Friday 20 June 2014

வள்ளுவக் கூத்து.

ஊர் முழுக்க அறிவித்தாயிற்று. அன்று இரவு புதிய கூத்து நடைபெற இருக்கிறது.  மக்கள் அனைவரும் கூத்துப் பற்றியும், கூத்தர் பற்றியும் பேசத் தொடங்கி விட்டனர்.

ஊர் முற்றத்தில், நிலவொளியின் மணற்பரப்பில் மெல்ல ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். ஒருவர், சிலர், குழுக்கள் எனச் சிறிது சிறிதாய்க் கூட்டம் சேரத் தொடங்குகிறது. வள்ளுவனும் என்ன நடக்கிறது என்று பார்ப்போமே என்று தன் குறட்பணியை ஒதுக்கி வைத்துவிட்டு அங்கு முன்கூட்டியே சென்று விட்டான்.

வருகின்றவர்கள் வள்ளுவரை நலம் விசாரிக்கிறார்கள்.
“ அய்யா! நலமா? உங்கள் குறள் படைப்பு எது  வரை முடிந்துள்ளது?எப்போது அரங்கேற்றம் செய்வதாய் உத்தேசம் ? புன்னகைத்தபடி ஒவ்வொருக்கும் பதில் சொல்லி அனுப்புகிறான் வள்ளுவன். 

வேலைமுடித்து அனைவரும் கூத்தாடும் இடத்தில் குழுமி விட்டனர். ஊரில் ஒருவர் பாக்கி இல்லை. கூத்தோ தொடங்கிவிட்டது. ஆரம்பித்த கூத்தில் இரவின் கண்கள் விழித்துச் சிவக்கின்றன. விடிய விடிய நடந்த கூத்து முடிகிறது. மக்கள் கூட்டம் கலையத் தொடங்குகிறது. அனைவரையும் பார்த்தவாறே அதே இடத்தில் அசையாமல் இருக்கிறான் வள்ளுவன். சில நொடிகளில் வெறுமையான மணற்பரப்பு அவனுக்கு ஏதோ சொல்லிற்று போலும். வேகமாகத் தன் குடிலுக்கு ஓடுகிறான் . எழுத்தாணி எடுத்து எழுதியாயிற்று.
வெண்டளைகளில் கட்டுண்டு கிடக்கிறது கூத்தாடு களம்.

“கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று “ ( குறள் 332)

கூத்தாடுகின்ற அவைக்களத்தில் காணவருகின்றவர்களைப் போன்றதுதான் ஒருவனிடம் வரும் செல்வம்.
கூத்து முடிந்தவுடன் எழுந்து போய் விடுகின்றவர்களைப் போல அது போய்விடும். 
( அது விளிந்தற்று =  அது போய்விடும் )
அவ்வளவுதானா பொருள்...........   ?
கூத்தாடும் அரங்கில் காட்சியைக் காணக் கூடுவோரை நினைத்துப் பாருங்கள். ஒரு கணத்தில் அரங்கு நிறைந்திடாது. ஒவ்வொருவராய் ஒவ்வொருவராய்த்  வரத்தான் அரங்கு நிறையும். அது போலத்தான் பெருஞ்செல்வம். எடுத்த உடனே ஒருவனது கருவூலத்தில் நிறைந்திடாது. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் சேரும்.
ஒருவனைவிட்டுப் போகும் போதோ செல்வம்  கொஞ்சம் கொஞ்சமாய், கொஞ்சம் கொஞ்சமாய்ப் போவதில்லை. கூத்து முடியும் போது கூட்டம் ஒரு கணத்தில் கலைந்து விடும்.  கூத்து முடித்துப் புறப்படும் கூட்டம் போல ஒருவனை விட்டுப் போகும் போதோ அவனுடைய அத்தனை செல்வமும் சட்டெனப் போய்விடுகிறது.

காட்சிகளைக் காலம் கடந்து உறையவைத்தான் வள்ளுவன். அவன் கண்ட கூத்தர் இன்றில்லை. கூத்தில்லை. கண்டோரில்லை. குறள் இருக்கிறது. படிக்கப்படிக்கப் புதியகாட்சிகள் பல காட்டி அதனுள் இருந்தெழும் கட்டியங்காரன் உரக்கச் சிரிக்கிறான்.

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

20 comments:

 1. வள்ளுவன் காலமாகிவி்ட்டான். அதாவது முக்காலமும் ஆகிவிட்டான் எனவேதான் எப்போது எடுத்தாலும் அவன் புதியவனாகத் தோன்றுகிறான் அறிதோறு அறியாமை நம்முடையது.. அருமையான விளக்கம் நண்பரே சேருவது மெதுவாக, போவது விரைவாக.. அருமை அருமை நன்றி

  ReplyDelete
 2. அய்யா,
  வணக்கம். இது இலக்கிய வகைமையுள் என் முதற்பதிவு. காரணத்தோடுதான் திருக்குறளைத் தேர்ந்தேன். நிச்சயமாய் இக்குறளோ இதன் கருத்தோ நீங்கள் அறியாதவொன்றல்ல. இருந்தும் ஒருவனை வளரப் பாராட்டும் பண்பு, பிழைகளையும் மனம் புண்படாமல் எடுத்துரைக்கும் பாங்கு.....
  உங்களைப் பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றன.
  இங்கு என்னால் ஆகக்கூடியதெல்லாம் இவ்விலக்கியப் பதிவின் முதல் பின்னூட்டம் உங்களுடையதாய் ஆனமைக்கு மனதினித்துக் களிக்கும் பேரானந்தத்தின் பிழிவாய் “நன்றி“ எனும் ஒரு சொல் மட்டுமே!

  ReplyDelete
 3. Replies
  1. வலைச்சித்தரின் வரவிற்கு வந்தனங்கள்!

   Delete
 4. " அவன் கண்ட கூத்தர் இன்றில்லை. கூத்தில்லை. கண்டோரில்லை... "

  உங்கள் கதை, மற்றும் குறள் தெளிவுரையின் மூலம் கண்டோம் தோழரே !

  " மெல்ல மேல்ல சேர்ந்து... சட்டென மறையும்.... "

  செல்வத்தின் " குணத்தை " பற்றிய அற்புத படப்பிடிப்பு !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 5. வருகைக்கும் மதிப்பீட்டிற்கும் நன்றியுடையேன் தோழ!

  ReplyDelete
 6. //ஆரம்பித்த கூத்தில் இரவின் கண்கள் விழித்துச் சிவக்கின்றன.//

  எனக்குப் பிடித்த வரி...
  //நிலவன் அண்ணா இது பாலில் மிதக்கும் வெண்ணைக் கட்டி என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறன்..//

  இப்படி பாடம் நடத்தினால் நோபல் விருதல்லவா கொடுக்க வேண்டும் ..
  வாழ்த்துக்கள் தோழர்.
  தொடர்க
  www.malartharu.org

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்தினுக்கும் நன்றி தோழர்!
   //நிலவன் அண்ணா இது பாலில் மிதக்கும் வெண்ணைக் கட்டி என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறன்..// ஏதோ உங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்த விஷயமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் புரிகிறது.
   தமிழ்ப்பாடத்தை இங்கேனும் நடத்த முடிந்தால் அது மகிழ்ச்சிதானே! ( எனக்குச் சொன்னேன்.)
   “இவர் அடி என் முடிமேலன “ எனும் பதிவொன்றில் உங்கள் பின்னூட்டத்திற்கான என் பதிலொன்று தங்கள் பார்வைக்காய்க் காத்திருக்கிறது.
   http://oomaikkanavugal.blogspot.in/2014/05/blog-post.html
   காலமிருப்பின் பார்வையிட்டு உதவுக!

   நன்றி!

   Delete
 7. வணக்கம் சகோதரரே!

  அருமை! அருமை!

  மெதுவாகச் சேர்ந்து விரைவாகப் போகும் பணம்.
  அழகான உதாரணத்துடன் அருமையான குறள்!
  சிறந்த பதிவும் பகிர்வும் சகோதரரே!

  மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

   Delete
 8. தங்களின் குறளோவியம் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
  அருமையான விளக்கம்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா,
   தங்கள் மகிழ்ச்சிக்கும் பாராட்டிற்கும் !

   Delete
 9. இனிய வணக்கம் சகோதரரே!

  உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!
  வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

  ReplyDelete
 10. உங்கள் அழைப்பு ஏற்கப்பட்டது. பதிவிட்டுவிட்டேன் சகோதரி!
  என் உண்மை முகத்தை வெளிக்கொண்டுவந்து விடுவீர்கள் போல...
  காண http://oomaikkanavugal.blogspot.in/2014/06/blog-post_21.html வருக.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே!

   பார்த்தேன். பதிலும் இட்டேன்.

   என் பதிவையும் பார்க்க வரலாமே...
   http://ilayanila16.blogspot.de/2014/06/blog-post_21.html

   வாருங்கள்!

   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 11. முக்காலமும் உணர்ந்த வள்ளவனின் குறள் தற்காலம் மட்டுல்ல எக்காலமும் பொருந்தும் என்பதை அழகாக தெளிபடுத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
 12. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

  ReplyDelete
 13. சிறந்த இலக்கிய விளக்கம்
  சிந்திக்க வைக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி அய்யா!

   Delete
 14. அய்யா தங்கள் சிந்தனை மிகப்பெரிது. நேரில் பார்த்த நிலை. அருமை. முறந்சிக்கிறேன் இனி இது போல்.
  ஒரு குறளுக்கு இவ்வளவு அழகிய பதிவென்றால் ஆஹா,,,,,,,,,,,,,,,
  இன்னும்,,,,,,,,,,,,
  நன்றி.

  ReplyDelete