Sunday 15 June 2014

நமனை அஞ்சோம்!






குத்திக் கிழித்தபகை! – வேர்

      கொத்திப் பறித்துக் குற்றுயி ராக்கி

எத்திச் சிரித்தபகை! – எத்

      திக்கிலும் எம்மைச் சிதற்றி யடிக்கப்

பித்துப் பிடித்தபகை! – வெடிச்

      சத்தத் தாலெம் சாம்ப லெரிக்கக்

கத்தித் திரிந்தபகை! – ஈனக்

      கயவர் நிறைந்தபகை!



ஒட்டிப் பிறந்தவரைக் – கடல்

      வெட்டிப் பிளக்க எட்டி யிருக்கச்

சுட்டுத் தகர்த்தபகை! – வெறி

      சொட்டத் திரிந்து நக்கிக் கடித்துக்

கொட்டடி யிட்டபகை! – கை

      கட்டிக் கிடக்க மட்டும் இருக்கக்

கட்டளை யிட்டபகை! – அறம்

      கண்டறி யாதபகை!



கூற்றைக் கதறடித்து – அதன்

     குடலை`உருவிச் சுடலை எரித்துக்

காற்றாய் அலைகிழித்துப் – பெறும்

     காயம் கண்ணீர் யாவும் மறைத்த,

சீற்ற வரிப்புலியே ! – உன்

      சின்ன உறுமலில் தோற்ற எலியெலாம்

ஆற்றல் அரற்றுதடா ! – கண்

       அகலத் திறந்து சற்றே எழடா!



கையில் விலங்கிடட்டும் ! – எம்

      கால்களை வெட்டிக் குறைத்திடட்டும்!

கண்கள் பிழுதிடட்டும் ! – எம்

      கருவறைக் குள்ளும் நெருப்பிடட்டும்!

தோலை உரித்திடட்டும் ! – உப்புத்

      தூவியெம் வேதனை ரசித்திடட்டும்!

ஆவியொன் றுள்ளவரை – தமிழ்

      அடிமையென் றானதாய் ஆகவிடோமடா !

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

32 comments:

  1. வணக்கம்
    ஒவ்வொரு வரியிலும் வேதனையின் துடிப்பு தெரிகிறது.
    காலம் ஒரு நாள் மாறும்.... மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி சகோதர!

      Delete
  2. வீரமிகு வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வேதனை மிகுந்ததும் கூட....!
      வருகைக்கும் கருத்ததிட்டமைக்கும் நன்றி அய்யா!

      Delete
  3. இது கவிதையா ? நெருப்புக்குழம்பா ? தீச்சுடரா ?

    அருமை நண்பரே... காலம் ஒருநாள் கைகூடும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

      Delete
  4. “சலுகை போனால் போகட்டும் - என்
    அலுவல் போனால் போகட்டும்
    தலைமுறை ஒரு கோடி கண்ட என்
    தமிழ் விடுதலை ஆகட்டும்“ எனும் பாரதிதாசக் கம்பீரத்தைக் கண்டு மகிழ்ந்தேன். வீரக்கவிதை, வீரம் விளையத் தூண்டும் சந்தக்கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றியுடையேன்!

      Delete
  5. கூற்றைக் கதறடித்து – அதன்
    குடலை`உருவிச் சுடலை எரித்துக்
    காற்றாய் அலைகிழித்துப் – பெறும்
    காயம் கண்ணீர் யாவும் மறைத்தச்
    சீற்ற வரிப்புலியே ! – உன்
    சின்ன உறுமலில் தோற்ற எலியெலாம்
    ஆற்றல் அரற்றுதடா ! – கண்
    அகலத் திறந்து சற்றே எழடா!

    நெஞ்சு நிறைந்தது
    நெற்றியடி கண்டு-உம்
    உள்ளக் குமுறலில்- எம்
    உள்ளம் குளிர்ந்தது
    உயிரை வதைத்தது
    எண்ணி கரைந்தன கண்கள்.

    அருமை சகோ உளம் தொட்ட கவிதை வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
  6. சிலிர்ப்புண்டாக்குகின்றன சீற்றமிகு வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி!

      Delete
  7. வீரமும்,கோபமும் செறிந்த, படிப்போரின் உள்ளத்தை உறுத்தும் கவிதை !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ( எனது புதிய பதிவு : முற்பகல் செய்யின்...
    http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html

    நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சாமானியன்,
      வருகைக்கு நன்றி.
      பெயர் சிலருக்குப் பொருத்தமாய் இருப்பதில்லை.
      பெயருக்கு சிலர் பொருத்தமாவதில்லை. இந்தப்பெயரை நீங்களாகத் தேர்ந்து கொண்டதால், கறுப்பாட்டை வெள்ளாடு என்பது போன்ற மரபு நம்மிடையே உள்ளதால் அது போல எடுத்துக் கொள்கிறேன். உங்கள் முற்பகல் செய்யினைப் படித்துக் கருத்திட்டு விட்டேன். மற்றவரும் படிக்கக் கருதி அப்பின்னூட்டத்தை இங்கும் தருகிறேன்.

      “வாசகரை அவரறியாது தன்னுள் மூழ்கடிக்கும் ‘கதைசொல்லித்தனங்கள் இல்லாத கதை‘ உங்களுக்குக் கைவருகிறது . தி.ஜானகிராமனின் ‘ரசிகனும் ரசிகையும்‘ என்னும் சிறுகதையை வாய்ப்பிருந்தால் படித்துப் பாருஙகள்.
      சில வரிகளை நீக்கியிருந்தால் இக்கதையிலும் அந்த வடிவசோதனை வாய்த்திருக்கும் போலத் தோன்றுகிறது.
      வாழ்த்துக்கள்.“
      நன்றி!

      Delete
    2. கறுப்பாடு?
      கருப்பா, கறுப்பா?
      “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள“ என்றார் தொ.கா. இப்போது கறுப்பு, கருப்பு இரண்டுமே கலந்துவிட்டனவே? இரண்டையும் எடுத்துக் கொள்ளலாமா? கறுப்பு மட்டுமா?

      Delete
    3. அய்யா வணக்கம்!
      தங்களின் மீள் வருகைக்கு நன்றி!
      இந்த வினாவை அறிவினாவாகவே காண்கிறேன்.
      சொல்லாராய்ச்சிக்கு முன்னால், வாசகன் என்ற முறையில் இந்த இரு சொற்களுமே வழக்கில் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். நீங்கள் காட்டிய உரியியற் சூத்திரத்தில்,
      கறுமை, செம்மை எனுஞ்சொற்கள் தொழிற்பட்டுழி அல்லது வெகுளிப் பொருளைக் காட்டாது என்கிறார் சேனாவரையர்.
      எனவே தொழிற்படாத வழி அது நிறப்பொருள் குறித்து வரும் எனச் சேனாவரையர் கருதுவதாகக் கொள்ள முடியும்.
      “நிற்கறுத் தோரரும் அரணம் போல். நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் (பதிற்.13)” என இப்பொருளினுக்குச் சான்று காட்டுவார் தெய்வச்சிலையார்.
      இது ஒருபுறமிருக்க, நாம் கரும்பலகை, கருங்காலி என்றெல்லாம் இடையின ரகரத்தைத் தான் பயன்படுத்துகிறோம். எனக்கென்னமோ இந்த வடிவம்தான் சரியானவடிவமாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இதன் வேர்ச்சொல் “ கார்“ எனக்கொண்டால் “களவென்னுங் காரறிவாண்மை (குறள், 287)“ என்பது போல அது முதலில் இருளைக் குறித்து வழங்கப் பட்டிருக்கலாம். பின்பு இருளின் நிறமாகிய கருமையைக் குறித்தது. பின்பு கருமை நிறமுடைய மேகத்திற்கு அடையாய் (கார் மேகம்), பின்பு கார் என்பதே மேகத்தைக் குறிப்பதாய் மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.
      அதே நேரம் நம் வழக்கிலுள்ள “காத்துக்கருப்பு“ ( ஆவியும் இருளும்?) என்பதை “கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார் (அறப். சத. 30).“ கறுப்பு எனச் சுட்டும் வழக்கும் காணப்படுகிறது.
      பிங்கலநிகண்டு, கருப்பு, கறுப்பு இரண்டுமே நிறம் குறித்து வரும் என்பதால் இச்சிக்கல் அன்று முதலே இருந்திருக்க வேண்டும்.
      கருப்பு என்னும் வடிவமே நானறிந்தவரை சரி.
      உயர்ந்தோர் வழக்குக் கருதி இரு வடிவங்களையுமே ஏற்கலாம் என்பதே என் கருத்து.
      நன்றி.
      (அப்பா! ஒரு தப்பப் பண்ணிட்டு எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...!)

      Delete
    4. வணக்கம்!

      கறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும். நிறத்தையும் உணர்த்தும். என்று தொல்காப்பியர் கூறுகின்றார் [தொல்.உ.ரி. 74.75] எனினும் உரையாசிரியர்கள் உடம்பு கறுத்தது என்பது போலத் தொழிற்பட்டே கருநிறத்தை உணர்த்தும் என்று விளக்குவார்கள்.

      கருமை கறுப்பு என்பன இருவேறு சொற்கள். கருமை என்பது கரிய நிறம் என்னும் பண்பு ஒன்றையே குறிக்கும். கறுப்பு என்பது கறுத்து எழுந்தான் [வெகுண்டு எழுந்தான்] என்பது போல வந்த மனத்தால் உணரப்படும் வெகுளிக் குறிப்பையும், கறுத்த உடல் என்பது போல் வந்த கண்ணால் காணப்படும் நிறப் பண்பையும் உணர்த்தும். கறுப்பு என்ற பெயர் வடிவம் பெரிய புராணத்தில் மனத்தினுள் கறுப்பு வைத்து என வருகிறது. இதுவும் வெகுளிக் குறிப்பே, கருநிறமன்று.

      கருமை என்பதன் அடியாகப் பிறந்த கருப்பு என்ற வடிவத்தை மு.வ.[மொழி வரலாறு பக்கம் 90] பாவாணர் [கட்டுரை வரைவியல் பக்கம் 7. 53] முதலியோர் பயன்படுத்தியுள்ளனர்.

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  8. தமிழர்கள் என்றோ அடிமைகளாகிவிட்டனர். அதனால்தான் நமக்கு இந்த இழப்பு........

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் கூட வலியும் வேதனையும் தாங்கிக் கனவுகளை மிச்சம் வைத்து ஒருகூட்டம் அலைந்து கொண்டிருக்கிறதே தோழரே!
      எல்லாம் இழந்த பின்னும் உணர்வென்று
      ஒன்று இருக்கிறதே........
      என்ன செய்ய!
      வருகைக்கும் கருத்தினுக்ககும் மிக மிக நன்றியுண்டு....!

      Delete
  9. எனது வலைப்பூவில் பின்னூட்டமிட்டதோடு அல்லாமல் அதனை தங்களின் வலைப்பூவிலும் பதித்து... நன்றிகள் பல !

    " ஒரு சிறந்த படைப்பாளியுனுள் மிக சிறந்த விமர்சகனும், ரசிகனும் இருப்பான் " என்பதை உங்களின் மூலமே நிருபித்துள்ளீர்கள்.

    " கார்ட்டூனிஸ்ட் " ஆர்.கே.லெட்சுமணனின் " காமன்மேன் " பாத்திரத்தால் கவரப்பட்டே சாமானியன் என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன். காமன்மேனுக்கு பொதுஜனம் என்ற‌ தமிழ் பதமே சரியாக இருக்கும் என்றாலும் ஏனோ சாமானியன் மீது பற்று !

    உங்களின் பின்னூட்டத்துக்கு வண்ணநிலவன் ஐயா அவர்கள் வெளிப்படுத்திய கேள்வியையும், அதற்கு தங்களின் பதிலையும் படித்தபோது சாமானியன் எனக்கு பொருத்தமான பெயர்தான் என தோன்றுகிறது !

    இதனை அவையடக்கத்துக்காக கூறவில்லை. நமது உண்மையான உயரம் நமக்கு தெரிந்தால்தான் இனி ஏற இருப்பது என்ன என கணக்கிட்டு முயற்சிக்கலாம் ! அந்த வகையில், வெறும் கேள்வி ஞானம் மற்றும் அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் வாசிப்பு என இருந்து, புதிதாய் எழுத தொடங்கியிருக்கும் நான் எழுத்துலகுக்கு சாமானியனே !

    எங்களை போன்ற இளம் எழுத்தாளார்களின் பதிவுகள் உங்களை போன்றபவர்களின் கண்களில் சட்டென படும் வாய்ப்பு இருப்பதுதான் வலைதளங்களின் அசுரபலம் ! பிரபல பத்திரிக்கைகளில்கூட அதன் வட்டத்தை சார்ந்தவர்களை மட்டுமே சென்றடைய முடியும் என தோன்றுகிறது !

    மீன்டும் நன்றியுடன்
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே!
      வணக்கம்.
      “தோன்றாத் தோற்றித் துறைபல முடிப்பினும்
      தான்தற் புகழ்தல் தகுதியாகா“
      என்ற நம் இலக்கணங்களே,
      “ தன்னுடை ஆற்றல் உணராரிடை
      தான்தற்புகழ்தல் தகுதியாகும்“
      என அமைதியும் கூறி இருக்கின்றன.
      எல்லாம் சரி....! அதென்ன
      “எங்களை போன்ற இளம் எழுத்தாளார்களின் பதிவுகள் உங்களை போன்றவர்களின் கண்களில் சட்டென படும் வாய்ப்பு இருப்பதுதான் வலைதளங்களின் அசுரபலம் ! “
      என்னைத் தொண்டுக் கிழம் என முடிவு கட்டிவிட்டீர்கள் போல...?
      வலைத்தள வருகையிலும் வயதிலும் நிச்சயம் உங்களுக்கு இளையவனாகத்தான் இருப்பேன். உங்களின் 'மறைந்தும் மறையாத தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம்' படித்ததால் சொல்கிறேன் தோழரே!
      அடுத்ததாய்,முத்துநிலவன் அய்யா பற்றி எனக்குத்தான் தெரியும். செய்யும் தவறை ரொம்ப நாசூக்காகச் சொல்லிவிடுவார். புரிகின்றவர்களுக்குத்தான் புரியும். உதாரணம் சொன்னால் உங்களுக்குச் சட்டென விளங்கும்.
      http://nadainamathu.blogspot.com/2014/06/letters-of-vallikkannan.html சென்று எனது பின்னூட்டத்தைப் பாருங்கள். அதில்,
      “நீங்கள் காட்டும் வல்லிக்கண்ணனின் இன்னொரு பரிணாமம் நிச்சயம் அறியப்படவேண்டியதே.“
      என்றிருப்பேன்.
      அடுத்து வரும் முத்துநிலவன் அய்யாவின் பின்னூட்டத்தைப் பாருங்கள்.
      ““அந்த மகிழ்ச்சியின் பரிமாணம் தெரியும்““ என்றிருப்பார். ‘பரிமாணம்‘ என்ற சொலலை இங்கு அவர் கையாள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால்,
      எனக்கான செய்தி அதிலிருக்கிறது,
      “மடையா, நீ பரிமாணத்திற்குப் பதில் பரிணாமம் என்று எழுதிவிட்டாயடா! இரண்டும் வேறு வேறு அர்த்தத்தில் இப்படி வரும். புரிந்து திருத்திக் கொள் இப்படி“, எனச் சொல்லாமல் சொல்லும் நாகரிகம்..! இவர்களைப் பார்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் இன்னும் இன்னும் இருக்கிறது.
      நன்றி சகோதர!
      இன்னும்
      பகிர்வில் தொடர்வோம்

      Delete
  10. இணயத்தில் முழங்கும் இடிமுழக்கம் ...
    மிக்க மகிழ்வு பெருமிதம் கலந்த மகிழ்வு...
    இப்படியெல்லாம் தமிழில் நயங்களோடு எழுத இன்னும் ஆள் இருப்பது ஆறுதல் ..

    மகிழ்வு என்ற ஒத்தை வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும்...

    உணர்வு கொண்ட தமிழ் இதயங்கள் சற்றே கண் அகலத் திறந்து எழுந்துவிட்டன ...
    தொடர்க தோழர்..http://www.malartharu.org/2013/01/blog-post.html (இது கூகிள் ஆண்டவருக்கு)

    ReplyDelete
  11. வணக்கம். தோழ!

    நீங்கள் வேறொரு வலைப்பூவிலிட்ட

    “அறமலர்க்காடு

    அருமை!

    மனம் கொய்யும் சொல்லாட்சி

    மகிழ்வு!

    என்னும் பின்னூட்டத்தை நான் நூறு முறையாவது சொல்லிப்பார்த்திருப்பேன்! நிச்சயம் அதைவிட அதிக முறைதான் இருக்கும். குறையாது. என்பதிவுகளெல்லாம் இதன் முன் ஒன்றுமேயில்லை.
    உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. சொற்களைத் தேர்ந்துதான் படைப்புகளில் பயன்படுத்த வேண்டும். நின்று பயனில்லாச் சொற்களைக் கொண்டு இடம் நிரப்பிச் செல்வதன்றி பயன் வேறென்ன ? பிறகு பின்னூட்டங்களில் உள்ள
    த ம 2, த ம 7 என்பது என்னவென்று புரிய வில்லை. ஏதேனும் குழூஉக் குறியா? இதன் பொருளென்ன? நானும் ஒருவரின் பின்னூட்டத்தில்
    ‘த ம 1‘ இப்படி எழுதிவிட்டேன். தவறொன்றும் இல்லையே?
    விளக்கவும்.
    தங்களின் வருகையை எதிர்பார்த்திருந்தேன். நன்றியும், வணக்கமும்!

    ReplyDelete

  12. கண்கள் பிழுதிடட்டும் ! – எம்

    கருவறைக் குள்ளும் நெருப்பிடட்டும்!

    எல்லாமே செய்திட்டான் எட்டப்பன் சேர்ந்திருக்க
    வல்லவனா இல்லையவன் வம்சங்கள் - தொல்லை
    அடையக் குழிதோண்டி வைக்கின்றான் ! என்றோ
    விடைகாணும் எங்கள் வினா !

    அருமை அருமை சகோ
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  13. வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றியுண்டு!

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரரே!

    ஆவியொன் றுள்ளவரை ஆகிடோம் பேடியாக
    தாவித் தகர்ப்போம் தடை!

    கனல் பறக்கும் வீர வரிகள் நிறைந்த கவிதை!
    வீழ்ந்து கிடக்கும் புல்லுக்கும் வீரம் வரும் சகோ!

    மிகமிக அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  15. //சின்ன உறுமலில் தோற்ற எலியெலாம்
    ஆற்றல் அரற்றுதடா ! – கண்
    அகலத் திறந்து சற்றே எழடா!//
    வீரம் மிகுந்த கவிதை..அருமை

    ReplyDelete
  16. வணக்கம்!

    எட்டி உதைத்திடுவோம் - பகையை
    வெட்டி முறித்துநாம் கட்டி எரித்தே!
    வட்டி கொடுத்திடுவோம்! - தடையை
    முட்டித் தகர்த்துநாம் முற்றும் அழித்தே!
    தட்டிக் குதித்திடுவோம்! - கை..கால்
    தொட்டுக் கிடந்தவன் கொட்டம் அடக்கி!
    கொட்டி முழங்கிடுவோம்! - வெற்றி
    எட்டுத் திசைகளைத் தொட்டுத் தெறிக்க!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  17. கண்ணீர்க் குளம் உடைந்து உன்றன்
    காலடியைத் தேடுதடா எம் தமிழா
    செந்நீர் ஓவியமாய்த் திகழும் காவியத்தால்
    செந்தமிழின் காவலனே நீ தான் என்று !

    அழுகுரல் கேட்குதோ இல்லையோ சகோதரா நான்
    சத்திமாக அழுகின்றேன் :((((((((((((

    ReplyDelete