Saturday 14 June 2014

ஆய்தம்.
     

( ஒரே ஒரு எழுத்துதான். ஆராய்ச்சி என்ற பெயரில், பத்துப்பக்கம்  நீட்டி முழக்கியிருக்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பணி இது. வறண்ட வரையறைகளுக்கு நடுவே சுவைபடச் சொல்லுதற்கு ஒன்றுமேயில்லை. தப்பித்துக் கொள்வோர் இப்பொழுதே தப்பித்துக் கொள்க!  

ஆனாலும் ஆய்தம் பற்றி அறிந்திட

நினைப்போர்க்கும், ஆய்ந்திட முனைவோர்க்கும்

இதன் ஏதாவது ஒரு பகுதி பயன்படின் மகிழ்வேன்.

மாற்றுக்கருத்துக்களைமனந்திறந்து வரவேற்கிறேன்).

முன்னோட்டம்.

ஆய்தம் என்ற சொல்லின் வடிவம் பற்றிய 

நச்சினார்க்கினியரின் உரைக்கருத்துக்கள் 

முப்பாற்புள்ளி எனும் பதிவில் சுட்டப்பட்டது.

சார்பெழுத்துக்கள் எனப் பிற்கால இலக்கணிகளால் 

வகைப்படுத்தப் பட்ட இம்மூன்றனுள் ஆய்தம் 

குறித்துச் சில செய்திகளைப் பகிர்வதாய் 

இக்கட்டுரை தொடர்கிறது. ஆய்தம், அஃகேனம், 

தனிநிலை, ஒற்று, புள்ளி என ஆய்தத்தைத் 

தமிழிலக்கணக்காரர்கள் பலபெயர்களில் 

குறித்துள்ளனர்.

வடிவம். 

 இளம்பூரணரும் நச்சரும் முப்பாற்புள்ளி என்பதனை

 ஆய்தத்தின் வடிவு குறித்ததாகக் கொண்டமையால் 

 அது அடுப்புக்கூடு போன்ற உருவமுடையது எனச் 

 சொல்ல நேர்ந்தது. இனி வேறு இலக்கணிகள் அது 

 குறித்துக் கூறியுள்ள கருத்துக்களையும் காண்போம்.
 
 நன்னூலுக்கு விருத்தியுரை 

 கண்ட சங்கரநமச்சிவாயர், 

    தனிமொழிக்கண்ணும்தொடர்மொழிக்கண்ணும்

    வரும் எனக் கூறப்பட்டுள்ளமுதலெழுத்துக்கள்,

    இருபுறமும் இருசிறகு போல நின்று எழுப்ப எழும்

    உடல் போல ஆய்தம் எழும் என்பார்.    

              (நன்னூல்.சூ.92.விருத்தி). 

இங்கு ஆய்தத்தைப் பறவையின் உடல் எனக் 

கொள்வோமானால் அதன் இரு சிறகுகள் குறிலும் 

வல்லினமும் ஆகும். இவைகளில் ஒன்று 

இல்லாவிட்டாலும் ஆய்தம் எழாது.

அடுத்து, அறுவகை இலக்கண நூலின் ஆசிரியர், 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,

“உயிர்எழுத்து உரைத்தனம், உரித்த தேங்காய்க்
கண்போல் முச்சுழி கவினுறக் காட்டல்
ஆய்தம்; துணைஇழந்து அலமரும் காக்கை
குளறலில் மிடற்றில் குமுறொலி தருமே“ (எழுத். சூ.14.)

எனும் சூத்திரத்தில், உரித்த தேங்காயிற் காணப்படும்  

கண்களைப்போன்று மூன்று சுழிகளை வரைந்து  

காட்டுதல் ஆய்த எழுத்தின் வரி வடிவம் ஆகும். அது  
தன் இணைப்பறவையைப் பிரிந்து வருந்தும் காகம் துன்புற்றுக் கரைதலைப்போன்று கழுத்தில் இருந்து எழுந்து கரைகின்ற ஓசையை உடையது என்று வரிவடிவினையும், ஒலிவடிவினையும் ஒருசேர விளக்குகிறார்.

வேங்கடராசுலு ரெட்டியார், ஆய்தம் என்பது 

வடமொழியில் உள்ள ஆஸ்ரிதம் என்னும் எழுத்தின் 

திரிபாக அமைந்தது என்பர். தமிழில் கிடைத்த 

நெடுங்கணக்கு ஓலைச் சுவடிகளின் ஈற்றில் கூ: 

என்ற  வடிவில் ஆய்தம் எழுதப் பட்டுள்ளது. 

வரிவடிவில் இரண்டு புள்ளிகளை இட்டு 

எழுதப்படுவதாலும், ஒலியில் தம்முன் வரும் 

வல்லெழுத்தின் ஒலி பெறுதலாலும் உயிர் 

இறுதியில் 

வைக்கப்பட்டிருப்பதாலும் இது வடமொழியில் 

கூறப்படும் விஸர்க்கத்தோடு ஒப்புமையுடையது 

என்கிறார். (வேங்கடராசுலு ரெட்டியார். வே., 1944, 

தொல்காப்பிய எழுத்ததிகார ஆராய்ச்சி.)

அலி எழுத்து.

சார்பெழுத்துக்கள் பத்தென்று விரித்துக்கூறுமிடத்து, 


     
“உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉ ஐஒள மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்“.
                                                               ( நன்னூல்-60)
 
 எனும் நன்னூல் உரையில் அஃகுதல் என்பதற்குச் 
சுருங்குதல் எனப் பொருள்கூறும் சங்கரநமச்சிவாயர், உயிர்களோடும் மெய்களோடும் கூடியும் கூடாதும் அலிபோலத் தனியாக நிற்பதால் தனிநிலை என ஆய்தம் அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்.

ஆய்தம் உயிரைப் போலவும், மெய்யைப் போலவும் எண்ணப்படுவதாகக் கூறும் அவர் திருக்குறளில்,

     "அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
     
பெற்றா னெடிதுய்க்கு மாறு" (குறள். 943)

எனுமிடத்து அது உயிர்போல அலகு பெறுவதாகவும்,

      "
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
      
தோன்றலிற் றோன்றாமை நன்று" (குறள். 236) 

எனுமிடத்து மெய்போலஅலகு பெறுவதாகவும் கூறுகிறார்.( நாம் கண்ட குற்றிலுகரமும், குற்றியலிகரமும் இவ்வியல்பினவே) உயிரின் இறுதிக்கண் வழங்கப்படும் ஆய்தம் பிற்காலத்தவரால் வேறுபட எழுதப்பட்டு உருமாறி வழங்கப்பட்டதால் தொல்லை வடிவு என அழைக்கப்பட்டதாகச் சங்கரநமச்சிவாயர் கூறுவது மிக முக்கியமான கருத்தாகும். ஏனெனில் தொல்லை வடிவு எனப்படுவது வெறும் வரிவடிவுதானா, அல்லது அது ஒலிவடிவையும் உள்ளடக்கியதா என்பது அறியப்படவேண்டிய  ஒன்று. யாப்பினைப்பொறுத்தவரை ஓசையின் தேவையை உளங்கொண்டு ஆய்தம் உயிர்போல நின்று அலகு பெறுஞ் சிக்கலையும் நாம் தீர்த்தாக வேண்டும் .

பிறப்பு.

ஆய்தத்தின் பிறப்புக்குறித்துக் கூறுவதிலும் இலக்கணிகள் தம்முள் வேறுபடுகின்றனர்.
ஆய்தத்தின் பிறப்புக்குறித்துக் கூறுமிடத்து இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தம்முள் மாறுகொள்வர். ஆய்தம் தலையினிடமாகப் பிறக்கும் என்பர் இளம்பூரணர்.
 
நச்சினார்க்கினியர் நெஞ்சினிடமாகப் பிறக்கும் என்பர்.  (தொல். எழுத். 101)   ஆய்தம் தலையை இடமாகவும் வாய்திறத்தலை முயற்சியாகவும் கொண்டு பிறக்கிறது என இளம்பூரணரோடு உடன்படுகிறார் நன்னூலார்.  (சூ-87)   
ஆய்த எழுத்து நெஞ்சின் கண் நிலைபெற்று ஒலிக்கும்

ஓசையானும், அங்காந்துகூறும் முயற்சியானும்

பிறக்கும் என்று கூறும், இலக்கண விளக்கம்(சூ-13).

 
முத்துவீரியம், ஆய்தம் உந்தியிலிருந்து பிறப்பதாகக் 

கூறும். (சூ-58)

அறுவகை இலக்கணம், ஆய்தம் கழுத்தில் தோன்றும்

 என்று ஏனையரோடு மாறுகொண்டுரைக்கும்.

இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் போது, 

காலந்தோரும் உரு திரிந்து வழங்கும் ஆய்தத்தின் 

தொல்லை வடிவென்பது வரிவடிவம் மட்டுமன்று 

ஒலிவடிவும் தானென்பது புலனாகிறது.
.
முறைவைப்பு.


இன்று நாம் வழங்கும் உயிர்- ஆய்தம் – மெய்,

என்னும் நெடுங்கணக்கு முறை தொல்காப்பியத்தில் 

இல்லை. முதன்முதலில் இதற்கான இலக்கணச்

சான்றை நமக்கு வீரசோழியமே தருகிறது.

(வீரசோழியம். சந்திப்படலம். காரிகை.1)


வீரசோழியத்தை அடுத்தெழுந்ததாகக் கருதப்படும்

நேமிநாதம் ஆய்தத்தை முதலெழுத்தினோடு

சேர்க்கிறது.(நேமிநாதம்.எழுத்.1). 


இம்முறைவைப்பை நாம் ஆய்தம் பெற்றிருந்த

இடத்தை, அல்லது ஆய்தத்தின் வளர்ச்சியை 

மதிப்பிடுதற்கு முக்கியச் சான்றாகக் கொள்ள 

வேண்டும்.

வருமிடம்.

   “ குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

    உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே “ 
 
                       ( தொல். எழுத்-38.)

எனும் சூத்திரத்தில் தொல்காப்பியர் குறிலொடு கூடி,

வல்லினம் ஆறனுள்  ஒன்றனுக்கு அருகில்

ஆய்தமான புள்ளி வரும் என்கிறார். 


ஆய்தம் வருமிடத்தை நாம் எளிதாக இப்படி 

விளங்கிக் கொள்ளலாம்.


1. ஆய்தம் வரவேண்டுமானால் அதற்கு முன் வரும் 

எழுத்துக் குறிலாக இருக்கவேண்டும்.

2. ஆய்தத்தை அடுத்து வரும் எழுத்து வல்லினமாக

 இருக்க வேண்டும். (எ.கா. எஃகு, அஃது...) 


விஸர்க்கம்

வடமொழியில் விஸர்க்கம் எனும் எழுத்துக் 

ககரத்தின் முன்னும், பகரத்தின் முன்னும் வரும் 

போது  தன் ஒலியில் மாறுபாடு அடையும். அதாவது,

விஸர்க்கம் இருவேறு முறையில் ஒலிக்கப்படும்.

ககரத்தின் முன் வரும் விஸர்க்க ஒலி ஜிவ்ஹா

மூல்யம் எனவும், பகரத்தின் முன் வரும் விஸர்க்க 

ஒலி உபத்மால்யம் எனவும் அழைக்கப்படுகிறது. 

வடமொழியில் உள்ள இதனோடுதான் ஆய்தத்தை 

ஒருங்குவைத்து எண்ணினர் வேங்கடராசுலு 

ரெட்டியார் முதலியோர்.


பயன்பாடு.

இவ்வாய்தத்தின் பயன்பாடு வடமொழி 

விஸர்க்கத்தில் உள்ளது போல் ஓசை மாற்றத்திற்குத்

துணைசெய்கிறதா என்பதை ஆராயும் முன் 

வடமொழியில் ஒலி அடிப்படையில் இருவகையாகப் 

பகுக்கப்பட்ட விஸர்க்கம் போல, ஆய்தமும் தமிழில்

ஆறு வகையாகத் தொல்காப்பியர் காலத்திலேயே

பகுக்கப்பட்டு விட்டது என்பதை மனதிருத்த

வேண்டும். ஆனால் இவற்றின் பயன்பாடு என்ன ? 

ஆய்தம் தனி ஒலியா அல்லது குற்றியலிகரம்,

குற்றியலுகரம் போல எழுத்தின் ஒலித்திரிபினைக்

அடையாளங் காட்டுதற்கு இடப்பட்ட வெறும்

குறியீடா எனும் கேள்விக்குள் அடுத்து நாம்

சென்றாக வேண்டும். தொல்காப்பிய இரண்டாம்

சூத்திரத்தில் கூறப்படுவது போல இவை

எழுத்துக்களைப் போன்றவைதான்.        

( எழுத்தோரன்ன)  இன்றைய வழக்கில் நாம் 

ஆய்தத்தை எங்கு, எதற்குப் பயன்படுத்துகிறோம்

என்பதை நினைவுகூர்வோம். பேச்சு வழக்கில்

பெரும்பாலும் ஆய்தப் பயன்பாடு இல்லை. எஃகு

போன்ற பயன்பாட்டில் உள்ள சொற்கள் மிகச் சில

இருக்கலாம். எழுத்திலும் இதே நிலையே

காணப்படுகிறது. தனித்தமிழாளர்களுக்கும்

பண்டைய இலக்கியத்தை மேற்கோளாக

வழிமொழிய வேண்டியவர்களுக்கும் ஆய்தத்தைச் 

சற்றதிகமாய்ப் பயன்படுத்த வேண்டிய தேவை

எழலாம். ஆனால் வழக்கில், ஏன் வகுப்பறைகளிலே

கூட, ஆங்கிலத்தின் நுண்ணொலிகளைத் தமிழில்

உச்சரிக்க இயலாதவருக்குச் சரியான உச்சரிப்பைத்

தமிழில் ஓரளவிற்கு எழுதிக் காண்பிக்க ஆய்தம்

துணைசெய்கிறது என்பதை அனுபவத்தில்

காணமுடியும். மாஃபியா போன்ற சொற்களிலும்

ஆய்தத்தை இயல்பாக ஊடகங்கள் பயன்படுத்தக் 

காண்கிறோம். 

இப்படி ஆய்தத்தைப் பிறமொழி

ஓசைகளைத் தமிழ்படுத்த முதன் முதலில்

பயன்படுத்தியவர் மாணிக்க நாயகர் ஆவார்.


ஆய்தவொலி வல்லெழுத்தின் ஓசையை

மென்மைப் படுத்தவே வருகிறது என்னும்

கருத்துடையவர் வெள்ளைவாரணர். இன்றைய 

நடைமுறைப் பயன்பாட்டில் ஆய்தம் பெறுமிடம்

இதுவேயாகும். ஆய்த எழுத்துத் தன் பிறப்பாலும்

 தன்மையாலும் இடையின மெய்யெழுத்தைப்

 போன்றது எனக்கூறும் அறுவகை

இலக்கணத்தையும் அதற்கான நியாயங்களையும்

நாம் தனித்து ஆராயவேண்டும். (அறுவகை 

இலக்கணம். சூ.92)

முடிபுகள்.

வடமொழியில் உள்ளாற்போலத் தமிழில் தனியே 

வர்க்க எழுத்துக்கள் இல்லாவிடினும் க, ச, ட, த, ப. 

என்பதற்குரிய வர்க்க ஒலிகள் மொழிப்பயன்பாட்டில் 

இருந்து வந்துள்ளன என்பார் கார்டுவெல்.  “தந்தது“

எனும் சொல்லில் முதலில் வரும் தகரமும்

ஈற்றயலில் வரும் தகரமும் வரிவடிவில்

ஒன்றாயினும் ஒலிப்புமுறையில் வேறுபடுவது

போல           ( //Thandhathu// ) ஏனைய

எழுத்துக்களும் இடஞ்சார்ந்து ஒலிப்புமுறையில் 

வேறுபாடுடையனவாய் அமைகின்றன.

 “மொழிபடுத்து இசைப்பினும் தெரிந்துவேறு

 இசைப்பினும்

 எழுத்தியல் திரியா என்மனார் புலவர்“ 

                         ( தொல். எழுத். 53) 

எனும் நூற்பா எழுத்துருக்கள் ஒன்றாயினும் ஒலிப்பு 

முறையில் எடுத்தும் படுத்தும் நிகழும் மாற்றத்தைச்

சுட்டுவதாய் அமைகிறது.       ( பி.சா.சுப்பிரமணிய

சாஸ்திரியார் இதற்கு மாற்றுக்கருத்துடையவர்.

விளக்கத்திற்கு பி.சா.சு.வின் தொல்காப்பிய 

எழுத்ததிகாரக் குறிப்புரை காண்க). 


  “தத்தம் திரிபே சிறிய என்ப“ (தொல். எழுத். 88 )


எனும் நூற்பா ஒவ்வொரு தானத்துள் பிறக்கின்ற

 எழுத்துக்களின் தன்மையைக் கூறியிருப்பினும்

அதை நுண்ணுணர்வால் ஆராயும் இடத்துத்

தம்முடைய வேறுபாடுகள் சிறிய சிறியவாக

இருக்கும் எனக் கூறுகிறது.

ய்தம் வல்லெழுத்துக்களின் ஓசையை

மாற்றுவதற்கான ஒரு குறியீடாகப்

பயன்பட்டிருக்கலாமோ என்ற நியாயமான

ஐயத்தை இவை ஏற்படுத்துகின்றன. 

இதனைப் பின்வருஞ் சான்றுகள் வலியுறுத்தும்.

செய்யுளின் ஓசை வேறுபாடுகள் காட்டவரும்

வண்ணத்தில் ஒன்றான, ஆய்தம் பயின்று வரும்

நலிபுவண்ணம் பற்றிக் கூறும் 

“நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்“ 

                       ( தொல். செய். 215) 

எனும் நூற்பாவிற்குப் பேராசிரியரும்,
 
நச்சினார்க்கினியரும் “ நலிபென்பது ஆய்தம் ” எனப்

பொருளுரைத்திருப்பது, 

யாப்பருங்கல முதற்சூத்திர விருத்தியுள்,


   ஆய்தமும் யவ்வும் அவ்வொடு வரினே

     
ஐயென் எழுத்தொடு மெய்பெறத் தோன்றும்.’
      என்ற அவிநயனார் பாடலை மேற்கோள் காட்டும்

 விருத்தியுரைக்காரர்,
 அய்யன், கய்தை, தய்யல், மய்யல், கய்யன் - என

அகரத் தோடு யகர ஒற்று வந்துள்ளதை, ஐயன்

கைதை, தையல், மையல், கையன் என்பது போல,
கஃசு, கஃதம், கஃசம் - என அகரத்தோடு ஆய்தம்

வந்துள்ளதை, கைசு, கைதம், கைசம், என

ஐகாரமாக்கி உச்சரிக்குமாறும் கூறுவதிலிருந்து

கைசு என எழுதப்பட வேண்டியது, கய்சு

என்றுமட்டும் அல்லாமல் கஃசு (கஃசு என்பதைக் =

கைசு எனப்படிக்க வேண்டும். ) எனும் ஆய்தக்

குறியீடிட்டும் எழுதப்பட்டு வந்துள்ளது தெளிவாகிறது.

எனவே இவற்றை நோக்கித் தமிழாய்வோர், 

ஆய்தம் நலிபு ஓசைதரும்

என்பதையும், உயிர்போல ஒலிக்கப்பட்டது 

என்பதையும் அடிப்படையாகக் கொண்டு

ஆய்தக் குறி குறித்து மேலாய்வதற்கான

வாய்ப்பினை ஏற்கலாம்.

உரையாசிரியர்களின் உரைக்கண்ணாடியைக்

கழற்றிவிட்டு, ஆய்தத்தின் செய்கையை உணர்த்தும்,


“ ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும் “ 

                                ( தொல். எழுத்.39) 

என்னுஞ் சூத்திரத்தையும், 

ஆய்தத்தின் இயல்பை உணர்த்தும்,

   “உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

   மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா

   ஆய்தம் அஃகாக் காலை யான ”( தொல். எழுத்.40)

 
என்னுஞ் சூத்திரத்தையும் மறுவாசிப்பிற்கு 

உட்படுத்துவோர் ஆய்தம் குறித்து இன்னும் மேலும் 

பல புதிய செய்திகளை அறிந்து கொள்ளக்கூடும்.

( இஃது ஆய்வுக் கட்டுரை யன்று. முடிந்த முடிபுமன்று. கவிஞர். பாரதிதாசன்

அய்யா அவர்கள் என்னையும் ஒரு பொருட்டாய்ப் பணிக்கவே இதை எழுத

நேர்ந்தது. இன்னும் குற்றியலிகரம் குறித்தும், குற்றியலுகரம் குறித்தும்

எழுதினால் அப்பணி நிறைவுறும்.  அருள்கூர்ந்து பிழைகள் ஏதுமிருப்பின்

தமிழறிஞர்கள் பொறுத்துச் சுட்டிட வேண்டுகிறேன்.

படிப்போரின் மேலான கருத்துக்ளை வரவேற்கிறேன்)
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

6 comments:

 1. Replies
  1. முதல் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றியுடையேன்!

   Delete
 2. வணக்கம் ஐயா. ஆய்தம் பற்றிய ஆய்வு சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டு "ஆய்தம் அலகு பெறுமா" என்பது குறித்து முத்து நிலவன் ஐயாவின் வளரும் கவிதையில் நன்கு விவாதித்துள்ளோம். அவற்றையும் அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக எழுத்துகளின் இலக்கணம் யாப்புக்குள் வரும் போது பல வேறுபாட்டைப் பெற்றுள்ளன. எழுத்துகளின் வகைமை, மாத்திரை அளவு, தன்மை இப்படி நிறைய உள்ளன. அவற்றைப் பற்றியும் நாம் தனியாக விவாதிக்கலாம். என்னிடம் தனியாகக் கணினி இல்லை. வாய்ப்புக் கிட்டும் போது பதிவிடுகின்றேன். கால தாமதமாகக் கருத்திட்டமைக்கு மன்னிக்கவும். நன்றி ஐயா.

  ReplyDelete
 3. அய்யா,
  வணக்கம்.நீங்கள் வந்து இந்தக் கட்டுரையைப் படித்தமைக்கே பெருமகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கட்டுரையைப் பார்க்கிறேன்.
  எழுத்திலக்கணம் யாப்புக்குள் வரும்போது நிகழும் வேறுபாடுகளை ஓசைகருதியதாகவே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தவறிருக்கலாம். தொல்காப்பியச் செய்யுளியலின் முதற்சூத்திரத்தில்,
  “மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ“ என்பதில் எழுத்தியல் என்பதற்குப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் “ எழுத்தியல் என்பது யாப்பிற்கேற்ப எழுத்துக்களை அமைத்துக் கொள்ளும் கூறுபாடு என வரையறுத்து நூன்மரபில் 33 என வகுத்த எழுத்துக்களை யாப்புமரபிற்கேற்ப 15 என வகைப்படுத்துவதும் இதன்பாற்பட்டதெனக் கருதுகிறேன். தெரிந்து கொள்ளக் கடலளவு இருக்கின்றன.
  முத்துநிலவன் ஐயாவின் அண்மைப்பதிவுகளைப் பார்த்துவருகிறேன். அய்யா இது குறித்து எழுதியிருப்பின் நான் எழுதுதற்கு எதுவும் இல்லை. அவசியம் பார்க்கிறேன்.
  வருகைக்கும் கருத்திற்கும் நெஞ்சாற நன்றியுண்டு.

  ReplyDelete

 4. வணக்கம்!

  ஆய்தம் குறித்திங்கே ஆய்ந்தளித்த கட்டுரை
  பாய்ந்துவரும் வெள்ளத்தின் பாங்குடைத்து - வாய்த்தநல்
  தேனாய்க் குடித்தேன்! திகைப்புற்றேன்! நான்கற்க
  மீனாய்த் துடித்தேன் விரைந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete