Friday 6 June 2014

உடம்பொடு புணர்த்தல்
எல்லாருக்கும் வணக்கங்க!
இலக்கணமின்னாலே எட்டுகாத தூரம் தெறிச்சு ஓடுற உங்கள மாதிரி ஒருத்தன்தாங்க நானும்...! இலக்கணம் படிச்சா நாம மொழியைப் பேசுறோம்? எழுதுறோம்? அதெல்லாம் நமக்கெதுக்குன்னு  பள்ளிக்கூடத்தில படிக்கும் போது சிரமப்பட்டு உயிர்மெய், ஆய்தம், குற்றியலுகரம், லிகரமின்னு 2 மதிப்பெண் வாங்கிறதுக்காக இதையெல்லாம் மனப்பாடம் பண்ணதோட சரி!
சரிங்கைய்யா, இதனோட பயன்பாடு என்னங்கய்யான்னு அப்பக் கேக்க தைரியம் இல்லாம போச்சு! சரி! தமிழில எழுதுறோமே இப்பயாவது புரிஞ்சுக்கப் பாப்போமேன்னு நினைச்சுத் தொல்காப்பியத்த வாங்கித் தொறந்தா ஒரு இழவும் புரிய மாட்டேங்குது...! பாயிரமின்னு முதல்ல தொடங்குது...“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகு“ ன்னு..! அதுக்குப்போய் பத்துபக்கத்துக்கு விளக்கம் சொல்றாங்க..! ஐயோ ன்னு அலறினா அரசன் சண்முகனார்ன்னு ஒருத்தரு நூறு பக்கத்துக்கு விளக்கியிருக்காருன்னு சொல்றாங்க ! சரி நேரா தொல்காப்பியப் பாட்டுக்குள்ளயே போயிடுவோமின்னு போனா, என்ன அருமையா இப்பக் கூட புரிஞ்சிக்கிற மாதிரி இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னாடி எழுதி வைச்சிருக்கான்.

 எழுத்தெனப் படுப
  அகர முத
  னகர இறுவாய் முப்பஃது என்ப
  சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே “
சாதாரணமா தமிழ் பத்தித் தெரிஞ்சிருந்தாப் போதுங்க. நாமளே இதுக்கு அர்த்தம் சொல்லிடலாம்.
“ தமிழ்ல எழுத்துன்னா “அ“ வில ஆரம்பிச்சு “ன்“ முடிய முப்பதுன்னு சொல்லுவாங்க. இந்த முப்பதோட இதுமாதிரி தனியா வாராம இதைச் சார்ந்து வரக்கூடிய இன்னொரு மூணும் இருக்கு“
இதுதாங்க தொல்காப்பியர் சொல்லவர்றது. ஆனா இதுக்கு உரைன்னு பதிமூணு பக்கம் விளக்கம் சொல்றாங்க! இது பரவாயில்ல, சிவஞான முனிவர்னு ஒருத்தர் இந்த முதல் பாட்டுக்கு விளக்கமா எழுதினது தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தின்னு தனிப்புத்தகமாவே வந்திருக்கின்னாங்க. எல்லாம் தமிழ்ல தான இருக்கு ...? இவன் என்னமோ வடநாட்டுக்காரன் மாதிரிப் புரியலே புரியலேங்கிறான்னு சொல்றவங்க இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளை ஒரு தடவைப் பாருங்க!
      சரி இப்ப என்னதான் சொல்ல வரேன்னு நீங்க சொல்றது
கேக்குது ! இதை நான் படிக்கும்போது இரண்டு வழி எனக்கு இருந்தது.
ஒண்ணு மண்டைய உடைச்சு என்னதாண்டா இந்த உரைக்குள்ள இருக்குன்னு பாக்குறது..., இல்லைன்னா வேற வேலைய பாக்கப் போறது..! நான் மண்டைய உடைச்சிக்கிட்டேன். வேண்டாமின்னு வேறவேலையப் பாத்துக்கிட்டு இருக்கிற, மண்டைய உடைச்சுக்க விரும்பாதவங்களுக்காக எனக்குப் புரிஞ்சத எழுத நினைக்கிறேன். அவ்வளவு தான்!
சரி. இப்பயாவது தலைப்புக்கு வருவோம்.
பள்ளிக்கூடத்தில நாம படிக்கும் போது இலக்கணக்கேள்விய, எடுத்துக்காட்டோட விளக்க, (விளங்கிக்க) எவ்வளவு சிரமப்பட்டிருக்கோம்?
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு...! குற்றியலிகரத்துக்கு நான் படிச்ச எடுத்துக்காட்டு...கேண்மியா...இதை மறந்துத் தொலைக்காம இருக்க நான் பூனையை ஞாபகம் வைச்சுகிட்டது ( “மியா“ ங்குமே) இன்னைக்கும் குற்றியலிகரம்னு யாராவது சொன்னா எனக்கு முதல்ல நினைப்பு வர்றது இந்தப் பூனைதான். ஏன்னா இலக்கணத்துக்கான வரையறைகளை மனப்பாடம் செஞ்சிருப்போம். புழக்கத்தில இல்லாத எடுத்துக்காட்டுகள் சட்டுன்னு மறந்து போயிடும்.
ஒரு வேளை வரையறையையே  எடுத்துக்காட்டாவும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்? அப்படின்னு அப்பத் தோணிச்சு. இப்பத் தொல்காப்பியம், நன்னூல் ன்னு படிக்கும் போதுதாங்க தெரியுது, நாம நினைச்சதை அதே மாதிரி சூத்திரமாச் சொன்ன தொல்காப்பியர் மாதிரியான ஆசிரியர்களும் இருக்காங்கன்னு!
உதாரணமா பாருங்களேன், எழுத்துக்கு அளவு சொல்ல வந்த தொல்காப்பியர், குறில் (அதாங்க – அ, இ, உ, எ, ஒ ) 1 மாத்திரை.
நெடில் ( ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ )  2 மாத்திரை ன்னு சொல்லுவாரு.
அப்புறம் மூணு மாத்திரை உள்ள ஓர் எழுத்துத் தமிழில் இல்லைம்பாரு. வடமொழில மூணு மாத்திரை உள்ள எழுத்துக்கள் இருக்கு. ஒவ்வொரு இடத்திலயும் தமிழ் வேற, வடமொழி வேறங்கிற கவனத்தோட தான் தொல்காப்பியர் இப்படி வித்தியாசம் வர்ற இடத்த எல்லாம் சொல்லிகிட்டு வருவார். சரி மூணுமாத்திரை வர்ற மாதிரி ஓசை அதிகரிச்சு வர்றப்ப அத எப்படி எழுதிக் காட்டறது? தொல்காப்பியர் சொல்வார், அப்படி மூணு மாத்திரை வர்ற எழுத்து நம்ம கிட்ட இல்ல! 2 மாத்திரையை விட கூட அளவு வர்ற மாதிரி எழுதனுமா ? அதே ஓசை இருக்கமாதிரி உள்ள ஒரு மாத்திரை உள்ள எழுத்தை அந்த இரண்டு மாத்திரை உள்ள எழுத்துக்குப் பக்கத்தில சேர்த்து எழுதிக்காட்டுப்பா! படிக்கிறவன் அந்த இடத்தப் பாத்து ஓசையைக் கொஞ்சம் கூட்டிச் சொல்லிக்கட்டுமின்னு சொல்றார்.
இப்ப அந்தச் சூத்திரத்தப் பாப்போம்.
“ நீட்டம் வேண்டின் அவ்வளபு உடைய
  கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் ” 
எப்படிங்க எழுதுறது? உதாரணத்தைக் கோனார் உரை பாத்துத் தெரிஞ்சுக்கனுமான்னு கேட்டா இல்லப்பா பாட்டையே நல்லாப் பாரு!
அதிலேயே காட்டி இருக்கேனேங்கிறார். சூத்திரத்தில இருக்கிற
எழூஉதல்(எ (ழ்+ஊ)+உ தல்) என்ற சொல்லைப் பாருங்க!
 ஊ என்கிற ஓசையை நீட்ட வேண்டியிருக்கு. அதுக்குப் பக்கத்தில அதோட ’உ’ என்கிற குறிலைப் போட்டாப் படிக்கிறவன் அந்த இடத்தப் படிக்கும் போது ஓசையைக் கொஞ்சம் நீட்டிப்படிச்சுக்குவான். விதி சொல்றது மாதிரியே விதிக்குள்ளயே உதாரணத்தையும் சேத்து சொல்லியாச்சு. இப்படிச் சொல்ற உத்திக்குப் [Technique] பேருதாங்க உடம்பொடு புணர்த்தல். இது போல நிறைய இடங்கள இலக்கண நூற்பாக்களில நீங்க பார்க்கலாம்.
நன்னூல்ல இருந்து ஒரே ஒரு எடுத்துக்காட்டு.
குற்றியலுகரத்தில முடியிற சொல்லுக்கு (எ.கா. காற்று) அடுத்த சொல் உயிர் எழுத்துல தொடங்கினா,  ( காற்று + டி)  குற்றியலுகரமா வர்ற ”உ” தன்கூட இருக்க மெய்யெழுத்தை அம்போன்னு விட்டுப் ஓடிப் போயிடுமாம்.  ( காற் ற்+ + டி) . இப்ப விதிப்படி  உ போய்,
காற் (ற்+ஆ) டி = காற்றாடி
என்று ஆகும்.
இப்பக் கொஞ்சம், நன்னூல் விதியப் பாப்போம்.
 “ உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்

 விட்டு + ஓடும்  = விட்டோடும்
( விட் (ட் + உ)  + ஓடும் = விட்ட் + ஓடும் = விட்டோடும்.
என்கிறதில் எது விட்டு ஓடினதின்னு பாத்திங்களா? விதியச் சொல்றது மாதிரியே எப்படி விதிக்கான எடுத்துக்காட்டையும் சொல்லி இருக்காங்க. வடிவேலு சொல்ற மாதிரி எதையும் பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க போலத் தோணுது! இது மாதிரிப் பல செய்திகளை நாம் உரையைப் படிச்சாதாங்க தெரிஞ்சிக்க முடியும்! அட! இப்படி யெல்லாமாடா யோசிப்பானுங்கன்னு பிரமிக்க வைச்சிடுவாங்க நம்ம உரைக்காரங்க !
சரி! இப்பப் பழைய பூனைக் கதைக்கு வர்றேன்.
கேண்மியா ன்னா நாம இன்னைக்கு சொல்ற “ கேளுங்கய்யா “ என்கிற அர்த்தந்தான்!
கேண்ம் + யா தான் அதோட வடிவம் ( கேள்+ அய்யா ங்கிற மாதிரி )
இதக் கேண்ம் யா ன்னு சேர்த்து வேகமாச் சொல்லிப் பாருங்களேன். நடுவுல ஒரு நுழைஞ்சமாதிரி இருக்கும். ( ஈ இல்லங்க ) அந்த இகரம் தாஞ்சாமி ஒரு மாத்திரையா இல்லாம அளவு குறைஞ்ச குற்றியல் இகரம்.
இவ்வளவு நேரம் பொறுமையா படிச்ச உங்களுக்கு ஒரு கேள்வி! இந்த உடம்பொடு புணர்த்தல் இலக்கியத்திலயும் வந்திருக்கு! திருக்குறள்ல நான்கு குறள்கள்ல இருக்கு. திருமுருகாற்றுப் படையில ஓரிடத்தில் வருது. தேட ஆசைப்படுறவங்க பரிமேலழகரையும் நச்சினார்க்கினியாரையும் பாருங்க!
சரியாக் கண்டுபிடிச்சுச் சொன்னிங்கன்னா அடுத்து இதே போல இன்னொரு  செய்தி உங்களுக்காக காத்துகிட்டு இருக்கும்.

( என்னுடைய இன்னொரு பதிவு உரைச்சுத்தியில் உடைபடும் சொற்கள் என்று எழுதினேன். எந்த வடிவம் வசதிப்படும் என்றால் அப்படி எழுத ஆவலாய் இருக்கிறேன். படிப்பவர்கள் கருத்திட்டால் படித்தவற்றுள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்திட முயல்வேன். முத்து நிலவன் அய்யா, பாரதிதாசன் அய்யா போன்ற தமிழறிஞர்கள் கருத்திட வேண்டுகிறேன். சொற்பிழையோ கருத்துப் பிழையோ இருந்தால் தயங்காமல் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன் நான் மேலும் செம்மையுற அவை பெரிதும் துணை செய்யும். நன்றி! )

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

17 comments:

 1. வருகைக்கு நன்றி அய்யா!

  ReplyDelete
 2. அருமை விஜூ, மிகவும் அருமை.
  இலக்கணத்தை நடைமுறை - பேச்சுத் தமிழில் விளக்கிட முயலும் இம்முயற்சியே சிறப்பானது. தலைப்பைக்கூட இதே பாணியில் சிந்தித்து இட முடிந்தால் இன்னும் சிறப்பு. தமிழிலக்கண நுட்பங்களை, அறிஞர்களிடமிருந்து “ஓரிரண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள“ சாதாரணத்தமிழர்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தால் அதுவே பெருந்தொண்டுதான். எடுத்துக் காட்டுகளையும், புதியன புகுந்தவற்றையும் இதே சிந்தனையோடு (நடைமுறை உதாரணங்களுடன்) சொல்ல முடிந்தால், இன்னும் நல்லது. முயலுங்கள் உங்களால் முடியும். (அதற்காக “இந்தத் தொல்காப்பியத்தில் என்ன இருக்கு ஒரு இழவும் புரியலயே“ எனும் சொல்லளவிற்கும் போகவேண்டியதில்லை). நான் என் மாணவர்க்கு உவம உருபுகளைப் பற்றிச் சொல்லும்போது, இந்த முறையைக் கையாண்டதுண்டு. போல,புரைய,ஒப்ப, உறழ..முதலான 12எ.கா.வும் பேச்சுத்தமிழில் இல்லை. பேச்சுத்தமிழின் புதியனவாகப் புகுந்த மாதிரி, ஆட்டம், கணக்கு ஆகிய உவம உருபுகளை வைத்துச் சொல்வேன். (ஏன்பா ஆந்தை மாதிரி முழிக்கிற?, எருமையாட்டம் உரசாம தள்ளிநின்னுய்யா, பொண்ணு கிளிகணக்கா இருக்காளாமில்ல?). இதேபோல திருக்குறள் போலும் நல்ல் இலக்கியங்களை அசைபிரித்து எழுதுவதாகச் சொல்லி,
  “அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை, பண்பும் பயனு மது” என்று எழுதுவதும் தேவையில்லையே! பிரித்துக்காட்டுவது புலவருக்கானது, பொருள்புரிவதே மக்களுக்கானது. இந்தத் தெளிவு தமிழாய்வு செய்யும் அறிஞர்களுக்கு வந்தால் தமிழ் வளரும். உங்கள் பணி சிறக்கட்டும். அன்புகூர்ந்து தொடருங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா!
   தொல்காப்பித்தின் உரைகளைப் படித்தத் தொடங்கியபோது எனக்கிருந்த மனநிலைதான் “என்னடா, அர்த்தம் சொல்றாங்கன்னு நினைச்சா பாட்டே ஈசியாப் புரிஞ்சிடும் போல இருக்கு. இந்த உரை புரிய மாட்டேங்குதே“ என்பது. எழுத்ததிகாரத்தின் முதற்சூத்திர உரையில் சுட்டப்படும் கருவி, செய்கை அதன் வகைகள், அதற்குத் தரப்பட்ட எடுத்துக்காட்டுகள் எல்லாம் உண்மையில் படிக்க முற்பட்ட போது தலையைச் சுற்ற வைத்துவிட்டன. முறையான தமிழ்ப் படிப்பும், பயிற்சியும் இல்லாதது அதன் காரணமாயிருந்திருக்கக்கூடும்.அதனைச் சற்று மிகைபடச் சொல்லிவிட்டேன் என்று இப்போது தோன்றுகிறது. மற்றபடி அசைபிரித்துச் செவ்விலக்கியங்களைக் காட்டுவது பொதுமக்களுக்கும் மாணவருக்கும் சரி! ஆனால் தமிழ் படிப்போர் புணர்ச்சிக்குட்பட்டுத் தாங்கள் காட்டி இருப்பது போல் படித்தால்தான் ஓசை சித்திக்கும் என்பது என் கருத்து. தவறெனில் சுட்டிட வேண்டுவன்!

   Delete
 3. சிறந்த எடுத்துக்காட்டுகளுடன்
  சிறந்த பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி அய்யா!

   Delete
 4. தொடர்ந்து படிக்கும்போதும், எழுதும்போதும் அனுபவம் தானாகவே வந்துவிடுகிறது. தொடர்ந்த பழக்கத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதையும் சிரமம் என்று நினைக்கவேண்டிய தேவையில்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி அய்யா!
   நிச்சயமாய்த் தொடர்ந்து படிக்கவும் எழுதிடவும் முயல்வேன்.

   Delete
 5. இலக்கணம் படிக்காமல் கவிதை எழுதிக் கொண்டிருப்பவன் நான். தங்கள் பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 6. அய்யா,
  வணக்கம். உணர்ச்சிக் கேற்ப நீ நான் எனப் போட்டியிட்டுத் தான்முந்துறும் நல்ல தமிழ் உங்கள் கவிதைகளில் இருக்கிறது.இலக்கணம் அதைப் பார்த்துத் தன்னை எழுதிக்கொள்ளும்.
  ஆனால், தமிழில் படைப்பாக்கும் நாம் நம் மரபுகளை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். மரபினைத் தாண்டிப் போகலாம். தவறில்லை! ஆனால் அது என்ன என்று தெரிந்தபின் அதைச் செய்யலாம். நான் முயன்று கொண்டிருக்கிறேன். நிச்சயம் நீங்களும் உடன்வருவீர்கள் என்று நம்புகிறேன். ஆசிரியம், வெண்பா என்றல்லாமல் நிறைய வடிவச் சாத்தியங்கள் யாப்புச்சூக்குமத்தில் இருப்பதாய்ப் படுகிறது நண்பரே!
  வாருங்கள் ஒருகை பார்ப்போம்.
  நன்றி!

  ReplyDelete
 7. ஐயா வணக்கம்!

  கொச்ச நடையில் இலக்கண இலக்கியக் கட்டுரைகளை எழுதுவது சிறப்பன்று. கற்றோர் கொச்ச நடையை விரும்ப மாட்டார்.

  கதை, நாடகம் போன்றவற்றில் வருகின்ற பாத்திரங்கள் தங்கள் வட்டார வழக்கான கொச்சமொழியைப் பேசுமாறு அமையலாம். அங்கும் ஆசிரியர் கூற்று உயர்ந்த நடையில் அமையவேண்டும்.

  இலக்கணக் கட்டுரைகள் குழப்பமின்றிம் தெளிவாகவும் நன்கு ஆய்வு செய்ததாகவும் இருக்க வேண்டும்.

  தங்கள் கட்டுரையில் அளபெடையை உடம்போடு புணர்தல் உத்தி என்று எழுதியுள்ளீர், இக்கருத்துச் சரியில்லை, அளபெடை வேறு. உடம்பொடு புணர்தல் வேறு. இக்கட்டுரைக்கு உடம்பொடு புணர்தல் என்ற தலைப்புப் பொருத்தமாக இல்லை.

  "உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே"
  நன்னூல் 204 நூற்பா விளக்கத்தைக் காண்க.

  பல இலக்கியங்களில் குற்றியலிகரம் வந்துள்ளது, கம்பன் காவியத்திலும், ஆழ்வார் பாக்களிலும் நிறைய இடங்களைக் காணலாம்.

  திருக்குறளில் 8 இடங்களில் குற்றியலிகரம் வந்துள்ளது.
  4 - 66 - 178 - 254 - 585 - 793 - 895 - 1070 ஆகிய குறள்களைக் காணவும்.

  குறள் 178 செல்வத்திற்கு யாதெனில் - செல்வத்திற்கு நான்கசை சீராகும். நான்கசை வெண்டளையில் வாரா .இங்கு (கு) தன் மாத்திரையில் குன்றி வெண்டளை சரியாகச் செல்லும்.

  குறள் 254 அருளல்லது யாதெனில் - அருளல்லது கனிச்சீராகும். வெண்டளையில் கனிச்சீர் வாரா. இங்கு து தன் மாத்திரையில் குன்றி வெண்டளை சரியாக நடக்கும்.

  இன்றைய கவிதைகளில் அளபெடை இடம்பெறுவதில்லை. அதைக் குறித்துக் கவலையில்லை. அளபெடை இன்றி எழுதுவதும் சிறப்பே!

  இன்றை கவிஞர்கள் குற்றியல் இகரம் உகரம் அறியாமல் மரபுக் கவிதை படைக்கின்றன். காலம் இருப்பின் இவைகளை விளக்கி எழுதுங்கள். வளரும் கவிஞர்கள் பயனுறுவர். தமிழ் செழித்தேங்கும்.

  இலக்கணம் ஆய்ந்தே இனிக்கின்ற வண்ணம்
  கலக்குகிறார் சோசப் கமழ்ந்து!

  கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. அய்யா,
  வணக்கம். முதலில் இவ்வளவு நீண்டதொரு பின்னூட்டத்தை இட்டமைக்கு நன்றியுடையேன். எனது இந்தக் கட்டுரை குழப்பத்தோடும் தெளிவின்றியும் இருந்திருக்கிறது என்பதைத் தங்களின் பின்னூட்டம் கொண்டு அறிந்தேன். பேச்சு வழக்கிற்கு நானே பொறுப்பாவேன். ஏனெனில் அது நானே திட்டமிட்டு அமைத்துக் கொண்டது.
  இலக்கண விதிகள் கூறும் நூற்பாக்களே அந்த விதிகளுக்குத் தாமே உதாரணமாகவும் அமைந்து விடுவது உடம்பொடு புணர்த்தல் என உரைகளில் காணப்படுகிறது. இதை மையமாய்க் கொண்டது தான் இந்தக் கட்டுரை. சான்றாக அளபெடை வடிவம் விளக்க வந்த நூற்பா, அவ்வடிவைத் தானே தன்னுள் கொண்டு நிற்றல். ( கூட்டி எழூஉதல் )
  குற்றியலுகரம் நிலைமொழியாக நின்று, வருமொழி உயிர்வரின் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தைக் கூறவந்த நூற்பா, அம்மாற்றத்தைத் தன்னிலே நிகழ்த்திக் காட்டுதல் ( விட்டு ஓடும் = விட்டோடும் )
  இங்கு உடம்பு சூத்திரத்தைக் குறிக்கிறது. அச்சூத்திரக் கருத்திற்குத் தானே சான்றாய் நிற்பதால் இவ்வுத்தி உடம்பொடு புணர்த்தல் எனப்பட்டது. அதே வேளையில்,
  “அறிவேய் புரையுமென் தோளி உதாரணம் ஆழிவெள்வேல்“ ( யாப்பருங்கலக் காரிகை-சூ.2அடி.3 ) என உதாரணத்தைத் தனியே சூத்திரத்தில் அமைக்கும் இது போன்ற அடி உடம்பொடு புணர்த்தல் ஆகாது. எனவே அளபெடையையோ குற்றியலுகரத்தையோ, குற்றியலிகரத்தையோ நான் உடம்பொடு புணர்த்தல் எனக் குறிக்க நினைந்தேனில்லை. அவற்றிற்கு இலக்கணங் கூறப் புகுந்த சூத்திரங்கள் தாமே அதன் இலக்கியமாய் ஆகி நிற்றலையே குறிப்பிட்டேன். வேறாகப் பொருள் கொள்ளுமாறு எனது நடை அமைந்திருப்பின் அது “மயங்கவைத்தல்“ எனும் என் குற்றமேயாகும்.
  திருக்குறளில் 27 ஆம் குறளிலும் , 1268, 1269, 1270 எனும் மூன்று குறட்பாக்களிலும் ஆக நான்கிடங்களில் இவ்வுடம்படுபுணர்த்தல் வந்துள்ளதெனப் பரிமேலழகர் குறித்துச் செல்கிறார். ( 1270 ஆம் பாடலில் இம்மூன்றும் உடம்பொடு புணர்த்தல் எனத் தொகுத்துச் சுட்டுவார்.)
  திருமுருகாற்றுப்படை 317 ஆம் அடி “ பழமுதிர்ச் சோலை நாடுகிழ வோனே ” என்பது. இவ்வடியைக் காட்டி இது உடம்பொடு புணர்த்தல் என்பார் நச்சினார்க்கினியார். வேறு இலக்கிய மரபுரைகளில் இவ்வுத்தி நான் கண்டவரை சுட்டப்பட்ட வில்லை. இதையே கண்டறியுமாறு குறிப்பிட்டேன்.
  உரைச் சுத்தியில் உடைபடும் சொற்கள் எனும் எனது முந்தைய பதிவு புரிந்து கொள்ளப் படாமல் போயிருக்குமோ என்ற என் அச்சமே இப்பதிவை இப்படிப் பேச்சு வழக்கில் எழுதச் செய்தது. புரிந்து கொள்ளப் படாமையை விட தவறாகப் புரிந்து கொள்ளுமாறு அமைதல் பேராபத்து என்பதால் இந்நடையை இத்துடன் விடுகிறேன். முத்துநிலவன் அய்யா என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் பணித்த படி எனது அடுத்த பதிவு குற்றியலுகரம் பற்றியதாக இருக்கும். தவறினைத் தயங்காமல் சுட்டிக் காட்டிட வேண்டுகிறேன்.
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்!

   விளக்கம் கண்டேன்! மிக்க மகிழ்வுற்றேன்.

   தொல்காப்பியத்து மரபியலின் இறுதிச் சூத்திரத்தில் ஒருதலைமொழிதல் என்ற உத்திக்கு இனமாக ''உடம்பொடு புணர்த்துச் சொல்வன அதற்கு இனமெனப்படும்'' என்று பேராசிரியரால் கூறப்பட்டுள்ளது.

   பிரயோகவிவேகத்தில் ஐம்பதாம் சூத்திர உரையில் வடநூலார் ''உடம்பொடு புணர்த்தலை நிபாதமென்பர்'' என்று எழுதியுள்ளது.

   முன்னோர் உரையைப் பின்வந்தோர் ஏற்றுப் போற்றலும், மறுத்தலும் உண்டு. திருக்குறளுக்கு உரையெழுதிய வை.மு.கோ அவர்கள் 1268 - 1269 - 1270 ஆகிய குறள்கள் உத்தியன்று என எழுதியுள்ளார். தங்கள் ஆய்வுக்கு இச்செய்தி பயனுடையதாக இருக்கக் கூடும்.

   பிரான்சுக்கு வந்ததிலிருந்து தமிழ்மொழி இனத் களப்பணி யாளனாகச் செயலாற்ற வேண்டிய கட்டாய சூழலில் வாழ்க்கை செல்கிறது. நூல்களைப் படிக்கும் காலம் இல்லாமல் ஆனது. மீண்டும் படித்துத் தெளிய வேண்டும் ஊக்கத்தை உங்கள் கட்டுரை வழங்கியுள்ளது. நன்றி.

   நல்ல தமிழ்வளர்க்கும் நற்சோசப் மேன்மேலும்
   வல்ல படைப்புகளை வார்க்கவும்! - வெல்லுதமிழ்
   பாடுகின்ற பாவலன் பாரதி தாசன்யான்
   நாடுகின்றேன் உன்னெழுத்தை நன்கு!

   கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
   08.06.2014

   Delete
 10. அய்யா,
  வணக்கம். மகிழ்ச்சியும் நன்றியும்! முப்பாற்புள்ளி என்றொரு பதிவினை நீங்கள் பணித்தபடி இட்டு விட்டு , உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவிட்டு உறங்கப் போகையில், மீண்டும் உங்கள் பதில்.
  மீண்டும் நன்றி அய்யா!
  என்னிடம் திருக்குறள் வை.மு.கோ. பதிப்பு இல்லை்.ஆனால், குவை பப்ளிகெஷன் ,( 51, பெல்சு சாலை, திருவல்லிக்கேணி ), ஐந்தாம் பதிப்பாய் வெளியிட்ட அவர்தம் உரையிலிருந்து, நானெடுத்து வைத்துக் கொண்ட
  07-05-2004 ஆம் நாளிட்ட குறிப்புளது. இவ் வுடம்பொடு புணர்த்தல் என்னும் உத்தி இப்பாடலின் கண் எவ்வாறிடம் பெற்றுள்ளதென விளங்காமல் வைமுகோ, திரு. ரா. இராகவையங்காரை வினவியதாகவும், அவர் தம்மிடமிருந்த ஒரு சுவடியில், உடம்போடு கூறப்பட்டனவே இப்பாடல்கள் தவிர இது உடம்பொடு புணர்தல் எனும் உத்தியன்று என விளக்கியதாகவும் பதியப்பட்டுள்ளது. இறுதியில் உடம்பொடு புணர்த்தல் எனும் உத்தியுள் இது அமையுமா என ஆராய்க, என வைமுகோ முடித்ததாகவும் பதிந்திருக்கிறேன். ( பக்-129., 130)
  தமிழிற் கி்டைத்த சுவடிகளில், மிக அதிகப்பிரதிகள் கிடைத்தது பரமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறள் சுவடிகள் தான்.
  இவை எதிலும் பாடபேதம் இல்லாத போது இராகவையங்கார் சுவடியில் மட்டும் பாடபேதம் இருந்ததாகக் கொண்டு இது உத்தியன்று என்பது சரியன்று என்றிருந்தேன். வைமுகோ ஆய்க என்றதும் இதன் அடிப்படையில் தான் எனக்குறித்திருக்கிறேன்.பரிமேலழகர் சொல்லுவது உடம்பொடு புணர்த்தல் தான் என்பதை நிறுவிடச் சானறுண்டு. உரையைப் பார்த்து எனக்குப் புரிந்தபடி கருத்தை மட்டும் எழுதிக் கொண்டதால் கூடுதல் விளக்கம் அளிக்கமுடியவில்லை.மீண்டும் அவ்வுரையைப் பார்க்க வேண்டும்.
  கட்டுரை பொதுவாக உடம்பொடு புணர்த்தல் என்பதைச் சகலர்க்கும் காட்டிட எழுதியதால் மேலதிக விவரங்களைத் தரஇயலவில்லை.
  இலக்கியத்தில் உடம்பொடு புணர்த்தல் என இன்னும் ஓர்கட்டுரை எழுதலாம்.நனறி.

  ReplyDelete
 11. “பழமுதிர்ச் சோலை மலைகிழவோனே“ ( முருகு-317 ) எனத் திருத்திப்படித்திட வேண்டுகிறேன். தவறு நினைவில் நின்று எழுதியதால் நேர்ந்தது. பிழை பொறுக்க வேண்டுகிறேன். நன்றி.

  ReplyDelete
 12. ஐயா வணக்கம். நான் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பி.லிட். பயின்ற போது எனக்குக் கிட்டிய இலக்கணப் பேராசிரியர் திரு. பொன்.விசயன் அவர்கள் இந்த உடம்பொடு புணர்தலை உணர்த்தியுள்ளார். இந்த மாதிரிநுணுக்கமான இடங்களை மொழியாசிரியர்கள் அறிந்து கொண்டு மாணவர்களுக்குச் சுவையாகக் கற்பிக்க வேண்டும். அளபெடையைத் தவறாக ஒலிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. எனது வலைப் பக்கத்தில் "தூவும் மழையும் அளபெடையும்" பகுதியில் இதனைப் பதிவு செய்துள்ளேன். பார்க்கவும். தங்களின் பேச்சுவழக்கு நடை அருமை...இன்றைய சூழலில் இலக்கணம் இப்படிச் சொன்னால் தான் சரியாகச் சேர்கிறது. நன்றி ஐயா தொடருங்கள்.

  ReplyDelete
 13. பெருமதிப்பிற்குரியீர்,
  நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
  இலக்கணத்தில் சுவைபட இப்படிப் பலவிஷயங்களை சாதாரண வாசகனாய்க் குறித்து வைத்துள்ளேன்.( ராஜேஸ் குமாரின் கிரைம் நாவலில் இருந்தும் கூடத்தான்) எவருடனும் பகிர்ந்ததில்லை. இணையம் அதைச் சாத்தியமாக்கிற்று. என் மீது அன்புகொண்டோர் அதை சாத்தியமாக்கினர்.
  நாம் பாடுபட்டு அறிந்து கொண்டதை வெகுஎளிதாய் மாணவரிடம் சொல்லப் பிரயத்தனப்படும் “ஆசிரிய மனோபாவம்“ தான் பல்வேறு தடைவிடைகளுடன் நான் கண்டும் கேட்டும் அறிந்த, இப்பதிவுகளின் அடிநாதம்.
  ஒருவேளை என்கருத்துத் தவறாயிருக்குமானால் அதைத் திருத்திப் பதியும் நோக்கமும் இதன் உள்ளுறையும்.
  நிச்சயம் தங்கள் அளபெடைக் கட்டுரையைப் படிக்கிறேன். அதுவரை,

  அளபெடையின் ஆதிக்கம் வேதமந்திரங்களின் உச்சரிப்புகளை ஒழுங்கு செய்வதாய் வடமொழியில் புலுதம் என்று வழங்கப்பட்டு வருமொன்று. அங்கு இதன் தேவையும் பங்கும் மிக மிகுதி என்பதைக் கூடுதல் தகவலாய் இங்குச் சொல்லி வைக்கிறேன்.
  உள்ளின் உள்ளிருந்து “ நன்றி “

  ReplyDelete