Tuesday, 3 June 2014

புதிரவிழாத ரகசியங்கள்.


















புதி ரவிழாத ரகசியங்கள் – சொல்லிப்
    போன’உன் பின்வரும் என்செவிகள்!
கதிர் பிடிக்காத நெற்பயிர்கள் – அது
    காத்திடப் பார்த்திடு மென்நிலங்கள் !
சுதி யறியாத அபஸ்வரங்கள் – எனைச்
    சுட்டெரித் தோடும் உன்நதிகள் !
எது மறியாமல் நீயிருப்பாய் ! – உன்
    எரிமலை வீழுமென் பனித்துளிகள் !

கறை படியாத மனச்சுவரில் – விடை
    கண்டறியாத கணக்கிடல்கள் !
உறை கிழிக்கின்ற பசுந்துளிர்கள் – உனை
    உண்டிடத் தீராப் பெரும்பசிகள் !
பிறையெனத் தேய்ந்திடும் என்நிஜங்கள் – அங்கு,
    பௌர்ணமி ஆகிடும் உன்நிழல்கள் !
முறையிடல் இல்லா வழக்கிடல்கள் – என்றும்
    முடிவதுண்டோ இத் தொடர்கதைகள்?

வற்றிடத் துடிக்கும் என்சுனைகள் ! – இன்னும்
    வாழ்ந்திடச் சொல்லும்’உன் கற்பனைகள் !
கற்றறி யாத உன்தடங்கள் – மழைக்
    காலடி தேடிடும் என்கடல்கள் !
வெற்றெனப் போயிடும் நாள்திரைகள் – எனை
    வென்ற அவ்வேளையின் ஞாபகங்கள்
அற்ப மென்றேநீ அழித்திருப்பாய் – எனக்(கு)
    ஆவதுண் டோ’அக் கொடுப்பினைகள்?
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

16 comments:

  1. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே!

      Delete
  2. கற்பனையும் சொற்புனைவும் போட்டியிடும் கவிதை அ்யயா. மிக அருமை. புதிர் அவிழாத ரகசியங்கள் என்று தலைப்பைப் பிரித்தே இடலாமே? இன்னும் கூடுதலாகப் புரியுமே? புரியவிடாமலே அச்சுறுத்தும் இருண்மை வகை நமக்கெதற்கு? புரிந்து ரசித்து சிந்திக்க வைப்பதுதானே சிறந்த கவிதை? (முதற்பாவில், மூன்றாமடியின் இரண்டாம் வரியில் இரண்டாம் அசை விளத்தில் முடிந்திருந்தால் இன்னும் ஓசை பொருந்தி வருமோ? என ஒரு சிறு சந்தேகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அதே பாடலின் மற்ற 3அடிகளின் இரண்டாம் வரிகளைப் படித்துப் பாருங்கள்)

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். இவையெல்லாம் உதிரியாய்த் தலைப்பிடப் படாமல் இருந்தன. முதல் வரியின் இருசொற்களை வெட்டி தலைப்பில் ஒட்டி விட்டேன். பிரித்துத்தான் இட்டிருக்க வேண்டும். சுட்டியமைக்கு நன்றி! மற்றபடி விளம், மா பார்த்து எழுதாமையால் நீங்கள் சுட்டிய ஓசை விகற்பத்தைக் கவனித்திடக் கூடவில்லை. ஏதேனும் பாவகையுள் உள்ளடக்கியிருப்பின் சற்றுக் கூடுதலாய்ப் பார்த்திருப்பேன்.
      இப்படிச் சுட்டிக்காட்ட நீங்கள் இருப்பது மனதிற்குக் களிப்பையும், எழுத்தில் கவனத்தையும் கொண்டிடத் துணைசெய்யும். இதையே உங்களிடம் என்றும் எதிர்பார்க்கிறேன்.
      நன்றி!

      Delete
  3. அருமை சகோதரா ! புதிரவிழாத ரகசியங்கள். அதற்கேற்றாற் போல் படமும் அமைத்துள்ளது. நன்றி !வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி சோதரி!

      Delete
  4. அன்பு விஜூ,
    மீண்டும் வருவதற்கு மன்னிக்கவும்.
    எட்டே பதிவு
    வலைப்பதிவு தொடங்கி 20நாள் முடியவில்லை.
    அதற்குள் ஆயிரத்தைத் தாண்டிய பக்கப் பார்வைகள்!
    இது வலையுலகில் சாதாரணமானதன்று நண்பா!
    உமது அளப்பரிய தமிழ்த்திறனுக்கான அடையாளம்!
    வாழ்த்துச் சொல்லவே மீண்டும் வந்தேன்..
    மீண்டும் மீண்டும் வருவேன்.. பத்தாயிரத்தை இன்னும் சில கிழமையில் தாண்டுவீர், ஒருலட்சத்தை இன்னும் சில திங்களில் தாண்டுவீர்... பற்பல வலைக்குள்ளும் புகுந்து, பார்த்து, சரியானவற்றைச் சரியாகக் கருததிட்டு இன்னும் பின்பற்றாளரை அதிகரித்து, பலலட்சம் பார்வையாளரை எட்டி, நல்லதமிழ் வளர உமது தமிழ் உதவட்டும்...உதவும்... வாழ்த்துகிறேன்.. வளர்க!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். தாங்கள் என்மேல் கொண்ட அன்பும் ஆதரவும் கண்டு மனம் நெகிழ்கிறேன். என் முதற்பதிவில் நான் கூறியிருப்பதைப் போல கிணற்றுத் தவளைதான் நான்...!
      மானிட சமுத்திரம் நீயுமெனக் கூவெனெ என்னை இணைய உலகிற்குத் தங்களின் பயிற்சியே இழுத்துப் போட்டது. கணைகளை ஏற்றே பழகிய எனக்கு இந்த இணையத் தொடர்பு மகிழ்வாய்த் தான் இருக்கிறது. நிச்சயமாய்த் தமிழுக்கும் இனத்திற்கும் உங்களின் வழிகாட்டுதலோடு செயத்தக்க செய்யக் காத்திருக்கிறேன்.
      நன்றி !

      Delete

  5. வணக்கம்!

    அயற்சொல் அகற்றி அருந்தமிழைத் தந்து
    வயற்கொள் வளத்தை வழங்கு!

    ஐயா

    இக்கவிதையில் நிறைந்த அயற்சொற்கள் உள்ளன. முடிந்தவரை அயற்சொல்கள் நீக்கி எழுதலாம். இயலா இடத்தில் நெகிழ்வு தரலாம்.

    தங்களைக் குறித்து என் மின்வலையில் பதிவிட்டுள்ளேன்.வருகை தரவும்.

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. பச்சிலையில் புதுச்சோறும் நெய்யும் கூட்டும்
      பைங்குழம்பும் பரிமாறப் பட்டிருக்க,
      எச்சிலையை ஏன்பொறுக்கு கின்றாய் ? என்றீர்!
      ஏற்கின்றேன்! தவிர்க்கின்றேன்! உணர்வால் கட்டி
      உச்சிமுகர் தமிழ்ப்பெண்ணாள் உடனி ருப்பாள் !
      உயிரற்ற பிணத்தோ(டு) உறவெ தற்கு?
      மெச்சிடுநல் மொழியுடையேம்! மெலியர் அல்லேம்!
      மிகுநன்றி எனைத்திருத்தும் முயற்சி வாழி!

      Delete

    2. வணக்கம்!

      அவையடக்கம் போன்று அழகான கவிதை படைத்துள்ளீா். உரைத்த கருத்திற்குப் பொருத்தமான கவிதை, இதைவிட உயா்வாக யாரும் எழுத முடியாது. படித்து மகிழ்வுற்றேன்.

      சொல்லுகின்ற இடத்தினிலே சொல்லும் சொற்கள்
      சுடா்ப்பொன்னாய் மின்னிடுமே! தலைமை யேற்று
      வெல்லுகின்ற திறனுடைய மறவா் நீங்கள்!
      வியக்கின்றேன்! தமிழ்மீது கொண்ட பற்றால்
      அல்லுகின்ற இடம்சொன்னேன்! உண்மை என்றே
      அள்ளியெனை மகிழ்வித்தீா்! வணங்கு கின்றேன்!
      செல்லுகின்ற இடமெல்லாம் தமிழைப் பாடிச்
      செழிப்புறவே செய்திடுவோம்! நலங்கள் ஈந்தே!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  6. வணக்கம்
    ஐயா.

    தங்களின் வலைப்பக்கம் வருவது இது முதல் முறைகவிஞர் பாரதிதாசன் ஐயாவின் வலைப்பு வழி அறிந்து வந்தேன்...
    தங்களின் கவிதைகள் மிக சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      உங்கள் வருகையை வரவேற்கிறேன். வாழ்த்தினுக்கு நன்றி!

      Delete
  7. அப்பப்பா என்ன புலமைத்துவ உரையாடல்கள்(கருத்துகள்).
    ரசித்தேன் . மிக்க நன்றி. சிறந்த வரிகள். அதற்கு மேலே
    கருத்துகள் உள்ளதே. நான் சிறியவள்..வாழ்க! வளர்க!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நானும் சிறியவன் தான்,
      வயதிலும் வாசிப்பிலும்.
      பழைய பதிவுகளையும் வாசித்துக் கருத்திரும்
      உங்கள் அன்பினுக்கும் வாழ்த்தினுக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்!

      Delete
  8. //மழைக்
    காலடி தேடிடும் என்கடல்கள் !//
    வாவ்..
    அடிச்சு பட்டய கிளப்புங்க

    ReplyDelete