கீழாய் வரும் போது, அளவிற் சிறிதும் பெரிதுமான அதன் தோற்றமும்.....

   இது போன்றொரு காட்சி யாருக்கேனும் இவ்வுவமையைப் படிக்க ஏற்படுமா என்ற எண்ணத்தில்தான் இப்பாடலைப் பகிர்ந்து போனேன்.

   அதைப் பற்றிக் குறிப்பிடாமல்..

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 12. கொஞ்சம் அருவருப்புத்தான் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டுப் படத்தைப் பார்த்தவுடன் அப்படியொரு அருவருப்பு! படம் அளவுக்குப் பாடல் எனக்கு அருவருப்பை ஏற்படுத்தவில்லை. படிக்குமுன்பே படத்தைப் பார்த்து அருவருப்புப் பட்டுவிட்டதால், பாடல் ஏற்படுத்தவில்லை போலும்! வளையாபதி, குண்டலகேசி என நாங்கள் இதுவரை வாசித்தே இராத பாடல்களை எங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வளையாபதி குண்டலகேசி ஆகிய நூல்கள் பெரும்பாலும் அழிந்து விட்டன.

   கிடைப்பவை மிகச்சில பாடல்கள்தான்.

   ஒரு அரை மணி நேரத்தில் அவற்றை வாசித்துவிட முடியும்.

   அறியச் சுவையானவை.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

   Delete
 13. சோற்றை புழுவாக சித்தரித்த உவமை கொஞ்சம் அருவெறுப்புத்தான்! சிறப்பான விளக்கம்! பாடல்களை தேடித்தரும் உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் திரு தளிர் சுரேஷ்

   உண்மைதான்.

   உருவத்திலும் நிறத்திலும் அளவிலும் அக்காட்சியை என் கண்முன்னே கொண்டு நிறுத்தின உவமை இது.

   எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்றெண்ண அருவருப்போடு ஆச்சரியமும் வந்தது எனக்கு.

   நன்றி.

   Delete
 14. அருவருப்பு என்ற தலைப்பை யும் படத்தையும் பார்த்தவுடன் அருவருக்கத் தான் செய்தது.ஆனாலும் \\\\\\\தினை அரிசியை உலையிட்டு கொதிக்க வைக்கும்போது, அவ்வுலையில் இருந்து, வெந்தும் வேகாதும் மேலெழுகின்ற சிறியதும் பெரியதுமான தினைச்சோற்றைப் போலச் சிறிதும் பெரிதுமாய் உள்ளிருந்து மேல்வரும் புழுக்கூட்டங்களின் கூர்மையான வாய்க்கு ஒரு நாள் உணவாகப் போவது தான்./////
  இந்த உவமையை ரசித்தேன் இது போன்ற ஒரு உவமையை சிந்தித்து பார்க்கிறேன். இதை விடப் பொருத்தமாக அமையாது வேறொரு உவமை .ஏன்றும் தோன்றிற்று. என்னே கற்பனைத் திறன். தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று தாங்களும் ரசித்து எமக்கும் இப்படிப் பதிவுகள் தந்து எம்மை ஆச்சரியப் பட வைப்பதற்குமிக்க நன்றி! .மேலும் தொடர வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete

 15. வணக்கம்!

  குண்டல கேசி கொடுத்த கவிதையினைக்
  கண்டு கழியுதே கண்!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete